5 Sept 2012

என்னை கவர்ந்த ஆசிரியையும் என்னை வெறுத்த ஆசிரியையும்!

ஆசிரியர் என்றதும் எனது நினைவில் ஓடி வரும் பல நல்ல ஆசிரியர்கள் உண்டு, அதை விட கூடுதலாக கொடூர ஆசிரியர்களும் உண்டு.


கோட்டயம் பி. சி. எம் கல்லூரியில் படிக்கும் நாட்கள் மறக்க இயலாதவை. கோட்டயம் ஒரு கல்வி மாவட்டம், பி.சி. எம் கல்லூரி புகழ் பெற்ற பெண்கள் கல்லூரி.  நாங்களோ இடுக்கி மாவட்டத்திலுள்ள கல்வியில் மிகவும் பின் தங்கிய பகுதியிலுள்ள  மாணவிகள் அதில் நான் மட்டும் தமிழச்சி!. மேலும் அங்கு படித்த மாணவிகள் பெரும் பணக்காரர்கள் அல்லது மிகப்பெரிய வேலையில் உள்ளவர்கள் அல்லது தேற்வில் நல்ல மதிப்பெண் எடுத்தவர்களாகவே இருந்தனர். என்னை போன்ற இடுக்கியை சேர்ந்த சில மாணவிகள் வயநாட்டு பகுதியிலுள்ள இன்னும் சில மாணவிகள் மட்டுமே குறைந்த மதிபெண் பெற்றவர்கள் ஆங்கில புலமை குறைவானவர்களாக இருந்தோம்.

அங்கு எங்களுக்கு ஆங்கிலப்பாடம் எடுத்த பேராசிரியை கோ. மோனாம்மா நினைவில் வருகின்றார்.  எப்போதும் சிரித்த முகம், மிகவும் அழகாக உடுத்தும் காட்டன் சேலைகள் எளிமையான ஆனால் கவரும் சிகை அலங்காரம் என எங்கள் மனதை கொள்ளை கொண்டவர் அவர்.  பேராசிரியை ஒருபோதும் பாகுபாடாக நடந்து கொண்டதே இல்லை. கல்லூரி முடிந்து சில மணிநேரம் புகைவண்டி நேரம் கணக்கு பண்ணி சும்மாதாக  இருந்தார். அந்த நேரவும் பயண்படுத்தும் வண்ணம்  எங்களை போன்ற மாணவிகளை அழைத்து ஆங்கில இலக்கணம் கற்று தருவார்கள்.  தன் குழந்தைகளிடம் என்பது போன்ற  கருதல், அன்பு, பரிவு அவரிடம் இருந்தது. தேவைக்கதிகமாக எந்த மாணவியிடமும் தொடர்பாடல் வைத்து கொள்ள மாட்டார். ஒரு போதும் அவர் குரல் உயர்த்தி திட்டினது இல்லை ஆனால் கண்டிப்பான பேராசிரியராகவும் இருந்தார். என் கல்வி நாட்களில் அவரிடம் 2 வருடம் படித்த ஆங்கிலமே இன்றும் உருதுணையாக இருந்துள்ளது என்று நினைக்கும் போது அவர் ஒரு போதும் மறவாத ஆசிரியையாக திகழ்கின்றார் என் மனதில். கல்லூரியில் வந்துவிட்டீர்கள் உங்கள் ஆளுமை வளரும் நாட்கள்; சின்ன பள்ளி குழந்தைகள் மாதிரி நீ, வா, போ என்று மற்றவர்களை அழைக்கக்கூடாது  என்று அறிவுறுத்துவது மட்டுமல்ல எங்களையும் ஒருமையில் அழைக்காது மரியாதையாகவே அழைத்து வந்தார். கேரளாவில்  பொது இடத்தில் புகைபிடிப்பதை  தடை கொண்டு வர பல வருடம் சட்டத்துடன் போராடியவர். 30 வருட கல்வி பணிக்கு பின் இப்போது சமூக தொண்டு ஆற்றும் வண்ணம் எர்ணாகுளம் மேயராக உள்ளார் .

 கல்விக்கு என தமிழகம் வந்து விட்டேன். என்னுடைய பெயர் கொண்ட ஒரு பேராசிரியை வணிகம் பாடம் எடுத்தார். அவருடைய பாடம் எடுக்கும் பாங்கே வித்தியாசம் ஆனது.  என் பெயர் கொண்டவர் என்பதால் எனக்கோ அவர் மேல் ஒரு ஈர்ப்பு.  புத்தகத்தை எல்லோரும் விரித்து வைத்து பார்த்து கொண்டு இருக்க வேண்டும். யாரும் சிறு அணு கூட  அசைய கூடாது. ஒவ்வொருவராக வாசிக்க துவங்குவோம் . அவர் நிறுத்து என்று சொன்னதும் அனைவரும் அவர் முகத்தை உற்று நோக்கி சொல்வதை உள்வாங்க வேண்டும். இப்படியாக முக்கால் மணிநேரம் செல்லும்.  அவரையும் அசையாது அவருடைய இருக்கையில் இருந்து கவனித்து கொண்டிருப்பார். அவரை கோபத்தின் உச்சியில் கொண்டு செல்ல கைவிரலால் சுடக்கு இட்டால் போதும். சத்தம் கேட்டதும் வாயில் வந்த படி திட்டுவார்.

சில மாணவிகள் ஆங்கிலம் வாசிப்பது புரியவே சங்கடமாக இருந்தது. நான் கணக்கு படத்தில் இருந்து வணிகம் பக்கம் தாவியதால் சரியான புரிதலும் இல்லை. ஆனால் மூக்கு கண்ணாடிக்கு கீழ் வழியாக நோக்கும் அவர் பார்வையும் எழுந்த சந்தேகம் கேட்க மிரட்டியது. இருப்பினும் தைரியத்தை வரவழைத்து கொண்டு என் பாட சந்தேகத்தை கேட்க ..அவரோ உன் பெயர் என்ன என்று மறுகேள்வி கேட்க, உன் ஊர் என்ன என்று அடுத்த கேள்வி வர ...கேரளா என்று நான் சொல்ல, "என்ன கேரளா அந்த மலைப்பக்கம் இருந்து கொண்டு கேரளாவாம்... கேரளா!" என்று நகைத்து விட்டு இந்த வகுப்பில் எத்தனை மாணவிகள் என்றார் என்னிடம், நானும் 45 பேர் என்று நான் பதிலுரைக்க; உனக்கு நான் 5 நிமிடம் எடுத்து கொண்டால் 45 ஆல் பெருக்கி பார் எவ்வளவு நேரம் விரையப்படுத்துகின்றாய் என்று.." . இப்படியாக காட்டமாக கூறிவிட்டு  சந்தேகம் இருந்தால் என் அறைக்கு வா என்று சென்று விட்டார்.

இன்னும் ஒரு நோய் அவருக்கு இருந்தது. சந்தையில் காய்கறி விலை நிர்ணயிப்பது போல் ஒவ்வொருபவருக்கும் ஒரு மதிபெண் நிர்ணயித்து வைத்து கொண்டு தேற்வுத்தாளை திருத்தாதே மதிபெண் தந்து விடுவார். எப்படியோ பல்கலைகழகம்  ஒரு தேற்வு வைப்பதால் தப்பித்து கொண்டோம்.

என் தங்கையில் இருந்து மலையாள மொழியில் எனக்கு வரும் கடிதம் உறுத்தி கொண்டே இருந்தது அவருக்கு. விசாரணை என்ற பெயரில் மிகவும் கொச்சையாக திட்டி அந்த கடிதத்துடன் என்னை கல்லூரி அலுவலகம் கூட்டி சென்று, மலையாள அருட் சகோதரியிடம் கொடுத்து வாசித்து விட்டு விட்டெறிந்தார். அவருடைய நடவடிக்கை படிப்பு மேலே எனக்கு வெறுப்பை கொடுத்தது.  சில ஆசிரியர்களுக்கு சில மாணவர்களை காரணம் இல்லாதே பிடிப்பதில்லை.

நான் விரிவுரையாளராக வகுப்பறைக்கு சென்ற போது  என் சில
ஆசிரியர்களில் நான் கண்ட குறையை என் மாணவர்கள் என்னிடம் காணக்கூடாது என்பதில் முடிவாக இருந்தேன். என்னை கவர்ந்த பேராசிரியை மோனம்மாபேரா. மோனாம்மா! அவர்களை பல பொழுதும் முன்மாதிரியாக எடுத்து கொண்டேன். 

என் முதல் வகுப்பில் நான் என் மாணவர்களை மதிப்பிடும் முன் அவர்கள் எனக்கு மதிபெண் தந்து கொண்டிருந்தனர். என் மகனின் அறிவுறுத்தலும் மனதில் இருந்தது.  "அம்மா நீங்கள் மாணவர்களை கோபத்தில் திட்டாதீர்கள் அது அவர்களுக்கு பிடிக்காது".  என் மாணவர்கள் ஊடகத்துறை மாணவர்கள் என்பதால் தைரியவும், கலை உணர்வும் கொண்டவர்களாக இருந்தனர்.  நான் மதித்தேன் அவர்களுக்கு வகுப்பு எடுக்கும் போதும் உண்மையிலே பயந்தேன். நான் எடுக்கும் பாடம் புரிகின்றதா தேற்வுக்கு என்னால் தயார் செய்ய இயல்கின்றதா என்று என்னையே தேற்வு செய்யும் விதமாக முதல் தேற்வுக்கு முன் என் வகுப்பை பற்றி அவர்கள் கருத்தை பெயர் இல்லாது எழுதி தரவும் கேட்டிருந்தேன்.

சில மாணவர்கள் புகழ்ந்தனர், சில மாணவர்கள் சில வழி முறைகளை எனக்கு முன் வைத்தனர். பல மாணவர்கள் தங்களுக்கு PowerPoint Presentation வகுப்புகள் பிடித்தமானதாக தெரிவித்தனர்.

 மேலும் ஒரு சமூக பிரச்சனயை விவாதிக்க முன் வைத்து அவர்கள் கருத்து பெற  முயன்றேன். சில மாணவர்கள் தங்கள் இருக்கையில் இருந்து எழுந்து வந்து சொல்ல வேண்டும் என்றால் நடுங்குவார்கள். அவர்களை வேண்டும் என்றே வகுப்பில் முன் கொண்டு வந்து பேச திடப்படுத்தினேன்.

ஒவ்வொரு மாணவனும் ஒவ்வொரு கதையாக வரலாறாக இருந்தனர். மெதுவாக சிரித்து விட்டு நகந்த சில மாணவர்கள் அருகில் வந்து தங்கள் மனக்குறையை கொட்டி சென்றனர், சிலர் தங்கள் ஆதங்கத்தை இட்டு சென்றனர். அவர்களில் சிலருக்கு கல்வி கற்பதை விட இந்த சமூக சிக்கலில்  நிம்மதியாக வாழ்வது ஒரு சவாலாகவே இருந்தது. மாணவர்கள் கேட்பதை மட்டும் விடுத்து பேசவும்  வைத்த போது பல அறிய கருத்துக்கள் நான் கற்றேன் என்பதே உண்மை.

இந்த பருவத்திலும் எனக்கு ஒரு ஆசிரியையாக பல கனவுகள் இருந்தன. அவர்கள் குறும்படம் தயாரிக்க என நானும் சில கதைகள் வாங்கி வாசித்து திரைக்கதை அமைத்து உதவும் ஆவலில் இருந்தேன். இன்னும் பல மாணவர்களை உதவ இயலும் என்ற நம்பிக்கை இருந்தது. ஆனால் அது எல்லாம் ஒரு  கனவாக முடிந்தது. இருப்பினும் பெயர் தெரியாத என் ஒரு மாணவன் என் வகுப்புகளை  பற்றி  எழுதிய கருத்துக்களை வாசித்து இப்போதும்  மகிழ்ச்சியான ஆசிரியையாக எண்ணி கொள்வது உண்டு.

அன்பிற்கினிய ஆசிரியைக்கு

உங்க வகுப்பு ஆகச் சிறந்த வகுப்பென்று கூற முடியாவிட்டாலும் கவனிக்கூடிய வகுப்பறை குணாம்சம் உங்கள் வகுப்புகளில் வெளிச்சமிடுவதை நான் உணர்கிறேன். முரண்பட்ட இரு தலங்களை ஓர் புள்ளியில் இணைக்கிற கோடாக உங்கள் வகுப்பறைகள் என் ஆழ் மனதில் வலம் வருகின்றன.

எங்கெங்கோ நினைவுகள் உங்கள் வகுப்புகளில் ஓடினாலும் அது தான் அடைய வேண்டிய தளத்தை இறுதியில் அடைந்து விடுகின்றது, அமைதியடைந்து விடுகின்றது.

ஒரு ஆசிரியை என்பது ஒரு வேலை வாழ்வாதாரம் என்பதையும் கடந்து தனி மனிதனை உருவாக்கும் கூடம் என்பதில் சந்தேகமில்லை. நம்மை உருவாக்கிய  எல்லா ஆசிரியைர்களையும் வணங்கி வாழ்த்துகின்றேன் வணங்குகின்றேன்.




4 comments:

  1. ஆசிரியர் தின வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  2. ஒரு ஆசிரியை என்பது ஒரு வேலை வாழ்வாதாரம் என்பதையும் கடந்து தனி மனிதனை உருவாக்கும் கூடம் என்பதில் சந்தேகமில்லை


    "ஆசிரியர் தின வாழ்த்துக்கள்!"

    ReplyDelete
  3. ஆசிரியர்கள் பலரிடம் நாம் கல்வி கற்றிருந்தாலும் குறிப்பிட்ட ஒரு சிலர் நம் மனதிலே நிரந்தரமாகத்
    தங்கிவிடுகின்றனர் என்பது மிகவும் உண்மை.
    பாராட்டுபவர்கள் சிலர், எங்கள் காலத்திலே ( 1950 முதல் 1960 வரை ) வகுப்பிலே எந்த தவறு செய்தாலும்
    அதை வீடு வரை வந்து பெற்றோர்களிடம் சொல்லி நம்மை திருத்துபவர்களும் இருந்திருக்கிறார்கள்.
    சிலர் முரட்டுத்தனமாக, அடி, குட்டு, உதை என்றும் தந்திருக்கிறார்கள். அது அவர்கள் பாணி.

    நீங்கள் சொல்லியமாதிரியே எனக்கும் எனது எட்டாம் வகுப்பில் ஒரு ஆசிரியர்.
    எங்கள் குடும்ப பொருளாதார நிலை மிகவும் தாழ்வுற்று இருந்த காலம்.
    அவ்வளவு மாணவர் மத்தியிலும் " என்ன ! ஒரே சட்டையை போட்டுக்கொண்டு வருகிறாயே ஒரு வாரமாய். "
    " இல்லை ஸார். நான் மாலை வீட்டுக்கு போனபின் தோய்த்துக் காயப்போட்டு விடுவேன். மறு நாள் உலர்ந்த பின்பு தான்
    போட்டுக்கொண்டு வருவேன்." என்றேன்.
    உங்க அப்பா ஒரு அட்வகேட். ஒரு சட்டை அவரால் வாங்கிக்கொடுக்க முடியவில்லையோ என்று ஏளனமாகப்பேசினார்.

    அது இன்றும் நினைவு இருக்கிறது.

    கண்ணிற்கு அணிகலம் கண்ணோட்டம் அஃதின்றேன்
    புண்ணென்று உணரப்படும்

    என்னும் குறள் உங்கள் பதிவினைப் படித்தபொழுது நினைவுக்கு வந்தது.

    ஒரு ஆசிரியருக்கு தேவையான முக்கிய தகுதி கண்ணோட்டம். ( empathy )

    மாணவனின் நிலை அறிந்து மாணவன் நிலைக்குச் சென்று தானும் ஒரு மாணவனாக,
    அந்த மாணவனுடைய நண்பனாக அவன் திறனறிந்து அவனுக்குக் கல்வி புகட்டுவோர்
    மட்டுமே உண்மையில் ஆசிரியர் ஆவர்.

    More than advice, today's taught need counselling.

    சுப்பு ரத்தினம்.
    http://vazhvuneri.blogspot.com

    ReplyDelete
  4. ஆசிரயர் தின நல் வாழ்த்துகள் உங்கள் பதிவுடன் என் ஆசிரயர் நினைவும் வந்தது

    ReplyDelete