19 Dec 2022

புத்தக விமர்சனம் - விலகி போகாத நினைவுகள்

 


மத நிந்தனை செய்ததாகக் கூறி 2010 ல் ஒரு ஜூலை மாதம் மத வெறியர்களால் கை துண்டிக்கப்பட்ட கேரளாவை சேர்ந்த கல்லூரி ஆசிரியர் டி.ஜே.ஜோசப்பின் சுயசரிதை ஆகும் ’விலகி போகாத நினைவுகள்’(அற்று போகாத்த ஓர்மகள்)! இப்புத்தகம்   2021 ஆம் ஆண்டின் கேரள சாகித்ய அகாடமி விருதை பெற்றது. ஜோசப்பின் 'அற்று போகாத்த ஓர்மகள், மதத் தீவிரவாதத்தைப் பற்றிய சிலிர்க்க வைக்கும் உண்மை சம்பவங்களின் தொகுப்பு மட்டுமல்ல, ஒரு தனி நபரின் வாழ்க்கையில் நடந்த அதிர்ச்சிகரமான சம்பவங்களும் ஒன்றுக்கு பின் ஒன்றாக சந்தித்த  சோதனைகளும் அதை தொடர்ந்த  வலிகளும் இழப்புகளும் ஆகும்.  

 

மலையாளப் பாடம் தேர்வுத் தாளில் கேள்வி அமைத்ததில் (internal exam) ஒரு கேள்வியில் இருந்த ஒரு வார்த்தைக்காக குற்றவாளியாக மாற்றப்பட்டு ஜெயிலுக்கு சென்றவர்,  பிற்பாடு கை இழந்து, வேலை இழந்து கடைசியில் தனது மனைவியையும் இழந்தார்.

 

உயிருக்கு பயந்து வீட்டுக்குள் அடைந்து கிடக்கும் பேராசிரியர், ஒரு நாள், தனது சுகவீனமான தாயார்  மற்றும் கிறிஸ்தவ சபை பெண் துறைவியான தனது சகோதரியுடன் ஞாயிறு காலை நேர ஆராதனைக்கு போய் விட்டு தனது காரில் திரும்புகிறார். சாலையின் ஒரு வளைவில் வைத்து, பேராசிரியரின்

காரை இன்னொரு வாகனத்தை வைத்து இடை மறித்து,  தாய் மற்றும் சகோதரியின் முன் வைத்து, கைக் கோடாலி மற்றும் மூன்று கத்திகளால் கை மொளி, கணங்கால் வெட்டப்பட்டு தெருவில் கிடக்கிறார்.

 

இச்சம்பவம் வீட்டினருகில் நடந்ததால், சத்தம் கேட்டு வந்த பொறியியல் கல்லூரி மாணவரான மகன் மற்றும் மனைவி துணையுடன் ஆம்புலன்ஸ் வருவித்து மருத்துவ மனையில் சேர்க்கப் படுகிறார். தனது நண்பனான பக்கத்து வீட்டு பேராசிரியரிடம் தன் அற்றுபோன கையை தேடி எடுத்து மருத்துவமனையில் சேர்க்கும் படி கேட்டு விட்டு  மருத்துவமனையை சென்று அடைகிறார் பேராசிரியர்.

 

18 மணி நேர நீண்ட அறுவை சிகிச்சைக்கு பின்பு கிடைத்த விரல்கள், கைகள் சேர்த்து வைத்து தைத்து சேர்க்கின்றனர்.  கவலை தோய்ந்த மகனை கண்டதும், அப்பாடா தலை தப்பித்தது, ஒரு பெரிய ஆபத்திலிருந்து தப்பித்தோம் என ஆறுதல் படுத்துகிறார்.

 

இப்புத்தகம் வழியாக  கேரளாவில் நிலவும் இன்றைய மத சமூகம் எவ்விதம் தனிமனிதர்கள் உரிமைகளுக்கு எதிராக நிற்கிறது என காண்கிறோம்.  .

 

 

தன்னுடைய குற்றமின்மையை நிரூபிக்க நெடிய நான்கு வருட சட்டப் போராட்டம், பெரும் சிகிச்சை செலவுகள், வேலையில் இருந்து நிறுத்தப்பட்டதால் ஊதியம் இல்லா நிலை அத்துடன் வக்கீல் கட்டணம் பிள்ளைகள் படிப்புச் செலவு என்று ஆசிரியர் குடும்பம் கடும் வறுமைக்குள் விழ ஆரம்பிக்கிறது.

"ஆசிரியர் குற்றவாளி அல்ல' என்று கேரளா நீதிமன்றம் விடுவித்து இருந்தாலும்,பேராசிரியர் அங்கமாக கொண்ட "சீரோ மலபார் திருச்சபையின் தலைமையில் உள்ள கல்வி நிர்வாகம்". பேராசிரியரை வேலைக்கு திரும்பப் பெற அனுமதிப்பதில் தாமதப்படுத்திக் கொண்டு வருக்கிறது.

 

வேலையில் இருந்து கிடைக்க வேண்டிய ஊதியம், பல சலுகைகள் பெற இயலாது, கடன்கள் மத்தியில் ஊசலாடி கொண்டு இருக்கிறது ஆசிரியர் குடும்பம்.  ஆளும் கம்யூனிஸ்டு, பிற்பாடு ஆட்சிக்கு வந்த காங்கிரஸ், எதிர்கட்சி கம்யூனிஸ்டு, மக்கள்நல வாழ்வு சங்கங்கள், ஆசிரியர்கள் கூட்டமைப்பு, சமூகத்தின் ஆளுமைகள் என எல்லா அமைப்பும் கல்லூரி நிர்வாகத்திடம் பேராசிரியரை திரும்பப் பெற வேண்டியும், கல்லூரி நிர்வாகம் மறுத்து வருகிறது.  ஆனால் பல உறுதி மொழிகளை கொடுத்து ஆசிரியரை தங்கள் பக்கம் வைப்பது போல பாசாங்கு செய்து, பேராசிரியர்  சட்டத்தை நாடாமல் இருக்கவும் தந்திரமாக செயல்படுகிறது. கடைசி வாய்ப்பாக கல்லூரி நிர்வாகம் விருப்ப ஓய்வு(voluntary retirement) என்ற ஒரு கருணையை பரிந்துரைக்கிறது.  நான்கு வருடங்களாக தொடர்ந்த  பிரச்சினைகள், வறுமை அத்துடன் மனைவியின் மனநிலை பிறழ் நோயுடனும் மல்லிடு கொண்டு இருக்கும் பேராசிரியர், வேலை திரும்ப பெற்றால் இழந்த வாழ்க்கையை  மீட்கலாம் என்று நம்பிக்கை கொள்கிறார்.

 

குடும்பம், ஜெபம் என்று மட்டுமே வாழ்ந்த வெளியுலகம் அத்தனை பரிசயம் இல்லாத பேராசிரியர் மனைவிக்கு, கிறிஸ்தவ சமூக விலக்கு நிலைகுலய வைக்கிறது . ஒரு கட்டத்தில் "மதங்களே இல்லாவிடில் எத்தனை நல்லது என்று புலம்ப ஆரம்பிக்கிறாள்", அத்துடன் பேராசிரியரை குற்றப்படுத்தவும் ஆரம்பிக்கும் மன அழுத்த நோய்க்குள்ளும் வீழ்கிறாள்.

 

ஆசிரியர் தனது மனைவியை முதன் முதலில் கண்டதை பற்றி இவ்வாறாக குறிப்பிடுகிறார். அரசு உதவி பெறும் கல்லூரியில் வேலை கிடைத்ததும் பெண் தேடும் படலம் ஆரம்பமாகிறது. கல்லூரி ஆசிரியரான ஜோசப்புக்கு  திருமணம் செய்து கொடுக்க அரசு பள்ளிகளில் ஆசிரியர்களாக வேலையிலுள்ள பல குடும்பங்கள் விரும்புகிறது. ஆனால் பேராசிரியருக்கு பெண் பார்க்க சென்ற இடத்தில், வெறும் 12 ஆம் வகுப்பு முடித்த, தகப்பன் இல்லா நிலையில் தாயின் அரவணைப்பில் வளரும் சலோமியை பிடித்துப்போய் விடுகிறது. தையல், அலங்காரம் போன்றவற்றில் பயிற்சி பெற்ற சலோமி தபால் வழியாக பட்டப்படிப்பு மேற்கொள்ள வேண்டும் என்ற ஆசை கொண்டவள். ஆனால்  நிறைவேறாத ஆசைகளை மூட்டை கட்டி வைத்து விட்டு குடும்பத் தலைவியாக தன்னை மாற்றி அமைத்துக் கொண்டு அமைதியாக வாழ்த்து வருகிறவள். இப்போதைய நிலையில் தினக் கூலி வேலைக்கு போகவும் சலோமி தயங்கவில்லை. ஏதாவது வேலைக்கு போக தன்னை அனுமதிக்க வேண்டுகிறாள். ஜோசப் என்ற பேராசிரியர் தனது மனைவி வீட்டை விட்டு வேலைக்கு போவதையும் விரும்பவில்லை. ஆனால் மனைவியின் மன நோயை குணப்படுத்தலாம் என்ற நம்பிக்கையில் தொடர்ந்து மருத்துவமனைக்கு அழைத்து சென்று பணிவிடை செய்து வருகிறார்.

ஒரு கட்டத்தில் சலோமிக்கு, தன் மகள் திருமணம் எப்படி நடக்கும், வீட்டை எப்போது கட்டுவது, கடனில் இருந்து எப்போது தப்பிப்பது என்ற கவலையும் மன அழுத்தமும் சேர்ந்து  நடமாட இயலாத வண்ணம் படுக்கையில் விழ வைக்கிறது.



ஒரு சூசையப்பர் திருநாள் அன்று, கோயிலுக்கு போய் வந்த நிலையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொள்கிறாள் சலோமி. ஆயிரம் வெட்டில் பதறாத பேராசிரியர், தனது மனைவி இறந்ததும் உடைந்து நிலைகுலைந்து போகிறார்.

ஆனால் சலோமியின் மகள், இத்தனை துன்பத்தின் இடையிலும் கல்வி கடனில் படித்து செவிலியர் படிப்பை முடித்து அயர்லாந்து நாடு செல்கிறாள். அங்கிருந்து தனது ஊதியத்தை அனுப்ப ஆரம்பிப்பதுடன் குடும்பம் வறுமையில் இருந்து கரையேறுகிறது. பிற்பாடு தெலுங்கானாவை சேர்ந்த பாலமுரளி என்ற இந்து மனிதரை திருமணம் செய்து நிம்மதியாக வாழ்ந்து வருகிறாள்.

மகளுக்கு கல்வி கொடுத்த தைரியம், கல்வி பெற இயலாத சூழலில் வளர்ந்த சலோமிக்கு கிடைக்க வில்லை.

ஆசிரியரின் வழக்கில் எந்த வகையிலும் குற்றவாளியாக இல்லாத சலோமி; காக்கா, குருவி, அணிலுக்கு,  உணவு வைத்து மகிழும் சலோமி, தனது உயிரை ஈடு வைத்து தனது கணவருக்கு திரும்பவும் வேலை கிடைக்க தனது தற்கொலையை ஒரு ஆயுதமாக பாவிப்பதுடன் ’நிறுவன’ கொலைக்கு இரையாகிறாள்.

பேராசிரியர் ஜோசப்பின் வாழ்கை சரிதத்தில் ஆரம்பித்து சலோமி என்ற எளிய பெண்ணில் மரணத்துடன் வாசகர்களை நிலம் குத்தி நிற்க செய்கிறது புத்தகம்!.

 

சலோமியின் மரணத்தை தொடர்ந்து, சமூக அழுத்தத்தால், கல்லூரி நிர்வாகம் வேலையில் திரும்பப்பெற சம்மதிக்கிறது. வேலையில் தொடர ஆசை இருந்தும்; வெள்ளிக் கிழமை வேலையில் பிரவேசித்து, சனி, ஞாயிறு விடுமுறைக்கு அடுத்த நாள், திங்கள் அன்று வேலையில் இருந்து விருப்ப ஓய்வு பெறும் அவல நிலைக்கு தள்ள வைக்கிறது  கல்லூரி நிர்வாகம்.

10 வருடங்களுக்கு பின் கையை வெட்டியவன் பேராசிரியரிடம் மன்னிப்பு பெற்று விட்டார். பேராசிரியருக்கும் வெட்டியவன் மேல் எந்த ஆதங்கமும் இல்லை. ஆனால்  தான் நம்பின தனது மத நம்பிக்கையோடு இணைந்த, தன் சகோதரி துறவியாக சேவையாற்றும்  சபை தன்னை முற்றிலும் புரக்கணித்ததை பேராசிரியரால் இன்னும் ஜீரணிக்க, புரிந்து கொள்ள இயலவில்லை.  பேரா தி.ஜா. ஜோசப் தனது சர்ச்சைக்குரிய கேள்வியால் இஸ்லாத்தையும், முகமது நபியையும் மட்டுமல்ல  நம்முடைய பரிசுத்த திரித்துவத்தையும்  அவமதித்துள்ளார் என்று கிறிஸ்தவ கல்லூரி நிர்வாகம் கூறினது பேராசிரியரை அதிர்ச்சிக்குள் ஆக்குகிறது.  

 

 

கிறிஸ்தவ ஆலய ஆராதனைகளில் வாசிக்கும் சுற்றறிக்கை வழி ஒரு கிறிஸ்தவ குடும்பத்தை தனிமைப்படுத்துவதை கதையில் காண்கிறோம். பேராசிரியர் சிறையில் இருக்கையில், ​​தீபிகா என்ற கிறிஸ்தவ நாளிதழில்  பேராயர் மார் ஜோசப் பவத்தில் மதச்சார்பின்மை என்ற கட்டுரை வழியாக ”ஒரு கிறிஸ்தவப் பெயர் தாங்கிய ஒரு ஆசிரியரிடமிருந்து இந்தச் செயல் வந்திருக்கக் கூடாது” என்று கிறிஸ்தவ சபை மக்களை முழுதும் பேராசிரியருக்கு எதிராக அணி திரட்டும் பிரசாரங்களை முன்னெடுகும் போது ஒரு தனி மனிதராக எதிர் கொள்ளும் சூழலையும் விளக்கி உள்ளார் . தனக்கு எதிராக செயல்பட்டதால் கர்த்தர் கொடுத்த தண்டனை என கொக்கரிக்கும் உடன் பணியாற்றும் பெண் துறவியின் வார்த்தைகளையும் பகிர்ந்துள்ளார். ஒரு ஆசிரியராக எளீய வாழ்க்கை வாழ்ந்து வந்த பேராசிரியர், கதை, ஜெயில், காவல்னிலையம் வழக்காடு மன்றம் என்ற சட்ட அமைப்பில் சிக்கி தவிக்கும் நிலையையும் வாசிக்கிறோம்.

 

கேரளாவின் இட்டுக்கட்டின ’மேம்பட்ட சமூகம்’ என்ற முகத்திரையை கிழித்த புத்தகம் இது. ஆயிரம் தரம் வெட்டுப்பட்ட கைகால்களுடன் வாழ்ந்து வரும் பேராசிரியர் தற்போது  வலது கையால் எழுத இயலாத நிலையில்  இடது கையால் எழுத கற்றுக் கொண்டதாக குறிப்பிட்டுள்ளார்.

ஒரே ஒரு கேள்வியால், தான் சார்ந்த சபையின் எதிர்ப்பை சந்தித்து, தனிமையில் தள்ளப்பட்ட, அவரறியாதே  மத-அரசியல் போரில் இரையாகி மடிந்த பேராசிரியரின் சரிதை இப்புத்தகம் விருவிருப்பாக வாசிக்க வைக்கிறது. ஒரு ஆசிரியர், ஒரு நல்ல ஆசிரியராக மட்டும் இருந்தால் போதாது என்று உணர்த்திய புத்தகமும் கூட! ஆசிரியருக்கே உருத்தான பகடியுடன் கதையை நகத்தும் பாங்கு சுவாரசியமானது. ஒரு கிராமத்து பேராசிரியர் சர்வதேச மத விரோத அரசியலில் மாட்டுப்பட்ட கதை சொன்ன சுவாரசியமான எளிய மனிதனின் வாழ்க்கை துயரை மிகவும் இயல்பாக கொஞ்சம் பகடியாகவே சொல்லிய புத்தகம் இது. இதன் ஆங்கில மொழியாக்கம்  ‘ A Thousand cuts‘ என்ற பெயரில் பென்கிவின் பதிப்பகத்தால் வெளிவந்து விட்டது.

0 Comments:

Post a Comment