9 Mar 2018

மதிபிற்குரிய பேரா. கோபாலன் ரவீந்திரன் -இவர்கள் செய்வது இவர்களுக்கு தெரியவில்லை!



கடந்த இரு வாரங்களாக சென்னை பல்கலைக்கழகத்தின் இதழியல், தொடர்பியல் துறைத் தலைவர் கோபாலன் ரவீந்திரன் அவர்களை பற்றி ஏதோ மூன்று மாணவர்கள் கூறினார்கள் என கூறி  ஜூனியர் விகடன் நடத்தி வரும் தர்ம யுத்தத்தை  பற்றி நினைத்தால் புல்லரித்து போகின்றது. மீடியாவின் வேலை சிண்டு முடித்து விடுவதா? எவ்வளவோ ஆக்க பூர்வமான செய்திகள் சம்வங்கள் இருக்க, மாணவர்கள்  சிறுபிள்ளைத்தனத்தை  ஏதோ சுதந்திரப்போர்  போராட்டத் தியாகிகள்    போன்று கட்டுரை எழுதுவது தான் கேலி கூத்தாக உள்ளது

கல்வி நிலையங்களில் நடைபெறும் போட்டி பொறாமையின் பிரதிபலிப்பு எவ்வளவு கோரமுகமாக உள்ளது என்று நினைத்து ஒவ்வொரு கல்வியாளனும் வெட்கப்பட வேண்டியது அவசியமாகும்சக பேராசிரியரை அச்சத்திற்குள்ளாக்க என நினைத்து தங்கள் மாணவர்களையை பயண்படுத்துவது படித்து பட்டம் பெற்றவர்களின் கையலாகத்தனத்தையை வெளிப்படுத்துகின்றது.

அந்த மாணவர்கள் சொல்லும் குற்றச்சாட்டில் எந்த பதிரும் இல்லை என்பது முதுகலைப்பட்டம் முடித்தவர்கள் அனைவருக்கும் புரியும். பேரா கோபால ரவீந்திரன் அவர்கள் மாணவர்களுக்கு  அது நன்றாகவே விளங்கும்.

முதுகலைப்பட்டத்தில் பாட்த்திட்டத்திலுள்ளவயை அப்படியே மனப்பாடம் செய்து, தாளில் எழுதி மதிப்பெண் வாங்க நினைப்பது முட்டாள் தனத்தின் உச்சம். மேல் நிலை கல்வி என்பதே;  தேடி, கண்டு படிப்பது தான். கல்வியை வகுப்பறையில் மட்டுமே படிப்போம்; ஆசிரியர் வந்து சொற்பொழிவு ஆற்றினால் மட்டுமே படிப்போம் என்பது சுத்த மடத்தனமாகும்.  ஆசிரியர் வழி நடத்த,  வாய்ப்பை உருவாக்கி தர மாணவன் வாய்ப்பை பயண்படுத்தி தன் அறிவை வளப்படுத்த வேண்டும்.

முதுகலைப்பட்டத்திற்கு மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைகழகத்தில் சேர்ந்த போது  முதல் வருடம் பேராசிரியரின் மாணவியாக நானும்   இருந்தேன். என் வாழ்க்கையில் மறக்க இயலாத கல்வி நாட்கள் அது.  ஒரு போதி மரத்தினடியில் இருப்பது போல் கற்றோம்.

என் மகன் மூன்றாம் வகுப்பு போன போது, நான் முதுகலைபட்டத்திற்கு சேர்ந்தால் (படிக்கும் வயதை கடந்ததால்) பல்கலைகழகவளாகம் சிலபோது பதட்டத்தை, அச்சத்தை கொடுத்தது. என்னால் படிக்க முடியுமா?, தேர்வு எழுத இயலுமா என்ற மனநிலையில் இருந்த என்னை எந்த கலந்தாய்விலும்ஜோஸபின் எழுந்து கேள்வி கேளுங்கள் என உற்சாகம் ஊட்டியவர். என் எழுத்தை சிந்தனையை பட்டை தீட்டி தந்தவர். என் குறுகிய மன நிலையில் இருந்து வெளிகொணர உதவியவர். ஆற்பாட்டம் இல்லாது நாம் அறியாதே நம்மை வழி நடத்தும் பேராசிரியர் அவர்.

பேராசிரியருடைய ஒரு மணி நேர வகுப்பு என்பது மூன்று மணி நேர வகிப்பிற்கு ஈடாகும்.  அதில் வெட்டிக் கதை இருக்காது, ஊர் புரணி இருக்காது, மீடியா உள்ளடக்கம் மட்டுமே.  மீடியா என்பது  மக்கள் வாழ்க்கை, கலாச்சாரம் பண்பாடு என உணர வைத்தவர். உள்ளூர் அரசியல் முதல் உலக அரசியல்வரை அவருடைய சொற்பொழிவு நீளும். எல்லா மதங்களையும் கேள்விக்கு உள்ளாக்கி போகும். எல்லா கட்டமிப்பையும் உடைப்பது அவருடைய கருத்தாக்கம்.  பெரியாரையும் மார்க்ஸையும் கற்று தந்தவர்.. இரண்டாம் உலகப்போர் என்றால் ஹிட்லர் மட்டுமல்ல, மனித உயிர் பலி வாங்குவது இன்றைய போரால் மட்டுமல்ல சோழப்போர் வைணவ-சைவ யுத்தம் என பேராசிரியர் அழைத்து செல்லாத வரலாறு இருக்க போவதில்லை.

அதிலும் ஆச்சரியம் எல்லா மாணவர்களையும் பாகுபாடு அற்று நடத்தும் அவருடைய பாங்கு ஆகும். எந்த மாணவரிடமும் அதிகம் பேச மாட்டார், ஆனால் எல்லா மாணவர்கள் பெயர்கள், அவர்கள் வாழ்வியல் சூழல், உளவியல் தெரிந்து வைத்திருப்பார். எப்போது சந்தேகம் என்று சென்றாலும் சலிக்காது அதன் அடிப்படை வரை சொல்லி கொடுக்கும் பெரும் மனது படைத்தவர். அவருடைய பல்கலைகழக நேரம் என்பது வெறும் கல்வி நேரம் மட்டுமே அதில் அரட்டை இருக்காது, கான்டீன்  இருக்காது.


எனக்கோ சந்தேகம் ஓய்ந்த பாடில்லை. போரை பற்றி மதங்களை பற்றி கலாச்சாரத்தை பற்றி அறியும் உன்றுதலில் வாசித்த புத்தகங்களுடன் சென்று சந்திப்பேன். நான் என்றில்லை சந்தேகம் என எந்த மாணவர் வந்தாலும் அமர கதிரை கொடுத்து, புரியும் மட்டும் விளக்கி கற்று கொடுப்பார். ஆசிரியர் முன்பு அமரும் வாய்ப்பை கொடுத்தவர் பேராசிரியர் கோ. ரவிந்திரன் மட்டுமே.

பேராசிரியர் அறையில் நிதாந்த அமைதி மட்டுமே தவழும், அங்கு பேச்சுக்கு, சிரிப்பிற்கு இடமில்லை. அவருடைய மேஜை நிறைய புத்தங்கள் இரைந்து கிடக்கும். அருகில் ஒரு அலமாரையில் சந்தையில் கிடைக்கும் எல்லா மாத, வார இதழ்கள் வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டிருக்கும். ஒரே இதழில் தமிழ் மற்றும் ஆங்கில என இரு மொழியில் வைத்திருப்பார். ஒரு நோட்டு புத்தகவும் பேனாவும் புத்தக அலமாரையில் இருக்கும். நாங்கள் எடுத்த புத்தகத்தை எழுதி வைத்து  விட்டு, எடுத்து வாசித்த பின்பு திருப்பி வைத்து விட வேண்டும். அவ்வளவே. வாசித்தவையை, புரிந்தவையை எழுதியும் கொடுக்க வேண்டும். நாம் எழுதி கொடுக்கும் அறியா தவறுகளையும் நிதானமாக வாசித்து கருத்து பகிர்வார். அந்த விளக்கத்தில்  அறிவும் ஞானவும் மட்டுமே மேல் ஓங்கி இருக்கும்.


பேராசிரியர் இங்கு இருந்த போதும்; சின்டிகேட் பதவிகளில் இருந்ததால் பல முறை வகுப்பிற்கு வர இயலாது.  இருப்பினும் வகிப்பிற்கு வரும்போது  மூன்று மணி நேரம் கூட தொடர்ந்து வகுப்பு நடக்கும்.  வகுப்பு மாணவர்கள் அல்லாது இருப்பினும் பேராசிரியர் வகுப்பில் கலந்து கொள்ள விரும்பினால்  அனுமதிப்பார் 
அவருடைய சொற்பொழிவை கவனித்து கேட்க வேண்டும். அதன் உள்ளடக்கம் வலுவானதாக இருக்கும். எனக்கு சந்தேகம் தோன்றினால் குறுக்கே பாய்ந்து சந்தேகம் எழுப்புவேன். ஒரு போதும் முகம் சுளித்தது இல்லை, புரியும் வரை தெளிவு படுத்துவார்.


கற்பித்தல் என்பதை சொல்லிக்கொடுத்து படிப்பது மட்டுமல்ல  சுயசிந்தனையால் தேடி கற்று வலுபெறுவது என புரியவைத்தார்.

பேராசிரியர்,  தேர்வு நடத்தும் விதம் கூட வித்தியாசமானது பொதுவாக பேராசிரியர்கள் கேள்வித்தாளையும் பதில் எழுதும் தாளையும் கொடுத்து விட்டு காப்பி அடிக்கின்றோமா என  எங்களை ஆழ்ந்து கவனித்து கொண்டு கண்காணிப்பாளர்களை நியமித்து அவதானிக்கும் வேளையில்; எங்கள் கட்டுப்பட்டை எங்களிடமே தந்து எழுதி விட்டு பேப்பரை என் மேஜை மேல் வைத்து விடுங்கள் எனக்கூறி கடந்து விடுவார்

ஒரு முறை நாங்கள்; பேராசிரியர் கூறிய நேரம் வைக்காது, அடுத்த நாள் கொண்டு வைத்து விட்டோம் என அறிந்த போது; அன்று தான் முதலும் கடைசியுமாக எங்களிடம் கடிந்து பேசினார்.  கல்வி என்பது பட்டம் பெறுவது மட்டுமல்ல நேர்மையான தனி நபர்களை  உருவாக்குவது என திடமாக நம்பினார்.  மாணவர்கள் மது அருந்தும் பழக்கத்தை மிகவும் கடிந்துள்ளார். 'படித்த உங்களால் கூட  கட்டுப்பாட்டோடு வாழ இயலவில்லை என்றால் உங்களால் எப்படி ஒரு சமூகத்திற்கு நேர்மையான கருத்து பகிர முடியும்' என ஒவ்வொரு வேளையிலும் சிந்திக்க  வைத்தவர் .

பல்கலைகழக வளாகத்தில் எந்த நிகழ்ச்சி நடந்தாலும் நாங்கள் பங்கு பெற வேண்டும், பங்கு பெற்ற நிகழ்ச்சியை தொகுத்து எழுதி கொடுக்க வேண்டும் என்பது எழுதப்படாத சட்டமாக இருந்தது. எங்கள் பார்வையை எங்கள் கருத்தை நெறிப்படுத்தியும் தந்து கொண்டு இருந்தார்.  

என் வலைப்பதிவு என்பது பேராசிரியரின் 'நவீன மீடியா' என்ற பாடத்தின் பாடதிட்டத்தில் மார்க்கு பெற துவங்கப்பட்டு, பின்பு வலைப்பதிவையே என் ஆராய்ச்சிக்கும் தளமாக தேர்ந்து சிறப்பாக முடித்தேன்.

இலக்கியவாதிகளுடன் உரையாட வாய்ப்பு அமைத்து தருவது ,  மக்களை சந்தித்து தகவல் சேகரிப்பது, சென்னை பல்கலைகழகம்  கருத்தரங்கில் பங்கு கொள்வது, உள்ளூர் ஊடகவியாளர்களுடன் சேர்ந்து பணியாற்றுவது என ஏட்டு கல்வியை உயிரோட்டமான கல்வி முறையாக மாற்றினார்.

என் ஆராய்ச்சியின் போது அறிமுகமான ஈழ தேச கவிஞர் மற்றும் ஊடகவியாளர், சென்னை வந்து படிக்க விரும்பிய போது நான் மாணவரின் தகவலை பேராசிரியரிடம் தெரிவிக்க; மாணவர் சென்னை பல்கலைகழகத்தில் முதுகலை பட்டம் பெற காரணமாக இருந்தார். பின்தங்கிய தென் மாவட்ட  நெல்லை மாணவரை பரிந்துரைத்த போதும் பல்கலைகழக சேர்க்கைக்கு வாய்ப்பை கொடுத்தார்.  அவ்விதம் பேராசிரியர் கோபாலன் ரவீந்திரன் அவர்கள் மனித நேயத்தை கற்பிக்க மட்டுமல்ல வாழ்ந்தே காட்டி வந்தவர்.   

ஒரு பேராசிரியரை நேர்வழியாக தாக்க இயலாது என்பதால் 'கன்று குட்டி' மாணவர்களை ஆயுதமாக பயண்படுத்துவது மிகவும் கேவலமான, படித்த மேதாவிகளின் ஈனச்செயலாகும். மாணவர்கள் கூறும் ஒரு குற்றச்சாட்டு கூட உண்மையாக இல்லாது வன்மமாகவே தெரிகிறது.
 
பல போதும் கல்லூரி மற்றும் பல்கலைகழங்களில் பேராசிரியர்களை மாணவிகளை வைத்து புகார் கூறி ஒடுக்கி உள்ளனர், கள்ள அவதூறுகள் பரப்பி நசுக்கியுள்ளனர். இப்போதோ மைனாரிட்டி என்ற பெயரில் மாணவர்களை களம் இறக்கியுள்ளனர்.

மாணவர்களுக்கு நிச்சயமாக பேராசிரியரிடம்  பேச வாய்ப்பு இருந்திருக்கும். எல்லா வாய்ப்பையும் புறம் தள்ளி ஒரு நாடகம் போன்று சம்பவத்தை நகத்தி பேராசிரியரை அவமதிப்பதே அதன் உள்நோக்கம் வெளிப்படுத்துகின்றது. ஒரு ஆசிரியர் மாணவர் உறவு என்பது படிக்கும் காலத்தின் உடையது மட்டுமல்ல, வேலைபெற, பதவி உயர்வு, சில போது வாழ்க்கையில் அடிபட்டு நிற்கும் போதும் கூட தாங்கும் சக்தியாக படித்த கல்வி நிறுவனம், ஆசிரியர்கள் மாணவர்களுடன் இருப்பார்கள்.  

படிக்கும் போது இது போன்ற ஒரு சித்திரத்தை உருவாக்குவது மாணவர்களின் எதிர் காலத்தை நிச்சயமாக பாதிக்கும். இவர்களை நம்பி ஆராய்ச்சி படிப்பிற்கோ வேலை தரவோ யாரும் முன் வர மாட்டார்கள். போராட்ட உணர்வு நியாயமான உணர்வு மனிதனுக்கு அவசியம். அதை இன்னொரு மனிதனை; அதும் தன்னுடைய குருவை அச்சுறுத்த என்பது மாணவர்களின் நல் வரும் வாழ்க்கைக்கு ஒரு போதும் பலம், அல்லது பலன் சேர்ப்பதில்லை. பின்புலனாக நிற்கும் நரி தந்திரம் பிடித்த பேராசிரியர்கள் தக்க நேரத்தில் ஓடி விடுவார்கள். வித்தையை கற்கும் இடத்தில் தன் பங்கை, தன் பலத்தை, தன் நிலையை, தன் வாழ்க்கையை உணர்ந்து படித்து பட்டம் பெறுவதே மாணவனுக்கு அழகு.

இந்த நிகழ்வுகள் ஒவ்வொரு நல்ல ஆசிரியருக்கும்  ஓர் அனுபவம். நவீன யுகத்தின் ஆயுதங்கள் கூட நவீனப்படுத்தபட்டுள்ள விதம்  அருவருக்க தகுந்ததாக உள்ளது. மாணவனே விலை போகாதே. ஒரு வேளை உன் தவறு உனக்கு புரிந்தால்  உடன் வெளியே வந்து விடு.

இந்தியா போன்ற ஏழை தேசத்தில் மத்திய அரசின் கீழ் வேலை நோக்கும் ஒவ்வொரு பேராசிரியரும் 40 ஆயிரம் முதல் ஒரு லட்சத்து 50, ஆயிரம் வரை ஊதியம் பெறுகின்றனர். இவர்கள் பெறும் வசதிகள் எண்ணில் அடங்காதவை. ஒரு புறம் தனியார் நிறுவங்கண்களில் இதே தகுதியிலுள்ள பேராசிரியர்கள் 3 ஆயிரம் துவங்கி 7 அல்லது 10 ஆயிரம் பெறும் அவல நிலையே உள்ளது. இந்த சமூக அநீதியின் விளைவே இது போன்ற கழுத்தறுப்பு போட்டிகளால் வரும் சூழல்கள். படித்தவர்கள் திருந்த நினையாது எதுவும் மாறப்போவதில்லை.

எந்த அவதூறும் பேராசிரியர் கோபால. ரவீந்திரன் அவர்களை பாதிக்கப்போவதில்லை. பழுத்த பழ மரமான அவர் கம்பீரமாக எல்லாவற்றையும் அமைதியாக அவதானித்து கொண்டு அவர் வேலையில் மூழ்கியிருப்பார். ஆனால் எந்த அரசியலும் தெரியாதே வீழ்ந்து கிடக்கும் இந்த மாணவர்களை நினைத்து தான் 'இவர்கள் செய்வது இவர்களுக்கு தெரியவில்லை, இவர்களை பொறுத்தருளும் எங்கள் குருவே" என்று மட்டுமே கூற இயலும்.



1 comment:

  1. மிக நீண்ட அலசல் ...உண்மை...

    மதிப்பிற்குரிய ஆசிரியரை அவமதிப்பதாக நினைத்து தங்கள் வாழ்க்கையை கேள்வி குறி ஆக்கும் மாணவர்கள்...

    ReplyDelete