25 May 2015

சிலுவையின் பெயரால்-கிறிஸ்தவம் குறித்து

ஜெயமோகனின் "சிலுவையின் பெயரால்" சமீபத்தில் வாசிக்க கிடைத்த புத்தகம் புத்தகம்.

ஜோசஃப் புலிக்குந்நெல் என்ற கிறிஸ்தவ பாதிரியாருக்கு சமர்ப்பித்து வெளிவந்துள்ள புத்தகம் இது. கிறிஸ்தவம் பற்றி இப்படியாக ஒரு புத்தகம் எழுதும் போது தான் கிறிஸ்தவை துஷிப்பவனாக எடுத்து கொள்ளக்கூடாது என்றும் கிறிஸ்துவை தல்ஸ்தோய், மற்றும் சைதன்யதி, காந்தி மூலம் கண்டுள்ளேன்  என்றும் முன்னுரையிலே சொல்லி விட்டார்.  தான் கண்ட பெரும்வாரியான கிறிஸ்தவர்களை லைகீக காரியங்களுக்காக கிறிஸ்துவை தேடுபவராகவும், தேவை சார்ந்து கடவுளை தேடுபவர்களாகவும் மதம் மாற்ற முயல்பவராக  விமர்சித்து  கொண்டு புத்தகத்திற்குள் கடக்கின்றார். 

இப்புத்தகத்தின் உள்ளடக்கம் நாலு பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது. முதல் பகுதியில் பிரமாண்டமான ஆலயங்கள் பற்றிய அவருடைய  கேள்விகள் எழுகின்றது. எளிமையின் உருவாம் மாட்டு கொட்டகையில் பிறந்த யேசு பிரானுக்கு பிரமாண்ட கோயில்களா என்பது இவரால் ஏற்று கொள்ள இயலவில்லை. 

இந்தியாவின் முதல் புனித பட்டம் பெற்ற துறவி அல்போன்சா அவர்களை மேல்கோள் காட்டி மெதுவாக கத்தோலிக்கர்களின் புனிதர்கள் உருவாக்கத்தை உருவகப்படுத்துவதை அற்புதங்களை பற்றிய நம்பிக்கைக்குள் செல்கின்றார்.  
அடுத்து  கிறிஸவ புனித நூலாம் விவிலிய மொழியாக்கத்திற்குள் நுழைகின்றார். அன்னையர் இருவர் என்ற பகுதியில் யேசுவின் அன்னை மற்றும் யேசுவின் தோழி மேரி மாக்தலீன் பற்றிய விளக்கம் தருகின்றார்.  இரண்டு காதலியர் என்ற தலைப்பில் பைபிளில் உள்ள சாலமன் பாடல்களை எடுத்து காட்டி லீலைகள் என முடித்துள்ளார். 

  
ஜெயமோகனுக்கு கிறிஸ்தவம் பற்றிய காழ்ப்புணர்ச்சி  புரிந்து கொள்கின்றோம். குற்றம் கண்டுபிடிக்கும் நோக்கம் இருப்பினும், ஆய்வு மனநிலை கொண்டு  அவருடைய தேடலை உண்மையான எந்த கிறிஸ்தவனும் எதிர்மறையான பார்வை கொண்டு நோக்க தேவையில்லை. உண்மையிலே   தங்களை உண்மையான கிறிஸ்தவர்கள் என கூக்குரல் இடும்  பல கிறிஸ்தவர்கள் படிக்க வேண்டிய நூல்.   இந்திய காலச்சார சூழலில் நின்று ஒரு மாற்று மதத்தினர் நம் வழிபாட்டு வகைகள் முறைகள் பற்றி நம்மை கூர்ந்து கவனிக்கும் விதம் பற்றி அறிதல் ஒவ்வொரு கிறிஸ்தவனுக்கும் நல்லதே. இந்த புத்தகத்தை கிறிஸ்த பாதிரியார்களை உருவாக்கும் செமிநாரி போன்ற குருக்கள் கல்லூரியில் பாடநூலாகவே பரிந்துரைக்கலாம். கிறிஸ்தவத்தில் பெரும் பெயர் கொண்டு விளங்கிய சில நல்ல பாதிரியார்களை பற்றியும் விளக்கியுள்ளார். இதில் எந்த மாற்று கருத்தும் இல்லை. ஆனால் ஜெயமோகனின் நோக்கம் கிறிஸ்தவர்களை பற்றியுள்ள பார்வை இன்னும்  விசாலமாக இருக்க வேண்டியுள்ளதையும் அவர் அறிந்தால் நலம்.  


அடுத்த பகுதியில் இவர் நடுநாயமாக இருந்து கடிதங்கள் வழியாக கிறிஸ்தவத்தை பற்றிய விவாதங்களை தலைமை ஏற்று நடத்துகின்றார். கத்தோலிக்க கிறிஸ்தவ நெறிபாட்டில் பாண்டித்துவமுள்ள சிறில் அலெக்ஸ், கிறிஸ்தவத்தை வெறுக்கும் ஜடாயு, அரவிந்தன் நீலகண்டன் போன்றோரின் உரையாடல்களை பதிந்துள்ளார். கிறிஸ்தவம் பெண்ணை அடிமைப்படுத்துகின்றதா, கிறிஸ்தவம் தங்கள் வழிபாடுகளில் ஹிந்து தர்மம் பின்பற்றும் கடவுள்களின் பெயரை பயண்படுத்துவது, மற்றும்  இந்திய கலாச்சாரத்துடன் இணைந்து நடத்தப்படும் பல சடங்குகளை தங்கள் மதத்துடன் இணைப்பதை பற்றி ஜெயமோகனுக்கு விமர்சனம் இல்லை என்றாலும் நீலகண்டன் வழியாக எதிர்ப்பு கருத்தையும் பதிந்துள்ளார். (உதாரணம் பெரிய நாயகி போன்ற பெயர்கள் பயண்படுத்துவது ஹிந்து திருநாட்களுக்கு கிறிஸ்தவ பெயர்களுடன் கொண்டாடுவது)

கிறிஸ்தவ மதம் உருவாகியது ஜூத மதத்தில் இருந்து தான். கிறிஸ்து ஒரு ஜூதர். அவர் சார்ந்த மதத்தையை பின் பற்றி வாழ்ந்து வந்துள்ளார். மதத்தின் பெயரால் மக்களை ஒடுக்குவதை தடுத்துக்கும் நோக்குடன் மதம் என்பது என்ன? மதகுருக்கள் மக்களிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும்?  போன்ற நெறிமுறைகளை வகுத்தார்.  காலாகாலமாக தங்கள் பின் பற்றி வரும் வழக்கங்களை தடுக்க இவன் யார்? என கூறி மதகுருக்கள் அன்றைய இஸ்ரேயல் நாட்டு ஆட்சியாளர்களான ரோம அரசு அதிகாரிகளிடம் முறையிட்டு மதத்தை துஷித்தார் என்ற பெயரில் தண்டனை கொடுக்கின்றனர்.  

கிறிஸ்து கூறிய நெறிமுறைகளை பின் பற்றிய குழுவினர் கிறிஸ்து மதமாக உருவாக்கினர் பிற்கால்லத்தில். கிறிஸ்துவின் நோக்கம் புது மதம் நிறுவதாக இருக்கவில்லை தான் பின் பற்றிய மதத்திலுள்ள ஓட்டைகளை அடைப்பது திருத்துவதாக இருந்தது. அவர் சீடர்கள் பிற்காலம் கிறிஸ்தவ நெறிகளை யூதர்களிடம் மட்டும் போதிக்க வேண்டுமா அல்லது உலக மக்களிடம் போதுக்க வேண்டுமா என்ற விவாத முடிவில் புனித பவுலின் விருப்பப்படி உலக மக்களுக்கு போதிக்கலாம் என முடிவு எடுக்கின்றனர். 



இந்தியாவில் கிறிஸ்தவம் என்பது யேசு நாதரின் நேரடி சீடர் தாமஸ் கொண்டு வந்தது என்றால் கிறிஸ்து இறந்த சில வருடங்களுக்கு உள்ளாக்கவே இந்தியாவிலும் பரவியிருக்க வேண்டும். தாமஸ் இந்தியாவில் வந்திறங்குவது  கேரளாவை சேர்ந்த  கொடுங்கல்லூர் என்ற இடத்தில் தான். தாமஸ் கிறுஸ்துவை பற்றி கூற வந்தது அந்நேரம் இங்கு குடியிருந்த யூதர்களுக்கு மட்டுமா அல்லது இந்தியர்களுக்கா என்ற கேள்வி எழுகின்றது. தோமஸ் இந்தியா வரவே இல்லை இது ஒரு கட்டுக்கதை பிராமணியர்களை அவமதிக்க தொடுத்த கதை என்ற நிலையில் தான் ஜெயமோகன் குறிப்பிடுகின்றார். ஆனால் இந்தியாவிற்கும் எகிப்த் ரோம தேசங்களுடன் கிறிஸ்துவிற்கு முன் சாலமன் காலம் துவங்கிய வியாபார உறவு இருந்துள்ளது என்பது வரலாறு.  ஆகையால் கிறிஸ்தவ நெறி வியாபாரிகள் மூலமாகக்கூட கிறிஸ்தவம் வந்திருக்கலாம்.

அடுத்து இந்தியாவிற்கு வியாபாரம் செய்ய வந்த போத்திஸ்காரர்கள் கொண்டு வந்த கிறிஸ்தவம். முதல் கப்பலிலில் வியாபாரிகள் வந்தனர்  அடுத்த கப்பல்களில் மிஷனறிகள் வந்து சேர்ந்தனர் என்ற வரலாற்றையும் கூறுகின்றார். அப்படி 15 ஆம் நூற்றாண்டில் வந்த தூய சவேரியார் பிரான்ஸிஸ் சேவியர்  தமிழகம் வந்தது, அவருடைய மிஷினரி இயக்கம் "யேசுவின் சபை' நிறுவிய கல்லூரிகள் உலகப்புகழ் பெற்று விளங்குவது நாம் அறிந்ததே.  

இவர்களை தொடர்ந்து பிரான்சிக்கன் அயர்லாந்தில் இருந்து டச்சு வியாபாரிகள் அவர்களை தொடர்ந்து வந்த  சலேஷின் மிஷினறிகள் போன்றவர்கள் இந்திய சமூகத்திற்கு அறிமுகம் ஆனது.  

ஆங்கிலேய ஆதிக்கத்திற்கு பின் அறிமுகம் ஆன புரட்டஸ்டன்று மிஷினறிகள் வருகை தந்தனர். அவர்களும் பல கல்வி மற்றும் மருத்துவமனைகள் நிறுவினர் என்பது வரலாற்று உண்மை. 

ஆங்கிலேய அரசின் வெளியேற்றம் பின்பு அமெரிக்கா சார்ந்த மதவாதிகள் வர தொடங்கினர் அவர்கள் தான் ஜெயமோகன் போன்றோர் தீவிரமாக எதிர்க்கும் பந்தகோஸ்தை, அசம்பிளி சபையினர். ஜெயமோகனுக்கு பிடித்த கிறிஸ்தவர்கள் கேரளாவில் 3 ஆம் நூற்றாண்டில் குடியேறிய சிரியன் கிறிஸ்தவர்கள்  தான். அவர்கள் மதம் மாற்றம் செய்யவில்லை என்பதே அதன் காரணம். சிரியன் கிறிஸ்தவர்கள் கொள்கையே கலப்பற்று இந்த கலாச்சார மக்களுடன் இருப்பதே. அவர்கள் சிரியா போன்ற ஆசிய நாடுகளில் இருந்து போர் காரணமாக இந்தியாவில் குடியேறியவர்கள். கேரளா கத்தோலிக்கா கிறிஸ்தவர்களில் இவர்கள் சிரியன் கத்தோலிக்கர், மலங்கரை கத்தோலிக்கர் என்ற இரு பிரிவான தனித்தே நிலைகொள்கின்றனர். இந்திய வம்சவளியில் இருந்து கிறிஸ்தவத்திற்குள் நுழைந்த லாட்டின் கத்தோலிக்கர் மூன்றாவது பிரிவாகத்தான் அங்கு நடத்தப்படுகின்றனர். தமிழக கிறிஸ்தவர்கள் ஜாதியமாக நான் பெரியவன் அவன் பெரியவன் என்று காட்டி கொள்வது போல் கேரளா கலாச்சார சூழலில் வெளிநாட்டில் இருந்து தஞ்சம் பிழைக்க வந்த சிரியன், க்னாயான் கத்தோலிக்கர் இந்திய கிறிஸ்தவர்களைவிட ஒரு நிலை மேல் நிற்பதாகவே நினைத்து கொள்வர்கள்.  அதனால் இந்திய இனத்தோடு திருமண உறவுகளில் கலர விரும்புவது இல்லை. இவர்களை தான் ஜெயமோகன் இந்திய கலாச்சாரத்திற்கு இந்திய மக்களுக்கு தொண்டு ஆற்றியவர்கள் என புகழ்கின்றார். 

மதம் மாற்றம் என்ற நிலையில் ஜெயமோகன் கிறிஸ்தவர்களை வெறுக்கின்றார். அவரால் பந்தகோஸ்தை  கிறிஸ்தவர்களை    சகித்து கொள்ளவே இயலவில்லை.  கிறிஸ்தவ மத மாற்றம் என்பது என் பார்வையில் ஒரு பொய் குற்றசாட்டாகத்தான் இருக்க முடியும். ஆறு நூற்றாண்டுகளாக அன்னிய படை எடுப்பில் இருந்த இந்தியாவில் இந்தியா சுதந்திரம் அடைந்த போது 2.3% மக்கள் மட்டுமே கிறிஸ்தவர்களாக மதம் மாறி இருந்தனர்.  தற்போது 2.6% மக்கள் மட்டுமே கிறிஸ்தவர்களாக உள்ளனர். சில தகவல்கள் .3.3% கிறிஸ்தவ மக்கள் இருக்க கூடும் என்கின்றது. சரியாக அவதானித்தால் ஜாதியமாக புரக்கணிக்கப்பட்ட விளிம்பு நிலை மக்கள் குடியிருக்கும் பகுதியில் தான் கிறிஸ்தவர்கள் பெரிதும் உருவாகியுள்ளது. இந்தியாவில் கண்டு கொள்ளாமல் விட்டு விடப்பட்ட நாகலான்ற், அசாம் மக்கள் மற்றும் தென் தமிழகத்தில் ஜாதி- இன வெறியர்களால்     மிகவும் தாக்கப்பட்ட  இன மக்கள்.  மதமாற்றத்திற்கு உள்ளாகியுள்ளனர்.

ஜெயமோகன் மதமாற்றம் என்ற கொள்கையை வைத்து கிறிஸ்தவத்தை தாக்க முற்பட்டுள்ளார். அதன் காரணமான அவர் சரியான காரணங்களை முன்நிறுத்தவில்லை. அதற்கு பதிலாக சிலர் வண்மத்துடன் எழுதியுள்ள கடிதங்களை மேற்கோள் காட்டியுள்ளார். கிறிஸ்தவத்தை ஆழமாக்க விமர்சிக்க துணியும் ஜெயமோகன் போற்ற அறிவாற்றலுள்ள எழுத்தாளர்கள் இன்னும் ஆக்கபூர்வமான கருத்துக்களையும் கண்டறிந்து பதிய வேண்டும்.

வரலாற்று ரீதியாக மக்கள் ஒடுக்கப்பட்டதும் அதன் தாக்கத்தில் இருந்து தப்பிக்க மதத்தை ஒரு வழியாக கண்ட சூழலை ஜெயமோகன் கண்டு கொள்ளவே இல்லை. தென் தமிழகத்தில்  நாடார் பெண்களுக்கு மார் சட்டை அணியும் உரிமை இருந்திருக்கவில்லை, கல்வி கற்க உரிமையில்லை வேலை செய்ய உரிமை இல்லை என்ற சூழலில் குறிஸ்தவத்தை தழுவிய பல பெண்கள் 18 ஆம் நூண்டில் இருந்தே கல்லூரியில் சேர்ந்து  படிக்க இயன்றுள்ளது. இன்றும் மத மாற்றம் என்பது அரசால் மக்கள் புரக்கணிக்கப்படும் போது ஒரு அணியில் திரண்டு சில நல திட்டங்களை பெறும் உபாதியாக நிலை கொள்கின்றது. ஆனால் இன்றைய அரசியல்வாதிகள் எழுத்தாளர்கள் மக்களுக்கு கிடைக்க வேண்டிய நீதியை பற்றி பேசாது மதம் மாற்றம் அரசியல் நீட்சியாக  சித்தரிகரிப்பது வேடிக்கை தான்.


கிறிஸ்தவர்களின் ஆண் பெண் சமமில்லை என்பதை ஒரு மதத்தின் வீட்சியாக காணும் ஜெயமோகன் சதி போன்ற நிகழ்வுகள் சமூக பழக்கத்தின் பகுதியாக்கவே காண்கின்றார். அங்கு மதத்தை சாட முன் வரவில்லை. கிறிஸ்தவ மக்கள் இன்று எதிர் கொள்ளும் பெரும் பிரச்சினைகளை பற்றி அவர் ஆராய முன் வரவில்லை.  இன்று வேலை வாய்ப்புகளில் கிறிஸ்தவர்கள் தடுக்கப்படுவதை பற்றியோ சம உரிமைகளை பற்றியோ கூறாத ஜெய மோகன் அமெரிக்கா, ஆங்கிலேயர் என வரலாற்று நிகழ்ச்சிகளை தொகுத்து மதமாற்றம் தடுக்கப்பட வேண்டும் என கூக்குரல் இட்டுள்ளார். இன்றைய தினம் தரவுகளை எடுத்து பார்த்தால் ஜாதிய  பிரச்சினையால் இன்றும் பாதிக்கப்படுவது வறுமையின் பிடியில் நெருங்கவது இந்திய குடிகளில்  ஹிந்துக்களே என்று விளங்கும். இந்து அறநிலையத்தில் கட்டி கிடைக்கும் பல கோடி சொத்துக்கள் சாதாரண ஒவ்வொரு ஹிந்து குடிமகனுக்கும் சேர்கின்றதா என்ற கேள்வியை ஜெயமோகன் கேட்க வில்லை.

கிறிஸ்தவ நிறுவனகளுக்கு பாரிய பணம் வெளிநாடுகளில் இருந்து கிடைக்கின்றது என்று கூறும் இவர் பொது மக்களிடம் இருந்து பெறப்படும் பணத்தை பற்றி குறிப்பிடவில்லை. ஒவ்வொரு கிறிஸ்தவனும் தங்கள் வருமானத்தில் 10% ஆலயங்களுக்கு வழங்குவது எழுதப்படாத சட்டமாக பல சபைகளில் உள்ளது. அல்லது மக்களில் இருந்து தந்திரபூர்வமாக பெறுகின்றனர் அல்லது மக்கள் விரும்பி மனம் உகந்து கொடுக்கின்றனர். தமிழகத்தில் பிரசித்தமாக இயங்கும் பல கிறிஸ்தவ நிறுவனஙகள் கிறிஸ்தவ மக்கள் பணத்தில் தான் இயங்குகின்றது. பின்பு இந்த நிறுவனங்கள் ஆண்வரின் அருளால் கிடைத்தது என்று கூறி கொண்டாலும் அடிப்படையில் சாதாரண கிறிஸ்தவ மக்கள் பணம் தான். அமெரிக்கா உருவாக்கும் கூலிகள் என்ற பெயரில் பந்தகோஸ்து சபைகளை விவரிக்கும் ஜெயமோகனால் இது எப்படி தெரியாது போனது என்று தெரியவில்லை.

வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போல் மிகவும் நுட்பமாக எழுதியுள்ளார் இப்புத்தகத்தை. பல விடையங்கள் உண்மை தான் என்ற போதிலும் அதன் நோக்கம் மனித நேயம் சார்ந்ததாக இருக்க வேண்டும். ஒரு மதத்தை ஒடுக்க நினைக்கும் சில கைக்கூலிகளுக்கு ஆயுதமாக எழுத்தாளர்கள் மாறக்கூடாது. உண்மையை உறக்க நல்ல மனதுடன் கூறினால் அது இந்துவாக இருந்தாலும் கிறிஸ்தவ சபைகள் ஏற்று கொண்டு தான் ஆக வேண்டும். இந்தியா என்பது பல இனங்கள் உள்ளடங்கிய ஒரு பெரும் துணை கண்டம் என்பதால் மதத்தையும் மீறி மனிதத்தை காக்கும் கடமை எழுத்தாளர்களுக்கு உண்டு. ஆதாம் ஏவாள் கதை அல்போன்ஸாம்மாள் கதை எல்லாம் சிறுபிள்ளத்தனமானது. அதைவிட சிந்திக்க உரையாட விவாதிக்க பல முக்கிய விடையங்கள் பிரச்சினைகள் உண்டு. ஞானி கூறியிருப்பது போல் இந்திய அதிகாரம் மக்கள் நலனை சார்ந்து நீங்கும் போது மக்கள் மதத்திற்கு பெரிய இடம் கொடுக்க போவதில்லை.  இந்திய மக்கள்  ஆத்மீக நோக்கத்துடன் கடவுளை தேட ஆரம்பிக்க வேண்டும் என்றால் இந்திய தேசம் சமத்துவத்தை நோக்கி நெடு தூரம் போக வேண்டியுள்ளது. ஐரோப்பிய தேசத்திலிருந்து  வரும் வெள்ளக்காரர்கள் பல ஆசிரமங்களில் சேரும் போதுக் கொள்ளும் பெருமை இந்திய தேசத்திலிருப்பவர்கள் வெளிநாட்டு மதங்களை தேடி போகும் போதும் அதே பெருமையுடன் நோக்கும் சமதர்ம மன தர்சனம் ஜெயமோகன் போன்றவர்களுக்கு கிடைக்க வேண்டும் என்று தான் கூற இயலும்.

இந்தியாவில் மிஷினரிகளுக்கு என்று ஒரு இடம் இருந்தது இப்போதும் உள்ளது, ஆனால் வெள்ளக்காரர்களால் தொண்டு நோக்குடன் உருவாக்கிய பல சேவை நிறுவனகள் பூட்டப்பட்டு அதை வணிக மயமாக  மாற்றும் மன நிலை தான் இந்திய மண்ணில் இருந்து கிறிஸ்தவத்தை வெறுக்க செய்கின்றது என்ற புரிதலும் தேவை. கிறிஸ்தவ ஆலயத்தை வியாபார தளமாக மாற்றுவதை கிறிஸ்துவும் வெறுத்தார். இன்று ஆலயங்களின் பெயரில் பல  வணிக நிறுவங்கள் உருவாகுவதை கண்டிக்க வேண்டியுள்ளது.  இன்று மக்கள் நலம் சார்ந்த தேவைகள் பெருகி கொண்டு தான் வருகின்றது. உபதேசத்தை குறைத்து குறுகிய மன எண்ணங்களில் இருந்து விடுபட்டு மக்கள் சேவை மகேசன் சேவை என்ற நிலையில் கிறிஸ்தவர்கள் உலகின் உப்பாக ஒளியாக மாற வேண்டியது காலத்தின் கட்டாயம்.  யேசு நாதர் விரும்பிய நிலையில் வாழ்கின்றோமா என்று  ஒவ்வொரு கிறிஸ்தவனும் உண்மையாக சுத்த மனதோடு கேட்க வேண்டிய தேவையும் அதிகரித்து வருகின்றது என்பதையும் மறுக்க இயலவில்லை.

சமீபத்தில் என் சொந்த ஊர் சென்ற போது, எங்கள் பக்கத்து வீட்டில் குடியிருந்தவர்கள் புதிதாக குடியேறிய வீட்டிற்கு நட்பின் நிமித்தம் சென்றிருந்தோம். அவர்கள்  ஹிந்து மதத்தை பின் பற்றுகிறவர்கள். கிறிஸ்தவ ஆலயத்திற்கு நட்பின் பெயரில் கூட வர விரும்பாத ஹிந்து சகோதரர்கள். அவர்கள் பிள்ளைகளும் ஹிந்துக்களாக தான் உள்ளார்கள். அவர்கள் வீட்டில் எந்த கிறிஸ்தவ படங்களும் இல்லை. இருப்பினும் கிறிஸ்தவ நிகழ்ச்சியை தொலைகாட்சி ஊடாக கண்டு கொண்டிருந்தனர்.  பைபிள் வாசிக்கும் கிறிஸ்தவர்கள் அல்லாதோர் பலர் உண்டு.  மதத்தை அடையாளமாக பாவிப்பவர்கள், வாழ்க்கையாக பாவிப்பவர்கள், வரலாறாக, கதையாக இலக்கியமாக, விமர்சனமாக பார்ப்பவர்கள் என பலர் உள்ளனர். இதையும் தாண்டி ஒரு எழுத்து, தொழில் என நோக்குவர்களும் உண்டு. நீர் நிலையில் நம் உருவம் காண்பது போல் நம் விருப்பம் நம் நிலை சார்ந்து மதங்களை பார்க்கின்றோம்.   மதம் என்பது மனிதனை மதம் பிடிப்பவர்களாக மாற்றாது மனிதனை மனிதனாக உயர்த்தினால் மட்டுமே அது உண்மையான மதமாகும். யேசு கிறிஸ்து மட்டுமே உண்மையான கடவுள் என்று கூறும் கிறிஸ்தவர்களும் இரண்டாயிரம் வருடம் முன்பும் மனிதர்கள் வாழ்ந்திருந்தனர் அவர்களும் ஏதோ தங்கள் வாழ்ந்த இடங்களிலுள்ள மதங்களை பின் பற்றியுள்ளனர்  அவர்களுக்கும் கடவுள் இருந்துள்ளனர் என்ற புரிதலும் மிகவும் அவசியம். 

5 comments:

  1. ஜே மோ ஒரு பாசிஸ்ட் சிந்தனைவாதி. ஆர் எஸ் எஸ் எண்ணங்கள் அவர் மன ஆழத்தில் தீவிரமாக ஆட்சி செய்துகொண்டிருக்கின்றன. அவர் எழுதி கிருஸ்துவத்தை ஒன்றும் செய்துவிட முடியாது. இது போன்று ஏன் இதை விட காட்டமான பல விமர்சனங்களை எதிர்கொண்டு வருவது கிறிஸ்துவம். எதோ டான் பிரவுன் போல எழுதுவதாக நினைத்துக் கொள்கிறார் போலும்.

    ReplyDelete
  2. நீண்ட தொரு பதிவு.

    நுனித்தாராய்ந்து.....!

    ஜெ மோ குறித்து அறிந்தோர் அறிவர்.

    அறிந்த பின் மாயை விலகும்.

    பெருமிதங்களின் மாயை அது.


    தொடர்கிறேன்.

    நன்றி

    ReplyDelete
  3. தங்கள் வலைதளத்தில் இணைந்துள்ளேன். பதிவுகளை தொடர்கிறேன், சகோ!

    ReplyDelete
  4. //ஐரோப்பிய தேசத்திலிருந்து வரும் வெள்ளக்காரர்கள் பல ஆசிரமங்களில் சேரும் போதுக் கொள்ளும் பெருமை இந்திய தேசத்திலிருப்பவர்கள் வெளிநாட்டு மதங்களை தேடி போகும் போதும் அதே பெருமையுடன் நோக்கும் சம மன தர்சனம் ஜெயமோகன் போன்றவர்களுக்கு கிடைக்க வேண்டும் என்று தான் கூற இயலும்.// nice article smile emoticon

    ReplyDelete
  5. பின்னூட்டம் பெற்றமைக்கு மிக்க நன்றி மகிழ்ச்சிகள் நண்பர்களே.

    ReplyDelete