கோயம்ப்த்தூரில் நண்பர்கள் பலர் உண்டு எனிலும் கோவைப்பயணம் வாய்ப்பு கிட்டவில்லை. இந்த முறை கோவை செல்ல புத்தக வெளியீடு என்ற காரணம் இருந்தாலும் பெரிய மகனுக்கு தேற்வு நாட்கள் என்பதால் பயணம் பற்றி இரு மனமாகவே இருந்தேன். மகனை தனியாக வீட்டில் விட்டு விட்டு செல்லவும் மனம் வரவில்லை. பள்ளி முதல்வரை கண்டு அனுமதி கேட்ட போது தன் மாணவருடைய தாய் புத்தகம் வெளியிடுவதை பெருமையாக எண்ணி இன்முகத்துடன் வாழ்த்தி அனுப்பியது மகிழ்ச்சியாக இருந்தது.
காலை நெல்லையில் இருந்து புறப்பட்டோம். திண்டுக்கல் அருகே வாடிப்பட்டியில் வந்ததும் திராட்சை தோட்டம், தென்னை மரத் தோட்டம் என பூங்காவாக இருந்தது வழி எங்கும். தோட்டத்தில் அப்போது பறித்த திராட்சைப்பழம் விற்று கொண்டிருப்பதை கண்டதும் பெரிய மகனும் கணவரும் திராட்சை வாங்க சென்றனர், நானும் சிறிய மகனும் திராட்சை தோட்ட உரிமையாளர் அனுமதி பெற்று தோட்டத்தில் படம் பிடிக்க சென்றோம். கிலோ 40 ரூபாய் 5 கிலோ பெட்டியாகத்தான் தருவதாக சொன்னார்கள். திராட்சை அழகு "வாங்கு வாங்கு" என சொல்வது போல் இருந்தது. . உரிமையாளரின் மனைவி மேற் பார்வையில் பெண்கள் கத்திரியால் நல்ல பழவும் கேடான பழவும் வகைப்படுத்தி கொண்டிருந்தனர். இன்னொரு பெரியவர் ஒரு கிலுக்கை வைத்து கொண்டு திராட்சை கொறிக்க வரும் மைனாவை விரட்டி கொண்டிருந்தார். ருசியான இனிப்பான திராட்சை சாப்பிட்டு கொண்டே பயணம் ஆரம்பித்தோம். (இதே திராட்சை வரும் போது கிலோ 30 ரூபாய்க்கு கிடைத்தது).
வழி நெடுக பெண்கள் வயல்களில் வேலை செய்து கொண்டிருந்தனர். வித்து விதைக்கும் சீசன் போல். எல்லோரும் வேலையில் ஆழ்ந்திருந்தனர். நெல்லைக்கு சமீபம் காண்பது போல் பிரதமர் வேலை வாய்ப்பு திட்டம் இல்லை என நினைக்கின்றேன். நெல்லை சேரமாதேவி பக்கம் பயணிக்கும் போது பந்தலிட்டு குழுமி கூட்டம் சேர்ந்து இருப்பதை சகஜமாக காணலாம். சிறந்த உழைப்பாளிகள் என பெருமைப்பட்டு கொண்டு முன்னே சென்றால் கொய்யாப்பழம் விற்று கொண்டிருந்தார் ஒரு சகோதரி. கிலோ 40 ரூபாய் என்றார். பழம் அழகாகவும் சுவையாகவும் இருந்தது. பழம் வாங்கி விட்டு ஒரு படம் பிடித்த போது படம் பிடித்த என் மகனுக்கு ஒரு கொய்யாப்பழம் பரிசாக அளித்தார்.
செல்லும் வழியில் 100 மீட்டருக்கு ஒரு டாஸ்மார்க்கு(பிராந்தி) கடை இருந்தது. குடிமக்களுக்கு நல்லதே. குடித்து விட்டு ஒன்றுக்கு அடிக்க முகம் கழுவ என வசதிகள் இல்லை. இதுவே நம் நாட்டின் பயணத்தின் துயரும். ஆண்களுக்கு பிரச்சனை இல்லை, நின்று கொண்டே வழி நெடுகை சிறுநீர் கழிப்பதை காணலாம். பெண்கள் பாடு தான் திண்டாட்டம். வல்லரசு, வளர்ச்சி என்பதெல்லாம் அனுபவத்தில் கேள்வியாகத் தான் இருக்கின்றது.
கொய்யா ருசியில் போய் கொண்டிருக்க பழனி வழியாக உடுமலைப்பேட்டை வந்தடைந்தோம். என்னவருக்கு அமராவதி முதலை பண்ணைக் காண ஆவல். அப்படியே 25 கிலோ மீட்டர் பயணித்து அமராவதி ராணுவபள்ளி கடந்து அமராவதி நீர்தேக்கம் வந்து அடைந்தோம். நம்மூர் மணிமுத்தூர் நீர்த்தேக்கவும் அமராவதி நீர் தேக்கவும் ஒரு தாய் இரட்டைப் பிள்ளைகள் போல் காட்சி அளித்தனர். நீர் தேக்கம் அருகில் பழம்குடி மக்கள் சிறு குடிலுகளில் வசிக்கின்றனர். காட்டின் சொந்தக்காரர்கள் காட்டருகில் ஏழைகளாக கண்டது வருத்தமாகத்தான் இருந்தது. அரசு நலன் உதவிகளை எண்ணி ஏமாற்றப்பட்டு நீர் தேக்கம் அருகில் வசிக்கும் மக்களாக இருப்பதாகவே பட்டது. டாம் மீனை பொரித்து விற்கின்றனர். ஒன்றுக்கு 20 ரூபாய். ருசி பார்த்தோம். மீனை விட மீன் முள் அதிகம். நம்மை சூழும் நாய்கள் தான் கொழுமையாக மீன் சாப்பிட்டு வளர்கின்றது.
அமராவதி முதலைப்பண்ணை உங்களை அன்புடன் வரவேற்கின்றது என தலா தலைக்கு 4 ரூபாய் மகிழுந்துக்கு 15 ரூபாய் என வசூலித்தனர். பயங்கரமான முதலைகளை பார்க்க போகின்றோம் என மனதை தைரியப்படுத்தி கொண்டு சென்றால் ஒரு வனஇலாக ஊழியர் மட்டும் பூட்டி இட்ட நுழைவு வாயில் முன் இருந்தார். மரிதையாக கேட்கலாம் என கணவர் வாகனத்தை விட்டு இறங்கி சென்றால், திரும்பி போயிட்டு ஏன் வந்து கேட்கின்றீர்கள் என்ற மறு கேள்வி கேட்டார். முதலைகள் என்னவானது என தெரியவில்லை. முதலைப் படங்களை மட்டும் கண்டு ஏமாற்றத்துடன் திரும்பினோம். காதலர்கள் சொர்க்க பூமியாக காண முடிகின்றது. வயது வித்தியாசமில்லாது பலதர காதலர்களை கண்டு மடங்கினோம்.
நீர் தேக்கத்தில் இருந்து வரும் தண்ணீரை கண்டதும் என்னவருக்கும் மகன்களுக்கும் குளிக்க ஆசை! புதிய இடம் புதிய சூழல் ரிஸ்க் எடுக்க வேண்டுமா என கேட்கும் முன் அசதி தீர குளித்து தான் வருவோம் என தாவி தண்ணீருக்குள் குதித்தனர். அங்கு குளித்து கொண்டிருந்த உள்ளூர்காரர்கள் அங்கே போகாதீர்கள் இங்கு குளியுங்கள் என அறிவுரை கூறி கொண்டிருந்தனர். உள்ளுக்குள் கோபம் என்றாலும் நான் தள்ளி நின்று அவதானித்து கொண்டிருந்தேன்.
அடுத்து எங்கள் பயணம் கோயம்பத்தூர் நோக்கி இருத்தது. நெல்லை கொடும் வெயில் இருந்து இளம் காற்று அடிக்கும் குளிர்மையான காலநிலை. அருகில் ஊட்டி மலை, வால்ப்பாறை எஸ்டேட் என ரம்மியமாக உள்ளது. நிம்மதியாக கோயம்பத்தூர் பட்டணம் வந்தடைந்தோம். அழகிய ஊர். நெல்லையை விட சுத்தமாகத்தான் உள்ளது. டவுணுக்குள் தான் விளம்பர பலகை ஆதிக்கம். சிறு ஊர்கள் தெருவுகள் கண்டு பிடிக்க வழிகாட்டி பலகைகள் இல்லை. காந்தி நகரில் அலங்கார் கிராண்டே என்ற தங்குமிடம் கண்டு பிடிக்க சுற்றி சுற்றி வந்தோம். அருமையான தங்குமிடம் ஒழுங்கு படுத்தபட்டிருந்தது..
பேராசிரியர் மணிவர்ணன் அவர்கள் தன் மாணவரும் என்னுடன் கவிதை தொகுப்பு வெளியிடும் தம்பி பிரவீன் குமாருடன் சந்திக்க வந்திருந்தார். அமைதியான, ஆர்பாட்டம் இல்லாத எளிமையான மனிதர் பேராசிரியர். கோயம்ப்த்தூர்க்காரர்களுக்குரிய பரிவில் அன்பில் "எல்லாம் சிறப்பு தானே" என விசாரித்து சென்றார்.
மாலை வெளிநாட்டில் இருந்து வரும் நண்பர்களை வரவேற்க கோயம்பத்தூர் விமானநிலையம் சென்றோம். செல்லும் வழியில் கேட்டு கேட்டு சென்று விட்டோம். நண்பர்களும் வந்து சேர்ந்தனர். குழந்தைகளை அழைத்து கொண்டு ஒரு நல்ல உணவகம் நோக்கி சென்றோம். பார்க்க வெளி தோற்றம் அழகாக இருந்தாலும், காய்ந்த சப்பாத்தி கரிந்த நாண் என உணவு தரம் சரியில்லை. நம் ஊரில் தான் இரவு அல்வா, மிச்சர் என சாப்பாட்டை கொண்டாடி சாப்பிடுவர்களோ என எண்ணி கொண்டு நல்ல உணவு சாப்பிட தெரிந்தவர்கள் நாங்கள் தானப்பா என நினைத்து கொண்டு, குடிக்க காப்பி கேட்டால் இல்லை என்று சொல்லி விட்டனர். நகரம் அமைதியாக தூங்க ஆரம்பித்து விட்டது. தங்கும் இடம் வந்து அடுத்த நாள் நிகழ்ச்சியை நினைத்து கொண்டே தூங்க ஆரம்பித்து விட்டோம்.
அடுத்த நாள் தங்கும் இடத்தில் காலை உணவு இனாமாம். அருமையான உணவு வகைகள் கிடைத்தது. வடக்கு தெற்க்கு, மேற்கு என எல்லா வகை உணவுகளும் இருந்தது. இட்லி, தோசை, சப்பாத்தி, பூரி, பிரட்-ஜாம், வைன், சாயா, காப்பி, மூன்று வகை இனிப்பு, என கம்பீரமான சாப்பாடு.
காலை 10 மணிக்கு புத்தக வெளியீடு அரங்கம் வந்து சேர்ந்தோம். அறிய பயனுள்ள நிகழ்வுகள். கவிஞர் அறிவுமதி தலைமை தாங்கினார். படைப்பாளிகள் சந்திப்பு என அருமையாக நிகழ்வுகளுடன் சென்றது. மாலை 4 மணிக்கு நிகழ்ச்சி முடிந்த பின்பு மதிய உணவு எடுத்து விட்டு என்னவரின் நண்பர் தம்பிதுரை அவர்கள் குடும்பத்தை சந்திக்க சென்றிருந்தோம். சகோதரரும் புத்தக வெளியீட்டுக்கு வந்து சிறப்பித்து என் புத்தகத்தை பெற்று சென்றிருந்தார்.
அன்பான ஒரு மகன் அருமையான மனைவி, நன்றியுள்ள நாய் என அவர் வீட்டு கீழ் தளத்தை வாடகைக்கு கொடுத்து விட்டு மாடியில் குடி இருக்கின்றார். அரசு ஊழியரான அவர் மனைவி பலகாரம் இனிப்பு அதிரசம் வாழைக்கா பச்சி என மிகவும் அருமையாக கவனித்து கொண்டார். நெல்லை பெண்களை விட மிகவும் விரைவாக பழகவும் கரிசனையுடன் விருந்தினரை கவனிக்கும் பாங்கு என்னை கவர்ந்தது. கொங்கு நாட்டு பெண்களின் சிறப்பு இதுவோ என நினைத்து கொண்டேன். மிதமாக குளிர்மையான கால-நிலைபோலவே மக்களும் மிகவும் நேசமுடன் நடந்து கொள்கின்றனர் என எண்ண தோன்றியது. நெல்லையில் விருந்து வீடு என்பது இது போல் இனிமையானதா என்பது சந்தேகமே. பலர் வீட்டு வராந்தாவை விட்டு உள்ளுக்குள் அழைக்க மாட்டார்கள். இன்னும் பல வீடுகளில் நுழைவு வாசலில் வைத்தே விடை தந்து விடுவார்கள். சரி எப்படியோ கோயம்ப்த்தூர் மக்கள் கவனிப்பு நெஞ்சார்ந்த அன்பு பொதிந்ததாக இருந்தது. எங்களை வாகனம் வரை வந்து வழி அனுப்பி வைத்தனர்.
வரும் போது காந்திநகர் வழி கண்டு பிடிப்பதில் மிகவும் சிக்கலாகி விட்டது. வழியில் கல்லூரி இளைஞர்கள் கூடி நின்று கதைத்து கொண்டிருந்தனர். வழி கேட்டதும் அண்ணா இந்த வழி போயிடுங்க ....பாத்து போங்க என கரிசனையாக சொல்லியது புல்லரிக்க வைத்தது. கோயம்பத்தூர்க்காரர்கள் மட்டும் தான் கொல்ல போகிறவர்களையும் "கொன்னுடுவேனுங்க" என மரியதையாக சொல்வார்கள் என கவிஞர் அறிவு மதி கூறிய நிகழ்வு நினைவுக்கு வந்தது.
ஞாயிறு என்பதால் இறைச்சிக்கடைகள் நிரம்பி வழிந்தன. பற்றி இறைச்சி கடையும் வழியில் கண்டேன். காலைக்கடன் தெருவில் கழிக்கும் மனிதர்கள் என தமிழக நிதம் காட்சிகள் கண்டு பாலம் கடந்து அழகிய கோயம்பத்தூர் பட்டணத்திற்க்கு விடை சொல்லி நெல்லை திரும்பினோம்.
எனக்கும் கோயம்புத்தூர் அனுபவம் உள்ளது....நம்ம ஊரை விட கோயம்புத்தூர் ஆயிரம் மடங்கு அழகு...அதை வார்த்தைகளால் விவரிக்க முடியாது....உங்கள் பகிர்வுக்கு மிக நன்றி...
ReplyDeleteநன்றி,
மலர்
http://www.tamilcomedyworld.com (100% காமெடி மட்டும் : தமிழ் காமெடி, டிவி நிகழ்சிகள், திரைப்படங்கள்)
thank u josephine
ReplyDelete