31 May 2024

நெல்லையின் பெருமை !

 














தாமிரபரணி ஆற்றின் வடக்கு கரையில் அமைந்துள்ள  திருநெல்வேலி, சென்னைக்கு தெற்கே 602 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. 'திருநெல்வேலி' என்ற வார்த்தையின் பொருள் புனித நெல் வேலி என்பதாகும். பாண்டியர் தலைநகராக மதுரை இருந்ததால், இரண்டாம் பாண்டிய தலைநகரமாக விளங்கிய திருநெல்வேலி , தென்காஞ்சி என்று அழைக்கப்பட்டுள்ளது. நாயக்கர்கள் காலத்திலும் அவர்களின் தென் தலைநகராக திருநெல்வேலி விளங்கியது. ஆற்காடு நவாப்பினால் 1801 ஆம் ஆண்டு திருநெல்வேலி கையகப்படுத்தப்பட்ட போது" திருநெல்வேலிச் சீமை" என்று பெயர்பெற்றது. அதன் பிறகு வந்த ஆங்கிலேயர்கள் தின்னவெல்லி என்று பெயரிட்டனர். மாணிக்கவாசகரால் தென் பாண்டிய நாடு என்று அழைக்கப்பட்ட, திருநெல்வேலி தேவார மூவர்களால் பாடப்பட்ட பாண்டிய நாட்டில் உள்ள 14 சிவஸ்தலங்களில் ஒன்றாகும் .

 

முதலில் நெல்லின் ஊர் என்ற அர்த்தத்தில் சாலியூர் என அழைக்கப்பட்டது. சேக்கிழார் தனது பெரியபுராணத்தில் திருநெல்வேலியை "தென்பொருணை புனைநாடு" என்று குறிப்பிடுகிறார். மனோன்மணியம் நாடகத்தில் சுந்தரம்பிள்ளை திருநெல்வேலியை "பீடுயர் நெல்லை" என்று குறிப்பிட்டு உள்ளார்.  திருநெல்வேலியைக் குறிக்கும் மற்ற சுருக்கமான பெயர்கள் நெல்லை, நெல்லையம்பதி மற்றும் நெல்லையம்பலம் போன்றவை ஆகும். திருநெல்வேலியின் முந்தைய பெயர் "வேணுவனம்" என்று ஸ்தலபுராணம் கூறுகிறது.

மதுரையைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்து வந்த பாண்டிய மன்னர் ’ நின்ற சீர்நெடுமாறன் வேணுவனநாதர் கோயிலை  கட்டினான் என்பது வரலாறு. களப்பிரர் ஆட்சியிலிருந்து பாண்டிய நாட்டை மீட்டெடுத்த பாண்டிய மன்னன் ஆவார் இவர். அவரை தொடர்ந்து அவனி சூளாமணி (கி.பி.600 முதல் - 625 வரை) அதன் பின்  அவனி சூளாமணியின் மகனான செழியன்சேந்தன் (620 முதல் 642 வரை) அதன் பின் அவருடைய மகன் அரிகேசரிமரவர்மன் (641 முதல் 670 வரை) பாண்டிய மன்னராக ஆட்சி செய்தனர். இவர் சுந்தர பாண்டியன், கூன் பாண்டியன், போன்ற பெயர்களினாலும் அரிகேசரி பராங்குசன் என்ற பட்டயங்களிலும், 640 ஆம் ஆண்டளவில் மாறவர்மன் என்ற பெயரிலும் அறியப்பட்டவர்.. அரிகேசரி ஆரம்ப காலத்தில் சமணத்தினைப் பின்பற்றி வந்திருந்தாலும் திருஞானசம்பந்தரால் சமண மதத்திலிருந்து சைவ சமயத்திற்கு மாறினார்.

பொதுவாக  தென் இந்திய கோயில்கள் கடல், மலை மற்றும் காடுகள் அருகில் இருப்பதாகவே காண்கிறோம்.  மனிதர்கள் மரங்களில் கடவுள் இருப்பதாக எண்ணி உயரமான மரங்களை வணங்கி வந்த வழக்கம் இருந்து வந்துள்ளது.   அதன் நீட்சியாக உயரமான கோயில்கள், மற்றும் கோயில் கோபுரங்கள்  உருவாக்கி வைத்து இருந்தனர்.  பிற்காலம் ஒவ்வொரு கோயிலுக்கும் ஒவ்வொரு மரம் என  ஸ்தலவிருக்‌ஷங்கள்   நிலைநாட்டினர். அவ்வகையில் மூங்கில் செடி கோயிலில் ஸ்தலவிருக்‌ஷமாக உள்ள, தாமிரபரணி நதிக்கரையில் வீற்று இருக்கும் மிக முக்கிய கோயில்  மட்டுமல்ல, மதுரை விஸ்வநாத நாயக்கர் (1529 – 1564) காலத்தில் தென் மாகாணத்தின் தலைமையகம் திருநெல்வேலி ஆனது. மதுரா கையெழுத்துப் பிரதிப்படி மதுரை விஸ்வநாத நாயக்கரின் தளவாய் ஆக இருந்த அரியநாதமுதலியார் தான் திருநெல்வேலி சீமை(நகரம்) உருவாவதற்கு காரணமாக இருந்தவர். ஆற்காடு நவாப்பிடமிருந்து 1801 இல் ஆங்கிலேயர்கள் கையகப்படுத்தினர். மாவட்டத்தின் மையப் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ நெல்லையப்பர், மற்றும் காந்திமதி அம்மன் கோயிலைச் சுற்றி திருநெல்வேலி வளர்ந்து வந்துள்ளது.

 

இக்கோயிலை சுற்றியே சமூககட்டமைப்பு வளர்ந்து உள்ளது.

நெல்லையப்பர் ஆலயம் கட்டின காலம்  பற்றி ஒரு திடமான தகவல் இல்லை என்றாலும்  இலக்கியம் மற்றும் பக்தி புத்தகங்களில் உள்ள தகவல் மற்றும்  கட்டிட கலையின் அமைப்பை வைத்தும் ;  இக்கோயிலின் கற்பகிரகத்திலுள்ள சிறு விக்கிரகம்  மற்றும் அரைமண்டபம் , ஏழாம் நூற்றாண்டில் சேந்தன் மாறன் உருவாக்கியுள்ள ’மலையாண்டி குறிச்சி’ கோயில் மாதிரி இருக்கிறது என்பதால் இதன் கட்டுமானம்  ஏழாம் நூற்றாண்டில் எனக்  கணக்கில் கொள்கின்றனர்.  ஏழாம் நூற்றாண்டில்  மூல மகாலிங்கத்தை  இக்கோயிலின் மூர்த்தியாக  வணங்கி வந்துள்ளனர். 13 ஆம் நூற்றாண்டில்,  மூங்கில் காட்டுக்கு  இடையில்  இருந்து  வந்ததால் வெய்முத்தார் அல்லது வேணு வனநாதர் என்றும் அழைக்கப்பட்டு உள்ளார். திருவிளையாடல் மற்றும் ரெட்டை புலவர் வெண்பாவில், இக்கோயிலின் மூல மூர்த்தி; மூங்கில்களின் முத்து  என்ற பொருளில் வெய்முத்தார் என்றே குறிக்கப்பட்டு  உள்ளது.  இக்கோயில் மூர்த்திக்கு அரிகேசரி பராக்கிரம பாண்டியன் ஒரு தங்க கிண்ணம் கொடுத்தாக  குறிப்பு உள்ளது . 17 வது நூற்றாண்டில் எழுதப்பாட்ட ’கிளை வீடு தோது’ என்ற குறிப்பிலும் வெய்முத்தார் என்றே குறிப்பிட்டு இருந்தனர்.

 இன்று அழைக்கும்  நெல்லையப்பர் என்ற பெயர் ஒன்றவது  சுந்தர பாண்டிய  குறிப்பில்  உள்ளது. மற்றைய பல குறிப்புகளில் இம்மூர்த்தியை  திருநெல்வேலி தேவர், திருநெல்வேலியுடைய தம்புரான், திருநெல்வேலியுடைய நாயனார், வேணுவனனேஸ்வரர், வ்ரிகிவரிஸ்வரர், மற்றும்    திருகம்மகொட்டடு ஆளுடைய நாச்சி என்றும் அழைத்துள்ளனர்.

நெல்லையப்பர் கோயில் சுவர்களில் பிற்காலச் சோழர்கள் மற்றும், பிற்காலப் பாண்டியர் காலத்துக் கல்வெட்டுகளும் உள்ளன.  நெல்லையப்பர் கோயிலில் உள்ள சிறிய சன்னதியின் மேற்குச் சுவர் மற்றும் மூலமஹாலிங்கர் சன்னதியின் மேற்குச் சுவரில் காணப்பட்டும் வீரபாண்டியரின் (கி.பி.961) கல்வெட்டு திருநெல்வேலியை கீழ்வேம்புநாடு என்று குறிப்பிடுகிறது.  பாண்டிய நாடு சோழர்களின் கீழ் ஆட்சிக்கு வந்த போது 991 முதல் ராஜராஜ வளநாடு என அறியப்பட்டது.  1012 இல் ராஜராஜ மண்டலமாக பெயர் மாற்றப்பட்டது. 1022 முதல் ராஜராஜபாண்டியநாடு என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது.   17 வது நூற்றாண்டில் ஆட்சி செய்த மாறவர்’’மன் பொன்னின் பெருமாள்’ என்றும்  அழைத்துள்ளார்.  மாறவர்மன்  சுந்தர பாண்டியன் குறிப்பில் ’பூசம் பிரண்ட திருனெல்வேலி பெருமாள் ’என்று அழைத்துள்ளனர். அவ்வகையில் நெல்லையப்பர் காந்திமதி என்ற  பெயர்கள் பிற்பாடு வந்தது என்றே முடிவாகுகிறது.

 அதே போல கோவிலில் கட்டிட அமைப்பை அவதானிக்கையில் அரமணிமண்டபம் வரை ’நிற சீர் நெடுமாறன்’ கட்டியிருக்க வேண்டும் என்கின்றனர். மணிமண்ட இசை தூண்கள் மற்றும் நாயக்க மன்னர்கள் காலத்தையது .  1484 முதல்  1503 வரை வேணாட்டை ஆட்சி செய்த ரவிவர்மன் திருநெல்வேலியில் சதுர்வேதிமங்கலத்தை நிறுவி உள்ளார். நெல்லையப்பர் கோயிலில் பூஜைகள் செய்யும் விதம் , அக்ரஹாரம் நிறுவி பிராமணர்களை குடியமர்த்தி இருந்துள்ளார்.

பாண்டிய காலம்  ஒரு சிறு மூர்த்தியுடன்  ஆரம்பிக்கப்பட் கோயில் நாயகக்க காலத்தில் நிறைவு பெற்றுள்ள நெல்லையப்பர்  கோவிலின் முழு சுற்றளவு  850 நீளம் 756 அகலம் ஆகும்.  காந்தியம்மை மற்றும் சிவனுக்கும் என  சமமாக பிரிக்கப்பட்ட இரட்டை கோயில் உள்ள தலமாகும்.  

ஆலய கட்டிட அமைப்பு என்பது, மக்களின் கலாச்சாரம் மற்றும் காலநிலை காரணிகளும்   மற்றும் நிகழ்த்தப்படும்  சடங்குகளும் உள்ளடங்கும். இந்தியாவின் கோயில்களின் கட்டிடக்கலைப்  நாகரா, வேசரா மற்றும் திராவிட கட்டிடக்கலை என மூன்று வெவ்வேறு பாணிகளை பின்பற்றபடுகிறது. ந்தியாவின் வடக்கு பகுதிகளில் நாகரா மற்றும் வேசரா கட்டிடக்கலைப் பாணி பேணப்படுகிறது போல தென் பகுதிகளில் திராவிட பாணி கட்டிடக்கலை  பின்பற்றப்பட்டது.  திராவிட கட்டிடக்கலை, வேத காலத்துக்கு முந்தையது என நம்பப்படுகிறது. திராவிட கோயில் கட்டிடக் கலைகளின் சிறப்பம்சம் ஆக கருதப்படுவது  கருவறையுடன் கட்டப்படும் கோயில்கள்,  அதன் செறிவான வளையங்கள் கொண்ட சுற்றுப் பாதைகள் மற்றும், நீண்டு செல்லும் தாழ்வாரங்கள்,  கோவில் குளம்(தெப்பக்குளம்), திறந்த வெளிகள் (நந்தவனம்) போன்றவை ஆகும்.

கோவிலின் முழு சுற்றளவு 850 அடிக்கு 756 அடி கொண்டது. கோவிலின் பிரதான நுழைவாயில் ராஜகோபுரத்துடன், கிழக்குப் பக்கமாக உள்ளது. கோவிலை அணுகும் நான்கு  திசைகளிலும் நுழைவாயில்கள் உள்ளன.

நெல்லையப்பர் கோவில் தெற்கு மாடவீதியில், கொடிமர  மேடு, கொட்டகை மற்றும் களஞ்சிய அறைகள் அமைந்துள்ளன. இந்த நடைபாதையில் உள்ள தூண்கள் அழகாக செதுக்கப்பட்ட அமைப்புகளைக் கொண்டுள்ளவை. நடைபாதையின் தென்மேற்கில் வடமலையப்பபிள்ளை காலம் வரையுள்ள நாயக்கர் ஆட்சியாளர்கள் உருவங்கள்  உள்ளன.

கிழக்கு தாழ்வாரத்தில் உள்ள நந்தி, கி.பி 1155 இல் கட்டப்பட்டது. நந்திமண்டபத்திற்கு அருகில் நந்தியும், கொடிமரமும் மற்றும் சூரியதேவர் பவளக்கொடி, அல்லி, மன்மதன், என மிகவும் கவர்ச்சிகரமான உருவங்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.




















நந்திமண்டபத்திற்கு அடுத்தபடியாக வேணுவனநாதர் கோவிலின் தெற்கு மாடவீதியில்; நான்கு சைவ  சிற்பங்களின் திருவுருவங்கள் உள்ளன. சந்தனாச்சாரியார், சப்தமாதாக்கள் அறுபத்து மூன்று நாயன்மார்கள், பொல்லாப்பிள்ளையாரும், கைலாசபர்வதத்தை கையிலேந்திய படி  ராவணனும் உள்ளனர்

ராஜராஜ பள்ளிகொண்ட பெருமாள் சுயம்புலிங்கம் தெற்கு திசையில் சாய்ந்த நிலையில் கட்டப்பட்டு உள்ளது.  இதன் வாயிலில் வலம்புரிப்பிள்ளையார், சந்திரசேகரர் மற்றும் தட்சிணாமூர்த்தி, பிக்ஷாந்தர் வேடத்தில் சிவபெருமான், சண்டேஸ்வரர் ஆகியோரின் உருவங்களும் காணப்படுகின்றன. மேலும் தொடர்ந்தால்,  இந்த கோவிலின் மூலவிக்கிரகம் என்று கூறப்படும் பிட்லிங்கம் அல்லது திருமூல  நாதர் உருவங்களை காணலாம்.

ஊஞ்சல் விழா. 520 அடி நீளமும் 63 அடி அகலமும் கொண்ட திருகல்யாணமண்டபம் அல்லது திருமண மண்டபம்  இந்த அம்பாள் கோயிலின் மற்றொரு அழகிய அமைப்பு ஆகும்.   ஐப்பசி மாதத்தில் சுவாமி நெல்லையப்பர் மற்றும் காந்திமதி அம்பாளின் திருக்கல்யாணத்திற்குப் பிறகு கொண்டாடப்படுவது  ஊஞ்சல் விழா.  எனவே இந்த மண்டபம் ஊஞ்சல் மண்டபம் என்று அழைக்கப்படுகிறது. இந்த மண்டபம் தீவிர பக்தரான சேரகுளம் பிறவிப்பெருமாள் பிள்ளையின் அன்பளிப்பாகும். 

ஊஞ்சல் மண்டபத்திற்கு வடக்கே புனிதமான தொட்டி, அதன் நான்கு பக்கங்களிலும் படிக்கட்டுகள் உள்ளன. இக்கோயிலில் கருமன் குளம் என்ற மற்றொரு குளம் உள்ளது. பெரும்பாலான திராவிடக் கோவில்கள் போன்றே நெல்லையப்பர் கோயிலிலும் இரண்டு கோவில் குளங்கள் (தெப்பக்குளம்) உள்ளன. இவை தேவையான சடங்குகளுக்கு பயன்படுத்துகின்றனர்.  முக்கியமாக  காற்றின் திசையில் உள்ள  தெப்பக்குளம், லேசான காற்றை உருவாக்கி உள்ளூர் காலநிலையை மிதப்படுத்தி  மேம்படுத்தி வைத்துள்ளது. கோயில் தெப்பக்குளங்கள் வற்றாதவை மட்டுமல்ல  பல்வேறு தாவரங்களுக்கு  அடைக்கலம் கொடுக்கும் படி உள்ளது.  மேலும் மழைநீர் சேகரிப்புக்கும் பயன்படுகிறது.

அனைவரின் கவனத்தையும் ஈர்க்கும் இசைத் தூண்கள் மணிமண்டபத்தில் உள்ளன. ஒற்றைக்கல் ஒத்ததிர்வு அமைப்பில் செதுக்கப்பட்ட இசைத் தூண்கள் தனித்தன்மை வாய்ந்தவை. இந்த இடத்தை நடனம் ஆடுவதற்கு நடனக் கலைஞர் அல்லது தேவதாசிகள் பயன்படுத்தி உள்ளனர். மணிமண்டபத்தின் தென்கிழக்கு மூலையில் உள்ள நாற்பத்தெட்டு தூண்களின் கீழே சித்தரிக்கப்பட்டுள்ள நடனம் ஆடும் தேவதாசியின் உருவம் உண்டு. இந்த மண்டபம் திறந்த வெளி நடன அரங்கத்துடன் அமைந்துள்ளனர்.

இருவரும் இணைபிரியா தம்பதிகள் என்றாலும்  சுதந்திரமானவர்கள்        என்பதற்கு இணங்க நெல்லையப்பர் மற்றும் அம்மனுக்கு வெவ்வேறு சன்னதி வளாகத்தில்  உள்ளன.   இவையை சங்கிலி மண்டபம் இணைக்கிறது. திருமலைநாயக்கர் காலத்தில் 1647ல் திருநெல்வேலியின் ஆளுநரும் சிறந்த சிவபக்தருமான வடமலையப்பப்பிள்ளை இந்த மண்டபத்தை கட்டினார்.  சங்கிலி மண்டபம் தூண்களின் மீது யாழிகளின் உருவங்கள் சிற்பங்களாக செதுக்கப்பட்டுள்ளது.  பச்சை வடிவேல் காசிவிஸ்வநாதர், அனுமன், அர்ஜுனன் மற்றும் பீமன் வைத்துள்ளனர். 
குமரன் கோயில் சங்கிலி மண்டபத்தின் மேற்குப் பகுதியில் அமைந்துள்ளது.

 

நவராத்திரி மற்றும் கார்த்திகை மாதங்களில் சோம வார திருவிழா கொண்டாடப்படுகிறது. கல்லாலால் ஆன பீம்களும்  ரதி, குறவன் மற்றும் குறத்தி பிரதிகள் மிகவும் நுணுக்கமாக வடிவமைக்கப்பட்டுள்ளன. இம்மண்டபத்தின் மேற்கே வன்னியடிசத்தனாரின் உருவங்கள் மற்றும் பைரவரும், மற்றும் யாகம் செய்யும் திருத்தலமும் காணப்படுகின்றன. வீரபத்திரன், அர்ஜுனன், கர்ணன், விநாயகர் மற்றும் முருகன் ஆகியோரின் சிற்பங்கள் மனதில் என்றும் நிலைத்திருக்கும் தோற்றத்தை உருவாக்குகின.

திராவிட கட்டிடக்கலைப்படி, வெளிச்சம் மற்றும் காற்றோட்டம் முக்கிய பங்கு கொள்கிறது.  .நெல்லையப்பர் கோயிலின் மற்றொரு சிறப்பு, ஒளி வரும் சாளரங்களின் அமைப்பாகும்.  தேவைப்படும் இடங்களில்  தெளிவான சாளரங்கள் வழங்கப்பட்டுள்ளன. திறந்த நடைபாதைகள், உட்புற இடைவெளிகளில் ஒளி ஊடுருவ அனுமதிக்கிறது.  கோவிலின் மையப்பகுதியான  கற்பகிரகத்தின் அமைப்பு  சூரிய கதிர்வீச்சின் தீவிரத்தை வடிகட்டி குறைந்த ஒளியை மட்டுமே  நுழைய அனுமதிக்கும் முறையில்  உள்ளது.

ஒரு பக்கத்தில் தோட்ட இடைவெளிகளில் திறக்கும் ஜன்னல்கள் மற்றும் மறுபுறம் கோவில் குளங்கள். கருவறையைச் சுற்றிலும் நிரம்பிய நடைபாதைகள், நடன அரங்கம் (தாமிரசபை) என கலைப்படைப்பின் உச்சமாகும் நெல்லையப்பர் கோயில்.

கோயில் வளாகம் மொத்த பரப்பளவில் 72% கட்டப்பட்ட இடங்கள் ஆகவும் பொது இடங்கள்  28% திறந்தவெளிகள் கொண்டவை ஆகும்.த்கொண்ட திறந்தவெளிகள் ஆகும்.  திறந்தவெளிகள் தோட்ட இடங்களாகப் பயன்படுத்தப்படுகின்றன. கோயில் சடங்குகளுக்குப் பயன்படுத்தும் மலர்கள் இந்தத் தோட்டத்தின் மண்டபத்தின் மறுபுறம் நன்கு பராமரிக்கப்பட்ட இன்பத் தோட்டத்தில் இருந்து பெறுகின்றனர்.  இந்தத் தோட்டத்தை வடிவமைத்தவர் திருவேங்கட கிருஷ்ண முதலியார். 

1756 இல் நூறு தூண்களுடன் கூடிய சதுர வசந்தமண்டபம் இதன் நடுவில் கட்டப்படுகிறது. இந்த வசந்த மண்டபத்தில் நீர் சொட்டும் சிவபெருமானின் திருவுருவங்கள், அகஸ்திய முனிவர் மற்றைய முனிவர்கள் உள்ளது சிறந்து விளங்கும்  கட்டிடக் கலைஞரின் பணித் திறனின்  எடுத்துக்காட்டுகள் ஆகும். கோவில் யானை  வடக்கு மாடவீதியில் தங்க வைக்கப்பட்டுள்ளது.

நெல்லைக்கு அழகு மட்டுமல்ல, நெல்லையின் அடையாளமாக பாரம்பரியமான நெல்லையப்பர் கோயிலை சுத்தம் சுகாதாரமாக பண்பாட்டு தளமாக பாதுக்காக்க வேண்டியது  நமது கடமை ஆகும்.

 

 


 

 

2 comments:

  1. மிகவும் பாதுகாப்பான ஆவணம்

    ReplyDelete
  2. திராவிட கட்டட கலை அல்ல தமிழர் கட்டிடக்கலை
    திரு என்றால் மூன்று என்று அர்த்தம் படைத்தல் காத்தல் அழித்தல் என்ற மூன்று தொழிலை செய்யும் இறைவன் உலகிற்கு நெல்லை கண்டுபிடித்து அதற்கு வேலி இட்டு காத்ததாக புராணம் குறிப்பிடுகிறது

    ReplyDelete