யார் யார் பாதிக்கப்படுகின்றார்கள் என்றால் எல்லா நிலைகளிலுமுள்ள பெண்கள் பாதிக்கப்படுகின்றனர். அதில் செல்வந்தர்கள் என்றோ எழை, படித்தவர்கள் பாமரர்கள் என்றோ பாகுபாடில்லை.
சமீபத்தில் எனக்கு தெரிந்த ஒரு பாமர இளம் பெண் தன் குடும்பத்தாராலே கொல்லப்பட்டார். தன் முடிவுக்கு இப்பெண் எப்படி காரணம் ஆனார் அல்லது சமூக-அரசியல் சூழல் இவளை தள்ளியதா என்று நான் வருத்ததில் ஆழ்ந்திருக்கும் போதே இன்னொரு படித்த பெண் ஒரு கயவனை நம்பி ஒரு பொதி பிரியாணி சாப்பிட்டு விட்டு மனதில்லா மனதுடன் ஆட்டோவில் ஏறிச்செல்வதை கண்டேன். நிச்சயமாக ஏதாவது ஒரு கல்லூரியில் படிக்கும் மாணவியாகத்தான் இருக்கவேண்டும். கையில் ஒரு புத்தக பை இருந்தது. அவள் பார்வையிலும் வெகுளித்தனம் இல்லாது சுற்றும் உற்று நோக்கி கொண்டே இருந்தாள். குறிப்பாக நான் கவனிப்பதை புரிந்து கொண்டு எனக்கு தன் கண்ணால் மௌவுனமான ஆனால் தீர்க்கமான விடை தந்து சென்றாள்.
ஒரு பெண் தன் உடலை அடமானம் வைப்பது தன் பசிக்கும் குழந்தைக்கு உணவு கொடுக்க தன் நோயாளியான கணவரை காப்பாற்ற என்ற கருணைச்சாக்கு இந்த பெண்ணிடம் நிச்சயம் நாம் செலுத்த இயலாது. இவள் கல்வி கற்றவள், மதிப்பெண் அல்லது தேற்வு வெற்றி பெற என்ற காரணங்களாக இருக்கலாம். ஆனால் ஒரு முடிவை எடுக்கும் திறமை ஒரு வாய்ப்பு இப்பெண்ணிடம் இருந்தது.
நாங்கள் உணவம் சென்ற போது இப்பெண்ணுடன் வந்தவன் பழம்கால சினிமா கதாநாயகன் போல் சிவந்து, 6 அடி உயர கொண்டு நேர்கொண்ட பார்வையுடன் நிமிர்ந்த நெஞ்சுடன் இருந்தான். இவள் அழுது கூனிக்குறுகி ஒடுங்கி தான் இருந்தாள். அவனோ தொடர்ந்து மகுடி ஊதுவது போல் பேசிக் கொண்டே இருந்தான். நேரம் ஆக ஆக அவள் அழுது இருந்த முகம் சிரிக்க ஆரம்பித்தது. உணவக சிப்பந்திகள் இந்த காட்சிகளை கண்களால் படம் பிடித்து கொண்டிருந்தனர். உணவகத்தில் இருந்து வெளியேறும் போது அவன் சற்று வேகமாக முன் நடந்து ஆட்டோவில் ஏறி கொண்டு இவளை எதிர்நோக்கி மன்மதப்பார்வையுடன் இருந்தான். அவளோ வலது பக்கம் ஓடினால் ஜங்ஷன் பேருந்து நிலையத்தை பிடித்திருக்கலாம் ஆனால் இடது பக்கம் ஒரு பூனையை போல் நடந்து அவன் காத்திருந்த ஆட்டோவில் ஏறி ஒரு கரையில் ஒதுங்கி இருந்தாள். ஆட்டொ கிளம்பி விட்டது. எங்கள் வாகனம் பின்னால் செல்கின்றது. பின் கண்ணாடி சண்ணல் வழி நோக்கிய போது மறுகரையில் இருந்தாலும் அவன் நீளமான கைகள் அவள் தோள் மேல் இருந்தது. ஒரு வளைவில் எங்கள் வாகனம் வேறு பாதை நோக்கி வந்த போது பெண் என்ற நிலையில், நான் அவளை நினைத்து கொண்டே பயணித்து கொண்டிருந்தேன்.
இன்றைய போட்டி சமூகச்சூழலில் பெண்கள் கற்வமாக வாழ்வது என்பது சர்கஸில் கயிறில் நடப்பது போல் தான். இன்னொரு பெண்ணை தன்வசப்படுத்த கொடுமைக்கார மனைவி, கோபக்கார ம்னைவி, மதிக்காத மனைவி, காமமற்ற அன்பு என பலபல காரணங்கள் சொன்னாலும் ஆண்களின் உண்மையான உளவியல் தெரிந்து கொள்ளாது இவர்களை கண்டு பரிதாபப்பட்டு தங்கள் வாழ்கையை அழித்து கொள்ளும் எத்தனையோ பெண்கள்.
சமீபத்தில் ஒரே புத்தகத்தால் உலகம் முழுதும் தன் கவனத்தை திருப்பியவர் ஜெஸ்மி என்ற கிருஸ்தவத் துறைவி. இவர் தனது 52 வது வயதில் நீதிகாக போராடுவதாக சொல்லியிருந்தார். கிருஸ்தவ துறவிகள் உருவாக்குவதில் "ஆண்வரின் அழைப்பு" என்ற பெயரில் பெரும் ஊழல் உண்டு. கத்தோலிக்க சபையை சேர்ந்த ஒவ்வொரு பெண்ணும் தன் 15 வயதில் இந்த சோதனையை கடக்க வேண்டி வருவது உண்டு. 10 வகுப்பு முடிந்ததும் சபை எங்களை ஆண்வருக்கு சேவை செய்ய வாருங்கள் என்று இன் முகத்துடன் அழைக்கும். ஒரு 5 நாள் வகுப்பு உண்டு. அங்கு பல மத அறிஞர்கள் சொற்பொழிவு ஆற்றுவார்கள். நாம் மனிதனுக்கு சேவை செய்வதை விட உயர்ந்த எண்ணம் கொண்டு ஆண்டவருக்கு சேவை செய்வதின் மேன்மையை பற்றி சொல்வார்கள். திருமணம் பாலியல் என்ற எண்ணம் வராத குழந்தைப்பருவத்தில் இந்த கேள்வியின் அர்த்தம் புரிந்து கொள்ள கடினமாக இருந்தாலும் சிலர் தன் விருப்பம் கொண்டு தூய உள்ளத்தோடு சேர்ந்து சிறப்பாக பணியாற்றி வருகின்றார்கள் என்பதில் துளியும் சந்தேகம் இல்லை. தொடர்ந்து 5 வருட படிப்பு முடியும் தருவாயில் இளம் வயதை எட்டுகின்றனர்
இதில் சில குழந்தைகள் வீட்டில் ஏழ்மை, தனக்கு கீழ் பல இளைய சகோதர்கள் படிக்க வேண்டிய சூழல் அல்லது சண்டையிடும் பெற்றோரை கண்ட வெறுப்பு, மடத்திலுள்ள சுத்தமான சுகாதாரமான உணவு சபை உறவினர்களிடம் பெறும் மரியாதையான வாழ்கை என பல விடயங்கள் சுண்டி இழுக்கும் இவர்களை மடத்திற்க்குள். செல்வந்த குழ்ந்தைகளுக்கு இன்னும் பல மரியதைகள் சேர்ந்து கிடைக்கும். படிக்க திறனுள்ள குழந்தைகளுக்கு வெளிநாட்டு வாழ்க்கை உயர் பதவியிலுள்ள வாழ்கை என பல கிரீடங்கள் காத்து இருந்தாலும் துறைவறம் என்ற சிலுவையை தானாக சுமக்க முன் வராவிடில் அது சுமக்க மிகவும் கடினமே. தமிழகத்தில் பல கிராமங்களில் குழந்தைகளை பிள்ளைபிடிக்காரன் போன்று பிடித்து வருவதால் மடத்தில் காணும் உண்மை நிலை இல்லை. கல்வி கிடைக்காது கஞ்சிப்பானையுடன் வயலுக்கு சென்று வந்து நாலயைந்து பிள்ளைகளையும் பெற்று உடைந்த கூரைக்குள் ஏழ்மையிலும் வறுமையிலும் வாழ்வதை விட சன்னியாசியாக வாழ பலரும் முன்வருகின்றனர் தோல்வியும் காண்கின்றனர்.
ஜெஸ்மி என்ற பெண் துறவியாக அவதாரம் எடுத்து தற்போது பெரும் பூகம்பத்தை கிளம்பியுள்ள கேரளத்துறைவி கூட சேவை கருணை சார்ந்த வாழ்கை என்பதை விட சில கற்பனைகள் பொய்யான அறிவு சார்ந்தே மடத்தில் சேர்ந்துள்ளார் என்று அவர் நேர்முகம் கேட்டால் புரிந்து கொள்ளலாம். போதாததிற்க்கு இவர் ஆங்கில மொழியில் விருப்பம் கொண்டு படித்துள்ளார். ஷெல்லி , ஷேக்ஸ்பியர் என்று இருந்த இவர் யேசு நாதரையும் சேர்த்து குழம்பிய நிலையில் கன்னியாஸ்திரியாகி ஒரு கல்லூரியின் முதல்வராகவும் பணியாற்றியுள்ளார். ஆனால் இவரின் புத்தகப்படி; உடல், உறவு, தன்னுடைய கற்பனை, கிருஸ்தவ போதனை என்ற குழப்பத்தில் இருந்த இவரை பாலியலாக பல ஆண்-பெண் துறைவிகள் தவறுதலாக பயன்படுத்தியுள்ளனர் துன்புறுத்தியுள்ளனர் என்று தெரிகின்றது.
கிருஸ்தவ சபையில் ஒருவர் துறவரம் சென்றுவிட்டு வேண்டாம் என்று உதறி வெளியில் வந்தாலும் அவர்கள் கைகொண்ட கல்வி, ஆங்கிலபுலமைவைத்து வேலைவாய்ப்பு பெறவோ மறுபடி திருமணம் என்ற பந்ததில் கடந்து சிறந்த வாழ்கை வாழ எந்த தடையும் இல்லை. அப்படி பலர் வாழ்கின்றனர். சபை குறுகே பாய்ந்து வந்து தடுப்பதும் இல்லை. ஆனால் சமூகத்தை எதிர் கொள்ள துணிவு வேண்டும் உண்மை வேண்டும். தனது 52 வயதில் போராடியவரால் ஏன் 22 அல்லது தனது 32 வயதுகளில் போராட துணிவு வரவில்லை என்ற கேள்வி எழுகின்றது.
சாதாரண குடும்ப வாழ்வில் உள்ள பெண்ணுக்கும் 52 என்ற வயது மன உளைச்சில் கொடுக்கும் வயதாகவே இருக்கும். தன் இளமை மறைந்து விட்டு கொடுப்பே வாழ்க்கையாகி, வழிவிட்டு தன் பிள்ளைகளில் இளம் வாழ்கையை கண்டு ரசிக்க வேண்டிய சூழலில் பல பெண்கள் தடுமாறுவதால் மாமியார் கொடுமை, என பல பட்டங்கள் பெற்று வாழும் சூழல் நிலவும் வயது இது. அதே போன்று மடங்களிலும் 52 வயதில் பழைய கவனிப்பு மரியாதை கிடைக்காது வரும் சூழலில் நீதிக்காக போராட விளைந்தது தான் புதிர்.
இதே போன்றே பாதிக்கப்படும் பல பெண்கள் உண்டு. சமீபத்தில் ஒரு எழுத்தாளனுக்கு முகநூலில் செய்தி அனுப்பி அவரிடம் இருந்து பெறப்பட மோசமான செய்திக்கு நீதி கேட்டு சமூகப்போராளியுடம் முகம்தெரியாத ஒரு பெண் வந்தார். செய்தி பெறவும் தடுக்கவும் இணையத்தில் வழியுள்ள போது செய்திகளை பெற்று மகிழ்ந்து விட்டு ஒன்றும் தெரியாத வெள்ளந்தியாக வேடமிட்டது தன் பெண்மையை அறிவை கேவலப்படுத்துவது போன்று தான். இது ஒரு பழிவாங்கும் நடவடிக்கையாக மட்டுமே இருக்கும்.
தங்கள் நிலையை மறந்து தங்கள் பெண் என்ற மாண்பை, கவுரவத்தை மறந்து விட்டு பின்பு அதை தேடுவது கண் கெட்ட பின்பு சூர்ய நமஸ்காரம் போன்று தானே இருக்கும்?
பொறாமைக்கு ஈடும் அவர்களை தவிற வேறுயாராலும் இயலாது. 






