8 Oct 2026

நாவல்-'தேரிப்பிச்சி' – தேரிகாட்டு எழுத்தாளர் கண்ணகுமார விஸ்வநாதன்

தேரிகாட்டு எழுத்தாளர் கண்ணகுமார விஸ்வநாதன் எழுதிய 'தேரிப்பிச்சி' நாவல், மே 2026-இல் தமிழ்வெளி வெளியீட்டகத்தால் வெளியிடப்பட்டது. 176 பக்கங்கள் கொண்ட இந்நூலின் அட்டைப்படத்தை R.C. மதிராஜும், பக்க வடிவமைப்பை S. கதிரவனும் சிறப்பாகச் செய்துள்ளனர்.

கதைக்களம் : பிச்சி, பெற்றோரின் செல்ல மகளாக வளர்கிறாள். அவளது விருப்பப்படி குமரவேலுவுடன் திருமண ஏற்பாடுகள் நடக்‌கின்றன. ஆனால், குமரவேலுவின் நண்பன் கட்டேரி பிச்சியைத் திருமணம் செய்ய ஆசைப்படுகிறான். பிச்சி அதை மறுக்கவே, ஏமாற்றத்தில் கட்டேரி தற்கொலை செய்கிறான். அந்த அதிர்ச்சியில் அவன் தாயும் இறக்கிறாள். கட்டேரியின் தம்பி மூக்காண்டி தனிமையில் வளர்கிறான். காலம் நகர்கிறது.

 பிச்சிக்குக் குமரவேலு மூலம் மகராசி என்ற பெண் குழந்தை பிறக்கிறது. ஆனால், வேலையிட விபத்து ஒன்றில் கணவனை இழக்கும் பிச்சி, தனியாளாக மகள்  மகராசியை வளர்க்கிறாள்.

வளரும் மகராசி, மூக்காண்டியை  காதலிக்கிறாள். பிச்சி முதலில் தயங்கினாலும், இறுதியில் மூக்காண்டிக்கே மகளைத் திருமணம் செய்து வைக்கிறாள். மகராசிக்குக் குழந்தை பிறந்து ஒரு மாதத்தில், எதிர்பாராத தீ விபத்தில் அவள் உயிரிழக்கிறாள். அனாதையான பேரக்குழந்தையைப் பிச்சியே வளர்க்கிறாள்.

எதிர்பாராத திருப்பம் கதையின் இறுதியில் பேரதிர்ச்சியாக  வெளிப்படுகிறது. தன் அண்ணன் இறப்பிற்குப் பிச்சியே காரணம் என மூக்காண்டி நம்புகிறான். பழிவாங்கும் நோக்கத்துடனேயே அவன் மகராசியை காதலித்துத் திருமணம் செய்துள்ளான். அன்பான கணவனாக நடித்த மூக்காண்டியின் உண்மை முகத்தை அறிந்து பிச்சி உடைந்து போகிறாள்.

மகளின் மரணத்திற்குப் பின்னால் இருப்பது பழிவாங்கும் எண்ணமா? மூக்கனின் உண்மையான நோக்கம் என்ன? என்ற கேள்விகளுடன் கதை விறுவிறுப்பாக நகர்கிறது. வாசகர்கள் கணிக்க முடியாத முடிவே நாவலின் முக்கிய பலம்.

 தந்தை போன்று  இருந்த பனையாண்டியை, அவரது மரணப் படுக்கையில் பிச்சி கவனித்துக் கொள்ளும் காட்சிகள் நெகிழ்ச்சியானவை.

ஆங்கிலேய காலகட்டத்தில் முற்றிலும் மதம் மாறி உயர்ந்த மக்கள் என ஒரு பிம்பத்தை படைத்து வைத்து இருக்கும் போது ,   நாசரேத் பகுதியின் மற்றொரு முகமான ஏழை மக்களின் வாழ்வியலை இந்நாவல் வெளிச்சமிடுகிறது. தேரி நில மக்களின் உழைப்பு, பண்பாடு மற்றும் கணவரை இழந்த பெண்களின் வாழ்க்கை நிலையை ஆசிரியர் தத்துரூபமாகப் பதிவு செய்துள்ளார். செம்மணல் பூமியின் வட்டார மொழி கதைக்கு உயிர் கொடுக்கிறது.

"செம்மணலுக்குள் புதைந்து கிடக்கும் அவல மானுடங்களின் வாழ்வியலை ஆவணப்படுத்துவதே என் நோக்கம்" என்னும் ஆசிரியரின் வரிகள் அப்படியே கதையில் பிரதிபலிக்கின்றன.

திருச்செந்தூர் வட்டார எளிய மக்களின் வாழ்க்கையையும், தேரிக்காட்டின் தொன்மையையும், பண்பாட்டு தளத்தையும்  அறிய விரும்பும் வாசகர்கள் கண்டிப்பாகப் படிக்க வேண்டிய நூல் இது.

'தேரிக்காட்டு இலக்கியவாதி' கண்ணகுமார விஸ்வநாதன் மேலும் பல சிறந்த படைப்புகளைப் படைக்க மனமார்ந்த வாழ்த்துகள்!








  .

0 Comments:

Post a Comment