2 Jan 2013

வாழ்கைக்கு அர்த்தங்கள் நல்கிய 2012!


2012  நினைத்து பார்க்கயில் வெறுக்கவும் மறக்கவோ இயலாது. வாழ்கையில்  பல கசக்கும் உணமைகளை கண்டதுடன் வருத்தமான நிகழ்வுகளுடன் எதிர்கொள்ள கற்று தந்த வருடம். பல கனவுகளை நனவாக்கிய வருடம்.                                                                        என் வாழ்நாள் லட்சியமான கல்லூரி பேராசிரியர் வேலைக்கு சென்று மறுபடியும் கல்லூரிக்கு நாட்கள் வந்தது போல்  மகிழ்ச்சியுடன் வாழ்கை செல்ல துவங்கிய வருடம். ஆனால் அதே ஜூன் மாதம் தான் நான் விரும்பிய வேலை பறி போனதும். அதன் காரணங்கள் நானும், என்னை சுற்றியுள்ளவர்களும் பலவாறாக அடுக்கினாலும் விதியை துணைக்கு அழைப்பது தான் எனக்கு நிம்மதியாக  இருக்கின்றது.

'நான் தேடும் வெளிச்சங்கள்' என்ற என் முதல் சிறுகதை தொகுப்பு வெளி வந்து ஆறுதல் செப் 15ல். . ஏட்டில் கற்ற வித்தைகளை ஒரு புத்தகமாக உருவாக்கி பார்க்கும் வாய்ப்பு மனநிறைவை தருவது  மட்டுமல்லநானும் ஒரு படைப்பாளியாக உருவாகினேன் என்பதும் நிஜமானது


கடந்த அக்டோபர் 31ல் தான் சுபி அக்காவை சந்தித்தேன்.இரத்த உறவுகளிலும் மேன்மையான நட்பு உறவு பெற இயலும் என்றும் கண்டுணந்தேன். 15 வருடங்களுக்கு மேலாக சந்திராத என் பள்ளிக்க்கூட ஆசிரியர்களை சந்தித்து வந்தேன், நான் கற்ற கல்லூரி பேராசிரியர்கள், நான் படித்த கல்லூரியில் வணிக-கணிணி துறையில் கவுரவ  ஆலோசகராக செயலாற்றும் வாய்ப்பும் கிட்டியது, பல வருடம் கடந்து மகிழ்ச்சியுடன் பிறந்த ஊர் சென்று வரவும் பாட்டி தாய்மாமா சித்தப்பா அத்தை போன்ற உறவுகளை கண்டு உறவாடும் வாய்ப்பும் கிட்டியது. முகநூல் வழி மட்டும் அறிந்த தோழி புனிதா வெள்ளாச்சாமியை சந்திக்கும் வாய்ப்பும் கடந்த வருடம் கிட்டியது. அதே போல்  என் எழுத்திற்கு பக்கபலமாகவும் என்னை தன் சொந்த மகள் போல் நேசிக்கும் ஸ்ரீவில்லிபுத்தூர் இரத்தினவேல் ஐயாவிடம் என் புத்தகத்தைநேரடியாக சந்தித்து கொடுக்கவும் இயன்றது. அதே போல்  நியோர்க்கில் இருந்து வந்த நண்பர் பாட்ரிக்கை குடுபத்துடன் சென்று சந்திக்க வாய்ப்பு கிட்டியது. பத்திரிக்கையாளர் குமரேசன் ஐயாவை நெல்லையில் சந்தித்து என் புத்தகத்தை கொடுக்கும் வாய்ப்பும் கிடைத்தது. மேலும் பத்திரிக்கையாளர் இரா குமார் அவர்களுடைய புத்தகம் பெற்றுள்ளேன். என் புத்தம் நோர்வை நண்பர்கள் கையில் கிடைக்கும் படி பத்மன் அண்ணா உதவினார். முகநூலிலும் மிகச் சிறந்த நண்பர்களையும் பெற்றேன்.

தீபாவளியுடன் என் வாழ்கைக்கும் வெளிச்சம் வந்தது போல் தேசிய தல பேராசிரியர் தேற்வில் வெற்றி பெற்றதுடன் தீராத மனக்கவலை ஓய்ந்தது. இந்த வெற்றிதான் எனக்கும் தன்னம்பிக்கையும் தைரியத்தையும் திரும்பப் பெற வைத்தது. நான் கடினமாக உழைத்தும் நான் விரும்பி செய்த ஆசிரியர் பணி நிலைத்து நிற்கவில்லையே என அழுது புரண்ட எனக்கு இந்த வெற்றியே என் ஆசிரியை பணியால் தான் வந்தது என பெருமைப்பட்டு கொண்டேன். என் மாணவர்களுக்கு நான் கற்பித்தது என் தேற்வில் எனக்கு கேள்வியாக வருவதும் ஒரு மகிழ்ச்சி தானே. ஏமாற்றத்தால் கொண்ட துன்பத்திற்க்கு ஈடாக மகிழ்ச்சியும் புது நம்பிக்கை பிறந்ததும் நிஜத்தில் உணர்ந்தேன்.

என் தோல்வியில் என் வருத்ததில் எனக்கு பக்கபலமாக இருந்த தோழர்களை நினைத்து பூரிப்படைகின்றேன். ஜூன் 17 வரை கல்லூரி பேராசிரியாக இருந்த நான் ஜூன் 18 ல் எந்த முகாந்தரவும் எந்த விசாரனையும் இல்லாது வெளியேற்றப்பட்டது பேரதற்ச்சியாகவும் மரணம் போன்ற துக்கவும் தந்தது உண்மை தான். ஆனால் இந்த தோல்வியால் தான் தேசிய தல தேற்வவில் வெற்றி பெற வைத்தது என்பது இன்னொரு உண்மை.

சாதாரணமாகவே பெரிய ஆசைகளை பேணாத எனக்கு எனக்கு பிடித்தவேலை, அமைதியான சூழல், என்றதும் மேற்படிப்பு பற்றியோ தேசிய தல தேற்வு பற்றியோ கவனம் கொள்ளாது இருந்தேன். ஆனால் வேலை பறிபோனதும் தான் ஒரு நிலையான அங்கீகாரம் பெற தேற்வில் வெற்றி பெறுவதும் அவசியம் என்று முடிவெடுத்தேன். என்னவர் ஏற்கனவே வாங்கி கொடுத்த புத்தகம் எல்லாம் தூசி தட்டி மறுபடியும் படிக்க ஆரம்பித்தேன்.

அனுபவத்தால்,ஒரு தோல்வி, ஏமாற்றம் என்பதும் வாழ்கைக்கு அவசியம் என்றே விளங்கியது . வெற்றியை விட பல படிப்பினைகள் கற்று தந்து செல்வது தோல்வியும் ஏமாற்றவும் தான் என உணர்ந்தேன். நம்பி பேசின மனிதர்கள் உள்ளத்தில் இருக்கும் விஷம் புரிந்தது. ஒரு புறம் மனிதர்களிடம் நம்பிக்கை அற்று போனாலும் வாழ்கையில் ஒரு பாடமாக அமைந்தது. ஒரு தோல்வியால் சந்தித்த கேலி அவமானம் போல் வெற்றியினால் புற்றீசல் போல் பெருகி வரும் சில எதிர் தோழமைகளையும் சந்தித்தேன். சிலருக்கு நம் துக்கங்களை குத்தி பார்ப்பதே மகிழ்ச்சி தான் என புரிந்து கொண்ட போது தான் வருத்தங்களை மூட்டை கட்டி வைத்து விட்டு நம்பிக்கையுடன் வாழ வழி தேட் தோன்றியது. இந்த சமூகம் முன்னுக்கும் நகர விடாது பின்னுக்கும் விடாது துரத்தும் ஒரு விசித்திர நிலையை  புரிந்து கொண்டேன். பல பொழுதும் மற்றவர்கள் விமர்சனம், கணிப்பு,பொறாமையால் செய்யப்பட்ட கயிறுகளில் ஆடும் பொம்மையாக மாற்றப்படுவதை  புரிந்து கொள்ள தான் வேண்டும்.


 உடன் ஏற்று கொள்ள தகுந்த நிலையில் இல்லாவிடிலும் சிறந்த வேலைகள் தற்போது என்னை தேடி வருவது என்னை மேலும் தன்னம்பிக்கை கொள்ள வைக்கின்றது. இந்நாட்களில் பல அருமையான புத்தகங்கள் வாசிக்க இயல்கின்றது, சிறந்த திரைப்படம் கண்டு மகிழ்கின்றேன். 4 வருட தொடர் படிப்பு, வேலை என நாட்களுக்கு பின்பு இப்போது தான் என் குழந்தைகளுடன் போதுமான நேரம் செலவிடவும், அவர்களுடன் பயணங்களில் நேரம் செலவிடவும் இயல்கின்றது என்பது ஒரு தாயாக மனநிறைவு தான்.

முகநூல் நட்பு, அன்பு உள்ளங்களை ஒருபோதும் மறக்க இயலாது. என்  அருகிலிருப்பவர்களுக்கு தெரிவிக்கும் முன்னே பல சம்பவங்கள் முகநூல் நண்பர்களுக்கு தெரிவித்து மகிழ்ந்துள்ளேன், அழுதுள்ளேன், வருந்தியுள்ளேன். உங்கள் ஆக்கபூர்வமான உயிரோட்டமான நல் எண்ணங்கள் கொண்ட கருத்துக்கள் விருப்பங்கள் என்னை வழி நடத்தியுள்ளது என்று நான் சொல்லாவிடில் நான் நன்றி மறந்தவள் ஆக மாறி விடுவேன்.

சில காலம் நான் வெறுத்த, சில குழி பறித்த நட்புகள், உடன் வேலை செய்த வித்தியாசமான் மனம் கொண்டோரை இன்று மிகவும் நேசிக்கின்றேன். ஒருவேளை அருகில் சந்தித்தால் புதுவருட வாழ்த்து சொல்லி நீங்களும் என் வெற்றிக்காக பணி செய்து உள்ளீர்கள் என நிச்சயமாக நன்றி கூற இயலும். நம் வெற்றிக்கு; சில தீர்க்கமான ஆக்கபூர்வமான செயலாக்கங்களுக்கும்  நம்மை கரிசனையாக அன்பாக நடத்தும் நண்பர்கள் விட நமக்கு சவால், கேலி விடுக்கும் எதிரிகள் உதவுகின்றனர் என்பதே உண்மை. வாழ்கையை நதியின் ஓட்டத்தை போல் போக நினைக்கும் என்னை போன்றவர்களுக்கு எதிர் நீச்சல் இட கற்று கொடுப்பது இந்த எதிரிகள் தான். வாழ்கையில் தோல்வியும் இல்லை, வெற்றியும் இல்லை! மகிழ்ச்சியும் இன்பவும் துன்பவும் துக்கவும் வெற்றியும் தோல்வியும் நாம் எடுத்து கொள்ள நினைக்கும் மனநிலை மட்டுமே. மனதை ஒரு வெற்றுப்படகாக வைத்து கொண்டு இந்த வருடம் பயணிக்க உள்ளேன். எல்லோருக்கும் நன்றி கூறி இந்த வருடம் காலெடுத்து வைக்கின்றேன்.



2 comments:

  1. வாழ்க்கை என்பது கப்பல் பயணம் போன்றது அது அமைதியாகவும் செல்லும் சில சமயங்களில் புயல்களிலும் அகப்பட்டு செல்லும் ஆனால் புயல்களில் மாட்டி நல்லபடியாக கரை சேரும் போது நமக்கு கிடைக்கும் நிம்மதியை அளவிட்டு கூறமுடியாது.. நீங்கள் புயலில் அகப்பட்டு இப்போதுதான் கரைகடந்து இருக்கிறீர்கள்...இனி 2013ல் சந்தோஷம்தான் உங்கள் வாழ்வில் வரும்.... வாழ்க வளமுடன்....

    ReplyDelete
  2. Subi Narendran · Top Commenter · Works at M&SJanuary 07, 2013 11:09 am


    மனம் திறந்த பகிர்வு ஜோஸ். நன்மையையும் தீமையும் இரண்டறக் கலந்ததுதானே வாழ்க்கை. 2012 வருடம் உங்களுக்கு நிறைய அனுபவங்களைத் தந்திருக்கிறது. தீயவற்றில் இருந்து பாடத்தை கற்றுக்கொண்டு நல்லவற்றுக்கு கடவுளுக்கு நன்றி சொல்லிக்கொள்வோம். உங்களையும் பாபா, சாம், ஜெரியையும் சந்தித்தது எனக்கும் மிகவும் சந்தோஷம். மறக்க முடியாத ஒரு உறவை வாழ்வில் சந்தித்திருக்கிறேன். புதிய ஆண்டு 2013 உங்களுக்கு நன்மை பலவற்றையும் கொண்டு வர வாழ்த்துகிறேன்.

    ReplyDelete