21 May 2023

மீராவின் படைப்புலகில் தமிழர்கள்!


 மலையாள எழுத்தாளர் கே. ஆர் மீராவின் எழுத்துக்கள் ஊடாக கடந்து போனது ஒரு சில நாட்கள். 

தகவல் செழுமை, மொழியின் இலகுவான சீரிய பயன்படுத்தல், அதில் பேசப்படும் சமூகம், அரசியல்,பெண்கள் என எல்லா அம்சங்களும் அவர் எழுத்து பக்கம் இழுத்துக் கொண்டே போனது. புத்தகத்தை நிலத்தில் வைக்க விடவில்லை என்றால் மிகையாகாது. 


மற்றைய மலையாள எழுத்தாளர்களில் இருந்து மீராவின் ஒரு சிறப்பு ,இவர்  பத்திரிகையாளராக இருந்தவர். ஆதலால் உண்மை தகவல்களை வைத்து  உண்மை, மாயை, புனைவு என கதைகளை non linear ஆக  தொகுத்து எழுதுவதில்   வல்லமை படைத்தவராக இருக்கிறார். 



 உண்மையை சொல்ல பயம் இல்லாத ஒரு துணிவு இருந்தது  மீராவின் எழுத்தில். யூதாசின் சுவிசேஷம் என்ற நாவலில் ஜெயராம் படிக்கல் என்ற கொடிய காவல் அதிகாரி பெயரை குறிப்பிட தயங்கவில்லை இவர் . 


அத்துடன் அவர் கதையிலுள்ள பெண் கதாபாத்திரங்களின் படைப்பு ஒரு அதிர்ச்சி, ஆச்சரியம் தருவதாக இருந்தது.  பெண்ணியம் , தலித்தியம், கம்யூனிசம் ,முற்போக்கு என எந்த வரையறைக்குள் நிறுத்த இயலாது,  எல்லா நிலைகளிலும் வியாபித்து இருந்தது. 


நமது பக்கத்து மாநில கதாப்பாத்திரங்கள் என்பதால் அன்னியம் இல்லாது நெருக்கமாக இருந்தது. 


மீரா சாது என்ற கதையில் வரும்  இயல்புக்கு மீறிய செயலால் ஜெயிலுக்கு  அனுப்ப வேண்டிய துளசி என்ற கதாப்பாத்திரத்தை,  இந்தியாவில் உள்ள விதவைகள் நகரம் என்று அறியப்படும் பிருந்தாவத்திற்கு அனுப்பி , கிருஷ்ணன் பெயரால் பெண்கள் மையல் கொண்டு இருக்கும் காதல், ராதா , மீரா என்ற விளக்கம் ஊடாக பெண்களின் ஆண்கள் மேலுள்ள கண் மூடித்தனமான காதல், அவர்கள் முடிவு என சுவாரசியமாக திகில் கொள்ளும் விதம் கதையை நகத்தி இருப்பார். 


இத்தனைக்கும் அப்பாற்பட்டு கேரளா கொல்லம் மாவட்டத்தை சேர்ந்த இவர் , திண்டுக்கல் காந்திகிராம பல்கலைகழகத்தில்  தனது முதுகலை பட்டத்தை முடித்து இருந்ததால் ;  கேரளாவில் இருந்து தமிழர்களை பார்ப்பதை போல அல்லாது, தமிழகத்தில் கல்வி கற்றவர் , தமிழர்கள் வாழ்வை அருகில் இருந்து பார்த்தவர்  என்பதால்; இவருடைய தமிழர் கதாப்பாத்திரப் படைப்பு மேல்  ஆவல் தொற்றிக் கொண்டது. 



நான் மூல மொழி மலையாளத்தில் வாசிப்புவள், மலையாள நாட்டுடன் பல வகையில் இணைந்தவள் என்பதால், இவர் கதைகளில் கொண்டு வரும் தமிழர் கதாப்பாத்திரம் மேல் ஒரு ஆர்வம், அக்கறை இருந்தது.  ஆனால் ஒரு பானை அமிர்தத்தை ஒரு துளி விஷம் கெடுப்பது போல தமிழர்களை பற்றிய பார்வை கேரளா பொது புத்தியோடு இணைந்து இருப்பது வருத்தம் மட்டுமல்ல அதிர்ச்சியையும் தந்தது..


பாண்டி, தமிழன் ,கறுத்த, தடித்த, சிவத்த கண்கள் போன்ற வார்த்தைகளால் தமிழர்களை  வன்மத்துடனே அடையாளப்படுத்தி இருந்தார். ஒரு வேளை கேரளா வாசகர்களுக்கு எழுதியதால் அப்படியோ என்றும் தோன்றியது. 


கருப்பு தமிழர்களோடு இணைந்தது மட்டும் தானா?   தடித்தவர்கள் மலையாளியாக இருப்பது இல்லையா? வரலாற்றை திறம்பட எழுத தெரிந்த மீராவிற்கு ' தமிழன் ' என்ற சொல்லாடலில் துவங்கி தமிழரை அடையாளப்படுத்தலில் உள்ள மனச் சிக்கல் என்னவாக இருக்கும் என்றும் புரியவில்லை. 


இன்றைய வேகத்தில் என்றால் , தமிழ் எழுத்தாளர்களை போல, ஒருவேளை தமிழ் எழுத்தாளர்களை விட தமிழ்  வெளியில் பிரபலமாக போகிறார் மீரா.   தமிழக  வாசகர்கள் நிரம்பிய மேடையில் இருக்க உள்ளார். ஆனால் மீராவின் இலக்கிய படைப்பு  தமிழ் இனம் சார்ந்த பொதுப்புத்தியில் இருந்து  விலகாது இருப்பதின் காரணத்தை கேள்விகளோடு அவரை பின் தொடரும், சிலர்  துரத்துவார்கள். 


இன மொழி துவேஷம்  மனிதர்களை எளிதில் தாக்க கூடியது.  இன துவேஷம் எழுத்தில் கூட வரக்கூடாது. அது நீடிய ஒரு தாக்கத்தை சமூகத்திற்குள் நிலைநாட்டும் என்பதில் சந்தேகம் இல்லை. . 


சேதன் பகத் தனது "மூன்று முட்டாள்கள்" நாவலில் குஜராத்தில் இஸ்லாமிய மக்கள் மீதான வெறுப்பை எழுத்து படைப்பு மூலம் எப்படி உருவாக்கினர் என்று குறிப்பிட்டு இருப்பார்.


சமீபத்தில் கண்ட திரைப்படம்   " நண்பகல் நேரத்து மயக்கங்கள் ' திரைப்படத்தில் கூட மூன்று முறை பாண்டி என்ற சொல்லை பயன்படுத்தி இருந்தனர். அதனாலே அந்த திரைப்படம் 30 வருடங்களுக்கு முன்னால் உள்ள திரைப்படங்களில் இருந்து நகரவில்லை என்று தோன்றியது. 


மீரா, தங்களுக்காக கோயில் கட்ட வர தயங்காத முரட்டு பக்தர்கள் உருவாகி வருகின்றனர் தமிழகத்தில் என்று அறியத் தருகிறேன்.. உங்கள் வாசகர்கள் மலையாளிகள் மட்டுமல்ல கோடி தமிழர்களும் உண்டு. அது பல கோடிகளாக மாறவும் வாய்ப்பு உண்டு. உங்களை அழைத்து ,இலக்கிய கூட்டம் நடத்த  உலக அளவில் தமிழர்கள் போட்டி போட உள்ளார்கள். 


அப்போதும் என்னை போன்ற எளியவர்கள், எதனால் தமிழர்களை பொது புத்தியுடன் உங்கள் கதையில் பயன்படுத்துகிறீர்கள் என்ற கேள்வியை முன் வைப்போம். நீங்கள் பதில் தர வேண்டி வரும்.

0 Comments:

Post a Comment