28 Mar 2018

இளையராஜாவின் திடீர் ஞானம்

இந்தியா சுதந்திரம் பெற்ற பின் 1952 ல் எடுத்த முதல் மக்கள் கணக்கெடுப்பன்படி கிறிஸ்தவ மக்கள் தொகை 2.3% எனக் கணக்கெடுக்கப்பட்டது. 2011 எடுத்த கணக்கெடுப்புப்படியும் அதே 2.3 % தான் . தற்போது கிறிஸ்தவர்களில் 41 பிரிவுகள் உண்டு. 

இந்நிலையில் மோடி அரசு, எழுத்தாளர்கள் சமூகத்தில் அங்கீகரிக்கப்பட்ட நபர்கள், அறிவாளிகள் நிலையில் இருப்பவர்கள் வழியாக கிறிஸ்தவர்கள் மத மாற்றத்தில் ஏற்படுகின்றனர் என்பது போலவும், அடிப்படைவாதிகள் போன்றும் சித்தரிகரிப்பதின் பின்புலம் வெறும் அரசியலே. 

இளையராஜா பேச்சு. இளைய ராஜாவின் நோக்கம் ரமணரை புகழ்வது பரைசாற்றுவது மட்டுமே. 'டந்ததோ நடக்கவில்லையோ' என யேசுவின் உயிர்ப்பை கூறுவது மூலமாக தன் சந்தேகம் அல்லது அவநம்பிக்கை  வெளிப்படுத்துகின்றார்.   இது இளைய ராஜா என்ற தனி நபரின் நம்பிக்கை சார்ந்த விடையமே.  இதை கிறிஸ்தவர்கள் பெரிதுப் படுத்த தேவையில்லை,  கொந்தளிக்கவும் தேவையில்லை.  அவரவர் கருத்தை பேணுவதற்கான எல்லா சுதந்திரவும் உண்டு.  கிறிஸ்தவர்கள் இதற்கென  தேவையற்ற தங்கள் எதிர்ப்புணர்வை காட்டி , அல்லது எதிர்வினையாற்றி நேரம் விரயப்படுத்துவதால் எந்த பயனுமில்லை. 

கிறிஸ்தவம்  பெருவாரியாக பரவியுள்ள ஐரோப்பிய நாடுகளில் இருந்தே 'டாவின்ஸி கோட்', 'Temptation of Jesus' போன்ற படங்கள் வந்துள்ளது.  பொதுவாக வறிய, ஊழல் நிறைந்த கல்வியறிவு அற்ற நாடுகளான ஆசியா, ஆப்பிரிக்கா போன்ற நாடுகளில் தான் மத அடிப்படைவாத சண்டைகள் மூளும், மூட்டிவிடப்படுவர். 

ஹிந்துத்துவா எழுத்தாளரான ஜெயமோகன் பல காலமாக கிறிஸ்தவ  தத்துவ மார்கத்தை விமர்சனத்திற்கு உள்ளாக்குகின்றார்.   இதை தொடர்ந்து  எழுத்தாளார் சாரு நிவேதிதா,  கவிஞ்சி தாமரை போன்றோரும்  கிறிஸ்தவர்களை அடிப்படைவாதிகள் என  குற்றம் சுமத்தும் நோக்கத்தை  ஆராய வேண்டியுள்ளது.  

இரண்டாம் போர் காலத்தில் யூதர்கள்; ஹிட்லர் தலைமையில் அவதிக்குள்ள தான சூழல்  தான் தெரிகிறது .  கிறிஸ்தவ தலைமைகளும் தன் உறுப்பினர்களை காப்பாற்றும் .மனநிலையில் இல்லை.  ஆபத்தான சூழல் தான் இது. அரசு திட்டமிட்டபடி ஒரு வெறுப்பை கிறிஸ்தவ மக்கள் மேல் விதைக்கின்றனர். 

இருப்பினும் பந்தகோஸ்து, இவாஞலிக்கன் போன்ற கிறிஸ்தவ குழுவின் போக்கை அவதானிப்பது  கண்டிப்பதும்  மற்று கிறிஸ்தவர்களின் நலனுக்கும் காலத்தின் கட்டாயமாக மாறுகின்றது.  இவர்கள் கடந்த 25 வருடத்திற்கிடையில் கிறிஸ்தவத்தை தழுவியோர்.  பெருவாரியானோர் கிறிஸ்தவத்தின் மற்ற பிரிவுகளில் இருந்து தாவியோர்.  அடிப்படையான புரிதல் இல்லாது ஊழியர்கள் வேத வாக்கை மட்டும்   நம்பி இருப்போர்கள். 

கிறிஸ்து தன் போதனையை யாருக்கும் வலுக்கட்டாயமாக பயமுறுத்தி கூற சொல்லவில்லை. என் வார்த்தையை கூறுங்கள். மறுப்பின் காலிலுள்ள தூசியை தட்டிவிட்டு அந்த ஊரில் இருந்து வெளியேறத்தான் கூறியுள்ளார்.

உண்மையில் எளிய கிறிஸ்தவர்கள் பேய்க்கும் கடலுக்கும் நடுவில் என்பது போலவே முழித்து கொண்டு நிற்கின்றனர். சமீப காலமாக அரசு வேலையில் மிகவும் நுட்பமாக கிறிஸ்தவர்கள் ஒதுக்கப்படுகின்றனர். ஆனால் பணக்கார கிறிஸ்தவர்கள் பணத்தை கொடுத்து அந்த அநீதியையும் சரிக்கட்டி விடுகின்றனர். கிறிஸ்தவ தலைமையும் அடிப்படை உறுப்பினர்களின் நலனில் அக்கறை கொள்வதில்லை. கிறிஸ்தவ நிறுவங்களில் அடிமாட்டு கூலிகளாகவே பெரும் திரள் வாழ்கின்றது. 

கத்தோலிக்க சபை  தலைமைகள் 7 முதல் 14 வருடம் கொண்ட பாடத்திட்டத்தின் கீழ்  ஆன்மீக கல்வி பெற்றவர்கள். அதே போல புரட்டஸ்டன்று பாதிரிகள்/ஐயர்களும் ஏழு வருடம் கல்வி கற்கின்றனர். பிரொஸ்டன்று சபையில் கூட பாதிரிகள் இடத்தை தனி நபர்கள் (மோகன் சி லாசரஸ், தினகரன்)  தன் பேச்சாற்றலால் பிடித்து விட்டனர்  ஆனால் இந்த இவாஞலிக்கன், பெந்தோகொஸ்தா பாதிரிகள் என்ன கல்வி கற்று வருகின்றனர். . ஏஞ்சல் தொலைக்காட்சியில் https://www.youtube.com/watch?v=nlGKuv0fuTM பேசி வரும் சாது சுந்தர் சிங், செல்வராஜ் போன்றவர்கள் எந்த நிறுவனத்தில் கற்று வந்தனர் என்றே தெரியவில்லை. அவர்கள் பேசுவதை கேட்டால் சகிப்பு தன்மையுள்ள கிறிஸ்தவனுக்கே பைத்தியம் பிடித்து விடும். 

கிறிஸ்தவர்கள்  பிறப்பு முதல் சாவு வரை  பல சிக்கலில் உழலுகின்றனர். அரசின் தாக்குதலால்  சாதாரண எளிய கிறிஸ்தவர்கள் மறுபடியும் பாதிக்கப்படுவர். அதிகார வர்க்க மேல்மட்ட கிறிஸ்தவர்கள்  அரசியல், பண பலத்தால்  தப்பித்து கொள்வர்.  இந்தியா போன்ற பன்முகத்தன்மை கொண்ட சமூகத்தை ஆள்பவர்களும் பன்முகத்தன்மை கொண்டு விளங்க வேண்டும். 

இளைய ராஜா போன்ற இசை ஆளுமைகள் , கவிதை உலகின் ஆளுமை தாமிரை போன்றவர்கள் இன்னும் பொறுப்புடன் பதிவிட வேண்டும்.  அவர்கள் அரசியல் ஆதாயம் பெற வேண்டும் என்பதற்காக கிறிஸ்தவர்களை பொது வெளியில் இழுத்து விடாதிருக்கட்டும்.  கிறிஸ்தவர்கள் மேல் தாக்குதல் இது  முதல் முறையல்ல மணிரத்தினம் , பாலா போன்ற சினிமா இயக்குனர்கள்  கூட தங்கள் சினிமா  கதைத்தளத்தை கிறுஸ்தவத்தின் உண்மையான நிலையையோ சம்பவங்களையோ வெளிப்படுத்தும் படியாக இல்லை. 

கிறிஸ்து மதம் கி.பி 54 ல் இந்தியாவிற்குள் நுழைந்திருந்தாலும்,  தங்கள் அன்பு, எளிமையால் மட்டுமே மனிதர்கள்  மனதில் இடம் பிடிக்க முடியும் என புரிதல் வேண்டும். இந்தியா என்ற தேசம்  சைவ புத்த இந்து மத ராஜ்சியமே.  கிறிஸ்தவர்கள்  வெறும் 2.3% மட்டுமே உள்ளோம். கிறிஸ்தவர்களும் அடிப்படையில் இந்து தேசத்தினுடைய ஹிந்துக்களே.  சில பண்பாட்டு ஜாதி தாக்குதலால் மதம் மாற உந்தபட்டவர்கள் தான்.   இரட்சிப்பு, ஜெபம், விசுவாசம் எல்லாம் தங்கள் கிறிஸ்தவ குழுவிற்குள் வைத்து கொள்ள வேண்டும். மதம் மனதை பண்படுத்துவது மட்டுமே.  அது ஆள்சேர்ப்பதல்ல, விற்பனைக்குரியது அல்ல..
கடந்த வாரம் ஒரு நாள் கடினமான வெயிலில் நின்று கொன்டிருந்தேன். ஓர் அம்மணி குடை வைத்து கொண்டு அருகில் நிற்பதையும் கவனித்தேன் . பின்பு பேருந்தில் இருவருக்கும் அருகருகே சீட் கிடைத்தது. அந்த அம்மையார் என்னை நோக்கி புன்சிரித்தார். நானும் பதில் புன்முறுவல் கொண்டேன்.
அவர் வைத்திருந்த கைப்பயில் இருந்து ஒரு சீட்டை கொடுத்தார். வாசியுங்கள் உலகம் ரொம்ப கெட்டு விட்டது, நீங்கள் இரச்சிக்கப்பட வேண்டும் என்றார். நான் வாங்கி பார்த்து விட்டு, நான் பைபிள் வாசித்து கொள்கின்றேன். நீங்களே வைத்து கொள்ளுங்கள் எனக்கு வேண்டாம் என திருப்பி கொடுத்தேன்.
உடன் அவர் நீங்கள் என்ன சபை என்றார் நான் சார்ந்த அந்த பிரதான இரண்டு சபைகளை பற்றி கூறினேன். உடன் அவர் இந்த இரு சபைக்கான வித்தியாசம் என்னவென்றார். அடிப்படை கிறிஸ்துவின் அன்பு, வித்தியாசம் நாம் பொருட்படுத்துவதை பொறுத்து என்றேன்.
நானும் ஒரு வினா எழுப்பினேன், நீங்கள் எப்போது கிறிஸ்தவரானீர்கள் . ஒரு முப்பது வருடம் இருக்கும் என்றார். நான் கூறினேன் என் கொள்ளு தாத்தா ரோமன் கத்தோலிக்க கிறிஸ்தவர். என் அப்பா வழி கொள்ளு தாத்தா ஆங்கிகன் சபையின் ஐயர். நாங்கெல்லாம் கிறிஸ்தவர்களாகி 200 வருடங்களுக்கு மேலாகி விட்டது.
அவர் நான் கூறினதை புரிந்து கொண்டதாகவும் இல்லை; நானோ, ஒரு போதும் அவர் சொல்லும் கிறிஸ்தவத்தை ஏற்று கொள்ள போவதும் இல்லை. என் இறங்கும் நிறுத்தம் வந்த போது குனிந்த தலையுடன் என்னை கண்டு கொள்ளாதது போல் இருந்தார். நான் அவரை அழைத்து, ' போய் வருகின்றேன்' என விடை பெற்றேன்.
அதே போல் ஞாயிறு ஆகிவிட்டது என்றால், சில ரிட்டயர்டு ஆசிரியர்கள், அரசு ஊதியக்காரர்கள் வீடு தேடி வருகின்றனர். உங்கள் கவலை மாறும் கண்ணீர் மாறும் யேசுவின் செய்தி என ஏதேதோ கதைக்கின்றனர். இந்த வயதான தாத்தாக்கள் எல்லாம் சேர்ந்து இலவசமா ஒரு பள்ளி நடத்தினா எவ்வளவு நலமாக இருக்கும், தெருவை சுத்தம் செய்யலாம், மருத்துவமனையில் நோயாளிகலிடம் நலம் விசாரிக்கலாம். வங்கியில் சேமித்து வைத்திப்பவற்றை ஏழைகளுக்கு கொடுக்கலாம்.
இன்னும் ஒரு அம்மையார் தன் வாலிப வயது மகள் , ஒரு சிறு மகனையும் அழைத்து வந்தார். தாய் பையனிடம் சாட்சியம் கூறு என சொல்ல; அந்த குழந்தை கிளிபிள்ளை மாதிரி ஒப்பிக்க ஆரம்பித்தான். நான் தாயை நோக்கி; நீங்களே சொல்லலாம் இந்த சிறுவனை அனாவசியமா வேலை வாங்குகின்றீர்கள். குழந்தை தொழிலாளியா என்றேன். உடன் தாய் மகளை நோக்கினார். அப்பெண் ஆரம்பித்தார். நான் பிள்ளையை எங்கள் மாணவி என கண்டு கொண்டேன். உருப்படியா ஏதும் வேலை பாருங்கோ. வாலிபப்பிள்ளையும் வைத்து கொண்டு வீடு வீடா போகாதீங்க என்று கூறி அனுப்பினேன். சாதாரண மக்களிடன் காசு பிடுங்க சபை தலைமை செய்யும் பிழப்பு வாதமாகும் இது .
இன்று அரசு அலுவலகம் சென்றால் அவன் கிறிஸ்தவன்ப்பா கைலஞ்சம் எல்லாம் வாங்க மாட்டான், அவ கிறிஸ்தவன் பொய் பேச மாட்டான், கொள்ளையிட மாட்டான் எளிமை தான் அவன் வாழ்க்கை வழி, அன்பு தான் அவர்கள் மதம் என்று கூறும்படி இல்லை. கூட்டத்தோடு சேர்ந்த ஊழல்காரர்களாக, பெயரளவில் கிறிஸ்தவர்களாக வாழ்கின்றனர்.
வெள்ளைக்கார மிஷனரிகள் இந்தியாவில் கண்ட  அனாவசிய சமூக மூடவழக்கங்களை, மூட நம்பிக்கையை களைய   கிறிஸ்தவத்தை  படிப்பத்தனர். தற்போதோ இந்திய ஊழியக்காரர்கள் தலைமையில்  பொய் பிரசாரம்,  துர் ஆசாரங்கள் கிறிஸ்தவத்திலும்  மலிந்து ஓட ஆரம்பித்து விட்டது.    ஊழியக்கூட்டம் , எழுப்புதல் ஜெபம் எனக்கூறி கொண்டு பணம் பறிக்கும் வேலையை தேவையற்ற பயத்தை மக்கள் மத்தியில் பரவ விடுகின்றனர். அதை கேள்வி கேட்காதே சகித்து கொள்கின்றோம். DVD FRAUD
சில ஊழியக்காரர்கள், யேசுவின் அடுத்த விசுவாசி எனக்கூறி  கொண்டு பொதுவெளியில்; மட்டுமல்ல சமூகவலைத்தளங்களிலும்  வன்மத்தை கொட்டுகின்றனர். . யேசுவே கூறியுள்ளார் 'என் சீடன் கர்த்தாவே கர்த்தாவே என அழைப்பவனல்ல, என் வழியே நடப்பவனும் என் பேச்சை கேட்பவனுமே' என்று. பல்லுக்கு பல்லு கண்ணுக்கு கண்ணல்ல  கிறிஸ்தவ கோட்பாடு; ஒரு கன்னத்தில் அடித்தால் மற்றொரு கன்னத்தை காட்டுவதே கிறிஸ்தவ கோட்பாடு.

கிறிஸ்து அவர் இருந்த யூத மதத்திற்காக மதத்தை பரவ வாழவில்லை; அவர் உண்மைக்காக ஒடுக்கப்பட்ட மக்களுக்காக, பாவி என்று ஒதுக்கப்பட்ட பெண்களுக்காகவே குரல் கொடுத்தார். கிறிஸ்தவ பண்பு தனித்துவமானது அது அறிய பைபிள் வாசிக்க வேண்டும்.  ஊழியக்காரன் புலம்புவதை மட்டும் கேட்க கூடாது.  மதம் மனிதனின் மதத்தை விரட்ட வலு கொண்டதாக இருக்க வேண்டும். 

மனிதனனின் மனிதம் வளரவே மதம். அவ்வகையில்  யேசுகிறிஸ்து என்ற மனித நேயரை சமூக போராளியை கிறிஸ்தவர்கள் பின் பற்றுவோம். 

 எதெற்கும் பதில் கொடுப்பதால் கிறிஸ்தவர்களுக்கு நல்லது நடக்கப்போவதில்லை. கோழி கூவுவதால் நேரம் விடியப்போவதுமில்லை, நாய் குலைப்பதால் சூரியன் மறையப்போவதும் இல்லை. 















9 comments:

  1. நான் இந்து ஆனால் படிப்பும் அறிவும் தந்தது கிறிஸ்துவ பள்ளிகளே. வாழ்வின் கடைசி வரை அவர்களிடம் நன்றி உண்டு. வளர்ந்த பின் பார்க்கும் போது தெருவுக்கு தெரு சபை திறந்து இன்று அதே தெருவில் பலர் இன்னமும் அதே நிலையில் உள்ள போது இவர்கள் எளிதாக முப்பது, நாற்பது கோடி அளவில் சொத்து சேர்த்து மேலும் தன் வாரிசுகளை அதே போல் பத்து தெரு தள்ளி இதே போல் வேறு சொத்துகள் ,சபை வாங்கி குவித்து பெரும் பணம் சேர்கிறார்கள். இதற்கு என்றே வாரிசுகளை உலக மெங்கும் அனுப்பி போதகர் ஆகும் கல்வி கற்க அனுப்புகின்றனர். இவர்கள் சபைக்கு முப்பது ஆண்டுகளாக வந்தவன் நிலை அப்படியே இருக்க , இவர்கள் இன்று சொர்க்க போகத்தில் உள்ளனர். இது போல் தமிழகமெங்கும் பார்க்கலாம். முக்கியமாக புறநகர் பகுதியில் இது போல் ஆயிரக்கணக்கான சபைகளை பார்க்கலாம். மக்கள் கண்னை மறைக்க ஓரிரு சிறு சமுக பணிகள் நிச்சயம் செய்வார்கள். அதற்குள் இருப்பது செல்வ குவிப்பு , சுக போக வாழ்வு. உலக மக்கள் கடும் சிரமத்தில் வாழ்வு நடத்தும் போது , இவர்கள் பல தலைமுறை வாரிசுகளுக்கு சொத்து சேர்த்து உழைக்காமல் ஓதி விட்டு போவதை பார்க்கும் போது எளிய மக்களை இல்லாததை முணுகி எயிப்பதே கொள்கையாய் கொண்ட பார்பானுக்கு இவர்கள் சரியான போட்டி. மேலும் இவர்களுள் ஏன் இதனை சாதி பாகுபாடு. இதனை அவர்கள் கடவுள் கேட்க மாட்டாரா? பிறரை நேசி ,அன்பு காடு, கன்னத்தை காட்டு என்பதெல்லாம் பித்தலாட்டமா? இவர்களுக்கு சாதி எதற்கு ? என்ன பயன் அதனால்? அடுத்தவனை இழிவு செய்வதை தவிர வேறு எந்த பயனும் தராத சாதியை மட்டுமாவது இவர்கள் துறந்தால், கொள்ளை அடித்து கொண்டாவது போகட்டும் என்று சொல்லலாம். இவ்வாறு செய்பவர்களுக்கு வெளி நாட்டில் இருந்து பணம் குவிகிறது. கொடுப்பவர்களுக்கு இந்த ஏற்ற தாழ்வுகள் சிறிதும் தெரியாது. சக மனிதன் வாழவே சிரமப்படும் போது இவர்கள் இன்னோவா , டொயோட்டா காரிலும் நாள் முழுதும் குளிர்சாதன அறையிலும் இருந்து இன்பம் காண்கிறார்கள். மத போதை மக்களை இந்த அநீதியில் இருந்து எப்போது காப்பாற்றும்.

    ReplyDelete
  2. அருமையான அலசல். உண்மை.

    ReplyDelete
  3. பிரச்சனைகளை நன்றாக ஆராய்ந்திருக்கிறீர்கள் சகோதரி.
    என் வாழ்வில் யாரிடமும் பகிர்ந்து கொள்ள முடியாத ஒரு பிரச்சனையில் இருக்கிறேன்.

    நான் கத்தோலிக்க திருச்சபையைச் சார்ந்தவன். என் மனைவி, பெந்தகோஸ்தே (தனிச்சபை) சேர்ந்தவர்.

    என் மனைவிக்கு வற்புறுத்தலுக்காக, நான் அவரது பெந்தகோஸ்தே சபைக்குத்தான் சென்று வருகிறேன்.

    அங்கு மாத ஊதியத்தில் 10 இல் ஒரு பங்கு தசமபாகம் கேட்கின்றனர். தொடக்கத்தில் அரைகுறை மனதோடு கொடுத்து வந்தேன். இப்போது தசம்பாகம் கொடுக்கும் அளவில் எனக்கு ஊதியம் போதவில்லை.

    ஆனால், அங்கு வரும் பாஸ்டர்கள், தசமபாகம் கொடுக்காவிட்டால், கடவுளை வஞ்சிப்பதற்கு சமம், கடவுளை ஏமாற்றுகிறாய் - என பிரசங்கத்தில் தவறாமல் போதிக்கின்றனர்.

    இதனால், எனக்கும் என் மனைவிக்கும் குற்ற உணர்வு ஏற்படுகிறது. அதனால் எனக்குத் தெரியாமல், நான் வீட்டுச் செலவுக்குக் கொடுக்கும் காசை கஞ்சத்தனம் பிடித்து, ஒதுக்கி, என் மனைவி, ஒரு தொகையை கொடுத்து வருகிறார்.

    நான் வட்டிக் கடனில் வேறு சிக்கியிருப்பதால், தசமபாகம் கொடுக்கும் நிலையில் இல்லை.

    ஆனால் வாராவாரம் இவர்கள் குற்ற உணர்வை போதனை மூலம் புகட்டி வருகின்றனர்.

    இந்த பிரச்சனைக்கு என்ன தீர்வு என தெரியவில்லை. அந்த சபைக்கு போகாமல் என் மனைவி நிறுத்தப் போவதில்லை. எனக்கும் குற்ற உணர்வு மறையப் போவதில்லை.

    ReplyDelete
  4. I am a Hindu. I studied in christian school. After reading your post, I realized Jesus many years after my school days. Thanks :-)

    ReplyDelete
  5. ''சில ரிட்டயர்டு ஆசிரியர்கள், அரசு ஊதியக்காரர்கள் வீடு தேடி வருகின்றனர். உங்கள் கவலை மாறும் கண்ணீர் மாறும் யேசுவின் செய்தி என ஏதேதோ கதைக்கின்றனர். கோழி கூவுவதால் நேரம் விடியப்போவதுமில்லை, நாய் குலைப்பதால் சூரியன் மறையப்போவதும் இல்லை. ''


    உண்மை

    ReplyDelete
  6. நல்லதொரு அணுகுமுறை. வெள்ளை இனத்து கிறிஸ்துவ மதமக்களின் தரத்தில்.

    ReplyDelete
  7. Durai Jeyachandran · Frederick Community CollegeMarch 30, 2018 11:10 pm




    இயேசு கிறிஸ்து இறப்பதற்கு முன் சொன்ன வார்த்தைகளை பின் பற்றினால் உலகம் உன்னதமான இடமாக இருக்கும். அது "நான் உங்களை நேசிப்பதைப் போல் நீங்கள் பிறரை நேசியுங்கள்."

    ReplyDelete
  8. பின்னூட்டம் இட்டு தங்கள் கருத்தை தெரிவித்த அனைத்து நண்பர்களுக்கும் என் நன்றி மகிழ்ச்சிகள்

    ReplyDelete
  9. இந்த நிதானம் எல்லா மதத்தினரிடமும் இருந்தால் உலகம் எவ்வளவு அழகாய் மாறும்.

    ReplyDelete