ஆர்தர் மார்கோஷிஸ், இங்கிலாந்தின் வார்விக்ஷைர் மாகாணத்தில் உள்ள லீமிங்டன்(Lamington) என்ற கிராமத்தில், தாமஸ் டேவிட் சாமுவேல் மார்கோஷிஸ் மற்றும் மேரி ஆன் மார்கோஷிஸ் தம்பதிக்கு 1852 டிசம்பர் 24ஆம் தேதி பிறந்தவர். எட்டு பிள்ளைகளில் இளையவர் ஆர்தர். அவரது தந்தை போலந்து யூதர் ஆவார்.
ஆர்தர் மால்ட்ரம் இன்லாங்க்டென்டேல் கிராமர் பள்ளியில் படித்தார்; பின்னர் .தனது 17வது வயதில் பைபிள் அறிவில் சிறந்து விளங்கியதால் வார்மின்ஸ்டர் மிஷன் கல்லூரியிலும் பின்னர் செயிண்ட் ஆகஸ்டின்ஸ், காந்தர்பரியிலும் கல்வி கற்றார். லண்டனில் உள்ள செயிண்ட் ஜார்ஜ் மருத்துவமனையில் மருத்துவ மாணவராக சேர்ந்தார். அங்கே Royal College of Surgeons நடத்திய உடற் கட்டமைப்பு மற்றும் உடல் இயல் பரிசோதனையில் தேர்ச்சி பெற்றார். ஆனால் M.R.C.S மற்றும் L.R.C.P பட்டத்திற்கு முன்பே, திருநெல்வேலியில் இருந்த மிஷனரி ராபர்ட் கால்டுவெல்லின் அழைப்பை ஏற்று இந்தியா வருவதற்கு முடிவு செய்தார்.
அவரது நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் படிப்பை முடித்தபின், இந்தியா செல்ல அறிவுறுத்தினர். ஆனால் “இது என் வசதிக்கேற்ப செய்யக்கூடிய வேலை அல்ல” எனக் கூறி உடனே புறப்பட்டு வந்தார்.
1875- ஆம் ஆண்டு 22 வது வயதில் மதராசு வந்து சேர்ந்தார். பின்பு இடையன்குடியை அடைந்தவர் கால்டுவெல்லுடன் தங்கி தமிழ் கற்று தேர்ச்சி பெற்றார்.
1876 டிசம்பரில் நாசரேத்தில் பணியைத் தொடங்கினார். 1877 மார்ச் 25-ஆம் தேதி செயிண்ட் ஜார்ஜ் பேராலயத்தில் டீக்கனாக ஒப்புதல் பெற்றார். முதலில் மருத்துவமனை மற்றும் பள்ளிகளின் பொறுப்பை ஏற்றார். ஆர்கனிஸ்ட், கீர்த்தனை ஆசிரியர், போதகர் என தேவாலயத்தில் பன்முக பணி ஆற்றினார். 1880ல் குருபட்டம் பெற்றபின் நாசரேத் மிஷனை முழுமையாகக் கவனித்தார்.
லண்டன் மிஷனரி சொசைட்டி (LMS) போதகர் சார்லஸ் மீட் அவர்களின் மகள் அன் கேம்மெரர் நாசரேத்தில் செயிண்ட் ஜான்ஸ் மகளிர் உயர்நிலைப் பள்ளியைத் 1843ல் தொடங்கியிருந்தார். இது தென்னிந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் மகளிர் பள்ளி ஆகும் .
1876ல் மார்கோஷிஸ் இங்கு மேலாளராக நியமிக்கப்பட்டார். அதேபோல நாசரேத் பள்ளிகளில் இந்து மாணவ, மாணவிகள் பயின்றனர். இதனால் அவர் எல்லா சமூகத்தினரின் மரியாதையைப் பெற்றார்.
மேலும், அவர் நாசரேத் மருத்துவமனைக்கும் பொறுப்பாளர் ஆனார். மருத்துவப் பயிற்சியால், சிறிய அறுவைச் சிகிச்சை முதல் சிக்கலான சிகிச்சைகள் வரை திறம்பட செய்தார். அவர் வைத்தியத்தையும், அறுவைச் சிகிச்சையையும் பாராட்டி இருந்தனர். மருத்துவத்தில் நவீன நூல்களைத் தொடர்ந்து படித்து வந்தார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்றவர்களில் மூன்றில் ஒரு பங்கு கிறிஸ்தவர்கள் அல்லாதோர் இருந்தனர். .
ஒருமுறை மதராசுக்குப் போன போது, மக்கள் அவர் அங்கேயே மாற்றப்படுவார் எனக் கவலைப்பட்டனர். திரும்பியபோது வழியிலுள்ள பல ஊர்களில் அவரை விளக்குகள், யானைகள், ஊர்வலங்களால் மக்கள் வரவேற்றனர். நாசரேத்தை அடையும் வரை புறநகர் கிராமங்களில் வரவேற்பு தொடர்ந்தது. அவ்வாறாக எல்லா மக்களின் ஆதரவு பெற்ற இறை பணியாளராக இருந்தார்.
1877ல் கடும் பஞ்சம் ஏற்பட்டது. பல ஆயிரம் பேர் இறந்தனர். பல குழந்தைகள் அனாதைகளாக ஆனார்கள். 1878-ல் மார்கோஷிஸ் ஒரு அனாதை இல்லம் தொடங்கினார்.
இது பின்னர் 250 மாணவர்களை கொண்டு தச்சு வேலை, கருமை வேலை, தையல், நெய்தல், பூச்சிகை, லேஸ், ஓவியம் உள்ளிட்ட எட்டு கலைகளை கற்று கொடுக்க 1887-க்குள்ஆர்ட் அண்ட் இண்டஸ்டிரியல் ஸ்கூல் துவங்கினார்.
1882-ல் சிறுவர்களுக்காக ஆங்கில-வெர்னாகுலர் பள்ளி (இன்றைய மார்கோஷிஸ் உயர்நிலைப்பள்ளி) தொடங்கினார். 1885ல் மதராசுப் பிரெசிடென்சியால் “சிறந்த பள்ளி” எனப் பாராட்டப்பட்டது. 1889-ல் உயர்நிலைப்பள்ளியாக மேம்படுத்தப்பட்டது.
1862 இல் சாயர்புரத்தில் உயர்நிலைப் பள்ளியைத் தொடங்கியிருந்த பிஷப் கால்ட்வெல், மார்கோஷிஸ் தொடங்கிய உயர்நிலைப் பள்ளியை போட்டி பள்ளியாகக் கருதினார். கால்ட்வெல்லின் எதிர்ப்பு மற்றும் மறுப்பை புறக்கணித்து மறைமாவட்டக் குழுவான மெட்ராஸ் எஸ்.பி.ஜி. மார்கோஷிஸ் பள்ளியைத் தொடங்க அனுமதி அளித்திருந்தது. . ஆனால் கால்ட்வெல் பிடிவாதமாக 1892-இல் அந்தப் பள்ளியை மூடச் செய்து, சிறுவர்களுக்கான நடுநிலைப் பள்ளியை மட்டும் விட்டுச் சென்றார்.
நாசரேத் மிஷனில் நியமிக்கப்பட்டதும் சில சமயங்களில் சக மிஷனரிகளுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. குறிப்பாக ஷார்ராக் மற்றும் விக்கர்ஸ் ஆகியோருடன் மோதலில் ஈடுபட்டார். ஜாதிப் பட்டங்களைப் பயன்படுத்தும் விஷயத்தில், மார்கோஷிஸ் ஷார்ராக்குடன் முரண்பட்டார். ஜாதிப் பெயர்கள் வெறும் மரியாதைப் பட்டங்கள் மட்டுமே; அவை இனி மதப்பொருளற்றவை என்று அவர் கருதினார். கிறிஸ்தவர் ஒருவர் ஜாதிப் பட்டம் பயன்படுத்துவதில் மார்கோஷிஸ் கவலைப்படவில்லை. தமக்கு ஒத்துழைக்காதவர்களைப் பற்றி தீயவார்த்தைகளைச் சொல்வதாக மார்கோஷிஸ் பற்றி அவர்கள் புகார் தெரிவித்தனர். சில சந்தர்ப்பங்களில் ராபர்ட் கால்ட்வெல் தலையிட்டு இந்தச் சச்சரவுகளைத் தீர்க்க வேண்டியிருந்தது. ஆனால் சில தாழ்த்தப்பட்ட ஜாதி சமூகங்கள் ஜாதிப் பட்டங்களை ஒருபோதும் ஆதரிக்கமாட்டார்கள் என்று ஷார்ராக் வாதிட்டார்.
மார்கோஷிஸ், ஜாதியின் விதிமுறைகள் மற்றும் பழக்கவழக்கங்கள் முற்றிலும் மதக்கருத்துடன் தொடர்பில்லாதவை, அவை சமூக நோக்கத்தைக் கொண்டவை, என்று கூறினார் . உண்மையான அரசியல் பொருளாதாரம், சமூக அறிவியல் மற்றும் நெறிமுறை கோட்பாடுகளைக் கொண்டு ஜாதியை மக்களே மாற்றக்கூடும் என்றும் நம்பினார்.
எஸ்.பி.ஜி. மிஷனில் உள்ள கற்றகிஸ்ட் மற்றும் ஆசிரியரான ஏ. என். சத்தம்பிள்ளை , ரெவ. கேமரர் மிஷனரி தேர்ந்தெடுத்த பெண்ணை மணக்க மறுத்துவிட்டதால், அவர் பணி நீக்கம் செய்யப்பட்டார். பழைய நாட்களில், கிறிஸ்தவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையைப் ஒரு அளவுக்கு மிஷனரிகள் ஒழுங்குபடுத்துவது அபூர்வமல்ல. இருப்பினும் நாசரேத் ஆசிரியர் சத்தம்பிள்ளைக்கு அவர் விரும்பின பெண்னை மணம் முடிக்க ஏற்பாடு செய்து கொடுக்க விரும்பினார்.
1849 இல், ரெவ. ராபர்ட் கால்ட்வெல் “தி டின்னவேல்லி ஷேனார்ஸ்” எனும் சிற்றேடினை வெளியிட்டார். சாணார் என்ற பெயரில் தங்களை அவமதிப்பதாக நாடார் ஜாதியைச் சேர்ந்த மக்கள், பிஷப் கால்ட்வெல் தங்களை மோசமான முறையில் சித்தரித்ததாக உணர்ந்தனர். பின்னர், ரெவ. மார்கோஷிஸ் வந்தபின், நாசரேத்தைச் சேர்ந்தவரும் திருநெல்வேலி நீதிமன்றத்தில் எழுத்தருமாக இருந்த , வை. ஞானமுத்து நாடார், இந்த வெளியீட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்தார். அந்த நேரத்தில் நாசரேத்தில் பணியாற்றியிருந்த ரெவ. மார்கோஷிஸ் இதற்குப் பின்னணியில் இருந்தார் என ராபர்ட் கால்ட்வெல் சந்தேகித்தார். இதில் இவர்கள் முரண்பாடு வலுத்தது
மார்கோஷிஸ் பணி மதப்பணியோடு நிறுத்தவில்லை. பல முக்கியமான உள்கட்டமைப்புகளுக்கும் காரணமானார்.
திருச்செந்தூர் திருநெல்வேலி ரயில் பாதை நாசரேத்தில் செல்லும்படி ஏற்பாடு செய்தார்.
· சேமிப்பு சங்கம்,
· மகளிர் ஆசிரியர் பயிற்சி பள்ளி (1887),
· இறையியல் தத்துவ கல்லூரி ,
குழந்தைகள் மிஷன்,
பிரசங்கக் குழுக்கள்,
· இரவு பள்ளி,ரயில் நிலையம்,
· ஆலை,
தந்தி,
· சாலைகள்
எனப் பலவற்றை ஏற்பட காரணமாக இருந்தார்.
முதலூர், கிறிஸ்தியநகரம் உள்ளிட்ட மொத்தம் 86 சபைகள், 11,432 ஞானஸ்நானம் பெற்றவர்கள்,
4,372 சபைக் கூட்டாளர்கள், 50 பள்ளிகளில் 2,483 மாணவர்கள், 120 ஆசிரியர்கள், இவரின் கீழ் இருந்தனர்.
நாசரேத் 1855 ம் ஆண்டில், மக்களிடமிருந்து தேவாலய நிதியாக ஒரே நாளில் ரூ. 1,300 வரை திரட்டுவதில் முன்னிலை பெற்றது. 1865-ஆம் ஆண்டில், தென் இந்தியாவில் உள்ள தேசீய குருக்கள் (native clergymen) நிதியுதவிக்காக, அவர்களது பங்கில் உள்ளூர் கிறிஸ்தவர்கள் அளிக்கும் காணிக்கைகளை ஊக்குவிக்கும் பொருட்டு, £1,000 தொகையை அந்தச் சங்கம் ஒதுக்கியது.
உண்மையிலேயே நாசரேத் இந்தியாவின் மிகச் சிறந்த மிஷன்களில் ஒன்றாக இருந்தது. மதராஸ் மறைமாவட்டத்தில் சங்கத்துடன் தொடர்புடைய மிகப் பெரிய மிஷன் இதுவாகும்.. மார்கோஷிஸின் மேற்பார்வையில், விசுவாசிகளின் எண்ணிக்கை பெரிதும் அதிகரித்தது, மேலும் அனைத்து துறைகளிலும் முன்னேற்றம் காணப்பட்டது.
மருத்துவப் பணி, அனாதை இல்லம், கலை தொழில்துறை பள்ளி ஆகியவை குறிப்பிடத்தக்க வளர்ச்சியை அடைந்தன. ஆரம்ப, நடுநிலை, மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் சங்க நிதியுதவியின்றி இயங்கின.
சுவிசேஷப் பணி என்பது தன்னை கிறிஸ்துவர் என்று அழைக்கும் ஒவ்வொருவரின் கடமையின் ஒரு பிரிக்க முடியாத பகுதியாகும்., ஒவ்வொருவரு கிறிஸ்தவனும் தங்கள் துறையில் சத்தியத்திற்கு சாட்சியாக நின்று மிஷனரியாகச் செயல்பட முடியும் என வலியுறுத்தினார்.
இவ்வாறு திரு. மார்கோஷிஸ் 1889 ஆம் ஆண்டு நான்கு கிராமங்களிலிருந்து திரட்டப்பட்ட சுமார் 500 பேர், இரண்டு ஆண்டுகளுக்கான கற்றலும் பரிசோதனையும் முடிந்தபின், கிறிஸ்தவர்களாக மாறினர் என்று குறிப்பிட்டு உள்ளார்.
மதராஸ் மறைமாவட்ட ஆயர் , 1892 ஜனவரி மாதத்தில் நாசரேத் கிறிஸ்தவர்களைச் சந்தித்தபோது:“மதராஸ் மண்டலத்தின் முழுவதிலும் , நாசரேத்தில் போல இத்தனை பலவிதமான பயனுள்ள பணிகள் நடைபெறும் மற்றொரு இடம் இல்லை” என்று குறிப்பிட்டார்.
1896 ஆம் ஆண்டு நாசரேத்தைப் பார்வையிட்ட பின், அரசின் பொது கல்வித் துறை இயக்குநர் தனது அறிக்கையில் திருநெல்வேலியில் ஆண், பெண் இருவருக்கும் கல்வியின் உயர்ந்த அளவில் உள்ளது, பல்வேறு பள்ளிகளில் நடைபெறும் பணியின் மதிப்பு, என்னை ஆழமாக கவர்ந்தது என்று குறிப்பிட்டார்:
திருநெல்வேலி மாவட்டத்திற்கு மட்டுமல்லாமல், இந்தியா மற்றும் சிலோனில் உள்ள பல மிஷன் மற்றும் அரசு கல்வி நிறுவனங்களுக்கும் ஆசிரியர்களை வழங்கின.
மதராசுப் பல்கலைக்கழகத்தில் மார்கோஷிஸ்,உறுப்பினராக நியமிக்கப்பட்டார்.
1901-ல் வைச்ராயிடம் இருந்து கைசர்-இ-ஹிந்த் பதக்கம் பெற்றார்.
1902- செயிண்ட் ஜார்ஜ் பேராலயத்தில் கானனாக நியமிக்கப்பட்டார்.
ஒவ்வொரு ஆண்டும் கானன் மார்கோஷிஸ் நினைவு கோப்பை எனும் மாநில மட்டப் பந்தாட்ட போட்டி நாசரேத்தில் நடத்தப்படுகிறது.
1906 ல் நாசரேத்தில் வெள்ளம், காலரா போன்ற இயற்கைச் சோபத்தின்போது மக்களுக்குச் சேவை செய்து வந்தார். அவருக்கு எப்போதும் உடல் நலம் குறைவாகவே இருந்தது. தினமும் மூன்று மணி நேரத்திற்கும் குறைவாகவே தூங்கும் வழக்கம் கொண்டிருந்தவர். 1908 ஏப்ரல் 23-ஆம் தேதி கொழும்பு செல்லும் வழியில் தூத்துக்குடியில் தங்கி, உடல்நலக்குறைவால் ஓய்வெடுத்தார். ஏப்ரல் 27 தேதி 1908 அன்று காலை சிறிய உணவு உண்ட பின் தூங்கிய நிலையில் அவர் மறைந்தார். அவர் திருமணம் செய்து கொள்ளவில்லை.
கிறிஸ்தவம் எப்படி சமூக நலனுக்கு மக்கள் வளர்ச்சிக்கு பங்காற்ற வேண்டும் என கற்று கொடுத்தவர் ரெவ.கானன் ஆர்தர் மார்கோஷிஸ். இன்றைய நாசரேத் தற்போதைய அரசை சார்ந்து இருக்கும் நிலையை கேள்விக்கு உள்ளாக்க வேண்டி உள்ளது.எல்லா ஊர்களிலும் என்பது போல் ஊருக்குள் சாராயக்கடை வைத்திருக்கும் ஊர் நாசரேத், என்பதையும் சிந்திக்க வேண்டி உள்ளது. ரெவ.கானன் ஆர்தர் மார்கோஷிஸ் துவங்கி வைத்த எத்தனை நிறுவனங்கள் தற்போதும் நடை பெறுகிறது என்பது தற்கால சபை தலைமைகள் தர வேண்டிய பதில்!
0 Comments:
Post a Comment