15 Jan 2011

விபத்து யாரால்? சவாலான சபரிமலை பயணம்!


துயரான நாளாகி விட்டது !   எனது பிறந்த ஊர் வண்டிபெரியார் அருகில் நடந்த மிக கொடுமையான விபத்து செய்தியே அது.  இன்று இரவு 8.30 மணிக்கு நடந்துள்ளது,100 பேருக்கு மேல் இறந்ததாகவும் அறிவித்துள்ளனர்.   ஒரு ஜீப் ஆட்கள் கூட்டத்தில் புகுந்ததால் மக்கள் நெரிசலில் சிக்கி இறந்ததாகவும் கூறியுள்ளனர்.

ஐயப்பா சாமிமார்  சீசன் மிகவும் மகிழ்ச்சியளிக்கும்  எங்கள் பகுதி மக்களுக்கு. அங்கு வசிக்கும் மக்கள் ஒரு எதிர் பார்ப்புடனே ஒவ்வொரு வருடவும் எதிர்நோக்கி காத்திருப்போம் இச்சீஸனை. ஏன் என்றால்   எங்கள் பகுதி மக்கள் பல விதத்தில் வருமானம் தருவது தான்!  எங்கள் பகுதி மலை பிரதேசம் என்பதால் எப்போதும் ஆள் அரவம் அற்றே இருக்கும். மூணார் போன்று உல்லாச பயணிகளின் சொர்கபுரியாகவும் விளம்பரம் பெற்று  இருந்ததில்லை.   சில வெள்ளகாரர்கள் மட்டுமே எங்கள் பிரதேசத்திற்க்கு வருவர்.  அருகில் இருக்கும் தமிழகம் சேர்ந்த பயணிகள் கூட தேக்கடி வரை வந்து விட்டு திரும்பி விடுவர். 

சபரிமலை பயனம் மேற்கொள்ளும் போது எருமேலி வழியை தேர்வு செய்யாத சாமியார்கள் தான் எங்கள் பகுதியே தேர்வு செய்வர் தங்கள் பயணத்திற்கு என . உணவில் இருந்து தலைக்கு தேய்க்கும் எண்ணை, சோப்பு அவர்கள் விரும்பும் குருமிளகு, தேயிலை, ஏலகாய்  விற்கும் கடைகள் இந்த சீசனில் காளான் செடிபோல் முளைத்து வரும்.  இதிலும் 5 ரூபாய்க்கும் 10 ரூபாய்க்கும் ஜீப் ஜீப் என கூவி அழைத்து பயணிகளை ஏற்றி செல்லும் சாரதிகள் சாமிமார் சீஸனில் கொண்டாட்டம் தான். ஒரு ஜீப்புள்ளவன் 2 ஜீப் வாங்கும் அளவுக்கு சம்பாதித்து விடுவார்கள். அதுவரை விற்ற பொருட்கள் எல்லாம் பதின் மடங்கு லாபத்தில் விற்பனை நடத்து கொண்டு இருக்கும். , பக்தி என குமியும் தமிழகம், ஆந்திரா, கர்னாடகா சாமிகள் எங்கள் பொருள் வாங்க வந்த வாடிக்கையாளர்களாகவே தெரிவார்கள் எங்கள் பகுதி மக்களுக்கு!

எல்லா வருடமும் ஒரு சாமியாராவது எங்கள் பெரியார் நதியால் காவு வாங்கபடுவார். அழகான நதியில் குளிக்க இறங்கும் சாமிகள் வெளியூர் என்பதால் தண்ணீரிலுள்ள சுழியை தெரிந்து கொள்ள தவறி விடுவர்.  உள்ளூர் மக்கள் நதியில் முனி இருப்பதாகவும் காலைபிடித்து இழுத்து ஆழத்திற்கு இழுத்து விடுவதாகவும் கதைப்பதை கேட்டுள்ளோம். 

இருப்பினும் இன்று வரை இது போல் கொடூரமான விபத்து நிகழ்ந்ததாக கேள்வி பட்டதில்லை . ஒரு முறை தமிழக சாமிமார் வந்து திரும்பிய பேருந்து குமளிக்கும் லோயர்கேம்புக்கும் இடையிலுள்ள பாதாளத்தில் விழுந்து பேருந்தில் இருந்த பெரும் பகுதி சாமியார்கள் இறந்துள்ளனர். அதே போல் ஒரு முறை பக்தர்களின் காணிக்கையான தேங்காய்-நெய் கொண்டு எரியும் தீயில் விழுந்து சில பக்தர்கள் மரணத்தை சென்றடைந்துள்ளனர்.

இன்று விபத்து நடந்த பகுதி மின் விளக்குகள் இல்லாததும், தற்காப்பு வசதியற்ற, சிறப்பாக காவல்துறை உதவி அற்ற பகுதியாகவே இருந்துள்ளது. இதிலும் எடுத்துகொள்ள படவேண்டியது மகர ஜோதிக்கென 2 லட்சம் சாமியார்கள் சங்கமித்திருக்கும் இடத்தில் ஒரு ஆம்புலன்ஸ் தான் இருந்துள்ள தாம்? பொதுவாக எங்கள் பகுதியின் தரமான மருத்துவ வசதி கூட இல்லை. எப்போதும் 3 மணிநேரம் பயணம் சென்று கோட்டயம் என்ற பட்டணத்தை நோக்கியே செல்ல வேண்டியுள்ளது. மேலும் நெளிவும் குறுகலுமான ரோடு வழியுள்ள பயணம் எப்போதும் சவாலானதே!


கடந்த ஒரு மாதமாக கேரளா ஊடகம் ஏஷிய நெட், அமிர்தா தொலைகாட்சிகள் போன்றவை ரோட்டின் நிலைபற்றியும் , சாமியார்களுக்கு செய்து கொடுக்கப்படவேண்டிய வசதிகளின் குறைபாடுகளை பற்றியும் கதறி சொல்லிகொண்டு தான் இருந்தனர். இருந்தும் தேவையான பாதுகாப்பு வசதி கொடுக்காது கேரளா அரசு பல உயிர்களை பறித்து விட்டது. கேரளா அரசு வாய் சவுடாலில் முந்தும் அளவுக்கு செயலில் இல்லை என்பதே இது மறுபடியும் எடுத்து காட்டுகின்றது. 


தேவஸியம் போர்டு என்ற குழு தான் சபரிமலை பயணிகளுக்கு வேண்டிய வசதி செய்து கொடுக்க அரசால் நிறுவபட்ட சட்டபூர்வமான குழு. இவர்கள் சாமிகளுக்கு விற்கும் நைவேதியத்தில் இருந்தே ஊழலில் முங்கி நீச்சல் அடிப்பதை கடந்த சில நாட்களாக ஊடகம் சொல்லி கொண்டே தான் இருந்தது தமிழக ஊடகம் போல் அல்லாது ஆக்கபூர்வமான கருத்துரையாடல்கள் கொண்ட கேரளா ஊடகம், சாமிமார்கள் சிறப்பாக வெளிமாநில பக்தர்கள் எதிர் கொள்ளும் துயரம் பற்றி சொல்லி கொண்டே இருந்தும் அரசின் மெத்தன போக்கால் இவ்வளவு பெரிய விபத்துக்கு தளம்  அமைத்து கொடுத்து விட்டனர் என எண்ணும் போது அரசின் கையாலக தன்மையை எண்ணி சினம் கொள்ளாது   வேறு வழியில்லை.

கேரளாகாரர்கள் அறிவாளிகள் பழக இனிமையானவர்கள் பார்க்க அழகானவர்கள் என பல சிறப்பு இருந்தாலும் அவர்கள் மட்டும் கடவுளின் தேசத்தின் பிள்ளைகள் என்ற ஒரு அகங்காரவும் உண்டு.  மற்றவர்களின் துன்பத்தை கூட ஏதாவது தத்துவம் பேசி மழுப்பி விடுவார்கள்.

பூமி பந்தில் சிறப்பான, ஏன் கடவுள் அருகாமையுள்ள இடமாக சபரிமலை இருக்கலாம். ஒரு சீஸனில் மட்டும் 133 கோடி ரூபாய் லாபம் இட்டும் தலமாக உயர்ந்துள்ளது.  ஆனால் பக்தி என்ற பெயரில் ‘மகரஜோதி’ என்ற பெயரில் செய்யும் தில்லு முல்லு கணக்கில் எடுக்க தவறுகின்றனர் !  நான் பள்ளியில் 7 வது வகுப்பு படிக்கு வேளையில் காங்கிரஸ் ஆட்சி நாட்களில் கம்னிஸ்டுகள், ஊடகவியாளர்களையும் அழைத்து சென்று மகர ஜோதி என்ற மகா சம்பவத்தின் ரகசியத்தை வெளிப்படுத்தியுருந்தனர். தற்போது கேரளாவின் வருமானத்திற்க்கு பெரும் பங்கு இது சார்ந்த நம்பிக்கை வகிப்பதால் சிலவற்றை "கண்ணை மூடி பூனை பால் குடிப்பதுபோல்" இருந்து கொள்கின்றனர். பொதிகை தொலைகாட்சியில் உயிரைவிடுத்து தற்சமய ஒளிபரப்பில் சிலர் உணர்ச்சி வசபடுவதை காணும் போது அழுவதா சிரிப்பதா நாம் அறியாது நிற்கும் சூழலுக்கு தள்ளபடுகின்றோம். பக்தி சம்பந்தமான கருத்துக்கள் மற்றோர் மனதை பெரிதும் துன்பப்படுத்திவிடும் என எண்ணும் போது துணிவாக சில சம்பவங்களை சொல்லவும் ஆலோசனை செய்ய வேண்டியுள்ளது. இருப்பினும் நம் பாதுகாப்பு நம் கையில் மட்டும் அல்ல என உணரும் போது சில தற்காப்புக்கள் பக்த பயணம் மேற்கொள்ளுபவர்கள் எடுத்தல் நலமாக இருக்கும்.

மகரஜோதி அன்றே அங்கு இருக்க வேண்டும் என பிடிவாதம் கொள்ளாது கடவுளுக்கு உகுந்த விதத்தில் பக்தியான பயணமாக மேற்கொள்ள பக்தர்கள் முன் வர வேண்டும். மேற்கு தொடர்ச்சி மலையின் மேலுள்ள பயணம், உலகில் உயரமான பிரதேசங்களின் மேலுள்ள பயணம் சுத்தமான காற்று, வெள்ளம், வனமத்தியிலுள்ள பயணம் என எல்லா விதத்திலும் ரசிச்சு மேற்கொள்ளும் பயணம் இனிதாகவும் முடிய வேண்டும்.

ஐய்யப்ப ஆலய தலைமை குருக்கள் சினிமா நடிகை ஜெயமாலாவுடன் சேர்ந்து அடித்த கோமாளி கூத்து நாம் தெரிந்தே. இந்த விபத்து சோகம் கூட பலரில் பல விதமாக பிரதிபலிப்பதை நாம் காண உள்ளோம். பழுத்த பக்கதர்கள் என சொல்லி கொள்பவர்கள் ஐய்யப்பா சாமிக்கு பிடிக்காத பெண்கள் வந்தது அல்லது அவருக்கு பிடித்தமான காடுகளை அழித்து சிமின்று கட்டிடம் கட்டியது என சொல்ல போகிறார்கள். கடவுள் இல்லை என கூறுபவர்கள் ஒரு படி மேலை போய் ஐய்யப்பனிடமே கேள்வி வைப்பார்கள். எதிர் கட்சியோ, ஆளும் கட்சியின் அசட்டுதனம் நாங்க இருந்தா எல்லாம் நல்லபடி சென்றிருக்கும் என கதை விடுவார்கள். பாதிக்க பட்ட குடும்பங்களிலுள்ள ஒவ்வொரு தாயும், மனைவியும், பெற்றோரும், குழந்தைகள் கடைசியாக தான் தெரிவார்கள் என்பதே துர்பாக்கியமான உண்மை!!!!

12 Jan 2011

பள்ளிபடிப்புக்கு ஆப்பு வைக்கும் அரசு…..

தமிழக அரசு சமச்சீர் கல்வி என்ற பெயரில் புதிய பாடத்திட்டம் அறிமுகபடுத்தியுள்ளது.என்னுடைய சகோதரி மகன்  இத்திட்டத்தில் மாட்டியுள்ளான். இத்திட்டத்தின் கீழ்உள்ள பாடத்திட்டம்  கேரளா மற்றும் கர்னாடகா  மாநில பாடத்திட்டங்களை விட தரம் அற்று இருப்பதாக  கூறுகின்றனர்.  கல்வி தரம்  எல்லா மாநிலங்களிலும் சமச்சீர் பெற்றிருக்க வேண்டும் . இவ்விதம் உள்ள சீர் திருத்தால் நம் மாநில மாணவர்கள் தேசிய அளவில்  தரம் தாழ்த்த படும் சூழல் உள்ளது. உலகமயமாக்கல்  சூழல் கல்வி மட்டும் கல் யுகத்தை நோக்கீ சென்று கொண்டுருக்கின்றது. ஏற்கனவே தமிழ்நாடு  SSLC கேரளா SSLC  க்கு சமமாக மதிப்பது கிடையாது. நமது மாணவர்ளுக்கு பட்டபடிப்பு முடித்திருந்தால் கூட வங்கி க்கு சென்றால் ஒரு படிவம் வாசித்து நிரப்ப தெரிவது கிடையாது, பிழை இல்லாது எழுத தெரிவது கிடையாது ஏன்  ஒழுங்காக ஆங்கிலம் போகட்டும் தமிழில்  கூட பேச தயங்குகின்றனர்.(கடலையல்லா-loose talk).

ஆசிரியர்களின் தரத்தை உயர்த்தி தரமான கல்வி தருவதை விடுத்து மாணவர்களின் எதிர்காலத்தையே வீணடிக்கின்றனர். தனியார் பள்ளிகளில் ஆசிரியர்கள் பெறும் ஊதியம் ரு 1500  துவங்கி 4000 த்துக்கு உள்ளாகவே.கொத்தனார் (400* 30) கூட இவர்களை விட பல மடங்கு ஊதியம் பெருகின்றனர். தற்போது அரசு பள்ளி ஆசிரியரின் ஊதியத்தை கணக்கிட்டு  தனியார் பள்ளி ஆசிரியர்கள் தங்கள் கற்று கொடுக்கும் ஆற்றலை குறைத்து ஏனோ தானோ என்று கற்று கொடுக்க ஆரம்பித்து விட்டார்கள். தனியார் பள்ளி  மாணவர்களும் tution போய் தான் தங்கள் படிப்பை சரிபடுத்திகொள்கின்றனர்.
 tதுவக்கபள்ளீ படிப்புக்கு  ஒரூ வருடத்திற்க்கு  குறைந்தது 20 ஆயிரம்  ரூபாய்  கொடுக்க நேரிடுகின்றது.  பள்ளி வாகன கட்டணமும்  அசுரனை போன்றுள்ளது.
 அரசு பள்ளிக்கு அனுப்பலாம் என்றால் ஒரு வகுப்பில் 100க்கும் அதிகம் மாணவர்கள், ஆசிரியர்கள்( ஆண் பெண் இருபாலரும்) வகுப்பறையே விட பக்கத்து தேனிர் கடை மற்றும் அரட்டை அரங்த்தில் காலம் தள்ளுகின்றனர்.இன்னும் சில  ஆசிரியைகள் தங்கள் தலையில் உள்ள பேன் எடுக்கவும் மாணவிகளையே பயண்படுத்துகின்றனர். பள்ளி வளாகம், கழிப்பறை எங்கு செல்லினும் சுத்தம் பராமரிப்பது கிடையாது.ப்ள்ளிக்கு தேவையான தண்ணீர்  எடுப்பதற்க்கும் மாணவர்களையே பயன்படுத்துகின்றனர்.
இதில் பணக்கார வீட்டு குழந்தைகள், அரசு அதிகாரிகளின் குழந்தைகள் central board ல் சேர்க்க ஆரம்பித்து விட்டனர். ஆக   சமச்சீர் கல்வியில் படித்து படித்த  ஏழைகளாக தமிழ் நாட்டுக்குள்ளயே இருக்க  வேண்டியது தான்.http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=9413:2010-06-06-19-51-35&catid=1126:10&Itemid=393

தில்லியில் படிக்கும் ராமதாஸ் பேரபிள்ளைகள் வெளிநாடுகளில் படித்த கலாநிதி சகோதர்கள் இருக்கும் போது ந்மக்கு ஏன் கவலை.கல்வி தந்தையர்களுக்கு வாழ்வு அளித்து விட்டு மானாட மயிலாட கண்டு நம் கவலையை களையுவோம். இத்ற்க்கு ஒரே வழி கல்வியை மத்திய அரசின் திட்டத்துக்கு கீழ் கொண்டு வர வேண்டும்.http://www.blogger.com/post-edit.g?blogID=8803242748745605782&postID=508094286872031209

26 Dec 2010

என் பொண்ணு வயசுக்கு வந்துட்டா!!!!





















இன்று பக்கத்து வீட்டு பூர்ணிமாவின்  பூப் புனித விழா வுக்கு சென்றிருந்தோம்.  சிறு பெண் என்பதை விட குழந்தையாக இருந்தாள்.  அவளுக்கு அவளை விட கனமான மாலை அணிவித்து கை நிறைய வளையல்கள் 10 விரலுக்கும் 20 க்கு மேல் மோதிரங்கள், கழுத்து தெரியாத வண்ணம் தங்க கல்லு மாலைகள், ஒட்டியாணம் என அணிவித்து அதிலும் சிறப்பாக ஒரு சேலையை உடுத்தி அல்ல சுற்றி, முகத்தில் சந்தனம் பூசி அதன் நடுவில் ஒரு பெரிய குங்கும் பொட்டு இட்டு அமர வைத்திருந்தனர்.

 
உறவினர்கள், பெற்றோர் நண்பர்கள் என வரிசை கட்டி வீடியோவுக்கு தலைகாட்டி பணத்தை சாட்சியத்துடன் கொடுத்து செல்கின்றனர். சே, சே என அலுத்து கொண்டு எப்படா தப்பிபோம் என உதட்டை பிதற்றி கொண்டு எரிச்சலுடன்  நின்று கொண்டிருந்தாள் பூர்ணிமா.  அவள் தோழர்கள் வந்தவுடன் தலையை தட்டி விளையாடுகின்றாள், முகத்தில் அவளறியாது சிரிப்பு கொப்பளித்து கொண்டு வருகின்றது.  குழந்தையின் அம்மா ஒட்டியாணம் அணிந்து குழந்தைக்கு விஷேசமா அல்லது அம்மாவுக்கா என தோன்றும் விதம் அழகாக தோரணையாக வீடியோவுக்கு  நின்று கொண்டிருந்தார்.

 
ஒவ்வொரு நிகழ்சிக்கும் ஒரு அர்த்தம் கற்பிப்பது போல் இந்த நிகழ்சிக்கும் என சில கதைகள் சொல்லத்தான் செய்கின்றார்கள். ஒரு நண்பி சொல்லி கொண்டிருந்தார் இந்த நிகழ்ச்சி வச்சா தான் வரன் வருவார்களாம்!  பெண் படிப்பது 6 ம் வகுப்பில்!  சிரிப்பு தான் வந்தது எனக்கு. பழைய காலங்களில் பெரும்வாரியாக பெண் பெரியவள் ஆவது 9,10 வகுப்பு படிக்கும் போது தான் நடக்கும்.  பெண்களின் படிப்பை விட வரன் பார்க்கும் கடமை உணர்வுள்ள பெற்றோர்கள் படிப்புக்கு முழுக்கு போட்டு விட்டு முறை மாமனுக்கு திருமணம் செய்து கொடுக்கும் காலம் அது.

 



இது மனித உடல் வளர்ச்சியின் ஒரு பாகம் என்பதாக இருக்கும் போது ஏன் பெண்களுக்கு மட்டும் கொண்டாடுகின்றனர்.   ஆண்கள் வயதிற்க்கு வரும் நிகழ்ச்சியை ஏன் கொண்டாடுவதில்லை என கேட்டு கொண்டேன்.  மாலா அக்கா மகன் மோகனுக்கும் 12 வயது இருக்கும்.   குரல் மாறி மூக்கு பக்கம் மீசை எட்டி பார்க்க ஆரம்பித்து விட்டது. . அதும் சந்தோஷமான நிகழ்வு தானே ஏன் கொண்டாடவில்லை என கேட்டு கொண்டேன். மனிதன் கருவில் உருவாகுவதில் இருந்தே அவனுடைய வளர்ச்சியும் பல கட்டமாக நடைபெற்று கொண்டுதான் இருக்கின்றது.  பெரியவள் ஆகின்றாள் என்பதே அவள் இனப் பெருக்கத்திற்க்கு தயார் ஆகி விட்டார் என்பது மட்டுமே.  இதற்க்கு என ஊராரை அழைத்து சொல்ல தான் வேண்டுமா? இப்படி கேள்விகள் நிறையவே வந்தது.

 
  பூர்ணிமா அம்மா தான் 
மண்டபம் நிறைந்து நின்றார். என் கண் முழுக்க அவர் முடி அலங்காரத்தில் இருந்தது. இடுப்பில் அணிந்திருக்கும் ஒட்டியாணம் இன்னும் என்னை ரொம்ப கவர்ந்தது. பூர்ணிமா அப்பாவுடன் நாணத்தில் போட்டோவுக்கு முகம் காட்டுவதிலே மும்மரமாக இருந்தார். ஏனோ அவ அப்பா ரொம்பவும்  வெட்கத்தில் நெளிவது  பல பொழுதும் தெரிந்தது.
 
பூர்ணிமாவுக்கு கடந்த வாரமாக  சத்தான ஆகாரம் கிடைத்ததோ தெரியவில்லை. உடல் சுகாதாரம் பற்றியுள்ள  வழிமுறைகள் சொல்லி கொடுத்தார்களோ என்னமோ. நேற்று வரை தெருவில் சிறு பெண்ணாக விளையாடி கொண்டிருப்பவளுக்கு அவளுக்கே பொருந்தாத ஆடை அணிகலங்கள் அணிவித்து பதட்டமான, நெருக்கடியான சூழலில் நிற்கவைத்துள்ளது மட்டும் தெரிந்தது. சில வயதான கிழவி இப்போதை தங்கள் மனம் போன போக்கில் கருத்தை அள்ளி வீச ஆரம்பித்து விட்டனர்.நல்ல காலம் நேரம் பார்த்ததில் அவள் அப்பாவுக்கு வியாபாரத்தில் ஏற்முகம் தானாம்!   
 
இனி தமிழ் சினிமா பார்க்க பார்க்க  ஒரு சடங்கு நிகழ்ச்சியை வைத்து
பொல்லாத காதல் கத்திரிக்கா என கற்பனையில் பறக்க போகிறாள் என்று மட்டும் எனக்கு விளங்கியது.  முன் வாசல் பக்கவாட்டில் உட்கார வைத்து வரிசையாக பலர் போய் தண்ணீரை குடம் குடமாக ஊற்றுவது தான் எனக்கு ரொம்ப நெருடலான நிகழ்ச்சியாக இருந்தது. தாய் மாமன் பொண்டாட்டி என்று பூர்ணிமா அத்தை மல்லிகா அடித்த காமடி என்ற கெட்ட பேச்சு   கொஞ்சம் நெளிய வைப்பதாக தான்  இருந்தது. இதில் யார் யாரோ வந்து நெத்தியில் சந்தனம் வைத்து கொண்டிருந்தனர்.  குடும்ப சண்டையால் நெருங்கிய உறவினர்களை அழைக்கவில்லையாம்!

 

இதிலும் அக்குழந்தையின்  உறவினர்கள் , அம்மாவின் நட்பு வட்டாரம் என சம்பந்தம் இல்லாத யார் யாரோ ஒழுக்கம் சொல்லி கொடுக்க ஆரம்பித்து விடுவார்கள்.  அடங்கி இரு, ஓடாதே, பேசாதே, பார்க்காதே என ஆயிரம் உபதேசங்கள்!   இந்த மாதிரி உடை வாங்கி கொடுக்காதை, பாட்டு, நடன வகுப்புக்கு அனுப்ப வேண்டாம் என பல பல... பார்வையே போலிஸ் கள்ளனை பார்ப்பது போன்று  தான் இருக்கும். 
 
 
மாமா, சித்தப்பா, அண்ணா என பாசமாக பழகியவர்கள் எல்லாம் தள்ளி நிற்பது போல் தோன்றிய காலம் தான் நினைவிற்க்கு வந்தது.  "நீந்த தெரியாதவளை கடலில் தள்ளி விடுவது போல் தான் இருந்தது" நிகழ்ச்சிகளை பார்க்க பார்க்க.

 

எப்படியோ ஒரே நாள் நிகழ்ச்சி ஊடாக  சடை பின்னுவதில் இருந்து உடை அணிவதில் வர பாவாடை சட்டையில் இருந்து தாவணி என சின்ன பெண் பூர்ணிமாவை உடன் காப்பி போல் "உடன்  பெண்ணாக" உருவாக்கி விட்டார்கள்.  



 

 
ஒரு பெண் படிப்பில் முதலாவது வருவது, நல்ல வேலை கிடைப்பது இதற்க்கு என ஒரு பாராட்டு விழா வைப்பது போல் இன்றுவரை கேள்விபட்டதில்லை. வயசுக்கு வந்து விட்டாள் என்பது அப்படி கொட்டடித்து சொல்ல என்ன அசாதாரணமான நிகழ்வா என சிந்தித்து பார்க்க வேண்டும். 
மேலும் பழைய காலம் கூட்டு குடும்பத்தில், சொந்த ஊரில் சொந்த பந்தங்களோடு வாழும் சூழல்.  ஒவ்வொரு காரணம் சொல்லி எல்லோரும் ஒன்று கூடி மகிழ்ந்து உண்டு குடிக்க ஒரு நிகழ்ச்சி தேவைபட்டிருக்கலாம். இன்று தனி குடும்பம்,  இன்று அதுவும் மாறி  'அணு' குடும்பமாக மாறியுள்ளது.  பல குடும்பம் சொந்த ஊரை விட்டு வெளி ஊர்களில் வாழும் சூழலில் இவ்வகையான நிகழ்ச்சியின் நோக்கம்,தாக்கம் என்னவாக இருக்கும்?
நாங்கள் வளர்ந்த கேரளாவில் இது போன்ற நிகழ்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுப்பது இல்லை. வயசுக்கு வருவது பெற்றோருக்கு மட்டும் தான் தெரியும். இலைமறை காயாகத்தான் அறிவிப்பார்கள்.  ஆர்வகோளாறு உள்ளவர்கள் கூட நம் ஊரில் நடப்பது போல் பொண்ணு வயசுக்கு வந்திட்டாளா என கேட்க மாட்டார்கள்.   நாடுகளுக்கே ரகசியம், ராணுவ ரகசியம் என இருக்கும் போது பெண்ணிற்கு  தான் கூடாதா?ஒரு குழந்தை சத்தான சாப்பாடு, பாரம்பரியம் என சீக்கிரமே உடலளவில் வளர்ந்து விட்டாலும் மனதளவில் அவள் குழந்தைய்  பருவத்தில் தான் இருப்பாள்.  பல அம்மாக்களும் இதை அணுக வேண்டிய முறையில் அணுகுவது கிடையாது, அறிவியல் நோக்குடன் இதை காண்பது இல்லை.  சில ரசாயன மாற்றங்களால் உடலில் மட்டுமல்ல சிந்தையிலும் எண்ணங்களிலும் சில மாற்றம் நிகழ்வதையும் அதை எவ்வாறு கையாளுவது என சொல்லி கொடுப்பது இல்லை. திருமணத்திற்க்கு வரனை அழைக்க முன்னோட்டம் என்று கூறினால் கூட 12 வயதில் இருந்து  மேலும் 10-15  வருடங்கள் காக்க வைப்பது போல் ஆகாதா?இன்னும் வேறுவிதமாக நினைத்தால் கல்யாண சந்தையில் பெண்ணை கொண்டு நிறுத்தும் முதல் நிகழ்ச்சி தானோ இது என தோன்றியது.

மாதாவிடாய் பற்றிய அருமையான பதிவு! 

24 Dec 2010

மயக்கத்தில் தமிழகம்……..


         தமிழக அரசால் சிரம்பட திட்டமிடபட்டு மக்கள் துயரில் வியாபரம் பண்ணும் இடமே டாஸ்மாக் என செல்லமாக அழைக்கப் படும் மதுபானக்கடைகள். கடந்த தீபாவளி அன்று மட்டுமே 150 கோடி விற்க்கப் படவேண்டுமென்று அரசால் திட்டமிடப் பட்டு 200 கோடி ரூபாய்க்கு விற்பனை நடத்தி பெரும் சாதனை படைத்துள்ளனர் நவீன வள்ளுவர் முதல்வர் தலைமை தாங்கும் தமிழக அரசு!

மதுவகைகள்,  தயாரிக்க பயன்படுத்தப்படும் பொருட்களில் வேறுபட்டிருந்தாலும்  பல வகை பெயர்களில் பண்டை காலம் துவங்கியே மனிதர்கள் பயன்படுத்தியுள்ளனர் என்பதை வரலாறு, இலக்கியம் வழியே நாம்  தெரிந்து கொள்ள இயலும்.

தமிழகத்தில் 6740 மதுபான கடைகள் உள்ளன. சென்னையில்  மட்டும்  500 கடைகள் உள்ளது என கணக்கிடபட்டுள்ளது. பள்ளிகள் தனியாரிடம் ஒப்படைத்த போதும் மதுக்கடைகள் அரசு வசம் வைத்து பெரும் லாபம் தரும் தொழிலாக அதாவது வருடம் 10 ஆயிரம் கோடி அல்லது தினம் 45 முதல் 60 கோடி ரூபாய் வருமானம் ஈட்டும் பெரும் தொழிலாக வளர்க்கபட்டுள்ளது.  பல கிராம மக்களின் வருமான மார்கமாயிருந்த பனை மரத்தில் இருந்து எடுக்கும் கள்ளைக் கூட தடை செய்து அமோகமாக வெற்றி நடை போட்டு கொண்டிருக்கின்றது  அரசின் டாஸ்மாக் !
மதுபானங்களை அதன் உற்பத்தியை பொறுத்து பீர், வைன், பிராந்தி(ஸ்பிரிட்) என வகைப்படுத்தியுள்ளனர். பார்லி, கோதுமை, சோளம் போன்றவையுடன் சர்க்கரை சேர்த்து பீர் தயாரிக்கபடும் போது; திராட்சை, செரி, ஆப்பிள், பிளம் போன்ற பழங்களில் இருந்து வைன் தயாரிக்குகின்றனர். ஆல்கஹோல் அல்லது 20% ஸ்பிரிட் கலவையுடன் பிராந்தி தயாரிக்கபடுகின்றது.

100 க்கு மேற்பட்ட நாடுகளில் இதன் பயன்பாடு  பல சட்ட திட்டங்களால் வகையறுக்கபட்டு வருகின்றது. 16 அல்லது 18 வயதிற்க்கு மேல் உள்ளவர்களுக்கே மதுபானம் விற்கலாம் பயன்படுத்தலாம் என சட்டம் உள்ளது. பொது இடங்களில் பயன்படுத்துவதை தடை செய்தும் பல நாடுகளில் சட்டம் உள்ளது. மதுபானங்களின் பயன்பாட்டை தடைசெய்ய பல நாடுகள் சிறப்பாக நார்வே, பின்லான்று போன்ற ஐரோப்பிய நாடுகள் கூட ஆக்கபூர்வமான செயலில் உள்ள போது கலாசாரம் பண்பாடு வள்ளுவர், பெரியார் வழிதோன்றல்கள் என பீற்றி கொள்ளும் தமிழக மக்கள் பயன்பாட்டை அதிகப்படுத்தும் திட்டத்த விட குறைத்து கொள்ள அல்லது முற்றிலும் ஒழிக்க என ஒரு ஆக்கபூர்வமான செயலிலும் இறங்க மனம் வராது உள்ளது தமிழக அரசு.

 எம்.டி ராமாராவின் ஆட்சியில் ஆந்திராவில் மதுபானத்தை  முற்றிலுமாக ஒழித்தாலும் அவரின் ஆட்சிக்கு பின்பு அது தோல்வியில் தான் முடிந்தது. 1996-98 காலயளவில் ஹரியான மாநிலத்தில் தடை நிலவில் இருந்தது. தற்போது மிஸோராம், மற்றும் குஜராத்  மாநிலங்களில் மட்டுமே தடை பூர்ணமாக பின் பற்றபடுகின்றது.  மோடியை இதற்க்கு என்பதற்க்காவது நம் நாட்டில் பிரதம மந்திரியாக பரிந்துரைக்கலாம்.
குடும்பத்திற்க்கு, குழந்தைகளுக்கு என துணியாகவும் உணவாகவும் வாங்கி கொடுக்க வேண்டிய பணம்; ஆண்கள் உயிரை குடிக்கும் மேலும்  குடும்பங்களை அழிக்கும் சூழலுக்கு தள்ளப்படுவது பரிதாபத்திற்க்குரியதே.  பல வாகன விபத்துக்கும் கொலை கொள்ளை கற்ப்பழிப்பு போன்ற இளிவு செயல்களுக்கும்  மதுபானம் காரணம் என்றால் மறுக்க இயலாது. பத்திரிக்கையில் விமான ஓட்டிகள் கூட மதுபானம் அருந்தி விமானம் ஓட்டுவதை கண்டு பிடிக்க பட்டுள்ளதாக செய்திகள் வந்து கொண்டுதான் இருக்கின்றது.

இதில் பள்ளி மாணவர்களும் மதுவுக்கு அடிமையாகி வருவதும், கல்லூரி மாணவர்கள் அவர்கள் பேராசிரியர்களுடன் 'சியேர்ஸ்' கூறி மது அருந்துவதும், பல கணவர்கள் தங்கள் மனைவிகளையும் மது பழக்கத்துக்கு அடிமையாக்குவதும் வெளிச்சத்திற்க்கு வருகின்றது. பொது இடத்தில் குடிப்பது இந்தியாவில் சட்டத்தால் குற்றம் என்றாலும் பேருந்து நிலையங்களில்  மதுபான கடைகளை வைப்பது வழி  மக்களை மதுவுக்கு அடிமையாக்குகின்றர் என்பது தான் உண்மை. தென்காசி பேருந்தில் நெல்லை புதிய பேருந்து நிலையம் வரும் போது பல குடிமகன்கள் குடி போதையில் தங்கள் மகள் போன்ற கல்லூரி மாணவிகளை சில்மிஷம் செய்வதை  கண்டுள்ளோம். மனைவியை பக்கத்தில் வைத்து கொண்டே கை, கால் நீட்டி பெண்களை உரசி இன்பம் காணும் குடிமகன்களும் உண்டு தான்.

கடும் குளிர் பிரேதச மக்கள் குளிரில் இருந்து தப்பிக்கவும், கடும் உழைப்பால் வந்த உடல் வலியை மறந்து தூங்கவும் பயன்படுத்தி வந்த மதுபானங்கள் இன்று விருந்து வைபங்களிலும் ஆண்மையின் அடையாளமாகவும் மாற்ற பட்டது துரதிஷ்டமே. பல பெண்கள் கூட அடிமையாகின்றனர் என்பதும் குடித்து விட்டு வீட்டிற்க்கு வரும் கணவர்கள் ஒரு பங்கு மதுபானம் மனைவிக்கும் வாங்கி கொடுத்து சரி கட்டுகின்றனர் என்பது திரைமறைவில் கசியும் உண்மை.

என் அப்பாவுக்கு அறிமுகமுள்ள குடும்பம், தெற்கு தமிழகம் ஒரு குக்கிராமத்தில் இருந்து கேரளாவுக்கு குடிபெயர்ந்தவர்கள், வசதி வாய்ப்புடன் 5 குழந்தைகளுடம் நல்ல நிலையில் வாழ்ந்து வந்தனர். அக்குடும்ப தலைவர் கடை, வியாபாரம் என பொறுப்பாக இருந்தவர் இரவானால் ஒரு குப்பியுடன் வீட்டு படியை மிதிக்க ஆராம்பித்தார். தினம் கால் குப்பி மது அருந்தி தூங்க கூடியவர், போக போக தன் மனைவிக்கு ஒரு குண்டு வாங்கி கொடுக்க ஆரம்பித்தார். அவர்கள் வீட்டில் வளர்ந்து வந்த பெண் தன் 18 வது வயதில் பெற்றோர் குடித்துவிட்டு ஆட்டம் போடுவதை கண்ட மன உளச்சலில் வீட்டின் மூன்றாவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். அத்தாயும் மனம் உடைந்து ஒரு வருடத்திற்க்குள் இறந்து விட்டார். மற்றும் ஒரு பெண் அம்மா, அக்காவின் முடிவை உள் வாங்க இயலாது மன நோயாளி ஆகி விட்டார். பேச்சும் சிரிப்புமாக இருந்த வீடு இன்று சுடு காடு போல் ஆகி விட்டது.

நாங்கள் இரண்டாம் வகுப்பு படித்த போது ரஷீதா, ரகுமத் என்ற இரு சகோதரிகள் எங்களுடன் படித்தனர்.  அவர் அப்பா குடிகாரர் என்பதால் அவர் அம்மாவுக்கும் அப்பாவுக்கும் பெரும் சண்டையாக இருந்தது. பல வேளைகளில் அவர்கள் அப்பா குடி போதையிலே பள்ளியில் வந்து அவர்களுக்கு தின் பண்டம் வாங்கி கொடுத்து ஆசையாக கட்டியணைத்து முத்தம் கொடுத்து செல்வார். அவர்கள் அப்பா குடிகாரர் என்றிருந்தாலும் கூட அத்தா, அத்தா என்று தன் அப்பாவை பற்றி ஆயிரம் கதைகள் எங்களிடம் கதைப்பார்கள்.  ஒரு நாள் அவர்கள் அப்பா, பள்ளி பக்கத்திலுள்ள ஒரு மரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.  ரஷீதாவால் தன் அப்பாவின் பிரிவை தாங்கி கொள்ள இயலாது திடீர் திடீர் என மயக்கம் போட்டு விழும் நோயால் பீடிக்க பட்டார் அதன் பின்!

அதே போல் எங்களுக்கு 5,6,7 வகுப்புகளில் அறிவியல் பாடம் நடத்தும் 'மத்தாய்' என்ற ஆசிரியர் இருந்தார்.  அவரின் அழகான மனைவியும் மூன்று குழந்தைகளும் கண்ணீரும் கதம்பலுமாக தங்கள் வாழ்க்கையை ஓட்டி கொண்டிருந்தனர். பள்ளி மணியடித்தவுடன் நாங்கள் புத்தக பையை கொண்டு ஓடி வீடு வருவதற்குள் மத்தாயி சார் மதுபான கடைக்கு வந்து விடுவார். பின்பு கல்வி அதிகாரியின் கூறி அவரின் சம்பள கவர் நேராக அவர் மனைவி கைக்கு சென்றது,  பிள்ளைகளை  நல்ல படிப்பு, வசதி வாய்ப்புடன் வளர்த்தார் அவர் மனைவி.  பின்பு தங்கள் மாணவர்களிடமே 10, 20 ரூபாய் என கையேந்த ஆரம்பித்தார் மத்தாயி சார்!  அவர் மனைவியோ வேலைக்கு போகாத அரசு அதிகாரியாகி 'ஹீரோயின்' ஆகி கொண்டிருந்தபோது மத்தாய் சார் 'சீரோ' ஆகிகொண்டே இருந்தார். எங்கள் ஊர் கம்னிஸ்ட் கட்சிகாரர்கள் அவர் மனைவியை அணுகி "சேச்சி எங்க பார்ட்டிக்கு வந்து சமூக சேவைசெய்க" என அழைப்பு விடுத்தனர். அவரும் கட்சி உறுப்பினர் ஆகி சிந்தாபாத் முழக்கியே தலைவியாகிய பின்பு மத்தாய் சாருக்கு சோறு வைத்து கொடுப்பதே ஒரு பெரும் வேலையாகி விட்டது. அவர் மனைவியும் நேதாக்களிடம் சொல்லி அவரை தண்ணியில்லா காட்டுக்கு மாற்றம் வாங்கி கொடுத்து விட்டார். மத்தாய் சாருக்கு மதுவினால் சம்பள கவர் மட்டுமல்ல தனக்கு இருந்த ஒரே ஒரு மாதுவையும் கட்சிக்கு தாரை வார்த்து விட்டு புலம்பி அலைவதாக கேள்வி பட்டோம்.

மாலட்டு தன்மை, சிறுநீரக கோளாறு, மூச்சு திணறல் போன்ற நோய்க்களுக்கு குடி ஒரு காரணம் என அறிந்தும் குடியை விட பல ஆண்கள் தயங்குகின்றனர் என்பது தான் புரியாத புதிராக உள்ளது!


அளவாக மது அருந்துவதை கிறிஸ்தவ(கத்தோலிக்க), ஹிந்து, புத்த மதங்கள் போன்றவை கூட ஆதரிக்கின்றது.  'அளவு' என்பது தான் இங்கு  பெரும் பிரச்சனையே. மேல் நாடுகளில் ஒரு குவளை, இரண்டு குவளை என பயன்படுத்தும்போது நம்மவர்கள் கால் குப்பி அரை குப்பி, முக்கால் குப்பி என மது பானத்தை தண்ணீர் போன்று மொந்தி தள்ளுகின்றனர்.  பல வீட்டில் குடிக்கும் அப்பாக்களை பிள்ளைகள், அவர்கள் பெற்றோர் ஏன் கட்டின மனைவி கூட மதிக்காது ஒரு சிலரை கல்லைபோட்டும் கட்டிவைத்தும் அடித்து கொல்லுகின்றனர்.

கிறுஸ்துமஸ் நாட்களில் கிறிஸ்தவர்கள் வீட்டில் விருந்துடன் வைன் பங்கிடுவது உண்டு. அதற்கென சிறு பீங்கான் கோப்பையில் சாப்பாடுக்கு பின்பு கேக்குடம் அருந்தும் வைன் சுவையானது தான்!  கேரளாவில் பல வீடுகளில் வீட்டு அம்மாக்களை 45 நாட்களுக்கு முன்பே ஒரு கூஜாவில் வைன்(திராட்சை,நெல்லி)  செய்வார்கள். எங்களுக்கு ஆலயத்திலும் சிறு அளவு பிராசாதம் போன்று வைன் கிடைக்கும்.  திராட்சை வைன் அளவான அளவு அருந்துவது இதயத்திற்க்கு நல்லது என சொல்ல படுகின்றது. அளவுக்கு மீறி குடித்த பல மனிதர்களை பற்றியும் அவர்கள் நேர் கொண்ட பல துயர் பற்றியும் பைபிளில் கதைகள் உண்டு.

பிராந்தி வகை சேர்ந்த முக்கால் குப்பி மதுபானத்திற்க்கு 230 ரூபாய் துவங்கி 520 ரூபாய் வரை கொடுக்க வேண்டியுள்ளது. வைனுக்கு 235 ரூபாயும், விஸ்கி போன்றவை 1030-1760 வரை விற்க படுகின்றது.  பீர் 60 ரூபாயிலிருந்து 70 ரூபாய் வரை செலவாகின்றது.

அரசு மக்களை கேள்வி கேட்காத சமூகமாக மாற்ற, ஒரு விதமான மயக்க சூழலிலே தள்ள, சிறப்பாக வருமானம் ஈட்ட மதுபான கடைகள் அவர்களுக்கு உரிய வழிமுறை தான். இதில் அரசு அதிகாரிகள் கைகூலி(லஞ்சம்) பணத்தில் மற்றும் இனாமாக கிடைக்கும் பணத்தில் குடிக்கும் போது ஏழைகள் தங்கள் உழைப்பின் பெருமொரு பகுதியை மதுபானத்திற்க்கு என செலவிடுகின்றனர். போன மாதம் மழையால் தொழிலாளர்கள் வேலையில்லாது இருந்ததால் மதுபானக் கடை வியாபாரவும் மந்தமாக இருந்தது என தங்கள் கவலையை வெளியிட்டுள்ளனர் டாஸ்மாக் அதிகாரிகள். கலவரம், சமூக பிரச்சைனை எதுவாகட்டும் பாதிக்கபடும் ஏழைகளை மது அடிமைக்கும் பலியாக்கபடுகின்றனர் என்பது தான் மறுக்க முடியாத துயர்.

19 Dec 2010

கோயில்களும் மனித நலனும்……



இன்று ஜெய மோகனின் வலைப்பதிவை கடந்து போகும் வாய்ப்பு கிட்டியது. அதில் கிருஷ்ணாபுரம், ஸ்ரீவைகுண்டம், ஆழ்வாதிருநகரி போன்ற ஊர் கோயிலுகளை பற்றி கூறியிருந்ததை கண்டு ஒரு ஆர்வத்தில் உள்ளே சென்றேன். அதில் கிருஷ்ணாபுரம் கோயிலுக்கு என் கணவருடன் பார்வையிட சென்றுள்ளேன். மற்று இரண்டு கோயில்கள் என்னவருக்கு மிக பரிசயமான கோயிலுகள். அவருடைய ஊர் நாசரேத்தாக என்பதாலும் அவருடைய நண்பர்கள் இந்த பகுதியை சேர்ந்தவர்களாக இருந்ததாலும், மேலும் அவருடைய பள்ளி மற்றும் கல்லூரி நாட்களில் கோயில், அங்குள்ள ஏரிகள் என சுற்றித் திரிந்துள்ளதாலும் கோயிலுகளுடன் ஒரு உணர்வு பூர்வமான தொடர்புகள் உள்ளது.
நாங்கள் அங்கு சென்ற போது எங்கள் பகுதியிலுள்ள ஒரு ஹிந்து சகோதரரும், அவருடைய அலுவலக நண்பர்கள் மற்றும் மேலதிகாரியுடன் வந்திருந்தார். நாங்கள் அவர்களுடன் சேர்ந்தே நடந்தோம் நாம் அறியாத பல கருத்துக்கள் கிடைக்கும் என்ற ஆர்வமே. ஆனால் ஏமாற்றமே மிஞ்சியது, காரணம் அவர்களும் பல அரிய தகவலுகளுக்காக சுற்று முற்றும் நோக்கினர். ஆனால் ஆலயவளாகத்தில் பெயருக்கு கூட மனித நிழல் இல்லை.
திருச்செந்தூர் செல்லும் பாதை- யாத்திரை பயணிகள் கோயில் முன்புள்ள ரோடு ஓரம், சிலர் கோயில் வளாகத்திலும் படுத்து ஓய்வு எடுத்துகொண்டிருந்தனர். அவர்களுக்கு என ஒரு வசதியும் செய்து கொடுக்க படவில்லை. கோயில் நிலைகொள்ளும் கிராமம் கூட சுனாமி பாதிக்க பட்ட பிரதேசம் போன்று எந்த ஒரு வளர்ச்சியும் அற்று வெறிச்சோடி காணப்பட்ட்து. கோயிலை சுற்றி குப்பையாக இருந்தது. சிறப்பாக கோயில் உள் பக்கம் குப்பையாக சுத்தம் செய்ய படாது அசுத்தமாக காணபட்டது. கற்பக கிரகத்தில் எண்ணைய் வழிந்தோடிய நிலையிலே இருந்தது.
ஜெயமோகனில் வலைப்பதிவுக்குள் வருகின்றேன். சிற்பங்களை பற்றி விரிவாக விவரித்திருந்தார். ஜெயமோகன் குளிரூட்ட பட்ட அறையில் தூங்கி, வாடகை கார் பிடித்து சென்றதாக கூறியுள்ளார். எழுத்தாளர்களுக்கும் அரசியல்வாதிகள் போல் என்ன ஒரு சொகுசு வாழ்க்கை! எழுத்தாளர்கள், சமூகத்தின் பிரதிபலிப்பாளர்கள், சமூகத்தின் கண்ணாடி என கூறுவது உண்டு. ஜெயமோகன் ஒரு வேளை சென்னையிலிருந்து சாதாரண மக்கள் பயணம் செய்யும் பேருந்தில் வந்து நெல்லையில் இருந்து லோக்கல் பேருந்தில் கிருஷ்ணாபுரம் சென்றிருந்தால் கோயில் சென்றடைய பக்தர்கள் மேற்கொள்ளும் சிரமவும் துன்பவும் தெரிந்திருக்க வாய்ப்பு உண்டு. கோயிலை சுற்றியுள்ள பிரதேசத்தின் வளர்ச்சியை நோக்கினாலும் நம்மை அதிர்ச்சி கொள்ள செய்யும். மக்களின் சீரான வாழ்க்கையில் கோயிலுகள் பங்களிப்பு கிடையாதா?. மக்களுக்கு அடிப்படை வசதிகள் கூட இல்லாதே இருக்கின்றனர். தமிழக பல அமைச்சர்கள் கனிமொழி சகிதம் இங்கு வருகை தந்துள்ளனர். வாஸ்துப்படி இங்கு வருவது பதவி காக்க சிறந்தது எனவும் ஒரு பத்திரிக்கை செய்தியும் கண்டுள்ளேன்.
அடுத்து ஆழ்வாத்திருநகரி பற்றி குறிப்பிடும் போதும் அழகான சூழல் இதமான காற்று என வர்ணித்துள்ளார். ஒரு வேளை கார் கண்ணாடியை திறக்காது கண்ணாடி வழி பார்த்து கொண்டிருந்திருப்பார் போலும். உண்மையில் ஆழ்வாத்திரு நகரி ரோடு எப்போதும் குண்டும் குழியும் தான். நம்மை வரவேற்ப்பது கூட வீட்டு முன் பக்க வாட்டிலுள்ள கழிவு நீர் கான்கள் தான். எங்கும் துர்கந்தம், பன்றிகளின் விளையாட்டு மைதானமாகவே ஆழ்வாத்திரு நகரி தெருவோரங்கள் காட்சியளிக்கின்றது. கோயில் அழகை மறைக்கும் விதம் அங்கு குப்பை கூளமாக தான் எப்போதும் இருக்கும். பழைய கால அருமையான வீடுகள் இருப்பினும் பாதுகாக்கபடாத சோகநிலையிலே காணப்ப்டுகின்றது.
இனி ஸ்ரீவைகுண்டத்தை பற்றி சொல்லியிருந்தார், ஏதோ தாமிர பரணி வழமையில் இருப்பது போல்? இவர்களை போன்ற எழுத்தாளர்கள் எழுதும் வரலாற்றை படிக்க போகும் நம் பின் தலைமுறையும் ஆகா தமிழ்நாடா இப்படியல்லவா இருக்க வேண்டும்! என கொட்டாவி விட்டு கொள்ளலாம். ஆனால் உண்மை நிலைவரம் அதுவல்ல.
மேலும் ஜெயமோகன் எழுத்துக்களில் கிருஸ்தவம் மேல் ஒரு தாக்கு இருந்து கொண்டே இருக்கும். என்னதான் சொன்னாலும் கிருஸ்வர்களும் ஹிந்துக்களும் பிரிக்க முடியாதளவு உறவாலும் உணர்வாலும் ஒன்று சேர்க்க பட்டுள்ளனர். எங்கள் எதிர் வீட்டில் ஒரு பாட்டி குடியிருக்கின்றார். பாட்டி கிருஸ்தர் அவருடைய கணவர் ஹிந்து. அவருக்கு 3 மகன்கள் ஒருவர் கிருஸ்தவராக இருக்கும் போது ஒருவர் ஹிந்துவாக இருப்பதையே பெருமையாக எண்ணுகின்றார். மற்றொரு மகனோ கடவுள் உண்டா இல்லையா என தேடி கொண்டிருக்கின்றார்.
எங்கள் தோழிகளில் சிலர் பாதுகாப்பாளரின் வற்புறுத்தல் மற்றும் தண்டனைக்கு பயந்து பல் விளக்காது கூட ஆலயத்திற்க்கு வரும் மத்தியில் என்னுடைய தோழியும் மற்றும் சில எங்கள் தோழிகளும் யாருடைய வற்புறுத்தல்கள் அல்லாது சொந்த மனசாட்சியின் தூண்டுதலாக தினம்(கிருஸ்தவ கோயிலுகளில் தினம் ஆராதனை உண்டு) கோயிலுக்கு செல்லும் கூட்டத்தில் உள்ளவர்கள்.  வாழ்க்கை என வந்த போது அவர் காதல் கணவர் ஹிந்து என்பதால் அவருடைய விருப்பத்திற்க்கு இணங்கும் சூழலில் வாழவேண்டி வந்ததால் வீட்டில் பூஜை அறை, மணி அடித்து, விபூதியிட்டு, குங்குமம் வைத்து பூச்சூடி மாலை ஜெபம் என வாழ்கின்றார். அவர் பெற்றோர் கிருஸ்தவர்கள் தான்.
ஒரு குடும்பவுவும் முழுவதுமாக இந்துக்கள் உள்ளடங்கியதாக இருப்பது அரிதிலும் அரிது! தற்போது மதம் என்ற வேஷம் கலைந்து மக்கள் மக்களை மக்களாக ஏற்று கொள்ளும் கால கட்டத்தில் அவருடைய எழுத்துக்கள் பல போதும் மற்று மதத்தினரை துன்புறுத்தும் நோக்கில் நுட்பமாக ஒரு வார்த்தையாவது எழுதாது இருக்க மாட்டார். அவருடைய எழுத்தில் தற்கால மதம் என்ற பெயரில் மனிதன் கொள்ளும் துவேஷத்தை பற்றி எழுதுகின்றாரா என்றால் இல்லை என்பதை.
மதம் என்ற பெயரில் மதம் பிடித்து அலைவதை விட மதத்தின் பெயரால் நிலைகொள்ளும் ஆலயங்களுக்கு மக்கள் நலனிலுள்ள பங்கைபற்றி எடுத்துரைக்க வேண்டும். ஒவ்வொரு ஊரிலுள்ள கோவிலுகள் அந்த அந்த பகுதியிலுள்ள நீர் நிலைகளுக்கு ஒரு பாதுகாவல் என இருந்தாலே மனிதர் வாழ்வு வளம் பெரும்.
நெல்லையை சுற்றியுள்ள கோயிலுகளை மழை நேரங்களில் சுற்றி வந்தால் தெரியும். தெருவு கழிவு நீர் ஆலய வளாகம் மட்டுமல்ல ஆலயம் உள் புறங்களில் கூட செல்கின்றது. ஹிந்து மதத்தின் காவலர்கள் என காட்டி கொள்ளும் மதவாதிகள் சுத்தமான பரிசுத்தமான சூழலில் மக்கள் கடவுளை வணங்கவும் வழி செய்வதே உகந்தது. தண்ணீர் என்பதிற்க்கு பல உவமைகளால் அதன் பெருமையை போற்றுகின்றனர். சிறப்பாக சிவனின் மனைவி கங்காவின் முடி கெட்டில் இருந்து நதி வருவதாக எடுத்து செல்ல பட்டுள்ளது. மேலும் தண்ணீர் அற்ற ஒரு சடங்கும் இந்து மதத்தில் இருப்பது இல்லை. ஆனால் கோயிலை சுற்றியுள்ள தண்ணீரின் நிலைகளின் நிலைதான் என்ன?
களக்காடு ஊருக்கு ஒரு முறை  மக்களை சந்திக்க சென்றிருந்தோம். களக்காடு மிக அருமையான பகுதி, மேற்க்கு தொடர்ச்சி மலையோடு சேர்ந்து அழகாக காட்சியளிக்கின்றது. மேற்க்கு தொடர்ச்சி மலை தண்ணீரின் ஊற்று என்பதால் எங்கு நோக்கினும் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகின்றது. ஆனால் அங்குள்ள மக்களுக்கு குடிக்க சுத்தமான தண்ணீர் கிடைப்பது இல்லை.
வீட்டு களிவு நீர் நேராக நதிகளில் கலக்கிகின்றனர். இதிலும் அங்குள்ள மருத்துவமனை களிவுகள் கூட நதிக்கரையிலே கொட்ட படுகின்றது.  ஆலய வளாகத்தில் ஒரு பெரிய குளம் உள்ளது. அதை மீன் வளர்ப்பதற்க்கு என குத்தகைக்கு கொடுத்துள்ளனர். மீன் வளர்ப்பவர்கள் பன்றி கழிவுகள்இடுவதால் அக்குளம் பாசம் பிடித்து நாற்றம் கொண்டு காணப்படுகின்றது.


அதே போல் நெல்லையிலுள்ள சிவன், மற்றும் நெல்லையப்பர் கோயில்கள் தாமிரைபரணி நதிக்கரயில் தான் உள்ளது. தாமிரைபரணி நதியின் பாதுகாப்பில் கோயிலுக்கும் மிக பெரிய பங்கு உண்டு என அறிய வேண்டும்.
ஆலயத்திற்க்கு வரும் பக்தர்களுக்கு கழிப்பிட வசதி மற்றும் இறந்து போகும் நபர்களை நதிக்கரயில் எரிப்பதை விடுத்து மின் அடுப்புகள் பயன்படுத்துவது வழியும் நதி கரைகளை சுத்தமாக பராமரிப்பது வழியாகவே உண்மையான கடவுள் பக்தியை பேண இயலும்.
அல்லது வரும் தலைமுறை நதிகளை ஆசார அனுஷ்டானங்களுக்கு கூட காண இல்லாதாகி விடும். கோயில் நிறுவனங்கள் வெறுமொரு கல்மண் கலவையல்லாது மக்கள் நலனை பேணும் உயிருள்ள இயக்கமாக உருவாக வேண்டும் என்பதை உண்மையான பக்தனினின் வேண்டுதலாக இருக்க முடியும்!!

3 Dec 2010

Kudankulam-மரண கோட்டையின் மேல் தவழும் திருநெல்வேலி!!!!!

title தமிழகத்தின் வீர மண், புராதன கோயில்கள், கிருஸ்தவ ஆலயங்களின் இருப்பிடம், அறிவு ஜீவிகள், அறிஞர்கள் வீர புதல்வர்கள் பிறந்து, வாழ்ந்த மண் என பல சிறப்புகள் நெல்லைக்கு உண்டு.   தொழில் வளர்ச்சி என்ற பெயரில் மணல் கொள்ளை, நிலத்தடி நீர் அபகரிப்பு என  தாமிரபரணி நதிக் கரையை கூவமாக்கும் அரசு, கொஞ்சம் கொஞ்சமாக அழிக்க வேண்டாம் என முடிவெடுத்து; முழுவதுமாக அழிக்கும் நோக்குடன் கூடன்குளம் அணுமின் நிலையம் நிறுவி உள்ளது. இந்த நிலை திருநெல்வேலியை மரண பூமியாக உருவாக்கவே உதவும்.      

இந்தியாவில் இது போன்ற அணுமின் நிலையங்கள்  தாராப்பூர், ராஜஸ்தான், உத்தரபிரதேஷ், குஜராத், கன்னடா, தமிழகத்தில் சென்னை கல்பாக்கம் , மற்றும் கூடன்குளம்  என 8 இடங்களில் நிறுவியுள்ளனர்.  170 - 500 MW மின்சாரம் தயாரிக்கும் திட்டத்துடன் மற்று நிலையங்கள் நிறுவியுள்ளபோது,  1000 MW கொண்ட 6 ரியாக்டர்கள் அதாவது 6000 MW மின்சாரம் தயாரிக்கும் நோக்குடன் தமிழகம் கூடன்குளத்தில் நிறுவி தமிழக மக்களில் உயிரில் விலையை உலக அரங்குக்கு வெளிச்சமிட்டு காட்டியுள்ளனர் நமது மத்திய மாநிலை தலைமைகள். இந்த மின்சாரம் தமிழக தேவைக்கு தானா என்றால்; அது தான் இல்லை!  இது வெறும் லாப இச்சைகொண்டு விற்று சம்பாதிக்கும் நோக்கத்துடனே நிறுவியுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்க உண்மை.யுராணியம் என்ற மூலப்பொருள் கொண்டு அணுவை வெடிக்க செய்யும் ஆற்றல் கொண்டு கடல் நீரை வெப்பமாக்கும் சக்தியிலிருந்து மின்சாரம் தயாரிப்பதே இதன் திட்டம். 1986 ல் ரஷியாவின் பகுதியான உக்ரைன் நாட்டில் சென்நோபில் என்ற இடத்தில் நடந்த மாபெரும் விபத்தால் பல ஆயிரம் மக்கள் உயிர் வாங்கியது.  80 ஆயிரம் மக்கள் இழப்பீட்டு பெற்றனர்.  ராஜிவ் காந்தி ஆட்சியில் ரஷீய அதிபருடன் கொண்ட ஒப்பந்தம் ஊடாக இத்திட்டம் நமது இந்தியாவில் தமிழகத்தில் துவங்கப்பட்டது. கேரளா போன்ற மாநிலங்கள் 'இயற்கைக்கு ஆபத்து' என விலக்கி தள்ளிய இத்திட்டம் நமது தன்னலம் கொண்ட அரசியல்வாதிகளின் ஆசிர்வாதத்துடன் தமிழகத்தில் துவங்கப்பட்டது.பல சமூக ஆவலர்கள், அறிவு ஜீவிகள் எதிர்த்த இத்திட்டம்  குடும்பத்தில் ஒருவருக்கு வேலை என்ற பல்லவியுடன் சில மக்கள் மதத்தலைவர்கள் ஆதரவுடன் துவங்கப்பட்டது. திடீர் என விபத்து ஏற்பட்டால் இப்பிரேதசங்கள் எவ்வாறு பாதிக்கப்படும், எப்படி தற்காத்து கொள்வது அல்லது இழப்பீட்டு மறுவாழ்வு என்பது பற்றி ஒன்றும் விளக்காது அரசின் இரும்புக்கரம் கொண்ட திட்டத்தை நடத்த இருப்பதும் மாபெரும் துயராகும்.கூடன்குளம் ஒரு கடலோர பிரதேசமாகும். பின் தங்கிய வாழ்கை சூழலுள்ள, 40 ஆயிரம் ஜனத்தொகை  கொண்ட மக்களை வேலை வாய்ப்பு, தொழில் என ஆசை வார்த்தை கூறி அவர்கள் நிலங்களை கையகப்படுத்தி கூடன்குளம் அணுமின் நிலையம் நிறுவியுள்ளனர். இயற்கை விஞ்ஞானிகள், மற்றும் மக்களின் எதிர்ப்பையும் வகை வைக்காது 1988 ல் அற்றைய பிரதமர் ராஜிவ் காந்தியும் சோவியத் ரஷியாவின் அதிபர் மிக்கேல் கோர்பசேவ்வும் கையெழுத்திட்டு 2001ல் பணி துவங்க வேண்டும் என்ற நோக்குடன் 13 ஆயிரம் கோடி செலவில் துவங்கபட்டதுதான் கூடன்குளம் அணுமின் நிலையம்.  போபாலில் மக்கள் எதிர்ப்பை மறிகடந்து  இந்திரா காந்தியால் துவங்கப்பட்டு 4 லட்சதிற்க்கு மேலான மக்களின் வாழ்க்கையில் விளையாடியது போல் தான் தென் தமிழக மக்களின் வாழ்க்கையை பற்றி சிறிதும் எண்ணாது ராஜிவ் காந்தியால் 2 ரியாக்டருடன் துவங்கபட்ட ஆலை, மன்மோகன் சிங் அரசால் மேலும் 4 ரியாக்டருடன்  நிறுவப்பட்டுவருகின்றது.பெரும் அளவிலான இதன் உபகரணங்கள் ரஷியாவில் இருந்து இறக்குமதி செய்யபட்டதே. போபால் ஆபத்துக்கு முன்பு அப்பிரதேச மக்கள், கல்வியாளர்கள், ஊடகவியாளர்கள் 'நாங்கள் ஆபத்து என்ற குன்றின் மேல் வசிக்கின்றோம் என கூக்குரலிட்டனர். ஆனால் விபத்தை நேர் கொண்ட மக்கள் குடும்பம் குடும்பமாக தெருவிலும் வீதிகளிலும் செத்து மடிந்தது ஒன்று தான் நடந்தேறியது. அந்நேரம் அவ்வழி சென்ற ரெயில்  ஜன்னல்களையும் வாசல்களையும் தட்டி தங்களை காப்பாற்ற கூறிய மக்களின் சத்தத்தை பொருட்படுத்தாது விரைந்து சென்றது. மக்கள் ஓடியும் நடந்தும் மூச்சு விட இயலாமல் தெருவில்  செத்து மடிந்தனர். நஷ்டயீடுக்காகவும் , நியாத்திற்க்காக போராடும் மக்களை மாக்கள் என்பதை போன்று விரட்டியடிக்கும் காவல் துறையை நாம் ஊடகம் வழி கண்டு வருகின்றோம்.         
   title
போபாலில் நடந்தது அழிவு என்றால், அணு ஆலையால் நடைபெற போவது பேரழிவு!! மனிதர்கள் தீயிலிடும் பிளாஸ்டிக் பைகள் போன்று உருக்கி கொல்லப்பட காத்திருக்கின்றனர். அரசு தரும் நஷ்டயீடு பெற மக்கள் உயிருடன் இருக்க போவதில்லை.  திரைப்படத் துறையினருக்கு வேண்டுமானால்  திரைப்படம் எடுக்க உதவப்படலாம்!
title


அணு ஆலை கொண்டு மின்சாரம் தயாரிக்கும் போது இயற்கையை மாசுபடுத்தும் கார்பன் டயோக்சைடு மிகவும் குறைவாக வெளியிடுகின்றது , மேலும் குறைந்த நேரம் கொண்டும் நிறைய மின்சாரம் தயாரிக்கலாம் என்றும் சொல்லப்படுகின்றது. அணு பயன்பாட்டை யுத்ததிற்கு அல்லாது சமாதானமாக பயன்படுத்தபடுகின்றது என்ற கருத்தும் எடுத்துரைக்கபடுகின்றது. ஆனால் கார்பன் டயோக்சைடுக்கு பதிலாக வெளியாகும் ரேடியோ கதிர் வீச்சுகளால் உயிர் கொல்லி நோயான கான்சரில் பிடியில் இருந்து மக்களை காப்பாற்ற இயலாது என்பதை வசதியாக மறைக்கின்றனர். ஆலையில் இருந்து வெளியேறும் கழிவுகளை என்ன செய்வது என்பதை இன்னும் கண்டுபிடிக்கபடவில்லை.  மேலும் மிக ஒரு பெரிய மூலதனம் கொண்டு உருவாக்கபடும் இவ்வகை ஆலைகளுக்கு தேவையான மைய பொருள் யுராணியம் மிகவும் அரிதான பொருளாகும். அவை 30 வருடத்திற்க்குள்ளாக கிடைக்காத சூழலுக்கு தள்ள படலாம். மேலும் விஞ்ஞானிகளின் கருத்துப்படியும் இதன் பாதுகாப்பு என்பது முழுவதுமாக வரையறுக்கப்பட்டதல்ல. மனிதனையும் இயற்கையும் ஒன்று சேர அழிக்கும் என்பதே மிகவும் கொடியதான செய்தி. சமூக விரோதிகள், மற்றும் தீவிர வாதிகளால் இலகுவாக தாக்கப்படும் இலக்காக மாறும் அபாயமும் உள்ளது.



titleஇதுவரை உலகில் 99 அணுஆலை விபத்துக்கள் நடந்துள்ளது. அதில் 1986ல் ஏப்ரல் 26 அன்று உக்ரைன் நாட்டில் நடந்த விபத்தை மிகவும் கொடியதாக கருத்தில் கொள்ளபட்டுள்ளது. செர்னோவில்(Chernobyl) என்ற இடத்தில் பிரியாட்(Pripyat) என்ற நதிக்கரையில் இவ்வாலை நிறுவபட்டிருந்தது. விபத்துக்கு பின்பு ஆலைக்கு 4 கி.மீ சுற்றளவு பகுதியிலுள்ள பைன் மர காடுகள் முற்றிலுமாக அழிந்தது.  6 கி.மீ சுற்றளவு பிரதேசமுள்ள மாடுகள், குதிரைகள் தைராய்டு சுரப்பியல் ஏற்பட்ட ரேடியோ கதிர்வீச்சால் பழுதாகி மரணத்தை தழுவியது.  அங்கு வேலை பார்த்த 20 நபர்களும் இறந்தனர் என்றும் மட்டுமல்ல அவர்களுக்கு சிகிச்சைகள் அளித்த மருத்துவர்கள், அவர்களின் உதவியாளர்களும் செத்து மடிந்தனர். அப்பகுதியை சுற்றியுள்ள 4 ஆயிரத்திற்க்கும் மேற்பட்டவர்கள் புற்று நோய் தாக்கி இறந்தனர். ரஷிய அரசு விபத்தில் மரணம் அடைந்தவர்களுக்கு 'ரஷியாவின் வீர புதல்வர்கள்' என்ற விருதை வழங்கி தன்னை ஆசுவாசபடுத்தியதுடன், இவ் விபத்தை மிகவும் ரகசியமாக கையாண்டது. இருப்பினும் திறமை மிக்க பத்திரிக்கையாளர்களால் பல செய்திகள் பின்பு வெளிகொணரப்பட்டது.                                                                                                                                                                                                                அபாயம் நிகழ்ந்த பணியிடத்தில் இருந்த ஒரு ஊழியர் தன் 6 மாதம் கர்ப்பிணியான மனைவியிடம் "ஜன்னல் கதவுகளை பூட்டி இருந்து கொள், நம் குழந்தையை காப்பாற்ற வேண்டும்" என கூறி சென்றுள்ளார். மிகவும் ஆரோக்கியமாக காணப்பட்டவரை, பின்பு அவருடைய மனைவி பெரும் போராட்டத்திர்கு பின் மாஸ்கோவிலுள்ள மருத்துவமனையில்  சென்று சந்தித்துள்ளார். இவருக்கும் பாதுகாப்பு கவசம் அணிவித்து கணவரை தொட்டு பேசக் கூடாது என்ற அறிவுறுத்தலுடன் அருகில் செல்ல அனுமதித்துள்ளனர். நண்பர்களுடன் சீட்டு விளையாடி கொண்டு மகிழ்சியாக மருத்துவ மனையில் காணபட்ட அவருடைய கணவர் நேரம் செல்லும் தோறும் கண்கள் நீல நிறமாக மாறி உடல் வீங்கி வெடித்து 14 வது நாளில் அவரின் எலும்புக்கள் தெரியும் வண்ணம் உரு மாறி உலகை விட்டு மறைந்து விட்டார். பின்பு இவருக்கு  பிறந்த குழந்தையும் இறந்து விட்டது. விபத்துக்கு பின்பு படிபடியாக பணியை நிறுத்தி 1991ல் முழுவதுமாக மூடி விட்டனர்.                                                                                                                                               ஆனால் நமது அரசியல் அரக்கர்கள் துணைகொண்டு நமது மண்ணில் கூடன்குளம் அணுமின் நிலையம் என்ற பெயரில் திறப்பு விழா நடத்தி விட்டது ரஷியா அரசு!                                                                                                    

கூடன்குளம் அணுமின் நிலையத்தின் 4 கி.மீ சுற்றளவுக்குள் 40 ஆயிரம் மக்கள் வசிக்கின்றனர் என்றால்  40 கி.மீக்கு உட்பட்ட பகுதியில் 40 லட்சம் மக்களும் வசிக்கின்றனர் என்பதே மிகவும் கொடியதான உண்மை!   ஒரே ஒரு ஆறுதல் 6000 MW உற்பத்தி என்பதால் கதிர்வீச்சின் அளவும் பன் மடங்காக இருப்பதால் உக்ரைன் நாட்டவரை போல் 14 நாட்கள் என்பது 14 விநாடியில் நமது அழிவு நம்மை வந்தடையும்நமது எலும்புக்களை ஆராய்ச்சி கூட பண்ண இயலாது ஆழமான குழிகளில்   மண்ணுக்குள் புதைத்து விடுவார்கள்!!!! எழுத்தாளர் சுஜாதாவின் கருத்துக்கள்! ஜப்பான் விபத்து http://josephinetalks.blogspot.com/2011/09/tirunelveli-kudankulam.html 


28 Nov 2010

மழையே மழையே வா வா …..இல்லை இல்லை போ போ!!!!


கடந்த இரண்டு வாரமாக பயணம் செய்யும் கட்டாயம்.  காலை 6.30 க்கெல்லாம் தேனி செல்லும் பேருந்தை பிடித்து விட்டோம். வழியெல்லாம் முதல் நாள் பெய்து ஓய்ந்த பேய் மழையின்  அடையாளங்கள்.  மயிலுகள் குளிர், மழையால் வழியோரமுள்ள கல்லுகளில் அஸந்து இருந்தது.

 

பொதுவாக காய்ந்து வரட்சியாக காணப்படும் நதி ஆறுகளெல்லாம் நிரம்பி வழிந்து வெள்ளமுடன் காட்சி தந்தது.  குட்டைகள் குளங்களிலும் வெள்ளம் நிறைந்து வழிகின்றது. இவ்வளவு மழை வெள்ளம் பெறப்பெடும் நாமும் கேரளாவிடமும் கர்நாடகாவிடவும் பிச்சையெடுக்கும் சூழலுக்கு தள்ளபடுகின்றோமே என எண்ணியபோது மனம் கனத்து போகத்தான் செய்தது.  சமீபத்தில் பாலாறுவில் மணல் கொள்ளையிடுவதை ஊர் மக்கள் தடுப்பது போல், மக்கள் இயக்கம் விழித்து கொண்டால் நமது தண்ணீர் வளம் காக்க படும் என்பதில் சந்தேகம் இல்லை என மனம் நிம்மதி பெருமூச்சு விட்டது!  கேரளா அரசு தமிழக மணலை விலை கொடுத்து வாங்குவது வழியாக அவர்கள் இயற்க்கை சூழல் அழியாதிருக்க எவ்வித விலை கொடுத்தும் காப்பாற்றுகின்றனர் என  தமிழக மக்கள்  புரிந்து கொள்ளுதல் நல்லதே.
பேருந்து சீட் எல்லாம் ஈரமாக இருந்தது.  அதிலும் ஸ்போஞ்சு சீட்டு பயண்படுத்துவதால் காயுவதற்க்கும் இன்னும் பல நாட்களாகலாம்.  நடுத்தனர் வேறு அடியாள் மாதிரி தள்ளி இரும்மா என கூறி ஈரத்தில் உட்கார மிரட்டி பணிய வைக்கின்றார்.  பேருந்து மாடலும் பழைய விதம் போல் இல்லாது மேடை போன்றும், குறுகலுமாக இருப்பதால் நெடு பயணங்களில் காலை நகட்ட கூட முடியாது தண்டனை பயணமாக தான் இருக்கின்றது. பேருந்தினுள்ளும்  குப்பையே.

வீடுகளை சுற்றியுள்ள குட்டை வாய்க்கால் நிலை தான் கண்ணை மூடும் அளவுக்கு இருந்தது.  இதிலும் சில நாய் பிடிப்பவர்கள் நாய்களை கொன்று புதைக்காது தண்ணீர் நிலைகளில் எறிந்துள்ளனர்.  வீட்டு கழிவு நீர் வாய்க்காலுகள் வெயில் காலத்திலும் வெள்ள ஓட்டம் இல்லாது நாற்றம் எடுத்து தான் இருக்கும்.   மழை வந்தவுடன் கழிவு நீர்கள் தெருவுக்கு வந்துவிட்டது . 

 இது தேனி, மதுரை, திருநெல்வேலி என மட்டும் இல்லாது நாகரிகத்திற்க்கு பெயர் கொண்ட நாகர்கோவிலிலும் இதே காட்சி தான்.  பேருந்து நிலையம் சாக்கடையாக தான் உள்ளது.  வாழையை நட்டு விட்டால் அடுத்த மழைக்குள்ளாக காய் காய்த்து விடும் என ஒருவர் தன் கோபத்தை வார்த்தையால் உதிர்த்து விட்டு சென்று கொண்டிருந்தார்.  இந்நிலைகளை காணும் போது நமது கவிஞசர்களை போன்று மழையே மழையே வா வா என அழைக்கவா அல்லது நமது நர்சரி மழலைகளை போல் மழையே மழையே போ போ என சொல்லவா என குழப்பமாக இருந்தது.

நெல்லை நாகர்கோயில் சிறப்பு பேருந்து என்பதால் பயணம் சிறப்பாக இருந்தது. வழியில் எங்கும் நிறுத்தம் இல்லை மேலும் 1.15 மணி நேரத்தில் நமது காரில் வருவது போல் நாகர்கோயில் வந்தடையலாம். (இது போன்று நெல்லை மதுரை பேருந்து இருந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும் என தோன்றியது. காரணம் நெல்லை மக்கள் பல பொதுத் தேர்வுகளுக்கு, வேலைப்பதிவுகளுக்கு என மதுரை தான் செல்ல வேண்டியுள்ளது. பட்டி தொட்டி கடந்து மதுரை சென்றடைவதுற்க்குள் நேரம் கடந்து விடும்!!)
நான்கு வழிச் சாலை பயணமே ஒரு அழகு தான்.  ஓட்டுனர் தான் அவ்வபோது அலைபேசியில் பேசி பதைபதைக்க வைத்து கொண்டிருந்தார். ஆனால் நாங்கள் இந்த பேருந்தை பிடிக்கும் முன்பு எங்கள் வீட்டின் அருகிலிருந்து புது பேருந்து நிலையம் வர வேறு ஒரு லோக்கல் பேருந்தில் வர வேண்டியிருந்தது.  ஒரு மழையிலே குண்டும் குழியுமாக உடைந்த ரோட்டில், ரோடு எங்கு வாய்க்கால் எங்கு என சரிவர காண இயலாது குருட்டாம் போக்காக வரும் பேருந்தில் இருந்த மனநிலை பரிதாபமாகவே இருந்தது.


சாதாரண மக்களுக்கு என ஒற்றை அறை குடியிருப்புக்கள், உடைந்த குண்டும் குழியுமான ரோடுகள், ஒழுகும் பேருந்து, இலவசம் என்ற பெயரில் உலகிலே ஆகாத நாற்றம் பிடித்த அரிசி , சுத்திகரிக்க படாத சீனி, (ரேஷன் கடைக்காரனின் ஆக்ரோஷமான திட்டும்தான்) நோய் தாக்கினால் சிகித்சை பெற என சுத்தம் இல்லாத அரசு மருத்துவ மனைகள், பன்றிகள் மேயும் அரசு பள்ளிகள் என மக்களை புழுவென என்னும் அதிகாரிகளையும் அரசியல்வாதிகளையும் எண்ணிகொண்டே பயணித்து வந்தடைந்தேன் நாகர்கோயிலில்……….

16 Nov 2010

மனித பூச்சி கொல்லி மருந்து-என்டோன் சல்ஃபோன்



கேரளா அரசியல் தளத்தை சமீப நாட்களாக ஆட்டம் கொள்ள  வைக்கும் பிரச்சனையே என்டோன் சல்ஃபோன் பூச்சி கொல்லி மருந்து!! இது பூச்சிகளை மட்டும் அல்ல மனிதர்களையும் கொல்கின்றது என்பதே இப்போதுள்ள பிரச்சனை.



வேளாண்மை அமைச்சர் ரமேஷ் தன் பங்கு கருத்தை இப்படியாக கூறியுள்ளார் இதை அரசியல் பண்ணாதீர்கள், மனித துயரமே இது என!. ஆனால் இத்துயரம் அரசியல் லாப முதலைகளால்  மக்கள் தலையில் நிர்பந்தமாக கட்டி வைக்கபட்டதே என்று மறுக்க இயலுமா?

 என்டோன் சல்ஃபோன் என்பது அமெரிக்கர்களால்  1950  ல் தயாரித்த  பூச்சி கொல்லி மருந்தாகும். அமெரிக்க அரசால் அங்கிகரிக்க பட்டு பல நாடுகளுக்கு விற்க்கவும் பட்டது. 2002 ல் இதனால் வரும்  பாதிப்பை பற்றி அறிந்து  அமெரிக்கா மீன் மற்றும் இயற்கைவளத் துறையும் சேர்ந்து இதன் பயண்பாட்டை தடை செய்ய கூறியுள்ளது.  உலகலாவியலாக 2002 துவங்கி இதன் தீமையை பற்றி கதைக்க ஆரம்பித்து விட்டானர். 2010 ல் தான்  ஆஸ்த்த்ரேலியா,அமெரிக்க, நியூஸ்லண்டு, கனடா போன்ற நாடுகளில் தடை செய்ய பட்ட்து. கனடா ஒரு படி மேலை போய் பயண்படுத்துவதை தடை செய்துள்ளது,  மற்று நாடுகளுக்கு விற்பதற்க்கு அல்ல!

இந்தியா இதன் மிக பெரிய வாடிக்கையாளராகும்.  4500 டண் உள் நாட்டு பயண்பாட்டுக்கும் 4000 டண் ஏற்றுமதி செய்யவும் தயாரிக்க படுவதாக கணக்கிடபட்டுள்ளது. சிறப்பாக கேரளாவில் பின் தங்கிய  பகுதியான காஸர்கோடு என்ற  பகுதியில் 1976 துவங்கி 4700 ஏக்கர் முந்திரி பருப்பு தோட்டத்திற்க்கு  ஹெலிகாப்டர் வழி பயண்படுத்தியுள்ளனர். 

இதுவரை 12 கிராமத்தை சேர்ந்த 9000 மக்கள் நேரடியாக பாதிப்படைந்துள்ளனர்.  486 மக்கள் நோயால் பாதிப்பைடைந்தனர்,   1000 க்கு மேற்பட்ட மக்கள்  மரணமடைதனர்.  பாதிக்க பட்டவர்களின் குடும்பங்களுக்கு நஷ்ட 
ஈடாக 50 ஆயிரம் ரூபாய் கொடுக்க உத்தரவு ஆகியுள்ளது. இதிலும் கிடைக்க வேண்டியவர்கள் கிடைக்காமலும் ஏமாற்ற பட்டதும் தெரிய வந்துள்ளது.  அங்குள்ள நீர் நிலைகள் பாதிப்படைந்ததாகவும் சிறப்பாக ஆண்களில் பருவ முதிற்சி அடைவது பாதிப்படைந்தாகவும், குழந்தைகளுக்கு அசாதாரணமான நோய்களால் தாக்க பட்டதாகவும், பெண்கள் மாற்பக புற்று நோயால்
பாதிப்பு அடைந்ததும்   கண்டு பிடிக்கபட்டுள்ளது.

கேரளாவில் தடைசெய்ய பட்டதாக அறிவித்திருந்தாலும் தமிழக எல்லையில் இருந்து தடை இல்லாது வாங்கி, தற்போதும் பயண்படுத்துகின்றனர். காஸர்கோடு பற்றி தான் செய்தி வந்துள்ளது.  ஆனால் அங்குள்ள தேயிலை மற்றும் ஏல கட்டிலும் இதே மருந்து தான் தெளிக்க படுகின்றது. அச்செய்திகள் பத்திரிக்கை செய்தியாக வர வாய்ப்பு இல்லை. காரணம் அங்குள்ள மக்கள் ஏழை தமிழ் தொழிலாளர்களாகும்.

ஒவ்வொரு முறை பிரச்சனை வரும் போதும்  ஆராய்ச்சி என ஒரு குழுவை நியமித்து தப்பித்து கொள்கின்றார்கள் அரசியல்வாதிகள்.  மக்களை வரிசையில் நிற்க வைத்து எலிகளை போன்று ஆராய்ச்சி ஆராய்ச்சி என துண்புறுத்தவும் செய்கின்றனர்.  மக்கள் விலை மிக குறைவானதால் சாதாரணமான(50 ஆயிரம்) விலை கொடுத்து தப்பித்து கொள்கின்றனர்.


புறக்கணிக்க பட்டவர்களின், பாட்டாளிகளின், ஏழைகளின் கட்சியான கம்ணிஸ்டு கட்சி கட்டியாளும் கேரளாவுக்கே இந்த கதி என்றால் என்ன சொல்ல?

15 Nov 2010

அனுபந்தம்


 .

அங்கு மம்முட்டி ,மோகன்லால் ,சீமா, சோபனா நடித்த 1985 ல் வெளிவந்த "அனுபந்தம்" என்ற படம் போய் கொண்டிருந்தது. நான் பார்த்ததில் இருந்து, மம்மூட்டியும் சீமாவும் காதலித்திருப்பார்கள் ஆனால் விதிவசமாக சீமா மற்றொருவருக்கு மனைவி ஆகிவிடுவாள். ஆனால் தற்போது தனது 7 வயது மகனுடன் மம்மூட்டி ஆசிரியராக வேலை பார்க்கும் ஊருக்கு விதவையாக தஞ்சம் புகுந்திருப்பார். காதலியை 7 வயதுடைய மகனுடன் விதவையாக கண்டவுடன் நொந்து போன மம்மூட்டி ஒரு பள்ளி துவங்க உதவுவார். மேலும் அவளை தன்னுடைய மனைவியாக திருமணம் செய்ய தயாராக இருப்பதாக கூறுவார். நம்பிக்கயற்றிருந்த சீமாவுக்கு வாழ்க்கையில் சந்தோஷம் வர துவங்குகின்றது. அவளும் மறுமணம் செய்யலாம் என இருக்கும் போது தன்னுடைய 7 வயதில் மகனின் அனுமதியை பெற விரும்புகின்றார். மகனோ மாஸ்டராக ஏற்று கொண்டாலும் அம்மாவின் கணவராக ஏற்று கொள்ள முன் வரவில்லை. காதலனுக்கோ பெரும் ஏமாற்றமாக போய்விட்டது அச்சிறுவனை தன் பக்கம் கொண்டு வர இயலாது என எண்ணி மனம் உடைந்து சீமாவிடம் விடைபெறுகின்றார்.
மகனின் விருப்பம் இல்லாது இன்னொருவரின் மனைவியாக அம்மா என்ற இடத்தில் இருக்கும் சீமாவுக்கு மனம் வரவில்லை. மனசை கல்லாக்கி கொண்டு காதலருக்குமான உறவை துறக்க முடிவெடுக்கின்றார்.
பக்கத்து வீட்டில் வசிக்கும் மோகன்லால் ஒரு வங்கி மேலாளராக பணிபுரிகின்றார். அவருடைய மனைவிக்கும் அவருக்கும் ஒத்து போக இயலாமல் வாழ்க்கை ஓடுகின்றது.  சீமாவின் 7 வயது மகனால் பள்ளியில் நடந்த ஒரு விபத்தில் அவர்களுடைய 4 வயது மகன் இறந்து விடுகின்றான். வாழ்க்கையில் நடந்த இழப்பால் மீண்டும் இருவரும் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளவும் மேலும் அவர்கள் நல்ல மனமொத்த தம்பதிகளாக வாழ்க்கைக்கு திரும்புகின்றனர். ஆனால் சோபாவின் மகன் தான்தான் பக்கத்து வீட்டு பையனின் மரணத்திற்க்கு காரணம் ஆகி விட்டோம் என மன உளச்சலால் பாதிக்கப்படைகின்றான். மம்மூட்டி அவனுக்கு தைரியம் கொடுத்து பழைய நிலைக்கு மீட்டு கொண்டு வருகிறார். மம்மூட்டி விடைபெறும் நேரம் வரும் போது அக்குழந்தை என்னை விட்டு போக வேண்டாம் என கெஞ்சி அழுது , அப்பாவாக ஏற்று கொண்டு தனது அம்மாவிடம் கூட்டி வருகின்றான்.
படத்தின் சிறப்பை ஒரு ஒருவர் மற்றவர்களை மன்னிக்க முன் வருகின்றனர், ஒருவருடைய விருப்பத்தை மற்றவர்கள் மதிக்கின்றார்கள் சிறப்பாக 7 வயது குழந்தையின் உணர்வை அம்மா மதிக்கின்றாள், காதலியின் சூழலை வேதனையோடு என்றாலும் காதலனும் ஏற்று கொள்கின்றார். இவ்வாறாக அழகான மனித உறவுகளை அழகாக சொல்லியிருந்தார்கள். பெரியவர்களுடைய விருப்பம், வாழ்க்கை எல்லாம் குழந்தகளின் விருப்பம்,வாழ்வை பொறுத்து அமைகின்றது என சிறப்பாக காண முடிகின்றது.


அடுத்த நாள், கருப்பு வெள்ளை படமான "ஃபார்யமாரை சூஷிக்குக"-(மனைவிகளிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்) என தமிழில் அர்த்தம் கொள்ளும் படம். பழைய மலையாளம்  'நித்திய நாயகர்':ever green hero என பேர் கொண்ட ப்ரேம் நசீருடன் கனவு கன்னி ஷீலா, உம்மர், பாசி,சங்கராடி போன்றோர் நடித்த படம். மனைவியுடன் உள்ள கசப்பான உறவுகளால் புதிய உறவை தேடிய ஒரு பாடகனின் முடிவை பற்றியுள்ள படமாக இருந்தது. தற்போதுள்ள சூப்பர் ஸ்டார்கள் ஸ்கீர்னிலும் சாதாரண மனிதனை பிரதிபலிக்க விரும்பாது எல்லா சமயங்களிலும் புனிதர்களாகவும் நல்லவர்களாகவுமே இருக்க விரும்புவதை போல் அல்லாது உண்மையான சில பலவீனமான மனிதர்களாக வாழ்ந்து தங்கள் நடிப்பு திறமையை நிருபித்துள்ளனர். கதை விரு விருப்பாக சென்றது. எவ்விடத்திலும் முடிவு எவ்விதமாக இருக்கும் என நாம் கண்டுகொள்ளா விதம் ஒரு வித பரபரப்புடன் சென்றது.
ஷீல ஒரு டாக்டரின் காதல் மனைவியாக  பணக்கார குடும்பத்தில் மகிழ்ச்சியாக வாழ்கின்றார். அவருடைய கணவர் 6 மாத காலம் சிறப்பு படிப்புக்கு என வெளிநாடு செல்ல நேரிடுகின்றது. அப்போது பிரபல பாடகர் பிரேம் நசீரின் அறிமுகம் கிடைக்கின்றது. பாடகருடைய மனைவியோ உண்மையான அன்பிருந்தும் செயலில் அன்பை வெளிப்படுத்தாது கண்டிப்புள்ள மனைவியாக கணவரே சந்தேகித்து நச்சரித்து கொண்டே இருக்கின்றார். பாடகருக்கு டாக்டரின் மனைவியின் பாசவும் பரிவுவும் கண்டு அவரை தன் சொந்தமாக்கி கொள்ள வேண்டும் என வேட்கையால், காமம் கொண்டு நோக்க ஆரம்பிக்கின்றார். டாக்டரின் மனைவியும் பாசம் என்பதையும் தாண்டி பாடகருக்காக எதையும் துறக்க துணிகின்றாள். இருவரும் மணவிலக்கு பெற்று சட்டப்படி கணவன் மனைவியாக வேண்டும் என முடிவு எடுக்கின்றனர். ஆனால் திருமண விடுதலை பற்றி அறிந்த பாடகரின் மனைவி தற்கொலை செய்து கொள்கின்றார். பாடகர் மனைவியை கொலை செய்திருப்பாரோ என எண்ணி கலக்கம் கொண்டு பாடகருடன் செல்ல பயப்படுகின்றாள் டாக்டரின் மனைவி. வெளிநாடு திரும்பிய டாக்டர், மனைவி மற்றொருவனிடம் கள்ள காதல் கொண்டாள் என்று அறிந்தவுடன் அவனுடனே சென்று விடு என வீட்டை விட்டு துரத்தி விடுகின்றார். பாடகரின் வீட்டிற்க்கு செல்கின்றார் நாயகி! பாடகரோ நான் அழைத்த போது நீ வரவில்லை இனி உண்னை தேவையில்லை என கூறி நடு வழியில் விட்டு விட்டு ஒரு லாட்ஜில் தங்கி இருக்கின்றான். நடு வழியில் மாட்டி கொண்ட அவளை ஒரு கும்பல் கெடுத்து விடுகின்றது. மனம் நொறுங்கிய டாக்டரின் மனைவி பாடகனை குத்தி கொலை செய்து விட்டு ஜெயிலுக்கு செல்கின்றாள்.
இயக்குனர் மனிதனின் தவறிய புதிய உறவுகளுக்கான ஆசைகள், தற்போது இருக்கும் உன்னதமான உறவுகளை எவ்விதம் அழிக்கின்றது என்பதையும், மனிதர்களுடைய உறவுகள் வரம்பை தாண்டும் போது உறவில் நேசவும் பாசவும் போய் கசப்பும் வெறுப்பும் எவ்வளவு விரைவாக வருகின்றது என அழகாக சித்திரிகரித்துள்ளார். மேலும் பாடகரின் மனைவி கொஞ்சம் தன் கணவரை புரிந்து நடந்திருந்தால் பாடகரும் வழி தப்பியிருக்க மாடார். அதே போல் டாக்டர் கொஞ்சம் மனதை விசாலப்படுத்தி மனைவியை மன்னித்து ஏற்று கொண்டிருந்தால் அவள் ஜெயிலுக்கும் சென்றிருக்க மாட்டாள். படத்தில் தலைப்பு போலவே பெண்களை பல இடங்களில் புண்படுத்தும் உரையாடல் வைத்திருப்பது மறுக்க இயலாது. ஒரு இடத்தில் டாக்டர் தன் அப்பாவிடம் இப்படி கதைப்பார், பெண்களையும் கலைஞனுகளையும் நம்ப கூடாது , நீங்கதான் அவளுக்கு தேவையற்றவர்களை எல்லாம் அறிமுக படுத்தி வழி தவறி செல்ல காரணமாகி விட்டீர்கள் என . அப்பெண் பாடகரிடம் மட்டும் தான் ஏமாந்துள்ளாள்!
எது எப்படியோ ஷீலாவின் தனி திறமையான நடிப்பை காண முடிந்தது. இந்த மாதிரியுள்ள மோசமான கதாபத்திரங்களையும் தங்கள் நடிப்பால் வாழ்ந்து காட்டிய கதாநாயக நாயகிகளை பாராட்டாது இருக்க இயலாது. தன்னுடைய வாழ்க்கையில் வரும் துண்பங்கள், சோகங்களுக்கு தாங்களை காரணமாகின்றனர். ஆகயால் அவர்களிடன் பரிவு கொள்ள முடியாவிட்டாலும் மனத்திரையில் மறையாது இருக்கின்றனர்.
வால் செய்தி: ஷீல மலையாள திரையுலகில் கனவு கன்னியாக வலம் வந்தவர். மலையாளத்தில் செம்மீன் என்ற படத்தில் கதாநாயகியாக நடித்தவர் இவர்.  133 படங்களுக்கு மேல் பிரேம் நசீருடம்  கதாநாயகியாக நடித்து  கின்னஸ் சாதனை படைத்துள்ளனர்.  ஒரு மகனுடன் மகிழ்ச்சியாக சென்னையில் வாழ்ந்து கொண்டிருக்கின்றார். மகன் திரை உலகுக்கு வந்தாலும் பிராகசித்தது போல் தெரிய வில்லை. ஷீலா தற்போது மலையாளம் சின்ன திரை நிகழ்ச்சிகளில் தீர்ப்பாளராக வலம் வருவதை காண முடிகின்றது. இப்போழுதும் ஷீல ரொம்ப அழகாக உள்ளார்!!!