9 Mar 2013

எனது வாழ்கையின் 3 தவறுகள்! The 3 Mistakes Of My Life!



அகமாபாத்தை சேர்ந்த உலகபுகழ் பெற்ற எழுத்தாளர் சேட்டன் பகத்தின்  2009 ல் வெளிவந்த நாவல் ஆகும் எனது வாழ்கையின் 3 தவறுகள்!    இந்த நாவல் கடந்த வாரம் வாசித்து முடித்தேன்.  அபிஷேக் கபூர் இயக்கத்தில்  பிப் 2013 ல்   வெளிவந்த ‘கேய் போ சீய்” என்ற திரைப்படம் இந்த நாவலை தழுவி எடுக்கப்பட்டது என்று அறிந்த போது  சுவாரசியம்  பற்றி கொண்டது. . டைம்ஸ் வார இதழ், உலகில் குறிப்பிடும் படியான 100 நபர்களில் ஒருவராக சேட்டன் பகத்தையும்  வரிசைப்படுத்தியுள்ளனர். ஆக்கப்பூர்வமான தொழில் அதிபர் வரிசையில் இவர் பெயரும் உட்படுத்தியுள்ளது அமெரிக்கா பன்னாட்டு நிறுவனம். உலக முதலீட்டு வங்கி பணியில் இருந்த சேட்டன் பகத் தற்போது முழுநேர எழுத்தாளராக உள்ளார் என்பது மேலும் குறிப்பிட தகுந்தது.

 சேட்டன் பகத்தில் கதைத் தளம்  இளைமை துள்ளலும், அதன்  சுறுசுறுப்பும், கபடமற்ற  மனிதர்களின் உறவை சொல்லும் படியாக உள்ளது. நாவல் எழுத்துக்கான  பொதுவான ஒரு நடையில் இருந்து   மாறுபட்டு வலைப்பதிவுகள் போன்ற  நெருக்கம் அருகாமையும் தருவதாக உள்ளது. கதை இப்படியாக துவங்குகின்றது. ஆசிரியர் சேட்டன் பகத், சிங்கப்பூரில் வேலை செய்து கொண்டு இருக்கின்றார். அகபாத்தை சேர்ந்த ஓர் இளைஞரிடமிருந்து தற்கொலை செய்து கொள்ளப் போவதாக மின் அஞ்சல் வருகின்றது.  தன் கல்லூரி பேராசிரியர் உதவியுடன் தற்கொலைக்கு முயலும் இளைஞனை மருத்துவ மனையில் கொண்டு சேர்க்கின்றார்.  இளைஞனை நேரில் சந்தித்து ஆறுதல் கூறுவதுடன்   இளைஞரின் வாழ்கை கதையை,அவர்  அனுமதியுடன் நாவலாக வெளியிட்டுள்ளதாக கதையில் குறிப்பிடுகின்றார் .

மட்டைபந்து விளையாட்டை தளமாக கொண்டு மூன்று நண்பர்களின் வாழ்கையை சுற்றி பிணையப்பட்டது இந்த நாவல். மட்டைபந்து விளையாட்டுக்கு தேவையான பொருட்களை விற்கும் கடையை அகமபாத்தை சேர்ந்த மூன்று இளைஞர்கள் துவங்குகின்றனர். குடும்ப பின்னணி, அறிவாற்றல், விருப்பங்கள் என எல்லாவற்றிலும் மாறுபட்டவர்கள். ஆனால் நட்பால் ஒன்றித்தவர்கள். எதிலும் எங்கும் எப்போதும் வியாபரமே முழுமூச்சாக கொண்ட ஒருவர்; கடவுள் உண்டா இல்லையா என ஆராய்ச்சி மனநிலையில் உள்ளவர் என்றால், இன்னொருவரோ தான் வாழ்கை சிந்தைனையை முழுதுமக மட்டைபந்த்து விளையாட்டில் மட்டும் செலுத்துவர்.  இந்து பிராமணராக பிறந்த ஓமி என்ற நண்பராகட்டும் தன் மாமா வற்புறுத்தலுக்கு இணங்க கோயில் பூஜா வேலைகளிலும் மும்முரமாக இருக்கின்றார்.  இப்படியான சூழலில் தங்களுக்கான வியாபாரத்தை கோயில் வளாகத்திலுள்ள  வாடகை குறைவான ஒரு சிறு கடையில் துவங்குகின்றனர். இவர்கள் எதிர்பார்த்ததை விட வியாபாரம் சிறப்பாக செல்கின்றது. கோயில் காரியங்களில் செயல்ப்பட நிர்பந்திக்கப்படுவதாலும், வியாபாரம் மேலும் விருத்தியடைய நகர்புற கடை தேவை என்பதாலும்; நகரத்தில் ஒரு கடை ஏர்ப்படுத்துகின்றனர்.  இவர்கள் கனவை ஒரே நொடியில் தகர்க்கும் விதமாக குஜராத் பூகம்பம் வந்து செல்கின்றது.


நண்பர்களில் ஒருவரான இஷான் மட்டை பந்து பயிற்சி கொடுக்கும் போது, கோவிந்து கணிதம்  டியூஷன் வகுப்பு எடுத்து வருகின்றனர். நண்பரின் வேண்டுகோளுக்கு இணங்க அவர் தங்கைக்கும் கணித வகுப்பு எடுக்க செல்கின்றார். இதுவே தன் வாழ்கையில் தான் செய்த முதல் தவறு என குறிப்பிடுகின்றார். இப்படியிருக்க நண்பர் தங்கை தனக்கு ஆசிரியராக வந்திருக்கும் கோவிந்திடம் காதல் வயப்படுகின்றார். இவரும் காதலில் வீழ்ந்து விடுகின்றார்.  இதுவே தன் வாழ்கையில் தான் கொண்ட இரண்டாவது தவறாக குறிப்பிடுகின்றார்.

இதனிடையில் இவர்கள் கடைக்கு வந்த அலி என்ற இஸ்லாமிய சிறுவனின் மட்டபந்திலுள்ள அசாதாரண திறமை இஷானை ஆச்சரியம் கொள்ள வைக்கின்றது. அவனுக்கு தேவையான பயிற்சி கொடுத்து உலகத்தரம் வாய்ந்த விளையாட்டு வீரராக உருவாக்க இஷான் முடிவெடுக்கின்றார். இந்நேரம் குஜராத் மதக்கலவரம் நிகழ்கின்றது. இதில் இவர்கள் நண்பர் ஓமியின் மாமா மகன் கோத்திரா இரயிலில்  கொல்லப்படுகின்றான். இவர்களிடம் தஞ்சம் அடைந்த அலி என்ற சிறுவனை, பழி வாங்கும் நோக்குடன் மாமா, ஒரு கூட்டமாக  தாக்க வருகின்றார். இந்த களேபாரத்தில்  உயிர் நண்பர் ஓமி, ஓமியின் மாமாவும் கொல்லப்படுகின்றனர். சிறுவன் கையிலும் காயம் ஏற்படுகின்றது. சிறுவனை காப்பாற்ற இயலாத தன் நிலையை மூன்றாவது தவறாக  கோவிந்து வருத்ததுடன் உணர்கின்றார். 

இஷானும் தனக்கு தெரியாது தன் தங்கையை காதலித்து தனக்கு துரோகம் செய்ததாக எண்ணி தன் நண்பனை ஒதுக்குகின்றார். இந்த நிலையில் கோவிந்த் தற்கொலை செய்ய முடிவெடுத்ததுடன் கதையின் பின் காலம் நோக்கிய கதை சொல்லுதல் முடிந்து நிகழ்கால கதை பக்கம் வருகின்றோம்.


 இந்த நாவல் ஊடாக குஜராத்தில் இஸ்லாமிய- ஹிந்து சகோதர்கள் அடிப்படையில் கொண்டிருந்த பல நெருடலான தங்களுக்குள் கொண்ட வெறுப்பு உணர்வுகளை விவரித்துள்ளார். மக்கள் மத்தியில் தங்கள் மதத்தின் மேலுள்ள அதீத நம்பிக்கையால் எழுந்த வெறியும், சரியான புரிந்துணர்வு இல்லாத அவர்களுக்ளான உறவு நிலையையும் குறிப்பிட்டுள்ளார். ஹிந்துத்துவா என்பதை சகோதர அன்புடன் இணைத்து குறிப்பிடும் மாமா என்ற கதாபாத்திரம் தன் மகன் கொல்லப்பட்டார் என்று அறிந்ததும் சிந்தனையற்ற கொலைகாரனாக மாறுவது ஹிந்துத்துவா பற்றிய சிந்தனை பற்றிய நெருடலான உண்மையும்  இந்நாவலில் வெளிப்படுத்தியுள்ளார். மக்கள் மத்தியில் நிலவும் தீவிர எதிர்ப்பு தன்மையை மதவாதிகள் பயண்படுத்துவதையும் தங்கள் கருத்துக்களில் வன்முறையாக இளைஞர்களை இணைப்பதையும் நாவல் விவரித்துள்ளது.  இப்படியான சமூக சூழலில்  படித்த இளைஞர்கள் கூட வீழ்த்தப்படுவதும், இரையாகுவதையும்   விவரித்துள்ளார். கோவிந்து போன்ற இளம் சமூகத்தினர் அடிப்படையில் எந்த கடவுள் பரப்புரையிலும் நம்பிக்கையில்லாதவர்கள். இருப்பினும் கோயில் வளாகத்தில் தங்கள் கடையிருப்பதால் அந்த மத கூட்டத்தில் தாங்களும் பங்கு கொள்ளும் சூழலுக்க்கு தள்ளப்படுகின்றனர். மத நம்பிக்கையால் மனிதர்களை பிரித்து வைத்துள்ளதை நாவலாசிரியர் மிகவும் விவரித்து குறிப்பிட்டுள்ளார். கொலை வெறியில் பச்சிளம் பாலகனை கூட விட்டு வைக்காத மததீவிரவாதத்தையும் உணர்த்துகின்றார்.


இஸ்லாமிய ஏழை சிறுவன். அவன் தந்தை கல்வியறிவுள்ள இஸ்லாமியர். தீவிரவாத குணமற்ற மனிதநேயரான மனிதர். ஆனால் அக்கலவரத்தில் அவர் குடும்பவும் அழிக்கப்படுகின்றது என்ற துயரான சம்பவவும் நாவலில் காண்கின்றோம். இஸ்லாமியர்கள் பிற சமூகத்துடன் சேராது, தனித்து தங்களுக்கான  தெருவுகளில் வாழ்வதையும், அச்சிறுவன் குண நலன் வழியாக பிடிவாத குணத்தையும் மற்றவர்களை புண்படுத்தும் செயல் வார்த்தைகளையும் புனைவுப்படுத்தியுள்ளார்.

 காதல் என்ற பெயரில் இளைஞர்கள் புரியும் நம்பிக்கை துரோகத்தையும், இதில் பெண்கள் செயல்பாடுகள் எவ்விதத்தில் வேகப்படுத்துகின்றது  எனவும் விவவரித்துள்ளார். காலத்தின் மாற்றத்தால் பெண் பிள்ளைகளில் காணும்  அதீத மாற்றம், தைரியம், அலைபேசியை பயண்படுத்தும் முறை என இளைஞர்கள் வாழ்கையை ஊடுருவி கதை படைத்துள்ளார் என்பதே இந்நாவலின் சிறப்பு!

இளைஞர்கள் வாழ்கை, வேலை வாய்ப்பு, வாழ்கை போராட்டம், இந்த தெருவுகளை ஆக்கிரமித்த மட்டைபந்து விளையாட்டு, நண்பர்கள் நட்பு, ,காதல் எவ்வாறு அவர்களுக்குள் பிளைவை ஏற்படுத்தியது என்றும் நட்புக்கும் கற்பு உண்டு என வலியுறுத்தி சென்றுள்ளார் ஆசிரியர்.


இருப்பினும் இந்திய் காங்கிரஸ் ஆட்சியில் கைதடி என்றும் மோடி அரசியல் சந்தைப்படுத்துனர் என்றும் குற்றம் சாட்டப்பட்டுள்ளார். இப்புத்தகம் கோடி வாசகர்களை சென்றடைந்துள்ளது. எழுத்து ஊடகமான நாவல், காட்சி ஊடகமாக உருமாறிய போது வாசகர்களை எவ்வாற்றாக ஊடுருவி சென்றுள்ளது என அறிய ஆவலாகத்தான் உள்ளது.  

1 comment:

  1. மாறுபட்ட மூவர் என்றால் சுவாரஸ்யமாகத் தான் இருக்கும்... பற்பல நிகழ்வுகளை சொல்லி உள்ள நூலின் விமர்சனம் நன்று... நன்றி...

    ReplyDelete