10 Jun 2020

'45 Years

2016ல் சிறந்த நடிப்பிற்கு ஆஸ்கார் விருது வாங்கிய திரைப்படம் '45 Years'.
ஒரு குழந்தைகளற்ற தம்பதிகள் தங்கள் 45 வது வருட கல்யாண நாளை கொண்டாடும் திட்டத்தில் உள்ளனர். அதற்கான வேலையில் மும்முரமாக இருக்கையில் ; ஜெப்ன் 50 வருடங்களுக்கு முன் விபத்தில் இறந்த காதலியின் உடல் சுவிஸ் மலைகளில் கிடைத்தாக தகவல் வருகிறது.
பெரியவருக்கு காதலியை போய் பார்க்க வேண்டும் , தனக்கு பணிவிடை புரியும் தன் மனைவியை மறந்து காதலி நினைவில் ஆழ்ந்து விடுகிறார். அவரை திருமணம் முடித்திருப்பேன் என்று வரை மனைவியிடம் கதைக்கிறார். அதன் பின்னுள்ள அந்த 6 நாட்களை பற்றியது தான் கதை.
பெரியவர் வீட்டிலே முடங்கி கிடக்க, காதலி நினைவாகவே இருக்கும் கணவரை ஆறுதல்ப்படுத்த கதைகள் கேட்ட மனைவி, ஒரு கட்டத்தில் காதலி பெயரையே சொல்லாதீர்கள் என சொல்லி விடுகிறார். கணவரின் அன்பை இழக்கிறோம் என்ற இயலாமையில் உருவான பொறாமையும் பீடிக்க ஆரம்பிக்கிறது.
இருந்தாலும் முதலில் வயோதிகத்தால் மலை ஏற இயலாது என சுவிஸ் மலைக்கு போவதை தடுத்த மனைவி, கணவர் மகிழ்ச்சிக்காக சுவிஸ் பயணத்திற்கு உதவ முன் வருகிறார்.
ஜெப் தன் மனைவியின் மனநிலையை புரிந்து, தன் தவறை உணர்ந்து பழைய படியும் மனைவிக்கு காலை காப்பி இட்டு தருகிறார், நாயை அழைத்து வெளியே போய் வருகிறார்.
பிரதானமாக தங்கள் திருமண நாளை கொண்டாட மனதில்லாது இருந்தவர் விழாவை சிறப்பாக கொண்டாடியதுமில்லாது தன் மனைவியின் தியாகம், நட்பை, அன்பை பாராட்டி ஒரு உரையும் நிகழ்த்துகிறார்.
நடனம் முடியும் தருவாயில் இருவரும் தங்கள் வாழ்க்கை வெற்றி பெற்றதாக கையை உயர்த்த கேய்ட் கையை இறக்கி விடுகிறார்.
அரை நூற்றாண்டு வாழ்ந்தும் திருமண பந்ததிற்குள் இருந்த ஆழமின்மை , கணவரின் காதலி மேலுள்ள அதீத காதலால் மனைவியின் பாசத்தை புரக்கணித்தது எல்லாம் நினைவிற்கு வர கேய்ட் மனம் ஒரு வகையான வருத்தம், வாழ்க்கையில் கண்ட அர்த்தம் இன்மைக்குள் இட்டு செல்கிறது.
முதிர்ந்த தம்பதிகளின் வாழ்க்கை, பரஸ்பர நம்பிக்கை, மரியாதை , கரிசனை, அவர்களுக்குள் இருக்கும் காதல் , அற்ப மனதால் எழுந்த பிரிவு, கடைசியில் கணவர் தன் தவறை உணர்வது , பெண்கள் திருமணம் என்ற பந்தத்தில் கணவர்களால் எதிர்கொள்ளும் நம்பிக்கை துரோகத்தை ஏற்கவும், மறக்கவும் இயலாது துன்புறுவது என நிதானமாக, ஆழமான கருத்துடன் எளிய நடையில் எடுத்துள்ளார்கள்.
நமது இயக்குனர்களும் முதிர் வயது மனதர்களின் உணர்வுகளையும் துல்லியமாக உணரக்கூடிய மெல்லிய அன்பை போதிக்கும் படங்கள் எடுப்பது நமது சமூகத்திற்கு தேவை.
நமது சமூக துர்பாக்கியம் ஆங்கிலேயர்கள் 70 வயதுக்கும் மேலுள்ளவர்களின் அழகான காதலை மையமாக வைத்து கதை எடுக்குகையில் இங்கு 60 வயது முதியவர்கள் கருணை கொலை செய்வதை பற்றி படம் எடுத்து மிரட்டுகின்றனர்.
இப்படம் பல விருதுகள் பெற்றுள்ளது.

The Hungry'

The Hungry' 'பசி' என்ற ஹிந்திப்படம் போbர்நிலா சாட்டர்ஜி இயக்கத்தில் 2017 வெளி வந்த து. ஒளிப்பதிவு லண்டனை சேர்ந்த நிக் கூகி. கனடா சர்வதேசப் திரைப்பட விழாவில் திரையிடப்பட்ட ஒரு இந்திய மொழி திரைப்படம்.
வில்லியம் ஷேக்ஸ்பியரின் டைட்டஸ் அன்ட்ரோனிகஸின்
(Titus Andronicus) நவீன மறுபடைப்பாக்கம் என்கின்றனர்.
இரு வியாபார குடும்பம். வியாபார பங்குகளுக்காக எதிணி தொழிலதிபர் குடும்பத் தலைவியை தன் மகனுக்கு கல்யாணம் செய்து வைப்பது, அப்பெண்ணின் மகனை இந்தப்பக்கம் முதலாளி மகள் காதலிப்பது, சூட்சியால் அப்பெண்ணின் மகன்களை கொல்லவது, தனது மகனை கொன்று விட்டு மகன் மனைவியாக இருந்த பெண்ணை அடைய நினைப்பது என வில்லத்தனமாக படம் நகர்கிறது.
திருமணங்கள் , உறவுகளை தொழில் சார்ந்து ஏற்படுத்துவது, வியாபார லாபத்திற்காக ஈவு இரக்கமின்றி சொந்த மகனையே கொலை செய்வது, தொழில் கைபற்ற நினைத்து சொந்த மகன்களை இழந்து, எதையோ கைபற்ற நினைத்து இருந்ததை எல்லாம் இழந்து கடைசியில் ஆண்களின் வியாபார விளையாட்டில் பெண்ணும் பகடையாக இருந்து கடைசியில் ஒன்றும் ஒட்டாது எல்லாம் இழந்து தனிக்கட்டையாக கொலைகாரியாக நிற்பது கதை யோட்டம்.
தொழில் அதிபர்கள் ஆடம்பரமான
வாழ்கையும், பேராசையில் மனிதன் உடலையே கோழிக்கறி மாதிரி பொரித்து கொடுத்தும் தின்னும் நிலையில் இறங்குவதும்.....பணக்கார வீட்டு பெண்கள் மண்டையில் களிமண்ணுடன், வெற்று ஆடம்பரங்களுடன் நினைத்த ஆண்களை பயண்படுத்தியும், பயண்படுத்தப்பட்டும் வெற்றி கொள்ள நிற்பதும், பணக்கார வீட்டு தலைமுறைகள் கஞ்சா போன்ற போதையில் ஆழ்ந்து கிடக்கும் பைத்தியக்கார கூமுட்டைகளாக காட்டியுள்ள திரைப்படம் இது.
திரைக்கதை , இசை, பின்னணி இசை, ஒளிப்பதிவு, தொழில்நுட்பம் பயண்படுத்தியிருக்கும் விதம், காட்சிப்படுத்துதலிலுள்ள அழகியல் எல்லாம் அருமை அற்புதம். ஆனால் கருத்தாக்கம் என்ன ?
இந்த கதை, இந்தியா போன்ற ஏழை நாட்டு மனிதர்களுக்கு கொடுக்கும் ஊக்கம் என்னது, சொந்தமாக வியாபாரம் செய்யும், வேலை பெறுபவர்களாக இல்லாது வேலை கொடுப்பவர்களாக இருக்கும் மனிதர்களை மனிதர்களின் ஆளுமையை சூதின் பைத்தியக்காரதனத்தின் மறு பதிப்பாக காட்டியிருக்கும் நோக்கம் என்னது?
இந்தியாவில் தொழில் புரிபவர்கள் மிகவும் குறைவு. தொழில் தொடங்குவது அதில் வெற்றி பெறுவது சாதாரண விடயம் அல்ல. இன்றைய இளைஞர்கள் 20-60 லட்சம் வரை கைலஞ்சம் கொடுத்து அரசு வேலைக்கு காத்துக்கிடக்கும் இந்த அவல நாட்டில் தொழில் அதிபர்கள் சார்ந்து இவ்விதமான படங்கள் எடுப்பதின் மனநிலை தான் என்ன?
நசறுதின் ஷா(Naseeruddin Shah), டிஸ்கா சோப்ரா(Tisca Chopra), சயானி குப்தா (Sayani Gupta) and கரன் பண்டிட் (Karan Pandit) போன்ற சிறந்த நடிகர்கள் நடித்துள்ளனர்.
ஷேக்ஸ்பியரின் 400 ஆம் வருட நாடக எழுத்துலகை நினைவூட்டும் விதமாக லண்டன் சினிமாவின் நிதி உதவியில் எடுக்கப்பட்ட திரைப்படம்.
இந்தியா மட்டுமல்ல உலக அளவில் பிரசித்தமாக வேண்டும் என்ற நோக்குடன் உலகத்தரமான படைப்பாக வெளிவந்த படம்.
நாதுர்ஷா குறிப்பிடுகிறார் எனக்கு மோசமான கதாப்பத்திரங்களில் நடிக்க பிடிக்கும். அதற்காக இப்படியுமா?
அடுத்து டிஸ்கா தான் நடித்ததில் வித்தியாசமான அம்மா கதாப்பாத்திரம் என்கிறார்.
இன்னும் பரைசாற்றுகின்றனர், இந்தப்படம் தற்கால இந்திய கலாச்சாரத்தை பொதிந்துள்ளதாம்.
தொழில்அதிபர்களுடைய குடும்பத்தையும் ஆடம்பரங்களையும் அவ்வீட்டு பெண்கள் நெறிகளையும் வரட்டுத்தனமான இடதுசாரி மனநிலையுடன் எடுத்த ஒரு திரைப்படம்.
ஒரு திரைப்படம் நேர்மறையான அல்லது எதிர்மறையான கருத்துக்களை சமூகத்திற்கு தர வேண்டுமா?
இந்தியாவில் இருந்து உலக அளவில் கொடி கட்டி பறந்த பல தொழில் அதிபர்களின் வாழ்க்கையின் சரிவு பயங்கரம். உதாரணம் சத்தியம் கணிணி நிறுவன நிறுவனர், பிரிட்டானியா பிஸ்கட்- உலக கிங் ராஜன் பிள்ளை வாழ்க்கை, சமீபத்தில் தற்கொலை/ கொலை செய்து கொண்ட ஜோயி அறக்கல் வரை.
இவர்கள் வியாபாரங்களில் கொடிகட்டி பறக்கையில் அதன் வெற்றியின் பலனை அனுபவிக்கும் அரசு, தோல்வியை தழுவுகையில் தற்கொலை அல்லது கொலைக்குள் செல்லும் அவலம் எதனால்.
இது போன்ற திரைப்படங்கள் தொழில்புரிபவர்களை பற்றிய ஒரு மோசமான அடையாளப்படுத்துதலை தானே கொடுக்கிறது.
ஒரு வியாபாரி எதிர் கொள்ளும் சவால்கள், அவர்களின் வியாபாரம் சார்ந்த அல்லது வாழ்வியல் பிச்சினைகளை உண்மைக்கு புறம்பாக அல்லது கொச்சையாக எடுக்கும் மனநிலையை சரி செய்ய வேண்டும்.
இந்திய தேசத்தில் பல திரைப்படங்களில் கொலைகாரன்கள், கொள்ளையர்கள், நாட்டு ரவுடிகள், ஏமாற்று போராளி கும்பல்கள், நாடக காதல் கும்பல்களை எல்லாம் புகழ்ந்து எடுக்கையின் தேசத்தின் வளர்ச்சி , மேம்பாடு சார்ந்த மனிதர்களை புகழவில்லை என்றாலும் தூற்றாது இருக்கலாம்.
பணக்காரர்களை திட்டும் கேலி செய்யும் மனநிலை வளரும் நாடுகளான நம்மை போன்ற ஏழை நாடுகளில் வளர்ச்சியை பாதிக்கும். காயடிக்கப்பட்ட மனநிலையை உருவாக்குவது நல்லது அல்ல.
தவிர்த்து இருக்க வேண்டிய படங்கள் இது.

இரவில் நமது ஆன்மா_Our Souls at Night


திரைப்படம் இரவில் நமது ஆன்மா_Our Souls at Night
பிள்ளைகள் வளர்ந்து விட்ட நிலையில் எதிர்வீட்டுகளில் 48 வருடங்களுக்கு மேலாக வசித்து வந்த முதியவர்கள் சந்திக்கின்றனர். ஒன்றாக வசிக்கலாமே என்ற விருப்பத்தை தெரிவிக்கிறார் முதிர் பெண்மணி ஜேன் லூயிசிடம்.
ஒரு மகளுக்கு தகப்பனான லூயிஸ், மனைவியை இழந்தவர். அவருடைய வயது ஒத்த நண்பர்களுடன் சந்திப்பு, சாயா குடிப்பது, கதைப்பது என காலத்தை தள்ளுகிறவர்.
ஜேன் அழைப்பு விடுத்ததும் , அதிர்ச்சியானவர், அவசரம் கொள்ளவில்லை ஆலோசித்து பதில் சொல்கிறேன் என்கிறார்.
அவர்கள் சந்திப்பு நட்பாகி காதல் கொண்டு, சேர்ந்து உலகறிய வாழலாம் என முடிவெடுக்குகையில், ஜேனின் மகன் தன் மகனை பார்க்க வேண்டிய பொறுப்பை தாயாரிடம் கொடுக்கிறார்.
சிறுவன் மனிதர்களிடமே பேச விரும்பாத மனநிலையில் கைபேசி விளையாட்டில், எப்போதும் கைபேசியுடனே காலத்தை கழிக்க பழக்கப்பட்டவன்.
தன் அப்பா வழி பாட்டியுடன் தங்க விருப்பமில்லாது ஆனால் வேறு வழியற்று பாட்டி வீட்டில் தங்கி இருக்க முடிவெடுக்கிறான்.
பின்பு சிறுவனுடன் விளையாடுவது,சிறுவனை பயணம் அழைத்து போகுவது என லூயிஸ் வாழ்க்கை மகிழ்ச்சியாக நகர்கிறது. சிறுவனுக்கும் லூயிசை பிடித்து போக சிறுவன் கைபேசியை தானாக தவிர்த்து, லூயிஸ் நட்பில் மகிழ்ந்து படம் வரைய கற்கிறான், லூயிசுடன் பயணிக்கிறான் லூயிஸ் பரிந்துரையில் ஒரு நாயை வளர்க்க ஆரம்பிக்கிறான்.
இப்படியாக இருக்கையில் ஜேனின் மகன் வந்து சேர்கிறான்.
தாயின் புது உறவில் மகனுக்கு விருப்பவும் இல்லை. அதிலுள்ள பல பிரச்சினைகளை சொல்கிறார். லூயிசை பற்றிய எதிர்மறை எண்ணங்கள், தன் தாயார் லூயிசுடன் பழகுவதை ஏற்று கொள்ள தடுக்கிறது.
தனது மனைவி பிரிந்து போய் விட்ட நிலையில், தன் மகனை வளர்ப்பதற்கு தாயின் உதவியை நாடுவதுடன், தன்னுடன் தங்க கேட்கிறான்.
அவருக்கோ மலர்ந்த காதலை விட்டு போக மனம் வராவிடிலும் தன் தனிப்பட்ட விருப்பத்தை விட தாய்மையின் கடமையில் உந்தப்பட்டவராக பேரனுக்காக தன் வீட்டை விற்று விட்டு, லூயிசை பிரிந்து, மகன் ஊரில் குடிபெயர்கிறார்.
லூயிஸ் பழைய படி தன் தனிமை உலகில்,தானே சமைத்து, தானே உண்டு ஆனால் இளமையில் விட்டுப்போன படம் வரைதலை மறுபடியும் துவங்குகிறார்.
ஒரு பெண்ணுடன் நேசம் கொள்ளுதல் என்பது அவளை சொந்தமாக்குவது அல்ல, அவள் மகிழ்ச்சியில், துன்பத்தில், பிரச்சினையிலும் பங்கு பெறுதல் என்ற புரிதலில் ஜேன் எடுத்த முடிவை ஏற்று கொள்கிறார் லூயிஸ்.
இருவரும் இடத்தால் விலகியிருந்தாலும் மனதால் பிரியாத நிலையில் தங்கள் நட்பை கைபேசி ஊடாக தொடர முடிவு செய்வதுடன் கதை முடிகிறது.
ஆண் பெண் உறவிலுள்ள நட்பும், அன்பும் புரிதலும் அழகாக படமாக்கிய திரைப்படம்.
இரு மனிதர்கள் உறவில்; புரிதல், தங்கள் குறை நிறைகளையும் பகிர்ந்து கொள்ளுதல், ஒன்றாக உணவு அருந்துதல், பயணம் செய்தல், கதைப்புதலும் உள்ளடங்கியுள்ளது என இரு மனிதர்களின் உறவை அழகாக சொல்லிய திரைப்படம்.
கலாச்சாரம் என்ற பெயரில் தனிநபர்கள் ஒருவரை ஒருவர் சார்ந்திருப்பது, குற்றப்படுத்துவது, அதிகாரம் செலுத்துவது என எதையும் கதைக்குள் முன்னிலைப்படுத்தாது இரு மனிதர்களின் அழகான இயல்பான உறவிலுள்ள சுதந்திரத்தின் தேவையை எடுத்து சென்ற விதம் அருமை.
முக்கிய கதாப்பாத்திரங்கள் இருவரும் 50 வருடங்களுக்கு பின் மறுபடியும் நடித்து உள்ளனர்.
திரைக்கதையை சலிப்பில்லாது நகத்திய விதம், கதையிலுள்ள சுவாரசியம் கதாப்பாத்திரங்களின் மாறும் தன்மை( transition), குழந்தைகளை எப்படியாக பராமரிக்க வேண்டும் என்ற படிப்பினையும் எந்த பரப்புரையும் இல்லாது இயல்பான நிலையில் அமைதியான ஓடத்தில் பயணித்த இரு நபர்கள் மனநிலையை சொல்லிய திரைப்படம்.
ஜேன் லூயிசை மறந்து விட்டாரோ என வருத்தம் கொள்கையில் இரு மனிதர்களின் அன்பு என்பது அடுத்து இருப்பது மட்டுமல்ல நெடு தூரத்தில் இருந்தாலும் மனதால் சேர்ந்திருப்பது என்ற கருத்தாக்கத்தில் அவர்கள் மறுபடியும் கைபேசியூடாக கதை பேச ஆரம்பிக்கையில் திரைப்படத்தை முடித்துள்ளனர்..
கென்ட் ஹாரப்ஃன் நாவலை தழுவி எடுக்கப்பட்ட திரைப்படம்.
அமெரிக்கன் முன்னாள் அதிபர் கிளிண்டன் முகச்சாயலுள்ள ரோபட் ரெட்போர்ட் நடிப்பு அபாரம். அவருக்கு போட்டியாக போஃண்டாவின் நடிப்பு அதிலும் சிறப்பு.
ஒவ்வொரு சட்டத்திற்கும், காட்சிக்கும் கொடுத்துள்ள ஆழவும் ( deep) மெனக்கெடலும் (treatment) அருமை.
இயக்குனர் பட்ராவின் கற்பனையும் அதை காட்சியாக வடித்த அவருடைய திறமையையும் பாராட்ட வேண்டும்.
காட்சியல் அழகியலுக்கும் முக்கியவத்துவம் கொடுத்த ரசனையான திரைப்படம்.
2018 ல். சிறந்த காதல் படத்திற்கான கோல்டன் ட்ரெயிலர் விருது பெறப்பட்டுள்ளது.
முதியவர்கள் வாழ்க்கையை மையக்கருத்தாக வைத்து முதியவர்களின் மனநிலையை ஆக்கபூர்வாக நம்பிக்கையூட்டும் விதமாக சொல்லியுள்ளதால் நான் விரும்பிய படங்களில் இதையும் சேர்க்க விரும்புகிறேன்.
தமிழகத்தில் திரைப்பட ஆட்கள், முதியவர்கள் என்றாலே இகழ்ச்சி, எள்ளாடல், கொலை உணர்வு துன்புறும் வதைக் கதைகளை தேர்வு செய்யாது; வயதானவர்கள் உணர்வுகளையும் மதிக்கும் இது போன்ற மனிதநேயத்தை குறிக்கும் படங்கள் எடுக்கும் காலம் விரைவில் வரவேண்டும.

The Laundromat


திரைப்படம் 'The Laundromat': ஆங்கில திரைப்படம். இயக்கம் ஸ்டீவன் சோஃபர்பெர்க்
பிரதம கதாப்பாத்திரம் மெரில் ஸ்ட்ரிப் என்ற நடிகை சிறப்பாக நடித்துள்ளார்.
2018 பிரிட்டனில் வெளியான படம். 2017 ல் வெளிவந்த புத்தகம் ஜாக் பெர்ஸ்டெயினின் "பனாமா தாளுகளிலுள்ள ரகசிய வார்த்தை" Secracy word inside the Panama Papers என்ற புத்தக கதையை ஆதாரமாக கொண்டு எடுக்கப்பட்ட திரைக்கதை. இந்த புத்தக ஆசிரியர் புலிசார் விருது பெற்ற பத்திரிக்கையாளர் என்பது சிறப்பு.
76 நாடுகளில் வியாபித்து படர்ந்த 1000க்கும் மேற்பட்ட கார்ப்பரேட் நிறுவனங்கள் இணைந்து நடத்திய 2,14,000நிதி நிறுவனங்கள் உள்ளடங்கிய,3500 குற்றவாளிகளை புறம் உலகிற்கு வெளிச்சம் காட்டிய 107 கட்டுரைகள் இதன் சார்ந்து ஊடகவியானர்களால் எழுதப்பட்ட பிரச்சனை தான்
பனாமா இன்ஷுரன்ஸ் நிதி நிறுவன ஊழல்.
இந்த உண்மை கதையை மையக்கருத்தாக கொண்டு எடுக்கப்பட்ட திரைக்கதை தான் இப்படத்தினுடையது.
வயதான எல்லா தம்பதிகள் ஒரு சிறு உல்லாசப் பயணம் மேற்கொள்ளுகின்றனர். படகு கவிழ்ந்து 23 பேர் மரணப்பட்டு விடுகின்றனர். மரணப்பட்டவர்களில் எல்லாவின் கணவரும் ஒருவர். வயதான காலத்தில் இணையை பிரிந்தது துயர் என்றால் விபத்து இழப்பீடுக்காற்காக அலைக்கழிக்கப்படுகிறார்.
ஒரு வகையாக நிறுவனத்தின் முகவரியை கண்டு பிடித்து வந்து சேர்ந்தால்; எல்லாம் ஊழல் நிறுவனங்கள் என தெரிகிறது.
வயதான காலம் குடியிருக்க ஒரு அப்பார்ட்டுமென்றுக்கு முன்கூர் பணம் கொடுத்து முடித்து வைத்துள்ளார். அங்கு வந்தால் ரஷியருக்கு விற்க போகிறோம் எனக்கூறி விரும்பிய வீடும் கை விட்டு போகிறது.
வருத்தம் மன அழுத்தம் சோர்விற்கு உள்ளான எல்லா, பின்பு இந்த கும்பலின் ஊழலை கண்டு பிடிப்பதுடன் திரைப்படம் முடிகிறது.
பண ஆசை பிடித்த ஊழல் மனிதர்களால்நிறுவனங்களால் சின்ன சின்ன ஆசையுடன் வாழ நினைத்த எழிமையான மனிதர்களில் வாழ்க்கை அலைக்கடிக்கப்படுவதை காணலாம்.
சீனர், கறுப்பினர், அமெரிக்கர் என பாரபட்சம் அற்று எல்லா நாட்டு ஊழல் ஏமாற்று பேர்வழிகள் இணையம் ஊடாக ஒன்று சேர்ந்து virtual உலகில் அதாவது குறிப்பிட்ட ஆள் அடையாளமில்லா ஆனால் பெயருள்ள நிறுவனங்களால் தங்கள் அரசிற்கு வரி ஏய்ப்பு செய்வது, அதீத ஆடம்பர வாழ்க்கையில் தங்கள் குடும்ப வாழ்க்கையை உயிரை இழப்பது . இவர்களால் ஒன்றுமறியா இடைநிலை மக்கள் ஏமாற்றப்படுவது என கதையை நகத்தியுள்ளனர்.
திரைக்கதைக்கு இன்னும் கவனம் செலுத்தியிருக்கலாம். இப்படத்தை black comedy யாக எடுத்திருந்தாலும் பல போதும் அந்த உணர்வை தரவில்லை.
ஒரு கறிப்பினர் தன் மகள் நண்பியுடன் தகாத உறவு வைத்திருப்பது கறுப்பினப்பெண் தன் பணக்கார கணவரால் ஏமாற்றப்படுவது என மிக நீளமான சீன் வைத்துள்ளார். இந்த திரைப்படத்தில் அந்த சீன்கள் எப்படி உதவியிருக்க இயலும். கதையை விட்டு நகந்தது மாதிரி தான் இருந்தது.
இருப்பினும் நிதி ஏமாற்று பேர்வழிகள் தங்கள் சொந்த குடும்பநபர்களைக் கூட ஏமாற்ற தயங்குவதில்லை என ஒரு காட்சியில் காண்பிப்பது நம்ப மறுத்தாலும் அது உண்மையே.சட்டங்களின் எளிமை இன்மையால் சாதாரண மக்கள் வக்கீல்களாலும் ஏமாறும் நிலையை எட்டுகின்றனர்.
விபத்து என்ற ஒரு பிரச்சினையில் மாட்டப்படுவதும் தொடர்கதையாக ஒவ்வொரு பிரச்சினையாக மனிதனை சுற்றி வளைப்பதும் பெண்ணாக இருந்தாலும் பெண்களாலுமே உதவி கிடைக்காது புரக்கணிக்கப்படுவது போன்ற காட்சியமைப்பு இயக்குனரின் நுட்பமான சமூக அவதானிப்பையை பறைசாற்றுகிறது.
இந்த திரைப்படம் என்னை மிகவும் பாதித்தது , புரிதல் தந்தது, நிஜநிலையை நினைவுப்படுத்தியது.
ஒரு விபத்து, ஒரு off shore திருடன், இன்ஷுரன்ஸ் நிறுவனம், ஒரு விபத்து வழக்கு வக்கீல், ஒரு பிராடு வங்கி என கடந்த நாலு வருடமாக என்னை அலைக்கழிக்கும் சில போது பைத்தியமாக்கும் சொந்த வாழ்க்கையும் நினைக்க வைத்தது.
ஒரு சீனில் எல்லா நிதி நிறுவனத்திற்குள் ஒரு மிஷின் துப்பாக்கியுமாக நுழைந்து நிறுவனரை எங்கே எனக்கேட்டு கொண்டே சுட்டு தள்ளி முன்னேறுவார் எல்லா. இதே போல் ஒரு நேரம் மனதால் நினைத்ததை

எண்ணி சிரித்து கொண்டேன். அது எல்லாவின் வெறும் கனவு என்ற போது திரைப்படத்தில் கூட இப்படியான ஏமாற்று பேர்வழிகளை சுட்டுத்தள்ள இயலவில்லையே என ஆதங்கவும் பற்றி கொண்டது.
எல்லோரும் காண வேண்டிய திரைப்படம். வங்கிகளை, நிதி நிறுவனங்களை சார்ந்து வாழ நிர்பந்திக்கப்பட்ட மனிதர்களுக்கு இது போன்ற திரைப்படங்கள் நிறைய படிப்பினைகளை தரும்.
ஆங்கிலத்தில் மிகவும் இயல்பாக , நமது தமிழ் படத்தில் போல நெடிய நீள பஞ்ச் உரையாடல்கள் வைத்து, ஹீரோயிசம் இல்லாது நிஜ மனிதர்கள் வாழ்க்கையை இயல்பாக அப்படியே சொல்லும் அழகான நல்ல திரைப்படம்.
படத்தில் அங்குகிங்கு ஒரு தொய்வு. நிதி நிறுவனம், பணம், பிரச்சினை என்று நினைத்தாலே எனக்கு தொய்வுதான். அந்த தாக்கவும் இருக்கலாம்...இருப்பினும் சமூகப்பாடமான திரைப்படங்கள் வரிசையில் இதையும் சேர்த்து கொள்ளலாம்


ஜெப்ரே எப்ஸ்டேன் Jeffrey Epstein

ஜெப்ரே எப்ஸ்டேன், மைனர் பெண்களை வைத்து , பாலியல் தொழில் செய்தார் என 2003 ல் தண்டனை பெற்று 13 மாதம் ஜெயிலில் இருந்தவர்.
பிற்பாடு எந்த தண்டனையும் பெறாது மறுபடியும் பெரும் தலைகளுடன் சுற்றி வந்தவர். பல கல்வி நிலையங்களுக்கு, உதவும் நிறுவனங்களுக்கு பணத்தை அள்ளி கொடுத்தவர்.
மறுபடியும் 2017 ல் அந்த கேஸ் தூசி தட்டி எடுக்கப்பட, 2019 ஆகஸ்தில் வழக்கின் தீர்ப்பு எதிர் பார்த்து இருக்கையில், சிறைச்சாலையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இந்த வழக்கை நாலு பகுதிகளாக சீரிசாக எடுக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கை அவதானிக்குகையில் பாதிக்கப்பட்ட யாரும் முன் வந்து வழக்கு பதியவில்லை.
ஒரு சந்தேகத்தின் பெயரில் ஒரு தாய், தன் மகள் இன்ன பகுதிக்கு எப்போதும் போகிறாள் என்று காவல்நிலையத்தில் புகார் அளிக்க காவல்த்துறை வழக்கை விசாரிக்கிறது.
அந்த விசாரணயில் அமெரிக்கா, இங்கிலாந்து , பிரான்ஸ் என பல நாடுகளுக்கு குற்றம் விரிவடைய கிளின்டன், ட்ரம்ப், இங்கிலாந்து இளவரசர் ஆன்ட்ரூ , பெரும் பணக்காரர்கள், அரசியல்வாதிகள் ,வழக்கறிஞர்கள் உண்டு என்றதும், போன வேகத்தில் வழக்கு கிடப்பில் ஆகி விடுகிறது.
ஒரு சிலந்தி வலை போன்று ஒரு பெண் மூலம் பல பெண்களை வலையில் வீழ்த்துவது. வெளிநாட்டில் படிப்பு , வேலை வாங்கித் தருகிறேன் என ஆசை காட்டி வீழ்த்துவது நடந்துள்ளது. 200 டாலர் பணத்திற்காக பல பெண்கள் தங்கள் தோழிகளுடன் பகுதி நேர வேலையாகவே இதில் ஈடுபட்டுள்ளனர்.
14-17 வயது பெண் பிள்ளைகளை பயண்படுத்தி விட்டு கருவேப்பிலை போன்று சொல்லப்பட்ட எந்த உதவியும் செய்யாது பிற்பாடுள்ள வாழ்க்கையில் ஒரு அழுத்தம் தரும் கண்காணிப்பில் வாழ விடப்பட்டுள்ளனர்.
வறுமையான சூழலிலுள்ள பிள்ளைகள், பெற்றோர் கவனிப்பற்ற பிள்ளைகள்,வாழ்க்கையில் எப்படியேனும் உயர்ந்த இடத்தை குறுகிய காலத்தில் அடைய ஆர்வம் கொண்ட பிள்ளைகள், பண ஆசை/ தேவை உள்ள பிள்ளைகளாக தேடிக்கண்டு பிடித்துள்ளனர். இதில் ஒரு போலிஸ் அதிகாரியின் பெண்ணும் பாதிப்படைந்திருப்பாள். அவளுடைய 20 க்கு மேற்பட்ட நண்பிகளையும் அறிமுகப்படுத்தி கொடுத்துள்ளாள்.
ஆடம்பர பயணங்கள், ஆடம்பர பங்களாக்களில் குடியிருப்பு என ஆடம்பர வாழ்க்கையில் இன்பம் கண்ட பிள்ளைகள் தங்களுக்கான புரிந்துணர்வு கொண்ட வயதை அடைந்ததும் தாங்கள் ஏமாற்றப்பட்டதாக எண்ணி மனம் உடைகின்றனர்.
தாங்கள் பெரும் ஆபத்தான வலை பின்னலில் மாட்டுப்பட்டதாக உணருகிறார்கள்.
குறைந்த பட்சம் கிடைக்கும் என நினைத்த கல்வியோ , வாய்ப்புகளோ கிடைக்கவில்லை என்றதும் தங்களுக்குள் ஒடுங்கி, குடிக்கும் மயக்கு மருந்திற்கும் அடிமையாகி மேலும் வாழ்க்கை துயருக்குள் நகர்கிறது.
தங்களை பயண்படுத்தியவர்கள், அதிகார பண பலமுள்ளவர்கள். அவர்களை தங்களால் எதுவும் செய்ய இயலாது என்ற ஏமாற்றம், சமூகத்தில் கிடைக்காத போன மதிப்பு , சாதாரண அமைதியான வாழ்க்கையும் இழக்கின்றனர்.
ஐரோப்பிய நாடோ ஆசிய நாடோ பாதிக்கப்பட்ட பெண்ணையே அவலமாக பார்க்கும் நிலையே உள்ளது.
பாதிக்கப்பட்டவர்களை கண்டு கொள்ளாது, பாலியில் குற்றவாளிகளை காப்பாற்ற நாடுகளின் உயர் பதவியில் இருப்பவர்களே குற்றவாளிகளுக்கு உதவுகின்றனர்.
இந்த பெண் வணிகத்தின் சூத்திர தாரையாக இருப்பதும் முதன்மை குற்றவாளியின் பெண் தோழி ஒருவரே. அவரோ பெரும் பத்திரிக்கை நிறுவன குடும்த்திலுள்ளவர், இங்கிலாந்து இளவரசரிடம் நட்பு பாராட்டக்குறியவர்.
1996 களில் ஆரம்பித்த குற்றம் 2018 வரை தொடர இயல்கிறது. 2019 ல் அவர் தண்டிக்கப்படுவதும் அடுத்த இருவருடத்தில் அமெரிக்கா அதிபர் எலக்ஷன் மனதில் வைத்தே நகர்த்தப்பட்டது. பெண்களுக்கான பாதுகாப்போ உரிமை மீட்டலோ அல்ல.
குற்றவாளி கடைசி வரை தன் குற்றத்தில் வருந்ததாது தான் ஒரு வேளை தண்டிக்கப்பட்டால் சேர்த்து வைத்திருக்கும் பல்லாயிரம் மிலியன் சொத்துக்களுக்கு பங்கம் வரக்கூடாது என்ற நிலையில் தற்கொலை செய்து கொள்ளப்படுகிறார் அல்லது பல தலைவர்களை காப்பாற்ற கொல்லப்படுகிறார்.
தற்போது வயது வந்தவர்களாக, தாங்கள் அறியாப்பருவத்தில் எப்படியாக பாலியலாக சுரண்பட்டோம் என்ற குற்ற உணர்விலும், துயரிலும் பெண்கள் வாழ உந்தப்படுகின்றனர்.
பாதிக்கப்பட்ட 100 க்கும் மேற்பட்ட பெண்களில் 20 பேர்கள் மட்டுமே தங்களுக்கு கிடைக்க வேண்டிய நியாயத்திற்காக வாதிட முன் வந்தார்கள் என்பதையும் கவனிக்க வேண்டியுள்ளது.
நமது நாட்டில் போல காதல் என்ற பெயரில் வழக்கை திசை திருத்தாது அதன் வியாபார அடிவேரை கண்டு பிடித்த அரசு சட்டத்திட்டம் மெச்சப்பட வேண்டியது.
உலகில் பழைமையான தொழிலான பாலியல் தொழிலில், அறியாத பருவத்தில் பல பல ரூபத்தில் நட்பியாக, உதவுவராக வரும் யாராலோ பெண் பிள்ளைகள் மாட்டுப்படுவதை சொல்லிய அருமையான ஆவணப்படம்.
பீடோபீலியா நோயாளிகள் எல்லா நாடுகளிலும் இருக்கையில், பெண் பிள்ளைகள் தங்களை காப்பாற்றி கொள்ள சில சமூக அறிவும் தேவையுள்ளது.
இது போன்ற சீரியல் உலகின் இன்னொரு முகத்தை படிப்பிக்க பெண் உலகிற்கு உதவும்.
இந்தியாவில் வருடத்திற்கு 15 ஆயிரம் குழந்தைகள் கடத்தப்படுகின்றனர். 54 சதவீதம் பெண்கள் 46 சதவீதம் ஆண்கள். 18 வயதிற்கு கீழுள்ள பெண்ணிடம் பாலியல் தொடர்பு கூடாது என வரையறுத்துள்ளது ஐரோப்பிய நாடுகள்.
இந்தியாவில் அந்த வயதை 16 என குறைத்துள்ளனர். 16 வயதிற்கு கீழுள்ள பெண்ணை பாலியல் தேவைக்கு பயண்படுத்துவதே இந்தியாவில் குற்றம்!

கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்"



ஒரு இரண்டு மணிநேரம், லாஜிக் மூளையை களற்றி பரணியில் வைத்து விட்டு பார்த்தால் சுவாரசியமான திரைபப்படம் "கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்".

தேசிங் 8 வருடம் மெனக்கெட்டு உருவாக்கின படைப்பு என்கிற போது நாம் ஆதரிக்க வேண்டிய திரைப்படம் தான்.
திரைவசனம், கதை , கதையை நகத்தும் விதம் சிறப்பு . கதை சொல்லத்தெரிந்த இயக்குனர். நம்மை விரசப்படுத்தவில்லை.
இரண்டு ஏமாற்று பேர்வழி ஆண்கள், இரண்டு ஏமாற்று பெண்கள். இவர்கள் நால்வரும் சேர்ந்து கொள்ளையிடுகிறார்கள்.
இளம் படைப்பாளிளுடைய சில மனநிலை , பார்வை தான் கதையை உதைக்கிறது. கோடியை சம்பாதித்து வைத்துள்ள பணக்காரன் ஏமாளி, பல வழக்குகள் சந்தித்த போலிஸ் அதிகாரி முட்டாள் தாங்கள் மட்டுமே புத்திசாலி என்ற நினைப்பு , மெதப்பு.....
அது ஏன் அனாத ஆசிரம பெண்களை திருடி கதாபாத்திரமாக தேர்ந்தெடுக்க வேண்டும். திருடிய கோடியை எடுத்துக்கொண்டு தாய்லான்டில் போய் வாழப்போகிறார்களாம். உங்க நினைப்பு பொழைப்பை கெடுக்காதிருந்தா சரி தான்...
தொலைக்காட்சி புகழ் ரக்ஷனின் உரையாடல்கள் timing மற்றும் வெளிப்படுத்தும் விதம் அருமை. இந்த நடிகருடைய தொலைக்காட்சி ஜோடி ஜாக்குலின் ஒரே ஒரு காட்சியில் வந்த போனது. எதற்கு என்று தான் இன்னும் புரியவில்லை.

துல்கரின் எப்போதும் போலய துள்ளலான அலட்டிக்கொள்ளாத நடிப்பு அருமை. கவுதம் மேனன் போலிஸ் அதிகாரியாக நடிக்கிறார். அவர் இயக்குவதை விட நன்றாகவே நடிக்கிறார்.
இணையம் ஊடாக தவறு இழப்பது, வயதான ஆண்கள் சமீப காலமாக இரையாகும் honey trap பற்றி பேசியுள்ளது. இளம் பெண்கள் தங்கள் உடல் வளப்பால், முதுமையான ஆண்களின் இயலாமையை அறிந்து ஏமாற்றுவதையும் அதை எந்த உளுப்பும் இல்லாது நியாயமாக்குவது தான் நெருடல்.

தனக்கான வெற்றிக்காக, எதையும் செய்யலாம், எப்படியும் செய்யலாம், யாரையும் பயண்படுத்தலாம் அந்த மனநிலை சாதாரணமாகவே பரவி வரும் வேளையில், அதில் ஒரு தப்புமில்லை உன்னை ஏமாற்ற வந்தால் அதே நாணயத்தால் திருப்பி கொடு என்பது திரையில் சுவாரசியமே. நிஜத்தில் பல சிக்கல்களை வருவித்து விடும்.

நம்மை கொஞ்ச நேர மகிழ்ச்சி மனநிலையில் வைத்திருந்த திரைப்படம்.
சில இடங்களில் தடுமாறியது. இருந்தாலும் பார்க்க கூடிய திரைப்படம். பார்க்க வைத்த திரைப்படம். ஆனால் நினைவில் ஒட்டாத திரைப்பபடம்.

27 May 2020

தல்வார்/ கில்ட்( guilt) -திரைப்படம்

2008 ல் தில்லி நொய்டாவில் ஒரு பல் மருத்தவ தம்பதி வீட்டில் தனது 14 வயது மகளும், 45 வயது வேலைக்காரனும் கொல்லப்படுகின்றனர். போலிசின் அஜாக்கிரதை, பொறுப்பற்ற விசாரணை முறையால் குற்றவாளியை கண்டு பிடிக்க இயலாது போகிறது.
14 வயது பெண் , பெற்றோர்கள் வாழ்க்கை முறை , இவை காவல்த்துறை அதிகாரிகளை தங்கள் கட்டுக்கதைகளால் நிரம்பி வழிய செய்கிறது. மீடியாவால் மிகவும் பேசப்பட்ட வழக்கு.
புலனாய்வுத்துறைக்கு மாற்றியும் அங்குள்ள அதிகாரிகளின் துறைக்குள் இருக்கும் போட்டி பொறாமையால், காழ்ப்புணர்ச்சியால் வழக்கின் திசை மாறி, பெற்றவர்களை ஜெயிலுக்குள் ஆயுள் தண்டனை கைதிகளாக தள்ளி விடுகிறது.
இருப்பினும் உண்மையான குற்றவாளிகள், வங்காள அகதிகளாக வந்த பணக்கார வீடுகளில் வேலை செய்யும் இரு நபர்கள் தான் இக்கொலை செய்தார்கள் என விசாரணையில் அறிந்தும்; அகதிகள் , சிறுபான்மையினர் என்ற நிலையில் இதுவரை தண்டனை கிடைக்கவில்லை.
இந்த படத்தில் புலனாய்வு அதிகாரியாக( கடந்த வாரம் மரித்த) இர்ஃபான் கான் நடித்துள்ளார். கங்கனா சென் குழந்தையின் தாயாராக, நீரஜ் கபி தகப்பனாகவும் , தபுவும் நடித்துள்ளார்.
மீடியா விசாரணை அதிகாரிகளின் போட்டி சாதாரண பெற்றோர்களின் வாழ்க்கையை 9 வருடம் ஜெயிலுகுள் தள்ளியது. காவல் த்துறை புனைந்த கதைகளும் மீடியா பொறுப்பற்று வெளியிட்ட செய்திகளும் கொல்லப்பட்ட சிறு பெண்ணின் மான்பை கெடுத்ததுடன் பெற்றோரை எவ்விதம் பிரச்சினைக்கு உள்ளாக்கினது என காணலாம்.
ஷுப்ஹ்ரா குப்தா எழுத்தில், திரைக்கதை விஷால் பரத்வாஜ், இயக்கம்.மேகனா குல்சார்.
இந்தியாவில் தல்வார்(வாள்) என்ற பெயரிலும் சர்வதேச அளவில் கில்ட்( guilt) என்ற பெயரிலும் வெளியிட்டனர்.
இந்த படம் வெளியானது 2015 ல் அப்போது பெற்றோர் சிறைச்சாலையில் தான் இருந்தனர். தங்கள் ஒரே மகளை இழந்ததுடன் மகளின் கொலைப்பழியையும் சுமந்தனர் . 2017 ல் இந்திய நீதி மன்றம் குற்றம் நிரூபிக்கவில்லை எனக்கூறி விடுதலை செய்தது.
தற்போது ஒரு கிராமத்தில் அமைதியான வாழ்க்கை இத் தம்பதிகள் வாழ்ந்து வருகின்றனர்.
நுபுர் தல்வார் சமூக சேவையிலும் மருத்துவர் ராஜேஷ் தன்னுடைய மருத்துவ தொழிலை மறுபடியும் சீரமைக்கும் பணியில் ஈடு பட்டுள்ளார்.
குற்றவாளிகள், இந்திய சட்டத்தின் ஓட்டை வழியாக தப்பித்ததும், தங்கள் வீட்டு வேலைக்காரனை முழுதுமாக நம்பி தங்கள் ஒரே மகளை இழந்த பெற்றோரை நினைத்த போது வருத்தமே.
இந்த இரட்டை கொலையை பின்புலமாக கொண்டு திரைப்படவும் ஒரு நாவலும் வெளி வந்துள்ளது.
இத்திரைப்படம் தேசிய அளவில் பின்னனி குரல் அமைப்பு , திரைக்கதைக்கு, சிறந்த வாழ்க்கை சரிதை படததிற்கான விருது பெற்றுள்ளது.