புத்தகம் பேசுது என்ற இதழில் வந்த கட்டுரை
மாஜிதாவின் பர்தா
-ஜெ.பி. ஜோஸ்ஃபின் பாபா
இலங்கை கிழக்கு மாகாணத்தில் உள்ள ஓட்டமாவடியை சேர்ந்தவர் மாஜிதா. தற்போது லண்டனில் வசித்து வரும் ஒரு வழக்குரைஞர் ஆவார். சிறுகதை ஆசிரியரான இவருடைய முதல் நாவல் ஆகும் பர்தா. எதிர்வெளியீடு பதிப்பகம் ஜனுவரி 2023 ல் வெளியிட்டு உள்ளது. விலை ரூ 200.
ஈஸ்டர் குண்டு தாக்குதலைக் கண்டித்தும் அதில் கொலை செய்யப்பட்ட மக்களை நினைவு கூறும் வகையில் லண்டனில் இயங்கி வரும் தெற்கு ஆசியன் அமைப்பின் கூட்டத்தில் சுரய்யாவை கதையாசிரியை மற்றும் அவருடைய நண்பர் சந்திக்கின்றனர். நான்கு குழந்தைகளின் தாயான சுரய்யாவை பின்பு ஒரு நாள் சுரய்யா வீட்டில் ஒரு மதிய உணவில் சந்திக்கிறார். சுரய்யாவிடம் உரையாடின மனதில் பதிந்த சுரய்யாவின் கதையை ஒரு நாவலாக எழுத ஆரம்பிக்கிறார் மஜிதா.
நீரோடையில் நீச்சலடித்து, குளித்து திரும்பின சுரய்யா தனது அப்பா ஹயாத்துடன் சலூன் கடைக்குச்சென்று டயான கட் வெட்டித் திரும்புகிறாள். தனது மகள் டயானக் கட்டில் அழகாக இருப்பதாக மெச்சிக்கொள்கிறார் ஹயாத்து. பெருநாளுக்கு தனது அப்பா வாங்கித் தந்த பிங்க் நிற மினி ஸ்கேட்டும் வெள்ளைநிற டி-ஷர்ட் அணிந்திருப்பதையும் நினைத்துப் பார்க்கிறாள் சுரய்யா.
இலங்கை முஸ்லீம் பண்பாடுகளில் பெயர் போன மாவடியூரைச் சேர்ந்த சுரய்யாவின் அப்பா ஹயாத்து லெப்பை; ஒரு அரசு உத்தியோகர். இசைப் பிரியரான ஹயாத்து, தனது வீட்டின் விருந்தினர் அறையில் இஸ்லாமிய கீதங்கள் அடங்கிய ஓர் ஒலிப் பேழை மற்றும் சோனி நிறுவனத்தின் பாடல் கேட்கும் கருவியும், அத்துடன் படம் பிடிப்பதற்கான கேமராவும் வைத்துள்ளார்.
பண்டிகைக்கு, மனைவி பீபிக்கு கிளீயோபாட்ரா சேலை வாங்கிக் கொடுத்து அழகு பார்ப்பவர் ஹயாத்து. பள்ளிவாசலுக்கு தொழுகைக்கு செல்லும் பீபியும் தன் சேலை அழகை மற்றவர்கள் மெச்சியதைக் கண்டு மகிழ்ச்சி அடைபவள். விருந்தினருக்கு என்ன உணவு சமைக்க வேண்டும் என்று தனக்கு கிடைத்த அனுமதியை பெரிய உரிமையாக எண்ணி பெருமை கொள்ளக் கூடியவர் சுரய்யாவின் தாயார் பீபி. தன் விருப்பத்திற்கு ஈடுசெய்யும் விதம் பீபியை வேலை வாங்கத் தெரிந்தவர் தான் ஹயாத்து லெப்பை. சுரய்யா உயர்பள்ளி படிக்கும் வயதை அடைந்ததும், வீட்டுக்கு வெளியே வரும் போது தாவணி அணியும்படி அறிவுறுத்தப்படுகிறாள் சுரய்யா.
கதை நடக்கும் காலவெளி 1980 ஆம் ஆண்டு, அன்றைய பண்டிகை சிறப்புகள், பலகாரங்கள் செய்யும் முறை, பெருநாள் கொண்டாடும் விதம் எனக் கடந்து சென்ற அக்காலப் பண்பாட்டுத் தளம் வழியே கதையை நகத்துகிறார். இப்படி ஒரு சாதாரணமுஸ்லிம் வாழ்க்கை வாழ்ந்த மனிதர்கள் வாழ்க்கையில், பர்தா நுழைய ஆரம்பிக்கிறது.
ஈரானுக்குப் போய் வந்த சபீக் மௌலவி பள்ளி மாணவிகளிடம் பர்தா அணிந்து வர வேண்டும் என்று கட்டுப்பாடு விதிப்பது மட்டுமல்ல; கேள்வி கேட்பவர்கள் அல்லாஹுவால் தண்டிக்கப்படுவார்கள் என்று எச்சரிக்கிறார். ஜலாலுதீன் பொதுவாக தான் மட்டுமே ரொம்ப யோக்கியம் மற்றவர்களை கெட்டவர்கள் என்று நிரூபிக்கக் கூடிய மனநிலை உள்ளவர்.
ஜலாலுதீன் மக்கள் மத்தியில் பேசும்போது நம்ம நாடு, முஸ்லிம் பெண்களுக்கு நல்லதொரு விடயத்தை அறிமுகம் செய்திருக்கிறது. அது முதன்முதலாக ஈரான் நாட்டில் இருந்து அறிமுகமான ஒரு உடை. இஸ்லாமிய பெண்கள் பர்தா அணிந்து கொள்ளுவது கட்டாயக் கடமை ஆகும். அதேபோல பர்தா போட வைப்பது இஸ்லாத்தில் கட்டாயக் கடமை என்று கட்டுப்பாடு விதிக்கிறார். இந்தக் கட்டளை பர்தாவை பள்ளிகளுக்குள் நுழைய வைக்கிறது. பர்தா மற்றும் முகக்கவசம் அணிய ஆசிரியர்களும் வற்புறுத்தப்படுகின்றனர்.
ஹயாத்து வேளாண்மை அதிகாரியாக சிறந்து விளங்கினவர். ரெட் லேடி என்ற மரபணு பப்பாசியை மக்களிடம் அறிமுகப்படுத்தக் காரணமாக இருந்தவர். அத்துடன் மக்களின் வரம்பு மற்றும் வேளாண்மைக்கான தண்ணீர் சண்டைகளையும் தீர்த்துவைக்கும் அளவிற்கு ஆளுமை செலுத்தக்கூடியவர். தனது அலுவலகத்தில் பணிசெய்யும் ஆயிஷாவை பர்தா அணிந்து வரக் கட்டளை இடுகிறார். இஸ்லாத்தை கேள்வி கேட்க இயலாது என்று நம்ப வைக்கிறார்.
வேளாண்மை அலுவலகத்தில் வேலை பார்த்து வந்த ஆயிஷா ’பர்தா எதற்கு அணிய வேண்டும்’ என்று யாரையும் கேள்வி கேட்க முடியாத நிலையை எண்ணி, வருந்தி பழுப்பு நிறத்தில் பர்தா அணிந்து வர ஆரம்பிக்கிறாள். ஆயிஷாவிடம் கலகலப்பாகி பேசி வரும் கோபாலால் பர்தா அணிந்த அவளிடம் பேச தடங்கலாக தோன்றுகிறது. ஆயிஷாவின் நண்பர் வேணிக்கும் பர்தா அணிந்த ஆயிஷா அன்னியமாகத் தெரிகிறாள்.
இரான் புரட்சிக்குப் பின் இரான் அரசாங்கமும் இலங்கை அரசாங்கமும் பொருளாதிதார ரீதியாக நண்பர்களாக மாறி இருந்த சூழலில் இரான் பண்பாட்டு வழக்கங்களும் இலங்கையில் வேகமாக ஊடுருவ ஆரம்பிக்கிறது. இரானின் இருந்து வரும் சிற்றிதழ்களும் கொள்கையைப் பரப்பத் துணையாகிறது.
ஈரான் பர்தா முறை இஸ்லாத்தில் சொல்லப்படவில்லை. சபீக் மௌலவியின் பிரசாரங்களை நம்பாதீர்கள் என்ற எதிர்ப்புக் குரல்கள் சுவரொட்டிகளாக ஊர் மதில்களில் காணப்படுகிறது.
சுரய்யாவின் உறவினர் வீட்டுக் கல்யாணத்திற்கு பர்தா அணிய சுரய்யா எதிர்ப்பு தெரிவித்ததால் மிளகாய்ப் பழம் வாயில் தேய்த்து விட்டு, பெற்றோர் தங்கள் வளர்ப்பின் மேன்மையைத் தண்டனை கொடுத்துத் திருப்தி அடைகின்றனர்.
பின்பு முஸ்லீம் பெண்கள் தங்கள் விசேஷ வீடுகளில் குரவை இடுவதைத் தடைச்செய்கின்றனர். ஹயாத்து, மௌலவியின் சகோதரி மகன்; பர்தா அணியாத தனது தாயை அவமதித்ததை அறிந்து ஹயாத்து துயர் கொண்டாலும் அவர் மனைவி பீபிக்கு அது பெரிய தவறாகத் தெரியவில்லை. ஈசாவின் மூளையை மத்ரஸா மௌலவிமார்கள் குழப்பிப் போட்டார்கள் என்று கூறி ஹயாத்து வருந்துகிறார். எப்போதெல்லாம் பர்தா பற்றி விவாதம் வருகிறதோ, அப்போதெல்லாம் பர்தா அணியாத பீபி பர்தாவிற்கு வக்காலத்து வாங்குவதை கவனிக்கலாம். பார்தாவில் ஆரம்பித்து பர்தா நிறங்களில் பெண்கள் மாட்டுப்பட்டதைக் குறிப்பிடுகிறார். நசீர் மௌலவி போன்றவர்கள் பெண்களிடம் உரையாட வேண்டிய சூழலில் திரைக்குப் பின்னால் நின்று உரையாட ஆரம்பிக்கின்றனர்.
முஸ்லீம் சமுதாயத்தை ஆக்கிரமிக்கும் இன்னொன்று பாவாடைக்குழு. பாவாடைக் குழுவின் பரிந்துரைப்படி ஆண்கள் தங்கள் வீடுகளில் தங்காது, இரவு பள்ளிவாசலில் தங்க கட்டளை பெறுகின்றனர். அல்லாஹை நெருங்குவதற்குக் கட்டாயம் பள்ளிவாசலில் தங்கியிருக்க வேண்டும். குடும்ப வாழ்க்கைக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டாம் என்ற கட்டளைபெறுகின்றனர். ஆண்கள் மத அடையாளப்படி நாட்டின் அடையாள அட்டை தேவையற்றது என்ற கருத்தையும் திணிக்கின்றனர்.
ஊருக்குள் தலையெடுக்கிற எந்த விடயத்திலும் தலைமைப் பொறுப்பு தன்னிடம் வர வேண்டும் என்பதை பிரதான நோக்கமாகக் கொண்ட ஹயாத்து பர்தாவுடன் சவுதியிலிருந்து இறக்குமதியாகும் ஹபாயா என்ற உடையை வரவேற்கிறார். பர்தாபோட்டு படிக்க சென்றதால் தனது மகளுக்கு நல்ல படிப்பு வருகிறது என்று சொல்வதில் பீபி பெருமை கொள்கிறாள் .
பர்தா அணிவதைப் பற்றி பர்ஹானா கொண்டிருக்கும் கருத்து சுரய்யாவிற்கு நேரெதிராக உள்ளது. பர்தா தனக்கு பிடித்து இருப்பதாகவும் விரும்பி அணிவதாகவும் கூறுகிறாள். இதே பர்ஹானா வெள்ளை இடப் பெண்ணின் இன-மதவாத தாக்குதலுக்கு உள்ளாக இதே பர்தா காரணமாகிறது.
ஆண்களால் கட்டமைக்கப்பட்ட உடையிலிருந்து எளிதாக பணக்கார பெண்களால் வெளியே வர இயலும். ஆனால் எளிய பெண்கள் நிலை அதுவல்ல என்று வாதிடுகிறாள் சுரய்யா சுரய்யாவின் மகள் றாபியா காலமாகும்போது பர்தாவும் ஹாபாயும் சீருடை போன்று கட்டாயமாக்கபடுகிறது. அதில் இருந்து விடுபட இயலாத வண்ணம் இறுக்கமாகிறது. சுரய்யாவின் தந்தை போல கட்டாயப்படுத்திச் சொல்லாவிடிலும் ஊரோடு ஒத்துப் போகணும் என்ற கருத்தைக் கொண்டவராக உள்ளார் சுரய்யாவின் கணவர் இர்பான்.
பாட்டுகேட்ட காலம் போய் நடனமாடுவது ஹராம் என்று சொல்லப்படும் காலம் வருகிறது. சுரய்யா மகள் மாதிரிக் கேள்வி கேட்பவளாக இல்லாது, சிந்தனையற்றுமிருக்க ராபியா தெரிந்து வைத்துள்ளாள்.I
விடலைப்பருவத்தில் பர்தா அணிவதை மிகவும் அசவுகரியமாகக் கருதிய ஆபிதாவிற்கு தற்போது பல வழிகளில் சவுகரியமாகத் தெரிகிறது.
ஊர் திரும்பும் சுரைய்யா தனது தாயிடம், பர்தா அணிவதைச் சொல்லிய வாக்குவாதத்தில் “அல்லாஹ் கூலி தருவான்” என்று தன்மகளை வசை பாடவும் தயங்கவில்லை.
பீபி தனது மகளை வலுகட்டாயமாக பர்தா அணிவித்த பிரச்சினை தனது பேத்தியிடம் வரவில்லை. பாசாங்கு வார்த்தைகளுடன் பர்தா கொடுத்ததும் ராபியா உற்சாகமாக அணிந்து கொண்டாள்.
மிகவும் சுவாரசியமாக எளிமையாகக் கதையை நகத்தி உள்ளார் மாஜிதா. மதநிர்வாகிகளின் கொள்கைகளை ஒரு பெண்ணாக இருந்து எழுதிய மஜீதா பாராட்டுதலுக்கு உரியவர். 15 வருடங்களாக இஸ்லாமிய சமூகத்தை ஆட்கொள்ளும் தாக்கம் செலுத்தும் உடை அரசியலை மிகவும் சிறப்பாக ஒரு நாவலாகக் கொண்டு வந்ததை பாராட்டியே தீர வேண்டும். அப்படி அடிப்படைவாதம் கடுமையாக புதிய தலைமுறையும் இறுக்கியது என முடித்துள்ளார் மாஜிதா.
0 Comments:
Post a Comment