12 Mar 2023

காலாபாணி - கானல் நீர்

 


டாக்டர் மு. ராஜேந்திரன் இ.ஆ.ப. விற்கு 2022 யின் சாகித்திய அகாதெமி விருது பெற்றுத் தந்த  புத்தகம் காலா பாணி. 2022 ல் 538 பக்கத்துடன்  அகநி பதப்பகத்தில் இருந்து வெளியாகி உள்ளது.

சாதிகளால் பிரிந்து கிடக்கும் இக்கால மனிதர்களிடையே சாதிகளைக் கடந்து போராளிகளாய் இணைந்த எழுச்சிப் போராட்டத்தின் பெயர் தெரியா நபர்களுக்கு இப்புத்தகம் சமர்க்கப்பட்டுள்ளது என்று குறிப்பிடுகிறார். 


நாடு கடத்தப்பட்ட முதல் அரசனின் கதை என்று குறிப்பிடப்பட்டுள்ளது.  வேங்கை பெரிய உடையணத்தேவர் எப்படி அரசர் ஆனார் என்பதைப் பற்றி எந்தத் தகவலும் இல்லை. 


மருதுபாண்டியருக்கு  ஆதரவாக யார் செயல்பட்டாலும் அவர்கள் மீது கடுமையான தண்டனையை வழங்க அக்கினியூவிற்கு மெட்ராஸ் கவர்னர் எட்வர்ட் கிளைவ் அதிகாரம் வழங்கிய நிலையில், வெள்ளைக்கார அதிகாரி வெல்ஷிடம் நட்பாக பழகிய மருது பாண்டியரையும் ஊமைத்துரையையும் தோற்கடிக்க வெல்ஷை அக்கினியூ பயன்படுத்துகிறான். மருது கட்டுப்பாட்டில் இருந்த சிவகங்கை அரசர் உள்ளிட்ட எழுபத்தி மூன்று பேரை பாதுகாப்பாக பினாங்கு தீவிற்கு கொண்டு சேர்க்கும் பணி லெஃப்டினென்ட் ராக்கெட்டிடம் ஒப்படைக்கப்படுகிறது . பெரிய உடையணத்தேவர் மற்றும் மைத்துனர் துரைசாமி மேல் பாவப்பட்டு இந்தப் பணியை ராக்கெட் எற்பதாக உள்ளது. 


கிறிஸ்டீனா என்ற வெள்ளைக்காரப் பெண் மூலம் மேஜர் வெல்ஷ், அவரின் மேலதிகாரி கர்னல் அக்கினியூ, லூஷிங்டன்  போன்ற ஆங்கிலேய அதிகாரிகளைக் குற்றம் சாட்டுவதுடன் இக்கதை ஆரம்பமாகிறது. 


சிவகங்கைச் சீமையில் பதவி நீக்கம் செய்யப்பட்டு நாடு கடத்தப்படும் எழுபத்தி மூன்று பேரையும் இன்றுவரையிலும், இனிமேலும் ஒன்றாக இருக்க அனுமதித்த உங்களது கிழக்கிந்திய கம்பெனியின் கவர்னர் கர்ணல் அக்கினியூவிற்கும் கலெக்டர் லூசிங்டனுக்கும் எங்களது நன்றியை தெரிவியுங்க. 

நீங்கள் எங்களை காலாபாணி என்று அறிவித்த போதும் எங்களில் யாரும் குறிப்பாக வயதான கள்ளிமந்தயம் முதற்கொண்டு சிறுவனான துரைசாமி வரை யாரும் அழுது புலம்பவில்லை, ஒருவரும் பயப்படவில்லை என்பதையும் உங்கள் மேலதிகாரிகளுக்குத் தெரிவியுங்கள். போர்க்களத்தில் நாங்கள் இறந்திருக்க வேண்டும், மரியாதையாவது மிஞ்சியிருக்கும் என்ற ராஜா வேங்கை பெரிய உடையணத்தேவரின்  குறிப்பு கிறிஸ்டீனா அளவு கூட கோபம் கொண்டாதாக இல்லாது ஆங்கிலேயர்களின் கட்டளைக்கு அனுசரித்து தண்டனையைப் பெறுவதாகவே உள்ளது. ஆங்கில அரசு கைது பண்ணியிருந்தாலும் ஜெகநாதன் அய்யர் போன்ற கைதிகள் தண்டிக்கப்படாது இருப்பதற்கு ஒரு காரணம், பிராமணர்களைத் தண்டிக்க கூடாது என்ற வெள்ளைக்காரர்களின் நம்பிக்கை என்கிறார்

ஜேபி என்ற குளத்தூர் ஜமீன் தனது சந்தனக் கோலை உயர்த்திக் காண்பித்து, முதுகை வளைத்து வணங்கினான் போன்ற தகவல்கள் ஆங்கிலேயர்களுடன் இணக்கமாகப் போன ஆட்சியாளர்களைத் தான் நினைவு படுத்துகிறது

வேலுநாச்சியார் வெற்றி பெறுவதற்கு அயிதர் அலி  உதவினது,  மூன்று மாத குழந்தை முத்துராமலிங்கம் ராமநாதபுரம் சேதுபதியாக நியமிக்கப்பட்டு அவர்  சார்பில்  அரசாட்சி நடத்திய ராணி அடிக்கடி வெளியூர் செல்வது, நீதிபரிபாலனம் செய்வதோ சரியாக இருக்காது என்பதால் ராணிக்கு உதவியாக திருப்புல்லாணி வெள்ளையன் சேர்வைக்காரன் பிரதானியாக இருந்து செயல்படுகிறார்.  ஒரு பிரெஞ்சு பாதிரியார் லெனுவார் யார் சிக்கினாலும் ஞானஸ்தானம் செய்து கையில் வேத புத்தகத்தைக் கொடுத்து விடுவார் (பக்கம் 4 9) குளத்தூர் ஜமீனின் இரண்டாவது மகனான ஜேபி இராமசாமிக்கு ஆற்காடு நவாபுடன் ஏற்பட்ட நட்பு சாராயத் தொழிலை அறிமுகப்படுத்துகிறது, மார்டினா ரோசல்பட்டி என்ற  கத்தோலிக்க பெண்ணுடன் குடும்பம் நடத்த புரோட்டஸ்டன்ட் கிழக்கிந்தியக் கம்பெனி அதிகாரிக்கு தடை இருந்ததாகக் குறிப்பிடுகிறார். கிழக்கிந்தியக் கம்பெனிக்கு எதிராக கட்ட பொம்மனால் உருவாக்கப்பட்ட ரகசிய சங்கம் திருநெல்வேலி வீர சங்கம் இவர்களுக்கும் பெரிய மருதுவிற்குமான தொடர்பு போன்ற பல தகவல்கள் தரப்பட்டுள்ளது. 


சின்ன மருது ஊமைத்துரைக்கு உதவினதால், பெரிய மருது சின்ன மருதுவிற்காகத்  தண்டிக்கப்படுவதாகக் குறிப்பிட்டுள்ளார். 

வெள்ளைகாரர்கள் சிவகங்கையின் மன்னர் என்ற பதவிக்குப் பதிலாக இஸ்திமிரார் என்ற பதவியில் கௌரி வல்லபர் வருவதும், புதிதாக ஆட்சிக்கு வந்தவர்கள் வேங்கையின் மனைவிக்கு மாதம் நாற்பது பணம் ஓய்வூதியம் தரும்படி ஆங்கிலேய அரசு கட்டளையிடுவதும் மனுதர்மப்படி மருது, சின்ன மருது, வேங்கை மனைவிகள் மனுதர்மப்படி தனது அடிமைகள் என்பதால் ஓய்வூதியம் கொடுக்கப்போவது இல்லை என்று வல்லபர் கூறியது சரி என்பதை பிராமணர்கள் வழி தெரிந்து கொண்டதால் ,  ஆங்கிலேயர் அதில் தலையிட விரும்பவில்லை  என்ற தகவல் தருகிறார். 

அயிதர் அலி, சிவாஜி, அவுரங்கசீப் செய்த அடாவடி தான் மக்களால் வெள்ளைக்காரர்களை விரும்பக்  காரணமாகினது என்று குறிப்பிடும் கதை ஆசிரியர் ராஜா, ராணி என்று ஆட்சி செய்த உள்ளூர் ஆட்சியாளர்களின் பங்கைப் பற்றி எங்கும் குறிப்பிடவில்லை.

 

வேங்கைக்கு முதல் மனைவி, வேலு நாச்சியாரின் மகள் வெள்ளைச்சியைப் பற்றி இரு இடங்களில் குறிப்பிட்டுள்ளார். அதன் பின், வேங்கை மணம் முடித்த பெரிய மருதுவின் மகள் மருதாத்தாள்  அத்துடன் வேங்கையின் இன்னொரு மனைவி என்று மூன்று மனைவிகள் இருந்த நிலையில் மூன்றாவது மனைவி என்னவானார் என்பதே இல்லை.


அயிதர் அலிக்கும் வேலுநாச்சியாருக்கும் இருந்த அரசியல் நட்புணர்வு, வேலு நாச்சியார் பதவியில் வர அயிதர் உதவினது, ஷியாப் பிரிவு அயிதருக்கும் சன்னி துலுக்கரான ஆற்காடு நவாப்பிற்கும் இருக்கும் எதிர்நிலையும், வேங்கையனுக்கு பிரச்சினை என்றதும் வேங்கை மனைவி மருதாத்தாள் நவாப் மகனை அணுகுவதும், லக்னோவின் அருகிலுள்ள ஊரில் ஒரு சாதாரண குடும்பத்தில் எனது பாட்டனார் பிறந்து இங்கு நவாபாக வந்தார் . எங்களை வைத்து உங்களை ஒடுக்கிய கம்பெனி இப்போது எங்களை ஒன்றும் இல்லாமல் ஆக்கி விட்டது. இன்று  ஒரு பரதேசியாக தர்காவில் வாழ்ந்து கொண்டிருக்கிறேன் என்ற நவாபின் மகனின் வார்த்தை, நவாப் ஆங்கிலேயர்களுடன் இணக்கத்தில் இல்லாது இருந்ததால் தற்போது பதவி இழந்ததும் கதையில் காண்கிறோம். 


கிறிஸ்டியனா சொல்வதாகச் சொல்லப்படும் மோசஸ் கதைக்கு ஆதாரம் எது என்றும் கதை ஆசிரியர் குறிப்பிடவில்லை. மோசஸ் என்று ஒரு பெரிய மகான் இருந்தார். எங்கள் சாமி கிறிஸ்துவுக்கு முன்னால் அவர் தான் எங்க மூதாதையர்களுக்குச் சாமியாக இருந்தார் என்று துவங்கும் கதை முற்றிலும் பைபிள் கதைகளுக்கு , யூத மரபுக் கதைகளுக்கு மாறுபட்டது மட்டுமல்ல தவறானது.  


ஷியா சன்னி மோதலும், கத்தோலிக்க புராட்டஸ்டன்டு மோதலும் திண்டுக்கல்லில் கன்னடம் பேசும் திப்புசுல்தான் ஆட்சி, பாண்டிச்சேரியில் பிரெஞ்சுக்காரர்கள், தஞ்சாவூர் மராட்டியர் ஆட்சி , நாகப்பட்டினத்தில் ஆற்காடு நவாப்பின் ஆட்சி, டச்சுகாரர்கள் தரங்கம்பாடியில் டேனிஷ் மிஷன் இதைத் தவிர்த்து சீமையின் எல்லையில் மலையாளம் பேசும் திருவாங்கூர் ராஜாவின் ஆட்சி,  தங்கள் பகுதியில் உள்ள இரண்டு பாளையங்களில் ஆட்சியாளர்கள் பேசுவது தெலுங்கு.  72 பாளையங்களில் மறவர்களின் கட்டுப்பாட்டிலுள்ள 10 பாளையங்கள் தவிர்த்து மற்ற பாளையக்காரர்கள் இன்னமும் கையெழுத்துக் கூட தெலுங்கு பயன்படுத்தும் தகவல் தருகிறார்.



ஆட்சி கையிலிருந்தால் வாணிபத்தை அபரிதமாகப் பெருக்கலாம் என்று கிழக்கிந்தியக் கம்பெனிகள் கண்டறிந்தனர், அரசர்களின் குடும்பப் பெண்கள் மூலம் ஒரு மதத்தைப் பரப்புவது எளிது என்று மதகுருமார்கள் கண்டறிந்தனர்;  பெண்களுக்கே உரிய புதிய வாணிபப் பொருட்கள் மீதான ஆசை, போட்டி அரசிகளின் பிள்ளைகளைத் தவிர்த்து தன்னுடைய பிள்ளையை அடுத்த அரசனாக உருவாக்க;  வெளிநாட்டு ஆட்களின் உதவி, செல்வாக்கைத் தக்க வைக்க, கூடுதல் செல்வாக்குப்பெற; மன நிம்மதிக்கான புதிய வழி என்று பல காரணங்களோடு சொந்த மதத்தின் நிராகரிப்பும் வறுமையும் மத மாற்றத்திற்கான சூழ்நிலையை உருவாக்கியது என்ற மதமாற்றத்திற்கான காரணத்தை அடுக்குகிறார் ஆசிரியர்.

சீனர்களை விட மற்றவர்களை விட தமிழர்கள் நன்றாக வேலை செய்வீர்கள் என்று தெரியும், எதிர்த்துப் பேச மாட்டீர்கள், கொடுக்கும் சம்பளத்தை வாங்கிக் கொண்டு வேலை செய்வீர்கள் என்பதால் நிச்சயம் நாங்கள் மலாய்க்காரர்கள் சீனர்களுக்குத் தரும் சம்பளத்தை கட்டாயம் உங்களுக்கு தருவோம்; சீனர்கள் சுரங்க வேலையில் கில்லாடிகள். இது போன்ற தகவல்கள் இன்றைய வடமாநிலத் தொழிலாளர்கள் நிலையை நினைவுபடுத்துகிறது.

 


ஓர் ஊரில் ஒரு அரசன் இருந்தாராம் எவ்வாறு ஒரே சூழலில் வாழும் ஒருவனுக்கு நல்லது நடக்கிறது மற்றவனுக்குக் கெட்டது நடக்கிறது என்று அவரிடம் கேட்டால் அதற்கு மந்திரி சொன்னாராம்,  அது அவனவன் தலையெழுத்து -  இது போன்ற கூர்மையற்ற விவரணைகள் பக்கத்தின் அளவை மட்டுமே கூட்டியுள்ளது.  

துரைசாமி கெடா சுல்தானின் சுரங்கத்தில் வேலை பார்க்கிறான் அவனோடு அவனது சகாக்கள் 20 பேர் இருக்கிறார்கள். இந்த ஊரில் நல்ல பெயர் வாங்கி கவர்னரின் பரிந்துரையுடன் சீக்கிரம் ஊருக்குப் போக வேண்டும் என, கடுமையாக வேலை செய்கிறான். கைதிகளில் ஆறு பேருக்கு மாதா மாதம் பிழைப்பு ஊதியமாக இரண்டு பவுண்டும் துரைசாமிக்கு  மாதம் 4 பவுண்டும் வேங்கை உடையணத்தேவருக்கு மாதாந்திர பென்ஷனாக 30 பவுண்டும் அனுமதிக்கப்படுகிறது.


ஆவணத்தின் தகவல்களை அடுக்கி கொண்டு போகும் கதை ஆசிரியர் கதை மாந்தர்களுடன் சம்பவங்களின் கோர்வையாக சுவாரசியமாக கதை சொல்ல மெனக்கிடவில்லை. ஒரே தகவல் அடங்கிய ஒரேமாதிரியான  வரிகள் மீண்டும் மீண்டும் வருவது வாசிப்பவர்களுக்கு  அலுப்பூட்டுகிறது. ஒரு கதை வாசிக்கும் உணர்வைத் தருவதை விடுத்து, இயல்பில்லாத உரையாடல்களுடன் கதை சொல்லப்பட்டுள்ளது. 

ஒரு சிறந்த புத்தகத்திற்கு அதன் ஆசிரியர் மட்டுமல்ல மட்டுப்படுத்தும் திருத்தித் தொகுப்பாக்கம் செய்யும் பதிப்பாசிரியர் மிகவும் அவசியம் என்று உணர்த்திய புத்தகம். இந்தக் கதை சார்ந்த வரலாற்றை பலர் எழுதி உள்ளனர். இதில் புதிதாக தகவல் கிடைக்கும் என்ற ஆர்வத்தைக் களையும் படி பல வரலாற்றுத்  தகவல்கள் மழுப்பப்பட்டுள்ளதாகவே உள்ளன.

பொன்கோலன் சிறையில் அடைக்கப்பட்ட வேங்கைக்கு மாதாந்திர பென்ஷன் ஆக 30 பவுண்ட் அனுமதிக்கப்படுகிறது. இரண்டு மாதங்களுக்குப் பிறகு இன்றுதான் கொட்டடி அறையை விட்டு வெளியே வருகிறார் 


வேங்கையுடன் கடைசி நாட்களில் வெள்ளையன் என்ற ஒரு நாய் உள்ளது. அதைப் பற்றிய குறிப்பு இப்படியாக கதை ஆசிரியர் விவரிக்கிறார்:  ஊரில் இந்நேரம் எங்களையடக்கி ஒடுக்கிவிட்டதாக கொக்கரித்துக் கொண்டிருப்பார்கள் வெள்ளையர்கள். ஆனால் வெள்ளையன் ஒருவனே எனக்கு காவலாக, என் காலடியிலேயே, என் கழிவுகளைச் சுத்தப்படுத்தி கொண்டிருக்கிறான் என்று பதில் சொல்லவே இந்த நாய்க்கு வெள்ளையன் என்று பெயர் வைத்தேன். ஒவ்வொருமுறை என் ஏவலுக்கு இந்த நாய் கட்டுப்படும் போதெல்லாம் எனக்குள் ஒரு மகிழ்ச்சி. திருப்தி பரவுகிறது. இந்தக் கூற்று வேங்கையனின் சிறுபிள்ளைத்தனமா அல்லது எழுத்தாளரின் வன்மம் கொண்ட வரலாற்றுப் புனைவா?

இரண்டு மாதம் குளிக்காமல் இருந்த வேங்கையன் ஒரு மருத்துவர் கட்டளைக்கு இணங்கி குளிப்பிக்கப்படுகிறார். தனக்கு குடி தண்ணீர் வைத்து இருக்கும் பானை கூட கழுவிப் பயன்படுத்த வேண்டும் என்ற புரிதல் இல்லாது இருக்கிறார். இது வேங்கையன் என்ற மனிதரை ராஜாவாகப் பார்ப்பதை விட பணக்கார வீட்டில் இருந்து வந்து வேலுநாச்சியார் மகளை மணம் முடித்து ராஜாவாகி மருதுவின் ஆளுமைக்கு உட்பட்டு மறைந்த மனிதரைத் தான் காட்டுகிறது. 

சின்ன அம்மான், மருது அம்மான், அத்தை வேலுநாச்சியார், மருதாத்தாள், விட்டு விட்டு வந்த துரைசாமி என்று ஒவ்வொருவராக கண்ணுக்குள் வந்து சென்றார்கள் . காளையார் கோயில் யுத்தம் உச்சத்தில் இருக்கும் நேரத்தில், காட்டுக்குள் இருக்கும் மரப்பொந்துக்குள் மருது பாண்டியர்கள் திரவியத்தை ஒளித்து வச்சிருக்காங்க என்று வெள்ளையர்கள் சொன்ன புரளியை நம்பிய பண ஆசை பிடித்த சனங்கள், யாரும் நுழைய முடியாத காளையார் கோயில் காட்டுக்குள் செல்ல வழி பண்ணிக் கொடுத்து  மருதுக்களைக் கைவிட்டதாக வேங்கை குற்றம் சாட்டுகிறார் என ஆசிரியர் சொல்கிறார். 

பொன் கோலன் கோட்டையில் காலை 10 மணிக்கு வேங்கை தனது இறுதி மூச்சை விடுவதுடன் கதை முடிகிறது. 


ஆவணங்களின் அடுக்கல்களாக மட்டுமே மிஞ்சி நிற்கும் காலாபாணியை ஒரு சிறந்த இலக்கியப் படைப்பாக ஏற்றுக்கொள்ள மனம் தயங்குவது தவிர்க்கமுடியாததாகிறது.


'புத்தகம் பேசுது ' மார்ச்சு 10,  2023  இதழில் பிரசுரமான பதிவு

 

0 Comments:

Post a Comment