3 Aug 2012

மங்களூரில் கலாச்சார காவலர்கள் செய்தது சரியா, தவறா ?!

மங்கலூர் பெண்கள் தாக்கப்பட்ட  விவாதம் இணையத்தில் படு வேகமாக போய் கொண்டிருக்கின்றது. பலர் இது பெண்கள் மேல் ஏவப்பட்ட கொடுமை, உரிமை மீறல் என்று தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தியிருந்தாலும்; இன்னும் பலர் இந்த பெண்கள் தாக்கப்பட்டது சரியே என வாதிட்டனர். யாரும் அந்த 7 ஆண் பிள்ளைகள் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டதை பற்றி விவாதத்திற்க்கு இன்னும் எடுத்து  கொள்ளவில்லை. பெண் சங்கங்களும் தங்கள் உரிமையை பற்றி பேசி சென்றுள்ளனர்.

இந்த சம்பவத்தில் 7 ஆண்கள், 5 பெண்கள், 40 அதிகமான கலாச்சார காவலர்கள் உள்பட்டுள்ளனர்.  இது  திட்டமிடப்பட்டு நடத்தப்பட்டுள்ளதா என்றும் வினவ வேண்டியுள்ளது. மீடிய தங்கள் காமிரா கண்களுடன் உடனடியாக வந்து சேர்ந்து விட்டனர்.  எப்போதும் போல் உண்மை காவலர்கள்  சம்பவம் நடந்து முடிந்த பின்பே சம்பவ இடத்திற்க்கு வந்து மாணவர்களை காப்பாற்றியுள்ளனர்.

 பிறந்த நாள் விருந்து ஒரு உல்லாச பயணிகள் விடுதியில் ஏற்படுத்தியிருந்துள்ளனர். இது யாருடைய ஏற்பாடு என்றும் அறிய வேண்டியுள்ளது. சமீபத்தில் குடியிருப்பவர்கள் இது மாதிரியான கேளிக்கை நிகழ்ச்சிகளுக்கு இந்த வீட்டை கொடுப்பதை எதிர்த்திருந்துள்ளனர். வெறும் 12 பேர் தங்கள் பிறந்த நாள் கொண்டாட்டத்திற்கு என ஒரு தனி வீடு  தேவையாக இருந்ததா? என்றும் சிந்தித்து பார்க்க வேண்டியுள்ளது.

பிறந்த நாள் கொண்டாட வந்தவர்கள் ஏன்  கேமராவை கண்டவுடன் முகத்தை மூட வேண்டும். பிறந்த நாள் நிகழ்ச்சியில் கேக்கு வெட்டி சாப்பிடுவதற்க்கு ஏன் இந்த பயம்.  இவர்கள் பெற்றோர் அனுமதி பெற்று தானே கூடியிருப்பர்.  கொண்டாடுவதற்க்கு ஒரு வகுப்பில் இந்த 12 பேர் மட்டும் தான் இருந்தனரா  எனவும் கேட்க வேண்டியுள்ளது.

பெற்றோர் அனுமதி உண்டு எனில் ஏன் பெற்றோர் பொறுப்பற்று விடுதியில் கொண்டாட அனுமதித்தனர். பெற்றோர் மேற்பார்வையில் தங்களளுடைய ஏதாவது ஒரு   வீட்டிலே கொண்டாட அனுமதித்திருக்கலாமே. பெற்றோர் அனுமதித்தே வந்தனர் என்றால் கலாச்சார காவலர்கள் முதலில் அவர்கள் பெற்றோர்களிடம் தங்கள் வீரத்தை காட்டியிருக்க வேண்டும். 

 கலாச்சாரக் காவலர்கள் எவ்வளவு கேவலமாக அப்பெண்களை கையாளுகின்றனர். ஓட ஓட விரட்டுகின்றனர், தலை முடியை பிடித்து இழுக்கின்றனர். ஒரு பெண்ணுக்கு கன்னத்தில் அடி! மாணவனுக்கு அடி! படம் பிடிக்கும் மீடியாக்கள் கூட காப்பாற்ற முன் வரவில்லை. அவர்கள் இதை ஒளிபரப்பி தங்கள் லாபத்தை பெருக்கவே முயல்கின்றனர். முதலில் பெற்றோர், கல்லூரி நிர்வாகம் அல்லது காவத்துறையிடம் புகார் கொடுத்திருக்கலாம். இதுவெல்லாம் விடுத்து 12 இளைஞர்களை காட்டுமிராண்டித்தனத்துடன்  நடத்தியுள்ளனர்.

Deepika Padukone promotes Lafangey Parindey movie 
இவர்கள் அணிந்துள்ள உடையை பற்றி பலர் விமர்சித்திருந்தனர். தீபிகா படுகோண் மற்றும் தொலைகாட்சி, சினிமா நிகழ்ச்சியில் பங்குபெறும் நடிககைகளை எல்லாம் எந்த கலாச்சார பார்வையில் அனுமதிக்கின்றனர். தங்கள் பிள்ளைகளுக்கு  இந்த வகையார் உடை வாங்கி கொடுத்தவர்கள் அவர்கள் பெற்றோர்கள் தானே? அவர்கள் அப்பா, கூடப்பிறந்த சகோதர்களும் இவர்கள் இந்த துணிமணிகளை அணிந்திருப்பதை பார்க்க தானே செய்கின்றனர். தொலைக்காட்சியிலும் சினிமாவிலும் ஒரு ஷாட்டுக்கு வரும் உடையை தங்கள் பெண்களுக்கு வாங்கி கொடுத்து அணிவித்து அதை கண்கூடாக பார்த்து ரசிக்கும் பெற்றோர்களை விடுத்து மாணவர்களை மட்டும் குறை கூறுவது கண்டிக்க தகுந்தது. பெண்களை சமூகம் பொருளாக பார்க்கின்றது என்பதை விட பல பெற்றோர்கள் குறிப்பாக அம்மாக்கள் தங்கள் நாகரீக வெறியை பெண் குழந்தைகளுக்கு அணிவிக்கும் உடுதுணி வழியாக  வெளிப்படுத்தி வருகின்றனர். இந்த சமூகம் என்று மனிதம் மறந்து விற்பனை உலகமாக மாறியதோ அன்றே துவங்கி விட்டது கலாச்சார சீர் கேடுகளும். இதை கலாச்சார காவலர்களால் சீர் படுத்த இயலுமா. சட்டத்தை குழு குழுவாக கையிலெடுத்தால் போலிஸ் துறை எதற்க்கு சட்டம் பின்பு எதக்கு? இன்னும் சமூகத்தை புரிந்து கொள்ளாத வெறும் பெற்றோர்களின் ஆடம்பரத்தின் நீட்சிகளாக  குழந்தைகளிடம் தங்கள் வன்மத்தை இப்படி வெளிப்படுத்தியிருக்க வேண்டுமா என்றும் கேட்க தோன்றுகின்றது.

இந்த கலாச்சார காவலர்களால் பக்தி என்ற பெயரில் பெண்களை கற்பகிரகத்திலும் மற்றும் நிர்வாணப்படுத்தி அவர்கள் வாழ்கையை சீர்குலைப்பதை தடுக்க இயன்றுள்ளதா?

பொதுவாக இளைஞர்கள் என்றாலே   அவர்கள் எது செய்தாலும் தப்பாக  பார்க்க்கும் பெரும் சமூகம்.  அவர்கள் இதை தான் செய்வார்கள் என்று முன்கூட்டி ஒரு கற்பனையில் அவர்களை மோசமாக சித்திரிகரிக்கும் உலகமே இது. கல்லூரி மாணவர்களுக்கு தாங்கள் பெற்ற கல்விக்கு இணங்க  அறிவும் ஞானவும் பக்குவவும் கொண்டு வளர வேண்டும். கேமரா கண்களுக்கு பயந்தவர்கள் ஏன் தங்கள் மனசாட்சிக்கு பயப்படவில்லை.

அவர்கள் நோக்குவதெல்லாம் சமூகத்தில் நடக்கும் அக்கிரமம், அசிங்கங்கள். பார்லிமென்றில் நீலப்படம் நோக்கும் தலைவர், ஆசிரியர்களின் மோசமான செய்திகள், இவர்கள் மிக அருகில் இருந்து கவனிக்கும் இவர்கள் பெற்றோர்களின் பித்தலாட்ட வாழ்க்கை. இதை கண்டு வளரும் இளைஞர்களை 40 பேர் தாக்குவது அதை படம் பிடிக்கும் ஊடகம் என ரொம்ப மோசமாக போய் கொண்டிருக்கின்றது நம் சமூகம். 

ஆண் நண்பர்களுடன் வீடு எடுத்து கொண்டாடுவது தானா பெண்கள் உரிமைகள் என்ற கேள்வியும் எழாது இல்லை! பெண்கள் ஆக்கபூர்வமாக சிந்தித்து செயல்பட முன் வரவேண்டியுள்ளது. இப்படி ஓடி ஒளிக்கும் நிலைக்கு செல்வதல்ல பெண் உரிமை!. "உண்மை நிலையே விடுதலையாகும்". பல வீரப்பெண்கள் வாழ்ந்த நாட்டில் தலையணை உதவியுடன் முகம் மறைத்து தங்களை காப்பாற்ற நினைத்த பெண்களை என்ன சொல்வது?

 தாக்கப்பட்ட ஆண்களை பற்றி யாரும் கவலை கொள்ளவில்லை. அவர்கள் உரிமையை பற்றி யாரும் ஏன் முன் வைக்கவில்லை என  இன்ன பல கேள்விகள் எழாது இல்லை.

ஆனால் என் குழந்தைகள் பத்தரை மாற்று தங்கங்கள் அவர்களை தண்டித்த கலாச்சார காவலர்களை தண்டிக்க வேண்டும் என ஒரு பெற்றோராவது குரல் கொடுத்துள்ளனரா அல்லது காவல்துறையிடம் புகார் கொடுத்துள்ளனரே என்றும் நோக்க வேண்டியுள்ளது.



1 comment:

  1. Sowndra Rajan Palanisamy · Chief Technician come Manager(For Socks Dept) at Cairo Cotton CenterAugust 04, 2012 6:32 pm

    Must Read This Guys, Police Done Good Job, We no Need Western Culture All Parents Should Avoid Like This Incident , This Is Mistaken 1oo% Parents. So They Don't Have Any Rights To Complain About Police, The Dresses Very Ugly...

    ReplyDelete