header-photo

ஆசிரியைகளின் வெறித்தனம்!இன்னும் காலம் மாற வில்லையா என ஆச்சரியமாக தான் இருந்தது. நாங்கள் படித்தது வருடம் வெறும் 10 ரூபாய் கட்டணம் செலுத்தி  படித்த அரசு பள்ளி.  மாணவர்கள் மிகப்பெரிய அளவில் தேயில தோட்ட தொழிலாளர்கள் பிள்ளைகள் தான். மாணவர்களை ஆசிரியர்கள் படுத்தியபாடு எஸ்டேட் முதலாளிக்கு எளிதாக சிறுவர் தொழிலாளர்களை பெற்று தந்தது . ஆனால் இன்றோ மகன் படிப்பதோ 40 ஆயிரம் மேல் கட்டணம் செலுத்தி படிக்கும் பள்ளிகள். 

ரசாயனப்பாடம் எடுக்கும் ஆசிரியரை முதலில் கண்டேன். அவர் பக்கம் தான் கூட்டம் இல்லாது இருந்தது. நல்ல பையன், பிரச்சினை இல்லை, அடுத்து இனியும் நல்ல மதிபெண் எடுப்பான். நன்றி ஐயா என்று விடை பெற்று கொண்டேன். ஒரு வருடம் முன்பு என்னை ஆசிரியையாக காண வந்த ஒரு தந்தையின் நினைவு வந்தது. அவர் ஒரு அரசு அதிகாரி. நானும் புதிய ஆசிரியை தான். அவர் வயதில் பெரியவர்.  அம்மா என் மகன் படிக்கின்றானா நல்லா வருவானா என்றார். தேவையில்லாது பிரச்சனையில் மாட்டி கொள்கின்றான். எனக்கு இவனை நினைத்து தான் கவலை. அந்த கல்லூரியில் சேர்த்தேன். இடையில் வந்து விட்டான் என்றார்.  ஐயா உங்கள் மகன் பற்றி கவலை வேண்டாம். அவன் நல்ல நிலையில் வருவான் அவனுக்கு என்ற திறமைகள் இத்தனை உண்டு. முதலில் நீங்கள் அவனை நம்புங்கள் என்றேன். அம்மா என்ன நேரமோ தெரியல என் இளைய மகனால் எந்த பிரச்சனையும் இல்லை என்ற போது அவர் கண்ணில் இருந்து கண்ணீர் தரையில் விழுந்தது.
வரலாறு ஆசிரியர் எப்போதும் போல் உங்க பையனுக்கு விளையாட்டில் தான் ஆற்வம், படிப்பு சைடு தான் என்று சிரித்து கொண்டே கூறினார். என் மகனோ சார்…………………..மாட்டி விடாதீக நான் படிக்கின்றேன் என்றான். புவியியல்  ஆசிரியர்  விளையாட்டில் ஆற்வமுள்ள  பையன். ஆனால் படிக்கின்றான் நல்லா வருவான். நீங்க நிம்மதியாக இருங்கள் என்றார். அம்மா என்ற நிலையில் ஒரு பெருமிதம் நிறைந்து  நின்றது. என் மகன் படிப்பில் சிறப்பாக வரவேண்டும் என்றே; அவன் வயிற்றில் இருக்கும் போது ஒரு வங்கி தேற்வுக்கு படித்து கொண்டிருந்தேன். அவன் பிறந்த பின்பு அந்த வங்கி வேலையும் வாய்த்தது, பிள்ளையா வேலையா என்று கேட்கும் போது எப்போதும் பிள்ளை வளர்ச்சி தான் முன் நின்றது. 

அந்த மனநிறைவுடன் கணித ஆசிரியையிடம் சென்றால் ஒரு எகத்தாள பார்வையுடன், என்ன உங்க பையன் எப்படி இருக்கான் என்ற ஒரு நக்கல் சிரிப்புடன் ஒரு கேள்வி? காலை 7.30 க்கு கிளம்பும் மகன் மாலை 7 ஆகின்றது வீடு வந்து சேர என நினைத்து  சிரித்து கொண்டே கணிதத்தில் முழு மதிப்பெண் பெற வழியுண்டா என்ற நோக்கில் அவர் முகத்தை நோக்கினேன். "உங்க மகனுக்கு  நான் தேவையே இல்லை என்ற நினைப்பில் உள்ளான். எனக்கென்ன எப்படியோ போறான். இவன் எப்படி போனா எனக்கென்ன" என்றார். "முறைத்து பார்க்கின்றான் நான் கையால் அடித்த போது தடுக்கின்றானாம்.  பேனாவால்  குத்தினாலும் தடுக்கின்றானாம்.  அந்த அம்மா கூட்டாளு பிசிக்ஸ் ஆசிரியையாம். எனக்கு உங்க மகனை தான் ரொம்ப பிடிக்கும். இப்போ எனக்கு பிடிக்காது. நான் கண்டு கொள்வதே இல்லை சொல்லியிருப்பானே என்ற வெற்றி சிரிப்புடன் என்னை நோக்குகின்றார்.

தமிழ் வழி கல்வியில் இருந்து ஓடி போனாலும் மலையாள வழி வகுப்பறையில் நான் கொண்ட துன்பம் மிகக்கொடியது. ஏழாம் வகுப்பு வரை எங்கள் பள்ளி தலைமை ஆசிரியர் ஒரு தமிழர் . என்னை ஒடுக்க ஒரு ஆசிரியர் இருந்தால் கூட என்னை தன் சொந்த மகளை போல் நேசித்த சம்ஷுதின் சார், ஹரிகரன் சார், ரோசம்மா டீச்சர் போன்றோர் இருந்தனர். மத்தாயி சார், விஜயன் சார் எல்லோருக்கும் நான் மகள் போன்று தான். ஆனால் இந்த தயவு என் உயர் வகுப்பில் கிடைக்கவில்லை. எட்டாம் வகுப்பில் ஒரு ஆசிரியையால் ஒரு மாதம் கேள்வி கேட்காது என் பக்கம் கூட பார்க்காது ஒதுக்கி வைக்கப்பட்டிருந்தேன். அவர் ஏன் அப்படி நடந்து கொண்டார் என கேட்க அந்த நாட்களில் துணிவு வரவில்லை. பிற்காலத்தில் என்னிடம் கனிவுடன் நடந்து கொண்டார். இதுவும் எதனால் என்று எனக்கு விளங்கவில்லை. மலையாள மொழி ஆசிரியை துளசி டீச்சர் அன்பு மறக்க இயலாதது. அங்கும் அம்மினிக்குட்டி என்ற நாயர் ஆசிரியை இருந்தார். அவருக்கு தனியாக ஒரு கணக்கு கூட கரும்பலகையில் செய்ய தெரியாது. ஒரு நோட்டில் இருந்து காப்பி செய்து அப்படியே எழுதி போடுவார். புரியாத என் தோழிகளுக்கு கணக்கு கற்று கொடுத்த மகிழ்ச்சியில் கணக்கின் மேல் காதல் கொண்டு +2வுக்கு கணிதம் முதல் பாடமாக எடுத்து படித்தேன். ஆனால் கடினமான ஒரு கணக்கை செய்து விவரித்தாலும் மிக நன்று என்று பாராட்டாது “ பாத்தியாடி… ஒரு தமிழச்சிக்கே கணக்கு செய்ய முடிந்தால் உனக்கு ஏன் முடியாது என்பார். இவரும் பெற்றோர் சந்திப்பில் என்னவெல்லாமோ கதைத்து கொண்டு தன் அதிகாரத்தை நாட்டி கொண்டிருப்பார். அம்மாவுக்கு மலையாளம் கதைக்க தெரியாததால் தலையை மட்டும் ஆட்டிகொண்டு சிரித்து விட்டு பயபக்தியுடன் சரிங்க டீச்சர் என்று வந்து விடுவார். அப்படி ஏதும் அம்மா பேசியிருந்தாலும் நான் வேறு பள்ளி தேடி போயிருக்க வேண்டும்.                                                                    ஒரு முறை என் மலையாள  தோழிகள் இட்டிலியை ஆண் மாணவர்கள் மேல் எறிந்தார்கள் என குற்றம் சாட்டப்பட்டும் இட்லி அன்று யார் கொண்டு வந்தீர்கள் என்றதும் வெள்ளந்தியாக நான் மட்டும் எழுந்து நின்று அம்மாவை வரவைத்து என்னை கண்டித்து விட்டனர். புகார் கொடுத்த என் பள்ளி தோழர்கள்  உன்னை நாங்கள் சொல்லவில்லை என்றதும் சரி என்ன செய்ய என்று பணிந்து போகத்தான் வைத்தது சூழல். அன்று வளைந்த என் தலை இன்றும் அதிகாரமாக கத்தி பேசுகிறவர்களை கண்டால் பதில் கூறுவதை விட நான் அறியாத பதட்டவும் அழுகையும் தான் வந்தது.  

0 comments:

Post Comment

Post a Comment