தமிழ்த்திரைப்படம் அருவி, அறம் விட்டு சென்ற திரை உணர்வுக்கு மத்தியில் ஹிந்தி திரைப்படம் 'க்வீன்' மனதில் மறவாத பெண்மை உணர்வை தந்து கொண்டு இருக்கின்றது. பொதுவாக, ஹிந்தி தமிழ், மலையாளம் என இந்தியத் திரைப்படங்களில் 98% ஆண்களை மையக்கருத்தாக கொண்டாதாகவும் பெண்கள் “ஒப்புக்கு சப்பாணி” ஆக வந்து செல்வதாகவே அமைத்திருப்பர்.. ஆனால் பெண்களுக்கான வரும் திரைப்படங்கள் அதீத கற்பனை நிரம்பிய அல்லது பெண்ணியம் கோஷம் நிரம்பியவையாகவும், அறிந்ததையும் அறியாதைதையும், கேட்டதை கேட்காதையும் எல்லாம் கேள்வி எழுப்பி கொண்டு அதிகபிரசங்கத்தினம் பிடித்த கோணலான கதை கொண்டதாகவே காண்பிக்கபட்டு வருகிறது.
‘க்வீன்’ எல்லா கற்பிதங்களையும் உடைத்து, பெண்மையை புதுக்கோணத்தில், வெற்றியை கொண்டாடும் விதமாக படம் பிடித்து காட்டியுள்ளது. பைத்தியாக்காரத்தனம் இல்லாத, உணர்வுப் பெருக்கற்ற இயல்பாக, நெருடல் தராத கதாப்பாத்திரம் ராணி என்ற க்வின்.
ராணி ஒரு சாதாரண பேக்கரி உரிமையாளரின் கல்லூரியில் படிக்கும் மகள். இரு குடும்பங்கள் வெகுநாட்களுக்கு பின் சந்திக்கையில், மகிழ்ச்சி பெருக்கில் தன் மகள் விருப்பம் தெரியாதே திருமணத்தை நடத்துவதாக ஒப்பந்தம் இட்டு கொள்கின்றனர் பெற்றோர். இதுவே பெருவாரியான இந்திய பெண்களின் நிலையும் கூட.
பையன் உரிமையாக காதலிக்க ஆரம்பிக்கின்றான். முதலில் பிடிக்காவிடிலும்; காலப்போக்கில் பெண்ணுக்கும் பிடித்து விட பின்பு இருவரும் காதலிக்கும் சூழலில் பையன் லண்டன் செல்கின்றான்
காதல் வயப்பட்ட பெண் பிரிவுத்துயரில் வாடுகிறார். திருமண நாளை எதிர்நோக்கி காத்திருக்கின்றார். நாட்களும் வந்து விட்டது. கல்யாணச்சேலை எடுத்தாகி விட்ட்து தேனிலவு பயணச்சீட்டு கூட வாங்கியாகி விட்டது. மாப்பிள்ளை பையன் ‘என் தகுதிக்கு, ‘நீ சரி வராது’ என்ற குண்டை தூக்கி போடுகின்றான்..
பெண் உடைந்து அழுகின்றார். உனக்காக என்னை மாற்றி கொள்கிறேன் என கெஞ்சுகின்றார். பையன் மனம் இறங்கவில்லை. திருமணம் நிறுத்தப்பட்டு விடுகிறது. மகிழ்ச்சி ததுப்பிய வீட்டில் ஒப்பாரியும் துக்கவும் பிடித்து கொள்கின்றது. பெண் மிகவும் வெட்கத்திற்கு அவமானத்திற்கு உள்ளாகின்றார். தனிமையில் தவிக்கிறார் சிந்திக்கின்றார்.தன்னை கவர அவன் கூறிய பசப்பு வார்த்தைகளை எண்ணி பார்க்கின்றாள்.
தன் பெற்றோரிடம், தனியாக தேனிலவு செல்ல அனுமதி கேட்கின்றார். பெற்றோரும் அனுமதிக்கின்றனர். ஒரு பெண்ணின் வாழ்க்கை தனியாக ஆரம்பிக்கின்றது. பயம் பதட்டம் கவலையில் ஆரம்பித்த பயணம் நட்புவட்ட்த்தில் உலக அறிவில் வளர ஆரம்பிக்கின்றது. ஒரு கட்டத்தில் ஆண்களுடன் வசிக்கும் சூழலுக்கு உள்ளாகின்றார். அங்கும் பண்பான ஆழமான அன்பு கொண்ட புரிதல் கொண்ட நட்பு கிடைக்கின்றது. விடலைத்தனமாக மனநிலையுள்ள ஆண்கள் பெண்களுக்கு அச்சுறுதல் தருபவர்கள் என்ற எண்ணத்தை களைந்து ஆண்களுடனும் உண்மையான தோழமையுடன் பழக இயலும் என தெரிந்து கொள்கின்றார்
வாழ்க்கையின் ஒளிவட்டமாக முழு நிலவாக தெரிந்த மனிதன், கொஞ்சம் கொஞ்சமாக மறைந்து கடைசியில் ‘உன்னை என்னால் திருமணம் செய்ய இயலாது’ என்று சொல்லுபடியாக பெண்ணின் ஆளுமை மன தெளிவு வளர்கிறது. சிறு பட்டணத்தின் வெகுளித்தனமான பெண்மை வலிமையான ஒரு பெண்ணாக தன்னை நிலைநிறுத்துவதுடன் கதை முடிகிறது.
வாழ்க்கையின் ஒவ்வொரு தருணங்களிலும் தன்னுடைய பார்வையில் இருந்து தன்னுடைய கலாச்சார சூழலை தக்க வைத்து கொண்டு நின்று சாதிக்கின்றார்.
அன்பு என்பது தன்னை கட்டுப்படுத்துவது அல்ல, தன்னை எப்போதும் குற்றம் சுமத்துவது அல்ல, தன்னை சுயகாலில் நிற்க வைப்பது; அவ்வகையில் தன்னை சுயமாக சவாலை ஏற்க உரு துணையாக இருந்த இத்தலிக்காரனிடம் காதல் வயமாகுவதையும் அதை வெளிப்படுத்தவும் தயங்கவில்லை.
.
இவ்வகையில் ஒரு பெண் என்ற கதாப்பாத்திரத்தை தியாகத்தின் சுயம்பாக, எல்லாம் சகித்து கொள்ளும் பூமா தேவியாக, எல்லா துயர்களையும் வழியற்று ஏற்கும் சுயபரிதாபங்கள் இல்லாது; தன் சபலத்தில் இருந்து, தன் பயத்தில் இருந்து, வலிமைக்குள்ளும் தன்சார்புக்குள்ளும் வரச்செய்யும் கதை பாங்கு அருமையிலும் அருமை.
பெண் நாகரிகமாகுதல் என்பது உடையையும் நடையையும் மீறி அது அவளுடைய வாழ்க்கை மேம்படுத்தல் மனமுதிர்ச்சி பெறுதல் சுயசார்பில் வளருவது என ஆக்கபூர்வமான பெண் வாழ்வியல் பார்வை.
இந்த படத்தை பொறுத்த வரை குறை என்றால் கதாப்பாத்திரம் சந்திப்பது கணவர் இல்லாது பிள்ளை பெற்று கொள்ளும் கதாப்பாத்திரம், கம்பி நடனமங்கைகள், விலைமாதர்கள் க்ளப் பஃப் பெண்கள் மட்டுமே. பிரான்சில் பெண்கள் வாழ்க்கையை இத்துடன் மட்டுமே முடித்து கொள்ள இயலுமா?
பெண் வாழ்க்கையில் படும் ஒவ்வொரு அடியும் அவளை வலிமைக்குள் இட்டுச்செல்கின்றது. சாவா வாழ்வா என்ற ஒரு கட்டத்தில் அவளால் பொங்கி எழுந்து தன் சுயரூபத்தை, பாவத்தை வெளிப்படுத்த இயல்கின்றது.
விஜய் என்ற கதாப்பாத்திரம் பெண்ணை பாதுக்காக்குறேன் காதலிக்கின்றேன் நேசிக்கின்றேன் என்ற பெயரில் பெண்மை மேல் காட்டும் வன்மத்தை சரியாக விளக்கியுள்ளனர் பல காட்சிகள் வழியாக. பாதுகாக்கிறேன் பேர்வழி என பெண்கள் பின் சுற்றுபவர்களின் கீழான எண்ணங்களும் புலப்படுத்தி உள்ளார் இயக்குனரும் திரைக்கதாசிரியரும்.
கங்கனா ராணவத்தின் நடிப்பு அபாரம். அந்த கிராமத்து சூழல் வெகுளித்தனத்திலாகட்டும் பிரான்சில் தன்நம்பிக்கை பெண்மணியாக உருமாறியதில் ஆகட்டும் அவருடைய நடிப்பிற்கு ஈடு இணையில்லை.
அடுத்து துணை நடிகை பாத்திரத்தை லிசா ஹைடன் என்ற புகழ் பெற்ற மாடல் ஏற்றிருந்தார். அவருடைய கதாப்பாத்திரத்திற்கு பொருந்தி எந்த ஏற்ற குறைச்சிலும் இல்லாது அசத்தி உள்ளார்.
கதாப்பாத்திரத்திற்கு ஏற்றாப்போல் உடையலங்காரம் சிகையலங்காரம் என நேர்த்தியாக கையாண்டிருந்தது பாராட்டுதலுக்குறியது.
2014 ல் வெளியான இப்படம் விகாஸ் பாஃல் இயக்கத்தில் அனுராக் கஷ்யாப் மற்றும் விக்கரானமாதித்தியா தயாரிப்பில், பாபி சிங் ஒளிப்பதிவில் வெளி வந்தது.
62 வது தேசிய திரைப்பட விழாவில் சிறந்த நடிகை துணைநடிகை சிறந்த இயக்குனர், சிறந்த எடிட்டிங், சிறந்த திரைக்கதை என பல விருதுகள் பெற்றது. 60 வது பிலிஃம் பெஃயர் விருது, தேசிய திரைப்பட விருது என 32 விருதுகளுக்கு மேல் பெறப்பட்ட திரைப்படம். ஆகும்
125 மிலியன் பட்ஜட்டில் உருவான இப்படம் உலகளவில் 970 மிலியன் வருமானத்தை ஈட்டியது.
இப்படம் தற்போது காஜல் நடிப்பில் ‘பாரிஸ், பாரிஸ்’ என்ற பெயரில் தமிழிலும், “பட்டர்ப்ளை’ என்ற தலைப்பில் கன்னடத்திலும் ரமேஷ் அரவிந்த் இயக்கத்தில் வெளிவர உள்ளது. தெலுங்கில் தமன்னா நடிப்பில் “க்வீன் ஒன்ஸ் எகைன்” என்றும் மலையாளத்தில் ‘சாஃம் சாஃம்’ என்ற பெயரில் மஞ்சிமா மோகனும் நடித்து வருகின்றனர் என்பது செய்தி.
மிக எளிய விமர்சனம்....ஆனால் ஆழ்ந்த அலசல்...
ReplyDeleteகண்டிப்பாக காண வேண்டும் என்னும் ஆவலை ஏற்படுத்தி உள்ளீர் ...