8 Jun 2021

லஞ்ச் பாக்ஸ்(Lunch Box) : திரை விமர்சனம்

 கடந்த வருடம் மறைந்த இர்பான் கான் நடித்த திரைப்படங்களில் சிறந்த ஒன்று  லஞ்ச் பாக்ஸ் திரைப்படம்.

இளா ஒரு சாதாரணக் குடும்பத் தலைவி.  கணவர் அலுவலகம் செல்ல, தனது  மகளை பள்ளிக்கு அனுப்பி விடுவது,  சமையல், மாடிவீட்டு வயதான பெண்மணியுடன் சிறிய உரையாடலகள்  என காலத்தை கடத்தி வருகிறார்.

ஒரு போதும் கரிசனையாக நடவாத கணவர்,  அலுப்பான ஒரே வேலைகள், தன்னை புரிந்து கொள்ள யாரும் இல்லை என்ற நிலையில் ஒரு வகையான மன அழுத்தத்தில் வாழும் பெண் இளா. கணவரை கவரும் வகையில் சிறப்பாக சமைக்க வேண்டும், சிறப்பாக  உடுக்க வேண்டும், கணவரின் பரிவான ஒரு வார்த்தைக்கு ஏங்கும் நிலையில் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் வாழ்ந்து வருகிறார்.

கணவருக்கு கொடுத்துவிடும் மதியச் சாப்பாட்டு பாத்திரம் வேறு யாருக்கோ போய் சேர்வதை கண்டு கொள்கிறார் .  யார் உணவை சாப்பிடுகிறார்கள் என அறியும் நோக்கில் ஒரு நாள்   நீங்கள் யார்” என வினைவி பாத்திரத்தினுள் ஒரு துண்டு தாள் வைத்து அனுப்புகிறார்.

தான் இன்ன அலுவலகத்தில் பணி புரிகிறேன்,  விரைவில் வேலையில் இருந்து ஓய்வுப் பெறப்போகும் ஒரு கணக்காளர்.  நீங்கள் அனுப்பின உணவு மிகவும் ருசியாக இருந்தது, நன்றி என ஒரு துண்டுத் தாளில் பதில் அனுப்பி விடுகிறார்.

ஒரு போதும் பாராட்டுப் பெறாத, நிளாவிற்கு இந்த வார்த்தைகள் நெகிழ்ச்சியை தருகிறது. நெருடலாக இருந்தாலும் துண்டு பேப்பரில் வாசிக்கக் கூடிய ஓரிரு வார்த்தைகளுக்காக காத்து கிடக்கும் நிலைக்கு தள்ளப்படுகிறார் நிளா.

தன்னுடைய வலிகள், கணவரின் புரக்கணிப்பு, தன் பெற்றோரின் நிலை, என தொடர்கிறது கடிதங்கள் .  அந்த பக்கம் இருந்தும் பல போது ஆறுதல்களும், சில போது தன்னுடைய சொந்த வாழ்க்கை சோகங்களையும் பகிர்தல் நடக்கிறது.

இந்நிலையில் கணவருக்கு தன் மேல் விருப்பம் இல்லை என்றும் திருமணத்தை மீறிய ஒரு தொடர்பு பேணுகிறார் என்றும் கண்டு கொண்ட  இளா துயரில் மூழ்கிறார்.  தான், மன அழுத்தத்தில் உள்ளதாகவும் தனக்கு யாரும் இல்லை என்றும், செத்துப்போக விரும்புகிறேன் என்றதும் ’நானிருக்கிறேன்’ என பதில் அனுப்புகிறார் சஜ்ஜன்.

ஒரு கட்டத்தில் தனக்கு கடிதம் எழுதும் ஆளை கண்டு விடத்துடிக்கிறது இளாவின் மனம். இருவரும் சந்திக்க முடிவு எடுக்கின்றனர்.   ஒரு உணவகத்தில் இருவரும் குறிப்பிட்ட நேரத்தில் கண்டு கொள்ள முடிவெடுத்து தகவல்களை பரிமாறிக்கொள்கின்றனர்.

குறிப்பிட்டது போல் குறித்த நேரத்தில் உணவகம் வந்து சேர்ந்த இளாவை தூரத்தில் இருந்த   சஜ்ஜன் எளிதாக அடையாளம் கண்டு கொள்கிறார்.   இளா தன்னை விட மிகவும் இளமையான பெண்,  அவருடைய தற்காலிக இயலாமையை, வருத்தங்களை தன்னுடைய சுயநலனுக்காக பயன்பாடுத்தக்கூடாது என்ற  மனசாட்சி சத்தத்திற்கு இணங்கி, தன்னை அறிமுகப்படுத்தி கொள்ளாதே திரும்ப சென்று விடுகிறார் சஜ்ஜன்.

ஏமாற்றப்பட்டதாக எண்ணி வருந்தினாலும் வயதான மனிதரின் பரிவான, கருதலான மனதை அறிந்த இளா, தனது மகளுடன் சஜ்ஜனைத் தேடி அவருடைய அலுவலகம் செல்கிறார்.   ஆனால் அவர் வேலையில் இருந்து ஓய்வு எடுத்து  விட்டார் என்ற தகவல் அறிந்து ஏமாற்றமாக திரும்பினாலும்,  சஜ்ஜனை மறுபடியும் தேடி கண்டு பிடிப்பதில் முனைப்பாக இருக்கிறார்.

சஜ்ஜனோ காதல் உணர்வு தந்த மகிழ்ச்சியில், பெருமிதத்தால் உருவான பூரிப்பில் தன்னுடைய மீதமுள்ள வாழ்க்கையை  பயணங்களால், இசையால், புது மனிதர்களை சந்திக்கும்  மகிழ்ச்சியில் திருப்தி கண்டு  தன் வாழ்க்கையை நகத்த்தி கொண்டு இருப்பார்.

வாழ்க்கையில் பக்குவம் அடைந்த மனிதரும்,  வாழ்க்கையின் துயரின் உச்சத்திலிருக்கும் வெகுளியான பெண்ணுக்கும் உருவான மெல்லிய, இதமான காதலை அதன் இயல்பான போக்கில் விட்டு, நேர்மையான மனித உணர்வுகள், அதற்குள் இருக்க வேண்டிய சுயநலமற்ற அன்பைப் பற்றி சொல்லி; மெல்லிய ஒரு புல்லாங்குழல் கீதம் போல தழுவிச்சென்ற திரைப்படம் இது.

இளைமை துள்ளலாக  இர்பான் கானின் பல படங்களை கண்டுள்ள பார்வையாளர்கள்,  பணியில் ஓய்வுப்பெற போகும்,  வயதான, பக்குவமான மனிதராக நடித்திருக்கும் பாங்கு மிகவும் சிறப்பு.  ஒரு கணக்காளராக அலுவலகத்தில் பணி புரியும் நபர்களின் இறுக்கமான முகம், உடல்மொழி அப்படியே அவதானித்து அழகாக நடித்திருப்பார்.

நேரில் ஒரு பெண்ணும் ஆணும் சந்திக்கவே இல்லை. அவர்களின் உன்னதமான உணர்வை மட்டுமே வைத்து ஆர்பாட்டமில்லாது   காதலை  கொண்டாடும் ஒரு கதையை சொல்ல இயலும் என இயக்குனர் நிரூபித்துள்ளார்.

இருவரும் சந்தித்தார்களா இல்லையா என சினிமா காண்பவர்களுக்கே விட்டு வைத்துள்ளார். இந்த திரைப்படத்தின் வெற்றியும் இந்த முடிவு தான்.

இளாவாக நிமட் கவுர் தன்னுடைய தனித்துவமான நடிப்பாற்றலால் கவர்ந்துள்ளார்.

கதை, இயக்கம் ரிதேஷ் பட்ரா.   இர்பான் கான், நிர்மட் கவுர், நவாசுருதீன் சித்திக் பிரதான கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். இசை மாக்ஸ் ரிச்டெர், திரைக்கதை மிக்கேல் சிம்மண்ட்ஸ், படத்தொகுப்பு ஜோன் எஃப் ல்யோன் சிற்ப்பாகவே செய்துள்ளனர்.

கேன்ஸ் திரை விழாவில் மே,2013 ல் வெளியிடப்பட்டது.  இந்தி திரைப்படமாக இருந்தாலும் இந்தியா, அமெரிக்கா, ஜெர்மனி, பிரான்ஸ் நாடுகளில் வெளியான திரைப்படம் இது.   22 கோடி பட்ஜெட்டில் எடுத்த திரைப்படம். 100 கோடிக்கு மேல் வசூல் அள்ளி சென்றது. இத்திரைப்படத்திற்கு கிடைத்த விருதுகளை எழுத ஒரு தனி பதிவே வேண்டும்.

திரைக்கதை, நடிப்பு, இயக்கம், படத்தொகுப்பு என பல நிலைகளில் பல விருதுகள் பெற்ற சிறந்த திரைப்படம் இது. யதார்த்தவாத சினிமாவை மிகவும் அழகியலுடன் அடுத்துள்ளனர். இந்த படத்தின் தொடர்ச்சியை போன்ற ஒரு கதை தான் 2018 ல் வெளியான ”Once Again’ https://www.ceylonmirror.net/40279.html ஹிந்தி திரைப்படம்.

https://youtu.be/sK3R0rvnlPs

https://youtu.be/BYd_xm3yhN8

திரைப்படம் ’கர்ணன்'-சில சமூக சிந்தனைகள்!

 

மாரி செல்வராஜ் எழுத்து மற்றும் இயக்கத்தில், கிரியேஷன்ஸ் நிறுவனம் சார்பில் எஸ் தானு தயாரிப்பில் 2021 இல் வெளிவந்த திரைப்படம் கர்ணன்.  லால் , யோகி பாபு, நடராஜன் சுப்பிரமணியம், கவுரி கிஷன் மற்றும் லட்சுமி பிரியா சந்திரமௌலி ஆகியோர் துணை கதாபாத்திரங்களில் நடித்துள்ள இப்படத்தில் முக்கிய கதாப்பாத்தித்தில்  தனுஷ் நடித்துள்ளார். தனுஷ் ஜோடியாக ராஜீஷா விஜயன் நடித்து இருந்தார்.    சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.  தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு, செல்வா ஆர்.கே படத்தொகுப்பும் செய்துள்ளார்.

 அதிரடி காட்சிகள், பரபரப்பான பின்னணி இசை,  சிறப்பான நடிப்பு என எல்லோர் மனதிலும் இடம் பெற்றத் திரைப்படம் ‘கர்ணன்’.

முதல் பகுதியில்,  ஒரு கிராமத்து வாழ்க்கையை திரைப்படங்களில் இருக்கக்கூடிய சில சுவாரசிய புனைவுகளுடன் சிறப்பாக காட்டியுள்ளனர்.


பெருவாரி காட்சிகள் பார்வையாளரின் உணர்ச்சியை  தூண்டி ஒரு  சிலிர்ப்பை ஏற்படுத்துகிறது இரண்டாவது பகுதியில்.   காவல்துறை  அதிகார சித்திரவதைகளிலிருந்து தன் கிராமவாசிகளை மீட்டு அவர்களைப் பாதுகாக்கும் வலிமை மிக்க இளைஞனாக கர்ணன் கதாபாத்திரம் வடிவமைத்துள்ளனர்.  .

மாரி செல்வராஜின் வலுவான ஸ்கிரிப்ட் படத்தை சுவாரசியமாக  நகத்துகிறது.  இது வன்முறை படமா என்ற கேள்விக்கு இல்லை வன்முறை படமாக இருக்கக்கூடாது என பார்த்துப் பார்த்து எழுதியுள்ளேன் என்கிறார் மாரி செல்வராஜ்.  இது ஒரு போர் படம் என்கிறார். தன்னுடைய வாழ்க்கையில் சந்தித்த மனிதர்கள் மற்றும் தான் சந்தித்த சூழல்களை பின்புலமாக கதை எழுதியுள்ளதாக குறிப்பிடுகிறார்.

இத் திரைப்படம் சாத்தான்குளம் கொலையை நினைவுப்படுத்தியதை யாராலும் மறுக்க இயலாது.   சினிமாவிற்கும் உண்மைக்கும் தொடர்பு இருக்க போவதில்லை.  இருந்தாலும் ஆழமான சினிமா அறிவு சார்ந்த கருத்துக்கள் ஒரு சாதாரண பார்வையாளனுக்கு இருக்க போவதில்லை . அப்படி இருக்கையில் அதீத கற்பனைவளம் கொண்டு பலவித ஆயுதங்களை பாவித்து, அதிகாரவர்கத்தை ஆயுதத்தால் அடக்குவதாக எடுத்து இருக்கும்  இது போன்ற  திரைப்படங்கள் சமூகத்திற்கு கொடுக்கும்  பங்கு என்ன? இத்திரைப்படம் தந்த ஊக்கத்தால் காவல் நிலையங்களை எளிதாக எடைபோட்டு  ஒரு இளைஞன் செயல்பட்டால்,உண்மையில் என்னவாகும்?


மனித உரிமை மீறல்களை அதிகார வர்க்கம் கைகொள்ளும் போது, பொதுமக்கள் எப்படியாக சட்டப்படி எதிர்கொள்ள வேண்டும் என்றது போல் இரண்டாம் பகுதி அமைந்திருந்தால் சமூகத்திற்கு பயனுள்ளதாக இருந்து இருக்கும் . அதை விடுத்து சில உரையாடல்கள் நேரடியாக ஜாதி அரசியலை நினைவுப்படுத்துகிறது. வெற்று புரட்சியை தக்கவைக்கிறது.

அடுத்து கதை நடக்கும் ஊர் பெயர் பொடியன்குளம் என்பது பலரை 1995 ல் திருநெல்வேலி பக்கம் நடந்த கொடூர நிகழ்வை நினைக்க வைத்ததை யாராலும் மறுக்க இயலாது.  இந்த திரைப்படம் வெளிவந்த பின்பு, பல பத்திரிக்கையாளர்கள் , சமூக ஊடக நபர்கள் அந்த கிராமத்தை நோக்கி படை எடுத்தனர்.

பல வித மிருகங்களை இத்திரைப்படத்தில் காட்டப்பட்டிருந்தது. அதை பற்றிய கேள்விக்கும் கதை எழுதி இயக்கிய மாரிசெல்வராஜ் பதில் நான் ஒரு சில புனைவுகளை நினைத்து கதை எழுதியுள்ளேன்.  பார்வையாளர்கள் அதையும் மீறி சிந்தித்து இருந்தனர் என்கிறார்.

திரைப்படம் என்பது வெறும் ஒரு பொழுது போக்கு கருவியா?

தமிழகத்தை பொறுத்த வரையிலும் சினிமா என்பது கலை என்பதையும் கடந்து  பண்பாடும், சமூக அரசியல் வாழ்க்கையை நிர்ணயிக்கும்   பெரும் கருவியாக  உள்ளது.  சினிமா என்ற  கலை மனிதர்களை சிந்திக்க வைக்க வேண்டும், தனது அடையாளங்களை கடந்து மனிதர்களை மனிதர்களாக  மதிக்க செய்யவேண்டும்,  இனங்களுக்குள் துவேஷத்தை வளர்க்க கூடாது என்று மட்டுமே மனித நேயர்களால் கருத இயலும்.   மற்றபடி கர்ணன் சிறந்த கலைஞர்களை கொண்ட ஒரு வெற்றி படம் என்பதற்கு மாற்றுக் கருத்து இல்லை.

கவிஞர் ஒ. என்.வியின் திரைப்பட பாடல்கள்

 கவிஞரும் விமர்சகருமான கே. சச்சிதானந்தன் இவ்வாறு குறிப்பிடுகிறார்: 'ஓ.என்.வி கவிஞர்களிடையே ஒரு மனிதநேயவாதி, மனிதநேயவாதிகள் மத்தியில் ஒரு கவிஞர்'.

ஒ. என்.வியின் இலக்கிய வாழ்க்கை ஏழு தசாப்தங்களாக நீடித்த பாரம்பரிய உள்ளதாகும்.  நவீன, பிராந்திய மற்றும் சர்வதேச சங்கமமாகும் கவிதை வரிகள் அவருடையது. 'ஓ.என்.வி கவிதைகளில்  ஒரு மேதைத்தனம் , மனிதாபிமான கவலைகள் இரண்டும் அவரது எழுத்துக்களில் பிரதிபலித்தன.

மலையாள மொழிக்கான சிறப்பு அதன் கவிதை நயமாகும். மலையாள மொழியே கவிதை போன்று மென்மையானது.    ஒ என்.வி குருப்பின் கவிதை வரிகளுக்கு இசை அமைத்த ஜாம்பவான்கள்  வயலார், தேவராஜன் மாஸ்டர், ஜாண்சன் மாஸ்டர், மற்றும் ரவீந்திரன் மாஸ்டர் உட்படும்  திரை உலகம்.

தமிழ் திரைப்பாடல்கள் ஒலிக்காத கேரளா முக்கு மூலை இருக்க போவதில்லை. அந்த அளவு கேரளத்து மக்கள் தமிழ் இசையோடு கலந்து இருந்தனர்.  கல்யாண வீடுகளிலோ,  தொலைகாட்சி நிகழ்ச்சிகளிலோ, பேருந்து பயண்ங்களிலோ  தமிழ பாடல்கள் இல்லாது அவர்களால் சிந்தித்து பார்க்க இயலாது. அந்தளவு தமிழ் திரைப்பட பாடலகளை ரசித்தனர்.

 

ம்லையாளத்திரை இசைப்பாடல்கள் அந்த விதம் தமிழர்களில் கலராவிடிலும் மலையாளப்பாடல்களை தீவிரமாக ரசிக்கும்  தமிழர்களும் உண்டு.  ஓ என்.வி குருப்பின் பாடல்களை ரசிக்காது மலையாளத்திரைப்பாடல்களை கடக்கவே இயலாது..

ஓ.ன்.வி கடுமையான அகநிலை கவிதைகளிலிருந்து அண்ட பரிமாணத்தின் கவிதைகளுக்கு சென்றார்;  புராணக்கதைகளில் இருந்து அவர் உஜ்ஜயினி மற்றும் சுயம்வரம் போன்ற படைப்புகளாக  உயர்ந்தார்.  கலைக்கும் அதிகாரத்திற்கும் இடையிலான மோதலை உஜ்ஜயினியில் கையாள்கிறார்,  அதே போன்று சுயம்வரம் கவிதையில் iபெண்மையின் அவல நிலையை உணர்த்துகிறார்.

மலையாளத்திலும் சமஸ்கிருதத்திலும் தனது முதல் குரு ,   புகழ்பெற்ற மருத்துவரான  தந்தை எனக்குறிப்பிடுகிறார்.  தனது தந்தையின் அகால மறைவு 'நற்பகலில் சூரிய அஸ்தமனம்' போன்று, கவியின் வாழ்க்கையை இருளாக்கியது.   அங்கு கவிதைதான் தான் ஒரே ஆறுதல்.  தனது குழந்தைப் பருவத்தின் இருண்ட தனிமையில் கவிதை என்பது ஒரு ஒளியின் கதிர் ஆக இருந்துள்ளது ஓ. என்.விக்கு.

https://youtu.be/Aoa2t2nxEsk நிறங்கள் தன்........

கவிதை துக்கமான ஆத்மாக்களை ஆறுதல்படுத்த வேண்டும் என்று கூறுகிறார் ஓ.என்.வி. ஒரு கவிஞரின் வரிகள் பிரபலமடையும்போது வெறும் பாடலாசிரியர் என்று முத்திரை குத்துவதற்கான போக்கு உள்ளதையும் தெரிந்து இருந்தார்.  'ஓ.என்.வி கவிதைகள் உயர்ந்த இசைத் தரத்தைக் கொண்டிருந்தது,  அவ பழைய கருப்பொருள்களைக் கையாளும் போது ஒரு மறுமலர்ச்சியாளராக நீண்ட கதைகளாகவும்; இயற்கையைப் பற்றி எழுதினால் சுற்றுச்சூழல் ஆர்வலராகவும் இருந்தது.

https://www.youtube.com/watch?v=Zqi4Gb05bj4

கவிதை கடந்த காலத்தில் ஆழமாக வேரூன்ற வேண்டும்; பின்னர் மட்டுமே உயரங்களை வெல்ல முடியும். இல்லையெனில் அது அலைகளில் சுழலும் நீர்நுரைகளாக மறைந்து விடும் என்கிறார் கவி. வேர்கள் எவ்வளவு ஆழத்தை ஆராய்கிறதோ, அவ்வளவு அதிகமாக அது பரவுவதற்கான வலிமையைச் சேகரிக்கும், இதனால் முழு வானமும் அதன் சொந்தம் என்று பெருமையுடன் சொல்கிறார்..

Idanaazhiyil Oru Kaalocha | Malayalam Film Song

கவிதை 'உருவத்தில் சிறியதாக ஹைக்கூ போன்றதும் என்றாலும்  அதன் வடிவத்தில் பெரிய மகாபாரதம் போன்றது என்கிறார்.   ஐம்பதுகளில், ஒரு வலுவான உலக அமைதி இயக்கம் இருந்தது,  இது இந்திய கவிஞர்களுக்கும் உத்வேகம் அளித்தது. உண்மையில் இது ஏகாதிபத்திய எதிர்ப்பு இயக்கமாக இருந்தது.  அது 'ஓ.என்.வி கவிதைகளையும் பாதித்தது மட்டுமல்ல ஊக்கப்படுத்தவும் செய்தது.

 

https://www.youtube.com/watch?v=cbEIvk_7-Bg  அருகில் நீ இருந்திருந்தால்

(தன் உயிர் தோழன் தேவ ராஜன் மாஸ்டரை பிரிந்து 12 வருடங்களுக்கு பின் சந்தித்த  நிகழ்வில் எழுதிய ஒரு அருமையான பாடலாகும் இது.   )

இடது அரசியலில் ஈடுபட்டவரான கவிஞர், தனிப்பட்ட கவிதைகள் முதல் பல்வேறு தலைப்புகளில்  ,  சூரியனுக்குக் கீழே உள்ள எல்லா கருப்பொருள்களிலும் எழுதினார். கவியின் வாழ்விற்கும் கலைக்கும் பெரிய வித்தியாசம் இருக்கவில்லை.

அவரது கவிதைகள் உயர்ந்த இசைத் தரத்தைக் கொண்டிருந்தது.  பழைய கருப்பொருள்களைக் கையாளும் போது ஒரு மறுமலர்ச்சியாளராகவும், இயற்கையைப் பற்றி எழுதினால் சுற்றுச்சூழல் ஆர்வலராகவும், தனக்கு ஏற்படும் எந்தவொரு கவிதை வடிவத்தையும் கருப்பொருளையும் தன்னிச்சையாக ஏற்றுக்கொள்ள கவிஞருக்கு சுதந்திரம் உண்டு என்றும் நம்பினார்.

O N V Kurupu shares Favorite songs | Manorama News

திரைப்படம் வைசாலி

ஒரு திரைப்பட பாடல் 'பயன்பாட்டு கவிதை'; மாறிய வடிவத்தை அடைகிறது என்கிறார்..  பல திரைப்படங்கள், நாடகங்கள் மற்றும் தொலைக்காட்சி சீரியல்களுக்கு பாடல்களை எழுதியுள்ளார். 1500 கவிதைகள் உள்ளடங்கிய 21  கவிதைத்தொகுப்புகள் வெளியிட்டுள்ளார். ஏழு புத்தகங்களூம் வெளியிட்டுள்ளார். சுமார் 232 படங்களில்  1000 பாடல்களையும் மற்றும் நாடகங்கள் , ஆல்பங்களுக்காகவும் ஏராளமான பாடல்களையும் எழுதியுள்ளார். 1956ல் வெளியான ’காலம் மருன்னானு’என்ற திரைப்படத்திற்கான பாடல் வரிகளுக்கு இசையமைத்தது  பிரபல மலையாள இசையமைப்பாளர் ஜி.தேவராஜனின் மாஸ்டர் ஆகும். சிறந்த பாடலாசிரியருக்கான கேரள மாநில திரைப்பட விருது பன்னிரண்டு முறை வென்றுள்ளார். தேசிய விருது பத்மஸ்ரீ 1998 இல் பெற்றார்.

ஓ.என்.வி கலாச்சார அகாடமி

 தமிழ் கவிஞர் வைரமுத்து " தனது மெல்லிய மொழியுடன் தனித்து நிற்கிறார்” என்ற கருத்துடன் ஓ.என்.வி கலாச்சார அகாடமி விருது வழங்க முன்வந்தது.

யாரிந்த கவிஞர் ஓ.என்.வி!  ஒரு விழுமிய கவிஞர், விருது பெற்ற திரைப்பட பாடலாசிரியர், புகழ்பெற்ற சொற்பொழிவாளர், புகழ்பெற்ற அறிஞர் மற்றும் தனித்துவமான கல்வியாளர்,  சமூக இயக்கங்களில்  பல நிலைகளில் செயலாற்றியுள்ளவர். ஸ்வராஜியம், தத்தம்மா போன்ற பத்திரிகையின் ஆசிரியராக இருந்துள்ளவர்.  கேரளா மக்களின் நவீன கவிதைகளின் அடையாளமாக அறியப்பட்டவர்.  இணையற்ற கற்பனை, படைப்பாற்றல் மற்றும் முற்போக்கான பார்வைகளால் மலையாள இலக்கியத்தில் அழியாத முத்திரையை விட்டுச்சென்றவர் தான் ஒ.என். வி குறுப்பு. இவருடைய பாடுபொருள் சாதாரண மக்களின் துயர்,  வாழ்க்கை சிந்தனைகள் உள்ளடக்கி, தனக்கான தனித்துவமான பாணியில் இருந்தது.  மலையாளத்தில் அவரது கவிதைப் படைப்புகள் சாதாரண மக்களின் இதயத்தையும் ஆன்மாவையும் தொட்டு, உத்வேகமாக மாற்றின.  குமாரனாசான், சங்கன்ப்புழாவிற்கு அடுத்து  மக்களால் அறியப்பட்டிருந்த  கவிஞர்களில் ஒருவராக இருந்தார்.  அதனால் மக்கள் கவிஞர் என அறியப்பட்டிருந்தார்.

கொல்லம் மாவட்டம் சவறாவில் 1931 மே 27 அன்று பிறந்தார்.   தனது எட்டு வயதில் நிகழ்ந்த தந்தையின் அகால மரணம் இவரை திருவனந்தபுரம் என்ற தலை நகரியில் இருந்து ஒரு சிற்றூரான கொல்லத்தில் கொண்டு சேர்த்தது.

கவிதைகளில் அவரது முதல் முயற்சி அவருடைய  பள்ளி நாட்களிலே தொடங்கியது. 1946 ஆம் ஆண்டு தனது 15 வது வயதில்  தனது முதல் கவிதைத் தொகுப்பு  ”முன்னோட்டு (முன்னுக்கு) ”  வெளியிட்டார்.  கவிஞரின் ஆரமபகால கவிதைகள் தேசபக்தி, பக்தி, பால்யம் தொலைந்த நிராசை உணர்வுகளின் பின்னணியில் எழுதப்பட்டது.

கவிஞர், தொழில்முறையில் ஒரு கல்லூரி பேராசிரியராக இருந்தார். டால்ஸ்டாயின் 150 வது பிறந்தநாளில் பங்கேற்க சோவியத் ஒன்றியத்திற்கு சென்ற இந்திய எழுத்தாளர்கள் பிரதிநிதிகள் குழு, யூகோஸ்லாவியாவில்  (1987) ஸ்ட்ருகா கவிதை விழா, அதே போன்று  பேர்லினில் (1998) உலக மாநாட்டு இவற்றில்  இந்திய பிரதிநிதி ஆக சென்றிருக்கிறார்.  சாகித்ய அகாடமியின் நிர்வாகக் குழுவில் ,கேரள கலாமண்டலத்தின் தலைவராகவும்  பணியாற்றியுள்ளார்.

சூரியனுக்குக் கீழே எதுவும் கவிதைக்கு அந்நியமானது அல்ல. தனக்கு ஏற்படும் எந்தவொரு கவிதை வடிவத்தையும் கருப்பொருளையும் தன்னிச்சையாக ஏற்றுக்கொள்ள கவிஞருக்கு சுதந்திரம் உண்டு என்றார் ஒ.என்.வி.

அங்கீகாரங்கள் வாழ்க்கையின் ஒரு பகுதியாக இருந்தன.  1971 இல் கேரள சாகித்ய அகாடமி விருது, 1975 ஆம் ஆண்டில் கேந்திரா சாகித்ய அகாடமி விருது, 1981 இல் சோவியத் லேண்ட் நேரு விருது, 1982 இல் வயலார் ராம வர்மா விருதையும் வென்றிருந்தார்.

சிறந்த திரைப்பட பாடலாசிரியருக்கான கேரள மாநில திரைப்பட விருதுகளை தொடர்ந்து பன்னிரண்டு முறை வென்றுள்ளவர். இனி திரைப்பட பாடல்களுக்கு விருது பட்டியலில் தன்னை சேர்க்க வேண்டாம் எனக்கூறி ஒதுங்கினார். 1998 இல் உயரிய தேசிய விருது பத்மஸ்ரீயும் பெற்றார்.

தனது சொந்த தேசம் கேரளத்தின் நிலையை பற்றி பல விமர்சங்களும் வைத்திருந்தார்.  மற்றவர்கள் சுரண்டுவதற்கான அடிமைத்தனமான, அறிவுசார் பொருட்களை உற்பத்தி செய்யும் இடமாக கேரளா மாறிவிட்டது என்று கவலை கொண்டார்.

அடிப்படை கல்வி, ஒருவருடைய தாய்மொழியில் தான் பெற வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார்.  தென்னிந்தியாவின் மொழி ’தமிழ்’ என்றே  பலர் நினைக்கிறார்கள். மலையாளம் உலகிற்கு ஒரு சாளரமாக மாற வேண்டுமென்று செயல்பட்டார். மலையாள மொழி கிளாசிக்கல் மொழியின் நிலையை அடையவும், கேரள கலாமண்டலம் ஒரு பல்கலைக்கழகத்தின் அந்தஸ்தைப் பெறுவதில் முக்கிய பங்கு ஆற்றியவர் ஒ. என்.வி குருப்பு.

ஒரு ஆசிரியராக தன் துறையை சேர்ந்த இளம் தலைமுறை ஆசிரியர்கள் ஒஎன்வி விமர்சனத்தில் இருந்து தப்ப இயலவில்லை.  ஆசிரியர் பணியில் ஒரு மணிநேரம்  கற்பிக்க நான்கு மணி நேரம் தயார் செய்ய வேண்டியிருந்தது . ஆனால் இன்று ஆசிரியர்கள் யு.ஜி.சியில் இருந்து கிடைக்கும் தங்கள் உரிமைகளுக்காக மட்டுமே பேரம் பேச ஒன்றுபடுகின்றனர் என்றார்.

மாணவர்களுக்கான ஆசிரியர்களின் பங்களிப்பு சந்தேகத்திற்குரியது .  இன்று, ஆசிரியர்கள் பணத்தைப் பற்றி மட்டுமே அதிக அக்கறை கொண்டுள்ளனர், அவர்கள் ஓய்வுபெறும் போது ஒரு கல்லூரி திறக்கும் அளவிற்கு, பணத்தை சேர்த்து வைத்துள்ளனர் என்றார்.

மாணவர்கள் முதன்மையாக கல்வியை மதிக்க வேண்டும், அது அனைவருக்கும் கிடைப்பதற்காக அவர்கள் போராட வேண்டும்.  இன்று மாணவர்கள் மற்றவர்களின் வெறும் கருவிகள் ஆக உள்ளனர்.   அவர்களின் கண்கள் வெளிநாட்டு நாடுகளில் தான் உள்ளன, வெளிநாட்டில் குடிபுகிர்வது என்பது தான் அவர்களின் லட்சியமாக  உள்ளது.  மாணவர்கள் பாடகசாலைகளில் பல விஷயங்களைப் பற்றிய அறிவைப் பெற வேண்டும், பின்னர் அவர்களின் பார்வையை விரிவுபடுத்த வேண்டும் என்றும் விரும்பினார்

கவிதைகளை பொறுத்தவரையில்  மனிதநேயம் என்ற கருத்தில்  வடிவமைக்க வேண்டும் என்றும் விரும்பினார். ஒரு திறமையான கவிஞர், தனது மரபு ரீதியான மொழியை அற்புதமான புதிய உயரங்களுக்கு உயர்த்துகின்றனர்.   அதனால் அனைவரும் கவிஞர்களை மதிக்க வேண்டும், ஆனால் கவிதைகளில் கவிதை இருக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

ஓ.என் கிருஷ்ணகுருப் மற்றும் கே லட்சுமிகுட்டி அம்மா தம்பதியரின் மூன்று குழந்தைகளில் இளையவர், முதுமை காரணமாக திருவனந்தபுரத்தில் உள்ள மருத்துவமனையில் பிப்ரவரி13, 2016 அன்று காலமானார்

கவிஞரின் பிறந்த நாளான மே 27 அன்று நடைபெறும் விழாவில் விநியோகிக்கப்படும் விருதுகள்;  ஓ.என்.வி கலாச்சார அகாடமியால் நிறுவப்பட்டது.  இந்த விருது, ரூ.3 லட்சம் பணப்பையை உள்ளடக்கியது.

2017 ல் முதல் ஓ.என்.வி இலக்கிய பரிசுக்கு பிரபல பெண் கவிஞர்-மற்றும் சமூக ஆர்வலர் சுகதகுமாரி தேர்வு செய்யப்பட்டார். அடுத்து 2018  ல் அக்கிதம் அச்சுதன் நம்பூரிசி, 2019 ல் பிரபல எழுத்தாளர் எம்.டி.வாசுதேவன் நாயர், கடந்த வருடம் 2020 எழுத்தாளர் மற்றும் கல்வியாளர் லீலாவதி தேர்வாகியிருந்தார்.

கனடாவைச் சேர்ந்த இலங்கை தமிழ் கவிஞரும் பேராசிரியருமான டாக்டர் சேரன் ருத்ரமூர்த்தி ஓ.என்.வி அறக்கட்டளையின் முதல் சர்வதேச கவிஞர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார் என்பதும் குறிப்பிட தகுந்தது

இந்த ஆண்டிற்கான ஒன்வி விருது, மறைந்த கவிஞர் ஓ.என்.வி.குரூப்பின் நினைவாக தமிழ் கவிஞரும் பாடலாசிரியருமான வைரமுத்துக்கு புதன்கிழமை வழங்க இருந்தது.  ONV விருதுக்கு கேரளரல்லாத எழுத்தாளர் ஒருவர் தேர்வு செய்யப்படுவது இதுவே முதல் முறை. விவாதங்களினால் விருதை ஏற்க வைரமுத்து மறுத்து விட்டார்.

9 May 2021

ஜோஜி - மலையாள மொழி திரைப்படம்,

 ஜோஜி 2021 ஆம் ஆண்டு வெளியான மலையாள மொழி குற்ற நாடகப் திரைப்படமாகும்,

இது திலீஷ் போத்தன் இயக்கத்தில் மற்றும் சியாம் புஷ்கரன் திரைக்கதையுடன் வெளிவந்துள்ளது. பஹத் பாசில் மற்றும் நண்பர்கள் இணைந்து தயாரித்துள்ளனர்.
இந்த கதை வில்லியம் ஷேக்ஸ்பியரின் மக்பத் நாடகத்திலிருந்து ஈர்க்கப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டுள்ளனர்.
முக்கிய கதாபாத்திரத்தில் ஃபஹத் பாசில் நடிக்கிறார். பாபுராஜ், ஷம்மி திலகன், உன்னிமாயா பிரசாத் ஆகியோர் மற்றைய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
பல இந்தியக் குடும்பங்களில் நடக்கும் ஒரு கதை. கோட்டயம் அருகிலுள்ள பல ஏக்கர் நிலபுலங்களுள்ள உழைப்பாளியான 74 வயது அப்பா, அவருடைய மூன்று மகன்கள் அடங்கிய குடும்பம். முதல் மகன் விவாகரத்தாகி தனது பதின்ம வயது மகனுடன் தந்தைக்கு உதவும் விவசாயியாக வாழ்கிறார்.
இரண்டாவது மகன் வியாபரத்தில் கவனம் செலுத்துகிறார்.
மூன்றாவது மகன் பொறியியல் படிப்பை இடைவழியில் விட்ட ஒரு தாந்தோன்றி. எல்லாருடனும் கனிவாக பேசுகிறான்,உதவுகிறான். ஆனால் சொத்தை பங்கு வைக்க தந்தை விரும்பவில்லை என்ற கோபத்தில் உடல் நலமற்ற நிலையில் இருந்து தேறிவரும் தந்தையை கொலை செய்கிறான். இந்த கொலையை கண்டிபிடித்து விடுவார்கள் என்ற பயத்தில் தனது மூத்த சகோதரனையும் கொலை செய்கிறான். இத்தனை குற்றச்செயலகளுக்கும் உடந்தையாக அண்ணிக்காரி அமைதியாக வீட்டிலுள்ளார்.
தான் செய்த கொலைகள் வெளியே தெரிந்து விட்ட சூழலில் தற்கொலை செய்துகொள்ள துணிகிறான். ஆனால் காப்பாற்றப்பட்டுள்ளான்.
இந்த கதையின் பின்புலனாக கேரளா கிறிஸ்தவக் குடும்பம் எடுக்கப்பட்டுள்ளது. திரைக்கதையில் மிகவும் நுணுக்கமாக ஒவ்வொரு காட்சிகள் ஊடாக கதை சொல்கின்றனர்.
மனிதன் வாழ்க்கையில் தவறுகள் பெருக பெருக கடவுளை இறுக பற்றி கொள்வது போல் நடிப்பதை அந்த வீட்டு பெண் பைபிளை எடுக்கும் காட்சியூடாக விளக்குகிறார். மாமனார் எப்போது சாகுவார் என்று காத்துக்கிடக்கும் மருமகள், இறந்ததும் பெட்டிமுன் கவலையுடன் இருப்பதும், பூவைத்து பெட்டியை அலங்கரிப்பதும் முரண்பட்ட மனிதர்களின் இரு முகத்தை விளக்குகின்றனர். ஒரு வீட்டில் புகிரும் பெண்கள், புகுந்த வீடுகளின் நிலையை எவ்விதம் தாக்கம் செலுத்துகின்றனர் என்றும் சொல்லப்பட்டுள்ளது.
படித்த பட்டம் பெற்ற மனிதர்களின் சிந்தனை செயல்பாடுகள் உழைப்பையும் சுயகவுரவத்தையும் தன்னம்பிக்கையையும் இழந்த நிலையில் தனது தந்தையின் சொத்தை நம்பி நகர்த்தும் நிலையை சிறப்பாகவே காட்சிப்படுத்தியுள்ளார்.
கிறிஸ்தவர்களின் வாழ்க்கையில் பாதிரியார்கள் செலுத்தும் நேர்மறை - எதிர்மறை தாக்கத்தை பற்றியும் இப்படத்தில் சொல்லப்பட்டுள்ளது.
கிரிமினல் குணம் கொண்ட ஜோஜி என்ற கதாப்பத்திரத்தில் நடிக்க எடுத்த துணிவு, பகத் பாஸிலுக்கு, தன் நடிப்பு மேல் இருக்கும் தன்னம்பிக்கை சார்ந்தது ஆகும். சிறப்பாகவும் நடித்துள்ளார்.
ஒரு குற்றப்பின்னணி படத்திற்கான விருவிருப்பு இல்லாது இருப்பது ஒரு குறைபாடாகும். காட்சிகள் திரையில் வரும் முன்பே கதையின் போக்கு விளங்குவது ஆர்வத்தைகுறைக்கிறதுு.
மற்றபடி நல்ல கதை, காட்சியமைப்பு, காட்சித் தொகுப்பு. ஒவ்வொரு நடிகரும் தங்கள் பாத்திரங்களை சிறப்பாகவே செய்கின்றனர். இசையும் குறிப்பிட்ட படியில்லை என்றாலும் நல்லமே.
May be an image of 7 people, beard and text that says "AMAZON ORIGINAL MOVI JOJI DILEESH POTHAN SYAM PUSHKARAN BHAVANA STUD WATCH NOW prime video"
Natarajan Ponnambalam, Gnanaprakasam Gerald and 7 others
1 comment
Like
Comment
Share

7 May 2021

ஷீலா / மா. ஆனந்த ஷீலா- Wild Wild Country!

 


இன்றும் ஓயாது அடிப்பது ஓஷோ அலை!

தற்போது நாம் காணும் எல்லா மத கார்ப்பரேட் சாமியார்களின் பிதாமகன் தான் இந்த ஓஷோ.
இந்திய கலாச்சார தாக்கத்தால் மக்கள் ஒருவரை ஒருவர் தாங்கிக்கொண்டும், நம்பிக்கொண்டும், கட்டுண்டு கிடக்கும் வேளையில் தனித்து இருப்பதை பற்றி, ,தானாக , தனக்காக இருக்க வேண்டியதின் அவசியத்தை அறிவுறுத்தி பிரபலமானவர் ஓஷோ.
உள்ளூர் வெளியூர் என பல லட்சம் மனிதர்கள் தன்னை சூழ்ந்து இருந்தாலும் பெண்களை தனக்கு மிகவும் பொறுப்பானவர்களாக வைத்திருப்பது ஓஷோவின் பாணி.
அப்படி ஓஷோவின் தனிச் செயலாளராக இயங்கிய ஷீலா / மா. ஆனந்த ஷீலாவை பற்றி Maclain Way Chapman Way இயக்கத்தில் Wild Wild Country! ஒரு ஆவணப்படம் வந்துள்ளது.
ஷீலா வெளிநாட்டில் கல்வி கற்றுக்கொண்டு இருக்கும் வேளையில் மார்க் என்பவருடன் வாழ்கிறார். அந்த நபருக்கு தீரா நோய். அந்த நபரையும் அழைத்துக்கொண்டு பூனே வந்து சேர்கிறார். பிற்காலம் சின்மயா என்ற பெயர் மாற்றப்பட்ட மார்க் ஆஸ்ரமஹ்த்தில் இறந்து விடுகிறார்.
அப்போது தான் ஷீலா தன் துயரில் இருந்து வெளிவர ஓஷோவின் ஆசிரமத்தில் வேலைகளில் தன்னை ஆசுவாசப்படுத்திக் கொள்கிறார்.
ஷீலாவின் வாக்குப்படி தனக்கு பக்தியிலோ , தியானத்திலோ ஈடுபாடில்லை. ஓஷோவை காதலித்தேன். அந்த காதல் உடல் சார்ந்ததும் அல்ல. ஓஷோவின் கண்ணை நோக்கிக் கொண்டே வாழ விரும்பினேன் என்கிறார்.
அப்படி இருக்கயில் தான் ஓஷோவிற்கு இந்தியாவில் தனது ஆஸ்ரமம் அமைக்க இந்திராகாந்தியின் அனுமதி தேவைப்படுகிறது. செக்ஸ் சாமியார் என்று அறியப்பட்டிருந்த ஓஷோ ஒரு ஆஸ்ரமம் அமைப்பதை இந்திராகாந்தி அரசு முற்றிலும் தடை செய்கிறது.

அப்போது தான் ஷீலாவின் இருப்பு ஆரம்பிக்கிறது. தனக்கு அனுமதி தந்தால் தான் அமெரிக்காவில் ஆஸ்ரமம் நிறுவ செயlபடுவதாாக சொல்கிறார். அதே போன்றே ஒரீகன் என்ற இடத்தில் ஆஸ்ரமம் அமைக்கின்றனர். வரண்ட பாலைவனம் மாதிரி இருந்த ஒரு இடத்தை ஒரு நகரத்தின் எல்லா வசதிகளும் கொண்ட எழில்மிகு இடமாக உருவாக்கி விட்டனர். தங்களுக்கு என ஆயுததாரிகள், தங்கள் குழந்தைகளுக்கு பாடசாலைகள், தேனீர் கடைகள், மேலும் உலகம் முழுக்க இருந்து மக்கள் கூடும் கொண்டாடும் ஓஷோ தலமாக உருவாகுகிறது.
இத்தருணத்தில் ஒரீகன் அரசிற்கே அச்சம் வருகிறது. இவர்கள் நடவடிக்கை குழப்பத்தை விளைவிக்கிறது. ஆஸ்ரமத்தை அச்சுறுத்த ஆரம்பிக்கின்றனர். தங்கள் பாதுகாப்புக்காக ஆயுதங்களை குவிக்க ஆரம்பிக்கிறார் ஓஷோவின் காரியதரிசியான ஷீலா. ஓஷோவையும் இந்தியாவில் இருந்து அமெரிக்கா ஒரீகன் ஆஸ்ரமத்தில் இறக்குமதி செய்கிறார் ஷீலா.
ஆஸிரமத்தின் புகழ் ஹாலிவுட் வரை எட்டிவிட்டது. ஹாலிவுட் ஆசாமிகள் வர ஆரம்பித்ததும் பணம் , கைகடிகாரம், விலை உயர்ந்த கார்கள் அத்துடன் மயக்கு மருந்தும் வரத் துவங்குகிறது.
பெரிய இடத்து ஆட்கள் வர வர ஓஷோ உன்மத்த நிலைக்கு வந்து விட்டார். தன் காரியதர்சியான ஷீலாவை மாற்றி விட்டு அங்கு ஒரு திரைப்படத்துறையை சேர்ந்த god father movie யின் தயாரிப்பாளரான பெண்னை பணியில் அமர்த்துகிறார்.
அப்பெண்ணின் காதலன் தேவ்ராஜ் ஓஷோவை கொலை செய்யதிட்டம் தீட்டினதை அறிந்து கொள்கிறார் ஷீலா. அதை தடுக்கும் முயற்சியில், இன்னும் சில பெண் சாமியார்களையும் இணைத்து செயல்படுகிறார்.
ஓஷோவோ பேசும் தத்துவ அளவு புத்திசாலியாக இல்லை வாழ்க்கையில். மற்றவர்களை கணிப்பதில் முழு மடையர் மட்டுமல்ல, ஒரு கற்பனைவாதியாகவும் இருக்கிறார்.

ஷீலா சோர்ந்து போய் விட்டார். இனி தன்னுடைய செயல்பாடுகளுக்கு இங்கு இடம் இல்லை என விளங்குகிறது. இங்கிருந்து தப்பிக்க முடிவெடுக்கிறார். தன் காதலனை இழந்ததுமில்லாது, தான் நேசித்த அதிகாரத்தையும் ஒரே நேரம் இழக்கிறார். 13 பேருடன் ஆசிரமத்தை விட்டு வெளியேறுகிறார்.
இப்போது தான் , ஓஷோவில் காதல் அதன் கடைநிலை எதிர்பக்கமான வெறுப்பை, குரோதத்தை அடைகிறது. ஓஷோவிற்கு காதலியின் மேல் இருந்த அப்பழுக்கற்ற அன்பு, நம்பிக்கை பொறாமை மற்றும், வெறுப்பை எட்டுகிறது. இப்போது தான் ஓஷோ எழுதிய விடயங்களுக்கும், அவர் நேரடியாக பிரச்சினைகளை எதிர்கொண்ட போது கையாண்ட விதத்திற்குமான வித்தியாசம் அறியும் போது அதிர்ச்சிக்கு உள்ளாகிறோம்.
எந்த அரசு, அதன் காவல்த்துறை இவர்களை அழிக்க திட்டமிட்டார்களோ, எந்த அரசின் நடவடிக்கைகளுக்கு எதிராக ஷீலா போராடினாரோ; அவர்களிடமே ஓஷோ சரணடைகிறார். தனது காரியதர்சி சட்டத்திற்கு புறம்பாக செயல்களில் ஏற்பட்டதாகவும், தன்னுடைய பணத்தை திருடி சென்றதாகவும் வழக்கு தொடர்கிறார்.
அரசிற்கு கொண்டாட்டம். விசாரணை ஷீலாவை நோக்கி நகர்வதை விட அவர்களை ஆசிரம செயல்பாடுகளை நோக்கி நகர்கிறது.
முதலில் ஓஷோவை கைது செய்யுகின்றனர்.அமெரிக்காவை விட்டு வெளியேறி விடுகிறேன் என்ற உறுதி வாங்கிக்கொண்டு வெளிநாட்டில் கிடைத்த கார்களை விற்று தண்டம் கட்டியதும் விடுதலை செய்கின்றனர். ஓஷோ, பூனேயிலுள்ள தனது பழைய ஆசிரமம் வந்து அடைகிறார்.
ஆசிரமவாசிகளையும் அரசு அந்த இடத்தை விட்டு கலைத்து வெளியேற்றுகிறது ஒரீகன் அரசு. அடுத்து ஷீலாவையும் கைது செய்கிறது. மூன்று வருடம் சிறைத்தண்டனை பெறுகிறார். அவரையும் அமெரிக்காவில் தங்கக் கூடாது என்ற கண்டிப்பில் விடுதலை செய்கின்றனர்.
ஷீலா தற்போதும் ஓஷோவில் நேசமாக இருக்கிறார். ஓஷோவின் தாக்கத்தால் தான் தற்போதும் வாழ்வதாகவும்; தான், உடல் நலமற்றோருக்காக ஒரு இல்லம் நடத்துவதாக கூறுகிறார்.
ஓஷோ, சாதாரண ஆண்கள் போலவே ஷீலா தன்னை விட்டு போனதும் விபச்சாரி என்கிறார், தான் தன்னுடைய காரியதரிசியை காதலிக்கவில்லை என்கிறார். ஷீலா தண்டிக்கப்பட வேண்டும் அல்லது தன் ஆட்களால் கொல்லப்படுவார் என்கிறார்.
ஷீலா தனது குரு ஓஷோவிற்கு எது நடக்கக்கூடாது என பயந்தாரோ அப்படியே ஓஷோவின் மரணம் மர்மத்தில் முடிந்தது.
இன்றும் ஓஷோ தெய்வீக புருஷனாக பலரால் போற்றப்படும் போது அந்த தெய்வீகத்தில் காதலை தேடின சாதாரணப் பெண் வாழ்க்கை முழுதும் ஊடகக்காரர்களால் வேட்டையாடப்பட்டு குற்றவாளி என்ற முத்திரையுடன் வாழ்கிறார்.
ஓஷோவை போல் ஷீலா கொல்லப்படவில்லை. தன் அறிவால், தன் ஆளுமையால், ஆற்றலால் இன்றும் வாழ்ந்து வருகிறார்.
கதை தீரும் போது குரோதத்தின் உச்சம் சென்ற சாமியார் ஓஷோவை விட உண்மையான காதலால் வெற்ற ஷீலா தான் மனதில் நிழலாடுகிறார்








16 Jan 2021

Is Love Enough Sir!


ஆவணப்பட இயக்குனர் ரோகனா கெராவின் இயக்கம் எழுத்தில் உருவான, நவம்பர் 2020ல் வெளியான ஹிந்தி திரைப்படம் இது. திரைக்கதை, கதாப் பாத்திரப் படைப்பு, கதைக்கரு மிகவும் தெளிவாக சமூக மேம்பாட்டுக்கு உதவும் விதம் அமைத்துள்ளனர்.

 

ரத்னா,   ஒரு கிராமத்தை சேர்ந்த கணவரை இழந்த இளம் பெண். பட்டணத்தில் பணக்காரர் வீட்டில் வீட்டு வேலைக்காரியாக வேலை செய்து கொண்டிருப்பார். 

கணவரை இழந்த ஒரு பெண் தனக்கு பிடித்தமான  வளையல்கள் கூட அணிய இயலாத இறுக்கமான  சூழலிலுள்ள கிராமத்தில் இருந்து பட்டணத்தை நோக்கி வர வர பைக்குள் வைத்திருந்து வளையல்களை எடுத்து அணிகிறார்.  ஒரு ஊரின் கட்டுப்பாடு ரத்னா என்பவரின் ஆளுமையை சுயத்தை பாதிக்கவில்லை என்பதை இந்த ஒரு காட்சி அமைப்பில் இருந்தே புரிந்து கொள்ளலாம். தன்னை நகரத்திற்கு அனுப்பியது கூட ஒரு ஆள் சாப்பாடுச் செலவை மிச்சப்படுத்தலாம் என்ற கணவர்  வீட்டுக்காரர்கள்   மன நிலை என அறிந்தும், அந்த இகழ்ச்சியான சூழலையும் தனது சுயசார்பான மேம்பட்ட வளர்ச்சிக்காக மாற்றி கொள்கிறார் ரத்னா.   கணவர் வீட்டுக்கும் நாலாயிரம் ரூபாய்  அனுப்புகிறார், தன் சொந்த தங்கையை படிப்பிக்கிறார். தன் தங்கை தன் பட்டப்படிப்பை முடிக்க வேண்டும், வரும் காலம் தானும்  தங்கையும் சேர்ந்து ஒரு ஆடை வடிவமைப்பு நிறுவனம் நடத்த வேண்டும் என்ற கனவில் இருக்கிறார். தன் வீட்டு வேலைகளை முடித்து விட்டு கிடைக்கும் நேரத்தில்  தையற்கலையை கற்கவும்,  தன் லட்சியமான ஆடை வடிவமைப்பாளராக வர  வேண்டும் என்ற  விருப்பத்தை நிறைவேற்றவும் உழைக்கிறார்.

ஒரு ஏழைப் பெண், சமூகபுரக்கணிப்பிற்கு உள்ளாக்கப்பட்ட பெண், பல இல்லாய்மைகள் மத்தியிலும்  தன்னுடைய புத்தி கூர்மையையும் உழைப்பையும், நேர்மையும் நம்பி அவளுடைய இலக்கை  எப்படி அடைந்தாள் என்பதே இத் திரைப்படம். தடைகள் சூழ்ந்து இருந்தாலும்  தைரியமாக, பொறுமையாக எதிர்கொண்டு இலக்கை அடையும் ஒரு சாதாரணப் பெண்ணின் வெற்றிக்கதை இந்த திரைப்படம். பெண் உரிமை என்ற கூக்குரல் இல்லாதே ஒரு பெண் எவ்வாறு தான் நினைத்த இடத்தை அடைந்தார் என்று கூறும் கதை. வாழ்க்கையின் அடிமட்டத்தில் வீழ்ந்து கிடக்கும் பெண்களுக்கும் நம்பிக்கையூட்டும் திரைப்படம் இது.

 

ரத்னா தன் நிலையை சேர்ந்த மனிதர்களுடன் கொண்டாட்டத்திலும் இயல்பான மகிழ்ச்சியிலும் வாழும் அழகு.    பேராசையற்ற வாழ்க்கை,  நினைத்ததை அடைய வேண்டும் என்ற வைராக்கியம் அதற்காக அவல் கைகொள்ளும் நேர்மையான முயற்சிகள் எதிர் கொள்ளும் அவமானங்கள் இப்படியாக செல்கிறது கதை. 

தான் வேலை செய்யும் வீட்டு முதலாளியிடன் கண்ணியமாக நடந்து கொள்ளும் விதம் , ஒரு கட்டத்தில் முதலாளி தன் திருமணம் தடைப்பட்டு போனதை எண்ணி உடைந்து இருக்கும் போது நம்பிக்கை பகிர்ந்த ஓரிரு வார்த்தைகள், முதலாளி இரக்கம் பரிவான மனிதராக இருந்தும் அவரிடம் தனக்கு எவ்வளவோ தேவை வந்தும்  பணம் வாங்கக்கூடாது என்ற நற்பண்பு, முதலாளிக்கு பிறந்த நாள் வருகையில் தானே வடிவமைத்த சட்டயை பரிசாக தருவது, முதலாளியும் தன் வேலையாள் பெண்ணின் முயற்சியை பாராட்டி தையல் இயந்திரம் பரிசாக கொடுத்தது இப்படி இவர்கள் நட்பும் சென்று கொண்டு இருக்கிறது. ஒரு பெரிய பங்ளாவில் தன் காதலின் பிரிவு  சோகத்துடன் இருக்கும் அஷ்வின் என்ற முதலாளி, அதே வீட்டில் தன் சிறிய அறையில் தனக்கான  வாழ்க்கையை உருவாக்கிக்கொண்டிருக்கும் ரத்தினா.

அவள் வேலை பார்க்கும் வீட்டு முதலாளி இவளின் நல்ல குணத்தில் கவரப்பட்டு இவளை  திருமணம் செய்ய ஒரு கட்டத்தில் விரும்புகிறார்.  அந்த நபரை திருமணம் செய்து ஒரே நாளில் அவள் விரும்பினதை எல்லாம் பெற்றிருக்கலாம். தனது முதலாளியின் மதிப்பான சமூக வாழ்க்கையை எண்ணி பார்க்கிறாள், தன்னுடைய முதலாளியின் பெற்றோரை நினைத்து பார்க்கிறார்,  தன் கணவர் குடும்பத்தாரை, சமூகக் கட்டுப்பாட்டை நினைத்து பார்க்கிறார்.

 

தனக்கு அருகதை இல்லாததை வலுக்கட்டாயமாக எவ்வழியிலும் அடைய விரும்பவில்லை. தன்னை நேசிப்பவர்கள் மதிப்பு இழக்கக் கூடாது என எண்ணுகிறாள். அதே மாதிரி அவள் வீட்டை விட்டு போவதை விரும்பினதும் தான் நேசித்தவள் மறுபடியும்  கிராமத்திற்கு  போய் கஷ்டப்படக் கூடாது என நினைக்கிறார் பணக்காரர்  அஷ்வின்.

 

வீட்டுக்கு வந்த  நண்பன்,  நண்பனின் மனநிலையை புரிந்து கொண்டு  தன் நண்பனின் தவறை உணர்த்துகிறார்.  வீட்டு வேலைக்காரியை உன் தேவைக்காக பயண்படுத்தாதே என அறிவுரைக்கிறான். தன் தந்தையை சந்தித்து "அப்பா நான் திரும்பவும் அமெரிக்கா போக விரும்புகிறேன்" என்றதும். அப்பா காதிலும் கதை எட்டினதோ என்னவோ? "வேலைக்காரியுடன் படுத்தாயா என கேட்கிறார்?

மகன்: 'இல்லை, அவளில் காதல் கொண்டேன்" என்கிறான்.

அப்போ அமெரிக்கா போவதே நல்லது என்று அனுப்புகிறார் தந்தை..

அப்படியாக யாரும் யாருடைய தனிநபர் வாழ்க்கைக்குள் அத்து மீறி நுழையாத , பணக்காரர்களும் ஏழை நிலையிலுள்ள மனிதர்களும் தங்கள் நிலையை காரணம் காட்டி எதிரே இருப்பவர்களை சூழ்ச்சி செய்து தங்கள் தேவைக்காக பயன்படுத்தக்கூடாது என்று உரைத்த    நல்ல திரைப்படம் இது. தங்களின் தயவில் வாழும் மனிதர்களை காதல், அன்பு என்ற பெயரில் கூட அவர்கள் வாழ்க்கைக்குள் விளையாடக்கூடாது என்று அறிவுரைத்த திரைப்படம். 


 

வேலைக்காரியின் கதாப்பாத்திரம் அமைத்திருக்கும் விதம் சிறப்பு. பெண்ணியம் என்பது தன் காலில் தற்சார்பாக தலை நிமிர்ந்து வாழ்வது, தன்னுடைய வாழ்க்கை சுகங்களுக்காக எந்த வழியும் தேர்ந்தெடுக்காது இன்ன வழியே வேண்டும் என்று தனிமனித விழிமியங்களுக்கு  முக்கியம் கொடுத்த  திரைப்படம்.  ஏழ்மை என்றிருந்தாலும் அடுத்தவர்கள் விருப்பத்திற்காக தன் கொள்கையை விட்டுக்கொடுத்து,   தன்னை இழப்பது, அடுத்தவர்கள் விருப்பங்களுக்கு  உடன்படுவது அல்ல என்று கூறிய அருமையான கதைக்களம். வேலைக்காரியாக நடித்திருக்கும் திலோத்தமாவின் Tillotama Shome  நடிப்பு சிறப்பு.

 

திலோத்தமா தனக்கு ஆடை வடிவமைப்பாளராக வேலை கிடைத்ததை தெரிவிக்க அஷ்வின் வீட்டுக்கு வந்து சேர்கிறார். பூட்டிக்கிடந்த வீட்டை பார்த்து வருத்தம் கொண்டு நிற்கையில் அமெரிகாவில் இருந்து திலோத்தாமாவின் நலனறிய விரும்பி கைபேசியில் அழைக்கிறார் அஷ்வின்.  ’ சார்’ என்று எப்போதும் பதில் கொடுப்பவள்  ’ அஷ்வின்’ என்று பதிலுரைத்து தன்னுடைய அடையாளம் சார்ந்த காழ்புணர்வில் இருந்தும் மீண்டு முழுமையான ஆளுமை கொண்ட பெண்ணாக பரிணமித்த காட்சியுடன் திரைப்படம் முடிகிறது.   

 

போதிய வேகத்தில், மிகவும் சுவாரசியமாக நல்ல திரைக்கதை காட்சி அமைப்புகளுடன் இயல்பாக செல்கிறது. 

பெண்ணியத்தை அதன் வலிமையான பாதையில் கொண்டு சென்ற Lunch Box, Queen, Once Again வரிசையில் இத்திரைப்படமும் சேர்ந்து கொள்ளலாம்.

திரைப்படங்கள் என்பது மனிதனின் நுண்உணர்வை தூண்டிவிட்டு வெறும் கற்பனைக் கதையில் நகத்தாமல், இயல்பாக பெண்களின் வலிமையை எடுத்துரைத்த திரைப்படம்.

விவேக் கோம்பே (Vivek Gombe)ல் அஷ்வினாக மிளிர்கிறார். இசை  ராகவ் வகவ் Ragav Vagav  பாடல் வரிகள், மொஹித் சைஹான் Mohit Chauhan.



புரட்சி என்பது சமூகக்கட்டுபாட்டுகளை உடைப்பது அல்ல , வரி வரியாக வசனம் பேசுவது அல்ல காதல் கல்யாணம் என்று மேலும் சிக்கலுகளுக்குள் விழாது தங்களை மேம்படுத்தி அடுத்தவர்கள் நல்னையும் பேணுவதே என்ற சிறந்த கருத்துடன் முடிக்கப்பட்டுள்ளது. 
ரஜனி படங்கள் பார்த்து பழகின நமக்கு இந்த நெறிகள் சினிமா மொழியில் புதிதாக இருந்தாலும் இதுவே நிஜம்.
ஆண்கள் பெண்களின் அழகிலும் பொலிவிலும் மட்டும் கவர்ப்படுகிறவர்கள் இல்லை, பெண்களின் ஆளுமையான குணத்திலும் அறிவிலும் ஆட்படுகின்றனர் என்பதையும் சொல்லிய திரைப்படம்.

குதிரை இல்லாத ராஜகுமாரன்-ராஜாஜி ராஜகோபாலன்

  ’குதிரை இல்லாத ராஜகுமாரன்’ என்ற சிறுகதை தொகுப்பு சுதர்சன் புக்ஸ் பதிப்பகம் ஊடாக  2015 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டுள்ளது.  இதன் ஆசிரியர் கனடாவில்

வசிக்கும் இலங்கை பருத்தித்துறையில் கீழைச் புலெலியால் என்னும் கிராமத்தை சேர்ந்த ராஜாஜி ராஜகோபாலன் ஆவார்.  

தன்னுடைய நினைவையும்  அனுபவங்களையும் கொண்டு 15 கதைகளை அழகான ஒரு சரமாக கொருத்து வழங்கியுள்ளார். ஒவ்வொரு கதையும் ஒவ்வொரு  மனிதனின் வாழ்க்கையை சொல்பவை.

அப்படியாக ஈழத்திலிருந்து வெளிநாடுகளில் குடிபெயர்ந்த ஊர் நினைவுகளுடன் வாழும் உள்ளத்தால்  ஈழ நினைவும் தன்னுடைய மக்களின் நினைவுகள் அடங்கிய கதைகள் ஆகும் இவை. கதைகளில் சிலவை ஒரு  வாழ்க்கை சரிதை போன்ற உணர்வை தருகிறது. சில கதைகள் மனிதனின் அதி உன்னத குண நலன்களையும் சில கதைகள் மனிதனின் வீழ்ச்சியேயும் சில கதைகள் மனிதனின் இயலாமையும் சில கதைகளோ மனிதன் சூழலின் இரையாகும் கைதியாக சிறைப்பட்டுப் போவதையும்  கண்டு உணரலாம்.

 

முதல் கதையில் பவானியை தேடி வரும்  கண்ணன், பவானியின் மகள் தற்போது  பதின்ம வயதை எட்டியுள்ள விவரம் தெரிந்த பெண்.  தன் பள்ளிக் காதலி பவானி திருமணம் முடிந்து தன் கணவரை இழந்து தனிமையில் மகளோடு வாழ்ந்து வரும் வேளையில், இளைமையில் தன் இதயத்தில் குடிபுகுந்தவளை, வாழ்க்கையில் ஓய்ந்து இருக்கையிலும்  பரிவான காதலால் அணைக்க வருகிறார்.   பவானிக்கு தன் மகள் இருக்க, தனக்கு கணவர் தேடுவது சரியோ என நினைத்து ஒதுங்க பவானியின் மகள் ஸ்ருதியின் முயறியால்  தகப்பனாக பவானி வாழ்க்கைக்குள் புகிர்கிறார்.

 


சூழலால், தாயின் வற்புறுத்தல் உடலை விற்று பிழைக்க வேண்டி வந்த பெண் வாழ்க்கையில் முதன்முதலாக தனக்கானவனே தானே தேர்ந்தெடுத்து அவனுடன் போய் வீடு திரும்பும் போதுள்ள மனமகிழ்ச்சியை சொல்லும் கதையிது. வாழ்க்கை ஓட்டத்தில் மகள் மகிழ்ச்சியாக இருப்பதே  தாயே அச்சுறுத்தலாக பார்ப்பதும் தாய்மையில்  புகுந்துள்ள மாயத்தையும் எடுத்து சொல்ல தயங்கவில்லை எழுத்தாளர்.

 

நாகரீகவும் மனித மன மாற்றவும்  தமிழ் மருத்துவர் மயில்வாகனத்தைக் கூட விட்டுவைக்கவில்லை என்கிறது அடுத்த கதை. வறுமையில் வாழும் மருத்துவர் வாழ்க்கையும் சொல்லப்பட்டுள்ளது. அடுத்த கதை தான் விபத்தில் சிக்கி மருத்துவமனையில் இருந்த போது கண்ட பானுமதியை மனதால்  சுமப்பதும் நினைப்பதும் அவள் உணர்வோடு வாழ்ந்து வரும் மனிதனின் கதை இது.     அடுத்த கதை தேவன் தன் முன்னாள் காதலியை சந்திக்கிறார். அவர்கள் உறவு திருமணத்தில் முடியாவிடிலும் தேவனின் நீட்சியாக தேவனின் மகன் நகுலனுக்கு தாயாக இருப்பதை எண்ணி  நித்தியா பூரிப்பதும் உண்மையான காதல்கள் தடைகளை மீறி  தொடர்வதை காணலாம். அடுத்த கதையிலோ பிள்ளைகளுக்கு தங்கள் வீடு மேல் இருக்க வேண்டிய கடமைகளை பற்றி சொல்கிறது. வெளிநாட்டில் இருக்கும் தயாளன் தன் புது மனைவி லாவண்யாவுடன் பிறந்து வளர்ந்த  வீட்டிற்கு வருகிறார். அங்கு திருமணத்திற்கு காத்து இருக்கும் தன் சகோதரி, அப்பா, அம்மா தயாளன் செய்யப்போகும் உதவியை எதிர்பார்க்கும் சூழலில் உள்ளனர். இருந்தாலும் மகன் மேல் தங்கள் தேவையை திணிக்கவும் இல்லை.  தன் நிலையை சுட்டிக்காட்டி மகன் தன் கடமையை தட்டிக்கழிக்க நினைக்க, மருமகள் அங்கு  பொறுப்பான மகனாக நின்று கதைப்பது குடும்பத்திற்கு பெரும் ஆறுதலும் நிம்மதியுமாக உள்ளது.

 

மௌனத்தின் சப்தங்கள் என்னை உலுக்கிய கதை. தன் மகனைக் கொலை செய்ய வேண்டி வந்த சிவனடியார் என்ற தந்தையின் இயலாமையை சொல்லும் கதையிது. இனி மருத்துவத்தால் சுகப்படுத்த வாய்ப்பு இல்லை என்ற நிலையில் மகனைத் தன் கையால் கொல்லும் அவலநிலைக்கு தள்ளப்படுகிறார் பாசமிகு தந்தை.   நோய் படுக்கையிலுள்ள மகனின் தகப்பன் மனநிலையையும் சோகத்தையும் கவிதையாக வடித்துள்ளார் ஆசிரியர். இந்தத் தொகுப்பில் மனதை விடாது துரத்திய கதைகளில் இதுவும் ஒன்று.

ஆதலினால் காமம் செய்வீர் என்ற கதையில் ஒரு கல்லூரி மாணவன் தனது காதலியை உடலால் திருப்திப் படுத்த இயலவில்லை என்ற காரணத்தால் தற்கொலைக்கு முயல்வதும்நண்பனும் காதலியுமாக அவனைக் காப்பாற்றுவதுமாகச் செல்லும் கதையில் அமிழ்ந்துபோனேன். இது உண்மைச் சம்பவங்களை வைத்து எழுதப்பட்டதென அறிகிறேன். நவீன தலைமுறையின் செக்ஸ் சார்ந்த அறியாமையும் இயலாமையும் ஒரு புதிய பார்வையில் சொல்லப்பட்ட  கதை இது.

செம்பருத்தி அழகான தலைப்பில் அழகான கதை. சுசி அக்காவின் கணவர் சிவபாலன் திடீரென மரணமானதும் அக்காவின் கையறுநிலையை அறிந்து வருந்துபவனாகவும் தன் மனைவியிடம் காட்டும் அன்பில் குறைவைக்கக்கூடாது, அவளை மேலும் புரிந்து கொள்ள  வேண்டும் என்ற மனநிலையில் அவளிடம் சரணடைபவனாகவும் வரும் அன்புக் கணவனின் கதையிது.

குதிரை இல்லாத ராஜகுமாரன் என்ற முத்திரைக் கதையில் 32 வயதாகியும் தனக்கு திருமணம் ஆகவில்லையே இனி 45 வயது மனிதன் தான் கிடைப்பானா என்று மனம் வருந்தும் விஜயா இன்னும் திருமணமாகாத 29 வயது இளைஞனைச் சந்திக்கிறாள். அவன் தன்னை விட 13 வயது குறைந்த பெண்ணை மணம் முடிக்கக் கிட்டிய வாய்ப்பைப் புறம் தள்ளியவன் என்றும் அந்த பெண்ணுக்கு அடுத்த வருடமே மணமானதைக் கண்டு மகிழ்ந்தான் என்றும் கதை செல்கிறது. இக்கதையின் முடிவு என்னுள் ஏற்படுத்திய தாக்கத்திலிருந்து விடுபட எவ்வளவோ நேரமாயிற்று

சுபத்திராவுக்கு என்ன நடந்துவிட்டது என்ற அழகியல் மிகுந்த கதை என் மனதை நன்றாய்க் கட்டிப்போட்டது. சுபத்திரா என்ற பெண்ணின் வன்மமான குணமும் தன் அக்காவின் கணவனான முகுந்தனை அடைய ஆசைப்படுவதும் கடைசியில் திருந்துவதுமாக கதை முடிகிறது. நாடகத்தனமையுடன் கதையை நகர்த்திய விதம் சுவாரசியம். சுபத்திரா அடுத்து என்ன செய்ய போகிறாள் என்று ஒரு சஸ்பென்ஸ் வைத்திருப்பதும் கதைக்கு வலு சேர்க்கிறது.

கடவுள் பெயரால் வரும் ஏஜன்டுடன் கணவர் கதாப்பாத்திரம் கேட்கும் கேள்வியும் பெண்கள் கண் மூடிக்கொண்டு இத்தகைய ஏஜன்டுகளை ஏற்றுக்கொள்ளும் சூழலை சொல்லும் கதை இது. சமூகத்தில் கடவுள் பெயரால் நிலவும் சில சூழல்களைக் கேள்வி எழுப்பிச் சிந்திக்க வைக்கிறது.

 கனடாவில் வசித்தாலும் ஜாதகம் பார்ப்பது அதனால் திருமணம் தள்ளிப்போவது தன் துணையை தேடும் வலு இல்லாது தமிழ் குழந்தைகளை வளர்ப்பது கல்யாணவயது வந்ததும், பெண் பார்க்கும் படலம், அதன் சுற்றியுள்ள நிகழ்வுகள் என்று கனடாவிலும் தமிழ் மனநிலையுடன் வாழும் சூழலை புரிந்து கொள்ள உதவுகிறது அந்த ஒருவனைத் தேடி. நவீன சிந்தனையுள்ள செந்தில் என்ற தம்பி சொல்லும் செய்தி அலாதியானது.


ஆசை வெட்கம் அறியும் கடைசிக் கதை. கதாசிரியர் சட்டதரணியாக தான் சந்தித்த, தனக்கு பிடித்தமான ஒரு பெரிய மனிதரின் கோயில், பூசை, புனஸ்காரம் என்று வாழும் மனிதரின் இருண்ட பக்கங்களைச் சிறப்பாககக் காட்டியுள்ளார். அன்னபூரணம் அக்காவின்  வாழ்க்கையில் மறுபடியும்  ஒளி ஏற்றுவதுடன் கதை முடிகிறது..
 

வாசகர்களைச் சிந்திக்க வைத்த கதைகள் ஒருபுறமும் பழைமையும் புதுமையும் கலந்த கதைகள் இன்னொரு புறமுமாக இத்தொகுப்பு ஒரு மிகச் சுவாரசியமான வாசிப்பு, தான் வாழ்ந்த உலகின் ஒரு காலத்து மனிதர்களின் வரலாற்றை கூறுபவை. மேலும் பல கதைகளுடன் ஆசிரியரை சந்திக்க ஆவலாக உள்ளோம். ஆசிரியர்வழிப்போக்கரிகளின் வாக்குமூலம்என்ற கவிதை நூலை ஏற்கனவே பிரசிரித்துள்ளார். இந்த வருடம் இன்னொரு கவிதைத்தொகுப்பும் நாவலும் வர உள்ளதென அறிகிறேன்வாழ்த்துக்கள் ராஜாஜி.