15 Apr 2011

டச்சு கோட்டை-புலியூர்க்குறிச்சி





குழந்தைகளை  பள்ளி அனுப்பி விட்ட பின்பு மாலை வரும் வரை அம்மாக்கள் தனிமையில் துன்புறுவது  போலவே, விடுமுறை கிடைத்த பின்பும்  குழந்தைகளை சமாளிக்கவும் சிரமம் கொள்ள வேண்டி வருகின்றது. 


 
குழந்தைகள் மகிழ்விக்க பயணமே சிறந்த வழியாக பட்டது.  முன்பு பயணம் பெரியதொரு பிரச்சனையாகவே இருந்திருக்கவில்லை.  எப்போது பயணம் என்று ஆசை வருகின்றதோ எங்கள் இருச் சக்கிர வாகனத்திற்க்கு பெட்ரோல் நிரைப்புவது வாகனத்தை பிடித்த திசைக்கு திருப்புவதுமாக இருந்துள்ளது எங்கள் பயணம்.  ஆனால் இன்று குழந்தைகள்  வளர்ந்து விட்ட  நிலையில் வாடகை கார் பிடித்து பயணம் தொடரும் சூழலுக்கு தள்ளப் பட்டோம்.



நாங்கள் அனைவரும்காலை ஏழு மணிக்கு காரில் இடம் பிடித்து விட்டோம் .   என்னவர் ஓட்டுனர் அருகில்,  நான் பின்னால் இருக்கையில் ஜன்னல் ஓரமாக இடம் பிடிக்கலாம் என்றால் இரு வாரிசுகளும்  போட்டி போட்டு கொண்டு சன்னல் பக்கம் இடம் பிடித்து விட்டதால் எனக்கு  நடு பக்கம் இடம் கொடுத்தனர்.  அவர்களுக்குள் சண்டை வரும் போது இரு பக்கமிருந்தும் இடிப்பது, தூக்கம் வரும் வேளையில் மடியில் படுத்து தூங்குவதுமாக எங்கள் ராஜ்ஜியம்;  குஜ்ஜலாலா என்ற பெருமிததுடன் வந்து கொண்டிருந்தனர்.   பேருந்தில் பயணிக்கும் போல் சுவாரசியம் நிரம்பியதாக எனக்கு  தோன்ற வில்லை.  இருசக்கிர வாகனத்தில் கடந்து போகின்றவர்கள் கொஞ்சம் முறைத்து பார்த்து கொண்டு கடந்து சென்றது போல் தோன்றியது.  அதே போன்று பேருந்து பயணிகள்  பள்ளத்தில் பார்ப்பது போன்று கார் பக்கம் தன் பார்வையை  விட்டு  சென்று கொண்டிருந்தனர்.



ஓட்டுனரும் என்னவரும் பேசி அறிமுகமாகி கொண்டிருந்தனர்.  அப்போது  ஓட்டுனருக்கு இன்சுரன்ஸ் முகவரிடமிருந்து அலை பேசியில் அழைப்புவந்தது .   அவரும் சாவகாசமாக  கதைத்து கொண்டிருந்தார்.  நானோ, நமக்கு இன்சுரன்ஸ் கிடைக்க வைத்து விடுவாரோ என்று பயத்துடன் எப்போது அலைபெசியை துண்டிப்பார் என்று நோக்கி கொண்டிருந்தேன். வழியில் இரண்டு வாகனங்கள் விபத்தி சிக்கி கிடந்தது.  அதில் ஒன்று முட்டை லாரி என்பதால் துற் நாற்றம் ½ கி.மீஅளவுக்கு எங்களை பின் தொடர்ந்து வந்து கொண்டே இருந்தது.  பின்பு ஓட்டுனர் ஒரு விபத்தை பற்றி கதைக்க என்னவர் அவர் கண்ட இன்னொரு  விபத்தை பற்றி கதைக்க என எரிச்சல் கொள்ள வைத்து கொண்டே வந்தனர்.  வழியில் ஒரு வேளான்கன்னி மாதாவின் ஆலயத்தில் ஜெபித்து விட்டு பின்பு பயணம் ஆரம்பித்தோம்.


கொஞ்சம் நேரத்தில்  தலைவலியும் ஆரம்பம் ஆகி விட்டது.  ஒரு பெண்  நொங்கு வியாபாரி தன் காலை வியாபாரத்தை ஆரம்பித்திருந்தார்.   தண்ணீர் குடமுடன்  போய் கொண்டிருக்கும் பக்கத்து வீட்டுகாரரை அழைத்து அண்ணா கூட்டம் கூடும்போது நொங்கை கொஞ்சம் கவனித்து தர வேண்டும்.  அவரு தம்பிக்கு பூவைக்க சென்றுள்ளார் என்று நாகர்கோயில் தமிழில் வேண்டிகொண்டார்.  பின்பு தன் கையில் இருக்கும் துண்டை எடுத்து நொங்கின் மேல் படிந்த தூசியை தட்டுவதும் மறு கையில் அலைபேசியில் கடை நிலவரத்தை தன் கணவரிடம் பகிர்ந்து கொண்டிருப்பதுமாக பரபரப்பாக  செயல்பட்டு கொண்டிருந்தார்.  நொங்கு ஜூசின்  பணத்தை கொடுத்த போது பய பக்தியாக கண்ணில் ஒத்தி கல்லா பெட்டியில் இட்டு விட்டு  தன் வேலையில் மூழ்குவது தெரிந்தது.   




அதன் பக்கத்தில் ஒரு இந்து ஆலயம் இருந்தது.  காலை நேரம் என்பதால் வேண்டுதலை ஆண்வரிடம் போட்டு விட்டு சென்று கொண்டிருந்தனர் மக்கள்.  எதிர்பக்கம் கல்லில் ஒரு சாமியார் காவி உடையுடன் பூமியை நோக்கி சிந்தையில் ஆழ்ந்திருப்பதும் தெரிந்தது!! நொங்கு குடித்த உற்சாகத்தில் ஓட்டுனரும் தன் பேச்சை அரசியல் பக்கம் திருப்பி வேகமாக கார்யை பிலியூர்க்குறிச்சி உதயகிரி கோட்டை பக்கம் திருப்பினார்.




கொஞ்சம் நேரத்தில் புலியூர்குறிச்சி வந்து சேர்ந்தோம்.http://en.wikipedia.org/wiki/Udayagiri_Fort 1741-44 ல் மார்த்தாண்ட மன்னன் காலத்தில் டச்சு தளபதி டிலை நோயித் த்லைமையில்  கட்டிய கோட்டைக்கு அதன் சுற்றுமுள்ள அடர்ந்த காடுகள் மேலும் அழகு சேர்த்தது.  அதன் மேல் பக்கம் இருக்கும் குகைப் பாதை வழியாக சென்றால் பத்மநாப அரண்மனையை சென்று விடலாம்   என்று எழுதப் பட்டிருந்தது.  காடுகளை விரும்புவர்களுக்கு தகுந்த இடம். வெயில் வரும் முன் சென்று விட்டால் கிளிகளின் ஓசை கேட்டு கொண்டே  வெகு நேரம் நடக்கலாம்.  நாங்கள் முதல் பயணிகள் என்பதால்  மயான அமைதியான சூழலின் கொஞ்சம் பயம் இருந்தால் கூட காட்டின் ராஜாக்கள் போன்று   அடர்ந்த காடுகள்  ஊடாக டச்சு படைவீரர்களின் கல்லறை நோக்கி நடந்து சென்றோம்.  பழம் பெரும் தமிழில் எழுதியிருந்த கல்வெட்டுகள் கல்லறையில் காணப்பட்டது. ஆங்கிலேயர்  காலத்தில் கட்டிய கோட்டை மிடுக்காக காட்சி அளித்து     கொண்டிருந்தது.  அழகாக சுத்தமாக   பராமரிக்கின்றனர். தற்போது வெயில் என்பதால் மான் போன்ற மிருகங்களை காண இயலவில்லை 
குழந்தைகளுக்கு விளையாட என்று மரத்தில் ஆன வீடு, கயற்றால்   மரத்தில் பிணைக்கப்பட்ட ஊஞ்சல், கயிறு பாலம் என பொழுது போக்கு அம்சவும் இருந்தது. 5ரூபாய் செலுத்தி விளையாட பயண்படுத்தலாம். மக்கள் நடந்து தளரும் போது ஓய்வு எடுக்க என சிறு மண்டபங்கள்  உள்ளது. காதலர்கள் தங்கள் காதல் சுவராக பயன்படுத்தி கிறுக்கி வைத்துள்ளர்.


கோட்டைக்குள் செல்ல அனுமதிக் கட்டணம் 5 ரூபாய். கோட்டை வாசலில் வாகனம் நிறுத்த காருக்கு 30 ரூபாய் இரு சக்கிர வாகனத்திற்க்கு 10 ரூபாய் என கட்டண வேட்டை நடைபெறுகின்றது.  பெண்களே அடியாள் போன்று பின் தொடர்ந்து வந்து பணம் கேட்டு  மிரட்டல் விடுக்கின்றனர். வாகனங்களை நிறுத்த என ஒரு ஓலைக் கூரை கூட இல்லை. ஆகாயமே கூரை என குப்பைக்கு மேல் நிறுத்தும் வாகனத்திற்க்கு ஏன் கட்டணம் என்று தான் புரியாது இருந்தது. 
அடுத்து  பத்மநாப அரண்மனையை நோக்கி கார் பாய்ந்தது. என்னவரின் கனவு கன்னியாக இருந்த ஸ்ரீதேவி நடித்த படத்திலுள்ள பாடல் சிப்பியிருக்குது முத்தும் இருக்குது …பாட்டு ஒலித்து கொண்டிருந்தது.  தந்தன தந்தா என்று என்னவர் தாளம்  இட்ட போது தான் அவரும் பாட்டுடன் தான் பயணிக்கின்றார் என்று நினைத்து கொண்டு சன்னல் வெளியே நோக்கிய போது வழி எங்கும்  பூத்து குலுங்கும் மரங்கள் , சரம் சரமாக காய்த்து கிடக்கும் மாமரம், வேண்டும் என்றால் வேரிலும் காய்ப்பேன் என்று  தொங்கும் பலா மரங்கள் என நாகர்கோயில் செடி கொடிகளின் ராணியாக காட்சியளித்தது.
சரி நாம் இனி பத்மநாப அரண்மனை வளாகத்தில் வைத்து சந்திப்போம். வரட்டுமா!!

2 comments:

  1. அலைபேசித் தொந்தரவு பற்றிய மெல்லிய அங்கதம் சொட்டஎழுதப்பட்ட -டிரைவருடன் ,உங்களவரையும் விட்டுவைக்கவில்லை;)- கருத்துப்பதிவு!...

    ReplyDelete
  2. மிக அருமை. குழந்தைகளோடு பல ஊர்களுக்கு பயணம் செய்யுங்கள்.
    புத்தகங்கள், கவிதைகள், சினிமாக்கள் கொடுக்க முடியாத பாடங்களை பயணங்கள் மிக எளிதாக ஆழமாக கொடுக்கும்

    ReplyDelete