29 Dec 2019

சரோஜா அத்தை. என் குழந்தைப்பருவத்தில் நான் சிரித்து மகிழ்ந்து தங்கிவிளையாடிய  ஒரே ஒரு இடம் அத்தை வீடு.

அத்தை, நாரயணன் மாமா ராணி, றீனா அக்காக்கள் அருள்  அத்துடன் என் தம்பி தங்கை,சித்தப்பா பிள்ளைகள் மூன்று, பெரியப்பா மகன்கள் 3, சில போது ஊரில் இருந்து  மாமி மகன்கள்,  மாமா வீட்டு சொந்தங்கள் என அத்தை வீடு எப்போதும்  விழாக்கோலம் தான்.

அத்தை கணவர் தேயிலை தோட்ட அதிகாரி என்பதால் காட்டுக்குள் வீடு, வீட்டில் இரு உதவியாளர்கள், 4-5 பசுக்கள், கோழி, வாத்து,  பூனைகள்  டைகர் நாய்,அருள் வளர்க்கும் முயல்,கிளி  என எப்போதும் பெரும் கும்பல்.

உணவு நேரம் என்பது தோட்டத்தில் இருந்து வெட்டிய வாழை இலை, சோறு, கோழிக்கறி, கறிப்பொரியல் அவியல், தைர், சாம்பார் , அப்பளம், ஊறுகாய் பாயசம் என கொண்டாட்டம் தான்.

வீட்டில் பல அறைகள். அதில் ஒரு அறை நாங்கள் எங்கள் உடைகளை வைத்திருக்கும் ஸ்டோர் ரூம் அங்கு தான் பேய் இருக்கிறது என பேசிக்கொள்வோம். நடு அறை, படுக்கை அறை, முன் விருந்தினர் அறை , தேயிலை வேர் கொண்டு செய்த செருப்பு ஸ்டான்டு, வராந்தாவில் நாய் டைகர் தன் அதிகாரத்தை நினைவு படுத்தி கொண்டு கிடக்கும் இடம் என அந்த வீடு ஒரு  சொர்க்கம் தான்.

மாமாவிற்கு செடிகள் மேல் விருப்பம். அங்கு தான் விதவிதமான ஜீனியா பல வண்ணங்களிலான  டாலியா , கொய்யா மரம்  வீட்டோடு நிற்கும் சாமங்கா மரம் பலா மரம் என வீட்டை சுற்றி செடிகள்.

இத்தனை வேலைக்கு அப்புறம் சாப்பாட்டை முடித்து குட்டி தூக்கம் போட்டு எழுந்ததும் காப்பி பலகாரம் சாப்பிட்டு விட்டு மாமா மதியம் எப்போது மஸ்டர்டு ஆபீஸ் போவார் என காத்திருப்போம்.

அவர் நாலு மணிக்கு கிளம்பி போன பின்பு  அத்தை நரி, நாங்கள் கோழிகள் என வேடம் போட்டு ஓடி விளையாட்டு தான்.. அத்தை நரி என்பதால் மாமாவின் கால் சட்டை,  மழை கோட்டு , தொப்பி அணிந்து எங்களை விரட்டி வருவார்.
 6 மணிக்கு மாமா வீடு திரும்பும் முன் முகம் கழுவி பவுடர் போட்டு   பூவெல்லாம் சூட வைத்து சோபா , கதிரைகளில் கதை புத்தகங்களுமாக இருந்திடுவோம்.

அத்தை சொன்ன எத்தனை எத்தனை கதைகள். அவர் குரல் ஏற்ற இறக்கத்துடன் கதை சொல்வதும், நடித்து காட்டுவதும் இன்று நினைத்தால் எவ்வளவு அழகான குழந்தை பருவத்தை என் குழந்தைகளுக்கு கூட கிடைக்க இயலாது இழந்து விட்டேன் என பெரு மூச்சு கொள்கிறேன்.

இரவு படுக்க போகும் முன் ஜெபம் செய்து விட்டு தூங்க வேண்டும். மாமா ஜெபத்தை ஏறெடுத்து, பாட்டு பாடி அது போய் கொண்டிருக்கும். அவர் கண்ணை மூடி ஜெபிக்கிறார் என்ற நம்பிக்கையில் நாங்கள் பிள்ளைகள் கண்ணை திறந்து மாறி மாறி நோக்கும் போது எங்களுக்கு முன்னே அத்தையும் கண்ணை திறந்து எப்போது மாமா நெடிய ஜெபத்தை முடிக்க போறாரோ என செய்கை காட்டி கொண்டு இருப்பார்.

அந்த வீட்டில் தான்  எப்போதும் வெற்றிலை செல்லத்துடன் பைபிள் வாசித்து கொண்டிருக்கும் என் அப்பா பாட்டி ரத்னா பாய், என் அத்தையின் மாமியார்: ஒரு வயதான வட்ட வடிவ முகம் கொண்ட பாட்டியையும்  கண்டுள்ளேன். என் அம்மா பாட்டியும் அத்தை வீட்டில் வந்து தங்குவார்.

அத்தை கடைகுட்டி என்பதால்  நாலு அண்ணன்களும் அத்தையை பார்க்க தோட்டத்திலுள்ள பொருட்கள் கொடுக்க வந்து போய் கொண்டு இருப்பார்கள்.
டவுணில் கல்லாப்பெட்டியை விட்டு நகராத என் அப்பாவும் போகும் இடம் அத்தை வீடு தான். 
அத்தை வீட்டிலிருந்து திரும்புதல் என்பது எனக்கு பிடிக்காத விடையம் என்பதால்; ஒரு நாள் பிந்தி என் வீடு  வந்து சேரும் எனக்கு எங்க அம்மா நல்லா வெளக்குமார் பூசையும் வைத்திருப்பார்

ராணி அக்காவிற்கு பூப்பெய்து நிகழ்வில் கல் பட்ட தேனிகளாக அந்த கூடு கொஞ்சம் கலைந்தால் கூட ராணி அக்கா கல்யாணம் வரை அந்த தேனிக்கூட்டம் இருக்கதான் செய்தது.

5 வருடம் முன்பு அத்தையை சந்தித்து வந்த போது
 இப்போதும் அதே குழந்தைத்தனத்துடன்,  அதே குறுகுறுப்புடன் பார்வையுடன்,நோய்களையும் துணைக்கு வைத்து கொண்டு  சிரித்து பேசி அத்தை ஒரு மறக்க இயலா என் தோழி.!

0 Comments:

Post a Comment