13 Mar 2016

பயணங்கள் நிறைவு பெறுவது இல்லை!

எங்கள் கடைசி செல்ஃபி ஃபெப் 14 2016.

அத்தான் ஞாயிறு வந்து விட்டது. நம் சந்தோஷ நாள் இந்த ஞாயிற்று கிழமைகள். அன்று தான் நாம் இருவரும் நம் வேலைகளில் இருந்து விடுதலை பெற்று நம் பிள்ளைகளுடன் பிரியாணி செய்து சாப்பிடுவோம் ஆலயம் செல்வோம், பிடித்த இடத்திற்கு பயணம் செல்வோம். நான்கு பேரும் கட்டிலில் படுத்து கொண்டே கதைகள் கதைத்து கொண்டிருப்போம். 


நீங்கள் பிப் 20 அன்று விடை தரும் முன்  அந்த 8 மற்றும் 14 அன்று  மணப்பாடு சிலுவைக்கோயில் சென்றோம். முதல் நாள் பயணம் கரை ஒதுங்கிய திமிங்கலத்தை  பார்க்க வேண்டும் என்றிருந்தது. நாம் சென்ற நேரம் திமிங்கலம் யாவும் புதைத்து விட்டனர்.  அப்போது மீன்சந்தை நடை பெற்றதால் மீன் வாங்கும் ஆர்வத்தில் நீங்கள் இருந்தீர்கள். அங்கு இருந்த ஒரு ஆளிடம் மீன் விலையை பற்றி வினவியதும் இந்த மீன்களை சில்லறையாக கொடுப்பதில்லை நீங்கள் தேவையான மட்டும் எடுத்து செல்லுங்கள் என்று பெரிய மனதுடன் கூறினார். நீங்களோ நீங்கள் கடலில் சென்று உழைத்து கொண்டு வந்ததை நான் எப்படி இனாமாக பெற இயலும் நீங்க சிறிய விலை போட்டு தாங்கள் என்றதும் 50 ரூபாய் கொடுத்து விட்டு  மகிழ்ச்சியாக மீனை பெற்று வருவது இன்றும் கண் முன் நிற்கின்றது . அத்தான். சில போது உங்கள் சில விருப்பங்களில் குழந்தைத்தனம் மேலோங்கி இருக்கும் குழந்தைகளை போல் கள்ளமில்லா  சிரிப்பீர்கள். அந்த மீனை நீங்கள் உண்டீர்களா என்று எனக்கு நினைவு இல்லை ஆனால் அதை வாங்கி வந்து கத்திரிக்கோலால் வெட்டி சுத்தம் செய்து  தந்தது பசுமை நினைவாக மனதில் உள்ளது. நான் மீன் வெட்ட படித்து விட்டேன் இனி எவ்வளவு மீன் வாங்கினாலும் கழுவி சுத்தம் செய்து விடலாம் என பெருமை கொண்டீர்கள்.


அன்று நான் வைத்த இரால் கூட்டு கொஞ்சம் காரம் அதிகமாக இருந்தாலும் ரசித்து உண்டீர்கள். மீதம் இருந்த இராலை வறுத்து பல்லாரியுடன் தர வேண்டும் என்றிருந்த நான் இராலை பல்லாரியுடன் சேர்த்ததும் நான் நினைத்தது மாதிரி வரவில்லை என கவலை கொண்டேன்.  நீங்களோ, நன்றாக உள்ளது என்று ரசித்து சாப்பிட்டீர்கள். 

அதன் அடுத்த ஞாயிறு கடல் விளையாட்டுகளை கண்டு கழிக்க சென்றோம். நம் பிள்ளைகள் ஒருவர் டுயூஷன் போக வேண்டும் என்றும், இளையவன் ஆலயம் செல்ல வேண்டும் என கூறி நம்முடன் வர மறுத்து விட்டனர். நீங்களும் நானும் அன்றைய வாலன்றையன்(காதலர்) தினத்தை கடற்கரையில் கழித்தோம். நாம் எடுத்த கடைசி செல்ஃபி கூட அன்றையது தான். அன்றும் ஆலையத்தில் சென்று பிரார்த்தனை செய்தோம். வரும் போது உடன்குடியில் இறங்கி சில மளிகை சாமான்களும் வாங்கி வந்தோம். நாசரேத் கடக்கும் போது உங்க அம்மாவை பார்க்க போவோமா என்றதும் வேண்டாம் என சொல்லி விட்டீர்கள். 
அத்தான் இப்போது நான் நினைத்து பார்க்கின்றேன். நமது  பல ஆசைகள், பொழுது போக்குகள், விருப்பங்கள் ஒத்து போனது.  காரில் பயணிக்கும் போது கையை பற்றி கொள்ளுவது நம் இருவர் வழக்கமாக இருந்தது, பேசி கொண்டே அல்லது பாட்டு கேட்டே பயணிப்பது, புகைப்படம் எடுப்பது என எல்லாவற்றிலும் நம் விருப்பங்கள் கலந்திருந்தது. அத்தான் என் வாழ்க்கையின் மகிழ்ச்சி இது போன்ற நம் பயணங்களாக தான் இருந்தது. நான் பெரிய ஆடம்பரமான வீடு கேட்கவில்லை அணிய நகை கேட்கவில்லை, ஆனால் உங்களுடனான பயணங்களை பெரிதும் விரும்பினேன். கடந்த நான்கு வருடங்களில் நம் விடுமுறை நாட்கள்  பயணங்களுடன் தான் இணைந்து இருந்தது. 

எனக்கு பிடித்த புத்தகங்கள், வனிதா போன்ற மலையாள புத்தகங்கள் வாங்கி தந்து அசத்துவது என நீங்கள் எப்போதும்  உற்சாகமாக இருந்தீர்கள். சில போது நாம் பவுண்டர் மேடு வாழ்க்கையை பற்றி கேட்டால் பெண்கள் தான் நினைத்து கொண்டு இருப்பீர்கள் ஆண்களுக்கு நினைத்து கொண்டிருக்க நேரம் இல்லை என்பீர்கள்.  அத்தான் அந்த பயணங்கள் முடிவுற்றதோ? அது போன்ற நிமிடங்கள் இனி இல்லை தானே. கடக்கரையில் நீங்கள் என்னை அழகாக படம் பிடித்ததும்  ஏ ,,,,,,,,,,,,,,ஜோஸ் இங்க வா..  என கத்தி அழைத்ததும் நினைவு வருகிறது.

போட்டி நடக்கும் இடத்திற்கு போகும் போது நமது  கார் மாதா கோயில் அருகில் போடுங்கள் என்று நான் கூறினதை கண்டு கொள்ளாமல்  காரை மணலில் இறக்க, மணலில் கார் மாட்டினதும் நான் சிரிக்க உங்களுக்கு கோபம் வந்ததை பார்க்க வேண்டுமே. "நீ போ எனக்கு காரை கொண்டு வரத்தெரியும் என்னை கேலி செய்து சிரிக்கின்றாய்" என கோபப்பட்டு விரட்டி விட்டதும் நினைவில் வருகிறது. அங்கு சென்றதும் ஒரு சிறிய பாக்கட் மஸ்கோத் அல்வா, கடலை மிட்டாயுடன் வந்து சேர்ந்தீர்கள். நாம் கொஞ்சம் முன்பு ஊடல் கொண்டதை மறந்து, அல்வா கடலை, முட்டாய் தின்று கொண்டே கடல் விளையாட்டுகளை கண்டு ரசித்தோம்.  அடுத்த முறை நம் பிள்ளைகளையும் அழைத்து வர வேண்டும். இன்று நாம் அழைத்தும் வர வில்லையே என்று நீங்கள் வருந்தி கூறினதும் நினைவு வருகிறது. 






இது போன்ற நம் பயண நினைவுகள் இனிமையான பல பொழுதுகளை நினைவில் நிறுத்தினாலும் இனி இந்த பயணம் நம் சிரிப்பு பேச்சு இல்லையே என்பது வேதனை அளிக்கின்றது.



0 Comments:

Post a Comment