30 Nov 2011

முல்லைப்பெரியார்-Mullaiperiyar Dam 999


டாம்999 என்ற பெயரில் சோஹன் ரோய் என்ற கேரளாவை சேர்ந்தவரின் படமே சமீபத்தில் ஊடகத்தில் பெரிதும் சர்ச்சை செய்யப்பட்ட படம்.   இதன் தயாரிப்பு BizTV network குழுமத்தின் மேற்பார்வையிலும் cinematographer ஆக விஜய் வின்சென்ட், பாடல் அவுசப்பச்சன், நடிப்பு விமலா ராமன் என ஒரு சிறந்த குழுவுடன்  வெளிவந்துள்ளது. இதன் விநியோக உரிமத்தை  வார்னர்  பிரதர்ஸ்(Warner brothers) எடுத்துள்ளனர்.  இப்படத்தை தமிழகத்தில் திரையிட கருணாநிதி தன் எதிர்ப்பை முதலாவதாக பதிவு செய்ததுடன் கேரளா - தமிழக அரசியலில் பெரும் குழப்பம் ஆரம்பித்து விட்டது.  தமிழக அரசியல்வாதிகள் தங்கள் வழமையான இண உணர்வை கொண்டு கூரிய அம்புகள் தயாரிக்க மலையாள மந்திரிகள் டெல்லியில் உண்ணாவிரதம், மக்கள் தொடர் கருத்துரையாடல், ஹர்த்தால்/பந்து என்று மட்டுமல்லாது; தமிழர்கள் மனிதநேயத்தோடு செயல்பட வேண்டும் என கொக்கரித்து கொண்டு ஜெயலலிதாவின் கோலம் எரிக்க என தமிழகத்தின் மேல் தங்கள் வெறுப்பை காட்ட ஆரம்பித்து விட்டனர்.

டாம் அல்லது அணைக்கட்டு என்பது ஓடும் நதி நீரை ஒரே இடத்தில் செயற்கையாக தேக்கி வைப்பதாகும்.  அவ்வகையில் இயற்கைக்கு மீறிய மனிதனுடைய செயல்பாடுகளில் ஒன்று தான் 'அணைக்கட்டுகள்’ என்பதும்.  அணைக்கட்டுகளை அதன் உருவாக்க நுணுக்கங்கள் பொறுத்து பல வகைகளில் பிரிக்கின்றனர்.  இதில் gravity dam சிறந்தது என்று சொல்லப்படுகின்றது.  இருப்பினும் இயற்கை வளங்கள் அழிக்கப்படுவது மட்டுமல்லாது பூமியின் காலநிலையில் பெரியதொரு மாற்றத்திற்க்கு காரணமாகின்றது அணைக்கட்டுகள்.  இயற்கையான சூழலில் இருந்து மனிதன் விலங்குகள் பறைவைகள் வன்முறையாக  குடிபெயர நிர்பந்திக்கப்படுகின்றன.  ஒரு பொது நன்மை என காரணம் காட்டி பல லட்சம் மக்களை குடிபெயிர செய்கின்றனர்.  1960 ல் இந்தியாவின் ஹிமாசலில் போங்( Pong Dam) அணைக்கட்டு கட்ட முடிவெடுத்த போது  1 லட்சம் 50 ஆயிரம் மக்களை குடிபெயர செய்ததுடன் வளமையான வாழ்க்கையை அழித்து மக்களை ஏழ்மைக்கு தள்ளினர். மேலும் எதிர்ப்பு தெரிவித்த மக்களை அன்றைய உள் துறை அமைச்சராக இருந்த   சர்தார் வல்பாய் பட்டேல் “தண்ணீரால் மூழ்கடித்து கொன்று விடுவோம்” என மிரட்டியதும் செய்தியே!
                                                                                                                                                                                            மின்சாரம் தயாரிப்பதற்க்கு என்று சீனாவில் கட்டப்பட்ட 3 அணைக்கட்டுகளுக்கு என ஒரு மிலியன் மக்கள் குடியிருப்புகளை இடம் பெயரசெய்துள்ளனர். உலக அளவில் நோக்கினாலும் 80  மிலியன் மக்கள் அணைக்கட்டு கட்டுமானத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர்.  முட்டையில் இருந்து கோழியா அல்லது கோழியில் இருந்து முட்டையா என்பது போன்று அணைக்கட்டு மூலமாக தடுக்கப்படும் தண்ணீரின் அழுத்தால் பூமி அதிற்ச்சி உண்டாகலாம் அல்லது பூமி அதிற்வால் அணைகள் உடையவும் செய்யலாம் என்பதும் அறிவியலே!  கேரளா விஞ்சானிகள் முல்லைப்பெரியார் அணைக்கட்டு ஆபத்தால் பொதியப்பட்டுள்ளது என்று கூறும் போது தமிழக விஞ்சானிகள் அணைக்கட்டு பலமாக உள்ளது என்று சொல்லும்  போதும் உண்மைக்கும், மொழி-ஊடகத்திற்க்கும் தொடர்பு உண்டா அல்லது இது அரசியல் விளையாட்டுகளில் ஒன்றா?, அல்லது உண்மையிலே தங்கள் உயிர் ஊஞ்சலில் தானா ஒன்றும் விளங்கவில்லை பாமரனுக்கு! சண்டே இந்தியன் போன்ற பண்முக மொழிகள் கொண்ட பத்திரிக்கைகள் கூட மலையாளப் பதிப்பில் மலையாளிகளுக்கும் தமிழ் பதிப்பில் தமிழர்களுக்கு சார்ந்து செய்தி வெளியிட்டிருந்தனர்.

சீனாவில் 1 லட்சத்து 71 ஆயிரம் பேரில் உயிரை பலி வாங்கிய 1975 ல் நடந்த மாபெரும் பங்கியோ(Banqiao) அணைக்கட்டு விபத்தின் தாக்கம் கொண்டு முல்லைப்பெரியார் அணையை மையமாக வைத்து 2011 ல் எடுக்கப்பட்ட குறும்படத்திற்க்கு (DAM S- The lethal Water Bombs)சிறந்த cinematographer, editing, Visual effect, Documentary short போன்ற விருதுகள் கிடைக்க இதன் தாக்கம் கொண்டு தன் 20 நிமிட குறும்படத்தை 50 கோடி ரூபாய் செலவில் எல்லா தன்மையும் கொண்ட ஒரு திரைப்படமாக இயற்றியுள்ளார்  பொரியாளரான சோஹன் ரோய் என்பவர். இயக்குனரின் கருத்துப்படி உலகிலுள்ள அணைக்கட்டுகளில் 85% மேல் அதாவது 40ஆயிரம் அணைக்கட்டுகள் 2020ல் காலாவதி முடிந்ததாக மாறப்போவதாக குறிப்பிடுகின்றார்.


கேரளாவில் 5 மாவட்ட மக்கள் சிறப்பாக வண்டிபெரியார், குமுளி போன்ற பகுதியில் வசிக்கும் மக்கள் பூமி அதிற்வு, அணை உடையும் பயத்தில் வாழ்கின்றனர். கடந்த 5 வருமாக புது அணைக்கட்டு கட்ட வேண்டும் என கோரிக்கை வைத்து போராடி வந்தாலும் சமீபத்தில் 20 க்கு மேற்ப்பட்ட முறை இடுக்கி மாவட்டம் பூமி அதிற்ச்சியால் பாதிக்கப்பட்ட போது  அணைக்கட்டு தங்கள் பிரதேசத்தில் வேண்டாம் என போராட்டம் திசை மாறி உள்ளது.  பல தமிழர் வியாபாரிகளிடம் சில மலையாள காடையர்கள் அவமரியாதையாக நடந்து கொண்டதாகவும் அறியும் சூழலில் பெரும் குழப்பத்தில் அங்குள்ள தமிழர்களின் வாழ்க்கை செல்கின்றது என்று மட்டும் விளங்குகின்றது.  ஒரு பக்கம் தமிழகத்தில் இரத்த உறவுகளின் அடாவடி பேச்சு என்றால், அங்கு தமிழர்கள் என்ற பெயரால் தாக்கப்படும் சூழல் வரமோ என்ற பயத்திலும் அணைக்கட்டு ஒருவேளை உடைந்தால் தங்கள் வேருகள் எக்காலத்திற்க்கும் அடையாளம் இல்லாது அழிக்கப்பட்டு விடுமோ என்ற திகிலிலும் நிம்மதியற்ற நாட்களை கடத்துகின்றனர் கேரளா தமிழர்கள்.

இரு மாநில மக்களுக்கு தீராத பகையை உருவாக்கும் முல்லைப்பெரியார் அணைக்கட்டு ஆங்கிலையர்களால் 1895 ல் கட்டப்பட்டது.  தொடர்ந்து 24 வருடம் திருவிதாம்கூர் மன்னனிடம் கோரிக்கை வைக்கப்பட்டு தங்கள் அதிகாரத்தின் துணையுடன்; பல முறை தோல்வி கண்டும் பென்லி ஹுக் என்ற சிறந்த ஆங்கில பொறியாளரால் கட்டப்பட்டதே முல்லைப்பெரியார் அணைக்கட்டு.  இது கடல் மட்டத்தில் இருந்து 2889 அடி உயரத்தில்  8 ஆயிரம் ஏக்கர் இடத்தில்155 அடி நீளத்திலும் 1200 வீதியிலும் கட்டப்பட்டுள்ளது. மேற்க்கு பக்கம் ஓடும் பெரியார் நதியை கிழக்கு பக்கம் திருப்பி வைகை நதியில் சேர்க்கும் பங்கை இந்த அணைக்கட்டு செய்கின்றது.  இதில் இருந்து வரும் தண்ணீரால் தமிழகத்தில் மின்சாரம் தயாரிக்கப்படுகின்றது.   மேலும் தரிசு நிலங்கள் விளை நிலமாக மாற்றப்பட்டுள்ளது. அணைக்கட்டு உரிமை தமிழகம் பக்கம் இருந்தாலும்  நிலைகொள்ளும் இடம் கேரளா என்பதால் ஏக்கருக்கு 5 ரூபாய் என வருடத்திற்க்கு 40 ஆயிரம் ரூபாய்   தமிழகம் கேரளா அரசுக்கு செலுத்தி உள்ளது.

முல்லைப்பெரியார் தண்ணீர் முழுதும் தமிழகத்திற்க்கு என்று ஆங்கிலையர்கள்  காராரில் இருந்தாலும் சுதந்திர இந்தியாவில் அது செல்லுபடி ஆகாது என்று கூறி கேரளா அரசு 1975 ல்  மாற்றி அமைத்துள்ளது. மேலும் 6 ரிக்டர் அளவு பூமி அதிற்வை தாங்கும் சக்தி டாமுக்கு இல்லை என்பதை  மேற்கோள் காட்டி 142 அடி தண்ணீரை 136 அடிக்குள் சேகரிக்க கேரளா முடிவெடுத்த போது 152 அடி நீர் சேகரித்து வைத்து எங்களுக்கு தண்ணீர் தரும் தார்மீக பொறுப்பு உண்டு என தமிழகம் தன் நிலையை விளக்குகின்றது.  தண்ணீர் கொடுக்க கூடாது என்பது எங்கள் நோக்கம் அல்ல ஆனால் தங்கள் மக்கள் உயிர் காப்பது அவசியம் என்பதால் 116 வருடம் பழக்கமுள்ள முல்லைப்பெரியார் அணைக்கட்டுக்கு பதிலாக புதிய அணை மிகவும் தேவை என கேரளாவும் தங்கள் நிலையை தெரிவிக்கன்றனர்.  ஆனா என்னமோ ஏதோ ஒவ்வொரு முறையும் கருணாநிதி ஆட்சியில் ‘காவேரி’ பிரச்சனை வருவது போல் ஜெயலலிதா ஆட்சியில் முல்லைப்பெரியார் உயிர் பெற்று விடுகின்றது. இருப்பினும் முல்லைப்பெரியார் தண்ணீர் இடுக்கி அணைக்கட்டு கொண்டு சேர்த்து மின்சாரம் தயாரிப்பது போல் அணை உடைந்தால்  முல்லை பெரியார் தண்ணீர் இடுக்கி அணைக்கட்டில் ஒன்று சேர அணை உடைய 5 மாவட்ட மக்கள் உயிர் துறப்பர் என்றதும் மலையாளியை தூங்க விடாத துர்கனவாகும்! தமிழகம் 5 லட்சம் ஏக்கர் விளை நிலங்கள் பாழாயி விடும் என்று அழும்போது 30 லட்சம் மக்கள் அழிக்கப்படுவார்கள் என கேரளா கரயுகின்றது.(அழுது)

முல்லைப்பெரியார் அணைக்கட்டின் பராமரிப்பு தமிழக் அரசிடம் இருப்பினும் அணைக்கட்டு நிலைகொள்ளும் இடம்  கேரளா என்பதால் வாடகை கொடுக்க வேண்டியுள்ளது தமிழக அரசு.   அணை கட்டுவோம் என்று சொல்லும் கேரளாவுக்கும்  மணல், கட்டக்கூடாது என்று சொல்லும் தமிழக அரசே  வைகை நதிக்கரையில் இருந்து கொடுக்கின்றது. உண்ணாவிரதம் இருக்கும் கேரளா தலைவர்களை, தமிழக தலைவர்கள் கைகாட்டி தங்கள் அன்பை வெளிப்படுத்தியுள்ளனர் பார்லிமென்றில். ஆனால் பொதுமக்கள் மத்தியில் மலையாளி தமிழன் என்ற வெறியை ஏற்ப்படுத்தி பிரச்சனையை வலுவாக்கவும் துணிகின்றனர்.

http://www.youtube.com/watch?embeddedஇவர்களுடைய கரார் உடன்படிக்கை 999 வருடங்கள் ஆகும்.  1 ¾ மணி நேரம் ஓடும், 3D நுணுக்கத்தில்  இயக்கிய இப்படத்தை,  படத்தின் தலைப்பாக 999 அமைந்திருப்பதை தமிழர்கள் சகிப்பு தன்மையுடன் நோக்கி காட்சி ஒளி ஊடகம் வழியாக இயக்குனர் என்ன சொல்ல வருகின்றனர் என்று நோக்க தயங்குவது, அரசால் ஊடகம் தடுக்கப்படுவது தகவல் அறியும் உரிமையை தடுப்பது போல் தான் ஆகும். இது பூனை கண்ணை மூடி பால் குடிப்பது போல் தான் உள்ளது. 

19 Nov 2011

நவம்பர்-19: ஆண்களை போற்றுவோம்,வாழ்த்துவோம், இன்று ஆண்கள் தினம்!



ஒவ்வொரு 9 நொடிப் பொழுதிற்கும் ஒரு பெண் துண்புறுத்தப்படுகின்றாள்.   உலக பெண் தரவும் சொல்லும் செய்தி   தினம் 3 ல் ஒரு பெண் கணவனால் அல்லது தன் காதலனால் கொல்லப்படுகின்றனர்.  ஐரோப்பியா நாடுகளிலும்   4 ல் ஒரு பெண் பாதிக்கப்படுகின்றார். ஆப்பிரிக்கா நாடுகளில் தான் பெண்கள் மிகவும் மோசமான நிலையில் நடத்தப்படுகின்றனர்.  பாகிஸ்தானில் 90% என்பது இந்தியாவில் 70%  பெண்கள் பாதிக்கப்படுவதாக தெரிகின்றது.  பிலிப்பைன் மற்றும் பராக்குவே நாட்டில் மட்டுமே 10 % குறைவான பெண்கள் துன்புறுத்தப்படுவதாக தெரிந்துள்ளது. 

ஒவ்வொரு 6 மணி நேரத்தில் ஒரு இளம் பெண் எரித்து அல்லது அடித்து அல்லது தற்கொலை செய்து கொல்லப்படும் அளவிற்கு பெண்கள் மேல் கொள்ளும் வன்முறை இந்தியாவில் பெருகி பலுகி உள்ளது.  இந்த சூழலில் தான் இந்தியாவில் ‘குடும்ப வன்முறை பாதுகாப்பு சட்டம்’   இந்திய அரசால் இயற்றப்பட்டது.   சட்டத்தால் பெண்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதே அரசில் நோக்கம்!  ஆனால் உண்மை நிலவரம் என்ன என்றால் பல குடும்பங்கள் அழிந்துள்ளது என்று மட்டுமல்ல பெண்கள் வாழ்க்கையும் ஆண்கள் குடும்பவும் அழிக்கப்பட்டுள்ளது என்பதே ஆகும்.

 மை நேஷன்(My Nation) போன்ற அமைப்புகள் இப்போது  ஆண்கள் சார்பாக போர் கொடி பிடித்துள்ளது.  பெண்கள் வடிக்கும் கண்ணீரை கண்டு சட்டம் இயற்றிய இந்திய அரசு, ஆண்களின் வாழும் உரிமையை கண்டு கொள்ளவில்லை என்பதாகும் அவர்களின் குற்றச்சாட்டு! ஆண்களின் கூற்றுப்படி  பொருளாதாரம் 32%,  உளவியல்(22%),  பாலியல்(19.8) என  பல  வழிகளில் பெண்கள் தங்கள் ஆதிக்கத்தை செலுத்துகின்றனர், துன்புறுத்துகின்றனர் என்பதாகும்.  திருமணமான ஆண்களின் நிலை இன்னும் கொடியதாகவே உள்ளது.   ஒவ்வொரு 8 நொடிகளிலும் ஒரு ஆண் மரணத்தின் பிடியில் சிக்க வைக்கப்படுகின்றார்.  திருமணமான பெண்களை (28%) விட ஆண்களே(52%)  தற்கொலைக்கு இலக்காகுன்றனர் என்பதும் நடுங்க வைக்கும்  உண்மை ஆகும்!  இச் சட்டத்தின் பாதகங்களை கணக்கிலெடுத்து மறு பரிசீலனை செய்ய ஆண்கள் சங்கம் அரசாங்கத்தை வலியுறுத்துகின்றது.  மேலும் இந்த சட்டம் இயற்றும் முன் அரசு தேவையான ஆய்வு மேற் கொள்ளாததும் பெரும் குறையாகவே உள்ளது.  ஓட்டுக்கு என குடும்பம் என்ற கோயில்களை உடைத்து சமூகத்தை ஒரு சாக்கடையாக மாற்ற மட்டுமே இது போன்ற சட்டங்கள் உதவும் என்ற கருத்தும் மேல் ஓங்கி நிற்கின்றது.

இந்திய சமூக பார்வையில் ஆண்கள் தங்கள் துயரை வெளியில் சொல்வதோ, அழுவதோ ஆண்மைக்கு இழுக்காக கருதுவதால், தங்கள் மனக்குறைகளை பகிரவும், சிக்கல்களை தீர்க்கவும் வழியில்லாது தவிக்குகின்றனர்.   கடந்த 2001-2005 காலையளவில் 1 மிலியனுக்கு அதிகமான ஆண்கள் வேலை இழந்ததும்  பல பிரச்னைகளுக்கு வழி வகுக்குத்துள்ளது.  பெண்களால்; ஆண்கள் மிகவும் கீழ்த் தரமாக திட்டு வாங்குவதும், நேரத்திற்கு உணவூ கிடைக்காதும், படுக்கை அறையில் புரக்கணிக்கப்பட்டும், தங்கள் குழந்தைகளை கணவர்களுக்கு எதிராக திருப்பி விடுவது மட்டுமல்லாது கணவனின் பெற்றோர்களையும் அனாதை விடுதி அல்லது நடுத் தெருவில் கொண்டு விடுவது வழியாக துன்புறுத்துகின்றனர் என்று சமூக ஆய்வு முடிவு தெரிவிக்கின்றது.  கேவலமான வார்த்தையால் கணவர்களை திட்டுவதில் முன் நிற்பது இந்திய பெண்கள் தானாம்!

இந்தியாவில், இந்த சட்டத்தின் கீழ் பதியப்பட்ட முதல் கேஸ் நெல்லையை சேர்ந்த ஜோசப்- மேரி என்ற தம்பதிகளுடையது என்பதே இன்னும் கூடுதலான தகவல்.  மேரி என்ற ஒரு அரசு பள்ளி ஆசிரியை அரசு அலுவலகத்தில் பியூனாக வேலை செய்து வரும் கணவர் ஜோசப், தன்னை கம்பு-குடையால் அடித்தார் என்று கேஸ் பதியப் பட்டது.  வேலை இழந்து, கோர்ட்டு- கேஸ் தொல்லையால் உழன்று ஒரு நிலையில் கணவர் தற்கொலை செய்து கொண்டதுடன் கேஸ் முடிந்துள்ளது!!  சமூக நிலையில் ‘குடும்பம்’ என்ற அமைப்புக்கு பெரிய இடம் கொடுக்கும் தமிழ் சமூகம், மேலும் அன்பை பற்றி உலகுக்கு சொல்லிய யேசுநாதரின் பெற்றோர் பெயர் கொண்ட கிருஸ்தவ தம்பதிகள் என்பதும் இன்னும் வருந்த தக்க செய்தி ஆகும்.

குடும்பத்தில் சண்டை வருவது தவிற்க இயலாத விடயம் ஆகி விட்டது.  இரு வேறுபட்ட சமூக சூழலில் இருந்து வந்த இரு நபர்கள், சங்கமித்து ஒரு குடும்பமாக மாறும் போது பல முரண்கள் எழுவது சகஜமே.  ஆனால் அதை கையாள தெரிந்துருப்பது என்பதே அறிவுள்ள மனிதனின்  சிறப்பு.   

சமரசம், தீர்வு காணல் என்பதில் ஆண் பெண் சம அளவு  பங்கு உண்டு என்றிருந்தால் கூட பெண்களின் பங்கு மிக முக்கியமாக உள்ளது.  உறவுகள் என்பது மனங்கள் சம்பந்தமானது இதில் சட்டம் கொண்டு இயக்கப்படும் மனம் வளமான வாழ்வுக்கு உதவாது.  வழக்காளர்களுக்கு வழக்குகளை கொடுக்கலாம் அவர்களுக்கு வாழ்வு கொடுக்கலாம் ஆனால் தம்பதிகளுக்கு மனக் கசப்பு அதிகரிக்குமே தவிற சுமூகமான வாழ்க்கைக்கு உதவுவது இல்லை. தன் குடும்பத்தை போலிஸிடம் காட்டி கொடுத்த பெண்ணை /ஆணை பின்பு அந்த குடும்பம் மனதால் ஏற்று கொள்வது அரிதான விடயமே.  ஆனால் இதை புரியாது பல பெண்கள் சிறு சண்டைக்கு கூட போலிஸ் உதவி நாடுவது தங்கள் குடும்ப மாண்பை கெடுக்க மட்டுமே உதவும்.

சமூக கட்டமைப்பில் ஆக்கபூர்வமான செயல் ஆக்கத்திற்க்கு பெரிதும் பங்காற்ற வேண்டிய ஊடகம் கூட தன் வருமானம்- விளம்பரம் நோக்கு கொண்டு பல நிகழ்ச்சிகளில் கணவர்-மனைவி உறவை கொச்சைப்படுத்தும்படியான நிகழ்ச்சி நடத்துகின்றனர். நாலு சுவருக்குள், தங்கள் குடும்பத்திற்க்குள் சமரசம் செய்து கொள்ள வேண்டிய பிரச்சனையை கோபி நாத் போன்றவர்களிடம் பகிர்ந்து குரங்கிடம் கிடைத்த பூமாலையாக கணவர் மனைவி உறவை திரித்து காட்டுகின்றனர். அதே போல் பல சீரியல்கள்; கற்று கொடுப்பதே எப்படி அழுவது, கொடூரமாக முகத்தை வைத்து கொண்டு திட்டுவது, கண்ணை உருட்டி பயமுறுத்துவது, வஞ்சமாக திட்டமிடுவது போன்றவை ஆகும். சினிமா, பத்திரிக்கை போன்றவற்றிலும் வரும் காமடிகள்  பலதும் கணவன் மனைவி உறவு அலங்கோலமாக சித்தரிகரிப்பதாகவே உள்ளது. இதனால் குடும்பம் உன்னதமான கணவர்-மனைவி உறவு சார்ந்து மனதில் ஒரு கேலியான கீழ்த்தரமான எண்ண அலைகள் பதியப்படுகின்றது.  இதில் சினிமா, சீரியலில் காண்பது போன்று கற்பனைக்கு இடம் இல்லை என்பதை பெண்கள் உணர வேண்டும்.  திருமணம் என்பது  உடல் சார்ந்த உறவு என்பதை விட மனம் சார்ந்த உறவு என்று புரிதல் வரும் போது அலுப்பு மாறி வாழ்க்கையுடன் ஒன்றிப்பு வந்து விடுகின்றது.

மேலும் பிரச்சனை கையாள ஆண்களை விட பெண்களிடமே ஆற்றல், வலிமை உள்ளது.  இதில் படிப்பு,  திறமை என்பதை விட பெண்ணின் நேக்கு போக்கான பண்பே கை கொடுக்கும். இன்றைய படித்த பெண்கள் மூளையை விட நாவுக்கே அதிகம் வேலை கொடுக்கின்றனர்.  கணவன் வீட்டில் புகுந்த பெண்கள் தங்கள் உரிமையை பற்றி பேசும் அளவுக்கு கடமையை பற்றி எண்ணுவதில்லை.  

முதல் ஒரு வருடம் தான் சார்ந்திருக்க வேண்டிய குடும்பத்தை ஆழமாக அவதானிப்பதை விடுத்து முதல் ஒரு வருடத்திற்க்குள் அந்த வீட்டிலுள்ள அனைவரிடவும் சண்டை பிடித்து ஒதுங்கி விடுகின்றார்கள்.  ஒரு சமூகத்தின் மூக்கனாம் கயிறு பெண்ணிடமே உள்ளது. அச் சமூகத்தை ஆக்கத்திற்க்கும் அழிவுக்கும் கொண்டு செல்வது தன்னால் மட்டுமே என்று புரிந்து கொள்ளும் போது அச்சமூகம் சிக்கலில் இருந்து விடுபடுகின்றது.

தந்தையாகவும், கணவராகவும், மகனாகவும் பல அவதாரங்களில் நம் உயிரோடு கலந்திருக்கும் ஆண்களில் பாதுகாப்பு  நம் கையில் தான் உள்ளது என்பதை உணர்ந்து ஆண்கள் மாண்பை காப்போம் நம் அழகிய உலகை மீட்போம்!!!


இன்று நவம்-19 ஆண்கள் தினம்.  அனைத்து  ஆண் உறவுகள், தோழர்கள், ஆண் நண்பர்கள், ஆண் ஆசிரியர்கள் அனைவருக்கும்  என் இதயம் கனிந்த ஆண்கள் தின வாழ்த்துக்கள்!

14 Nov 2011

குழந்தைகள் தினம்!


எல்லா நாடுகளும் வருடத்தில் ஒரு நாளை குழந்தைகள் தினமாக கொண்டாடுகின்றனர்.   குழந்தைகளின் மாண்பை உணரவும் குழந்தைகளுக்கு நாம் கொடுக்க வேண்டிய முன்னுரிமையையும் உரிமைகளை  நினைவுப் படுத்தவும் இந்நாள் கொண்டாடப்படுகின்றது. இந்தியாவின் முதல் பிரதமர் ‘ஜவஹர்லால்’ அவர்களின் பிறந்த நாளாம் நவம்- 14 இன்று குழந்தைகள் பேச்சு போட்டி, படம் வரையல் என பள்ளிகளில் கொண்டாடியுள்ளனர்.  குழந்தைகள்  வீட்டின் - நாட்டின் உயிர் நாடியாக, எதிர்காலமாக உள்ளனர் என்பதை நாம் அறிந்ததே.  வீடுகளில் குழந்தைகள் தான் முடி சூட மன்னர்களாக வலம் வருகின்றனர்.  பல பெற்றோர்கள் குழந்தைகளை மதிக்கவும் அவர்கள் மனம் கண்டு நடக்கவும் குழந்தைகளுக்காக வாழவும் முன் வருகின்றர். குழந்தைகள் கருவில் உருவாகுவதில் இருந்து அவர்கள் பிறப்பு, 'பிறந்த தினம்' என குழந்தைகள் சார்ந்தே பல கொண்டாட்டங்கள் வீடுகளில் அனுசரிகின்றனர்.

உலக ஜனத்தொகையின் மூன்றில் ஒரு பங்கான குழந்தைகள் உரிமைகள் பாதுகாக்க  பல சட்டங்கள் வகுத்துள்ளனர்.   வாழுவதற்க்கான உரிமை, மற்றவர்கள் துன்புறுத்தலில் இருந்து மீண்ட வாழ்க்கை, பேச்சுரிமை, எந்த மதத்தையும் தேர்ந்தெடுக்ககும் உரிமை,எல்லா நாட்டு குழந்தைகளின் அடிப்படை உரிமையாகும்.  ஆனால் சமூகத்தில் நடக்கும் பல நிகழ்வுகள் செய்திகள்  கணக்கில் கொள்ளும் போது குழந்தைகள் உரிமைகள் போற்றப்படுகின்றதா என்ற கேள்வி எழுகின்றது.                                                                                                                                          

கல்வி குழந்தைகளின் அடிப்படை உரிமையாக இருக்கும் போது பல குழந்தைகளின் குடும்ப சூழல், வறுமை, பெற்றோர்கள் பொறுப்பற்ற நிலை, ஏழ்மை, அறியாமையால் குழந்தைகளின் அடிப்படை உரிமை மறுக்கப்படுப்படுகின்றது. தமிழகத்தை எடுத்து கொண்டால் பள்ளி செல்லும் 35% குழந்தைகளில், 15 % மட்டுமே உயர்பள்ளிப்படிப்புக்கு செல்கின்றனர். அவர்களிலும் 7% பேர் மட்டுமே பல்கலைகழக படிப்பை பெற முடிகின்றது.  பள்ளி செல்லும் குழந்தைகளும் விரும்பும் பாடம் படிக்க அனுமதிக்காதும்,  தன் ஆற்றலுக்கு மிஞ்சி பாடம் கற்க நிர்பந்திக்கப்பட்டும், துன்புறுத்தப்படுகின்றனர்.  மேலும் சில குழந்தைகள் 6 வயதிற்க்கு முன்பே பெற்றோர்களால் பள்ளிக்கு அனுப்பபட்டு கல்வியை கட்டாயமாக திணிக்கப்படுவது மட்டுமல்லாது டுயூஷன் என்ற பெயரிலும், வீட்டு பாடம், தேர்வு என்றும் உள-மனம் சோர்வாக காரணமாகின்றது.  மேலும் பல குழந்தைகள் பெற்றோர், ஆசிரியர்களின் கொடிய வார்த்தை செயல்களால் வருந்தப்பட வைத்து தற்கொலை செய்து தன்னை மாய்த்து கொள்ளும் சூழலுக்கும் தள்ளப்படுகின்றனர்.

இந்தியாவின் ஜனத்தொகையின் 40 %(400 மிலியன்)  குழந்தைகளே.   உலக குழந்தைகள் எண்ணிக்கையில் 19% குழந்தைகள் இந்திய குழந்தைகளாகவே உள்ளனர். ஆனால் 50 சதவீதத்திற்க்கும் குறைவான குழந்தைகளை பள்ளி செல்லும் சூழலில் உள்ளனர்.  50% மேலுள்ள குழந்தைகள் தேவையான அளவு போஷாக்கு உள்ள உணவு பற்றாக்குறை உள்ளவர்களாகவே உள்ளனர். பிறக்கும் 12 மிலியன் குழந்தைகளில் 1 குழந்தை மட்டுமே தன் ‘முதல் பிறந்த நாள்’ காண உயிருடன் உள்ளது.  5-9 இடையிலுள்ள 25% பெண் குழந்தைகள் உறவினர்கள் தெரிந்த, தெரியாத நபர்களால் மோசமான நிகழ்வுக்கு ஆளாக்கப் படுகின்றனர். 

குழந்தை பணியாளர்கள் என்று எடுத்து கொண்டால் இந்தியா குழந்தைகளின் நிலை மிகவும் மோசமாகவே உள்ளது.  1976ம் ஆண்டு முற்றிலும் ஒழித்திருந்தாலும் பெற்றோர்களின் உந்துதலால் அல்லது குடும்ப சூழலால் 17 மிலியன் குழந்தைகள் தொழிலாளரகளாக உள்ளனர்.  







 குழந்தைகள் சார்ந்த பாலியல் தொழில்; ஆசியா நாடுகளில் அதிகம் என்றிருந்தாலும் உலகளாவியலாக இதே நிலை தான்!.  ஒவ்வொரு நாளும்  2 ஆயிரம் குழந்தைகள் பாலியல் தொழிலுக்கு தள்ளப்படுகின்றனர் என்பதே துயரான உண்மை.    5-15  வயதிற்க்கு உள்பட்ட 2 மிலியன் குழந்தைகள் மற்றும் 15-18 வயதில் 3.3 குழந்தைகள் பாலியல் தொழிலாளர்களாக மாற்றப்பட்டுள்ளனர்.  இதற்க்கு என்றே மாபியாக்களும் செயல் ஆற்றி வருகின்றது. 1.2 மிலியன் இந்திய க்குழந்தைகள் பாலியல் தொழிலாளர்கலாக உள்ளனர்.  இதில் 80 % குழந்தைகள் இந்தியாவிலுள்ள 5 மெட்ரோ நகரங்களில் வசிக்கின்றனர்.   அமெரிக்காவில் மட்டும் 5 லட்சம் குழந்தைகள் பாலியல் தொழிலில் உள்ளனர்.  குழந்தைகளை மையம் கொண்டே ஏஜென்று வழியாக குழந்தை பாலியல் சுற்றலாவும் கொடிகட்டி பறக்கின்றது.   வெறும் 20 டாலர் பணத்திற்க்கு குழந்தைகள் இந்த கொடிய நிலையில் வசிப்பதை ஒரு பத்திரிக்கையாளர் பதிவு செய்துள்ளார். http://www.youtube.com/watch?v=h7En-A1k1Ac  குழந்தைகளை விலைக்கு கொடுக்க பெற்றவர்களும் தயங்குவது இல்லை. மேலும் குழந்தை திருட்டு, கடத்தல் வழியாகவும் இத்தொழிலை வளமையாக்கி வைத்துள்ளனர்.   பல போது வீட்டு வேலைக்கு எனவும் தத்து எடுப்பது வழியாகவும் , அனாத ஆசிரமம் வழியாகவும் குழந்தை கடத்தல் நடைபெறுகின்றது.  கம்போடியா போன்ற நாடுகளில் பாலியல் தொழிலுள்ள 98% பெண்குழந்தைகள் தங்கள் குடும்பங்களின் ஒரே வருமான மார்கமாக உள்ளனர்.

குழந்தைகள் அவலம் பெற்றோர் பொறுப்பின்மை,ஊழல் அரசு போன்றவற்றால் மட்டுமல்ல; போர் போன்ற சூழலாலும் இன்னும் மோசமாக மாறுகின்றது.  போரில் தாய் தந்தை கொல்லப்பட்டு அனாதை ஆகுவது மட்டுமல்லாது, போரிலும் குழந்தைகள்  கொடூரமாக கொல்லப்படுகின்றனர்.   சமாதானப்படை என்று நாட்டில் குவியும் படை வீரர்களாலும் குழந்தை பாலியல் தொழில் வளர்ந்துள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.  இதற்க்கு ஒரு உதாரணமே அமெரிக்காப் படை புகுந்த பிலிப்பைன்ஸ்(1970),  வியற்னாம், கம்போடியா, மற்றும் போஸ்நியாவியா. சமீபத்தில் இலங்கையில் நடந்த நாலாம் ஈழப் போரிலும் பல அப்பாவி குழந்தைகள் கொடூரமாக கொல்லப்பட்டது அறிந்ததே.

குழந்தைகள் மாண்பை கெடுக்காத விதம் ஊடகம் குரல் கொடுக்க வேண்டும்.  தன் குழந்தை போல் அனைத்து குழந்தையும் காண்பது வழியே இத்துயரே விலக்கி குழந்தைகளை நிம்மதியாக வாழ வைக்க இயலும்.

திருநெல்வேலியில் தெருவோரங்களில் 5 வருடமாக  வளராத கைக்குழந்தையுடன் பிச்சை எடுக்கும் பெண்ணும்,  குழந்தைகளை கோயில் ஓரம் பிச்சை எடுக்க வைக்கும் பெற்றோரும், வெறும் 2 ஆயிரம் ரூபாய்க்கு மகளை தொழு நோயாக்கு விற்ற தாயும்,  தத்து கொடுக்கப்பட்டு ஆடல் பாடல் நிகழ்ச்சிக்கு செல்லும் அழகான பெண்குழந்தையையும் காணும் போது சட்டம் எப்போது தன் கடமையை செய்து குழந்தைகள் உரிமையை காப்பாற்ற உதவி செய்யும் என்ற கேள்வி மட்டுமே மிஞ்சுகின்றது நமக்கு!

12 Nov 2011

ஊழல்- பாடசாலையில்



ஊழல் ஊழல் எதிலும் ஊழல் எல்லாற்றிலும் ஊழல் என இந்தியா வாழ்க்கை/தமிழக வாழ்க்கை  தாறுமாறாகி விட்டது.   அரசியல் வாதிகள் அதிகாரிகள் என இயன்றவன் எல்லாம் ஊழலில் 2G, 3G , மணல் கொள்ளை என்ற பல பெயர்களில் உல்லாச வாழ்க்கை தான் நடத்தி கொண்டிருக்கின்றனர். அன்னா ஹசாரே போன்றவர்கள் திடீர் அவதாரம் எடுத்து ஊழல் ஒழிப்பு என உருவாகும் போது அருந்திதி ராய் போன்றவர்கள் ' இது நாடகம்' என்று படை எடுக்கின்றனர்.  இதிலும் கொடுமை ஊழலுக்கு தண்ணீர் பாய்ச்சி உரமிட்டு வளர்க்கும் சோனியா போன்றவர்கள் ஊழலை அழிக்க வேண்டும் என்று கூக்குரல் இடுவது இன்னும் நம்மை குழம்பி விடுகின்றது!  போனால் போகட்டும் போடா நாம் ஊழலற்று வாழுவோம் என்று முடிவெடுக்கும் போது; நம் குழந்தைகளுக்கு கல்வி நிலையங்களால் ஊழலுக்கு என வகுப்பு நடத்துவது தான் தர்ம சங்கடமான நிலையாக உள்ளது!

நேற்று, என் மகன் பாடசாலையில் நடந்த சம்பவம் இன்னும் என்னை நிலை குலைய செய்து விட்டது.  நெல்லை ரோட்டறி சங்கம் சார்பில் ஒரு பெரியவர் வந்து மாணாக்களுக்கு செடிகளை கொடுத்துள்ளார்.  இவர்களும் கையில் பிடித்து கொண்டு அரைமணி நேரம் ஐயா சொற்பொழிவு ஆற்றுவதை கேட்டு கொண்டு நின்றுள்ளனர்.   தன் இரு கரங்களையும் வீசி, நடந்து தன் சொற்ப்பொழிவை நிகழ்த்தியுள்ளார்.

"அருமை பள்ளி செல்வங்களை உங்கள் கையிலுள்ள செடியை பாருங்கள் அதை உங்கள் வீட்டில் நட்டு ஒரு நாளைக்கு ஒரு முறை , இரு நாளுக்கு ஒரு முறை; அல்லது வாரம் ஒரு முறையாவது தண்ணீர் ஊற்றுங்கள்.  ஒவ்வொரு இலையையும் கூர்ந்து கவனியுங்கள் அதன் அழகை பாருங்கள் இதுவே நீங்கள் இயற்கைக்கு செய்யும் நற் செயல்.   நாளை நான் உங்கள் வீட்டின் அருகில் வரும் போது, சார் பாருங்க நீங்க கொடுத்த செடி வளந்து விட்டது என்று என்னிடம் மகிழ்ச்சியாக காட்ட வேண்டும்……………….” இப்படி அரைமணி நேரம் கதைத்துள்ளார்.  குழந்தைகள் அரைமணி நேரவும் இந்த செடியை தன் கைகளில் ஏந்தி நின்றுள்ளனர்.  பள்ளி ஆசிரியர் இதை காமராவில் படங்களாக எடுத்து கொண்டிருந்துள்ளார்.   

இதன் க்ளைமாக்ஸுதான் என் சிந்தனையை கலைய செய்து விட்டது.   அந்த  ஆசாமி பேசி முடித்ததும் மாணவர்களை… உங்கள் கையிலுள்ள செடியை அப்படியே எடுத்த இடத்தில் வைத்து விடுங்கள் என கொடுத்த செடியை வாங்கியும் விட்டுள்ளார்.  நாளை இச்செய்தி பத்திரிக்கையில் உங்கள் பள்ளி பெயருடன் வரும் என்று கூறி மாணக்களுக்கு விடை கூறி சென்றுள்ளனர்.  


ஊழல் எப்படி புரிவது என்று ரோட்டறி போன்ற கிளப் மூலமாக கற்று கொடுக்கின்றர்களா என்பதே என் கேள்வி. இதற்க்கு உடந்தை பள்ளி தாளாளர் முதல்வர், ஆசிரியர்கள்!

இதே போல் இன்னொரு அனுபவம்.   2 வருடம் முன்பு. ரோட்டறி கிளப் சார்பில் நெல்லை பள்ளி மாணவர்களுக்கு ஒரு பொது தேற்வு வைத்து பரிசு கொடுத்தனர்.  மாலை 6 மணிக்கு பரிசை வாங்கி செல்ல பணியப்பட்டோம்.  6 மணிக்கு பெற்றோர் குழந்தைகளுடன் குழுமியிருந்தாலும் உறுப்பினர்கள் ஒவ்வொவொருவராக 7 மணி ஆகியும் வந்து சேரவில்லை!  பின்பு மாறி மாறி அவர்களுக்குள் பொன்னாடை போர்த்தி மகழ்கின்றனர்… புகழ்கின்றனர்... பெண் உறுப்பினர் உதட்டு சாயம் சகிதம் இன்னும் ஒரு மணி நேரம் பிந்தி அலங்காரத்துடன் வந்து சேர்ந்தார்.  பின்பு அவருக்கு ஒரே புகழ்ச்சி மாலைகள். கடைசியாக மாணவர்களுக்கு ஒரு கோப்பை கொடுக்கப்பட்டது.
                                                                                                                                                                                                      சமூகத்தில் பணத்தாலும் பதவியினாலும் கல்வியாலும் உயர்ந்த அந்தஸ்து படைத்தவர்கள் என எண்ணப்படும்-நம்பப்படும் சிலரே இதன் உறுப்பினர்கள்.  இவர்களுக்கு சமூகத்தில் ஒரு இடம், அடையாளம் தேவை என பள்ளி மாணாக்களை ஒரு கருவியாக பயண்ப்படுத்துகின்றனர். இந்த பணக்காரர்களுக்கு ஒரு பரிசு கோப்பை என்பது நாய்க்கு எலுப்பு வாங்கி போடும் செலவு மட்டுமே. இதை செய்து விட்டு விளம்பரவும் தேடி கொள்கின்றனர். ஆனால் பிஞ்சு குழந்தைகள் மனதில் அவர்கள் செயலால் நஞ்சை விதைக்கின்றனர்.

நல்ல மனது உடையவர்கள் என்றால் நெல்லை பகுதியில் உள்ள ஒரு அரசு பள்ளியை தத்து எடுக்கலாம் அல்லது 10 மாணவர்கள் படிப்பு செலவையாவது ஏற்பார்கள். ஆனால் அவர்கள் பகிட்டை பெருமையை தெரியப்படுத்த மாணவர்கள் தான் கிடைத்தார்களா? மாணவப்பருவம் என்பது எதையும் எளிதாக தன்னகப்படுத்தி கொள்ளும் வயது. இந்த மக்களில் ஈனச்செயலை மாணவர்கள் செயல்விளக்கத்தால் கற்க வேண்டுமா? வெளி நாடுகளில்; மனித நேயம்,  பங்களிப்பு, சமூக நீதி,  சேவை என்ற உயிரிய நோக்கம் கொண்டு துவங்கப்பட்ட ரோட்டறி சங்கத்தின் தமிழகப்பதிப்பின் அசிங்கத்தை கண்டு நொந்து விட்டோம். தங்கள் பணக்கார அற்ப்பத் தனத்தை தங்கள்  பணியாளர்களோடு நிறுத்த வேண்டும் அதை பள்ளியில் பிஞ்சு குழைந்தைகளின் மனதில் தினிப்பதில் நியாயமில்லை.

அமெரிக்காவில் ஹேத்தி பூகம்பம் பின் பல வெள்ளையர்கள் தங்கள் குழந்தைகளை போன்றே கறுப்பின குழந்தைகளையும் வளர்க்கின்றார்களாம்.  வாழ்வில் உண்மை மறைக்கப்பட்டு,  பித்தலாட்டம் ஏமாற்று என்பதை கல்வியோடு தினிப்பது கண்டிக்கதக்கது அது யாராக இருந்தாலும்! 

6 Nov 2011

கவலைக்கிடமான நிலையில் மணிமுத்தாறு பூங்கா !!!


நெல்லையில் நாங்கள் வசிக்கும் பகுதியில் மின்பழுது வேலை நடப்பதால் இன்று மாலை வரை மின்தடை என்று, 3  நாட்களுக்கு முந்தைய பத்திரிக்கையில் செய்தி வந்து விட்டது.   காலையிலே அவசர அவசர அவசரமாக சமையல், துணி துவைத்து முடித்து  எங்கள் வீட்டு தொட்டியில் தண்ணீர் நிரப்பி விட்டு 47 கி மீ பக்கத்திலுள்ள மணிமுத்தார் அணைக்கட்டு காண  பயணமானோம்.  இரண்டு வருடம் முன்பு போயிருந்தாலும் மழை பெய்து கொண்டு இருப்பதால் தண்ணீர் நிரம்பிய நீர் தேக்க தொட்டியை காணலாம் என்ற ஆசையில் இன்றைய பயணம் இருந்தது

சுற்றுமுற்றும் இருக்கும் 6 கிராமங்களின்  2756 ஏக்கர் நிலங்களில் வேளாண்மைக்கு தேவையான தண்ணீர் தரும்  மணிமுத்தாறு அணைக்கட்டு 1955-58 களில் கட்டப்பட்டுள்ளது.  இதன் கொள் அளவு 5511 மிலியன் குபிக் அடி ஆகும்.   62.4 கி.மீ பரப்பளவில், 2.9 கி.மி நீளம் கொண்ட இந்த டாம் நெல்லையின் ஒரு பிரதான சுற்றலா தளமாகும்டாமில் படகு சவாரி வசதியும் உண்டு.  கடல் மட்டத்திலிருந்து 1300 மீட்டர் உயரத்தில் மேற்க்கு தொடர்ச்சி மலையில் இருந்து புறப்பட்டு வரும் மணிமுத்து ஆறே இந்த அணையின் தண்ணீர் ஊற்று!

நாம் பழைய பேட்டை வழியாக பயணத்தை தொடர்ந்தோம்.  மழை பெய்துள்ளதால் வழி எங்கும் நிரம்பி வழியும்; அல்லி பூத்து தவழும் குளமும் ஓடும் நதிகளுமாகவே காட்சி தந்தது.   சேரமா தேவி, கல்லிடைக்குறிச்சி வழியாக சென்ற போது ஒரு பழைமையான ஆலையத்தின் சிறப்பான அமைப்பு ஈர்த்தால்  ஒரு படம் எடுத்த போது கோயில் சுற்று மதில் சுவரில் தொங்கி கொண்டிருக்கும் பாம்பை எங்கள் மகன் காட்டி தந்தார்.  

கல்லிடைக்குறிச்சி வந்து சேர்ந்த போது ஒரு டீ குடிக்கும் கடை அருகே எங்கள் வாகனம் நின்றது.   அதன் அருகில் இறந்த வீட்டு ஒப்பாரியும் கொட்டு சத்தவும் கேட்டு கொண்டிருந்தது.   பெண்கள் ஒரு சருவத்தில் 3 கிலோ அரிசி நல்லெண்ணை ஒரு தேங்காய் என வாங்கி கொண்டிருந்தனர்சில அழுது துவண்ட பெண்கள் கடைக்கு வந்து தேனீரும் பண்னும் வாங்கி சாப்பிட்டு கொண்டு;  ஒரு பூமாலை வாங்க வேண்டும் அவனிடம் கொடுத்தால் 10 ரூபாய்க்கு வாங்கி விட்டு 15 ரூபாய்ன்னு சொல்லிடுவான் நீ வாரீயாஎன கொஞ்சம் புரணியும் அடித்து கொண்டு நின்றனர். ஊழல் நம் அரசியல் தலைவர்களிடம் மட்டுமல்ல, கிராமத்திலும் மலிந்து விட்டதோ  என்று எண்ணி கொண்டு ஒரு தேனீர் 4 ரூபாய், ஒரு  பண் 3 ரூபாய் என வாங்கி சாப்பிட்டு விட்டு மறுபடியும் பயணம் ஆரம்பித்தோம்.

தமிழ்நாடு கனிமவளத் துறைக்கு சொந்தமான மார்பில் கல் வெட்டும் இடம் கடந்து சென்ற போது ஒரு படம் எடுத்ததை கண்ட காவலாளி இங்கு படம் பிடிக்க கூடாதுஎன கடமை உணர்வோடு தடுத்தார்.  நாமும் சரி என்று கதைத்து கொண்டு அடுத்த பக்கம் சென்று ஒரு படம் எடுத்து கொண்டு மணிமுத்தார்  நோக்கி போய் கொண்டிருந்த போது போலிஸ் பயிற்சி பள்ளிகள், அவர்கள் விடுதிகள், அதிகாரிகளின் குடியிருப்புகள் மிடுக்காக காட்சி அளிக்கின்றது.   எங்கும் போலிஸ் பயிற்சி மாணவிகள், மாணவர்கள் மயமாகவே இருந்தது.   சிரித்த முகம் போலிஸை கண்டாலும் 'போலிஸ்' நமக்கு அறியாத ஒரு பயத்தை தந்து மின்னி மறைகின்றதை உணர முடிந்தது.  வெள்ளை சீருடை அணிந்த போலிஸ் மாணவிகள் தான் இருமாப்பில் மிதி வண்டியில் நடமாடி கொண்டிருந்தனர்.

மணிமுத்தார் நீர்தேக்கம் வந்து விட்டோம்!  தங்க நிறத்திலான காத்திரமில்லாத ஒல்லியான திருவள்ளுவர் நம்மை வரவேற்கின்றார்.   நம் வாகனத்தை டாமின் அடிப் பக்கம் கொண்டு சென்று நிறுத்தினோம்.  எங்களுக்கு முன் ஒரு சிறு குழு சென்று திரும்பி கொண்டிருந்தது.  அதன் பக்கத்தில் படிகெட்டு வழியாக அணைக்கட்டின் மேல் பக்கம் செல்லலாம்.  வீட்டு மாடிக்கே செல்ல மடிக்கும் எனக்கு பெரும் பாடாக  இருந்தது படி ஏற்றம்!  மேல் பக்கம் சென்ற போது அவ்வளவு அழகு!  இயற்கை அழகும் மேற்கு தொடர்ச்சி மலையும், நேர்த்தியாக கட்டியுள்ள அணைக்கட்டும் சொல்ல வார்த்தைகள் இல்லாதிருந்தது.   இனிமையான மனதிற்கு இதமான காட்சியின் அணிவகுப்பாக  இருந்தது.  சுற்றி முற்றி எங்கு நோக்கினும் இயற்கையின் நளின நடனமாக இருந்ததுமனதில்லா மனதாக நாங்கள் கீழ் நோக்கி இறங்கிய வர; ஒரு அம்மா 3 குழந்தைகளுடன் மேல் நோக்கி வந்து கொண்டிருந்தார்.  பூட்டி யிட்ட வெளிக்கதவுக்குள் செல்ல சிறு பையன் முயன்று கொண்டிருந்தான்.  அம்மா சுற்றி முற்றும் நோக்கி விட்டு கீழை வர எத்தனித்து கொண்டிருக்க மேல் நடந்து வரும் மகளை கண்டு “ இங்க ஒன்னும் பார்க்க இல்லை..நீ ஏன் மேலே வாறேஎன்று தன் வெறுப்பை வார்த்தையால் உதிர்க்க மகள்எனக்கு மேல் வந்து பார்க்கனும்”  என்று நாகர்கோயில் தமிழில் கதைத்து கொண்டு விடாபிடியாக மேல் நோக்கி வந்து கொண்டிருந்தார்

சுற்றலாத் துறையின் ஆழ்ந்த நித்திரையை உணர்த்தியது நீர் தேக்கத்தின் அருகிலுள்ள பூங்கா வனம்.   உள்ளூர் மக்களுக்கு  ஆடு  மாடு மேய்க்கும் வனமாக மாறியுள்ளது அழகிய அமைப்பிலான பூங்கா!. பூங்காவிலுள்ள சிலைகள் உடைந்தும் பொலிவற்றும் காணப்படுகின்றது.  கப்பலோட்டி வா.வொசிதம்பரம் பிள்ளை ஒரு கை ஒடித்த நிலையில் நின்று கொண்டிருந்தார்.  கவலையுடன் திரும்பிய போது ஒரு குரங்கு கூட்டம் எங்கள் மகன் கையிலுள்ள தின்பண்டம் பறிக்கும் நோக்குடன்  கூட்டமாக நம்மை நோக்கி படை எடுத்தது.  அணைக்கட்டின் மேல் பக்கம் உள்ள அருவிக்கு செல்ல விருப்பம் கொண்டாலும் திடீர் மழை நம்மை விரட்டி மணிமுத்தார் ஊர் எல்கையில் கொண்டு விட்டது.

மகனுக்கு அருவில் குளிக்க இயலவில்லை என்ற வருத்தம். அவர் மனம் குளிர்விக்க ஒரு ஐஸ்கிரீம் வாங்கி கொடுத்து வீட்டு அருகில் வரும் முன், விரட்டிய மழை நம்மை பிடித்து கொண்டது. வீடு வந்து சேர்ந்த போது, பலத்த மழையால் காலையில்  துவைத்து இட்ட துணிகள் அசையில் மறுபடியும் குளித்து கொண்டிருந்தது!!!

27 Oct 2011

தீபாவளி வெடி........................?








மூன்று நாட்களாக ஒரே வெடி சத்தம்!   நேற்று உச்சஸ்தாயில் ….. நிம்மதியா தூங்க இயலவில்லை, ஏன்…. வீட்டு கதவு, ஜன்னல் கூட திறந்து வைக்க  பயமாக இருந்தது.  காது கேள்வி திறன்  இழந்திருப்போமா என்று 2 நாள் கழிந்து தான் தெரியும்இந்த வகையான கொண்டாட்டங்கள் காணும் போது  தமிழர்களின் வன்முறையான வாழ்க்கை முறையை பற்றியே சிந்திக்க தோன்றுகின்றது.   தீபம் ஏற்றி உறவினர்களுடன் விருந்துக்கள் பரிமாறி வடக்கத்தியர்கள் கொண்டாடும் இத்திருநாள், யார் வீட்டில் அதிகமாக வெடி வெடிக்கின்றனர் என்பதில்  போட்டி போட்டு காற்று, தண்ணீர், நிலம் என சகல வித ஒலி- ஒளி மாசுபடுதலுக்கும் காரணமாகி கொண்டாடப்படுவது வருத்தப்பட வேண்டியதே.

தமிழகத்திற்க்கு வந்த புதிதில் ஆச்சரியம் அடைந்து விட்டேன்.  உயிரை கையில் பிடித்து கொண்டு தான் தெருவில் பயணிக்க இயலும்.   எங்கு வெடி வைத்திருக்கின்றார்கள் என்று வெடித்தால் தான் தெரியும்!   அடுத்த நாள் தெருவில் நடந்தால்  வெடியை பொதிந்த காகிதமே குப்பையாக குமிந்து கிடப்பதை காணலாம்எங்கள்  இளைய மகன் கைக்குழந்தையாக இருந்த போது ஒவ்வொரு வெடி சத்ததிற்க்கும் அழுது கொண்டே இருந்தான்.  அவனை நெஞ்சோடு சேர்த்து அழாது வைக்க பெரும் பாடு பட்டோம்.  இப்போதும் அவனும் பிஜிலி வெடி வாங்கி தாங்க, ஹிட்லர் வெடி வாங்கி தாங்கன்னு சண்டை பிடித்து கொண்டிருக்கின்றான்.

ஒரு முறை தீபாவளி அன்று மதுரையில் இருந்து தூத்துகுடி வரை வான-வேடிக்கை பார்த்து கொண்டே முழு இரவும் பயணித்தோம்.  பணத்தை இப்படி கரியாக்க எப்படி மனம் வருகின்றது என்று எண்ணி பார்க்கும் போது மனிதனின் மனநிலை தான் விளங்கவில்லை!  கடந்த வருடம் 300 ரூபாய்க்கு வாங்கின வெடி இந்த வருடம் 500 ரூபாய்க்கு விற்கப்பட்டது.

நெல்லையில் நல்ல மழையும் பெய்து கொண்டிருப்பதால் ஓரளவு கொடிய நெடியுடன் கூடிய புகையில் இருந்து தப்பிக்க இயன்றது.   இருந்தும் வெடி இடும் சுற்றுபகுதி புகை மூட்டமாகவே போர் களத்தில் நிற்பது போல்  தான் காட்சி தருகின்றது.   இந்த வருடம் இன்னும் ஒலி கட்டுக்கு அடங்காது  இருப்பது போன்றே தெரிகின்றது.  அரசு மாசு கட்டுபாடு வாரியம்  கூறி வருவது போல் மாசு மற்றும் காற்று கண்டறியும் ஆய்வு நடத்தப்படுகின்றதா என்று அறிய கழிய வில்லை.

சீனர்களால்  2000 ஆயிரம் வருடம் முன்பு வெடி அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது.  பொதுவாக எல்லா கொண்டாட்டங்களும் திருமணம் தொடங்கி வெடியுடன் கொண்டாடும் கலாச்சாரம் பரவி வரும் வேளையில் ஆங்கிலயர்கள் வரும் முன் இந்தியர்கள் வெடி வெடித்து கொண்டாடிய தகவல்கள் இருப்பதாக இல்லை.  உலகில் புதுவருடம் மற்றும் தீபாவளி காலயளவிலே அதிகமாக வெடி வெடிப்பதாக செய்தியுள்ளது.

பல நாடுகளும் வெடி பயன்படுத்துவதற்க்கு சில நடைமுறை திட்டங்கள் வகுத்துள்ளனர்.  அதே போல் இந்தியாவிலும் செப், 2001 வந்த உச்சிநீதிமற்ற உத்தரவின் படி சில நெறிமுறைகள் மற்றும் சட்டதிட்டங்கள் கொடுக்கப்பட்டுள்ளதுஅதில்  சிலவை ;
  • வெடி வெடிக்கும் இடத்தில் இருந்து 4 மீட்டருக்கு உள்ளாக 125 டெசிபெல்க்கு உள்ளாக  மட்டுமே  ஒலி எழுப்ப அனுமதி உண்டு.
  • மருத்துவமனைகள், பாடசாலைகள்,  நீதிமற்றம், வழிபாட்டு தலங்கள் சமீபத்தில் 100மீட்டருக்குள் வெடிவெடிப்பது தடை செய்யப்பட்டுள்ளது.
  • இயற்கை மற்றும் வன இலாகவின் படி 125 டெசிபெல்லுக்கு மேல் ஒலி எழுப்பும் வெடி மருந்து பொருட்கள் விற்பதோ பயண்படுத்துவதோ தடை செய்யப்பட்டுள்ளது.
  • காவல் துறை 20 வகை வெடிகள் வெடிக்க செய்வதை தடை செய்துள்ளனர். மக்கள் சட்டத்தை மதித்து நடப்பதை உறுதி செய்ய வேண்டியதும் காவல் துறையின் கடமையே!
  • மேலும் மாலை 6 முதல் இரவு 10 மணி நேரம் மட்டுமே வெடி வெடிக்கலாம்.  ஆனால் இந்த சட்டத்தையும் எந்நேரவும் வெடி வெடித்து புரக்கணித்துள்ளனர்  மக்கள்.
  • இயற்கைக்கு மனிதனுக்கும் மாசுவிளைவிக்கும் ஒரு சில பொருட்களான  காட்மியம், லெட், மாங்கனீஸ், சிங், சோடியம், நைட்றேட், சல்பேட், கார்பன் மோனோக்சைட் போன்றவை பயன்படுத்துவதற்க்கும் தடை விதித்துள்ளது. ஆனால் வியாபார லாபத்தை மனதில் கொண்டு பல நிறங்களிலான ஒளி, மிரட்டும் ஒலிக்கு என தடைசெய்யப்பட்ட மூலபொருட்களை அளவுக்கு மீறி சேர்த்தே தயாரிக்கின்றனர்.
வெடிவெடித்த பகுதியை நோக்கினால் ஒரு கருப்பு மேகமூட்டத்துடனே பல மணி நேரங்களாக காட்சி அளிக்கின்றது.  தொண்டை, இதயம் சம்பந்தமான நோய்கள் அதிகரிக்கவும் இது காரணமாகின்றது .   இதில் கர்ப்பிணி பெண்கள், வயதானவர்கள்,  ஆஸ்துமா, இதய நோயாளிகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.   பொதுவாக மனிதனால் கேட்கும் திறன் என்ற 60 டெசிமெல் ஒலி என்பது வெடிச் சத்ததால் 120உம் 140க்கு மேலும் கேட்பது சிலவேளைகளில் நம் கேள்வி திறனையை பதம் பார்ப்பதாகவும் அமைந்து விடும். மேலும் மனகலக்கம், தேவையற்ற கோபம், மன அழுத்தம்சோர்வு போன்றவற்றால் நாம் பாதிப்படையவும்  இதுவே காரணமாகின்றது.

 மக்களை வழிநடத்த வேண்டிய அரசு  மற்றும் அரசுசார நிறுவனங்கள், மற்றும் தமிழ்நாடு மாசுகட்டுபாடு வாரியத்தின் செயலாக்கம் வெறும் வெத்து பேச்சோடு நிறுத்தி கொள்வதுடன் செயலாக்கத்தில் கொண்டு வருவதில்லை என்பதும் பரிதாபத்துற்க்குரியதே.  உலக வெப்பமயவதால் சுற்றுசூழல் சீர்கேடு உள்ளிட்ட காரணங்களை முன்நிறுத்தி பட்டாசு வெடிப்பதை தவிற்க மக்களும் முன்வரவேண்டும்.  மத்திய மாநில அரசுக்களும் சமூக சுற்றுசூழல் ஆர்வலர்களும் தொடர்ந்து மக்களிடம் எடுத்துரைக்க முன்வரவேண்டும். லைசன்ஸ் என்ற பெயரில் அரசு அதிகாரிகள் வியாபாரிகளிடம் பயமுறுத்தி கையூட்டு பெறுவதற்கான விழாவாகவே தீபாவளியை காண்கின்றனர்.  கடைகள் இட அங்கிகார சாற்றிதழ்  தீபாவளிக்கு 3 நாட்களுக்கு முந்திய தினமே கொடுக்கப்பட்டுள்ளது. அவசர-கடைகள் முக்கிலும் மூலையிலும்  இட்டு தவிற்க வேண்டிய விபத்துக்களுக்கும் காரணமாவது மட்டுமல்லாது மேலும் தன் கையிலிருந்து தவறவிட்ட பணத்தை மக்களிடமே வியாபாரிகள் அநிநியாய விலை வழியாக பறிக்கும் சூழலும் உருவாகின்றது.

மக்களுக்கு விழிப்புணர்வு கொடுப்பதில் ஊடகத்தின் பங்கும் பெரிதாக உள்ளது. ஆனால் ஊடகம் விளம்பரத்தின் ஊடாக பணம் ஈட்ட முயல்வதை தவிர்த்து ஆக்கபூர்வமான செய்திகளோ தகவல்களோ மக்களுக்கு கொடுக்க முன் வருவதில்லை.  அதற்கு பதிலாக அதன் சில நிகழ்ச்சிகளே வெடிப்பதை உற்சாகப்படுத்தும் படியாகவே உள்ளது.

ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் அரசு நிறுவனங்களிடம் அனுமதி பெற்றே வெடி நிகழ்ச்சி நடத்த இயலும்.  கானடாவில் 18 வயதுக்கு மேலுள்ளவர்கள் மட்டுமே வெடிகள் வாங்க அனுமதி உண்டு. சீனா தாய்லாந்து போன்ற நாடுகளில் கிராமப்புறங்களில் வெடிப்பதை சாதாரணமாக கொண்டிருந்தாலும் நகர்புறங்களில் வெடிக்க தடை உண்டு.  ஹோங் ஹோங் போன்ற நாடுகளில் அரசு பிரத்தியேக இடங்களில் வெடி வெடிக்கும் நிகழ்ச்சியை ஒரு பொது நிகழ்வாகவே நடத்துகின்றனர். தனிநபர்கள் பயன்படுத்துவதை சட்டத்தால் தடை செய்துள்ளனர்.  அமெரிக்காவில் ஒரே இடத்தில் குழுமி காவல் மற்றும் தீயணப்பு படையின் துணையுடன் வெடி வெடிக்கும் நிகழ்ச்சி நடத்தப்படுகின்றது.

இந்தியாவின் மொத்த தேவைக்கு 90 சதவீதம் வெடி, குட்டி ஜப்பான் என்று அறியப்படும் தென் தமிழக ஊரான சிவகாசியில் தான் உற்பத்தியாகின்றது என்பது அனைவரும் தெரிந்ததே.  குடிசை, சிறு மற்றும் பெரிய   என 8 ஆயிரத்திற்க்கு மேல் தொழில்ச்சாலைகள்
 இங்கு உண்டு என கணக்கிடப்பட்டுள்ளது.   தயாரிப்பில் இருந்தே பயன்படுத்தும் பொருட்கள், ஒலி போன்றவற்றில் எந்த சட்டத்தின் பரிந்துரையும் பின்பற்றுவதில்லை. வியாபார நோக்கத்துடன் சட்டத்தை  காற்றில்   பறக்க விடும் நிகழ்வே நடக்கின்றது.  ஆய்வாளர்களின் கணக்குப்படி  10 ரூபாய் தினக்கூலிக்கு என 4முதல் 12 வயதுக்குள் குழந்தைகளை வேலைக்காக பயன்படுத்துகின்றனர் என்பதும் விவாத்திற்குரிய விடையமாகும்.http://www.maniyosai.com/cms/politics/news/Forty-thousand-child-labors-in-sivakasi-cracker-units  உலகமே அவர்கள் தயாரித்த வெடி பொருட்களை வெடித்து மகிழ்ச்சி வெள்ளத்தில் கொண்டாடிய போது; ஏற்கனவே விபத்தில் சிக்கி உயிர் பிழைத்து வாழ்க்கை போராட்டத்தில் தவிக்கும் 3000 மக்களுடன் இந்த வருடம் வெடி விபத்தில் உயிர் இழந்த 26 குடும்பங்கள் கண்ணீரில் ஆழ்ந்து இருந்தது. மக்களுக்கு வருமானம்  தரும் தொழில் என பலர் வெடிகளை வாங்குவதை பெருமையாக எண்ணினாலும் 50 ஆயிரம் மக்கள் தொழிலாக கொண்ட இவ்வூரில் வெடிவிபத்தில் காயத்தால் பாதிக்கப்படும் மக்களுக்கு தகுந்த சிகித்சை அளிக்ககூடிய மருத்துவ மனைகள் இல்லை என்பதும்;  70 கி.மீ தள்ளி இருக்கும் மதுரையை தேடி செல்லும் பரிதாப நிலையிலே மக்கள் வாழ்கின்றனர் என்பதும் மிகவும் மோசமான சூழலில் வாழும்  தொழிலாளர்களின் நிலையை காட்டுகின்றது. 


http://www.hindu.com/2009/10/19/stories/2009101959560400.htm இத்தருணத்தில் தங்கள் கிராமத்திற்க்கு நாடோடியாக வரும் பறவைகளுக்கு  பாதிப்பு ஏற்ப்பட கூடாது என வெடி இல்லாதும் தீபாவளி கொண்டாடலாம் என்று நெல்லையின் பக்கத்திலுள்ள கூந்தகுளம் கிராமத்திலுள்ள மக்களும் குழந்தைகளும் உலகிற்க்கு கற்று கொடுத்துள்ளனர்.

எங்கள் வீட்டு றிக்கி நாய் 3 நாட்களுக்கு பின்பு இன்று தான் கண் அசந்து தூங்குகின்றது. அது கொண்ட துன்பம் சொல்லி மாளாது.  பயம் கொண்டு உணவு அருந்தாது உறக்கம் அற்று ஓடி கொண்டே இருந்தது.   இப்படியாக மனிதனின் அற்ப சந்தோஷத்திற்க்கு என தான் வாழும் இயற்கை அன்னை, தன்னுடன் வாழும் மிருக-பறவைகள் அனைத்துக்கும் துன்பம் விளைவிப்பது சரியோ???


26 Oct 2011

தீ….வலி!


தமிழர்களின் பண்டிகையே அல்லாத தீபாவளி தற்கால வியாபார கலாச்சாரத்தால்  தமிழர்களின் பண்டிகை ஆகிவிட்ட சூழலில் பண்டிகை வந்ததோ வந்தது பல வீடுகளில் இத்துடன் தீராத சண்டைகளும் வலிகளும் சேர்ந்து வந்து விட்டது.

எதிர்வீட்டு பக்கத்து வீட்டு பெண்கள் போன வாரமே வாய் சண்டை ஆரம்பித்து விட்டனர்.  பால் வாங்கி கொண்டே ..
என்ன அக்கா மக என்னிக்கு வாரா எவ்வளவு உங்க முறை? 
உடனே பரிமளாக்காவுக்கு பண்ணையார் திமிறும் ஒன்று சேர
நீங்க எவ்வளவு கொடுக்குறீக என்ற மறுகேள்வி!
  நாங்க 3 ஆயிரம் ரூபாய் தான்.  மருமகன் எதிர்பாக்க மாட்டார் ஆனா முறை இருக்கில்லே…..
நாங்க 5 ஆயிரம் எங்க வீட்டிலும் மருமகன் தங்கமானவரு ஆனா நம்ம வீட்டு பிள்ளைக்கு பட்டு சேலை எடுத்து கொடுக்க வேண்டாமா?
நீங்க கொடுங்க… கொடுங்க…எங்க மக கலியாணம் முடிந்து தான் 11 வருஷம் ஆச்சில்லே!  போதும்……….3 ஆயிரம் ரூபாய்..
பரிமளம் அக்காவுக்கு ஆத்திரம் தீரவில்லை.  வந்திட்டா என்னையை கணக்கு போட.  என் மகளுக்கு நாங்க எல்லா பொங்கலுக்கும் தீபாவளிக்கும் கொடுப்போம் என்று சொல்லி கொண்டே வாயை சரித்து வைத்து கொண்டு ஒரு பக்க பார்வையும் பார்த்து  விட்டு வீட்டிக்குள்ள போய்டாக.

திருவிழாக்கள், மகிழ்ச்சியாக குடும்பமாக கொண்டாடி மகிழ்வதற்க்கு என்றால் வீட்டு முற்றத்தில் ஆரம்பிச்சு வீட்டுக்குள் ஒரே கும்மி அடி சண்டை வேற.  போத்தீஸ், ஆரெம்கெவி சேலை விளைப்பரம் வந்த  அன்று முதல் ஆரம்பித்த சண்டை பரிமளாக்கா வீட்டுகார்  தலையை பிச்சுகிட்டு வீட்டை விட்டே போகும்  மட்டும் தொடர்ந்தது.   

அடுத்த நாள் தாய் மகன்களிடம் பேசுவது கேட்டது, அதான் அப்பவே சொன்னேன் அப்பாகிட்ட நீங்க  சண்ட போடாதீங்கன்னு.  அக்காவும் வந்திட்டா அவளுக்கு 5 ஆயிரம் கொடுக்கனும் துணிமணி எடுக்க 4 நாள் தானே இருக்கு…

மகள் முந்தின நாள் மதியம்  தன் கணவர் வீட்டில் இருந்து தன்னோட மகளை இடுப்பில் வைத்து கொண்டு காரை விட்டு இறங்கினா.  அம்மாவிடம் அலைபேசியை வாங்கி "அப்பா நீ எப்ப வர போறே உன் பேத்தி தேடுதா"ன்னு அன்பு மொழியில்  பாசமழை பொழிந்தா.   அவரும் நேற்று காலை வீடு வந்து சேர்ந்தார். மக தன் மகளிடம் தாத்தா கிட்ட வெடி வாங்கி கேளுடா….ன்னு கொஞ்சும் சத்தம் கேட்டுது. எப்பவும் நாய் மாதிரி குலைச்சு பேசுதவரு பேத்திட்ட தாத்தா கண்ணு குட்டிக்கு மத்தாப்பு வாங்கி தாரேன்னு கதைக்கும் சத்தம் கேட்டுது.  நேரம் போக போக மக அப்பாவை திட்டுத சத்தம் கேட்க தொடங்கியது “நீ என்ன அப்பன், நீ எதற்க்கு என்னை பெத்து போட்டே”… அவரும் விட்ட பாடில்ல “போ நாயை நான் செத்தாலும் என் சொத்தில ஒரு பங்கும் தர மாட்டேன்”.  “நீ ஒன்னும் தர வேண்டாம் நீ தந்தாலும் விடிஞ்சுது போ”…ன்னு மகளும் ….. ஒரு வழியா மக தன் காரில் வீடு போய் சேந்திட்டா போல் இப்போ சத்தம்  இல்லை.

நல்ல தூக்கம் நடு இரவில் சண்டை இடும் சத்தம்!! மகன் அப்பனை திட்ட, அப்பன் மகனை அடிக்க போக, பரிமளா அக்கா “போக்கத்தவனை கட்டிக்கிட்டு அழ வேண்டியது, தான் என்ன பாவம் செய்தேனோ” என்று கூக்குரல் இட... நாங்க நல்ல தூக்கத்தில் இருந்தவக விழித்து விட்டோம். சத்தம் குறைவது போல் தெரியவில்லை அது பார்லிமென்று கூட்ட தோடர் போல் போய் கொண்டே இருந்தது.  நேரம் ஆக ஆக அசந்து விட்டார்கள் போல  சத்தம் குறைந்து குறைந்து ஓய்ந்தது. மறுபடியும் அசந்து  தூங்கி விட்டோம். இப்போது அதிகாலை 3 மணி ஆகியிருக்கும் கார் திறக்கும் சத்தம். கார் ஹாண் அடித்து கொண்டே இருக்கின்றது.  ஒரே மண்டைக்கனம்… ஆரம்பம்மாகி விட்டது மறுபடியும் போர்க்களம்!   நாங்க எழுந்து ஒரு கட்டன் காப்பி போட்டு குடிச்சிட்டு  அவரவர் வேலையை ஆரம்பித்து விட்டோம்.  அங்கு தூவனம் வந்து இடி மின்னலுடன் சண்டை மழை பெய்து கொண்டிருந்தது.

பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பிட்டு  வேலையை முடித்தும் முடிக்காமலும் பகல் 11 மணிக்கு ஒரு குட்டி தூக்கம் பிடிச்சா, மத்தாப்பு வெடி அல்ல புஸ்வானமும் இல்லை வானவெடி மாதிரி சண்டை தொடங்கி விட்டது மறுபடியும்!  ஆவேரி விழித்து பார்த்தா; பிள்ளைக இல்லை போல், பரிமளாக்கவும் அவுக வீட்டுகாரரும் சண்டை  போடுராக.  பிள்ளைக இருந்தாலும் ஒரு பலனும் இல்லை.  ஒரு பையன் இயந்திர துறையில் பொறியாளர் பட்டம் முடிச்சிருக்கானாம், பொண்ணு கணிணி துறையில் பொறியாளராம் இளைய பையன் மருத்துவம் படிக்கானம் . சண்டைன்னு வந்திட்டா அப்பறும் அவக வீடு ரங்கநாதன் தெரு சந்டை தான்!!!

வாய் சண்டை பெருத்து பெருத்து வீட்டுகாரம்மா சொல்றாக “ எலே நாயை உன்னை கட்டி என்னத்த கண்டேன், செத்து தொலையேன் நானாவது நிம்மதியா இருப்பலே…”, வீட்டுகாரர் சத்தம் தேங்கா சிரட்டையை பாறையில் உரசினாப்பிலே கேக்குது பதிலா பரிமளா அக்காச் சத்தம் “செருப்பு பிஞ்சிடும், தீபாவளிக்கு கேட்ட பட்டு சேலை எடுத்து தர வக்கில்ல பேச்சாக்கும்” ….வீட்டுகாரர் என்ன சொன்னார்ன்னு தெரியல செருப்பு வைத்து அடிக்கும் சத்தம் கேட்டது…..சப்சப்சப்ப்ப்…யார் யாரை அடித்தாங்கன்னு பார்க்க இயலவி\வில்லை….!

http://www.youtube.com/watch?v=TOOTnRxNjc0&noredirect=1 எதிர்வீட்டில மக வந்திட்டா  வெடி சத்தம் விட தாயும் மகளும் பேசும் சத்தம் தெருவை சுழற்றி அடிக்குது! நான் பாட்டு பெட்டியில் விஜயலக்ஷ்மி நவநீத கிருஷ்ணனுடைய நாட்டுப்புற  பாடலை சத்தமா  போட்டு விட்டுட்டேன்.

பக்கத்து வீட்டு பரிமளா அக்கா வீட்டிலே சத்தமே காணும் . கூடு கலஞ்ச கிளி மாதிரி பிள்ளைகள் எங்கயோ போய் விட்டார்கள். அண்ணாச்சி இருமல் சத்தம் மட்டும் அப்பப்ப கேக்குது.  மயான அமைதியாக வீடு!  தீபாவளி கொண்டாடுகிறார்கள் போல!!!!