22 May 2019

சூப்பர் டீலக்ஸ்- Super Deluxe


சமீபத்தில் கண்ட திரைப்படம்.  சராசரி தமிழ் திரைப்படங்களில் இருந்து வித்தியாசமான கதைத்தளம், கருத்து, உருவம் என தனித்து நிற்கும்  படம்.
ஹைப்பர் இணைப்பு(Hyper link) என்ற வகையை சேர்ந்து. ஒன்று ஒன்றோடு தொடர்பில்லா நாலுகதைகள், ஒரு  புள்ளிகளில் சந்தித்து கொள்ளுகின்றன.

முதல் கதை:
ஒரு புதுமண தம்பதி. கணவர் வெளியே போயிருக்கும் வேளையில் தன் கல்லூரி காதலனை வீட்டிற்கு அழைக்கும் வேம்பு என்ற கதாப்பாத்திரம். அவன் வந்த இடத்தில் செத்து போய் விடுகிறான். இனி அவன் உடலை மறைக்க வேண்டும். கணவருக்கும்  தெரிந்து விடுகிறது.  அந்த உடலை என்ன செய்தார்கள். இவர்களை துரத்தும் போலிஸ் அதிகாரி என்ன ஆனான். பிரிய முடிவெடுத்த தம்பதிகள் பிரிகின்றனரா? போலிஸ் அதிகாரியிடம் இருந்து வேம்பு(சமந்தா) கதாப்பாத்திரம் தப்பித்தாரா  இல்லையா?

இரண்டாம் கதை:
ஐந்து பதினமபருவ பள்ளி மாணவர்கள். பள்ளிக்கு  போகாது வீட்டில் ஒளிந்திருந்து பாலியல் படம் பார்த்து கொண்டு இருப்பதுடன் கதை ஆரம்பமாகிறது. படத்தில் வரும் பெண், அதில் ஒரு பையனின் தாய்! அத்துடன் கதை நகருகிறது. தாயை கொலை செய்ய ஓடி வருகையில் அவன் கொண்டு வந்த கத்தியால் காயத்திற்கு உள்ளாகி மரணத்திற்கு போராட, தாய் மகன் உயிரை காப்பாற்ற முயல்கிறார். தகப்பன் திடீர் கிறிஸ்தவனாக மாறின ஆள். அந்த நபரின் உலகம் தனி  உலகமாக நகர்கிறது. அங்கு மூன்று பெயருக்கு மட்டுமே இடம்!  அந்த நபர்,  அந்த நபரை மாற்றிய சுனாமி, புதிதாக கண்டு பிடித்த கடவுள், என நகருகிறது.

மூன்றாவது கதை:
பழைய ஆசாரம் கொண்ட ஒரு வீடு.  வீடு நிறைய மனிதர்கள்.  அந்த வீட்டில் பொறுப்பாக இருக்க வேண்டிய மகன் திருமணம் முடிந்து, குழந்தை இருந்த நிலையில்  வீட்டை விட்டு போய்விடுகிறவன்; ஏழரை வருடம் கடந்து திரும்பி வருகிறான்.  அவனாக அல்ல பாலினம் மாறிய அவளாக. கணவனை காத்திருந்த மனைவி நிலை என்ன? அப்பா என்ற பிம்பத்தை எதிர் பார்த்த மகன் நிலை என்ன? மூன்றாம் பாலினமாக மாறிய அப்பா -மகன் உறவு எவ்வாறு நகர்கிறது. அந்த வீட்டிலுள்ள மற்ற நபர்கள் இந்த சூழலை எப்படி பார்க்கின்றனர். அந்த நபரின் மனைவியும் மகனும் ஏற்றுகொள்கின்றனரா? இப்படியாக கதை நகர….

நாலாவது கதை:
ஐந்து பள்ளி சிறுவன்கள். தொலைக்காட்சி பெட்டி உடைந்து போய் விடுகிறது. அந்த பெட்டியை தன் தகப்பன் வேலைக்கு போய் வரும்முன் வீட்டில் கொண்டு வைக்க வேண்டும். அந்த அவசரத்தில் அவர்களை சந்திக்கும் நபர்கள் யார்? செட்டியார் வீட்டில் திருட போனவர்கள் என்னவானார்கள். ஒரு பெண் ஏலியனை சந்திக்கின்றனர். மாணவர்களுக்கு தொலைக்காட்சி பெட்டி கிடைத்ததா ?    பெண் என்பதை பற்றிய அவர்கள் பார்வை மாறினதா இல்லையா?

நாலு கதையையும் இணைக்கும் ஒரே புள்ளியாக மனிதனின் அடிப்படை தேவையான பாலியல் இச்சை உள்ளது.  Buttefly theory, Darwin Sex theory அவதானிக்க கூறிகின்றனர் சினிமா வல்லுனர்கள்.


  • வேம்பு/ சமந்தாவை துன்படுத்தும் போலிஸ் அதிகாரி,  மூன்றாவது பாலினமாக மாறின விஜய் சேதுபதி கதாப்பாத்திரத்தையும் சித்திரவதை செய்யும். இவாஞ்சலிக்கன் யேசு பக்தரான அப்பா கதாப்பாத்திரவும் விஜய் சேதுபதி கதாப்பாத்திரவும் சுனாமியில் தப்பித்த நபர்கள்.
  • முதல் கதையில் சமந்தா/வேம்பு , விஜய்சேதுபதி, பதின்மவயது பையனுகள்,வயதான போலிஸ் அதிகாரி போன்ற கதாப்பாத்திரங்கள் பல அளவிலுள்ள பல உருவத்திலுள்ள பாலியல் பிரச்சினையை எதிர்கொள்வார்கள், உள்பட்டவர்கள்.

 பெண்களின் தெரிவு முக்கியப்படுத்தியுள்ளார்கள்.

  • · கணவனுடன் சேர்ந்து வாழ வேண்டுமா, வேண்டாமா? என கனத்த முடிவுகளை எடுக்கும் விஜய் சேதுபத் மனைவி கதாப்பாத்திரம்.
  • ·   காதலனை அழைத்த சமந்தா கதாப்பாத்திரம்,  கணவனுடன் இணையுவாரா? இல்லையா? போலிஸ் அதிகாரியின் விருப்பத்திற்கு உடன்படுவாரா? இல்லையா?
  • ·         அம்மா கதாப்பாத்திரம், யேசு பைத்தியத்திலுள்ள கணவன் கதாப்பாத்திரத்தை கேள்வி எழுப்பும். மகனின் அச்சத்திற்கு தயங்காது பதிலளிக்கும்.  இப்படியாக பெண்கள் தெரிவு செய்யும், தங்கள் செயலுக்கு பொறுப்பேற்கும்  இடத்திற்கு நகர்கின்றனர்.

உருகி உருகி வாடா…. உன்னை பெட்டரா பீஃல் பண்ண வைக்கேன்னு சொல்லிய  பெண் கதாப்பாத்திரம், அவன் இறந்ததும்….. அந்த கணவன் கதாப்பாத்திரம் கூட அவனை சக மனிதனாக நினைத்து பேசிக்கொண்டு இருக்கையில் அவனை மிகவும் பயத்துடன் கேவலமாக அது இது என அழைக்கும் காட்சிகள், தேவை முடிந்ததும் பெண்கள் இப்படி தான் என்ற மனநிலையை பற்றி சொல்ல வருகின்றனரா? .

காதலன் காதலி வீட்டில் வந்து சாவுவது அவனை பிரிட்ஜில் வைத்திருப்பது , மெத்தையில் கட்டி கீழை போட்டு எடுத்து செல்வது, இவர்களை போலிஸ் அதிகாரி துரத்துவது இவை லாஜிக்கை இடிக்கிறது.

இந்த சமூகத்திலுள்ள ஆண்களின் மனநிலை. தன் மனைவி என்பவர், தன் வீடு, தன் அறை, தன்  கட்டில், போன்ற ஓர் உடமை என நினைத்திருப்பது. வரம்பு மீறி போய் விட்டாள் என அறிந்ததும் புலம்பும் ஒவ்வொரு வார்த்தைகள் எல்லா வார்த்தைகளையும் சகித்து கொள்வார், ஆனால் கொலை குற்றத்தில் இருந்து தப்பிக்க தன்னிடம் பணிய வேண்டும் என போலிஸ் அதிகாரி கூறும் போது பெண் தயங்குவாள். செக்ஸ் தேர்வு என்பது விருப்பம் சார்ந்த, அன்பு கரிசனை சார்ந்த  தேர்வு, அதில் அதிகாரம் வஞ்சகம், கண்டிப்பு புகிரும் போது உயிர் போனாலும் பெண் விரும்ப மாட்டாள் என அடிவரை இட்டு சொல்லும் விதம் அருமை.

ஒரு மனைவிக்கு பிரச்சினை என்றதும் அது தன்னை மட்டுமல்ல தன் குடும்ப கவுரவத்தையும் பாதிக்கும் என்ற மனநிலை ஒருபுறம். மனைவிக்கு ஒரு பிரச்சினை என்றதும் அவளை எப்படியும் காப்பாற்ற வேண்டும் என்ற கணவனின் தவிப்பு. கணவன் மனைவியின் உத்தமான உறவின் பக்கத்தை விளக்கியுள்ளனர்.

கணவன் மனைவியாக  சேர்ந்து இருந்த போது, இருந்த இறுக்கம் ’நாம் பிரிகிறோம்’ என்றதும் அது நட்பாக,புரிதலாக கரிசனையாக மாறி விடும். அதுவரை பயம் கொண்டு பேசின மனைவி பின்பு நட்பில் பேச ஆரம்பித்து விடுவார். கடைசியில் கணவன் கதாப்பாத்திரம் கொஞ்சம் வண்மமாக கிண்டல் அடிக்கும். ”உன்னை போட்டவன் செத்து விட்டான், போட நினைத்தவனும் செத்து விட்டான், நான் உயிர் போனாலும் நெருங்கவே மாட்டேன்”  என்கிற போது கூட… காதலின் பார்வையில் சிரித்து கொண்டு கடந்து விடுவார் மனைவி. கணவன் மனைவி உறவு எப்படி இருக்க வேண்டும் மனைவியின் சில சிறுமையையும் உள்கொண்டு, எதிர்கொள்ள துணை புரிந்து  நகர்வதே உண்மையான கணவனாக இருக்க இயலும்  என்ற கோணத்தில் சில காட்சிகள் அமைந்துள்ளது பாராட்டுதல்க்குறியது. கற்பு என்ற மனநிலை கடந்து உண்மையான புரிதலுடன் இணைவர்.

மேட்டர் படம் இருக்கா  மேடம்? ’சர்’ என ஆண்களை அழைப்பதற்கு இணையான ’மேடம்’ என்ற வார்த்தை மரியாதையான சொல்லாடல். பயண்படுத்திய விதம் திகக்கை வைக்கிறது. ’மேடம்’ என்றதும் பையா, பயப்படலாம் கூச்சப்படக்கூடாது        என்ற விளக்கத்துடன் மாணவர்களுக்கு சிடி விற்கும் அம்மா வயதான பெண்; அக்கா என்றதும் மாணவர்களை திட்டுவார்.  சில நாடுகளில் மேடம் என்ற வார்த்தைக்கும் பாலியல் தொழிலாளியை அழைக்கும் வார்த்தை என்றும் கேட்டுள்ளேன்.  அக்கா…. மேடம் லாஜிக் விளங்கவில்லை!

அவன் கவலையில் இருந்தான்,  எப்படி ஆறுதல் படுத்துவது. அவனுக்கு  மிட்டாயா கொடுக்க இயலும்?,  நான் ஐட்டம் இல்லை…. போன்ற ஒரு திரை வசனங்கள்  உண்டு . இது போன்ற வசனங்கள் தான் படம் ‘அடல்ட்’ படம் ’மோசமான படம்’, குடும்பத்துடன் பார்க்க இயலாது என கொக்கரிக்க வைத்தது. ஆனால் கணவன் மனைவி இணைந்து இருந்து பார்க்க வேண்டிய படம் இது. கண்டிப்பா ஆண்கள் ஈகோவை உடைக்கும். அதனாலோ மனைவிகள் இது போன்ற படங்களை பார்க்கக்கூடாது என கணவன் விரும்புவார்.

ஒவ்வொருவரும் அவரவர் கதாப்பாத்திரம் ஏற்று மிகவும் சிறப்பாக நடித்தி இருந்தனர். விஜய்சேதுபதியின் நடிப்பை எடுத்து சொல்லாது இருக்க இயலாது. பகத் தனது இயல்பான நடிப்பில் அசத்தியுள்ளார். குட்டி பையன் நடிப்பு மிகவும் சிறப்பு. ஒரு அப்பாவின் இழப்பை அந்த குழந்தை எப்படி எடுக்கிறது ஆனால் அந்த வீட்டிலுள்ள ஒவ்வொருவருக்கும் என்ன பார்வை. அந்த நபர் பெண்ணாக திரும்பி வந்ததை மற்றவர்கள் எப்படி எடுக்கின்றனர். தகப்பன் இல்லா குழந்தைகள் நிலையை ஒரே காட்சியில் சொல்லியிருப்பார்கள். வீடு நிறைய நபர்கள்; ஆனாலும் அந்த குட்டி பையன் சாப்பிடுவதும் அவன் மனைவி கூட யாரோடும் ஒட்ட இயலாது தனிமையில் தான் உழலுகிறார்கள். தாய் மாமியார் என யாரெல்லாமோ இருந்தாலும் அம்மாவிற்கு மகனும், மகனுக்கு அம்மாவும் மட்டுமே இருப்பார்கள். சேதுபதி கதாப்பாத்திரத்தை எல்லாரும் கேள்வி எழுப்பும் போதும், தாக்கும் போதும் மகனும் மனைவியும் அந்த நபரை அதே போன்று ஏற்க கொள்ளும் மனநிலைக்கு வருகின்றனர்.  மாற்று பாலினத்தார் முதலில் மதிக்கப்பட வேண்டியது ’தனது குடும்பத்தில் தான்’ என குறிப்பிடுகின்றனர்.

மனைவி மற்றொருவருடன் தனது  படுக்கையை பகிர்ந்தார் என்பது கணவனுக்கு  எவ்வளவு துயரோ அதே போன்று தான் ஒரு மகனுக்கு அம்மா பாலியல் படத்தில் நடித்தாள் என்பதும்.  அம்மாவின் விளக்கம் ஏற்று கொண்டதாக தெரியவில்லை.  நண்பனிடம் பின்பும் கேட்கிறான் எல்லாரும் பார்த்திருப்பார்களோ? பெண் என்பவள் தனது கணவனின் கேள்விக்கு மட்டுமல்ல மகனின் கேள்விகளுக்கும் பதில் கொடுக்க வேண்டிய நிர்பந்தத் நிலையில் தான் உள்ளனர். ”போடி தேவிடியா மோளே” என மகனிடவும் திட்டு வாங்கும் நிலையில் தான் தாய்மை உள்ளது. இருந்தாலும் மகன் உயிரை காப்பாற்றவும் தன் நிலையை புரிய வைக்கவும் பிரயத்னம் எடுக்கும்.

”நீ சுனாமியில ஜீசசு சிலையை பிடித்து தப்பித்ததால் கிறிஸ்தவனாக மாறின கரடியை பிடித்து தப்பித்தா எதா மாறியிருப்ப”? இந்த கேள்வி தற்கால ஹிந்துத்துவா அரசின் மதமாற்றத்தை முன் நிறுத்திய கேள்வியாகத்தான் படுகிறது. இருப்பினும் இவாஞ்சலிக்கன் மதவாதிகளின் குருட்டு பக்தியையும் கோட்பாடுகளையும் நம்பிக்கையையும் சரியான பார்வையில் கேள்வி எழுப்பி உள்ளதையும் மறுக்க இயலாது.

நீலன் கெ சேகர், மிஷ்கின் நளன் குமரசாமி,மூன்று பேரும்சேர்ந்து அவரவர் பகுதிக்கு  திரைவசனம் எழுதியுள்ளனர்.  இது ஒரு புது யுக்தியாக இருப்பதால் சிறப்பாகவும் திரை வசனம் பல அடுக்கு உருவகம் அர்த்தங்கள் கொண்டு விளங்குகிறது,  தெளிவும் உள்ளது. 

தம்பதிகள் பேசின உரைகள்  மிகவும் இயல்பானது. அதை மிகவும் ஆழமான புரிதலுடன் மனித உளவியலை அறிந்து நீலன் கே சேகர் எழுதியுள்ளார். ’நாம் சேர்ந்தே இருந்தோம்’ ஏன் ஒட்டவில்லை,…… மிஷ்கின் பகுதியான மூன்றாம் பாலினம்  சார்ந்த வசனங்கள் எடுத்து சொல்லக்கூடியது. அவரே சொல்லியுள்ளார் அவர் நேரிட்டு கண்டு உணர்ந்த அவருடைய நண்பர் வாழ்க்கையை போன்று இருந்ததால் வசனங்கள் அமைப்பது எளிதாக இருந்தது என்று. இவாஞ்சலிக்கன் கிறிஸ்தவ திரைவசனங்கள் நெடியதும் திரும்ப திரும்ப வருவதாக இருந்தது. முதலில் ’நான் கிறிஸ்தவன் இல்லை’ என்பதும் கடைசியில் மனைவியின், கிறிஸ்தவ மதமாற்றம் சார்ந்து கேள்வி எழுப்பும் போது பதிலில்லாது தலையாட்டுவதும் முரண்களை எழுப்புகிறது.
ஒளிப்பதிவு சிறப்பாக உள்ளது. ஒவ்வொரு காட்சிக்கும் காட்சி தொகுப்பிற்கும் மெனக்கெட்டுருப்பது  படத்தின் அழகை கூட்டுகிறது.

பார்ப்பவர்களை விட்டு விட்டு நடிப்பவர்களை குற்றம் சொல்கின்றனர் , போன்ற சில டயலோக்குகள் நெருடலாக இருந்தாலும் அர்த்த செறிவுள்ளதாக இருந்தது.  இது போன்று நேரடியாக  மகனிடம் கூற இயலும் சமூக சூழலிலா உள்ளோம்.

திரைப்படம் வாழ்க்கையில் காணும் முரண்கள், மனிதனின் இயல்புகளை , நாடகத்தன்மையான வாழ்வியலை சொல்கிறது. இந்த படத்தில் நான் காணும் குறைபாடு மனித உறவிலுள்ள சிக்கல்கள், மறக்கவேண்டிய இயல்பாக நடக்கக்கூடிய குற்றங்களை கூறும் படம் பல விடையங்களுக்கு தீர்வு அல்லது மாற்று வழி கொடுத்துள்ளதா?

பாலியல் படங்களில் நடிப்பது என்பது மற்று தொழில்களுக்கு இணையான தொழிலா?  மகன் தாயை கொலை செய்ய துரத்தும் சீன் அந்த அளவிற்கு தீவிரமாக வைக்க வேண்டிய அவசியம் என்ன? நவீன தலைமுறை மனநிலை அதே 19 நூற்றாண்டு மனநிலையில் தான் உள்ளதா?  சி. டி தேடி அலையும் பாலியல் வரட்சியில் தான் உள்ளனரா? போலிஸ் அதிகாரியிடம் கதறி அழும் நிலையில் தான் வேம்பு கதாப்பாத்திரம், மூன்றாம் பாலின பெண் கதாப்பாத்திரம் உள்ளதா? பெண்களின் வுலுவை பற்றிய எதிர்மறை எண்ணங்கள் தான் வளர்க்கும்? பாலியல் படம் எடுப்பவர்களை குறை சொல்லாது நடிப்பவர்களை குறை சொல்கின்றனர், படத்தில் நடிக்கும் அம்மாவை தவறாக பார்க்கும் மகனுக்கு தான் பார்ப்பது என்ன் தவறாக தெரியவில்லை. எதுவும் தவறில்லை என்பது திரைப்படங்களின் நோக்கமாக இருக்கலாமா? ஒரு தெளிவான முடிவு இல்லை. அதுவே இந்த படத்தின் பலவும் பலவீனவுமாக காண்கிறேன். முடிவு காண்பவர்களின் மனநிலையை பொறுத்து அமையும்.


இயக்கம் தியாகராஜா குமரராஜா.  திரை இசை யுவன் சங்கர் ராஜா. 









0 Comments:

Post a Comment