19 Apr 2012

இந்தியாவின் பொய் முகம்!


இந்தியாவின் பொய் முகம் கிழிக்கப்படும் நாட்கள் வெகு தூரமில்லை.     சுதந்திரம் அடைந்து 60 ஆண்டுகள் கடந்த பின்பும் மக்களின் வறுமையை ஒழிக்க இயலாத இந்தியா அரசால் மக்களுக்கு என்ன பிரயோசனம் என்று சிந்திக்க வைக்கின்றது.
26 ஆப்பிரிக்க நாடுகளில் குடிகொள்ளும் வறுமையை எதிர்கொள்ளும் மக்களை விட அதிகமான மக்கள்   பீகார், மத்தியபிரதேஷ் , மேற்க்கு பங்ளாதேஷ், உத்தர பிரதேஷ், ஒரிசா, உள்பட  8 மாநிலங்களை சேர்ந்த 420 மிலியன்  மக்கள் வறுமையின் பிடியில் உள்ளனர் என்று கணக்குகள் தெரிவிக்கின்றன.  காந்தியின் காங்கிரசாலோ உழைப்பாளிகளின் கம்னிஸ்டு ஆட்சியாலோ, எழைகளின் காவலன் லல்லு பிசாத், பாசமிகு அக்கா மமதா பானார்ஜியாலோ எழ்மையை ஒழிக்க இயலவில்லை! 

இந்தியாவில் 42 % மக்கள் (650 மிலியன்)  வறுமையில் வாழ்கின்றனர் இதில் 340 மிலியன் மக்கள் மிகவும் கொடியதான வறுமையில் வாழ்கின்றனர் என்பது மிகவும் துயர் தரும் உண்மை!  வறுமையை அளக்க என ஒரே அளவீடுகள்  இல்லை என்பதும்  நம் அதிகாரிகளின் மக்கள் பற்றிய அக்கறையை தெரிந்து கொள்ளலாம்.  அர்ஜுன் சென் குப்தா ஆய்வுப் படி 70 % மக்கள், 20 ரூபாய்க்கு குறைவான தின வருமானத்தில்  வாழ்கின்றனர் என்று கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. 

வறுமைக்கு காரணம் உலக பொருளாதாரம், இந்தியாவின் பொருதாளாதார கொள்கை என்று பல பல காரணங்கள் சொல்லப்பட்டாலும் இந்தியாவில் நிலைகொள்லும் கொள்ளக்கார அரசியல் கூட்டத்தின் பங்கும் மிகபெரிதாக உள்ளது.  55% மக்கள் கையூட்டு கொடுத்தே தங்கள் தேவைகளை அரசு இயந்திரங்களில் இருந்து பெற்று கொள்கின்றனர்.

இந்த கேவலமான நிலையிலுள்ள இந்தியாவை ஆளும் அதிகாரிகள் பக்கத்து நாடுகளுக்கும் தாங்கள் உதவி செய்வது போல் காட்டி கொண்டு வெளி நாடு பயணம் மேற்கொண்டு  ஏழைகளின் பணத்திலே சுற்றி வருகின்றனர் என்பதும் இன்னும் மோசமான வருந்த தக்க செயல் . மேலும் இந்த அளவு ஏழைகள் வசிக்கும் நாட்டின் அதிபருக்கு பயண செலவு மட்டும் 205 கோடிகள், 181 மிலியன் மக்கள் வசிக்க சொந்தமாக வீடு இல்லாது துயர் கொள்ளும் போது ஓய்வு பெறப்போகும் அதிபருக்கு  வசிக்க  8 கோடி செலவில் 5 ஏக்கர்(2,60,000 சதுர அடி நிலப்பரப்பு)  இடம் கொண்ட குடியிருப்பு!  என ஊழலை எண்ணி கொண்டே போகலாம். 

 இன்றைய பத்திரிக்கை செய்திப்படி இந்தியா  3.10 கோடி ரூபாய் உதவி தருகின்றதாம் ஸ்ரீலங்காவுக்கு. 1970 களில் இலங்கை மேற்கு நாடுகளிலும் சிறப்பாக இருந்துள்ளது.  மக்கள் செழிப்பாக வாழ்ந்துள்ளனர் என்ற சான்று உள்ளது. ஆனால் இந்தியாவின் குள்ளை நரி அரசியலால்  போர் முகத்லே கழித்து  இன்றைய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.  இருப்பினும் இப்போதும் இலங்கையை சுற்றி பார்த்து வரும் நண்பர்கள் கருத்துப் படி சுகாதாரத்திலும் பண்பிலும் இந்தியாவை விட சிறப்பாக உள்ளதாகவே சொல்கின்றனர்.

ஈவு இரக்கமின்றி ஈழ மக்களின் இழிய நிலைக்கு காரணமாகி; பெரும் பகுதியான மக்களை அழித்து துன்பத்திற்க்கு உள்ளாக்கி விட்டு எத்தகைய முகத்துடன் மறுமடியும் அம்மக்களை சந்திக்க இந்திய அரசியல் கூட்டத்திற்க்கு துணிவு வருகின்றது.  ஈழத்தை பற்றி கவலை கொள்ளும் இந்திய அரசு தன் சொந்த நாட்டு மக்களின் நலனில் எவ்விதம் ஆற்வமாக உள்ளது என்பது நிகழ்கால பல சம்பவங்கள் உணர்த்துவதே.  பட்டிணி மரணம், சத்து குறைவான குழந்தைகள், உடல் நலம் குற்றிய இளம் பெண்கள் என இந்தியா தன் மக்களை மாபெரும் இன அழிப்புக்கு அழைத்து செல்கின்றது என்றால் பிழை ஆகாது.  ஈழத்தில் 50 ஆயிரம் வீடு கட்டி கொடுத்தாக சொல்லப் பட்டாலும் ஈழத்தவர்களின் விருப்பத்திக்கும் கலாச்சாரத்திற்க்கும் ஒத்த வீடா என்பதும் கேள்விக்குறியே. வியாபாரம் நோக்கம் கொண்டு அண்டைய நாட்டை மட்டுமல்ல தன் சொந்த நாட்டு மக்களையும் அழித்தது என்ற வரலாறு எழுத  உள்ளது என்பது தான் துயரான உண்மையும்!

13 Apr 2012

தெருவு நாயும் தெருவோரக் கடைக்காரர்களும்!


சமீபத்தில் தெரு நாயை கட்டுப்படுத்த நடைபாதை கடைகளை ஒழிப்பது அல்லது நெறிப்படுத்துவது நல்லது என தினமணி தலையங்கம் எழுதியிருந்தது. தெரு நாய் தொல்லை! தெருநாயை கட்டுப்பட்டுத்த எத்தனையோ வழிகள் உள்ள போது தெருக்களில் கடை வைத்திருக்கும் மனிதர்களை தெருநாயுடன் இணைத்து வந்த பத்திரிக்கை செய்தி மனித நேயமற்றதும் கண்டனத்திற்க்கு உரியதும் என்பதில் மறுப்பில்லை. இந்த தலையங்கம் எழுத பெரிய உணவக முதலாளிகள் பத்திரிக்கையாளர்களுக்கு இனாம் கொடுத்திருப்பார்களோ என்று சந்தேகம் வலுக்கின்றது. ஆனால் இதை மெய்ப்பது என்று நெல்லையில் ஜங்ஷன் சுற்றி இரவு நேரக் கடைகள் அனுமதிப்பது இல்லை என்பது அரசு சட்டமாக வந்துள்ளது  என்பது சமீபத்திய செய்தி. 


நெல்லையை பொறுத்தவரை  பெரிய கடைகளில் கிடைக்கும் இட்லியை விட நியாயமான விலையில் தெருவோரக் கடைகளில் கிடைக்கும்.  பெரிய கடை என நாம் எண்ணும் பல கடைகள் சுத்தமாக பேணுவதில்லை.  இங்கு பெண் வேலையாட்கள் மலிவாக கிடைக்கின்றார்கள் என்பதற்க்காக துடப்பம், எச்சில் வாளியுடன் ஹோட்டல் மேஜைக்கு மேஜை பெண்களை நிறுத்தியிருப்பார்கள். சாப்பிட்டு முடிக்கும் முன்னே வாளியுடன் அருகில் வந்து நிற்க ஆரம்பித்து விடுவார்கள்.  மேலும் புளித்த சாம்பாறு கெட்டு போன சட்டிணியை வாசிக்கையாளர்களுக்கு பரிமாறி விட்டு நம் முகபாவத்தை தூரத்தில் நின்றே அவதானித்து கொண்டிருப்பார்கள். கை துடைக்க  செய்தித் தாள், வாய் கொப்பிளிக்க சுத்தம் இல்லாத தொட்டிகளே பல உணவகங்களிள் உள்ளது. பரிமாறும் மனிதர்கள் கூட சுத்தமாக நிற்பதில்லை.
இதனாலே பல வீடுகளில் தெருவோர கடைகளில் இருந்து பார்சல் ஆக வாங்கி வீட்டில் சென்று உண்ணும் வழக்கம் உள்ளது. மேலும் தெருவோரக் கடைகள் வழியாக பல ஏழைகள் தங்கள் வாழ்க்கையை நடத்துகின்றனர். 



ஜங்ஷனின் தெருவோரக் கடை வைத்திருக்கும் பெரும் பகுதியான மக்கள் மீனாட்சிபுரத்தில் தாமிரபரணி நதிக்கரையில் வசித்து வந்தனர். சமீபத்தில் இவர்களை நகரத்தின் ஒதுக்குப் புறத்தில் குடியிருப்புகள் அமைத்து வலுக்கட்டாயமாக குடியமத்தினர்.  இம்மக்கள் தங்கள் வியாபாரத்திற்க்கு என மாலை 5 மணி பேருந்தில் சென்று இரவு 10 மணிக்கு திரும்பி வரவேண்டியுள்ளது .   பேருந்து கட்டணம் போய் வர 24 ரூபாய் செலவு ஆகும். டவுண் அருகிலுள்ள குடியிருப்புகளை பிடுங்கியதும் போக  கடைகள் நடத்தவும் அனுமதிக்காது இருப்பதால் இவர்கள் வாழ்வு ஆதாரம் கேள்விக் குறி ஆகி விடும்.  இவர்களும் மற்று மனிதர்களை போல் உயிர் வாழ வேண்டும்; தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப வேண்டும்.  இச்சூழலில் தற்கொலை அல்லது பட்டிணி மரணம்  ஒன்று மட்டுமே சாத்தியம் ஆகும். ஆனால் அரசு உதவி என்று இனாம் கொடுத்து தன்மானமாக வாழும் உரிமையும் பறிக்கின்றது.

தெருவோர கடைகளால் சுகாதாரம் போன்ற பல பிரச்சனைகள் உண்டு என மறுப்பதற்க்கில்லை. இதை நெறிப்படுத்தாது  கடைகளே கூடாது என்பதில் நியாயம் தெரியவில்லை. பல தெருவோரக கடைகள் ஆயிரங்கள் வாடகை கொடுத்தே தெருவில் கடை நடத்துகின்றனர். மேலும் போலிஸ், தெருவு ரவுடிகளுக்கும் இவர்கள் கப்பம் கட்ட வேண்டியுள்ளது.  இந்நிலையில் சட்டத்தால் இவர்களை அச்சுறுத்துவதும் சில நோக்கங்கள் கொண்டு  மட்டுமே.  இவர்கள் குரல்களையும் ஒலிக்க செய்ய வேண்டிய ஊடகவும் இவர்களுக்கு எதிராக களம் இறங்கியிருப்பது  ஜனநாயகத்திற்க்கு செய்யும் துரோகமே.

பத்திரிக்கை, அரசு எல்லாம் ஒன்று சேர வசதி படைத்தவர்கள் பக்கம் நின்று கதைப்பதால் ஏழைகள் என்ன செய்ய கூடும். ரஷியா-புரட்சியில் நடந்தது போன்று  மந்திரிகைகள், பணக்காரர்கள் தெருவுக்கும் தெருவோர மக்கள் தெருவுகளில் இருந்து அவர்கள் வீடுகளுக்கும் குடியேறும் நாட்கள் நெருங்கி வருகின்றதா?

12 Apr 2012

கற்பனைகளால் வேட்டையாடப்படும் மனிதர்கள்!


 

ஒருவருடைய தனிப்பட்ட வாழ்க்கையை பற்றி விவாதிக்க யாருக்கும் உரிமை இல்லாவிடிலும் எதை சுதந்திரம் என பரைசாற்றினாரோ அதை எல்லாம் என் தவறு நான் மாற வேண்டும் என்னை கட்டுப்படுத்த வேண்டும், சுதந்திரம் எனக்கு பாரம் என்று சமூகத்திற்க்கு சொல்லியது வழியாக இதுவரை அவர் எழுதிய அவர் எண்ணங்கள் எல்லாம் பொய்மை என்று சொல்லி விட்டு சென்றுள்ளாரா என்ற வினாக்களை நம்மை சிந்திக்க வைக்கின்றது. 

திடீர் என ஒரு பத்திரிக்கையாளர் கூட்டத்திம் முன் மொழிந்தார் நான் ஹிந்து மதத்தில் இருந்து இஸ்லாம் மதத்திற்க்கு மாற போகின்றேன்.  இஸ்லாம் மதம் மட்டுமே பெண்களுக்கு வேண்டிய பாதுகாப்பு தருகின்றது. இஸ்லாமிய பெண்கள் அணியும் பர்தா என்ற உடை மட்டுமே மிகவும் கண்ணியமானது.  எனக்கு தேவையான அன்பு பரிவு எல்லாம் ஹிந்து மதத்தில் கிடைக்கவிலை. என் கணவர் உயிருடன் இருக்கும் போதே இதை பற்றி விவாதித்துள்ளேன், மேலும் எனக்கு இந்துவாக எரிக்கப்பட விருப்பமில்லை இஸ்லாமாக மரிக்கவே விரும்புகின்றேன் எனவும் சொல்லியுள்ளார்.  அல்லாஹுவுக்காக கவிதை எழுதி வாழ்வதை என் லட்சியம் இதற்க்கே அல்லா தன்னை படைத்தாகவும் பரைசாற்றிய இவருக்கு ஹிந்து தீவிரவாதிகளால்  சாதாரண நிலையில் சமூகத்தில் வாழ அச்சுறுத்தல் வர ஆரம்பித்து விட்டது.  கொலை மிரட்டல்கள் மட்டுமல்ல இவரை கண்டால் மக்கள் துப்பும் நிலைக்கும் தள்ளப்பட்டார்.  தன் சொந்த வீட்டுக்கு செல்ல இயலாது தன் முதிர் வயது தாயாரை பார்க்க அனுமதிக்காது துன்புறுத்தப்பட்டார்.  இவருக்கு போலிஸ் பந்தோஸ்து அரசால் கொடுக்கும் சூழலும் உருவாகியது.  

நோபல் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டவருக்கு  இந்திய நாட்டின் விருதுகள் கொடுக்க முட்டு கட்டையாகியது இவருடைய மத மாற்றம்.  இப்பெண் காதல் கொண்டு ஆட்கொள்ளப்படவில்லை காமம் கொண்டு அலைபவள் என குற்றம்சாட்டப்பட்டு  மதிக்க தகுந்த விருதுகள் இவருக்கு கொடுக்க கூடாது என்று போர் கொடி பிடித்தனர் சில கேரளா மக்கள்! இருப்பினும் கேரளா அரசின் எழுத்தச்சன் விருது சாஹித்திய அக்காதமி விருதுகள் போன்றவை பெற்றுள்ளார்.  (தற்போது பாரத ரத்னா போன்ற விருதுக்கு என் தாயார் தகுதியானவரே என்று இவருடைய இளைய மகன் கோரிக்கை வைத்துள்ளதும் குறிப்பிட தகுந்தது. )

பத்திரிக்கையாளரும் கல்வியாளருமான  இவருடைய முதல் மகனிடம் மாதவி குட்டி வாழ்க்கை, மரணம் பற்றி வினவிய போது "எங்கள் அம்மா சிறந்த தாய். அவருடைய எழுத்தை பற்றி நாங்கள் ஒரு போதும் சிந்திப்பது இல்லை". "அவருடைய எண்ணங்களை துணிவாக கூறியதால் நிறைய எதிர்ப்புகளை சந்தித்தார். இருப்பினும் எழுத்துலகில் அவர் ஒரு திரைநட்ச்சத்திரம் போல் விளங்கி வாழ்ந்து மறைந்தவர்.  தாயின் விருப்பத்தை நிறைவேற்றுவது மகன்களின் கடமை என்பதால் மதம் மாறும் அம்மாவின் விருப்பத்திற்க்கு மறுப்பு தெரிவிக்கவில்லை" என தன் கருத்து கூறினார். மேலும் என் அம்மா, அப்பா சிறந்த தம்பதிகளாக வாழ்ந்தனர். அப்பா எங்கள் அம்மாவை முகாந்திரம் இல்லாது அவரை அவராகவே நேசித்தார் என கூறியுள்ளார்.


மாதவி குட்டி தன் 65 வயதில் 2 வது திருமணத்ற்க்கு என முடிவெடுத்த போது அவருடைய கொல்கத்தா நண்பர் உங்கள் காதலரை காணலாமா என்ற போது வேண்டாம் உங்களை கண்டால் என் காதலர் பொறாமைப்படுவார் என்று அவருக்குரிய நகைப்பில் கூறினாராம்.  நேர் காணல்! பத்திரிக்கையாளர் சந்திப்பில், உங்கள் சுதந்திரத்திற்க்கு இந்த மத மாற்றம் இடஞ்சல் தராதா என்ற போது எனக்கு பாதுகாப்பு தான் தேவை எனக்கு சுதந்திரம், விடுதலை வேண்டாம் என் வாழ்வை நெறிப்படுத்த வேண்டும். இஸ்லாம் கடவுள் மட்டுமே மன்னிப்பு தருவர் ஹிந்து தெய்வங்கள் தண்டிப்பவையே என்று கூறியிருந்தார். 


காதலன் உறவில் விரிசல் வந்த பின்பு கேரளாவை விட்டு பூனாவில் சென்று வாழ 2007 ல் முடிவெடுத்தார். பூனாவில் 2009 ல் தன்னுடைய இளைய மகன் வீட்டு அருகில் மரணிக்கும் போதும் காதலன் உடன் இருந்தாக தகவல் இல்லை.   அல்லாவுக்கு முதல் முதலாக புத்தகம் எழுதிய பெண் நான் என்று அவர் சொல்லியது போலவே  ஒரு குடும்பத்தில் இருந்து தனி நபராக கல்லறையில் குடியிருக்கும் பெண்ணும் மாதவிகுட்டியாக மட்டுமே இருப்பார். கடைசி நாட்களில் மதம் மாறியதில் நொந்து கொண்டதாகவும் ஒரு மனிதன் மதம் மாறுவதால் எந்த பயனுமில்லை என்று கூறியதாகவும் சொல்லப்படுகின்றது.  


காதலன் வருகை, புது மத நம்பிக்கை, பர்தா, பெண் விடுதலை என எண்ண அலைகளால் நிம்மதியாக வாழ வழியற்று 75 வயதில் இந்த உலகிற்க்கு விடை சொல்லியதும்  துயரே. தன் எழுத்துக்கள், எண்ணம், சிந்தனைகள்  விடுதலை அளித்ததா அல்லது பெண் விடுதலை என்பது எந்த வகையில் எப்படி காண்கின்றார் என  மாதவி குட்டியிடம் யாரும் கேட்டனரா அல்லது பல உண்மைகளை "கமலா சுரைய்யா" என்ற பெயரில் பர்தா வாழ்கையில் அடைக்கி விட்டாரா என்பதும் விடையில்லாத கேள்வியாகவே மாறி விட்டது. 

இன்னும் நெருடலான விடயம் ஒரு பெண் கோடுகளை தாண்டுவது என்பது அன்பற்ற கணவர், ஆதரவற்ற குடும்பம்  என்பது மட்டுமல்ல, சில உளவியல் காரணங்களும் காரணம் ஆகின்றது  என்று அர்த்தம் கொள்ள வேண்டியுள்ளது.

  மாதவிகுட்டியை அவர் கணவர் மகன்கள் அவராகவே  ஏற்று கொள்கின்றனர். அவரை  கட்டுப்படுத்த நினைத்தது இச்சமூகமே! அன்பு எனக்கு வேண்டும் வேண்டும் என கதறிய மாதவி குட்டிக்கு அவரை முழுதுமாக புரிந்து நேசித்த கணவர் இருந்தார் அம்மாவின் குறைகளை காணாது அம்மாவின் நிறைகளை மட்டும் நோக்கிய பண்பான 3 மகன்களும் இருந்தனர். ஆனால் இவரை வேட்டையாடிய சில கற்பனைகளும் இவருடன் பயணித்தது என்றால் அதுவும் மெய் தானே!!

மாதவிகுட்டியை தாங்கிய ஏற்று கொண்ட அளவுக்கு ஒரு சாதாரண பெண்ணை இந்த சமூகம் ஏற்று கொண்டிருக்குமா? பல கொலை தற்கொலைகள் கூட பொருந்தாத சிந்தனை வாழ்க்கைக்கு பரிசாக கிடைப்பது தானே. மாதவிகுட்டியே தன் சிந்தனைகள் தனக்கு உதவவில்லை என்று வாழ்க்கையால் எழுதி வைத்து விட்டு தானே சென்றுள்ளார்?


கற்பனைகள் கலந்த நிஜவாழ்க்கை!

1999 Nov.1, முஸ்லிம் லீக் மலபார் சட்டமன்ற உறுப்பினரும், மருத்துவருமான  38 வயதுடைய சாதிக் அலி என்ற வாலிபன் 65 வயதை கடந்த ஒரு மூதாட்டியை சந்திக்க அனுமதி கோருகின்றார்.  இவர் கேரளா இலக்கிய உலகில் கதை, மற்றும் கவிதை எழுத்தால் தன் பக்கம் ஈர்த்த புரட்சி கவிஞ்சி!  தன்னை சந்திக்க வெறும் 2 மணி நேரம் அனுமதிக்கின்றார்!  கொச்சியில் ஒரு கிராமத்தில் இருந்து தன்னுடைய காரில் 4 மணி நேரம் பயணப்பட்டு பெண் எழுத்தாளர் வீட்டை அடைந்து விடுகின்றார் அந்த வாலிபர்.  கவிஞ்சியின் பணிப்பெண் கதகை திறக்க, ஓடி வந்து பெண் கவிஞரின் கால் பக்கம் வந்து அமர்ந்து கதைக்க ஆரம்பிக்கின்றார்.  கதைக்கின்றனர்…. கதைக்கின்றனர்…. கண்டு செல்ல வந்தவனுக்கு மதிய உணவும்  தயாராகி விட்டது.  மூதாட்டியிடம் ஆசையுடன் கேட்கின்றான் நீங்கள் எனக்கு வாயில் உணவை ஊட்டி விடுவீர்களா? அவரோ “ஐயோ எங்கள் பாட்டி சொல்லியுள்ளார் நீங்கள் செத்த மாட்டை உண்பவர்கள் உன் உதட்டில் என் கை பட்டால் தீட்டாகி விடும்”. வந்த இளைஞனும்  விட்ட பாடில்லை அப்படி என்றால் நான் ஊட்டி விடவா உங்களுக்கு!  

imageசந்திப்பு இப்படியாக துவங்கியது என்றாலும் காதல் கவிதை எழுதும் கவிஞரின் இளமையை; கற்பனையை தூண்டி விடும் படியாக இந்த சந்திப்பு அமைந்து விட்டது.   பின்பு பல நாட்கள் தூக்கமற்று அதிகாலை வரை தொலைபேசியில் பேசும் படி அவர்கள் உறவு வளர்ந்தது.   கவிஞ்சி தன் பணிப்பெண்ணுடன் 3 நாள் அந்த இளைஞனின் வீட்டில் தங்குகின்றார்.  திரும்பும் வழியில் சூரியன் ஒளியை நோக்கி கொண்டே வருகின்றார் காலை சூரிய ஒளி சிவப்பாகி தூய வெள்ளையாக மாறிய போது அல்லா தனக்கு இஸ்லாம் மதம் மாற அழைக்கின்றார் என்று தெரிந்து கொண்டார்.  இனி தன் வாழ்க்கை தன் 37 வயது காதலனுடன் தான் என்று தீர்க்கமான முடிவு எடுத்து விடுகின்றார்!

imageஇந்த மூதாட்டி தான் மாதவிகுட்டி என்று மலையாள கதை உலகிலும், கமலா தாஸ் என்ற பெயரில்  ஆங்கில கவிதைகைளால் நோபல்பரிசுக்கும் பரிந்துரைக்கப்பட்டவர்!  வெறும் பள்ளிப்படிப்பு முடித்த இவருடைய ஆங்கில கவிதைகள், பல உலக பல்கலைகழங்களில் பாட புத்தகமாகின. பாடம் நடத்தும் கவிஞ்சி! கனடா, இங்கிலாந்து போன்ற நாடுகளிலுள்ள கல்லூரி வகுப்புகளில் பாடம்  எடுத்துள்ளார்.  ஒரு முறை சொல்லியிருந்தார் எனக்கு கணக்கு பாடம் என்பது மிகவும் கடினமாக இருந்தது.  ஆகையால் படிக்கும் ஆர்வம் இழந்து 15 வயதில் திருமணம் முடிந்த நிலையில் கணவருடன் கொல்கத்தாவில் குடியேறி விட்டேன்.  கணவருடைய ஊக்கப்படுத்தினதாலே எழுத்துலகில் கால் பதிக்க இயன்றது.   நான் என்ன எழுதுகின்றேன் என்று ஒரு போதும் கேள்வி கேட்காதவர் என் கணவர்;  ஒரு போதும் தன்னிடம் காள்புணர்ச்சி கொள்ளாதவர் எனக்கு கணவர் மட்டுமல்ல நண்பர் பாதுகாவலர்,  தந்தை, சகோதரர் என எல்லாம் அவர் தான்! 

பெண் சுதந்திரம், விடுதலை என்ற நோக்கில் மலையாள பத்திரிக்கையில் எழுதி வந்த இவர் திருவனந்த புரம் ராஜா குடும்பத்தில் தனது முதல் மகனுக்கு பெண் எடுத்தவர். இவருடைய தந்தை மாத்திரு பூமி என்ற பத்திரிக்கையின் பத்திரிக்கையாளராகவும் ,  தாய் மாமா நாராயணன் நாலப்பாடு சிறந்த எழுத்தாளர்; மட்டுமல்ல இவருடைய தாயார் மலையாள எழுத்து உலகில்  பாட்டி ஸ்தானத்தில் இருக்கும் பாலாமணி என்பரே.  தீவிர  கிருஷ்ண-கடவுள் பக்தையான இவர் பல கவிதைகள் கிருஷ்ண பகவானின் நினைப்பில்  தான் ராதையாகவே கற்பனை கொண்டு எழுதியுள்ளார். 
 
1934 ல் பிறந்த இவர் தனது 15 வயதில் தன்னிலும் 15 வயது முதியவரான  வங்கி அதிகாரி மாதவ தாஸின் மனைவியாகி 3 ஆண் குழந்தைகள்  அம்மா, குடும்ப தலைவி என கொல்கத்தா நகரில் வசித்து வந்தவர்.  பெண்கள் உணர்வுகளை  இந்த சமூகம் புரக்கணிக்கின்றது  பெண்கள் தங்கள் உண்மையான விருப்பு வெறுப்புகளை வெளிப்படுத்த இயலாதவாறு முகமூடி அணிந்த வாழ்க்கை வாழ்கின்றனர் என்பதே மாதவியின் குற்றசாட்டாக இருந்தது.  இதற்க்கு ஒரு தீர்வு பெண்களுக்கு கிடைக்க வேண்டும் என்பதும் இவர் எழுத்தின் நோக்கமாக  இருந்தது.

imageதனது 42 வயதில் ‘என்ற கதா’ (என்னுடைய கதை) என்ற வாழ்க்கை சரிதம் வெளியிட்டதுடன் இவர் மேல் பல மக்களுக்கு வெறுப்பு ஆரம்பம் ஆகி விட்டது. கொல்கத்தாவில் கணவருடன் வசித்த போது பல ஆண்களுடன் தனக்கு உண்டான  தொடர்பை பற்றி கதைத்திருந்ததால் ஒழுக்கம், கண்ணியம் என்று நோக்கப்பட்ட சமூகத்திற்க்கு இது ஒரு பேரிடியாக இருந்தது.  மீறல்களை வழக்கமாக கொண்ட பெண்ணாக நோக்க ஆரம்பித்தனர் இவரை.  உண்மையை எழுதினேன் என்றும் ஒவ்வொரு பெண்ணின் வாழ்விலும் நடப்பது தான், பெண்கள் தங்களை ரொம்ப நல்லவர்களாக காட்டி பொய்மையாக வாழ்கின்றனர் என்றெல்லாம் சொல்லி பார்த்தார்.  பின்பு புத்தகம் விற்க வேண்டும் என்ற நோக்குடன் சில நிகழ்வுகளை கற்பனை கலந்து  சேர்த்துள்ளேன் என்று கூறி தப்பித்து கொண்டார். சும்மா இருக்கும் சங்கை ஊதி கெடுக்கும் ஆசாமி என்று 1980 களில் “உலகில் மிகவும் அழகானது நிர்வாணமான பெண்கள் தான் என்று கூறி கொண்டு பெண்கள் நிர்வாணப்படங்களை வரைந்தது புத்தகமாக பதிவிடவும் செய்த இவரை பலர் “கோட்டிகாரி” என  அழைக்கவும் ஆரம்பித்தனர்.

  இந்த நிகழ்வுகள் மறக்கப்பட்டு அவருடைய  கதைகள் திரைப்படங்களாக வர துவங்கிய காலகட்டத்தில் தான் 1999 Nov 1 மறுபடியும் அவரை விவாதங்களுக்கு இட்டு சென்றது. தனக்கு சுதந்திரம் பாரமாக உள்ளது இனி பாதுகாப்பு மட்டும் போதும் என்னை கட்டுப்படுத்த வேண்டும், பர்தா மட்டுமே பாதுகாப்பான உடை என்று புது பெண் சுதந்திர கதைகளை கதைக்க ஆரம்பிக்கின்றார் மட்டுமல்ல கேரளா ஹிந்து சமூகத்தின் எதிரியும் ஆக்கப்பட்டார்!........

9 Apr 2012

பிச்சைகாரர்கள் ஈஸ்டர் கொண்டாட்டம்!

ஈஸ்டர் அன்று வகுப்பு தோழனின் சகோதரிக்கு திருமணம்.  நண்பர்களையும் நிகழ்ச்சியில் கண்டு விடலாம் என்ற ஆர்வத்தில் நானும் கலந்து கொண்டேன்.   என் வகுப்பில் 7 பெண்களும் 7 ஆண்களும் படித்தனர்.  7 வகுப்பு தோழர்களும் தமிழகத்திலுள்ள ஊடகத்துறையில் பணிபுரிகின்றனர்.  2 வருடம் கழிந்து மறுபடி சந்திக்கும் போதும் வகுப்பில் கண்ட அதே நட்புடன் அதே தோழமையுடன் பேசி மகிழ்ந்தது உண்மையிலே நல்ல ஈஸ்டர் ஆக தான் இருந்தது.

 விருந்து முடிந்து குழந்தைகள் விருப்பத்திற்க்கு இணங்க பயணத்திற்க்கு தயாரானோம்.  மகன்களுக்கு கடலில் விளையாட வேண்டும் என்ற ஆர்வம்,

எனக்கு  மணல் மாதா கோயில் செல்ல வேண்டும் என  ஆர்வம்!  பலமுறை நினைத்தும் பல காரணங்களால் செல்ல முடியாது போனது.   மிகவும் சிரமப்பட்டு கோயில் வளாகம் சென்றடைந்தோம்.  நினைத்து சென்ற ஒரு பிரமாண்டவும் தெரியவில்லை.   அதன் அமைப்பு கோயில் போல் அல்லாது வீடு போன்று இருந்தது.   முதல் முதலாக மாதா கோயில் இப்படியான தோற்றத்தில் காண்கின்றேன்.  

குடும்பம் குடும்பமாக வந்து நேர்த்தி கடன் செலுத்தி விட்டு செல்கின்றனர். பலர் உணவு பொட்டலங்கள் கொண்டு வந்து அங்கு இருக்கும் எளியவர்களுக்கு கொடுக்கின்றனர். நாங்கள் சென்ற போது ஒரு பெரிய குடும்பம் வந்திருந்தது. அதில் 2  ஆண்கள் கோயில் வாசலில் நின்று  எய்ட்ஸ் வந்த பெண்கள் எப்படி இருப்பார்கள்   ஒருவன் சொல்கின்றான், பார்க்க நல்லா தான் இருப்பார்கள் ஆனால் எய்ட்ஸ் இருக்கும்.  அவர்கள் மனைவிகள் பக்தியாக கோயிலை சுற்றி சுற்றி வந்து பிரார்த்தனையிலும்,  கோயில் வளாகத்திலுள்ள  சிவப்பு மண்ணை பற்றி தேவைக்கதிமான பிரமிப்பை காட்டி தீர்க்கமாக பேசி கொண்டிருந்த போது இவர் கணவர்களுக்கு இந்த பேச்சு அவசியம் தானா என எண்ண தோன்றியது.


கோயிலை சுற்றி புகைப்படங்கள் எடுத்து கொண்டிருந்த போது ஒரு குழு, தங்களுக்கு கிடைத்த பணத்தை பங்கிட்டு கொண்டிருந்ததை கண்டேன். அங்கு உருவான தர்க்கத்தை அந்த குழு முதியவர் தீர்த்து வைத்து கொண்டிருந்தார்.  அதில்  ஒரு முதிய பெண் வந்து என்னையும் புகைப்படம் பிடியுங்கள் என கேட்டு கொண்டார்.  அவர்கள் அங்கு பிச்சை எடுப்பவர்களாம். மிகவும் உற்சாகமாக காணப்பட்டனர்.  என்னையும் படம் பிடியுங்கள் என கேட்டு கொண்டு இன்னும் சில பெண்களும் முன் வந்தனர். 

"துட்டு தாங்க" என்ற போது என்னிடவும் கை தொலைபேசி தவிர ஒன்றுமில்லை. உங்களை போல் தான் நானும், என்றதும் மிகவும் அன்னியோன்யமாக இயல்பாக கதைக்க ஆரம்பித்து விட்டனர். ஒரு முதிய பெண் நீங்க என்ன ஆளு என்று கேட்டார்.  திருநெல்வேலிக்கே உருத்தான ஒரு கேள்வி என்றாலும் கூட, பிச்சைக்காரர்களிடமும்  ஜாதி எண்ணம்; என்பது புதிதாக, புதிராக தான் இருந்தது.  நான் சிறிது முந்து கொண்டு ஜாதியா!  உங்கள் ஜாதியை தெரிந்து கொள்ளலாமா பாட்டி? என்றேன் அவர் சொன்ன ஜாதியே நானும் அந்த ஜாதி தான் என வைத்து கொள்ளுங்கள் என்றதும் தாயே நீ என் அம்மா என்று இன்னும் ஐக்கியமாகி விட்டார்கள்.

சாப்பிட்டீர்களா என வினவிய போது "கண்ணு, நல்ல ருசியான சாப்பாடு கிடைக்கும் அதுவே பிச்சை எடுக்க வந்து விட்டோம்". வீட்டிலே யாரையும் குறை சொல்லக்கூடாது மகனுக்கு 3 பிள்ளைகள் ஒரு நாள் இரு நாள் சோறு கிடைக்கும் அப்புறம் குழந்தைகளுக்கு உணவகங்களில் இருந்து சாப்பாடு வாங்கி கொடுத்து விடுவார்கள் பட்டிணியாக இருப்பதற்க்கு இங்கு நல்ல வாழ்க்கை. பிறந்தாலும் பிச்சைகாரர்களாக பிறக்கலாம் என பெருமைப்பட்டு கொண்டார். 

உடனே வேறு ஒரு முதிய பெண் வந்து சொல்லுதா பாரு, ஆக்கம் கெட்டவா, என்ன  சொல்ல தாய்? 4 மகன்கள், மருமகள்களுக்கு பிடிக்கவில்லை அதான் வந்துட்டேன் என தன் சோக கதையை பகிர்கின்றார் இப்படியாக.

இன்னும் ஒரு பெண், பரவாயில்லை  இன்னிக்கு இங்கு இருப்போம் நாளைக்கு உவரி கோயில் போகனும், புதன் மணப்பாடு என வாரத்திற்க்கு 7 நாட்களும் 7 கோயில் அட்டவணை வைத்துள்ளனர்.  பொறுப்புணர்ச்சியுடன், "தாயி உங்க ஊரில் கோயில் திருவிழா ஏதும் வருதா" என விசாரித்து கொண்டனர்.  எங்க பிச்சை எடுத்தாலும் தூங்க புளியக்குடி கோயிலுக்கு போயிடுவாகளாம் அங்கு இவர்கள் தங்குவதற்க்கு என்றே சத்திரம் உண்டாம் பாதுகாப்பான இடம் என்று சொல்கின்றனர்.

போலிஸ், மற்றும் குடிகாரர்களிடம் இருந்து  அவர்கள் பாதுகாப்பிற்க்கு ஒரு வயதான பெரியவர் தலைமையாக  உள்ளார். அவர் பேசும் போது ரொம்ப அவதானித்து, கவனமாகவே பேசி கொண்டார். மேலும் இந்த முதியவர்கள் வீட்டிற்க்கு பாரம் என்று பிச்சை எடுக்க வரப்பட்டாலும் தங்கள் செலவுக்கு போக வீட்டிற்க்கு கொடுத்து உதவுகின்றார்களாம். ஒரு முதிய பெண் தன் கையை காட்டினார் . திராணியாக இருக்கும் போது வயலுக்கு களை எடுக்க சென்றாராம் இப்போது கை வேலை செய்ய இயலாத அளவு வளைந்து விட்டதாம். பிச்சை எடுப்பதால் தன் தேவைக்கு மிஞ்சி கொஞ்சம் பணம் வருவதாகவும் மகள் வந்து வாங்கி செல்வாராம்.

பெரும் பகுதியானோர் முதியவார்களாகவே உள்ளனர். இரு இளம் பெண்கள் மட்டும் கூட்டத்தில்  இருந்தனர் அவரில் ஒருவர் மனநோயால் பாதிக்கப்படிருந்தது போன்று காட்சி அளித்தார். இன்னொருவர் மகிழ்ச்சியாகவே கதைத்து கொண்டிருந்தார் அம்பை பக்கம் தேவர் தலைமையில் பிச்சை எடுத்து கொண்டிருந்ததாகவும் தேவர் இறந்து போனதால் தற்போதுள்ள முதியவர் தலைமையில் பிச்சை எடுப்பதாக கூறி கொண்டார்.

நானும் அவர்களிடம் கதைத்து முடித்து விடைபெற்று வந்து விட்டேன்.  இந்த சுயநலமான உலகில் நானும் அவர்களுக்கு பணம் ஏதும் கொடுக்காது ஒரு சில படங்களை மட்டும் எடுத்து ஏமாற்றி விட்டேனோ என்று தோன்றியது. மறுபடி வரும் போது உணவு பொட்டலம் கொண்டு வர வேண்டும் என மனதில் நினைத்து கொண்டேன்.

பண ஆசை பிடித்த மனிதர்கள் தங்கள் பல தலைமுறைக்கு என கொள்ளையிடும் போது இப்படியான வறியவர்க்ள் உருவாகுவதை தவிர்க்க இயலாது.  காலத்தில் கட்டாயம் என எண்ணி இவர்களையும் மனித நேயத்துடன் நோக்கி அரசு, ரேஷன் அருசி என்பதற்க்கு பதில் ரெடிமேட் உணவு கொடுக்கலாம்.  தங்குவதற்க்கு என   விடுதிகள் அமைத்து கொடுக்கலாம். கேரளாவில் பல ஊர்களில் பணக்காரர்கள் இப்படியான வறியவர்களுக்கு டோக்கன் வழியாக உணவு  கொடுப்பது உண்டு.  நெல்லையிலும் காஜா குழுமம் தினம் 200 பேருக்கு உணவு பொட்டலம் கொடுத்து வருகின்றனர். நம்முடன் நம்மை போன்று வாழ வேண்டிய மக்கள் காலத்தின் கோலத்தால் தெருவில் கொண்டு வரப்படாலும் ஒரு சாண் வயிற்க்காவது நம் கருணையை காட்ட வேண்டும்!

6 Apr 2012

இன்று துக்க வெள்ளி!

யேசு தாஸ் பாடிய உருக்கமான பாடல்  துக்க வெள்ளி, பெரிய வெள்ளி என்று எப்படி அழைத்தாலும் இன்று ரொம்ப துக்கமான நாள் ஏன் என்றால் இன்று தான் யேசு கிருஸ்துவை தூக்கில் ஏற்றி கொன்றார்கள்.  இதை நினைவு கூறும் விதமாக யேசுவின் கடைசி நேர நிகழ்வுகளை நினைத்து கொண்டு கிருஸ்துவுடன் காகுல்த்தா மலை ஏறுவது போல் நினைத்து கொண்டு மலை ஏற ஆரம்பித்து விடுவோம்.  கேரளா மலை பிரதேசம் என்பதால்  இன்றைய நாள் பிரார்த்தனைக்கு என்றே மலையில் கூடி விடுவார்கள். அதி காலை ஆரம்பிக்கும் பவனி மதியம் 11 மணியுடன் உச்சியில் சென்று சேரும். எங்கள் பகுதியில் கிருஸ்தவர்கள் என்றில்லை விரும்பிய எல்லோரும் வேண்டுதலுடன் கலந்து கொள்வர்.

          தமிழ் சிலுவை பாதை பாடல்! இஸ்லாமிய இந்து வியாபாரிகள் நடந்து செல்பவர்களுக்கு குடி தண்ணீர் சர்பத் கொடுக்கும் வழமை உண்டு.  சில கெட்ட எண்ணம் கொண்ட நபர்கள் வெள்ளி அன்று நடந்து போகும் வழி எல்லாம் குப்பையும் கொட்டியிருப்பார்கள். 

சிறப்பாக 14 கிருஸ்து நினைவுகள்!  நிகழ்வுகளை மனதில் முன் நிறுத்தி சிலுவை பாதை ஆரம்பம் ஆகும்.  வறுத்த அரிசி, உப்பு, மிளகு போன்றவை குருசு மலையில் காணிக்கையாக இடுவது உண்டு. சிலர் வேண்டுதல் நிமித்தமாக மலை இறங்கி வருபவர்களுக்கு கஞ்சி கொடுக்கும் வழக்கவும் உண்டு.

இன்று எங்கள் வீட்டில் எல்லோருக்கும் உபவாசம் தான். மதியம் 12 மணிக்கு தான் துவயலுடன் கஞ்சி கிடைக்கும். அப்பா மட்டும் அரை வயற்றுக்கு கஞ்சி குடித்த பின்பு தான் மலை ஏறுவார்.  அப்பாவுக்கு என்ன தான் பக்தி என்றாலும் பட்டிணியை தாங்கும் சக்தி இருந்ததில்லை. 

சிலுவை மரத்தில் யேசு நாதர்! உச்சியில் அன்று பாதிரியார் நடத்தும் சொற்பொழிவு முடிந்ததும் வீடு வந்து சேர்ந்ததும் சிறு தூக்கம் முடித்து 3 மணி பிரார்த்தனைக்கு சென்று விடுவதே பழக்கமாக இருந்தது.  3 மணிக்கு தான் யேசு நாதர் உயிர் பிரிந்தது என்பதால் உருக்கமான ஜெபம் நடை பெறும். கோயில் மணி அன்றுடன் நிறுத்தப்பட்டு ஈஸ்டர் அன்றே மறுபடியும் கேட்கும் படியாக ஆசரிக்கின்றனர்.


பெரிய வியாழன்!

பெரிய வியாழன் பிரார்த்தனை மாலை 6 மணிக்கு ஆரம்பம் ஆகி விடும்.  அன்று தான் கிருஸ்து நாதரை பிலாத்து விசாரித்து மரண தண்டனை வழங்கிய நாள்!  யேசு தனது கடைசி விருந்தை தன் சீடர்களுடன் உண்டு தன் சீடர்களின் பெரிய வியாழன் ஜெபம்! காலை கழுகி முத்தமிட்டு 'தலைவராக இருக்க விரும்புகின்றவன் தன் சீடர்களுக்கு பணியாளனாக இருக்க வேண்டும்' என்ற குடியரசு தத்துவத்தை போதித்த தருணம்.  இன்றைய திருப்பலியில் தான் பாதிரியார் தேர்ந்தெடுத்த 12 ஊர் மக்கள்(யேசுவின் சீடர்கள் 12 என்பதால்) கால்களை கழுவும் நிகழ்வும் நடை பெறும்.

விருந்து முடிந்ததும் யேசு நாதர் பிரார்த்தனைக்கு செல்வார். அன்று தன் சீடர்களிடம் இன்று என்னுடன் ஒரு மணி நேரம் விழித்து இருந்து ஜெபிக்க இயலாதா? என்று கேள்வி எழுப்பியிருப்பார்.  இதை நினைவு கூர்வதுடன் உலக கிருஸ்தவர்கள் இன்று நடு இரவு 12 மணி வரை தூங்காது விழித்து இருந்து ஜெபிக்க பணியப்பட்டிருப்பர்.   இந்த ஜெப வேளை முடியும் தருவாயில்  யூதாஸ் முத்தமிட்டு காட்டி கொடுப்பதாகவும் யேசுவை யூத மதவாதிகளின் தூண்டுதால் பிடிக்கப்பட்டு ரோம அதிகாரிகளால் தூக்கிலேற்ற துக்க வெள்ளி அன்று கொண்டு செல்லப்படுவார் என்று நம்பப்படுகின்றது. பெரிய வியாழன் நிகழ்வு!



 எனக்கு தூக்கம் என்பது உரிமை சொத்து.  முதல் வரிசையில் இருந்தாலும் தூக்கம் கண்ணை சுற்றி வரும், தூங்கியும் விழுந்துள்ளேன்.  என் மலையாள தோழிகள் தூக்கத்தை களைய என்பதற்க்காவே கோயிலை சுற்றி நடந்து கொண்டிருப்பர்.  ஆனால் அது தெய்வ குற்றம், ஒழுக்ககேடு என்று அம்மா சொல்லியுள்ளதால் அம்மாவுக்கு பயந்து நான் தூங்கி தூங்கி விழிக்கும் போது ஜெபித்து கொள்வேன்.  

அன்று இரவு உணவு இனிப்பு சுவை கலந்த கலவையுடன் புளிப்பில்லாத அப்பவும் கிடைக்கும்.  நான் ஆலய பாடல் குழுவில் இருந்ததால் குழுவுடன் சேர்ந்து உண்பதாகவே இருந்தது. இருந்தாலும் அம்மாவும் வீட்டில் செய்து தந்துள்ளார்கள்.  இதை வட்டை அப்பம் என்றே அழைப்பது.  புளிக்காத பச்சை அரிசி மாவை இட்லி மாவு பதத்திற்க்கு ஆட்டி கொஞ்சம் ஈஸ்டு, சீனி கலந்து  ஒரு எண்ணை தடவிய தட்டில் ஊற்றி; சுவைக்கு கிஸ் மிஸ், முந்திரி பருப்பு தூவி இட்லி வேக வைப்பது போல் வேக வைத்து எடுக்க வேண்டும்.


மலபார் கிருஸ்தவர்கள் வீட்டில் ஒரு வீட்டில் செய்யும் வட்டை அப்பத்தைவட்டை அப்பம் செய்யும் முறை! பக்கத்து வீட்டிற்க்கு கொடுத்து பகுத்து உண்டனர். 

புனித வாரம்!

கிருஸ்தவர்கள் வாழ்வில் ஆத்மீயம், பிரார்த்தனை, என பல மாற்றங்கள் தர வல்ல சிந்தனைகள் கொடுக்கும் வாரமே இது.  40 நாள் நோம்பு முடிக்கப்பட்டு யேசு நாதரின் உயிர்ப்பை ஆர்வமுடன் நோக்கும் கொண்டாட்டங்கள் ஆரம்பம் ஆகும்  நாட்களாகும் இந்த வாரம்.  இந்த நாட்களில் மனிதனின் மரணம் பற்றியும் மண்ணில் இருந்து வந்தவர்கள் மண்ணில் செல்கின்றார்கள் என்று பொருட்பட சாம்பல் குறியிட்டு ஆரம்பம் ஆகின்றது.


என் நினைவுகள் பள்ளி நாட்களுக்கு கூட்டி செல்கின்றன. சாம்பல் புதன் அன்றிருந்தே நெற்றியில் பொட்டு வைப்பதில்லை, முகத்திற்க்கு பவுடர் இல்லை, யாரிடமும் கோபப்படுவதில்லை, சண்டை இடுவதில்லை என பல உறுதி மொழிகளுடன் நோம்பு ஆரம்பம் ஆகும்.  தூ வெள்ளை ஆடை அணிந்து  வெள்ளி கிழமை சிறப்பு பிரார்த்தனை, செய்த பாவங்களுக்கு பரிகாரம் தேடும் நாட்கள். அன்று சட்டை இட்டு கொண்ட தோழிகளிடம் வலிய சென்று மன்னிப்பு கேட்டு ஒப்புறவு ஆகி கொள்வது என புனித வாரத்திற்க்குள் நுழைகின்றனர்.

இந்த 40 நாட்களும் மீன், இறைச்சி சாப்பிடக்கூடாது என்பது தான் மிகவும் கொடியதாக இருந்தது. முட்டை கிடைக்கும் என்பது தான் ஒரே ஆறுதல். அதிலும் பாட்டியின் கருத்துப்படி முட்டையும் அசைவம் என்பதே. ஆனால் அம்மா அப்படி எண்ணாது இருப்பதால் முட்டை மட்டும் கிடைத்தது. அப்பா தான் பல நாட்கள் மிகவும் சிரமப்பட்டு உணவு  உட்கொண்டு திரும்புவார். இருப்பினும் உணவு என்பதை விட தனி மனித மனமாற்றமே சிறந்தது என்று அறிவுறுத்தப்படுவதும் உண்டு.


ஓசானா பாடல்!ஓசானா ஞாயிறு தான் மகிழ்ச்சி தரும் நாட்கள்.  அன்றுடன் யேசுவின் கடைசி நாட்களில் நடந்தவயை நினைவு கூர்ந்து பிரார்த்தனைகள் ஆரம்பம் ஆகி விடும். இனி நோம்பு முடிய 7 நாட்கள் மட்டும் தான்!  மற்று சபைகளில் பிரார்த்தனை என்று புத்தகத்தில் நோக்கி வாசிப்பது மட்டும் அல்லாது அவரவர் வாய்க்கு வந்த படி தங்கள் எண்ணங்களை பிரார்த்தனைகளாக மாற்றி விடுவார்கள்.  ஆனால் கத்தோலிக்க சபையில் பிரார்த்தனை சிறிய அளவு,  நாடகம் போன்று இந்த நிகழ்ச்சிகள் யாவும் ஒரு ஒழுங்கு முறையுடன் மக்களுக்கு புரிய வைக்கும் நிகழ்வுகளே பெரும் பகுதியாக வந்துள்ளது.

குருத்தோலை ஞாயிறு அன்று காலையில் வரிசையில் நின்று ஓலையை வாங்கி யேசு நாதரை ஜெருசலேம் தெருவில் கூட்டி சென்றது போல் பாவித்து நாங்களும் பாட்டு பாடி கையிலுள்ள ஓலைகளை  கொண்டு எங்கள் தெருவைச் சுற்றி பவனி வருவது உண்டு.  மலையாளப் பாடல்கள் மட்டும் பாடி பவனி வந்த நாங்கள் பின்பு அருள் சகோதரிகளின் வரவுடன் தமிழ் பாட்டும் கற்று கொண்டோம்.  3 மலையாளப் பாடல்கள்  என்றால் ஊடை 1 தமிழ் பாட்டு  பாடி நடந்த எங்களில் சிலர் மலையாளப் பாடல் பாட மாட்டோம் தமிழ் மொழி பாடல்கள் மட்டுமே பாடுவோம் என்ற போது முன் வரிசையில் மலையாளம் பாடகர்களும் பின் வரிசையில் தமிழ் பாடகர்களுமாக பவனி செல்லும் வழக்கமாக மாறியது. 

தமிழ் ஓசனா பாடல்! இதில் பெரும் பகுதியானோர் பக்தி பரவசமாக யேசு நாதர் கழுதையின் மேல் செல்வதாகவும் தாங்கள்  பின்னால் பாடி செல்வதாக கற்பனையில் செல்லும் போது சில பெண்கள் வரிசையை ஒழுங்கு படுத்துகின்றேன் என்று அடுத்தவர்களை அதிகாரம் செலுத்துவதும், சில பெண்களோ தாங்களே உயர் பழம் கிருஸ்தவர்கள் என மிதப்பில் நடப்பதும், ஒரு சில இளம் பெண்கள் தங்கள் இருப்பை தெரிவித்து கொண்டு நடப்பதுமாக ஆலயம் வந்து சேர்வதுடன் ஆராதனை ஆரம்பம் ஆகி விடும். அன்று பாதிரியார் தன் மக்களுக்கு சொல்ல வேண்டியதை எல்லாம் ஒரே மூச்சாக ஒரு மணி நேரத்திற்க்கும் மேல் நேரம்  சொற்ப்பொழிவு ஆற்றுவது உண்டு.  ஏன் என்றால் அன்றைய தினம் மட்டும் ஆலயம் வரும் பல கிருஸ்தவர்கள் உண்டு வருடத்திற்க்கு ஒரு முறை ஆலயம் வருபவர்களும் அன்று வருவது உண்டு. 

இந்த விழாவுக்கு இஸ்ரயேல் மற்றும் மேற்க்கு தேசங்களில் ஒலிவு மர இலைகளை பயன்படுத்தியுள்ளனர். நம் தேசத்தில் தென்னை ஓலை மலிவாக கிடைப்பதால் தென்னை ஓலை  பயன்படுத்தப்படுகின்றது.  ஓலையால் விதவிதமான உருவங்கள் செய்து கொடுப்பதை உற்று நோக்கி வீட்டில் வந்து செய்து பார்த்து நொந்து கொள்வது நினைவில் உள்ளது. சில நேரம்  பாட்டிகளிடம் கொடுத்தே செய்து வாங்கி வருவதும் உண்டு. அப்படி பாதிரியாரின் பிரசங்கம் தரும் அலுப்பை மாற்றும் வழியாகவும் ஓலை வேலைப்பாடுகள் இருந்துள்ளது. மாலை தேங்காய்  கொழுக்கட்டை  செய்து பக்கத்து வீடுகளுக்கும் கொடுத்து பகுந்து உண்ணும் வழக்கவும் உண்டு.

மலையாள குருத்தோலை பாடல்! பெரிய வியாழன் சந்திப்போம் என்று பிரிந்து செல்வதுடன் அன்றைய ஆராதனை முடிந்து விடும்.   வரும் வருடம் சாம்பல் புதன் அன்று எரித்து சாம்பலாக நெற்றியில் பூசுவதற்க்கு என கையில் வைத்துள்ள ஓலையை வீட்டில் கொண்டு சென்று பயபக்தியுடன் பாதுகாத்து வைத்து விடுவதே வழக்கமாக இருந்தது!

10 Mar 2012

நெல்லை பல்கலைகழக கருத்தரங்கம்- நடந்தது என்ன?

நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைகழகத்தில் குற்றவியில் துறை சார்பாக நடைபெற்ற சர்வதேச கருத்தரங்கில் பங்கு பெற வந்த பெண் சிங்கள பேராசிரியர் ஒருவரை சில இயக்கங்கள் பேச விடாது வெளியேற்றியுள்ளனர்.   கொழும்பு பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியை ஜீவா நிரியல்லா என்பவரே அவமதிப்புக்கு உள்ளாக்கப்பட்டவர்.  வெள்ளி அன்று தன்னுடைய கட்டுரையை சமர்ப்பிக்க இருந்த சூழலில் வியாழன் மாலை அன்றே வெளியேற்றப்பட்டுள்ளார்.  தினமணி பத்திரிக்கையில் முதல் பக்க செய்தியாக அறிய கிடைத்த இச்செய்தியில் ஆசிரியையின் கருத்துக்கள் பதியப்பட வில்லை.

 ஒரு பேராசிரியையிடம் கட்டுரை சமர்ப்பிக்க வந்த இடத்தில் நடந்து கொண்ட விதம்  சரியானதா? மேலும்  அவர் சமர்ப்பிக்க இருந்த கட்டுரை பற்றி ஒரு புரிதல் பல்கலைகழக குற்றவியல் துறைக்குக் தெரிந்திருந்தே அனுமதிக்கப்பட்டுள்ளார். பேராசிரியை பேசுவது இந்திய இறையாண்மைக்கு, தமிழ் உணர்வாளர்களுக்கு காயப்படுத்துகின்றது என்றால் ஏன் அனுமதித்திருக்க வேண்டும்.  அவர் கட்டுரை சமர்ப்பிக்கும் முன்னே ஆர்ப்பாட்டகாரர்களால் தடை செய்யப்பட காரணம் என்ன? பெருன்பான்மையான தமிழகர்கள் மத்தியில்  சிறுபான்மை சிங்கள பெண்ணாக இருந்ததாலா? என பல கேள்விகள் எழுகின்றன. சிறப்பாக  பெண்கள் தினத்தற்றே ஒரு பெண்ணை அவமதித்ததின் காரணம் தான் என்ன? 

மேலும் பல்கலைகழகம் என்பது கல்வித்துறை, மாணவர்கள், குறிப்பாக ஆராய்ச்சி சம்பந்தப்பட்டதாக இருக்கும் போது   கருத்தரங்கு அறைக்குள் நுழைந்து கோஷங்கள் எழுப்ப "எ.பி.சி.டி" கட்சிகளுக்கு உரிமை கொடுத்தது யார்?  சட்டப்படி இது நியாயப்படுத்த தகுமா என்பதும் சிந்திக்க வேண்டியுள்ளது. கருத்தரங்கில் பேராசிரியை முரண்பட்ட கருத்துக்கள் கூறியிருந்தாலும் அவரிடம் விவாதம் செய்ய மாணவர்கள் பேராசிரியர்களுக்கு வாய்ப்பு உள்ள போது;  பல்கலைகழகம் வெளியில் இருந்து வரவழைக்கப்பட்ட சிலரால் விரட்டப்பட்டதின் நோக்கம், தாக்கம் என்ன என்றும் வினவ வேண்டியுள்ளது. 

கட்சி போராளிகளுக்கு பயந்து, தலை வணங்கி ஒரு பேராசிரியை நாட்டில் இருந்து வெளியேற்றிய பல்கலைகழகம் எந்த விதத்தில் நீதியாக செயல் கொண்டது என்பதையும் நோக்க வேண்டியுள்ளது. அல்லது பல்கலைகழகம் சார்பில் நடத்தப்படும் ஒரு கருத்தரங்கம் ஆரம்பிக்கும் முன் “கானா- மான” கட்சிகளிடம் அனுமதி வாங்கியே நடத்த வேண்டும் என்றால் கல்வித் துறை அரசியல் கட்சிகளின் கையேந்திகளா? அல்லது அடிமைகளா?  சமூகத்தில் ஆக்க பூர்வமான கருத்துரையாடல்கள் நடைபெறாத  சூழலில், கல்வி நிலையங்களிலாவது சுதந்திரமான ஆக்க பூர்வமான கருத்தாக்கங்கள்; சமூக-அரசியலில் தீர்வு காணாத பல பிரச்ச்னைகளுக்கு தீர்வாக பல ஆராய்ச்சிகள் இருக்கும் போது ஒரு பேராசிரியையில் பேச்சாற்றல் எழுத்தாற்றலை தடை செய்வது வழியாக மறுபடியும் ஒரு எமெர்ஜன்ஸி நாட்டில் ஏற்படுத்துகின்றனர்.http://tamil.oneindia.in/news/2012/03/09/tamilnadu-lankan-academic-evicted-from-nellai-varsity-function-aid0091.html

கல்வியும் அரசியலும் கூட்டி கலர்ந்து கல்வியில் தரம் குறைப்பது மட்டுமல்லாது கல்வியாளர்களையும் அரசியல்வாதிகளுக்கு கூஜா தூக்கும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர். பேராசிரியர்கள் சங்கமோ ஆசிரிய பெருமக்களோ எந்த கருத்தையும் தெரிவிக்காது தங்கள் நிலையை தக்கவைத்து கொள்வது வழியாக சுயநலவாதிகள் என்றே அறிய தருகின்றனர். தீவிரவாதம் என்பது ஆயுதம் ஏந்துவது மட்டுமல்ல , மற்றவர்கள் கருத்தை கட்டாயமாக மறுப்பதும் திணிப்பதும்  தீவிரவாதம் தான் !