9 Oct 2022

திராவிடக் கோவில்களின் கட்டுமானம் - நெல்லையப்பர் கோயில் ஓர் பார்வை !


இந்தியாவின் கோயில்களின் - கட்டிடக்கலைப் மூன்று வெவ்வேறு பாணிகளை பின்பற்றபடுகிறது.      அவை  நாகரா, வேசரா மற்றும் திராவிட கட்டிடக்கலை ஆகும். இந்தியாவின் வடக்கு பகுதிகளில் நாகரா மற்றும் வேசரா கட்டிடக்கலைப் பாணி பேணப்படுகிறது. தென் பகுதிகளில் திராவிட பாணி கட்டிடக்கலை பின்பற்றப்பட்டது.  திராவிட கட்டிடக்கலை, வேத காலத்துக்கு முந்தையது என நம்பப்படுகிறது









திராவிட கோயில் கட்டிடக் கலைகளின் சிறப்பம்சம் ஆக கருதப்படுவது  கருவறையுடன் கட்டப்படும் கோயில்கள்,  அதன் செறிவான வளையங்கள் கொண்ட சுற்றுப் பாதைகள்(பிரதக்ஷிண பாதைகள்) மற்றும், நீண்டு செல்லும் தாழ்வாரங்கள்,  கோவில் குளம்(தெப்பக்குளம்), திறந்த வெளிகள் (நந்தவனம்) போன்றவை கும்.



ஆலய கட்டிட அமைப்பு என்பது, நிகழ்த்தப்படும்  சடங்குகளுடன் இணைக்கப்பட்டுள்ளன.  மக்களின் கலாச்சாரம் மற்றும் காலநிலை காரணிகளும் இதில் உள்ளடங்கும்.


கோவிலின் முழு சுற்றளவு 850 அடிக்கு 756 அடி கொண்டது. கோவிலின் பிரதான நுழைவாயில் ராஜகோபுரத்துடன், கிழக்குப் பக்கமாக உள்ளது. கோவிலை அணுகும் நான்கு திசைகளிலும் நுழைவாயில்கள் உள்ளன.


நெல்லையப்பர் கோவில் தெற்கு மாடவீதியில், கொடிமர மேடு கொட்டகை மற்றும் களஞ்சிய அறைகள் அமைந்துள்ளன. இந்த நடைபாதையில் உள்ள தூண்கள் அழகாக செதுக்கப்பட்ட அமைப்புகளைக் கொண்டுள்ளவை.



நடைபாதையின் தென்மேற்கில் வடமலையப்பபிள்ளை காலம் வரையுள்ள நாயக்கர் ஆட்சியாளர்கள் உருவங்கள்  உள்ளன.


கிழக்கு தாழ்வாரத்தில் நந்தி, பவளக்கொடி, அல்லி, மன்மதன், என மிகவும் கவர்ச்சிகரமான உருவங்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது..

கி.பி 1155 இல் கட்டப்பட்டது நந்தியும், கொடிமரமும். நந்திமண்டபத்திற்கு அருகில் சூரியதேவர் உருவம் நிறுவப்பட்டுள்ளது.


நந்திமண்டபத்திற்கு அடுத்தபடியாக வேணுவனநாதர் கோவிலின் தெற்கு மாடவீதியில்; நான்கு சைவ  சிற்பங்களின் திருவுருவங்கள் உள்ளன. சந்தனாச்சாரியார், சப்தமாதாக்கள் அறுபத்து மூன்று நாயன்மார்கள், பொல்லாப் பிள்ளையாரும், கைலாசபர்வதத்தை கையிலேந்திய படி  ராவணனும் உள்ளனர்



பள்ளிகொண்டபெருமாள் சன்னதி

ராஜராஜ பள்ளிகொண்ட பெருமாள் சுயம்புலிங்கம் தெற்கு திசையில் சாய்ந்த நிலையில் கட்டப்பட்டு உள்ளதுஇதன் வாயிலில் வலம்புரிப்பிள்ளையார், சந்திரசேகரர் மற்றும் தட்சிணாமூர்த்தி, பிக்ஷாந்தர் வேடத்தில் சிவபெருமான், சண்டேஸ்வரர் ஆகியோரின் உருவங்களும் காணப்படுகின்றன.


மேலும் தொடர்ந்தால்,  இந்த கோவிலின் மூலவிக்கிரகம் என்று கூறப்படும் பிட்லிங்கம் அல்லது திருமூல நாதர் உருவங்களை காணலாம்.

ஊஞ்சல் விழா



இந்த அம்பாள் கோயிலின் மற்றொரு அழகிய அமைப்பு திருகல்யாணமண்டபம் அல்லது திருமண மண்டபம் ஆகும்இது 520 அடி நீளமும் 63 அடி அகலமும் கொண்டது ஐப்பசி மாதத்தில் சுவாமி நெல்லையப்பர் மற்றும் காந்திமதி அம்பாளின் திருக்கல்யாணத்திற்குப் பிறகு கொண்டாடப்படுவது  ஊஞ்சல் விழா.  எனவே இந்த மண்டபம் ஊஞ்சல் மண்டபம் என்று அழைக்கப்படுகிறது. இந்த மண்டபம் தீவிர பக்தரான சேரகுளம் பிறவிப்பெருமாள் பிள்ளையின் அன்பளிப்பாகும்



ஊஞ்சல் மண்டபத்திற்கு வடக்கே புனிதமான தொட்டி, அதன் நான்கு பக்கங்களிலும் படிக்கட்டுகள் உள்ளன. இக்கோயிலில் கருமன் குளம் என்ற மற்றொரு குளம் உள்ளது. பெரும்பாலான திராவிடக் கோவில்கள் போன்றே நெல்லையப்பர் கோயிலிலும் இரண்டு கோவில் குளங்கள் (தெப்பக்குளம்) உள்ளன. இவை தேவையான சடங்குகளுக்கு பயன்படுத்துகின்றனர்.  முக்கியமாக  காற்றின் திசையில் உள்ள  தெப்பக்குளம், லேசான காற்றை உருவாக்கி உள்ளூர் காலநிலையை மிதப்படுத்தி  மேம்படுத்தி வைத்துள்ளது. கோயில் தெப்பக்குளங்கள் வற்றாதவை மட்டுமல்ல  பல்வேறு தாவரங்களுக்கு  அடைக்கலம் கொடுக்கும் படி உள்ளது.  மேலும் மழைநீர் சேகரிப்புக்கும் பயன்படுகிறது.


அற்புதமான இசைக் குறிப்பு மூலம் 

அனைவரின் கவனத்தையும் ஈர்க்கும் இசைத் தூண்கள் மணிமண்டபத்தில் உள்ளன. ஒற்றைக்கல் ஒத்ததிர்வு அமைப்பில் செதுக்கப்பட்ட இசைத் தூண்கள் தனித்தன்மை வாய்ந்தவை. இந்த இடத்தை நடனம் ஆடுவதற்கு நடனக் கலைஞர் அல்லது தேவதாசிகள் பயன்படுத்தி உள்ளனர். மணிமண்டபத்தின் தென்கிழக்கு மூலையில் உள்ள நாற்பத்தெட்டு தூண்களின் கீழே சித்தரிக்கப்பட்டுள்ள நடனம் ஆடும் தேவதாசியின் உருவம் உண்டு. இந்த மண்டபம் திறந்த வெளி நடன அரங்கத்துடன் அமைந்துள்ளனர்.





சங்கிலி மண்டபம்
இருவரும் இணைபிரியா தம்பதிகள் என்றாலும்  சுதந்திரமானவர்கள்        என்பதற்கு இணங்க நெல்லையப்பர் மற்றும் அம்மனுக்கு வெவ்வேறு சன்னதிக வளாகத்தில் உள்ளன.   இவையை சங்கிலி மண்டபம் இணைக்கிறது

திருமலைநாயக்கர் காலத்தில் கி.பி.1647ல் திருநெல்வேலியின் ஆளுநரும் சிறந்த சிவபக்தருமான வடமலையப்பப்பிள்ளை இந்த மண்டபத்தை கட்டினார்.  சங்கிலி மண்டபம் தூண்களின் மீது யாழிகளின் உருவங்கள் சிற்பங்களாக செதுக்கப்பட்டுள்ளதுபச்சை வடிவேல் காசிவிஸ்வநாதர், அனுமன், அர்ஜுனன் மற்றும் பீமன் வைத்துள்ளனர். 

குமரன் கோயில் சங்கிலி மண்டபத்தின் மேற்குப் பகுதியில் அமைந்துள்ளது.


சோமவர மண்டபம் அல்லது நவராத்திரி மண்டபம்.

 நவராத்திரி மற்றும் கார்த்திகை மாதங்களில் சோம வார திருவிழா கொண்டாடப்படுகிறது. கல்லாலால் ஆன பீம்களூம்  ரதி, குறவம் மற்றும் குறத்தி பிரதிகள் மிகவும் நுணுக்கமாக வடிவமைக்கப்பட்டுள்ளன. இம்மண்டபத்தின் மேற்கே வன்னியடிசத்தனாரின் உருவங்கள் மற்றும் பைரவரும், மற்றும் யாகம் செய்யும் திருத்தலமும் காணப்படுகின்றன. வீரபத்திரன், அர்ஜுனன், கர்ணன், விநாயகர் மற்றும் முருகன் ஆகியோரின் சிற்பங்கள் மனதில் என்றும் நிலைத்திருக்கும் தோற்றத்தை உருவாக்குகின்றன



கோவில் வண்டி வீதிகள்.

திராவிட கட்டிடக்கலைப்படி, வெளிச்சம் மற்றும் காற்றோட்டம் முக்கிய பங்கு வகிக்கிறது .நெல்லையப்பர் கோயிலின் மற்றொரு சிறப்பு, ஒளி வரும் சாளரங்களின் அமைப்பாகும்.  தேவைப்படும் இடங்களில்  தெளிவான சாளரங்கள் வழங்கப்பட்டுள்ளன. திறந்த நடைபாதைகள், உட்புற இடைவெளிகளில் ஒளி ஊடுருவ அனுமதிக்கிறது.  கோவிலின் மையப்பகுதியான  கற்பகிரகத்தின் அமைப்பு  சூரிய கதிர்வீச்சின் தீவிரத்தை வடிகட்டி குறைந்த ஒளியை மட்டுமே  நுழைய அனுமதிக்கும் முறையில்  உள்ளது.





ஒரு பக்கத்தில் தோட்ட இடைவெளிகளில் திறக்கும் ஜன்னல்கள் மற்றும் மறுபுறம் கோவில் குளங்கள். கருவறையைச் சுற்றிலும் நிரம்பிய நடைபாதைகள், நடன அரங்கம் (தாமிரசபை) என கலைப்படைப்பின் உச்சமாகும் நெல்லையப்பர் கோயில்.


பொது இடங்கள் கோயில் வளாகம் மொத்த பரப்பளவில் 72% கட்டப்பட்ட இடங்கள் மற்றும் 28% திறந்தவெளிகள் ஆகும். இவை திறந்தவெளிகள் தோட்ட இடங்களாகப் பயன்படுத்தப்படுகின்றன. கோயில் சடங்குகளுக்குப் பயன்படுத்தும் மலர்கள் இந்தத் தோட்டத்தின் மண்டபத்தின் மறுபுறம் நன்கு பராமரிக்கப்பட்ட இன்பத் தோட்டத்தில் இருந்து பெருகின்றனர்இந்தத் தோட்டத்தை வடிவமைத்தவர் திருவேங்கட கிருஷ்ண முதலியார்



1756 இல் நூறு தூண்களுடன் கூடிய சதுர வசந்தமண்டபம் இதன் நடுவில் கட்டப்படுகிறது. இந்த வசந்த மண்டபத்தில் நீர் சொட்டும் சிவபெருமானின் திருவுருவங்கள், அகஸ்திய முனிவர் மற்றைய முனிவர்கள் உள்ளது சிறந்து விளங்கும்  கட்டிடக் கலைஞரின் பணித் திறனின்  எடுத்துக்காட்டுகள் ஆகும்

 

கோவில் யானை வடக்கு மாடவீதியில் தங்க வைக்கப்பட்டுள்ளது



 


 


 


 


 


 


21 Aug 2022

சலனச்சித்திரங்களில் சமூகம்- Rj Parvathy Muthamil

 


முகப் புத்தகத்தில் தோழி Rj Parvathy Muthamil எழுதிய எமது புத்தக அறிமுகப் பதிவால்; முன்னாள் சட்டமன்ற உறுப்பினரால் புத்தகக் கண்காட்சியில் வாங்கப்பட்டுள்ளது என அறிந்த போது ஒரு மகிழ்ச்சி!

ஒரு புத்தகம் விலை கொடுத்து வாங்கப் படுவது என்பது எழுத்தாளருக்கு ஆகப் பெரிய ஊக்கமாகும்.
ஒரு பெண்ணின் எழுத்தை இன்னொரு பெண் அறியவைக்க முன் வருவது சாதாரணமல்ல. அவ்வகையில் என் புத்தகத்தை பற்றி முகநூலில் மட்டுமல்ல அரங்கத்தில் வந்து உரையாற்றியவர் தோழி பார்வதி அவர்கள். அவர்கள் குரலுக்கு நான் எப்போதும் ரசிகை. மதுரை காமராசர் பல்கலைகழகத்தில் இதழியலில் முதுகலைப் பட்டம் பெற்றவர். மிகவும் எளிமையும் பேரன்பும் கொண்ட தோழி அவர்.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@


சேவியர் கல்லூரியின் காட்சித்தொடர்பியல்
துறையின் துணைப்பேராசிரியர் திருமதி ஜோஸ்பின் பாபா அவர்களால் எழுதப்பட்ட "சலனச்சித்திரங்களில் சமூகம் "எனும் இந்த நூல் ,திரைப்படத்தை எப்படி விமர்சனம் செய்வது என்பதை மாணவர்கள் அறிந்துகொள்ள ஏதுவாக உள்ளது. ஒரு திரைப்படத்தை ஒவ்வொருவரும் ஒவ்வொரு கோணத்தில் ரசிப்பதுண்டு பார்ப்பவர்களின் பார்வைக்கேற்ப பல்வேறு விதமாக அதன் தன்மை மாறுவதுண்டு. அந்தவகையில் தமிழ்,மலையாளம்,வங்காள மொழி திரைப்படங்களை தனக்கு எப்படித்தோன்றுகிறதோ அப்படியே அதனை விமர்சனத்திற்குள்ளாக்கியிருக்கிறார்.ஒரு திரைப்படத்தின் விமர்சனம் என்பது அதை படிப்பவனின் உள்ளத்தில்,கேட்பவர்களின் உள்ளத்தில் ஒருவித கிளர்ச்சியை தூண்டி அதை பார்க்க,அதை கேட்க வைக்கவேண்டும்.சில படங்கள் கதைக்காக , பாடல்களுக்காக, காட்சியமைப்பிற்காக,

தொழில்நுட்பத்திற்காக,கதாநாயகர்களுக்காக,நாயகிகளுக்காக, நடிப்பிற்காக, திரைக்கதைக்காக,வசனத்திற்காக,சமூகத்தின் எதிரொளிப்பாக என்று பல பார்வைகளில் ஒரு ரசிகனை சென்றடைகிறது.இன்றைய டிஜிட்டல் உலகில் ஒரு திரைப்படம் வெளியான சில மணித்துளிகளுக்குள்ளேபல்வேறு தரப்பினரால் பல்வேறு விதமான விமர்சனத்திற்குள்ளாகிறது.ஒன்றுமே இல்லாத திரைப்படங்கள் கூட விளம்பரயுக்தியினால் மனதில் ஒரு கிளர்ச்சியை ஏற்படுத்தி பார்க்க வைத்துவிடுகிறது.சில நல்ல திரைப்படங்கள் விமர்சனங்களும் விளம்பரயுக்திகளும் இல்லாமல் வந்த வேகத்திலேயே நம்மை கடந்து விடுகிறது.காரணம் திரைப்படம் குறித்த பார்வையும், அணுகுமுறையும் தான்.
நூலாசிரியர் பத்திரிக்கை மற்றும் தகவல் தொடர்பியல் துறையை மிக அழகாக கையாள்பவர்,களத்தை தம் மாணவர்கள் எளிமையாக கற்றுக்கொள்ள பயிற்சி பல தந்து திறமையானவர்களை அழைத்து செயல்முறை பயிற்சி அளித்து துறையில் சிறக்கச்செய்தல் பணியை மாணவர்களுக்கு அளிப்பதில் சிறந்தவர் தொடர்பியல் துறையில் மாணவர்களுக்கு விமர்சனம் எழுதுதல் என்னும் பயிற்சி தர தானே முன்மாதிரியாக இந்த நூலினை எழுதியுள்ளார்.பதிமூன்று தமிழ் திரைப்படங்கள்,பதிமூன்று மலையாளப்படங்கள்,சத்யஜித்ரேயின் மூன்று திரைக்காவியங்கள்,சத்யஜித்ரேயின் இரண்டு குறும்படங்கள் என தன் பார்வையில் தோன்றிய கருத்தை சமூக நோக்கில் விமர்சனம் செய்திருக்கிறார்.இதிலென்ன ஆச்சரியம் இருக்கிறது என்று கேட்கலாம் நீங்கள் கேட்பதும் நியாயம்தான் படங்கள் பலவற்றிற்கும் பல்வேறு தரப்பிலிருந்து
ஏற்றுக்கொள்ளக்கூடிய,ஏற்றுக்கொள்ளமுடியாத பல விமர்சனங்கள் இதழ்கள்வழியாகவும்,வலைதளம் வழியாகவும்,நாம் அறிந்திருந்தாலும் கூட கல்லூரி ஆசிரியர் வழி அதை பார்க்கும் விதம் ,சற்றுவித்தியாசமாக இருக்கிறது.இதில் சில படங்கள் நான் பார்க்கவில்லை என்றாலும் விமர்சனங்களை வாசித்திருக்கிறோம் என்ற நோக்கில் சற்று வித்தியாசமாக இருக்கிறது.சூப்பர்டீலக்ஸ்,பரியேறும் பெருமாள்,96, அவள் அப்படித்தான் போன்றவற்றின் விமர்சனங்களில் தன்னுடைய கண்ணோட்டம் சமூகம் சார்ந்து எப்படியுள்ளது என்பதை பதிவுசெய்துள்ளார். கும்பளங்கி நைட்ஸ்,அய்யப்பனும் கோசியும்,தி கிரேட் இந்தியன் கிச்சன்,சாராஸ், போன்ற படங்களிலும்,சத்யஜித்ரேயின் திரைக்காவியங்களிலும்,வித்தியாசமான பார்வையில் தன் விமர்சனத்தை அணுகியிருக்கிறார்.பரியேறும் பெருமாளில் அடுக்கடுக்காய் பல கேள்விகள் காட்சியமைப்புகள்,சித்தரிப்பு என பலவும் முரணாக உள்ளதை சாடியுள்ள விதம் குறிப்பிடத்தக்கது.இதுபோன்று ஒவ்வொன்றிலும் நாம் பார்த்த பார்வைக்கும்,அவர் பார்த்த பார்வைக்கும் பல வித்தியாசங்கள்.யாரென்ன சொல்வார்கள் என்று பயப்படாமல் தனக்கு தோன்றியதை வித்தியாசமான கோணத்தில் சிந்தித்து படைத்துள்ளார்.
பல விமர்சனங்கள் நம் மனதிலும் சலனத்தை ஏற்படுத்துகிறது. தொழில்நுட்பம் வளர்ந்த காலம்,வளராத காலத்தில் ரேயின் சினிமாவின் நிலை வளர்ந்த காலம் வரை பேசப்படுவது,இயக்குனர்களின் முரண்பட்ட காட்சி அமைப்பு,கதையமைப்பு,பெண் இயக்குனர்களின் திரைக்கள நிலை, என சமூகம் பார்க்கும் பார்வையிலிருந்து சற்று வித்தியாசமாக சாடியிருக்கிறார்.ஒரே கோணத்தில் பார்ப்பவர்களை இப்படிப்பாருங்கள் என சொல்லும் விதமே வித்தியாசமாக உள்ளது .பெண் எழுத்தாளர்கள் மிகக்குறைவாக இருக்கும் நிலையில் எழுத்துத்துறைக்குள் வந்திருக்கும் புதிய எழுத்தாளரின் படைப்பை அவரின் சமூக சிந்தனைக்கு ஒரு சபாஷ் சொல்லி வரவேற்கலாம்.சலனச்சித்திரங்களில் சமூகம் சற்று சலனத்தை ஏற்படுத்துகிறது என்பது மிகையில்லை

சலனச் சித்திரங்களில் சமூகம்- Athi Narayanan

 


"சலனச் சித்திரங்களில் சமூகம்" ஊடகவியல் பேராசிரியரான மதிப்பிற்குறிய ஜோஸபின் பாபா அவர்களால் எழுதப்பட்டு சமீபத்தில் வெளிவந்திருக்கும் அருமையான புத்தகம். காட்சிகளால் மனதை கட்டிப்போடும், தக்கப்படி சமூகங்களை கட்டியமைக்கும் சினிமா ஊடகங்களில், சமூகங்கள், சமூகத்தின் பிரதான அங்கமான பெண்களின் பாத்திரங்கள் எவ்வாறு எடுத்தாளப் பட்டிருக்கிறது என்பதை அழகாக ஆய்வு செய்து எழுதியிருக்கிறார்...!

சில இடங்களில் ஒரு பேராசிரியரின் அணுமுறையோடும் பல இடங்களில் அபத்தங்களை கண்டித்து திருத்தம் சொல்லும் தலைமை பண்புடனும், தாயின் அக்கறை உடனும் அணுகி திரைப்படங்களை மதிப்பீடு செய்திருப்பது கவர்வதாக அமைந்திருக்கிறது. தமிழ், மலையாளம் மற்றும் இந்திய திரைத்துறையின் முக்கிய இயக்குநரான சத்யஜித் ரேய்யின் படைப்புகள் என்று எடுத்து ஆய்வு செய்திருப்பது அவருடைய பரந்துபட்ட சமூக பார்வையை வெளிப்படுத்துகிறது.

பல திரைப்படங்களை மதிப்பீடு செய்திருந்தாலும் சமூகத்தால் கொண்டாடப்பட்ட சில திரைப்படங்களை அவர் அணுகியிருந்த விதம் என்னை மிகவும் ஈர்த்தது, அதிலும் குறிப்பிட்டு சொல்ல வேண்டுமானால் பரியேறும் பெருமாள், 96, அவள் அப்படித்தான், சத்யஜித் ரேயின் பதேர் பாஞ்சாலி, பிக்கூ, மளையாள திரைப்படங்களான ஐயப்பனும் கோஷியும், செல்லுலாய்ட் போன்ற திரைப்படங்களின் மதிப்புரை என்னை மிகவும் கவர்ந்தது, இவை அனைத்திலும் ஒரு யூனிக்னஸ் அழகாக வெளிப்பட்டிருப்பதை கவனிக்க முடிந்தது....!!
பரியேறும் பெருமாளில் படித்து உயர்ந்த பதவிக்கு வந்துவிட்டால் எல்லாம் மாறிவிடும் என்ற கருதுகோளை உயர்ந்த பதவியில் இருந்துகொண்டு எதுவுமே செய்ய இயலாத நிலையில் இருக்கும் ஒரு பாத்திரம் பேசுவதை அழகாக சுட்டிக்காட்டி இருப்பதோடு அந்த சித்தாந்தம் எவ்வளவு வீக்காக இருக்கிறது என்பதை பொட்டில் அரைந்தார் போல் சொல்லியிருப்பார், யதார்த்தங்களை ஐடியாலஜிகளுக்கு தக்கப்படி தினிக்க நினைப்பது எவ்வளவு அபத்தம் என்பது அங்கே அழகாக வெளிப்பட்டிருக்கும். அதேபோல் 96 திரைக் கதையையெல்லாம் யாரும் இவ்வளவு கலாய்த்திருப்பார்களா என்று தெரியவில்லை, மனிதர்களின் மன வக்கிரங்களை கவர்ச்சிப் பொருளாக்கி பணம் பன்னும் புத்திக்கு பாடமே நடத்தியிருக்கிறார். அதேபோல ஐயப்பனும் கோஷியும் சமூக பொறுப்போடு நடந்திருக்கலாம் என்கிறது இவரது மதிப்புரை. செல்லுலாய்ட், பிக்கூ, மேற்கு தொடர்ச்சி மலை ஆகியவை சற்றே தேரினார் போல் தெரிகிறது....!!
கருத்தாக்கமும், காட்சியமைப்பும் எத்தகைய தாக்கத்தை சமூகத்தில் ஏற்படுத்தும் என்பதை உணராமல் தனது எண்ணங்களில் உதித்ததையெல்லாம் படமாக்கி பணம் சம்பாதிக்க நினைப்பது எவ்வளவு அவலமான சமூக சூழலை உருவாக்கும் என்பதை போகிற போக்கில் சொல்லியிருக்கும் விதம் நம்மையும் பொறுப்புடன் நடந்துகொள்ள எச்சரிக்கிறது....!
புத்தகத்தின் முகப்புரையில் இயக்குநர் மதியழகன் சுப்பையா அவர்கள் ஒன்றை சொல்லியிருப்பார், திரைப் படங்களை விமர்சனம் செய்ய ரசிக்கும் திறனும் படைப்பாற்றலும் அமையப் பெற்றிருக்க வேண்டும் என்றிருப்பார், அது பேராசிரியர் ஜோஸபின் பாபா அவர்களுக்கு இயல்பாகவே வாய்த்திருக்கிறது....!!!
நெல்லை புத்தக திருவிழா நடக்கும் நாட்களிலேயே இதை பதிவு செய்துவிட வேண்டும் என்று நினைத்தேன், செய்தாயுற்று, மகிழ்ச்சி. புத்தகத்தை அனுப்பி வாசிக்கும் வாய்ப்பை கொடுத்த பேராசிரியர் அவர்களுக்கு நன்றி....💐💐💐
நீங்களும் வாசித்துப் பாருங்கள்..

சலனச் சித்திரங்களில் சமூகம் - திரைப்படங்களில் மதிப்பாய்வு-மதியழகன் சுப்பையா, திரைப்பட இயக்குனர்

 சலனச் சித்திரங்களில் சமூகம்
















திரைப்படங்களில் மதிப்பாய்வு
ஒரு வருடமாக rough copy யை வைத்துக் கொண்டு சோம்பலில் இருந்த என்னை ஒரு புத்தகம் என்ற ஆசைக்குள் நடத்தினது தோழி Kala Sriranjan . ஆனால் அதை ஒரு புத்தகமாக மாற்ற நம்பிக்கை தந்தது நண்பர் Madhiyalagan Subbaiah மதிப்புரை தான்.
நான் அனுப்பின இரண்டு வாரத்தில் மதிப்புரை அனுப்பினார். அவர் அனுப்பிய மதிப்புரையின் தலைப்பில் இருந்து புத்தகத்தின் தலைப்பையும் கண்டு கொண்டேன். அப்படியாக "என்" புத்தகம் என்று நான் சொல்ல அஞ்சும் அளவிற்கு நண்பர்கள் உழைப்பு மற்றும் ஆதரவுடன் இப்புத்தகம் வெளி வந்துள்ளது.
####№#############@#######
சலனச் சித்திரங்களில் வண்ணக் கிளைகள்
நல்ல, உணர்வுப்பூர்வமான விமர்சனம் என்பது எப்பொழுதுமே ஆகச் சிறந்த வியப்பாக இருக்கிறது- என்கிறார் பிரபல எழுத்தாளர் ஜாய்ஸ் கரோல் ஓட்ஸ். கலைப்படைப்புகள் எதுவாயினும் மதிப்புரைகளும் விமர்சனங்களுமே அவற்றிற்கு முகவரிகளாக இருக்கின்றன. படைப்பை அறிமுகப்படுத்துவது, படைப்பு குறித்த நேர்மையான கருத்தாகவே ,ருக்கிறது.
ஜோஸபின் பாபா அவர்களின் இந்நூலில், திரைப்படைப்புகள் குறித்த மதிப்பீடுகளும், பார்வைகளும், விமர்சனங்களும், ஆழமான புரிதல்களும், அவசியப்படுகையில் பாராட்டுகளும் என பலப்பல விஷயங்களைப் பதிவு செய்திருக்கிறார். படைப்புகளின் அறிமுகங்களைத் தாண்டி, அதன் கருத்துகள் குறித்த பல்நோக்குப் பார்வையும் கூர்மையான விமர்சனமும் பதிவாகி உள்ளது.
இந்நூலில் ஜோஸ்பின் அவர்கள் நாம் கண்டு கடந்த பல திரைப்படங்கள் குறித்து, மிக நேர்மையாக மற்றும் நுணுக்கமாக கருத்துகளைப் பதிவு செய்திருக்கிறார். தமிழ், மலையாளம் மற்றும் வங்காளத் திரைப்படங்கள் என முக்கியமான திரைப்படங்கள் குறித்துப் பதிவு செய்திருக்கிறார்.
திரைப்பட விமர்சனங்களைப் பதிவதாகச் சொல்லி கதையை நீட்டி முழக்கிச் சொல்லிக் கொண்டிருப்பவர்கள், இறுதியாக சில தொழில்நுட்ப விஷயங்கள் குறித்த ஒற்றைவரிக் கருத்தோடு முடித்தும் கொள்வார்கள். ஆனால் இந்நூலில் ஒவ்வொரு திரைப்படம் குறித்தும் இதுவரை காணாத ஒரு கோணத்திலிருந்து கண்டு பதிவாகியிருப்பது மிகப் புதுமை. இது மாறுபட்ட திரைப்பார்வை என்று உறுதியாகச் சொல்லலாம்.
இந்நூலில் பதிவாகியிருக்கும் ஒவ்வொரு கட்டுரை குறித்தும் சிலாகித்துச் சொல்ல நிறைய உண்டு. ” அட ஆமால்ல” என்று வியப்புக்குள்ளாக்கும்படியான கருத்துகளும் நிரம்பியே கிடக்கின்றன.

குறிப்பாக ‘96’ திரைப்படம் குறித்தப் பதிவின் நேர்மைக்குப் பாராட்டலாம். ’பரியேறும் பெருமாள்’ திரைப்படம் குறித்து ஒரேமாதிரியான கருத்துகள் பதிவாகி அயர்வைத் தந்த நிலையில் ஜோஸ்பின் அவர்களின் கருத்து மாற்றுக் கருத்தாக மட்டுமல்ல, நேர்மையான பார்வையாகும் இருக்கிறது. பெரிதும் எழுதிச் சலித்த திரைப்படமான ‘அவள் அப்படித்தான்’ குறித்தும் புதிதாகச் சொல்ல ஜோஸபின் அவர்களிடம் சில விஷயங்கள் இருக்கத்தான் செய்கின்றன.
இதில் நான் பார்க்காத சில படங்களும் உண்டு. ஆனால் அப்படங்கள் குறித்தப் பதிவை வாசிக்கும் போது படத்தைப் பற்றி அறிமுகத்தைத் தாண்டி புரிந்து கொள்ள முடிந்தது.

சமீபத்தில் மலையாளத் திரைப்படங்கள் குறித்துப் பேசுவது தவிர்க்க முடியாததாகி விட்டது. இந்நூலில் மலையாளத் திரைப்படங்கள் குறித்தப் பதிவுக்காய் தேர்வு செய்திருக்கும் படங்கள் மிக முக்கியமானவைகள். மலையாளத் திரைப்படங்கள் மீது ’மாற்றான் தோட்டத்து மல்லிகை’ என்ற போற்றல் எண்ணத்துடன் இல்லாமல் நேர்மையாக பதிவு செய்திருக்கிறார். ‘ஜல்லிக்கட்டு’, ‘கும்பளாங்கி நைட்ஸ்’ என்று சமீபத்திய திரைப்படங்கள் குறித்த கருத்துப் பதிவு செரிவு. மேலும் ’மதில்கள்’ போன்ற திரைப்படங்கள் குறித்தப் பதிவு மிகவும் முக்கியமானதாகும்.


இந்திய திரைப்பட மேதை சத்தியஜித் ரே அவர்களின் படங்கள் குறித்தப் பதிவுகள் மிகச் சிறப்பாக உள்ளன. சத்தியஜித் ரே அவர்களின் திரைப்படங்கள் குறித்து எண்ணற்ற ஆய்வுகள் பதிவாகியுள்ள நிலையில் ஜோஸ்பின் அவர்களின் பார்வை கவனிக்கப்படாத சில பகுதிகளை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளன.
இப்படி குறிப்பிட்டுச் சொல்லிக் கொண்டே போகலாம் தான்; ஆனால் உள்ளேயிருக்கும் கட்டுரைகளின் சிறப்புகளை இங்கே சொல்லிவிட சுவராஸ்யம் குறைந்து போகக் கூடும் என்ற ஐயம் காரணமாக அடக்கிக் கொள்ளலாம்.
திரைப்படக் காட்சிகளில் வெளிப்பட்டதாகச் சொல்லி குறியீடுகளுக்கு பல அர்த்தங்களை சகட்டு மேனிக்கு எழுதிக் குவிக்கும் சூழலில் ஒட்டுமொத்தமாக ஒரு படைப்பு வெளிப்படுத்தும் கருத்து இதுதான் என்று சாராம்சம் சொல்லும் நல்ல நிபுணத்துவம் பெற்றிருக்கிறார் கட்டுரையாசியர்.

வாசிக்க இயல்பான ஒரு மொழி ஜோஸ்பின் அவர்களுக்கு கைவந்திருக்கிறது. கருத்துகளை எப்படித் தெளிவாகச் சொல்லியிருக்கிறாரோ அப்படித்தான் மொழியும் எளிமையாக அதே நேரம் செரிவாக உள்ளது. ஒரு மூச்சில் வாசித்துக் கடக்கச் செய்யும் இயல்பைக் கொண்டுள்ளது.

சிறப்பான இந்தத் தொகுப்புக்கு பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்வதோடு, தொடர்ந்து இப்படியான பதிவுகளை நூலாக்கித் தர வேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டுக் கொள்ளலாம்.

வாழ்த்துக்களுடன்,
மதியழகன் சுப்பையா,
திரைப்பட இயக்குனர்

இரவின் ஆன்மா,நிறமில்லா மனிதர்கள்,சலனச் சித்திரங்களில் சமூகம்




 அன்பு தோழி Kala Sriranjan ஊடாக என் புத்தகங்கள் இலங்கை தீவை அடைந்தது மட்டுமல்ல ஈழத்து ஆளுமைகளிடம் என் புத்தகங்கள் 'இரவின் ஆன்மா ' மற்றும் சலனச் சித்திரங்களில் சமூகம் ' சென்று சேர்கிறது.

அவ்வகையில் ஈழத்து எழுத்தாளர், கவிஞர், ஊடகவியாளர் Karunakaran Sivarasa அவர்களிடம் புத்தகம் சேர்ந்ததில் பெருமை கொள்கிறேன்.
அன்பும் நன்றியும் தோழி! பிறப்பால் இரு தேசம் என்றாலும் நட்பால் ஒரே வீடு என உணர்கிறேன்.
புத்தகத்தை பெற்று கொண்ட நண்பருக்கு வணக்கமும் நன்றிகளும். புத்தகம் பெற்றதும் ஓரிரு வார்த்தைகளில் கதைக்க இயன்றது. நான் எழுதியுள்ள திரைப்படங்களை பார்த்துள்ளார், ஒரு சில படங்களின் இயக்குனர்களிடம் உரையாடலில் உள்ளார் என்பது இரட்டிப்பு மகிழ்ச்சி. உங்கள் பதிவை ஆவலுடன் எதிர் நோக்குகிறேன் நண்பர்.
இன்னும் இருவருக்கு என் புத்தகம் சேர வேண்டியுள்ளது.ஒன்று உடன் பிறவா சகோதரர், இப்புத்தகம் உருவாக்கத்தில் எனக்கு உறுதுணையாக இருந்த அன்பு சகோதரர். இன்னொருவர் இலங்கை சினிமா எழுத்து உலகின் ஆளுமை ஐயா அவர்கள்.
தோழி ஜோவின் ‘இரவின் ஆன்மா’, எனது ‘நிறமில்லா மனிதர்கள்’ நூல்கள் இரண்டும், தோழர் சுகனிடம் கையளிக்கப்பட்ட போது!