அத்தான் நம் உலக
பிரகாரமான பிரிவின் 41 வது நாள்!
திருமணம் நமக்கு நிச்சயம் ஆகியதுமே உங்களிடம் கேட்டேன் எனக்கு
சமைக்க தெரியாது, நீங்க
சொன்னீங்க நான் பார்த்து கொள்ளுகின்றேன் என்று. உங்கள்
அப்பா ஒரு நாள் கேட்டார் இந்த கல்யாணத்தால் எனக்கு என்ன லாபம்? உனக்கு
நகை கிடைத்து விட்டது, என் மகனுக்கு உன்னை கிடைத்துள்ளது. எனக்கு ஆயிரங்கள் செலவாகியுள்ளது. அன்று தான்
நான் இந்த திருமணத்தால் என்ன லாபம் என்று சிந்திக்க துவங்கினேன். என் பாசமான குடும்பத்தை, வீட்டை பிரிந்தேன், மகள் என்ற உரிமையை
இழந்தேன், ஆனால் எனக்கு கிடைத்த ஒரே லாபம், என்
சொந்தம் என் வரம் எல்லாம் நீங்க தான். நீங்க விளையாட்டாக கூறுவீர்கள் உனக்கு
விளையாட உங்க அப்பா என்னை வாங்கி
கொடுத்துள்ளார் என. ஆம் அத்தான் நம் வாழ்க்கையே விளையாட்டாகத் தான்
இருந்தது. அது எதிர்பாராத விளையாட்டில் முடிந்து விட்டது.
இன்று உங்க கல்லறைக்கு சென்றேன். சில
மெழுவத்திகள் பற்ற வைத்து அந்த தீபத்தில் உங்க அணையாத
அன்பை நினைத்து கொண்டு இருந்தேன். நம் மகன்களிடம் கடைசி சில மாதங்களில் நீங்க அதீதமாக
கோபப்பட்டீர்கள். என்னிடம் நீங்கள் குறை
கூறும் போது நான் கூறுவேன் அப்பாவை என்னிடம் குறை கூற வேண்டாம். அவர்
அப்படி தான். அவர் கோபப்படும் போது நீ கட்டிப்பிடித்து ஒரு முத்தம்
கொடு அவர் சாந்தமாகி விடுவார். அதே போன்று தான் நீங்கள் நம் பிள்ளைகளை குறை கூறும் போதும் நான் கூறியுள்ளேன்.
அத்தான் உங்களுக்கு உங்க பெற்றோர்களிடம் கிடைத்த அடி, வேதனையின் கால் பங்கை நம்ம பிள்ளைகளுக்கு
கொடுக்காதீர்கள். அவர்களை உங்க நெஞ்சோடு அணைத்து முத்தமிடுங்கள்.
அப்படி தான் நம் நான்கு பேரின் வாழ்க்கையும் ஓடியது. நாம் மாறி மாறி அரவணைத்து கொண்டோம். இரண்டு நாள் முன்பு
நான் தூக்கத்தில் இருந்து எழுந்து அவர் எங்கே எங்கே என தேடியுள்ளேன்.
அம்மா தான் தூங்க கூறியுள்ளார்கள். நினைத்தால் மறைந்து போன
தெளிவற்ற கனவு போல் தான் உள்ளது.
நீங்கள் போனதாக என்னால் நம்ப இயலவில்லை அத்தான்.
மாலை 4.30 க்கு
உங்க ஆப்பிள் போன் என்னிடம் கதைக்க ஆரம்பித்து விடும். சுபி அக்கா நரேன்
அண்ணாவை நாங்கள் அழைத்து வர கிளம்பி கொண்டு இருந்த
போது நீங்க ரொம்ப மகிழ்ச்சியாக இருந்தீர்கள். ஆப்பிள் போன்
சத்தம் தொடர்ந்து கேட்டு கொண்டே இருந்தது.
அத்தான் உங்களூக்கு நாம்
தனிக்குடித்தனம் சென்ற போது சாதத்தை கஞ்சாக வைத்து தந்தது முதல்
கடைசியாக வெள்ளி இரவு தக்காளி சாதம்- துவையல் வைத்து தந்தது
வரை ஞாபகம் வருகின்றது. பொதுவாக
நான் அரைத்து வைத்திருக்கும் துவையலை மறுபடியும் அரைக்க கூறும் நீங்கள் அன்று சாப்பாடு, துவையல் எல்லாம் நன்றாக உள்ளது என்று என்னிடம் கூறினீர்கள். பொதுவாக தேங்காய்
துருவித்தரும் நீங்கள் இடியாப்பம் பிழிந்து தரும் நீங்கள்
சனிக்கிழமை நான் கைவலி என்று கூறியும் எனக்கு எந்த உதவியும் செய்து தரவில்லை. அன்று நீங்கள் பாட்டும் கேட்கவில்லை. நீங்கள்
வீட்டில் இருந்து கிளம்பும் போது வலது தோள்பட்டை
கடினமாக வலித்து கொண்டிருந்தது. அதனால் தான் வெளியே வராது
வாசலில் நின்றே உங்களை பார்த்து கொண்டு நின்றேன். அன்றைய
விபத்தில் என்னை எப்போதும் தாங்கும் துங்க, தலை வைக்க தரும் உங்க தோள் பட்டை உடைந்து விட்டதாம் அத்தான்.

உங்களுக்கு விபத்து என்றதுமே என் உடன் பணிசெய்யும்
பேராசிரியர்களுக்கு தெரிவித்தேன். டவ்லஸ் மற்றும்
விஜய் சார் உங்களுடன் மருத்துவ மனையிலும் சந்தோஷ் சார் நம் வீட்டிலும்
வந்து உதவினர்.
என்னவர் தலைக்கவசம் அணிந்திருந்தால் காப்பாற்றியிருக்கலாமே என்றேன்; ‘இல்லை
மேம் இன்னும் 10 நாள்
இருந்து வேதனைப்பட்டு போயிருப்பார்’ என்றார். நீங்க உடனே அந்த
கடவுளிடம் போய் விட்டீர்கள். நாம் எப்போதும் பற்றி நடக்கும் உங்கள் கையை தொடத்தான் ஆசை கொண்டேன். யாரும்
அனுமதிக்கவில்லை. கடைசியாக என் கண்ணை மூடி கொண்டாவது உங்கள் கையை
மட்டும் தொடவேன்டும் அந்த விரல்களில் என் விரல்களை ஊடுரவ வேண்டும்
என்றது. அதற்கும் அனுமதிக்கவில்லை. உங்களை
வீட்டில் கொண்டு வந்த போதும் உங்க கைவிரல்களை துணீயால் மூடியிருந்தனர்.
பார்க்ககூட இயலவில்லை அத்தான். உங்க கண் விழிகள் நீங்க வீட்டில் இருந்து கிளம்பிய போது
என்னை பார்த்தது போலவே இருந்தது.
அத்தான் ஒவ்வொரு நாளையும் மகிழ்ச்சி, எதிர்பார்ப்புகள் கொண்டதாக தான்
இருந்தது. உங்கள் அன்பு எங்களை பரவசப்படுத்தியது. எங்க மூன்று பேருக்கும் என்ன என்ன தேவையோ அதை வாங்கி
தந்தீர்கள். எனக்கு என சில பலகாரங்களை கொண்டு அந்து
தனியாக தந்தீர்கள். சமீபமாக
நான் என் அப்பாவிடம் எதிர்பார்ப்பது போல் வாசலில் நின்றே எனக்கு
என்ன கொண்டு வந்திருப்பீர்கள் என தேட துவங்கினேன்
. கடைசியாக நாகர்கோயிலில் இருந்து எனக்காக வாங்கி வந்த இனிப்பு பன் நினைவில் வருகிறது.
யார் உங்களை குறை கூறீனாலும்
என் மனதிற்குள் செல்லவே இல்லை. எதோ ஒரு மயக்க நிலையில் தான்
இருந்துள்ளோம். நீங்களும் வீட்டு வாசல்
வரும் போதே நான் வாசலில் நின்று வரவேற்க வேண்டும், உங்க
வாகனம் வர வாசல் திறந்து விட வேன்டும் என எதிர்பார்த்தீர்கள் நானும்
செய்து வந்தேன். வெள்ளி இரவு நீங்கள் வரும் வரை நான் வாசலில்
தான் நின்று கொண்டு இருந்தேன். வந்ததும் குளித்து
விட்டு சாப்பிட கூறியும் எனக்கு பசிக்குது என்று நேராக அடுக்களையை தேடி
வந்தீர்கள். நீங்க முட்டை வாங்கி வருவீர்கள் என
வெட்டி வைத்த வெங்காயத்துடன் இருந்தேன். மறுபடியும்
வாங்கி வரவா என்றதும் வேண்டாம் துவையல் உள்ளது என வெங்காயத்தை குளிர்சாதனைப்பெட்டியில் வைத்தேன்.
அத்தான் அந்த மயக்கம் தான் நம்மை வாழ வைத்தது. நம் இருவர் குறையும்
நம்மை காணாது மறைக்க வைத்தது. உங்களை
பிரிந்து லயோலா அருகிலுள்ள செர்வெய்ர்ட் விடுதியில் சேர்த்து விட்டு நீங்கள் சென்ற போது நான் அந்த கட்டிலில் இருந்து உங்களை
நினைத்து அழுதது நினைவு வருகின்றது. அத்தான் தற்போது அந்த
அழுகையுடன் தான் நிதம் நிதம் புரளுகின்றேன். நீங்க உங்க
ஜாதகத்தை பற்றி என்னிடம் கூறியதில் ஏதோ பிழை உள்ளது. ஆனால்
10 வருடம் முன்பு
ஒரு வீட்டில் ஜெபிக்க செல்லுவோமே உங்க
மகனுக்கு 18 வயது
ஆகும் போது பெரும் கவலையை சந்திப்பீர்கள் என்றதும்
அந்த ஜெப கூட்டத்திற்கு போவதை நான் நிறுத்தி கொண்டது
இப்போது தான் நினைவில் வந்தது.

அருமையான நினைவுகள் நிறைந்த பதிவு. மிக அழகான படங்கள்.
ReplyDeleteசொல்ல வார்த்தை இல்லை ஜோ. இவ்வளவு அன்பு உள்ளங்களை கடவுள் ஏன் பிரித்தார் என்று புரியவில்லை. காலம்தான் உங்கள் சோகத்தை ஆற்ற வேண்டும். வாழ்வை எதிர் நோக்கும் பக்குவத்தை கடவுள்தான் உங்களுக்குத் தர வேண்டும். தருவார்.
ReplyDeleteவேதனையாக இருக்கு சகோ..
ReplyDelete