10 Jul 2022

கிருஷ்ண கோபாலின் செவலை சாத்தா'!

 


புலம் பதிப்பகம் ஊடாக வந்த 'செவலை சாத்தா'  எழுத்தாளர் கிருஷ்ண கோபாலின் முதல் நாவல் ஆகும்.

அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கம் ஒருங்கிணைப்பாளர் சுப . உதயகுமாரன் முன்னுரை வழங்கி உள்ளார்.

 

பங்குனி திருவிழாவிற்கு  என சாத்தா கோயிலுக்கு ஏழு ஆண்கள் மற்றும்  இரண்டு பெண்கள் நடை  பயணம் மேற்கொள்கின்றனர். அத்துடன் கதையும் ஆரம்பிக்கிறது.  25 வயது நிரம்பிய முதுகலை பட்டதாரி முருகன், அதே வயதுள்ள கிராமத்தான் அப்பாவு, பெருமாள், சாமியாடி அவர் மனைவி என ஒன்பது பேர் நடைபயணத்தில்  சோர்வு தெரியாது இருக்க பேசிக் கொண்டே செல்கின்றனர். இவர்கள் பேச்சின் பொருள் இட்லி டப்பா என்று அழைக்கப்படும்  அணு உலையை பற்றிய பேச்சாக இருக்கிறது. கோயிலுக்கு போய் சேர்ந்து சாமி கும்பிடுகையில் சாமியாடி மக்கள் ஊர் விட்டு போக உள்ளதாக கணியம் சொல்கிறார். கலங்கிப் போய் மாறி மாறி விவாதங்கள் செய்து கொண்டு சிலர் உலையை ஆதரித்தும் சிலர் அதை எதிர்த்தும் வீடு திரும்புகிறனர்.

 

குமரிக்கோடு-முக்குவிளை என்ற தலைப்பை  கொண்ட கதையை வாசிக்க தொடரும் வாசகர்கள் பின்பு  ஆலையை விட்டு யாக்கியாம்பரம் பண்ணையார், ஜெர்சி மாடுகள், யாக்கியாம்பரம் அனுபவிக்கும் பரம்பரைச் சொத்து என்ற சீற்றத்துடன்  சீனாக் கோழி,பிராயிலர் கோழி என  பொன்னம்மை நாடாச்சி  சாப்பிடும் கோதுமைப் புட்டு கதைக்கு   வந்தடைகிறோம்.

 

இதுவரை கதைசொல்லி தூரத்தில் இருந்து  மூன்றாம் நபர் பார்வையில்  கதாப்பாத்திரங்களை  நகத்துகிறார். பிற்பாடு  பிரபா என்ற பத்தாம் வகுப்பு மாணவி கதாப்பாத்திரம் பார்வையில் நகர ஆரம்பிக்கிறது.

சித்திக்கு துணையாக கேன்சர் மருத்துவமனையில் இருக்கும் பிரபா, தன் வறுமையால் இயல்பான குழந்தைப்பருவத்தை இழந்து தன்னுடைய படிப்பு செலவிற்காக   வேலை செய்ய வேண்டிய இடத்தில் நிற்கிறாள். அத்துடன்  கேன்சர் நோயின் கொடிய சூழலை ஓரிரு வரியில் விவரித்து விட்டு  போராளி மருதன் கதாப்பாத்திரம் வருகிறது. மருதன் என்ற கதாப்பாத்திரம்  சுப உதயகுமாரன் என்பது தீர்க்கமாக விளங்குகிறது.

போராட்டம், சொற்பொழிவு, மறைந்த பெண் முதல்வரை ஒருமையில் திட்டும் உரைகளுடன் கதை சீற்றம் கொள்ள ஆரம்பிக்கிறது. உலையை ஆதரிக்கும் செல்லப்பாண்டி, துரை பாண்டி போன்ற கதாப்பாத்திரங்கள், போராட்ட குழுவின்  மருதன் -ஆண்டணி கோஷ்டி பிரிவு என கதையை எட்டுகிறோம்.

 

10 ஆம் வகுப்பு படித்து வந்த பிரபாவும்  இப்போது கல்லூரி படிப்பை முடித்து ஒரு மருந்து கடையில் வேலை பார்த்து வருகிறாள். பல மனிதர்கள் இயல்புக்கு மீறின பருமன், உடலில் ஊறல் என பல பல புது வியாதிகளுக்கு மருந்து வாங்க வந்து போகிறதை பிரபா கவனிக்கிறாள். போராட்டங்களில் மக்களின் உரிமை நலனுக்காக சொற்பொழிவு ஆற்றி வரும் பேச்சாளராக வளர்கிறாள் பிரபா. போலிஸ்காரர்கள் விபத்து  மாரணத்தை கேள்விப் பட்டதும் பிரபா என்ற கதாப்பாத்திரம் நெஞ்சுக்குள் சந்தோஷச் குறுகுறுப்பு ஓடி மறைந்தது என்று குறிப்பிடுகிறார் நூல் ஆசிரியர்.

 

யாக்கியாம்பரத்தின் மகள் லோலாயி அம்முவின் திருமணம் அணு உலையில் வேலை பார்க்கிற இஞ்சினியருடன் ஆடம்பரமாக நடக்கிறது.

அடுத்து சில பக்கங்கள் ஸ்ரெர்லைட் சம்பவங்கள், போராட்டம், துப்பாக்கி சூடு என செல்கிறது.  அடுத்து அணு உலை உடைந்து பாதிக்கப்பட்ட  குமரிக்கோடு, தமிழர்கள் அடைக்கலம் புகுந்த கேரளக் கோடில் அனுபவிக்கும் துயர் என மாநில வெறுப்பையும் வெளிப்படுத்தி உள்ளார் நூலாசிரியர்.

 

தனசேகரன் ஊரை விட்டு போவதை சாஸ்தா பாறை மேல் இருந்து பார்ப்பதுடன்  கதை நிறைவு பெறுகிறது.

 

ஒரு முக்கிய சமூகப் பிரச்சினையில் துவங்கிய கதை பல பல இயற்கை பிரச்சினையுடன் பயணித்து எங்கும்  ஆழமாக  மனதை தொடாது சம்பவங்களுடன்  பயணிப்பதை சில இடங்களில் காணலாம். அனைத்து விடயங்களும் தினசரியை வாசித்தவர்களால் தெரிந்த சம்பவமே. புதுமையாக அணு உலை உடைந்தால் நடக்கும்  சம்பவங்கள் வருகிறது. அதுவும் செர்னோபிலில் அணு உலை உடைந்த போது மனிதர்கள் எதிர் கொண்ட சம்பவங்களுடன் ஒத்து போகிறதா என்றால் …….அது இல்லை.

 

ஒரு நாவல் என்கிற போது கதைப் பின்னல் ஒரு கருத்தாக்கத்தில் ஊன்றி குறிப்பிட்ட கதாப்பாத்திரங்களுடன் நகர்ந்து இருக்க வேண்டும். பல பல சமூகப் பிரச்சினையை ஒரே கதையில் புகுத்திய உக்தி வாசகர்களை திசை தெரியாத படகு மாதிரி மாற்றியது.

ஒரு அணு உலைக்கு பின்னால் இருக்கும் அரசியல், மத தலைமைகளின்  நிலைபாடு மற்றும் தாக்கம், உள்ளூர் மக்கள் மனப்பான்மை, மீனவர்களின் குரல்கள் இந்த நாவல் வழியாக இன்னும் உரத்து  கேட்டு இருக்க வேண்டும். தென் தமிழகம் அத்துடன் சேர்ந்து கேரளம் , இலங்கை பாதிப்படைய உள்ள இயற்கை சூழலை  பற்றி இன்னும் தகவல்கள் முன் வைத்து இருக்கலாம். உலை துவங்கும் காலத்தில் தென் தமிழகத்தில் நிகழ்ந்த ஜாதி மோதல்களுக்கும் ஆலை உருவாக்கத்திற்கும் தொடர்பு இருந்ததா என கதையில் விளக்கியிருக்கலாம்.

அணு உலை போராட்டம் ஒரு பக்கம் நடக்க மக்கள் போராட்டம் என்பதை மருதன் போராட்டமாக சுருங்கி போனதை எவ்விதம் என்பதையும் விளக்கி இருக்க வேண்டும். போராட்டம் வெற்றி பெறாது ஒரு உலை இரண்டாகி இப்போது ஆறு உலைகள் என்றாகி விட்ட நிலையில்,  போராட்ட குழு உடைந்த பின்னனி என்னவாக இருக்கும். கடலோர மக்கள், கடலோடிகள், மற்றும் கடலை சாராத மக்கள், இரு பெரு கிறிச்தவ தலைமையின் கீழ் இருக்கும் மக்கள் கருத்து என்ன, உலை தமிழகத்திற்கு வர காரணமாக இருந்த அரசியல் கட்சி இந்த நாவல் கதைக்குள் வரவில்லை.

 

பாலைக்கோடு பசுமைக்குளம் என்ற அத்தியாயத்தில் நூலகர்

செஞ்சி வச்ச அணுகுண்டு வெடிக்குமா இல்லியான்னு பார்ப்பதற்கு ஜப்பான் மேல் அணுகுண்டு வீசி சோதனை செய்த அமெரிக்கா என்று குறிப்பிடுகிறார். இது உண்மையான வரலாற்றை தங்கள் தேவைக்கு தகுந்து திரிப்பது போல் ஆகாதா?

 

எது எப்படியோ, விருது நூலாசிரியர்கள் பூ, புஷ்பம் , சாத்வீகம், என எழுதி வரும் சூழலில் இது போன்ற சமூக நாவல், மக்கள் நலனில் அக்கறை கொண்ட நாவல் ஒரு எளிய எழுத்தாளரிடம் இருந்து மட்டுமே வந்துள்ளது என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டி உள்ளது. நூல் ஆசிரியருக்கு வாழ்த்துக்கள். மென்மேலும் பல புத்தகங்கள் தங்கள் எழுத்தில் வர வேண்டும்.

0 Comments:

Post a Comment