20 May 2012

பள்ளிகளின் பகல் கொள்ளை!

பகல் கொள்ளை என்று கேள்வி தான் பட்டிருந்தேன். இப்போது நேரடியாக அனுபவிப்பதாகவே உள்ளது.   இந்த வருட  பள்ளி கட்டணம் செலுத்த சென்றால் நிர்வாகம் அறிவித்த தொகை பெரும் இடியாக் இருந்தது.  தலை சுற்றாது இருக்க நத்தை போல் ஓடும் காற்றாடி எந்திரத்தின் அருகில் நின்றால் பணம் பெறும் அலுவலக பெண் ஏதோஅரசு அதிகாரி போல் 'வரிசையில் நில்லுங்கள்' என கட்டளை இடுகின்றாள். 

எனக்கு முன் நிற்கும் பெரியவர் 12 வகுப்பு  படிக்க இருக்கும் தன் பேரனுக்கு 50 ஆயிரம் ரூபாய் கட்டை மஞ்சை பையில் இருந்து எடுத்து கொடுக்கின்றார்.  எம் மகனுக்கு துவக்க கட்டணமாக ரூபாய் 17,765 செலுத்த கட்டளை இடப்படுகின்றோம்.  நமக்கும் கிடைக்கும் ரசீதில் ரூபாய் 4065 குறிக்கப்பட்டுள்ளது.  இது எல்லாம் சட்ட பூர்வமான தற்காப்பு என நமக்கு விளங்குகின்றது. இருந்தாலும் ஒன்றும் தெரியாத அபலை போல் முகத்தை வைத்து கொண்டு "நீங்கள் வாங்கிய தொகைக்கு ரசீது தரவில்லை" என்றதும் கூட்டம் மயான அமைதியாக நிற்க்கின்றது.  பணம் பெறுபவரும் எந்த முக பாவவும் அற்று 'வருகை அட்டையில் பதித்து தருவோம்'  என்று சொல்கின்றார். இந்த கொள்ளை எல்லாம் போதாது என்று வருடா வருடம்  சீருடையை  மாற்றி அதிலும் லாபம் பார்த்து விடுகின்றனர்.  இனி குழந்தை பத்திரமாக பள்ளி சென்று வீடு சென்று திரும்பி வர.பள்ளி வாகன- கட்டணம் செலுத்த வேண்டும். 


கல்வி தேவியில் காலடியில்  நிற்பதற்க்கான எந்த உணர்வும் மனதில் எழவில்லை.  பள்ளி அலுவலக அறையில் கூட சரஸ்வதி தேவியை ஆட்சி அம்மாவின் அடுத்த படியாக தான் தொங்க விட்டுள்ளனர்.  நம் பிள்ளைகளுக்கு ஊழலில் முதல் பாடம் கற்று கொடுக்கும் இடமாகவே படுகின்றது இன்றைய பள்ளிகள். பள்ளி தாயாளரும் ஒரு வியாபாரியாகவே நம்மை கடந்து செல்கின்றார். குழந்தைகள் விரிந்த விழிகளுடன் பெற்றோர் கட்டும் பணத்தை பார்த்து கொண்டே நிற்கின்றனர். இவர்கள் மனதில் கூட அப்பா விதைத்தை பணத்தை முடிந்த அளவு விரைவாக அறுவடை செய்ய வேண்டும் என்று தோன்றியிருக்க கூடும்.

கல்வி சேவையை வியாபாரமாக மாற்றும் சமூக அமைப்பை, சமூக சூழலை, அவல நிலையை  நினைத்து நொந்து கொள்வதை தவிற வழி இல்லை.

6 comments:

  1. வேதனை தான்.
    இதுவும் ஒரு வியாபாரம். கல்வி - சேவை என்ற நிலையெல்லாம் போய் விட்டது.
    நன்றி.

    ReplyDelete
  2. Subi Narendran · Good Shepherd Convent KotehenaMay 20, 2012 3:43 pm

    நல்ல பகிர்வு. உண்மையை வெளிச்சம் போட்டுச் சொல்கிறீர்கள். எங்குதான் ஊழல் இல்லை. பள்ளி தொடக்கி கோவில் ஊடாக எங்கும். குழந்தைகளின் ஆரம்ப வாழ்விலேயே இப்படியான செயல்களைப் பார்த்து வளர்வது நல்லதில்லை, எமக்குப் புரிகிறது. புரிய வேண்டியவர்களுக்குப் புரிய வேண்டுமே. நன்றி ஜோஸ்.

    ReplyDelete
  3. ந. பத்மநாதன் · Subscribed · Norwegian University of Science and Technology · 3,064 subscribersMay 20, 2012 3:44 pm

    பயனுள்ள கட்டுரை ஒருவர் திருந்தினாலும் வெற்றிதான்

    ReplyDelete
  4. Natarajan Ponnambalam · M.S. UniversityMay 20, 2012 3:44 pm

    nice one

    ReplyDelete
  5. ஊரில் உள்ள நல்ல கவர்மெண்ட் ஸ்கூலில் சேர்த்து படிக்க வைத்து இப்படி பிரைவேட் ஸ்கூலுக்கு அள்ளி தரும் பணத்தில் சிறிதளவு செலவு செய்து நல்ல டீச்சரை கொண்டு டியூசன் சொல்லி கொடுத்து நாமும் கவனமாக பார்த்து பல எக்ஸ்டிரா ஆக்டிவிட்டிகளில் சேர்த்தால் நமக்கு பணமும் மிச்சம்மாகும் நல்ல தரமான கல்வியும் அளிக்க முடியும்.. இங்குள்ள எனது நண்பர்கள் அவர்களின் நண்பர்கள் பலரும் முக்கியமாக தமிழகத்தின் நகரங்களாகிய திருநெல்வேலி நாகர்கோவில் கன்னியாகுமரி மதுரை போன்ற இடங்களில் உள்ள கவர்மென்ட் ஸ்கூலில் படித்தவர்கள்தான். இவர்கள் அனைவரும் இன்று மிக நல்ல நிலையில்தான் இருக்கிறார்கள். எந்த ஸ்கூலில் படிக்கிறோம் எனபதல்ல எப்படி படிக்கிறார்கள் என்பதுதான் இங்கு கவனிக்க வேண்டியது.ஆனால் நம் இந்தியர்களிடம் ஒரு குணம் நமக்காக வாழாமல் மற்றவர்களுக்காக வாழ்வது அது போலத்தான் பெருமைக்காக நல்ல ஸ்கூல் என்று பணத்துக்காக மிடியாக்களால் பாராட்டப்படும் ஸ்கூலில் போட்டி போட்டுக்கொண்டு பணத்தை தமது தகுதிக்கு மேல் அள்ளி இறைத்து இறுதியில் குறை கூறுகின்றனர் என்பது இங்கு கவனிக்கப்ப்ட வேண்டும்.

    சகோ ஜோஸபின் இந்த மாதிரி பதிவுகளை தொடர்ந்து எழுதி வாருங்கள் முடிந்தால் இதை பல பத்திரிக்கைகளுக்கு எழுதி அனுப்புங்கள். அது போல இந்த பதிவில் நீங்கள் எழுது கருத்துகளை ஆங்கில பதிரிக்கைகளில் வரும் வாசகர்களுக்கான காலங்களுக்கு முதலில் அனுப்பி வாருங்கள். சிறிது காலத்திற்கு பின் நீங்கள் எல்லோராலும் கவனிக்க படும் சிறந்த சமுக எழுத்தாளாரக வருவீர்கள் என்பதில் எனக்கு சிறிதும் ஐயமில்லை. வாழ்த்துக்கள்.....வாழ்க வளமுடன்

    ReplyDelete