6 Nov 2021

ஜெய்பீம் (Jai Bhim ) திரைப்படத்தில் குறிப்பிட்ட ராஜன் வழக்கு- கேரளாவின் ஜனநாயக கொடியில் ஒரு பூ என்றும் கண்ணீரில் மலர்ந்து நிற்கும்

 ஒரு அரசு கல்லூரி  பேராசிரியரான தந்தை ஈஸ்வர வாரியர், தாய் மற்றும் ஒரு சகோதரியுடன் நடுத்தர வர்க்க குடும்பத்தின் பிறந்து வளர்ந்த  ராஜன் காணாமல் ஆக்கப்படும் போது பொறியியல் கல்லூரியில் இறுதி ஆண்டு மாணவர். குடும்பத்தின் ஒரே நம்பிக்கையாக இருந்த ராஜன் படிப்பில் சிறந்த  மாணவரும் ஆசிரியர்களிடம்  மிகவும் மரியாதையாக நடந்து கொள்ளும்  மாணவராகவும் இருந்துள்ளார்.  இசை, நாடகம் மற்றும் பிற கலைத் துறையில் ஈடுபட்டு வந்த ராஜன், 1973-74ல் தனது கல்லூரியில் கலைச் சங்கத்தின் செயலாளராக இருந்துள்ளார்.  எந்த வகையான அரசியல் அல்லது புறநிலை நடவடிக்கைகளிலும் ஈடுபடவில்லை என்று கூறப்படுகிறது.

கேரளாவில் பெரும்பாலும் வடக்கு மாவட்டங்களான கண்ணூர் மற்றும் வயநாட்டில் நக்சல் செயல்பாடுகல் இருந்த காலகட்டம். பிப்ரவரி 28, 1976 அன்று  கோழிக்கோடு மாவட்டத்தில் உள்ள காயண்ணா என்ற இடத்தில் உள்ள காவல் நிலையம் மீது இரவு நேரத்தில் நக்சல்கள் தாக்குதல் நடத்தினர்.  ரோந்து பணியில் இருந்த போலீஸ் கான்ஸ்டபிள் மற்றும் ஸ்டேஷனில் இருந்த காவலர்களை தாக்கி விட்டு காவல் நிலையத்தில் இருந்த துப்பாக்கிகளை நக்சலைட் எடுத்துச் சென்றதாக கூறப்படுகிறது.  இச்சம்பவத்தில் REC Calicut மாணவர்கள் சிலருக்கு தொடர்பு இருப்பதாக போலீசார் சந்தேகிக்கின்றனர். இதற்குக் காரணம், REC-ல் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த ஏராளமான மாணவர்கள் படித்து வந்திருந்தனர்.

 

இது நடந்து ஓரிரு நாட்களுக்குப் பிறகு, 1976 ஆம் ஆண்டு மார்ச் 1 ஆம் தேதி கோழிக்கோடு ஃபெரூக் கல்லூரியில் நடந்த கலைவிழாவில் பங்கேற்று விட்டு  மாணவர்கள்  அதிகாலை 3 மணியளவில், விடுதியில் ஆசிரியர்களுடன் வந்து சேர்ந்தனர். அந்நேரம் அங்கு வந்த  போலீஸார் ​​பி. ராஜன் என்ற இறுதியாண்டு மாணவரை அழைத்துச் சென்றனர்.  உடனடியாக முதல்வர் மற்றும் இயந்திரவியல் பேராசிரியர் குன்னமங்கலம் காவல் நிலையத்திற்கு சென்று தங்கள் கல்லூரி மாணவர் ராஜனை பற்றி விசாரித்தனர். குன்னமங்கலம் போலீசார் இது குறித்து தங்களுக்கு எந்த தகவலும் இல்லை என்றும், கோழிக்கோடு நகருக்கு அருகில் உள்ள மலூர்குன்னுவில் உள்ள சிறப்பு ஆயுதப்படை போலீஸ் (எஸ்ஏபி) முகாமில் விசாரிக்க பரிந்துரைத்தனர். முகாமுக்குச் சென்று விசாரித்து இருந்தாலும் மாணவரைப் பற்றி  எந்தத் தகவலும் கிடைக்கவில்லை. 

அடுத்த நாள் பி, சாத்தமங்கலத்தில் டைப் ரைட்டிங் இன்ஸ்டிட்யூட் நடத்தி வந்திருந்த மற்றொரு ராஜன், ஹாஸ்டலில் வசிக்கும் ஜோசப் சாலி ஆகிய இருவரையும் காக்காயத்தில் நக்சலைட் தாக்குதலில் ஈடுபட்டவர்களை விசாரிக்க பிரத்யேகமாக அமைக்கப்பட்டிருந்த  போலீஸ் முகாமுக்கு அழைத்துச் செல்லப்பட்டது பின்னர் தெரிய வந்தது.  இந்த முகாமில் உள்துறை அமைச்சர் கருணாகரனின் செல்லப்பிள்ளையாக இருந்த  குற்றப்பிரிவு டிஐஜி ஜெயராம் படிக்கல் தலைமை வகித்து வந்தார். ஜெயராம் படிக்கல்  அப்போது இங்கிலாந்து  ​​ஸ்காட்லாந்து யார்டில் இருந்து சிறப்பு போலீஸ் பயிற்சி பெற்று திரும்பியிருந்தார் இந்த முகாமில் பயன்படுத்தப்படும் சித்திரவதை முறைகளில் ஒன்று 'உருட்டல்'.  குற்றவாளிகள் என சந்தேகிக்கும்  நபரை மேசையில் நிர்வாணமாக படுக்க வைத்து, காவலர்களால் ஒரு மர உருளை அவர் மீது இடுப்பு முதல் குதிகால் வரை உருட்டப்படும் தண்டனை ஆகும். 

காக்காயம் முகாமில் ராஜன் இப்படி சித்திரவதை செய்யப்படுவதை தாங்கள் பார்த்ததாக ராஜன் மற்றும் ஜோசப் சாலி ஆகியோர் நீதிமன்றத்தில் சாட்சியம் அளித்துள்ளனர்.   இந்த மனிதாபிமானமற்ற சித்திரவதையில் ராஜன் கொல்லப்பட்டு பின்னர் அவரது உடலை எடுத்து கொண்டு போய் மலையில்  வீசியிருக்கலாம்  அல்லது கனமான பாறாங்கற்களில் கட்டி காக்கயம் அணையின் ஆழத்திற்கு இறக்கியிருக்கலாம் என்று சந்தேகிக்கப் பட்டது. ஆனால் பிற்பாடு சாக்கில் கட்டி எடுத்து போன உடலை பெட்ரோல் ஊறி எரித்து சாம்பலை நதியில் எறிந்தனர் என்ற தகவல்  கிடைத்தது. பின்னர் நடத்தப்பட்ட விசாரணையில் இறந்த உடலின் பாகங்கள் அல்லது அதன் எச்சங்கள் எதுவும் கிடைக்கவில்லை.

ராஜன் கைது செய்யப்பட  நக்சல் தொடர்பு என்று அரசு கூறியிருந்தாலும் அப்போதைய உள் துறை அமைச்சராக இருந்த கருணாகரன்; கல்லூரி நிகழ்விற்கு வந்த போது மாணவர் ராஜன் பாடிய பாடலில் அமைச்சரை கேலி செய்த வரிகள் இருந்ததே கொலைக்கு காரணம் என்றும் சொல்லப்பட்டது.

 


பொறியியல் கல்லூரி முதல்வர் மற்றும் விடுதி பொறுப்பான பேராசிரியரும் ராஜனின் தந்தையிடம் முதல் மந்திரியை அணுக கூறுகின்றனர். அப்போது சி.அச்சுத மேனன் கேரள முதல்வராகவும், காங்கிரஸ்-கம்யூனிஸ்ட் கூட்டணியில் கே.கருணாகரன் உள்துறை அமைச்சராகவும் இருந்த காலம். . தன் தனிப்பட்ட தேவைக்கு  அணுகுவதில்லை, என் மகன் குற்றம் செய்திருக்க மாட்டான், அவனை திருப்பி அனுப்புவார்கள் என்று கூறிய  தந்தை மகனுக்காக  காத்து இருக்கிறார். மகனைப் பற்றி எந்த தகவலும் கிடைக்காத நிலையில் ராஜனின் தந்தை உள்துறை அமைச்சர் மற்றும் முதலமைச்சரிடம் பல முறை தன் மகனை கண்டு பிடித்து தரக்கூறி   பல கோரிக்கைகளை முன்வைத்தார். ஆனால் அவரது கோரிக்கைகள் அனைத்தும் அதிகாரிகளின் காதுகளில் விழவில்லை. அதிகாரத்தில் இருந்தவர்கள் தந்தைக்கு ஒரு  ஆறுதல் வார்த்தை கூட சொல்லவில்லை.

காவல்துறையினரால் அழைத்துச் செல்லப்பட்ட தனது மகன் காணாமல் போனதற்குப் பின்னால் உள்ள உண்மையை வெளிக் கொண்டு வர ராஜனின் தந்தை டி.வி. ஈச்சர வாரியார், கேரள உயர் நீதிமன்றத்தில் , ஏப்ரல் 1977 இல் அவர் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார். சுதந்திர கேரளாவில் தொடுத்த முதல் ஆட்கொணர்வு மனு இதுவே. ராஜன் காணாமல் போன வழக்கு மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்டபோது, ​​அவர் காவல்துறையால் கைது செய்யப்படவில்லை என்று உள்துறை அமைச்சர் கருணாகரன் அறிக்கை வெளியிட்டார். ஆனால் வழக்கு நீதிமன்றம் வந்த கோழிக்கோடு றீஜினல் கல்லூரி( REC ) ​​ வளாகத்தில் இருந்து  ராஜன் காவல்துறையால் கைது செய்து காவலில் வைக்கப்பட்டுள்ளார் என்பதை மறுக்க இயலவில்லை. இதனால் பொய் தகவல் கொடுத்த கருணாகரன் முதல் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டி வந்தது.


உண்மையைத் தேடுவதில் ராஜனின்  தந்தை தளராமல் அடுத்த 30 ஆண்டுகளாக தனது  மரணம் வரை தனி ஆளாக  சட்டப் போராட்டம் நடத்தி வந்தார். ‘ஒரு தந்தையின் நினைவுகள் என்ற தனது புத்தகத்தில் எழுதுகிறார், தன் மகனைக் கொன்றதாக காவல்துறை ஒப்புக் கொள்ளும் வரையிலும்  தனது  போராட்டத்தைக் கைவிட போவதில்லை. பேராசிரியர் ஈச்சர வாரியர் கேரளாவில் அறியப்பட்ட ஒரு மனித உரிமை ஆர்வலராகவும் இருந்தார், மேலும் இந்தியாவில் மனித உரிமைகள் பிரச்சினைகளில் விடாமுயற்சி மற்றும் அச்சமின்மையின் அடையாளமாக இருந்தார். இந்தியா,  காவல் துறையின் மீது ஜனநாயகக் கட்டுப்பாட்டை வளர்க்க தவறினது இந்திய ஜனநாயகத்தால் தீர்க்கப்பட வேண்டிய மிகப்பெரிய சவாலாக இருந்தது.

 
ராஜன் காணாமல் போனதற்குக் காரணமான காவல்துறை அதிகாரி சப்-இன்ஸ்பெக்டர் புலிகோடன் நாராயணன்,  வேலாயுதன்,  பீரான், ஜெயராஜன் மற்றும் லாரன்ஸ் ஆகியோர் ராஜனை பெஞ்சில் உருட்டிக்  கொலை செய்தனர் என்பதை உடன் இருந்த சாலி மற்றும் இன்னொரு ராஜன் தெரிவித்து இருந்தும், ராஜனின் உடல் கிடைக்கவில்லை என்பதால் கேரளா உயர்மன்றத்தால் தண்டிக்கப்பட்டிருந்தும்; உச்ச மன்றத்தால்   ராஜன் கொல்லப்பட்டதற்கு தகுந்த ஆதாரம் இல்லை என்று வழக்கு தள்ளுபடி ஆனது. பிற்காலம் புலிகோடன் நாராயணன் துணைக் கண்காணிப்பாளராகப் பதவி உயர்வு பெற்றார். கருணாகரன் பல முறை கேரளா அரசின் முதல் அமைச்சராக இருந்து வந்தார்.


ஓய்வு பெற்ற இந்தி பேராசிரியான ஈச்சார வாரியர், 'ஒரு தந்தையின் நினைவுகள்' என்ற புத்தகத்தை  எழுதி 2004 ல் பிரசுரித்தார்.  காவல்துறை ஒப்புக் கொள்ளும் வரை தனது போராட்டத்தை கைவிட போவதில்லை என புத்தகத்தில் குறிப்பிட்டு இருந்தார். பிற்பாடு  இச்சம்பவத்தில் உள்ள கொடூரத்தைசவம்தீனிகள்’ என்ற புத்தகம் வழியாக புறம் உலகிற்கு சி.ஆர்.ஓமனக்குட்டன் என்பவர் எழுதி அம்பலப்படுதினார். பிறவி என்ற திரைப்படம் இந்த சம்பவத்தை முன்னிறுத்தி வந்தது. 

தன் மகன் காணாமல் போனதை கேள்விப்பட்டு ராஜனின் தாயார்  மனநலம் குன்றி இறந்து போனார். ஈச்சர வாரியர் தனக்கான நீதி கிடைககதே  2006 ல் இறந்தும் போனார்.

 என் அப்பாவி குழந்தையை

அவன் இறந்த பிறகும்

மழையில் நிற்க வைப்பது ஏன்?

 நான் கதவை மூடுவதில்லை.

மழை உள்ளே அடித்து

என்னை நனைக்கட்டும்.

 என் கண்ணுக்குத் தெரியாதமகன்

தனது தந்தை ஒருபோதும் கதவை மூடவில்லை 

என்பதை அறியட்டும், ”.

0 Comments:

Post a Comment