header-photo

J.ஷக்தி- புதிரான மனிதர்கள்!

வாழ்க்கை நெடுக சம்பவங்கள் போன்றே பல புரியாத புதிரான மனிதர்களும் நம்மை கடந்து செல்கின்றனர்.   அது போல்   அன்பு, பாசம், துயர், வெறுப்பு, என ஒவ்வொருவரும் ஒவ்வொரு உணர்வினை தந்து செல்கின்றனர்.  அவ்வழியில் சமீபத்தில் என்னை சிந்தனையில் ஆழ்த்தியவள் ஜெ குடியிருப்பில் வசிக்கும் ஷக்தி என்ற 14 வயது இளம் பெண் சிறுமி!.

அவள் அறிமுகம் ஆகினதே  முற்றிலும் அறிமுகமே இல்லாத சூழலில். ஒரு நாள் வந்து என்னிடம் கேட்டாள் அக்கா உங்கள் வீட்டில் பயன்படுத்தாது 2 சைக்கிள் உண்டாமே.  அந்த வீட்டிலுள்ள பாட்டி சொன்னார்கள்.  எனக்கு ஒரு சைக்கிள் தந்தால் உதவியாக இருக்கும்.

எனக்கு இந்த பக்கத்து வீட்டு மூதாட்டியிடம் என்றுமே ஒரு குறையுண்டு.  ஒரு வித ஈனப்பிறவி. எந்த மனிதனும் மூதாட்டியின் புரணியில் இருந்து தப்பித்து கொள்வதில்லை. ஒரே புரணி. புகைச்சில் பிடித்த பெண்மணி.  அறுத்த கைக்கு சுன்னாம்பு கொடுக்காதவள், ஆனால் தன் பேச்சு  ஆற்றலால் ஊருக்கே பந்தல் போட்டு பந்தி வைத்து விடுவார்.

எம்மா....... உன்னை, என் மக மாதிரி நினைத்து சொல்லுதேன்,  ஆமா என் வயசுக்கான பேச்சான்னு நினைத்து விடாதே ...ஆனால் நேற்று மதியம் அந்த வீட்டில் ஒரு குண்டன் போனான்,  இவள் வீட்டுக்காரன் வீட்டு சன்னல் வழியாகத் தான் உச்சா போகிறான், அந்த வீட்டுல அப்பனை மகளை கொண்டு போய் விடுகின்றான்,  நேற்று எங்க பின் வீட்டுல, புருசனை பொண்டாட்டி மாட்டை வெளுப்பது போல் வெளுத்து விட்டாள் என்ற கதைகள் கற்பனை, எகத்தாளம் எல்லாம் கலந்து போய் கொண்டே இருக்கும்.  எங்கள் தெருவில் ஒவ்வொரு வீடு சந்திக்கவும் ஒவ்வொரு நேரம் வைத்திருந்தார் இந்த மூதாட்டி. அதில் எங்க வீட்டுக்கு வரும் நேரம் தான் எனக்கு பிடிக்காத நேரம். பிள்ளைகள் பள்ளியில் இருந்து வரும் நேரம் வந்து விட்டு மாலை சாயா, பலகாரம் சாப்பிட்டு அப்படியே கதைக்க  ஆரம்பித்தால் ஒரு நெடும் தொடர் போல் போய் கதை கொண்டே இருக்கும்.  இந்த கதையை ஒரு வழியாக முடிக்க வைத்ததால், மூதாட்டியும் கொஞ்சம் நாளாக எங்கள் வீட்டு பக்கம் வராது எதிர் வீட்டில் இருந்து எங்கள் வீட்டை நோட்டம் இடுவதை தான் கண்டுள்ளேன். மாமர மூட்டில் சாத்தி வைத்திருக்கும் சைக்கிள் கிளவி கண்ணில் எப்படி பட்டது என மனதில் கேட்டாலும் வந்து  கேட்கும் பிள்ளையின் முக பாவம்; 'இல்லை' என்று சொல்ல தோன்றவில்லை. மேலும்  சைக்கிளின்  தேவை  என்னை விட பல மடங்கு அதிகமாக இருந்தது அவளுக்கு என்று தோன்றியது.

பிள்ளைகளுக்கு  சைக்கிள் வேண்டும் என ஒரே பிடிவாதம். இளையவனுக்கு ஒரு பழைய சைக்கிள் கடையில் இருந்து வாங்கி கொடுத்து விட்டாச்சு. பெரியவருக்கு மேலும் கோபம், அவனுக்கு மட்டும் சைக்கிள், நான் உங்க பிள்ளையாக தெரியவில்லையா என்று பெரிய பெரிய கேள்வி எல்லாம் கேட்கின்றான்.

  தமிழகத்தில் வருடம் ஒரு முறை அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு ஒரு இலவச சைக்கிள் கொடுப்பது உண்டு.  அது பள்ளி தொடங்கி 6 மாதம் பின்பு தான் பல அறிக்கைகள் கொடுத்த பின்பு பள்ளி குழந்தைகள் கைகளில் கிடைக்கும்.  10, 11 வகுப்பு பிள்ளைகளுக்கு என்பதால் சில நேரம் தொடர்ந்து  இரண்டு வருடவும் சைக்கிள் கிடைக்கும்.  வீட்டில் 2 குழந்தைகளுக்கு மேல் உண்டு  கிடைத்த சைக்கிள் தேவை இல்லை என்று கருதினாலோ அல்லது குடிக்கார தகப்பனோ வீட்டில் கிடக்கும் சைக்கிளை பழைய கடையில் விற்று விடுவார்கள். அப்படி தான் புதிதான ஒரு அரசு பள்ளி சைக்கிள்  ஒன்று பழைய சைக்கிள் கடையில் இருந்து வாங்க இயன்றது.

சைக்கிளை கொண்டு வந்து 3 வாரம் தான் ஓட்டியிருப்பான்.  2 வீடு தள்ளியிருக்கும்  அரசு வாகன சாரதியின் மகள் "அத்தை  ரேஷன் வாங்க போக உங்க வீட்டு சைக்கிளை  தருவீர்களா"  என்றாள்.  அவ வீட்டிலும் 2 சைக்கிள் பார்த்துள்ளேன். ஆனாலும் ஒரு சைக்கிள் கொடுத்து உதவுவதிலுன் நாலு கேள்வி கேட்கக்கூடாது என்பதால் எடுத்து விட்டு போக சொல்லி விட்டேன்.  அவள் திருப்பி சைக்கிளை கொண்டு வந்ததும் "அந்த தூண் பக்கம்  சாத்தி வைத்து விட்டு போம்மா" என்று கூறிவிட்டு நான் என் வேலையில் ஆழ்ந்து விட்டேன்.

பள்ளி விட்டு வந்த மகன் சைக்கிள் எடுத்து இரண்டு முறை ஓட்டி வந்தவன் அம்மா சங்கிலி அறுந்து விட்டது என்று சைக்கிளை படுக்க வைத்து பழுது பார்த்து கொண்டிருந்தான். அப்போது தான் கவனித்தோம் எங்கள் சைக்கிள் சங்கிலி கழற்றப்பட்டு ஒட்டப்பட்ட ஒரு சங்கிலி மாட்டப்பட்டுள்ளது.  ஆகா பகல் கொள்ளையல்லவா நடந்துள்ளது.  இனி போய் அவளிடம் சண்டை போட்டு நம் வாயை அசிங்கப்படுத்தவா என்று என் கைகாசு போட்டு ஒரு சைக்கிள்  சங்கிலி மாற்றி கொடுத்து விட்டேன்.

ஆனால் எங்கள் பிள்ளைகளை சைக்கிளை எடுத்து கொண்டு காடு மேடாக சுற்றுகின்றனர். ரோட்டோர பள்ளத்தில் விட்டு விளையாடுகின்றனர்.  குரங்கு கையில் கிடைத்த பூமாலை போல் மாற்றி விட்டனர் சைக்கிளை!  சைக்கிள் பழுது பார்க்க வேண்டிய தொகையை எழுதி தந்தனர்.  தலையே சுற்றியது.  அந்த சைக்கிள் அப்படியே கவனிப்பாரற்று தெக்கு மூலைத் தென்னைக்கு கூட்டாக பல மாதங்களாக சாய்ந்து நின்று விட்டது.


ஷக்தி வந்து கேட்ட போது தான் சைக்கிள் மவுஸு தெரிகின்றது.  அவளுக்கு அம்மா இல்லையாம். அப்பன் ஒரு முழுக்குடிகாரனாம் மேலும் ஒரு பெண்டாட்டியை கட்டி கொண்டு இன்னும் சில குழந்தைகளை பெற்று கொண்டு பக்கத்து தெருவில் இருக்கானாம்.  இவளும் இவள் அண்ணனும் அம்மா வழி பாட்டியுடன் புதிதாக கட்டியிருக்கும் 'குடிசை மாற்று குடியிருப்பில்' குடி வந்துள்ளார்களாம்.

அவள் கொஞ்சம்  நேரம் பேசி கொண்டே இருந்தாள்.  பாட்டியும் வீட்டு வேலைக்கு போவாளாம்.  இவள் திருநெல்வேலி ஜங்ஷனில் கம்பனியில் பொதி நிரப்ப போவாளாம்.  இங்கு வந்ததால் வேலையற்று போய் விட்டது என்றும் இந்த சைக்கிள் தந்தால் பெருமாள் புரத்திலுள்ள சில வீடுகளுக்கு பாத்திரம் துணி, துவைத்து கொடுக்க போவதாக கூறினாள்.

எனக்கும் சைக்கிளை இனாமாக கொடுக்க விருப்பமில்லை.  இனாமாக கிடைக்கும் பொருட்களுக்கு மதிப்பு இருக்காது என்ற எண்ணமே காரணம். நான் அவளிடம், உனக்கு இந்த சைக்கிளை இனாமாக நான் தர வேண்டாம்  சைக்கிளுக்கு பதிலாக வீட்டை சுற்றி பெருக்கி தந்து விட்டு எடுத்து செல் என்றேன். அவளும் முழுச் சம்மததுடன் காலையில் வெயில் வரும் முன் வந்து விட்டு செல்வதாக சொல்லி சென்றாள்.


தொடரும்................................. முடிவு!3 comments:

ஸ்ரீவிஜி விஜயலக்ஷ்மி said...

தோழி, சுவாரிஸ்யமாக போகிறது கதை.கதையில் வரும் தர்மசங்கடம் பல தாய்மார்களுக்கு ஏற்படுவது இயல்பே. தொடருங்கள், வாழ்த்துகள்.

Ponnappan.A said...

பாட்டி வீட்டில் T.V இல்லையா ? அடுத்த வீட்டு கதவினைக் கண்ணால் தட்டும் பாட்டிகள் இன்றும் உள்ளனரோ!
இரவல் கேட்பதினும் மடமை இரவல் கொடுப்பதில் இருக்கிறதே......
கதையிலும் செய்தி கண்டு அறிவுற்றேன்....

Logan Thangarajah · Works at Tektrons Photography said...

அருமை தொடர்ந்து எழுதுங்கள்.

Post Comment

Post a Comment