18 Jul 2015

புரக்கணிக்க வேண்டிய மாம்பழச் சங்க திருவிழா உதவல் நிகழ்வு

பாளையங்கோட்டை நூற்றாண்டு மண்டபத்தில் ஆண்டுதோறும் ஜுலை மாதத்தில் நடைபெறும் மாம்பழச் சங்க விழா  கடந்த 235 வருடங்களாக நடைபெறும் ஓர் நிகழ்வாகும். கிறிஸ்தவத்தை தழுவிய இந்து மக்கள் வருடத்தில் ஒரு முறையேனும் ஒன்று கூடி கொண்டாடும் நோக்கத்துடன் அறுப்பின் பண்டிகை என்ற பெயரில் துவங்கப்பட்டதாக கூறப்படும் திரு விழாவாகும் இது. தற்போது இந்த விழாவின் சிறப்பாக சொல்லப்படுவது அங்கு கூடும் ஆயிரக்கணக்கான ஏழை-எளியோருக்கு அப்பகுதியில் உள்ள கிறிஸ்தவ பெருமக்கள் தங்களால் இயன்ற பொருளுதவியை செய்து வருவதாகும்.

கிறிஸ்தவ நம்பிக்கை கோட்பாடு பிரகாரம் வலது கரம் கொடுப்பது இடது கரம் அறியாது இருக்க வேண்டும் என்றே யேசு நாதர் கூறியுள்ளார். நாம் செய்யும் உபகாரங்கள் இன்னொருவரை அவமதிக்கவோ நம்மை அகங்கார நிலைக்கு கொண்டு செல்லவோ கூடாது என்பதே இதன் பொருள்.  ஆனால் இங்கு நடைபெற்ற நிகழ்வுகளை நேரடியாக கண்ட போது கிறிஸ்தவத்தின் அடிப்படை கோட்பாட்டை  அவமதிப்பது போலவே தெரிந்தது. 

அங்கு பிச்சை எடுக்க வந்தவர்கள் ஏழை எளியோர் அல்ல அவர்கள் அரசின் எல்லா இனாமும் வளர்ச்சி திட்டங்களும் பெற்று சொந்த குடியிருப்புகளில் வசித்து வரும் எம் ஜி ஆர் காலனியை  சேர்ந்த குறவ இன மக்களே. இவர்களின் நோக்கவும் உதவி பெறுவதாக இருக்க வில்லை. தொழில் சார்ந்த பிச்சை எடுக்கும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு இடம் கொடுக்காது  பிச்சை இடும் மக்களுக்கு அச்சுறுதல் கொடுக்கும் வண்ணம் சண்டையிட்டு ,  தங்கள் இளவல்கள் கேளிக்கையில் அமர்ந்து  இருக்க; பள்ளி செல்லும் தங்கள் குழந்தைகளுடன் குடும்பத்துடன் ஆரவாரத்துடன் அமர்ந்திருந்தனர். உண்மையான தொழில் முறை பிச்சைக்காரர்கள் இடம் கிடைக்காது  பயந்து ஒடுங்கி பயந்து கொண்டு நின்றிருந்தனர். 

பிச்சை கொடுக்க வந்தவர்கள் கிறிஸ்தவ கோட்பாட்டுக்கு இணங்க தங்கள்  சொத்தின் பத்தில் ஒன்றோ அல்லது தங்கள் விளைவெடுப்பில் இருந்து  நல்ல ஒரு பகுதியோ அல்ல; மாம்பழச் சங்கம்  என்ற பெயரிற்கு இணங்க மாம்பழம் கூட கொண்டு வரவில்லை.  தமிழம் எங்கும் சிந்தி கிடக்கும் அரசின் விலையில்லா அரிசியுடன் வந்திருந்தனர்!
  

இன்றைய நிலைவரப்பிரகாரம் தமிழகத்தில் பல கிராமங்களில் 5 முதல் 35 கிலோ அரிசி இனாமாகவே மக்களுக்கு வழங்கப்படுகின்றது. இந்த நிலையில் இவர்கள் உள்ளம் கைகளில் அள்ளி கொடுக்கும் அரிசி இவர்கள் பொய்மையான, உலகை ஏமாற்றும் வாழ்க்கையை  குறிக்கின்றது.   ஒரு பிடி அரிசியுடன் "உழைத்து சாப்பிடுங்கள் இரந்து சாப்பிடாதீர்கள் என  உபதேசித்த மூதாட்டியின் முகத்தில் அரிசியை திரும்பி எறிந்த சுவாரசிய நிகழ்வுகளையும் காண இயன்றது.

அரிசியை திண்-பண்டங்களை கொடுக்க வந்த இடத்தில் வாங்குபவர்களும் கொடுப்பவர்களும் வாக்குவாதத்தில் ஏற்படுவதும் சண்டை இட்டு கொள்வது சாதாரண நிகழ்வாக இருந்தது. குறவ  ஆண்கள்  கைகளின் கம்புடன் வந்துள்ளனர். மிரட்டி தட்டில் பணம் போட வைக்கின்றனர்.

இந்த நிகழ்வில் ஒரு பக்கம் இரவல் கொடுப்பவர்கள் ஆணவம் வாங்குபவர்கள் அடாவடித்தனமான நடவடிக்கைகள்  மத்தியில் அல்லல் பட்ட காவல்த்துறை அதிகாரிகள் நிலை தான் பரிதாபமாக இருந்தது. 


இந்தியாவில் நெடுநாள் நிலவிய பல மோசமான பழக்கவழக்கங்களுக்கு சாவு மணியடித்த மதம். கிருஸ்தவம். மாம்பழச்சங்க திருவிழா என்ற பெயரில் நடைபெறும் இது போன்ற கீழ்த்தரமான நிகழ்ச்சிகளுக்கு எந்த மதச்சாயவும் பூசாது ஒழிக்க வேண்டும்.  உன்னிடம் இரு உடை இருந்தால் உடையில்லாதவனுக்கு ஒன்றை கொடு என்றும் "நான் ஆண்வரின் வழியில் வர என்ன செய்ய வேண்டும்" என்ற போது உனக்குள்ள அனைத்தையும் விற்று ஏழைகளுக்கு கொடு என்றே கூறியுள்ளார் யேசுபிரான்.  அரசிடம் இருந்து இனாம் அரிசியை பெற்று ஏழைகளுக்கு என்று ஏழை அல்லாதோருக்கு கொடுப்பதால் எந்த பிரயோசனவும் இல்லை.

ஒரு ஏழைத்தாய் மற்றும்  ஒரு பரிசேயன்  காணிக்கை இடுவதை முன் நிறுத்தி கொடுப்பதற்கான மனநிலையை பற்றியும் பைபிளில் கூறப்பட்டுள்ளளது. ஆகையால் கொடுப்பது "எவ்வளவு?, என்ன?" என்பதையும் விட மனநிலையும் முக்கியம். காணிக்கை என்ற பெயரில் தான் எல்லாம் உள்ள வசதிபடைத்தவனாகவும் ஆண்டவரின் நேரடி ஆசிர்வாதம் பெற்றவராகவும் பெறுபவரை மிகவும் கீழ்த்தரமாக எண்ணுவதும் பாபமாகும் மனிதநேயமான செயல் அல்ல. 

அங்கு ஐஸ் விற்று கொண்டிருந்த முதியவரிடம் பேசி கொண்டிருந்த போது ஒன்று அல்லது இரண்டு ரூபாய் மட்டுமே காணிக்கை கிடைப்பதாகவும்,கிடைக்கும் அரிசியை இந்த மக்கள் உணவகங்களில் விற்பதாகவும் கூறினார். புளியம் பெட்டி போன்ற கோயில் வளாகத்தில் பிச்சை எடுக்கும் பெண் அங்கு 100 ரூபாய் கிடைப்பதாகவும் இங்கு வந்தும் அமரவும் இடம் கிடைக்கவில்லை, தரவில்லை என வருந்தி கொண்டு நின்றார். 

அங்கு காணிக்கை இட்டு சென்று கடந்து சென்ற முதிய பெண்மணியிடம் இரவல் ஒரு பிடி அரிசியை பற்றி வினவிய போது அவரின் கொடுப்பவள் என்ற ஆணவவும் பெறுபவரை பற்றிய அக்கறையின்மை யும் புலன் பட்டது. 

பிச்சைக்காரர்களுக்கு உதவுகின்றேன் என கூறி மனித இனத்தை அவமதிப்பது சரியான முறையல்ல.  பாளையம் கோட்டை என்பது கள்ள ஊழியக்காரர்களின் கோட்டையாகும். ஆயிரங்களை ஊழியம் என்ற பெயரில் கொள்ளை இடுபவர்களுக்கு கொடுத்து விட்டு அரசு கொடுக்கும் இனாம் அரிசியை  பிச்சையாக கொடுத்து புண்ணியத்தை தேடலாம் என்று நினைப்பது இறைவனை ஏமாற்றுவதற்கு சமம்  ஆகும்.

பிரார்த்தான கூடாரங்கள் கட்டும் கிறிஸ்தவர்கள் பிச்சைக்காரர்களுக்கு குடியிருப்புகள் வேலைவாய்ப்புகள், பண்பான வாழ்க்கை சூழல் அமைத்து கொடுக்கலாம். காணிக்கை என்று கள்ள தீர்க தரிசிகளிடம் கொடுப்பவர்கள் ஒரு ஏழை குழந்தைக்கு பள்ளி/கல்லூரி குழந்தைகளுக்கு விடுதி கட்டணம் தேர்தல் கட்டணம் கல்வி கட்டணம் போன்றவை நடத்தலாம். பிச்சைக்காரர்களை தேடி வீதிக்கு வர வேண்டாம். கிறிஸ்தவர்கள் பெரும் பகுதி வேலை இல்லா திண்டாட்டம்,  வாழ்க்கை சூழல் அற்று பிச்சைக்காரர்களாக மாறி கொண்டிருக்கின்றனர். . ஶ்ரீதனம் என்ற பெயரில் பெண் பிள்ளை பெற்றவகளை தென் தமிழக கிறிஸ்தவர்கள் பல குடும்பங்களை பிச்சைக்காரர்களாக மாற்றி வருகின்றனர். பல கிறிஸ்தவ  பெண் குழந்தைகளுக்கு திருமணம் நடத்தி வைக்க வசதி அற்றி முதிர் கன்னிகளாக உள்ளனர். 

இவர்களுக்கு உதவலாம். மைதானத்தில் ஆள் சேர்த்து, காவலர்களின் உதவியுடன் நிகழ்த்தி வரும் இந்த உதவி வைபவம் வெறும் ஆசாரம் மட்டுமே. இந்த நிகழ்ச்சியால் கொடுப்பவர்களுக்கோ வாங்குபவர்களுக்கோ எந்த நல்லதும் நடக்க போவது இல்லை. இதும் வெறும் படம் காட்டும் காட்சிகள் மட்டுமே.  இஸ்லாமியர்கள் பணக்காரர்கள் திருமண வைபத்தில் தங்கள் ஏழை உறவினர்கள் குழந்தைகள் திருமண வைபவத்தையும் நடத்த அனுமதித்து உதவுகின்றனர். இது போன்ற அர்த்தமுள்ள உதவும் குணம் தான் தேவை. லஞ்சம் வாங்கிய பணம் அநியாயமான சம்பாதித்த பணம் போன்றவத்தையாவது ஏழைகளுக்கு கொடுத்து பாவத்தை கழுவலாம். அவையையும் பெரிய கொள்ளக்காரர்களுக்கு கொடுத்து கடவுள் கிருபை தேடுபவர்கள் அரசு அரசியை ஏழைகளுக்கு கொடுத்து புண்ணியம் தேட நினைப்பது கிறிஸ்தவர்களின் அவல நிலையை மட்டுமே உணர்த்துகின்றது. 


மத நிகழ்வுகள் சமுதாயத்தில் நல்லுறவிற்கு, சமத்துவ நிலை வளர  உதவ வேண்டும்.  தான் உள்ளவன் எதிரே நிற்பவன் ஏழை, இல்லாதவன் என்ற ஏற்ற தாழ்வை வளர்த்த கூடாது.  

12 Jul 2015

பெண்ணின் கருவறையும் கற்பகிரகவும்


நேற்று மருத்துவமனையில் கண்ட இளம் பெண்ணின் சிரிப்பில் இருந்த சோகம் சில சம்பவங்களை நினைவூட்டி கொண்டிருந்தது. நானும் அத்தானுடன் பல மணிநேரம் காத்திருக்க வேண்டிய சூழல். அவரோ டென்னீஸ் பார்ப்பது போல் பார்வையால் நேரம் போக்கி கொண்டிருக்கின்றார். நோயாளி தீவிர கவனிப்பு அறையில் இருப்பதால் குளிரூட்டப்பட்ட அறை, தனி கவனிப்பு என்று தூங்கி கொண்டிருக்கின்றார். நோயாளியுடன் இருப்பவர்களுக்கு தான் மருத்துவமனையின் பிரத்தியேக சத்தம், கழிவறை நாற்றம் என அல்லல் படவேண்டி வருகின்றது.  நோயாளிகளின் உறவினர்கள் பல மணிநேரம் காத்திருக்க வேண்டிய இருக்கைகளும்   தொலை நோக்கு பார்வை இல்லாது வசதியற்ற  நிலையில் உள்ள தான் நம் இடுப்பு வலியையும் தாங்கி தான் இருக்க வேண்டியுள்ளது. 


மருத்துவ மனைகள் நோயாளிக்கு ஆனது மட்டுமல்ல என்ற நோக்கில் வருங்காலத்திலாவது  இயற்கை காற்று புகிரும் வண்ணம், சில செடி கொடிகளுடன் கட்டமைக்க வேண்டும். காணும் இடம் யாவும் உயிரற்ற சுவருகளும் அழுக்கு படிந்த நடை பாதைகள் மூச்சடைக்கும் நாற்றம் என எரிச்சல் கொள்ள வைக்கின்றது.   இவையும் தாண்டி சில பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை விளையாட அனுமதிக்கும் மைதானமாகவும் மருத்துவ மனை நடைபாதைகளை பயண்படுத்துவது விழிப்புணர்வு இன்மையை காட்டுகின்றது.

அந்த இளம் தாயின் தாய், தன் ஆதங்கத்தை மிகவும் நிதானமாக கொட்டி கொண்டிருந்தார்.   எதிர்பார்த்த நாட்களை விட பிரசவம்  3 வாரம் முந்திவிட்டதால் குழந்தையின் தந்தைக்கும் விடுமுறை எடுத்து வரை இயலவில்லை. முன்கூட்டி பிறந்த குழந்தை என்பதால் மருத்தவ தனி கண்காணிப்பில்  இருக்க வேண்டிய சூழல். தாய், பால் கொடுக்க மட்டும் சென்று திரும்புகின்றார்.   கடினமான பிரவ நாட்களில் ஒரு தாய்க்கு ஆறுதலாக இருப்பது தன் மார்போடு சேர்ந்து உறங்கும் குழந்தை தான். அக்குழந்தையின் அருகாமையும் அருகில் இல்லை என்பது தாயின் சிரிப்பையும் மீறி சோகம் கண்ணில்  ஓடுகின்றது. 

குழந்தையின் தாய்க்கு இப்படியான வருத்தம் என்றால் சேயின் தாய்க்கு தன் மகளுக்கு பிரசவத்தோடு கொடுக்க வேண்டிய கவனிப்பு, உணவு  கொடுக்க இயலவில்லையே என்ற வருத்தம். வீட்டில் இருக்கும் மருமகள் சமைத்து கொடுக்கும் மனநிலையில் இல்லையாம். மகனிடம் கூறின போது  நான் அண்ணியிடம் சொல்ல இயலாது நீங்கள் அப்பாவிடம் கூறி அண்ணனிடம் சொல்ல சொல்லுங்கள் என கூறி சென்றாராம். 

உறவின் மாட்சிமையில் நிலைகொள்ளும் நம் குடும்ப அமைப்பில் இது போன்ற மனப்பாங்குகள்  பொறுப்பின்மை உறவின் அர்த்தத்தை மறைக்க செய்கின்றது.   மகளை காண வந்த  மாமியார் வீட்டினரோ தங்கள் பாட்டிற்கு சில உபதேசங்களை போகும் வழியே சொல்லி மறைகின்றனர்.


இதே மாமியார் குழந்தை வளர்ந்து வரும் போது தன் வாரிசு என கொண்டாடுவதும் பெண் வீட்டார் ஒதுங்கி இருந்து பெண்ணின் சுகங்களை காணும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர்.   தன் வயதான நாட்களில் தன் மருமகள் தயவில்  சேவையும் மகன் உதவியுடன்  அதிகாரத்தில் பெறும் நிலையில் தான் உள்ளனர் . பெண் குழந்தைகள் அற்ற வெறும் மகன்களை மட்டும் வளர்க்கும் தாய்மார்கள் இரக்க குணத்தில் சிறிது பிந்தங்கி இருப்பதாகவே  சொல்கின்றனர். 

பொதுவாக முதல் பிரசவம் வரை மென்மையாக வளரும் பெண்கள் மனதில் வன்மம் வளரவும் முதல் பிரசம் காரணமாகின்றது. என்ன தான் காலாகாலம் கொண்ட முறை என்றாலும் பிரசவ நேரம் பிறந்த வீடு புகுந்த வீடு என்ற பாகுபாடு இல்லாது அளவற்ற அரவணைப்பு, அன்பு பெரிதும் தேவையாக உள்ளது.  ஆனால் நம் கலாச்சார சூழலில் முதல் பிரசம் என்பதை 'முறை' என்ற பெயரில் பெண் வீட்டார் தலையில் முளகரப்பதற்கும் பெண் வீட்டாரிடம் தங்கள் அதிகாரத்தை நாட்டவும் முறை பெற மட்டுமே பயண்படுத்துகின்றனர் எனபது மிகவும் வருந்த தக்கது. இது போன்ற சூழலை எதிர் கொள்ளும் பெண்களால் ஒரு கடமை என்பதை கடந்து அன்பால் நேசத்தால் மாமியாரை ஒரு போதும் நோக்க இயலாது. 

இவையும் போதாது என்று பிரசம் ஆன தாய்மார்களை மருத்துவ மனை நிர்வாகம் வழி பாதைகளில் கட்டில் போட்டு கிடத்தியிருப்பது பெரும் அவலம். பல பெண்களுக்கு பிரசம் பின்பு நரம்பு சம்பந்தமான நோய்கள், கர்ப்பபை தொற்று என பல நோய்களுக்கு உள்ளாகவும் இது காரணமாகின்றது. இது போன்ற சூழலை முன் கூட்டியை கண்டு தான் இறைவனை வழிபடும் தலமாக கற்ப கிரகத்தை உருவகப்படுத்தியுள்ளனர். நம் இறை நம்பிக்கை வழிமுறைகள் எல்லாம்  வாழ்க்கையோடு ஒட்டாது வெறும் ஆசாரமாகவே முடிவுறுவதும்   சமூக அவலம் தான்.

சமூக மாற்றம் என்பதை தனி நபர் விருப்பம், மாற்றம் என்பதை கடந்து    ஒரு பெண்ணுக்கு பிரசவம் என்றால் கணவருக்கு விடுப்பு மட்டுமல்ல உடன்  இருந்து கவனித்து  கொள்ளவும் பயிற்சி தேவை. பிரசவ நேரம் கணவன் அருகாமையை சட்டத்தால் நடைமுறைப்படுத்த வேண்டும். பிரசவம் என்பதின் வலியை பெண் மட்டும் ஏற்று கொள்ளாது ஆணும் சரிசமமாக பங்கிட்டு கொள்ளவேண்டிய சூழல் அமைய வேண்டும். பிரசம் என்பதை பெண்வீட்டார் கடமையாக பார்க்காது ஆண் வீட்டாரும் தங்கள் சுமையை ஏற்கும் சூழலுக்கு இறங்க வேண்டும்.

21 Jun 2015

“ஆர் என். ஜோ டி குருஸின் கொற்கை”


கொற்கை நாவல் கையில் எடுத்ததும் வாசித்து விடுவோமா என்ற அச்சத்தையும்  மிஞ்சி வாசிக்க வைத்தது விருவிருப்பான எழுத்து நடையும்  சுவாரசியமான கதையுமாகும்.  1914 ல் துவங்கி 2000 ஆண்டு முடிய 80 வருட கால மூன்று தலைமுறைகளின் கதை சொல்லும் ஒரு நெடுநாவல் ஆகும். கொற்கையில் வரலாற்று முக்கியம்,  அதன் வளமை,  பரதவர்களின் வாழ்க்கையை சொல்லும் கதைமாந்தர்கள்; முக்கியமாக கொற்கையில் குடியிருந்தவர்களும் பெரியதுறை போன்ற பக்கத்து ஊரில் இருந்து குடியேறியவர்கள் கோயில்பட்டி போன்ற ஊர்களில் இருந்து பிழைக்க வந்த நாடார் இனமக்கள் 25க்கும் மேற்பட்ட குடும்ப  மக்கள் கதை மாந்தர்களாக கொண்ட 1128 பக்கங்கள் உள்ளடங்கிய மாபெரும் நாவல் ஆகும் "கொற்கை". இலக்கிய பின்புலன் இல்லாத சூழலில் உருவாகியுள்ள இப்புத்தகம் ஜோ டி குரூஸின் அயராத உழப்பின் தன் இன மக்கள் மேல் கொண்ட தீராத நேசத்தின் தன் சமுதாயத்திற்கு ஏதேனும் செய்ய வேண்டும் என்ற அவருடைய ஏக்கமும், தாங்கள் ஏமாற்ற பட்டதை எண்ணி வெகுண்ட அவருடைய கலங்கிய உள்ளவுமே இப்படியான ஒரு நாவலின்  உருவாக்கத்திற்கு காரணமாக இருந்துள்ளது. பரதவ இனத்தை சேர்ந்த மனிதர்,  ஒரளவு இன்னல்கள் இல்லாத ஒரு நிலையில் வாழும் ஓர் அதிகாரி அச்சமூகத்தில் புரக்கணிக்கப்பட்ட கடைநிலை மனிதனை எண்ணி வருந்துவது அவருடைய மனித நேயத்தையே காட்டுகின்றது. ஒரு மிகப்பெரும்  பின்  புலன் கொண்ட சமூகம் தன் நிலையில் இருந்து வீழ்ந்து அடையாளம் அற்று போக காரணமான இருந்து  காரணிகளை தேடிய குரூஸ் கண்டு பிடித்த சில உண்மைகளை உண்மையாகவும் நேர்மையாகவும் பதிந்து சென்றுள்ளார்.  

நெய்தல் நிலத்தில் சொந்தக்காரர்களான  மக்களின் ஒற்றுமை இன்மை சொந்த இனத்தோடு கொண்ட  பகைமை உணர்வு, பொறாமை, பெண்கள் மேல் கொண்ட அதீராத இச்சை உணர்வால், தன் தொழிலில் சரிந்ததும்  மற்றும் வேற்று இன மக்கள் தங்கள் ஊரில் குடிபுகுந்து தங்கள் உரிமைகளை  பறித்து சென்றதையும் கடற்கரை மொழியினூடாக சுவாரசியமாக விவரித்துள்ளார். வட்டார மொழியான கடற்கரை மொழி தான் இந்நாவலின் தனி தன்மைக்கு  சாற்றாக உள்ளது. வாசிப்பவர்கள் முதல் 20 பக்கம் புரிந்து வாசிக்க சிரமம் கொண்டாலும் . பின்பு நாமும் அந்த மொழியை பேசும் நிலைக்கு தள்ளப்படும் நிலைக்கு எட்டுகின்றோம். மொழி என்பது வெறும் பேசும் கருவி மட்டுமல்ல ஒரு இனத்தின் அடையாளம் பண்பாடு, வாழ்க்கையாக மாறுகின்றது,  வட்டார மொழியை பயண்படுத்தியதால் அவ்வூர் வழக்கு சொற்கள் பழமொழிகள், வசை மொழிகள், கேலி கிண்டல்களை அப்படியே அறிந்து கொள்ள இயல்கின்றது. இது ஒரு வரலாற்று நாவல் என்பதால் சில சம்பவங்கள் வரலாற்று நிகழ்வுடன் உணர்த்தி  காலத்தையும் துல்லியமாக பதிவு செய்துள்ளார்.


நிலம் சார்ந்த விவசாயிகள்  போன்றே கடலை நம்பி இருந்த கடலோடிகள் பல காலகட்டங்களில் புரக்கணிக்கப்பட்டதை,, ஏமாற்றபட்டதை கொற்கை" விளக்குகின்றது. மிக முக்கியமாக தங்கள் நிலத்தின் உரிமையை தக்க வைத்து கொள்ள வேண்டும் என எண்ணி மதம் மாறுவதும் அந்த மத மாற்றமே தங்களுக்கான அடையாளத்தை துறக்க தங்களுக்கான தலைமையை, பண்பாட்டை இழக்க காரணமானதை திறம்பட விவரித்துள்ளார்.  மதம் என்பது ஆன்மீகம் கடந்து மனிதர்களை ஆட்டி படைக்கும் கருவிகளாக உருவாகும் போது சாதாரண மக்கள் நிலை குலைந்து போவதும் அடிமையாக மாறுவதும் மட்டுமல்லாது அடையாளம் அற்ற ஒரு ஜனமாக உருவாகுவதை கதையினூடாக காண்கின்றோம். சாதாரண மக்கள் என்றிகல்லை அவ்வின மக்களை பிரதிநித்துவ படுத்திய மன்னரே இந்த சூழலில்  தன் மதிப்பை மான்பை இழந்து கடைசியில் தன் கிரீடத்தையும் மதத்தலைமை முன் கண்ணீருடன் துறக்கும் நிகழ்வு  யாரையும் கண் கலங்கி விடச்செய்யும்.
 
இவ்நாவலின் இன்னொரு சிறப்பு என்பது ஒவ்வொரு கதாபாத்திரவும் நம் மனகண்ணில் வாழ்ந்து செல்கின்றனர் என்பதாகும். பிரதான கதாபாத்திரமான பிலிப் தன் வறுமையின் காரணமாக பெரிய துறையில் இருந்தும் வேலை தேடி தன் சித்தப்பா லொஞ்சின் ஊரான கொற்கைக்கு வந்து சேருகின்றார். அங்கோ சித்தி உருவத்தில் துரத்திய காமப்பேய் இவர் பிள்ளைகள் காலத்திலும் இவருக்கு பல தொல்லைகள் தருகின்றார். 

சித்தப்பா லொஞ்சின் ஒரு விபத்தில் இறந்து போக  சித்தப்பா மகன் ரஞ்சனும் சில வருடங்களில் அகால மரணம் அடைகின்றார் . பிலிப் தனக்கு அடைக்கலம் கொடுத்த ஆண்டாமணியார் மகள், தன்னைவிட வயதில் மூத்த, இளம் வயதிலே விதவையான சலோமியை திருமணம் செய்து கொள்கின்றார்.   ஒரு வாழாவெட்டிக்கு வாழ்க்கை கொடுத்தார் என்ற காரணத்தால் இவர் ஒரே சகோதரியும் பிரிந்து செல்கின்றார். . இவர் வறுமையில் வளர்ந்தாலும உழைப்பால் தண்டல் ஆகிய பிலிப்பு தன் ஏழு பிள்ளைகளையும் நல்ல நிலையில் மணம் முடித்து வைக்கின்றார். ஆனால் ஊதாரிகளான தன்னலம் பிடித்த பிள்ளைகளால் மேலும் மன உளைச்சலுக்கு ஆளாகின்றார்.  ஒரு மகன் தனக்கு பிடித்த பெண்ணை மணம் செய்ய அனுமதிக்க வில்லை என்ற வேதனையில் தற்கொலை செய்து கொள்ள, இன்னொரு மகனோ சொத்துக்கு என பெற்ற தந்தையை அடிக்கும் இழிநிலைக்கு எட்டுகின்றான்.  கணவர் இறந்தும் கணவர் வீட்டில் இருந்து தன் மகனை படிக்க வைக்கும் எழிலரசி மாமனாரை பாசமாக நோக்கும் மகளாகவும் மிளிர்கின்றார்.  நேர்மையால் வாழ்க்கை நெறியில்  உயர்ந்த பிலிப்பு, இரத்த உறவுகளிடம் தோற்று போகும் அவலநிலையும் காண்கின்றோம். சண்முகவேல் நாடாரின் அறிவுரைக்கு இணங்க சந்தன மாரியை சந்திக்க வேண்டும், பொறுப்புக்களை பிள்ளைகளிடம் விட்டு விட வேண்டும் என பல திட்டங்களுடன்  சென்னையில் இருந்து கொற்கை நோக்கி வரும் பிலிப்பின் உயிர் பயணத்தில் முடிவதுடன் நாவலையும் முடித்துள்ளார்.

எழிலரசியின் சகோதரான வரும் அமுதமன் கதாபாத்திரம் கதை ஆசிரியராக தான் இருக்க வேண்டும். 

மதம் என்ற ஆயுதத்தால் ஒரு இனத்தின் இயல்பான சிந்தனை ஆற்றல் மழுங்கி மட்டையாகி போனதையும், நிறுவனமாக்க பட்ட கிறிஸ்தவத்தின் கீழ் எவ்வாறாக ஒரு போராட்ட குணமுள்ள மக்கள் மண்டியிடப்பட்டனர் என்ற வேதனையையும் கதைமாந்தர்கள் வழியாக விவரித்துள்ளார்.. விமரிசையாக கொண்டாடப்படும் பனிமயமாதா திருவிழா  சப்பர பவனி தற்போதும் உலகம் ஒட்டும் பாக்கும் அற்புத நிகழ்வாக விளங்குகின்றது. சந்தமனைமாரியின் வரலாறு திருத்தி எழுதப்பட்டது எப்படி எனவும்  காணலாம்.

பரதர்களின் மன்னர் பாண்டிய பதி காலத்தால் அழியாத சோகத்தின் பதிப்பாகும். பல நூற்றாண்டுகளாக ஒரு இனத்தின் மன்னராக இருந்தவரின் முடிவு நம்மையும் தீரா துயரில் ஆழ்த்தியது. அவருடைய கடைசி நாட்கள், மரணம், அவருடைய ஆளுகையே அவரே மறுதலித்த வைத்த விதம் நம்மை கனக்க செய்தது. மன்னனின் வாரிசோ தனக்கு இனி அதிகாரம் ஆட்சி  வேண்டாம் என  ஒரு வங்கி குமஸ்யதாவாக பணி புரிந்து;  காங்கிரஸ் கட்சியில் இணைந்து நாட்டுக்காக சேவை செய்து மறையும் துயர் நிலையும் எந்த மனிதனையும் கண் கலங்க செய்யும். மன்னனின் மகளோ கொழும்பில் நடந்த இனக்கலவரத்தால் பாதிக்கப்பட்டு கணவனை இழந்து தனது சகோதரன் பராமரிப்பில் மீதி காலத்தை தள்ளுகின்றார். அவர்கள் வாழ்ந்த அரண்மனை இன்று அடையாளம் இழந்து சிதறி போனது வருத்ததை வரவழைக்கின்றது.

மதலேன் என்ற கதாபாத்திரம் ஒரு பெண் எதிர் கொண்ட கொடும் துயருக்கு சாட்சியாக உள்ளது. சந்தேக நோய் கொண்ட கணவனுக்கு மனைவியாக வேண்டி வந்த மதலேன் தன் உண்மையை விளக்க  திராணியற்று கணவர் கண் முன்னே தற்கொலை செய்து கொள்ளும் சூழலுக்கு தள்ளப்படுகின்றார். மதலேன் வாழ்க்கைக்கு பெரும் இடஞ்சலாக இருந்த அவர் அத்தை மகன் பாதிரியார் பபிலோன்  மனித குணமே அற்ற அரக்கனாக வரலாற்றில் பதியப்பட்டுள்ளார்.

தூத்துகுடியின் குடிநீர் விநியோகத்திற்கு வழி வகுத்து சிலுவை பர்னாந்து போன்ற தலைமைகள் பரதவர்கள் மத்தியில் உருவாகாதது பெரும் குறையாகவே கதாசிரியர் எடுத்து காட்டுகின்றார். 

ஒரு காலத்தில் பல தலைமுறைகளாக ஏற்றுமதி வியாபாரத்தில் கொடி கட்டி பறந்த சிங்கராயர் குடும்பவாரிசு  செல்வதாஸ் 2000 ஆண்டுக்களில் காலில்  பழைய மூன்று செருப்புகளை ஒன்றாய் சேர்த்து தைத்து அணிந்து நடந்து சென்ற வறுமை நிலை கண்ட கதாசிரியர் தன் இனத்தின் வீழ்ச்சிக்கு காரணம் என்ன? என்ற தேடுதலில் முடிவு தான் இப்புத்தகம்.. பரதவரின் பூர்வீக பூமியான தூத்துகுடியில் இன்று பரதவர்கள் அடையாளம் இழந்ததின் காரணம் நாவலில் விரிவாக விவரித்துள்ளார். ஒற்றுமை இன்மை, ஒரு தலைமையை ஏற்று கொள்ள விரும்பாது ஆள் ஆளுக்கு ராஜாங்கம் செய்ய நினைத்த இனம், . தலைமையாக உருவாகியவர்களும் இனமக்கள் நலம் என்பதை விடுத்து தன் நலத்தை நாட இனத்தின் அழிவு துவங்குகின்றது.நமது கலாச்சாரத்தின் அடிப்படையான குடும்பங்களில் காணும் உறவு கேடுகள் கணவருக்காக விட்டுக் கொடுக்காத மனைவி மனைவிகளுக்கு துரோகம் செய்யும் கணவர், கூட்டு குடும்பத்தில் நம்பிக்கை வைக்காத பண்பு,. சொந்த சகோதரனின் வளர்ச்சியை தடுக்க நினைத்து  மற்று இனங்களுக்கு இடம் கொடுத்த கொற்கை கடைசியில் கொற்கையில் எல்லா வணிக பிடிப்புகளும் மற்று இனங்கள் ஆளுகைக்கு உட்பட்ட போது வெறுமெனே வேடிக்கை பார்க்கும் சூழலுக்கு வறுமை பிடிக்குள் வீழும் துயர் நிலையும் காண்கின்றோம்.  

கொழும்பில்  நடந்த அரசியல் மாற்றங்கள் இனக்கலவரங்களும் கடலை நம்பி இருந்த மக்களுக்கு பாதகமாக அமைகின்றது. கொற்கையை விட கொழும்பை நம்பி சென்றவர்கள் இனக்கலவரத்தில் தங்கள் சொத்தை இழந்து அனாதர்களாக கொற்கை வந்தடைகின்றனர். போரில் ஈழத்தமிழர்கள் போன்றே  பாதிக்கப்பட்ட மக்களாக கொற்கை மக்கள் மாறுகின்றனர். சிங்களவர்களும் கொற்கை தமிழர்களும் திருமணத்தால் இணைந்த சமூகத்தை பற்றியும் குறிப்பிட்டுள்ளர்.




பரதவர்கள் என்ற ஒரே இனம் தங்கள் வசதி வாய்ப்புகள் சார்ந்து பிரிந்ததும்  மேசைக்கரர்கள் என்ற பணக்காரர்கள் ஆங்கிலேயர்களுடன்  பின்பு அரசியல் அதிகாரத்துடன் சேர்ந்து தங்கள் இனத்தையே நெருக்கும் அவல நிலையும் காண்கின்றோம்.  இப்படியாக பிரிந்து வளர எண்ணிய இனம் மற்று இனத்தின் ஒற்றுமையான வளர்ச்சிக்கு முன் சிந்தி சிதறி ஒன்றுமில்லாது ஒடுங்குகின்றது.  மாற்றங்களுக்கு அனுசரித்து தன்னை மாற்றி கொள்ளாத பரத இனம் தன் முடிவை தானே தேடி கொண்டதாக காண்கின்றோம். இவர்களின் ஒற்றுமை இன்மையான மனநிலைக்கு கிருஸ்தவ தழுவலும் ஒரு காரணமாக கதை ஆசிரியர் காண்கின்றார். கிறிஸ்தவமும் தங்கள் மத வளர்ச்சிக்காக பயண்படுத்திய இவ்வினத்தின் வளச்சியை முன்நிறுத்தவில்லைஎன ஆசிரியர் நிறுவுகின்றார்.

முத்துலிங்கம் –சண்முகவேல் நாடார் குடும்பத்தை முன்நிறுத்தி நாடார் இனமக்கள் ¯உழைப்புடன் தங்கள் தலைமைக்கு என ஒரு இடம் கொடுத்து முன்னேறியதாக குறிப்பிடுகின்றார். . ரேவதி பர்னாந்தை திருமணம் செய்ததும் சில்வியா ரமேஷ் நாடாரை திருமணம் செய்து நாடார் இனத்துடன் கலந்து வேற்றுமையில் ஒற்றுமை பாராட்டுவதையும் அறியலாம். 

இப்புத்தகம் பல எதிர்ப்புகளை சந்தித்ததில் ஆச்சரியப்பட வேண்டியது இல்லை. கிறிஸ்தவத்தின் அடிப்படை நம்பிக்கையை கேள்வி எழுப்புகின்றது. அதே போன்று கடவுளின் மறு அவதாரமாக காணும் துறவியர் செய்யும் அட்டூளியங்களையும் கூறியுள்ளார். ஜோ டி குரூஸ் அடிக்கடி பல பொது கூட்டங்களில் கூறுவது போல் இவருடைய அடிப்படை பள்ளி கல்வி கல்லூரி படிப்பு யாவும் கிறிஸ்தவ பள்ளிகளில் அமைந்துள்ளது. சிறப்பாக இவர் தூய சவேரியார் மேல் நிலைப்பள்ளி லயோளா கல்லூரி மாணவர் ஆவார். கதாசிரியரின் ஆயிரம் கண்களை திறந்து விட்டதும் அவர் குறைப்படும் நிறுவனமாக கிறிஸ்தவ பாதிரியார்களின் பள்ளிகளே. யேசு சபை துறைவிகளால் மட்டுமே ஆழ்ந்த சிந்தனையுள்ள கேள்விகள் எழுப்பும் மனிதர்களை உருவாக்க இயலும் என்பதற்கு  எடுத்து காட்டாக ஜோ குரூஸும்  திகழ்கின்றார். (இன்று இந்தியா அளவில் முழு விச்சில் செயலாற்றும் பல அரசியல்வாதிகள் கலைஞர்கள் யேசு சபையில் கல்வி நிறுவனகளில் உருவாகியுள்ளவர்களே.) பிலிப் சந்தன மாரியை சந்திக்க வேண்டும் என்ற நோக்கில் பயணிக்க ஆனால் அவர் சந்திக்காதே பயணம் நிறைவு பெறுகின்றது. கிறிஸ்தவர்களால் திரும்பவும் தாய் மதம் திரும்பி நிம்மதியாக வாழ இயலாது என்பதை தான் பிலிப்பின் நிறைவு பெறாத விருப்பத்துடன் முடிவு எட்டுகின்றது. 
அடிப்படையில்  பாதிக்கப்பட்ட தன் இன மனிதர்களுக்காவும் குறிப்பாக அடிமட்ட மக்களுக்காக குரல் கொடுத்த இந்த நாவல் ஆசிரியர் போற்றுதலுக்குரியவரே. பரத இன பெண்களை மோசமாக சித்தரிகரித்தார் என குற்றம் சாட்டபட்டு வழக்கும் தொடுக்கபட்டுள்ளது. இக்கதையில் 100 க்கும் மேற்பட்ட பெண் கதாபாத்திரங்களை பரிசயப்படுகின்றோம். ரஞ்சிதம், வலேறியா,  போன்ற கதாபாத்திரங்களை பொய்மையாக புகழ இயலாது ஆனால் சாரா பாட்டி, விர்ஜித், சலேமியா, ரேவதி சுகந்தி, சில்வியா போன்ற பல பெண் கதாபாத்திரங்களை காலத்தால் அழியா வண்ணம் சிறப்பாக படைத்துள்ளார்.

இந்த நாவலின் பாதிப்பில் இருந்து அவ்வளவு எளிதாக யாராலும் வெளி வர இயலாது. பல ஆயிரம் வருடங்களாக பல நாடுகளுடன் வணிகம் செய்து வந்த மக்களின் வீழ்ச்சி அதன் தாக்கம்  எளிதாக நம்மை விட்டு மறைய போவதில்லை. கொற்கைக்கு இனி செல்லும் போது ஒவ்வொரு தெருவும், நாம் காணும் மனிதர்களும் மேலும் பரிசயம் கொண்டவர்களாக தெரிவார்கள். சமீப காலங்களில் அணு உலைகள் மணல் கொள்ளை என தினம் காணும் செய்தியில் வரலாற்று உண்மை;  நம்மையும் சுடுகின்றது.  தேரிக்காட்டு பயலுக என அவர் திட்டுவது கூட இப்போது  வேதனையாக தெரியவில்லை. அது ஒரு இனத்தின் தீராத வேதனையின் குரலாகத்தான் ஒலிக்கின்றது. உண்மைகள் பிடிவாதமானவை, மறைக்க இயலாதவை. மறுக்க இயலாதவை.  இந்த புத்தகம் ஜோ குரூஸின் மட்டும் பார்வை அல்ல ,ஆதங்கம் அல்ல ஒரு இனத்தின் அழு குரலாகும். . ஏக்கமாகும், எதிர்பார்ப்பாகும்.  ஒரு முறை வாசித்து என் அறிவுக்கு எட்டியவை நினைவுக்கு எட்டியவை பகிர்ந்துள்ளேன். பாலியல் தொழிலில் ஏற்பட்டிருக்கும் தன் தாயை சந்தித்த கோபால் மயக்கு மருந்து அடிமையான மகனால் கொல்லப்பட்ட தாய் என பல மனிதர்களை நாம் சந்திக்கவைக்கும் நூல்.)

25 May 2015

சிலுவையின் பெயரால்-கிறிஸ்தவம் குறித்து

ஜெயமோகனின் "சிலுவையின் பெயரால்" சமீபத்தில் வாசிக்க கிடைத்த புத்தகம் புத்தகம்.

ஜோசஃப் புலிக்குந்நெல் என்ற கிறிஸ்தவ பாதிரியாருக்கு சமர்ப்பித்து வெளிவந்துள்ள புத்தகம் இது. கிறிஸ்தவம் பற்றி இப்படியாக ஒரு புத்தகம் எழுதும் போது தான் கிறிஸ்தவை துஷிப்பவனாக எடுத்து கொள்ளக்கூடாது என்றும் கிறிஸ்துவை தல்ஸ்தோய், மற்றும் சைதன்யதி, காந்தி மூலம் கண்டுள்ளேன்  என்றும் முன்னுரையிலே சொல்லி விட்டார்.  தான் கண்ட பெரும்வாரியான கிறிஸ்தவர்களை லைகீக காரியங்களுக்காக கிறிஸ்துவை தேடுபவராகவும், தேவை சார்ந்து கடவுளை தேடுபவர்களாகவும் மதம் மாற்ற முயல்பவராக  விமர்சித்து  கொண்டு புத்தகத்திற்குள் கடக்கின்றார். 

இப்புத்தகத்தின் உள்ளடக்கம் நாலு பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது. முதல் பகுதியில் பிரமாண்டமான ஆலயங்கள் பற்றிய அவருடைய  கேள்விகள் எழுகின்றது. எளிமையின் உருவாம் மாட்டு கொட்டகையில் பிறந்த யேசு பிரானுக்கு பிரமாண்ட கோயில்களா என்பது இவரால் ஏற்று கொள்ள இயலவில்லை. 

இந்தியாவின் முதல் புனித பட்டம் பெற்ற துறவி அல்போன்சா அவர்களை மேல்கோள் காட்டி மெதுவாக கத்தோலிக்கர்களின் புனிதர்கள் உருவாக்கத்தை உருவகப்படுத்துவதை அற்புதங்களை பற்றிய நம்பிக்கைக்குள் செல்கின்றார்.  
அடுத்து  கிறிஸவ புனித நூலாம் விவிலிய மொழியாக்கத்திற்குள் நுழைகின்றார். அன்னையர் இருவர் என்ற பகுதியில் யேசுவின் அன்னை மற்றும் யேசுவின் தோழி மேரி மாக்தலீன் பற்றிய விளக்கம் தருகின்றார்.  இரண்டு காதலியர் என்ற தலைப்பில் பைபிளில் உள்ள சாலமன் பாடல்களை எடுத்து காட்டி லீலைகள் என முடித்துள்ளார். 

  
ஜெயமோகனுக்கு கிறிஸ்தவம் பற்றிய காழ்ப்புணர்ச்சி  புரிந்து கொள்கின்றோம். குற்றம் கண்டுபிடிக்கும் நோக்கம் இருப்பினும், ஆய்வு மனநிலை கொண்டு  அவருடைய தேடலை உண்மையான எந்த கிறிஸ்தவனும் எதிர்மறையான பார்வை கொண்டு நோக்க தேவையில்லை. உண்மையிலே   தங்களை உண்மையான கிறிஸ்தவர்கள் என கூக்குரல் இடும்  பல கிறிஸ்தவர்கள் படிக்க வேண்டிய நூல்.   இந்திய காலச்சார சூழலில் நின்று ஒரு மாற்று மதத்தினர் நம் வழிபாட்டு வகைகள் முறைகள் பற்றி நம்மை கூர்ந்து கவனிக்கும் விதம் பற்றி அறிதல் ஒவ்வொரு கிறிஸ்தவனுக்கும் நல்லதே. இந்த புத்தகத்தை கிறிஸ்த பாதிரியார்களை உருவாக்கும் செமிநாரி போன்ற குருக்கள் கல்லூரியில் பாடநூலாகவே பரிந்துரைக்கலாம். கிறிஸ்தவத்தில் பெரும் பெயர் கொண்டு விளங்கிய சில நல்ல பாதிரியார்களை பற்றியும் விளக்கியுள்ளார். இதில் எந்த மாற்று கருத்தும் இல்லை. ஆனால் ஜெயமோகனின் நோக்கம் கிறிஸ்தவர்களை பற்றியுள்ள பார்வை இன்னும்  விசாலமாக இருக்க வேண்டியுள்ளதையும் அவர் அறிந்தால் நலம்.  


அடுத்த பகுதியில் இவர் நடுநாயமாக இருந்து கடிதங்கள் வழியாக கிறிஸ்தவத்தை பற்றிய விவாதங்களை தலைமை ஏற்று நடத்துகின்றார். கத்தோலிக்க கிறிஸ்தவ நெறிபாட்டில் பாண்டித்துவமுள்ள சிறில் அலெக்ஸ், கிறிஸ்தவத்தை வெறுக்கும் ஜடாயு, அரவிந்தன் நீலகண்டன் போன்றோரின் உரையாடல்களை பதிந்துள்ளார். கிறிஸ்தவம் பெண்ணை அடிமைப்படுத்துகின்றதா, கிறிஸ்தவம் தங்கள் வழிபாடுகளில் ஹிந்து தர்மம் பின்பற்றும் கடவுள்களின் பெயரை பயண்படுத்துவது, மற்றும்  இந்திய கலாச்சாரத்துடன் இணைந்து நடத்தப்படும் பல சடங்குகளை தங்கள் மதத்துடன் இணைப்பதை பற்றி ஜெயமோகனுக்கு விமர்சனம் இல்லை என்றாலும் நீலகண்டன் வழியாக எதிர்ப்பு கருத்தையும் பதிந்துள்ளார். (உதாரணம் பெரிய நாயகி போன்ற பெயர்கள் பயண்படுத்துவது ஹிந்து திருநாட்களுக்கு கிறிஸ்தவ பெயர்களுடன் கொண்டாடுவது)

கிறிஸ்தவ மதம் உருவாகியது ஜூத மதத்தில் இருந்து தான். கிறிஸ்து ஒரு ஜூதர். அவர் சார்ந்த மதத்தையை பின் பற்றி வாழ்ந்து வந்துள்ளார். மதத்தின் பெயரால் மக்களை ஒடுக்குவதை தடுத்துக்கும் நோக்குடன் மதம் என்பது என்ன? மதகுருக்கள் மக்களிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும்?  போன்ற நெறிமுறைகளை வகுத்தார்.  காலாகாலமாக தங்கள் பின் பற்றி வரும் வழக்கங்களை தடுக்க இவன் யார்? என கூறி மதகுருக்கள் அன்றைய இஸ்ரேயல் நாட்டு ஆட்சியாளர்களான ரோம அரசு அதிகாரிகளிடம் முறையிட்டு மதத்தை துஷித்தார் என்ற பெயரில் தண்டனை கொடுக்கின்றனர்.  

கிறிஸ்து கூறிய நெறிமுறைகளை பின் பற்றிய குழுவினர் கிறிஸ்து மதமாக உருவாக்கினர் பிற்கால்லத்தில். கிறிஸ்துவின் நோக்கம் புது மதம் நிறுவதாக இருக்கவில்லை தான் பின் பற்றிய மதத்திலுள்ள ஓட்டைகளை அடைப்பது திருத்துவதாக இருந்தது. அவர் சீடர்கள் பிற்காலம் கிறிஸ்தவ நெறிகளை யூதர்களிடம் மட்டும் போதிக்க வேண்டுமா அல்லது உலக மக்களிடம் போதுக்க வேண்டுமா என்ற விவாத முடிவில் புனித பவுலின் விருப்பப்படி உலக மக்களுக்கு போதிக்கலாம் என முடிவு எடுக்கின்றனர். 



இந்தியாவில் கிறிஸ்தவம் என்பது யேசு நாதரின் நேரடி சீடர் தாமஸ் கொண்டு வந்தது என்றால் கிறிஸ்து இறந்த சில வருடங்களுக்கு உள்ளாக்கவே இந்தியாவிலும் பரவியிருக்க வேண்டும். தாமஸ் இந்தியாவில் வந்திறங்குவது  கேரளாவை சேர்ந்த  கொடுங்கல்லூர் என்ற இடத்தில் தான். தாமஸ் கிறுஸ்துவை பற்றி கூற வந்தது அந்நேரம் இங்கு குடியிருந்த யூதர்களுக்கு மட்டுமா அல்லது இந்தியர்களுக்கா என்ற கேள்வி எழுகின்றது. தோமஸ் இந்தியா வரவே இல்லை இது ஒரு கட்டுக்கதை பிராமணியர்களை அவமதிக்க தொடுத்த கதை என்ற நிலையில் தான் ஜெயமோகன் குறிப்பிடுகின்றார். ஆனால் இந்தியாவிற்கும் எகிப்த் ரோம தேசங்களுடன் கிறிஸ்துவிற்கு முன் சாலமன் காலம் துவங்கிய வியாபார உறவு இருந்துள்ளது என்பது வரலாறு.  ஆகையால் கிறிஸ்தவ நெறி வியாபாரிகள் மூலமாகக்கூட கிறிஸ்தவம் வந்திருக்கலாம்.

அடுத்து இந்தியாவிற்கு வியாபாரம் செய்ய வந்த போத்திஸ்காரர்கள் கொண்டு வந்த கிறிஸ்தவம். முதல் கப்பலிலில் வியாபாரிகள் வந்தனர்  அடுத்த கப்பல்களில் மிஷனறிகள் வந்து சேர்ந்தனர் என்ற வரலாற்றையும் கூறுகின்றார். அப்படி 15 ஆம் நூற்றாண்டில் வந்த தூய சவேரியார் பிரான்ஸிஸ் சேவியர்  தமிழகம் வந்தது, அவருடைய மிஷினரி இயக்கம் "யேசுவின் சபை' நிறுவிய கல்லூரிகள் உலகப்புகழ் பெற்று விளங்குவது நாம் அறிந்ததே.  

இவர்களை தொடர்ந்து பிரான்சிக்கன் அயர்லாந்தில் இருந்து டச்சு வியாபாரிகள் அவர்களை தொடர்ந்து வந்த  சலேஷின் மிஷினறிகள் போன்றவர்கள் இந்திய சமூகத்திற்கு அறிமுகம் ஆனது.  

ஆங்கிலேய ஆதிக்கத்திற்கு பின் அறிமுகம் ஆன புரட்டஸ்டன்று மிஷினறிகள் வருகை தந்தனர். அவர்களும் பல கல்வி மற்றும் மருத்துவமனைகள் நிறுவினர் என்பது வரலாற்று உண்மை. 

ஆங்கிலேய அரசின் வெளியேற்றம் பின்பு அமெரிக்கா சார்ந்த மதவாதிகள் வர தொடங்கினர் அவர்கள் தான் ஜெயமோகன் போன்றோர் தீவிரமாக எதிர்க்கும் பந்தகோஸ்தை, அசம்பிளி சபையினர். ஜெயமோகனுக்கு பிடித்த கிறிஸ்தவர்கள் கேரளாவில் 3 ஆம் நூற்றாண்டில் குடியேறிய சிரியன் கிறிஸ்தவர்கள்  தான். அவர்கள் மதம் மாற்றம் செய்யவில்லை என்பதே அதன் காரணம். சிரியன் கிறிஸ்தவர்கள் கொள்கையே கலப்பற்று இந்த கலாச்சார மக்களுடன் இருப்பதே. அவர்கள் சிரியா போன்ற ஆசிய நாடுகளில் இருந்து போர் காரணமாக இந்தியாவில் குடியேறியவர்கள். கேரளா கத்தோலிக்கா கிறிஸ்தவர்களில் இவர்கள் சிரியன் கத்தோலிக்கர், மலங்கரை கத்தோலிக்கர் என்ற இரு பிரிவான தனித்தே நிலைகொள்கின்றனர். இந்திய வம்சவளியில் இருந்து கிறிஸ்தவத்திற்குள் நுழைந்த லாட்டின் கத்தோலிக்கர் மூன்றாவது பிரிவாகத்தான் அங்கு நடத்தப்படுகின்றனர். தமிழக கிறிஸ்தவர்கள் ஜாதியமாக நான் பெரியவன் அவன் பெரியவன் என்று காட்டி கொள்வது போல் கேரளா கலாச்சார சூழலில் வெளிநாட்டில் இருந்து தஞ்சம் பிழைக்க வந்த சிரியன், க்னாயான் கத்தோலிக்கர் இந்திய கிறிஸ்தவர்களைவிட ஒரு நிலை மேல் நிற்பதாகவே நினைத்து கொள்வர்கள்.  அதனால் இந்திய இனத்தோடு திருமண உறவுகளில் கலர விரும்புவது இல்லை. இவர்களை தான் ஜெயமோகன் இந்திய கலாச்சாரத்திற்கு இந்திய மக்களுக்கு தொண்டு ஆற்றியவர்கள் என புகழ்கின்றார். 

மதம் மாற்றம் என்ற நிலையில் ஜெயமோகன் கிறிஸ்தவர்களை வெறுக்கின்றார். அவரால் பந்தகோஸ்தை  கிறிஸ்தவர்களை    சகித்து கொள்ளவே இயலவில்லை.  கிறிஸ்தவ மத மாற்றம் என்பது என் பார்வையில் ஒரு பொய் குற்றசாட்டாகத்தான் இருக்க முடியும். ஆறு நூற்றாண்டுகளாக அன்னிய படை எடுப்பில் இருந்த இந்தியாவில் இந்தியா சுதந்திரம் அடைந்த போது 2.3% மக்கள் மட்டுமே கிறிஸ்தவர்களாக மதம் மாறி இருந்தனர்.  தற்போது 2.6% மக்கள் மட்டுமே கிறிஸ்தவர்களாக உள்ளனர். சில தகவல்கள் .3.3% கிறிஸ்தவ மக்கள் இருக்க கூடும் என்கின்றது. சரியாக அவதானித்தால் ஜாதியமாக புரக்கணிக்கப்பட்ட விளிம்பு நிலை மக்கள் குடியிருக்கும் பகுதியில் தான் கிறிஸ்தவர்கள் பெரிதும் உருவாகியுள்ளது. இந்தியாவில் கண்டு கொள்ளாமல் விட்டு விடப்பட்ட நாகலான்ற், அசாம் மக்கள் மற்றும் தென் தமிழகத்தில் ஜாதி- இன வெறியர்களால்     மிகவும் தாக்கப்பட்ட  இன மக்கள்.  மதமாற்றத்திற்கு உள்ளாகியுள்ளனர்.

ஜெயமோகன் மதமாற்றம் என்ற கொள்கையை வைத்து கிறிஸ்தவத்தை தாக்க முற்பட்டுள்ளார். அதன் காரணமான அவர் சரியான காரணங்களை முன்நிறுத்தவில்லை. அதற்கு பதிலாக சிலர் வண்மத்துடன் எழுதியுள்ள கடிதங்களை மேற்கோள் காட்டியுள்ளார். கிறிஸ்தவத்தை ஆழமாக்க விமர்சிக்க துணியும் ஜெயமோகன் போற்ற அறிவாற்றலுள்ள எழுத்தாளர்கள் இன்னும் ஆக்கபூர்வமான கருத்துக்களையும் கண்டறிந்து பதிய வேண்டும்.

வரலாற்று ரீதியாக மக்கள் ஒடுக்கப்பட்டதும் அதன் தாக்கத்தில் இருந்து தப்பிக்க மதத்தை ஒரு வழியாக கண்ட சூழலை ஜெயமோகன் கண்டு கொள்ளவே இல்லை. தென் தமிழகத்தில்  நாடார் பெண்களுக்கு மார் சட்டை அணியும் உரிமை இருந்திருக்கவில்லை, கல்வி கற்க உரிமையில்லை வேலை செய்ய உரிமை இல்லை என்ற சூழலில் குறிஸ்தவத்தை தழுவிய பல பெண்கள் 18 ஆம் நூண்டில் இருந்தே கல்லூரியில் சேர்ந்து  படிக்க இயன்றுள்ளது. இன்றும் மத மாற்றம் என்பது அரசால் மக்கள் புரக்கணிக்கப்படும் போது ஒரு அணியில் திரண்டு சில நல திட்டங்களை பெறும் உபாதியாக நிலை கொள்கின்றது. ஆனால் இன்றைய அரசியல்வாதிகள் எழுத்தாளர்கள் மக்களுக்கு கிடைக்க வேண்டிய நீதியை பற்றி பேசாது மதம் மாற்றம் அரசியல் நீட்சியாக  சித்தரிகரிப்பது வேடிக்கை தான்.


கிறிஸ்தவர்களின் ஆண் பெண் சமமில்லை என்பதை ஒரு மதத்தின் வீட்சியாக காணும் ஜெயமோகன் சதி போன்ற நிகழ்வுகள் சமூக பழக்கத்தின் பகுதியாக்கவே காண்கின்றார். அங்கு மதத்தை சாட முன் வரவில்லை. கிறிஸ்தவ மக்கள் இன்று எதிர் கொள்ளும் பெரும் பிரச்சினைகளை பற்றி அவர் ஆராய முன் வரவில்லை.  இன்று வேலை வாய்ப்புகளில் கிறிஸ்தவர்கள் தடுக்கப்படுவதை பற்றியோ சம உரிமைகளை பற்றியோ கூறாத ஜெய மோகன் அமெரிக்கா, ஆங்கிலேயர் என வரலாற்று நிகழ்ச்சிகளை தொகுத்து மதமாற்றம் தடுக்கப்பட வேண்டும் என கூக்குரல் இட்டுள்ளார். இன்றைய தினம் தரவுகளை எடுத்து பார்த்தால் ஜாதிய  பிரச்சினையால் இன்றும் பாதிக்கப்படுவது வறுமையின் பிடியில் நெருங்கவது இந்திய குடிகளில்  ஹிந்துக்களே என்று விளங்கும். இந்து அறநிலையத்தில் கட்டி கிடைக்கும் பல கோடி சொத்துக்கள் சாதாரண ஒவ்வொரு ஹிந்து குடிமகனுக்கும் சேர்கின்றதா என்ற கேள்வியை ஜெயமோகன் கேட்க வில்லை.

கிறிஸ்தவ நிறுவனகளுக்கு பாரிய பணம் வெளிநாடுகளில் இருந்து கிடைக்கின்றது என்று கூறும் இவர் பொது மக்களிடம் இருந்து பெறப்படும் பணத்தை பற்றி குறிப்பிடவில்லை. ஒவ்வொரு கிறிஸ்தவனும் தங்கள் வருமானத்தில் 10% ஆலயங்களுக்கு வழங்குவது எழுதப்படாத சட்டமாக பல சபைகளில் உள்ளது. அல்லது மக்களில் இருந்து தந்திரபூர்வமாக பெறுகின்றனர் அல்லது மக்கள் விரும்பி மனம் உகந்து கொடுக்கின்றனர். தமிழகத்தில் பிரசித்தமாக இயங்கும் பல கிறிஸ்தவ நிறுவனஙகள் கிறிஸ்தவ மக்கள் பணத்தில் தான் இயங்குகின்றது. பின்பு இந்த நிறுவனங்கள் ஆண்வரின் அருளால் கிடைத்தது என்று கூறி கொண்டாலும் அடிப்படையில் சாதாரண கிறிஸ்தவ மக்கள் பணம் தான். அமெரிக்கா உருவாக்கும் கூலிகள் என்ற பெயரில் பந்தகோஸ்து சபைகளை விவரிக்கும் ஜெயமோகனால் இது எப்படி தெரியாது போனது என்று தெரியவில்லை.

வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போல் மிகவும் நுட்பமாக எழுதியுள்ளார் இப்புத்தகத்தை. பல விடையங்கள் உண்மை தான் என்ற போதிலும் அதன் நோக்கம் மனித நேயம் சார்ந்ததாக இருக்க வேண்டும். ஒரு மதத்தை ஒடுக்க நினைக்கும் சில கைக்கூலிகளுக்கு ஆயுதமாக எழுத்தாளர்கள் மாறக்கூடாது. உண்மையை உறக்க நல்ல மனதுடன் கூறினால் அது இந்துவாக இருந்தாலும் கிறிஸ்தவ சபைகள் ஏற்று கொண்டு தான் ஆக வேண்டும். இந்தியா என்பது பல இனங்கள் உள்ளடங்கிய ஒரு பெரும் துணை கண்டம் என்பதால் மதத்தையும் மீறி மனிதத்தை காக்கும் கடமை எழுத்தாளர்களுக்கு உண்டு. ஆதாம் ஏவாள் கதை அல்போன்ஸாம்மாள் கதை எல்லாம் சிறுபிள்ளத்தனமானது. அதைவிட சிந்திக்க உரையாட விவாதிக்க பல முக்கிய விடையங்கள் பிரச்சினைகள் உண்டு. ஞானி கூறியிருப்பது போல் இந்திய அதிகாரம் மக்கள் நலனை சார்ந்து நீங்கும் போது மக்கள் மதத்திற்கு பெரிய இடம் கொடுக்க போவதில்லை.  இந்திய மக்கள்  ஆத்மீக நோக்கத்துடன் கடவுளை தேட ஆரம்பிக்க வேண்டும் என்றால் இந்திய தேசம் சமத்துவத்தை நோக்கி நெடு தூரம் போக வேண்டியுள்ளது. ஐரோப்பிய தேசத்திலிருந்து  வரும் வெள்ளக்காரர்கள் பல ஆசிரமங்களில் சேரும் போதுக் கொள்ளும் பெருமை இந்திய தேசத்திலிருப்பவர்கள் வெளிநாட்டு மதங்களை தேடி போகும் போதும் அதே பெருமையுடன் நோக்கும் சமதர்ம மன தர்சனம் ஜெயமோகன் போன்றவர்களுக்கு கிடைக்க வேண்டும் என்று தான் கூற இயலும்.

இந்தியாவில் மிஷினரிகளுக்கு என்று ஒரு இடம் இருந்தது இப்போதும் உள்ளது, ஆனால் வெள்ளக்காரர்களால் தொண்டு நோக்குடன் உருவாக்கிய பல சேவை நிறுவனகள் பூட்டப்பட்டு அதை வணிக மயமாக  மாற்றும் மன நிலை தான் இந்திய மண்ணில் இருந்து கிறிஸ்தவத்தை வெறுக்க செய்கின்றது என்ற புரிதலும் தேவை. கிறிஸ்தவ ஆலயத்தை வியாபார தளமாக மாற்றுவதை கிறிஸ்துவும் வெறுத்தார். இன்று ஆலயங்களின் பெயரில் பல  வணிக நிறுவங்கள் உருவாகுவதை கண்டிக்க வேண்டியுள்ளது.  இன்று மக்கள் நலம் சார்ந்த தேவைகள் பெருகி கொண்டு தான் வருகின்றது. உபதேசத்தை குறைத்து குறுகிய மன எண்ணங்களில் இருந்து விடுபட்டு மக்கள் சேவை மகேசன் சேவை என்ற நிலையில் கிறிஸ்தவர்கள் உலகின் உப்பாக ஒளியாக மாற வேண்டியது காலத்தின் கட்டாயம்.  யேசு நாதர் விரும்பிய நிலையில் வாழ்கின்றோமா என்று  ஒவ்வொரு கிறிஸ்தவனும் உண்மையாக சுத்த மனதோடு கேட்க வேண்டிய தேவையும் அதிகரித்து வருகின்றது என்பதையும் மறுக்க இயலவில்லை.

சமீபத்தில் என் சொந்த ஊர் சென்ற போது, எங்கள் பக்கத்து வீட்டில் குடியிருந்தவர்கள் புதிதாக குடியேறிய வீட்டிற்கு நட்பின் நிமித்தம் சென்றிருந்தோம். அவர்கள்  ஹிந்து மதத்தை பின் பற்றுகிறவர்கள். கிறிஸ்தவ ஆலயத்திற்கு நட்பின் பெயரில் கூட வர விரும்பாத ஹிந்து சகோதரர்கள். அவர்கள் பிள்ளைகளும் ஹிந்துக்களாக தான் உள்ளார்கள். அவர்கள் வீட்டில் எந்த கிறிஸ்தவ படங்களும் இல்லை. இருப்பினும் கிறிஸ்தவ நிகழ்ச்சியை தொலைகாட்சி ஊடாக கண்டு கொண்டிருந்தனர்.  பைபிள் வாசிக்கும் கிறிஸ்தவர்கள் அல்லாதோர் பலர் உண்டு.  மதத்தை அடையாளமாக பாவிப்பவர்கள், வாழ்க்கையாக பாவிப்பவர்கள், வரலாறாக, கதையாக இலக்கியமாக, விமர்சனமாக பார்ப்பவர்கள் என பலர் உள்ளனர். இதையும் தாண்டி ஒரு எழுத்து, தொழில் என நோக்குவர்களும் உண்டு. நீர் நிலையில் நம் உருவம் காண்பது போல் நம் விருப்பம் நம் நிலை சார்ந்து மதங்களை பார்க்கின்றோம்.   மதம் என்பது மனிதனை மதம் பிடிப்பவர்களாக மாற்றாது மனிதனை மனிதனாக உயர்த்தினால் மட்டுமே அது உண்மையான மதமாகும். யேசு கிறிஸ்து மட்டுமே உண்மையான கடவுள் என்று கூறும் கிறிஸ்தவர்களும் இரண்டாயிரம் வருடம் முன்பும் மனிதர்கள் வாழ்ந்திருந்தனர் அவர்களும் ஏதோ தங்கள் வாழ்ந்த இடங்களிலுள்ள மதங்களை பின் பற்றியுள்ளனர்  அவர்களுக்கும் கடவுள் இருந்துள்ளனர் என்ற புரிதலும் மிகவும் அவசியம். 

12 May 2015

கேரளா- மலையக தமிழர்கள் வரலாறு!

12 ஆம் நூற்றாண்டில் ஓர் இரவு, பாண்டிய மன்னர்  மாணவிக்ரமா தன் மக்ககளும்  சோள மன்னனை துரத்தி அடித்து விரட்டிய மகிழ்ச்சியில் விருந்துண்டு அயந்து தூங்கி கொண்டிருக்கின்றனர்.   சோள மன்னரிடம் பெரும் தொகையை லஞ்சமாக  பெற்ற  படை அதிகாரி விஸ்வராத நாயக்கன்,  நடு இரவில் கோட்டையின் கதவை திறந்து விடுகின்றான். கோட்டைக்குள் புகுந்த சோள படை கண்ணில் கண்ட பாண்டிய மக்களை கொன்று வீழ்ந்த்துகின்றனர்.  விழித்து கொண்ட மந்திரி தன் மன்னரையும் குடும்பத்தாரையும் ஒரு ரகசிய சுரங்கப்பாதை வழியாக  மேற்கு தொடர்ச்சி மலை ஊடாக அவருடைய தாய் வழி உறவினர்களான சேரநாட்டுக்கு தப்பித்து செல்ல உதவுகின்றார். அரசன் கொடும்- காடு மலைகள் வழியாக பயணித்து இடுக்கி அங்கமாலி(அகமலையை) வந்தடைகின்றார்.   அங்கிந்தவர் தன் குடும்பம் பரிவாரங்களுடன் கேரளாவிலுள்ள திருச்சூர் அருகிலுள்ள குன்னம்குளம் என்ற இடத்தில் ( வன்னேரியில்) தங்கி இருக்கும் போது  பாண்டிய நாட்டை சேர்ந்த கம்பம்,  உத்தம பாளையம், கூடலூரை சேர்ந்த குறும் மன்னர்கள்  தங்கள் மன்னன் சேரநாட்டில் தஞ்சம் புரிந்ததை அறிந்து  பாண்டிய நாட்டிற்கு வருகை தரக் கூறுகின்றனர்.  மனம் உடைந்த நிலையில் இருந்த மன்னன் அங்கு இறந்து போகின்றார்.                                                                              


 மன்னர் பாண்டிய நாட்டிற்கு வர மறுத்து விட்டாலும் விருந்தினர் நாட்டில் இருக்க மனம் இல்லாத  மூத்த மகனான குலசேகரன் பாண்டிய நாட்டின் பகுதியான கூடலூற்றில் வசித்து வருகின்றார்அந்நேரம் சேர நாட்டு மன்னர் பூஞ்சார் (பூனையார்) பகுதியை விற்க போவதாக தகவல் கிடைக்கின்றது.  பூஞ்சார் என்பது கூடலூருக்கு எதிரையுள்ள  நிலப்பரப்பான  கம்பம்உத்தமபாளையம் உள்ளிட்ட  தமிழக பகுதிகள்  தற்போது கேரள மாநிலத்தின் இடுக்கி மாவட்டத்தின் பெரும்பகுதியான தேவிகுளம்பீர்மேடு மற்றும் உடும்பன்சோலை வட்டங்களை உள்ளடக்கிய பகுதிகள் ஆகும்.  தன்னிடமிருந்த பொன் மற்றும் மதிப்புமிக்க கற்களை விலையாக கொடுத்து பூஞ்சார் பகுதியை வாங்குகின்றார்கூடலூருக்கு அருகில் உள்ள குமுளி சேரர்களின் தலைநகரமாக சங்க காலத்தில்  இருந்துள்ளது.அது குழுமூர் என்று  அழைக்கப்பட்டது . 



1756-ம் ஆண்டு     வேணாடு   அரசன்   பல சிறு அரசுகளை ஒன்று சேர்த்து திருவிதாங்கூர் அரசினை  உருவாக்குகிறான்அதன்பிறகு 1866ம் ஆண்டு  திருவிதாங்கூர் அரசு 2000 மூட்டைகள் நெல்லினை தொடர்ந்து நிரந்தரமாக ஆண்டுதோறும் பூஞ்சார் அரசுக்கு  கொடுக்க வேண்டும் என்ற ஒப்பந்தத்தின்படி  தனது ஆளுகைக்குட் பட்டிருந்த ஏலமலைகள்    என்று அறியப்பட்ட பகுதியை திருவிதாங்கூர் அரசிற்கு கொடுத்துவிட்டது..இக்காலத்தில்தான்திருவிதாங்கூர் அரசில் வழக்குரைஞராக பணியாற்றிய ஜான் டேனியல் மன்றோ என்பவன் பூஞ்சார் நிலப்பரப்பினை பார்வையிட்டுஅவை தேயிலைதோட்டங்கள் அமைக்க வாய்ப்பான இடம் என்று தெரிந்து கொண்டு பூஞ்சார் அரசுடன்   1877ல்ஒரு ஒப்பந்தம் செய்து  ரூ. 5000மறுபயனாக கொடுத்தும் ஆண்டு குத்தகைத் தொகை ரூ. 3000 கொடுக்க சம்மதித்தும் அஞ்சுநாடு என்று அறியப்பட்ட பகுதியை  குத்தகைக்குப் பெறுகிறான்.   ஆங்கிலேய அதிகாரி குத்தகைக்கு பெற்ற நிலத்தில் தோட்டங்களை அமைப்பதற்கு பூஞ்சார் அரசுக்கு கட்டுப்பட்ட அஞ்சுநாட்டின் பழங்குடி தமிழ் குறுநில மன்னன் கண்ணன்தேவர்  உதவிகின்றார்.  தங்களுக்கு தோட்டங்கள் அமைக்க உதவிய அந்த குறுநில மன்னனை நினைவு கூர்ந்து அவனது பெயரினை தங்களது நிறுவனத்திற்கு சூட்டியுள்ளனர்.மேற்சொன்ன நிலத்தினை ஜேம்ஸ் பின்லே  கம்பெனி லிட் என்ற நிறுவனம் விலைக்கு வாங்குகிறது  1983 முதல் டாடா நிறுவனம் பின்லே நிறுவனத்தின் பங்குகளை முழுமையாக வாங்கி டாடா தேயிலை நிறுவனம் என்ற பெயரில் அத்தேயிலைத் தோட்டங்களை நடத்தி வருகிறது
    இங்கு பளியர்புலையர்மன்னன்முத்துவான்ஊராளிமலை அரையன்,                  உள்ளாடன் முத்துவான்(பூஞ்சார் மன்னருடன் மதுரையை விட்டு வெளியேறும் போது மீனாட்சியம்மன்சுந்தரேசுவரர் சிலைகளை தூக்கி  சுமந்தவர்கள்)என்ற பழங்குடி மக்கள் தொன்மை காலம் முதல் வாழ்ந்து வருகின்றனர் தங்கள் பாண்டியர் வழி வந்தவர்கள் என்று கூறிக்கொள்ளும் மன்னர்   என்ற பழங்குடியினர்இன்றும் தங்களுக்குள் ஒரு மன்னரை தேர்ந்தெடுத்து வாழ்ந்து வருகின்றனர்   


அடுத்துகம்பம்உத்தமபாளையம் மற்றும் போடி வட்டங்கள் மற்றும் அவற்றைச்சுற்றியுள்ள பகுதிகளிலிருந்து சென்று அப்பகுதியில் குடியேற்றங்கள்   அமைத்து வாழ்ந்து வரும் தமிழர்கள் மற்றொரு பிரிவினர்  உண்டு.  அவர்கள்தான் அங்கு ஏலம்மிளகு போன்ற பயிர்களை சாகுபடி   செய்வதற்கான தோட்டங்களை உருவாக்கியவர்கள்.























அடுத்தபிரிவினர்  ஆங்கிலேய தேயிலை நிறுவனங்கள் தேயிலைத் தோட்டங்களைஅமைப்பதற்குதிருநெல்வேலிசெங்கல்பட்டு மாவட்டங்களிலிருந்து அழைத்துச்செல்லப்பட்ட தேயிலைத் தோட்டத் தமிழர்கள் ஆவர். இவர்களுடன் வியாபார காரணங்கள் மற்றும் தேயிலை தோட்ட அதிகாரிகள் கட்டிட பணியாளர்கள் என்ற தமிழக மக்களும் சேர்ந்துள்ளனர்.

திருவிதாங்கூர் அரசின் ஆளுகைக்குட்பட்டிருந்த தமிழர் பெரும்பான்மையினராக வாழ்ந்த 9 வட்டங்களில் தோவாலைஅகஸ்திஸ்வரம்கல்குளம்விளவங்கோடுநெய்யாற்றின்கரை தென்பகுதிநெடுவங்காடு கீழ்பகுதிசெங்கோட்டைஉள்ளிட்ட வட்டங்களுடன் பூஞ்சார் அரசின் பகுதியாக இருந்த தேவிகுளம்பீர்மேடு ஆகிய இரு வட்டங்களும் அடங்கும்.

சுதந்திர இந்தியா மொழிவாரியாக மாநில எல்லைகளை பிரித்த போதுஅங்கு வசித்த தேயிலைத் தோட்ட தமிழர் தொழிலாளர்களையும் அவர்களது குடும்பத்தினர்களையும் வந்துசெல்லும் மக்கள் என்று கூறி அமைக்கப்படவிருந்த கேரள மாநிலத்தில் தொழில் வளர்ச்சி பெற்ற பகுதிகள் எதுவும் இருக்கவில்லை என்பதால் அந்த அரசின் வருமானத்திற்கு பெருமளவில் தேயிலை உற்பத்தி செய்யும் தேயிலைத் தோட்டங்கள் நிரம்பிய பகுதிகளாக தேவிகுளம்- பீர்மேடு பகுதி இருந்ததால்அவை கேரள அரசிற்கு வருமானம் அளிப்பதற்கு தேவைப்படுவதாக கருதி கேராளாவுடன் இணைத்தது. தற்போதைய அரசியல் காரணங்களால் வஞ்சிக்கப்பட்டு பாதிப்புக்குள்ளாகி இருக்கும்  தமிழர்களும் ஆவர் இவர். 
http://keetru.com/index.php/component/content/article?id=18048..http://en.wikipedia.org/wiki/Poonjar#cite_note-2