16 Jul 2021

இமையத்தின் பிற்போக்குத்தன கருத்துக்கள் கொண்ட ”செல்லாத பணம்”

 
”செல்லாத பணம்” க்ரியா பதிப்பகம் ஊடாக  2018 வெளிவந்த எழுத்தாளர் இமையத்தின் நூல் ஆகும் . இது 2020 ஆம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருது பெற்றது.

[caption id="attachment_45693" align="aligncenter" width="297"] 
Late Artist Ilayaraja's paintings from google[/caption]

காதலித்து திருமணம் செய்த பெண், தன் கணவனின் மேலுள்ள கோபத்தில் தீக்குளித்து தற்கொலைக்கு முயல்கயில் பெற்றோர், சகோதரன், கணவன் செயல்பாடுகள் எவ்வாறு இருந்தது என்பதே இதன் ஒற்றைவரிக் கதை .

முக்கிய கதாப்பாத்திரங்கள் தீக்குளித்த ரேவதி, கணவன் ஆட்டோ ஓட்டுனரும் குடிகாரனுமான ரவி, ரேவதியின் அண்ணன் முருகன், தந்தை நடேசன், தாயார அமராவதி, அண்ணி அருண்மொழி இவர்களை கொண்டு  கதையை நகத்தியுள்ளார்.

எம் என் சியில் பணிபுரியும் அண்ணன் அண்ணி,  ஆங்கிலம் உரையாடும் கதாப்பாத்திரம் என இந்த  கதையின் காலவெளியை தற்காலத்துடையது என அறிமுகப்படுத்தி விட்டார் கதை ஆசிரியர்.

 

கதை அதன் போக்கில் போகும். வாசிப்பவர்கள் அவர்வர் தராதரம், சிந்தனையோட்டம், கல்வி சூழலில் நின்று விளங்கிக் கொள்ளலாம் என்பதே இக்கதையின் சிறப்பு.  கதையின் மையக்கருத்து அல்லது கதையின் நோக்கம் என ஆசிரியர் எதையும் கையாளவில்லை. அறமோ, வாழ்வின் தர்சனமோ அற்று தட்டையான கதை மாந்தர்களுடன்  வெறும் சாரமற்ற உரையாடல்களுடன் கதை நடர்கிறது.

அருண் மொழி, மற்றும் ரவியின் உரையாடல்கள் மட்டுமே ஓரளவேனும் சிந்தனைக்கு உள்ளாகுவது.  ஆனால் இவர்கள் அடங்கிய கதைப்பக்கங்கள் வெறும் ஓரிரு பக்கங்களில் மட்டுமே உள்ளது.  மற்றைய 219 பக்கவும் வெறுப்பும், கோபவும் ஏச்சும் பேச்சும், புலம்பலும் தற்பெருமைகளும் மட்டுமே.

ஜாதி மாறி, தராதரம் இல்லாது கல்யாணம் செய்து விட்டாளே என புலமபும் பெற்றோர்கள்.  கதை முடியும் தருவாயிலும் தங்கள் பார்வையை திருத்தியதாகவோ, மகளை ஏற்றுக்கொண்டதாகவோ இல்லை.  அவள் சாகட்டும் அவனோடு வாழ வேண்டாம் என்ற உரையாடல்கள், தாயே மகளை திட்டும்போது அறுதலி , முண்டச்சி போன்ற வார்த்தைப் பிரயோகங்கள் மட்டமானது.   பெற்றவர்கள் சொல்பேச்சு கேட்காது திருமணம் செய்யும் பெண்ணை தாய் அறுதலியாகக்கூட ஏற்றுக்கொள்கிறார்,  சாகட்டும்  என்பது போன்ற  வசைபாடல்கள் இன்னும் பிள்ளைகளை பெற்றவர்களின் உடைமைகள் போன்ற  காலம் சென்ற கருத்தாக்கங்களை தாங்கி பிடிப்பவையாகவே உள்ளது.

பிரதான கதாப்பாத்திரம் ஆசிரியரான தந்தை. ஆசிரியருக்கான எந்த மனவளர்ச்சியும் அற்று, பணத்திமிர் பிடித்த, அற்ப பெருமை கொண்ட ஒரு முதியவர்.  மகள் காதலிக்கிறாள் என தெரிந்ததும் விரும்பினவனோடு ஓடிப்போயிடக்கூடாது என கிடைக்க இருந்த வேலையும் செய்ய விடாது வீட்டில் அடைத்து வைக்கின்றனர்.   ஆனால் அதே அயோக்கியனுக்கே எப்படியோ போகட்டும் என்ற மனநிலையில் திருமணம் செய்தும் கொடுக்கின்றனர்.

தனக்கு தேவை என்றால் காலில் விழப்போவதும், மற்றவர்கள் பிரச்சினைகளை தெரிந்து கொள்ள விரும்பாத வரட்டு கவுரவம் பிடித்த தகப்பன்.  தன் மகள் மரணத்தை இழப்பாக காணும் மனம்,  பள்ளி வாகனத்தில் விபத்தில் இறந்த குழந்தை மேல் அந்த கரிசனை இல்லை.  மூன்று வீடு இருந்தும் ஒரு வீட்டில் மகளை குடியிருத்த மனமில்லாது இருந்த தகப்பன், மகளிடம் கடந்த ஆறு வருடங்களாக பேசாதிருந்த தகப்பன்  டாக்டரின் மேஜையில் ”நகை, பத்து லட்சம் பணத்தை வைத்து  எல்லாம் எடுத்துக் கொள்ளுங்கள் என் மகளை மீட்டு தாங்கள் என கெஞ்சுகிறது” அந்த இக்கட்டான சூழலிலும் தான் வைத்து இருக்கும் பணத்தால் சாதிக்கலாம் என்ற அற்ப திமிர்த்தனத்தயே காட்டுகிறது.  

Photo courtesy: Late artist Ilayaraja painting www.google.com[/caption]

அடுத்து அண்ணன். இத்தனை படித்தும்,  நகரத்தில் வேலையிலிருந்தும், தானே காதலித்து திருமணம் செய்திருந்தவனாக இருந்தும்; தங்கை விரும்பின ஒருவனை திருமணம் செய்தாள் என்ற ஆதங்கத்தில், தங்கையிடம் ஆறு வருடமாக முகம் கொடுக்காது இருந்தவன் , தங்கையை சுயகாலில் நிற்க ஊக்கப்படுத்தாது இருந்த நவீன அண்ணன் , மருத்துவ மனையில் மரணத்திற்கு போராடுகையில்  “கோடி போனாலும் பரவாயில்லை என் தங்கையை காப்பாற்றி விடுவேன் என அழுகிறது” தன் தந்தையை போலவே கல்வி பெற்றும் மாற்றம் பெறாத மூர்க்க குணம் உடைய ஆண் கதாப்பாத்திரத்தையே நினைவுப்படுத்துகிறது.  



அடுத்து அமராவதி என்ற தாய் கதாப்பாத்திரம்.   எந்த சூழலிலும் கணவன் மகன் தவறை அவர்களிடம் எடுத்துக் கூறாது, தங்கள் சமூக அந்தஸ்துக்காக மகளை பலி கொடுத்துக்கொண்டிருந்த தாய்.  இடம் கிடைக்கும் போது மருமகளை கீழ்மையாக நடத்தும் விதம், மகளின் கணவனிடம் கொண்டுள்ள மனப்பாங்கு, ”ஒற்றத்துணி இல்லாம மருத்துவர் முன் கிடைக்காளே என்ற ’கற்பு ஓலம்’, அருவருப்பாக உள்ளது.  தகப்பனும் சகோதனுக்கும் மகள் நிலையை தெரிவிக்காது மகளை எப்போதும்  தங்களுக்கு கையேந்தும் படி வைத்திருந்த விதம், மகளின் குழந்தைகளை கூட அருவருப்பாக பார்க்கும் தாய்மை.  இது போன்ற கயமை கொண்ட குணத்தை வாசகர்கள் புரிந்து கொள்ளும் விதம் கண்டிக்கும் விதம் கதையில் உரையாடல்கள் இல்லை.

அடுத்தது ரேவதி? இத்தனை அபத்தமாக கதாப்பாத்திரத்தை உருவாக்க இயலுமா?  நெஞ்சில் பச்சை குத்தியிருந்தான் என்ற ஒரே காரணத்திற்காக மணம் முடிக்க விரும்பும் சொந்த புத்தியில்லாத பிடிவாதக்காரியான, பொறியியல் பட்டதாரியான ரேவதி.   ரேவதியை மாதிரியான கதாப்பாத்திரங்கள் மேல் இரக்கம் வரவில்லை வெறுப்பு தான் வருகிறது.

அருண்மொழி கதாப்பாத்திரம் மட்டுமே ஒரே ஒரு ஆறுதல். அறிவு பூர்வமாக சிந்திக்கும், உரையாடும், செயல்படும் ஒரே ஒரு கதாப்பாத்திரம். ரவியை புரிந்து கொள்ள முயன்று ரவிக்கு உதவி அந்தஸ்தை வழங்கியிருந்தால்,  தாழ்வு மனப்பான்மை இல்லாது வாழ்ந்திருப்பார்களே என்று ஏக்கம் கொள்கிறது.

 அடுத்து ரவியின் கதாப்பாத்திரம். நல்லவனா கெட்டவனா என்று நிச்சயம் கொள்ளாத அளவிற்கு மாறிக்கொண்டே இருந்த முக்கிய  கதாப்பாத்திரம்.  கடைசி வரை ரவியை ரேவதியின் குடும்பம் புரிந்து கொள்ளவில்லை. ரேவதி குடும்பம் அடிக்கும் போதும், திட்டும் போதும் எந்த எதிர்ப்பும் இல்லாது ஏற்று கொள்கிறான்.   கடைசியில் மனைவியின் உடலை ரேவதி குடும்பம் எடுத்துக்கொண்டு போகும் மவுன சாட்சியாக ஒதுங்கி நிற்கிறான் குடிகாரனான தன்  இயலாமையினால்.

தீயிட்டு கொளுத்தின ரேவதியின் வாக்குமூலம் வாங்க வரும் போது போலிஸ் அதிகாரி வாங்கின கைலஞ்சம் ரூபாய் ஆயிரத்தை; ரேவதி இறந்து விட்டாள் என அறிந்ததும் திரும்பிக்கொடுக்கிறார்.  கையூட்டு வாங்குனதே அநியாயம், அந்த அரசு ஊழியர்களின்  அத்து மீறல்களுக்கு வக்காலத்து வாங்கும் படியாக உள்ளது.  பல இடங்களில் மீண்டும் மீண்டும்  ஒரே தூஷணவார்த்தைகள் தொடர்ந்து வருவது அலுப்பாக உள்ளது.

பெண்கள், பிறந்த வீட்டு ஆட்களாலும் துன்புறுத்தப்படும் அவலம். பெற்றவர்கள் ரவியுடன் ஓடிப்போய் விடுவாள் என்ற பயத்தில் வேலைக்கு அனுப்பவில்லை. ரவியோ எவனோடாவது ஓடிப்போயிடுவாள் என்ற  ஆச்சத்தில் வேலைக்கு அனுப்பவில்லை.  

 மொத்ததில் சாகித்ய அக்காடமி விருது கொடுக்கும் அளவிற்கு இதில் என்ன கதைக்கரு உண்டு என்றே விளங்கவில்லை. வாசகர்களை 222 பக்கம் முடியும் மட்டும் மருத்துவமனையிலே நிற்கவைத்து பார்த்த கொடூரம்.  அடுத்து தங்கள் பணத்தால் எதையும் சாதிக்கலாம் என்ற நடேசன் குடும்பத்தாரின் /மேல்த்தட்டு படித்த வர்கத்தின் அகங்காரம். இப்படி சமூகத்திற்கு எடுத்துக்காட்டு அல்லாத கதாப்பாத்திரங்களை கொண்டு கதை சொல்லியதால் சமூகத்திற்கு என்ன பலம் கிடைக்க போகிறது.

ஒரு கதை என்பது காலத்தால் அழியாத உணர்வுகளாக இருக்கவேண்டும்.  முழுக்கதையுமே  மரண வீட்டின் ஓலம்,  உணர்வு கொந்தளிப்பு , சோகம் என வாசகர்களை சிந்திக்கவிடாதே  தடுக்கும் உணர்ச்சி கொப்பளிப்பு  நாவல் இது!

2 comments:

  1. மிகக் கடுமையான விமரிசனம் வாசிக்கத் தூண்டுகிறது. நான் எங்கதை குறித்த என் கருத்தினை பகிர்ந்த பொழுது அது பெண்களை குற்றம் சாட்டி ஆண்களை கபடமற்றவர்களாக சித்தரிக்கிறது என்பது போன்ற கருத்து முன்வைக்கப் பட்டது. ஆனால் எனக்கு அந்தப் பெண்ணின் சிக்கலான மனப்போக்கினையும் அவனின் மனக்குமுறலையும் நன்கு சித்தரித்திருப்பதாகவே தோன்றியது. கதைகள் ஏதாவது மேன்மையான கருத்தினைச் சொல்ல வேண்டும் என்பதும் கதையின் நிகழ்வுகளும் சித்தரிப்பும் politically correct ஆக இருக்க வேண்டும் என நிர்ப்பந்தம் செய்வது படைப்பில் diversity இல்லாமல் செய்து விடுமோ என அஞ்சுகிறேன்.

    ReplyDelete
  2. What a review... mam...

    நான் படித்த 'ஒரு காவிரியைப் போல' என்ற திருமதி.ல‌ஷ்மி எழுதிய நாவல், இன்றளவும் பல்வேறு நேர்மறையான விஷயங்களை எடுத்துரைப்பதையும், எதிர்மறையான விஷயங்களை எதிர்கொள்வதைப் பற்றியும்... தெளிவாக, மனப்பூர்வமாக எடுத்துரைத்த நாவல்....

    நன்றி.... Mam..

    ReplyDelete