22 வருடங்களுக்கு பின் நண்பர்கள் சந்திப்பது வரை அருமையான படம். விருவிருப்பான திரைக்கதை. அதன் பின்பு அப்படத்தை காண பார்வையாளர்களுக்கு பொறுமையும் சகிப்பு தன்மையும் கொஞ்சம் அதிகமாகவே வேண்டும். விஜய்சேதுபதியின் ராமசந்திரன் என்ற கதாப்பாத்திரத்தை ஒரு பாட்டுடன் ஆளுமையா காட்டிவிட்டு அப்படியே மழுங்கலடித்து விட்டனர்.
96 ஆம் ஆண்டு பத்தாம் வகுப்பு மிடித்த நண்பர்கள் சந்தித்து கொள்கின்றனர் .22 வருடங்களுக்கு பின் ஒவ்வொருவரும் மகிழ்ச்சியான சந்திக்கும் தருணம் ஜானு மலேஷியாவில் இருந்து வருகிறார். ஜானு கதாப்பாத்திரம் அன்றைய பெண்களின் மிடுக்கை பிரதிபலிப்பது அருமை. எப்போதும் ஒரு படி முன்னே சிந்திக்கும், செயலாற்றும் பொறுப்பான கதாப்பாத்திரம். நண்பர்களை காண தன் மகளை மலேஷிவில் விட்டு விட்டு ஒரு நாள் விடுமுறை என வந்து சேர்கின்றார். ஜானுவை கண்டதும் ராமசந்திரன் தலைசுற்றி விழுகின்றாராம் வெட்கப்படுகின்றாராம்(இதுவெல்லாம் ஓவரு). பின்பு இரவானது எல்லோரும் பிரிய ராமசந்திரனிடம் ஜானுவை ஹோட்டலில் விட்டு விட்டு போகச்சொல்கின்றனர்.
நண்பி. ”அவளை கொண்டு விட்டுட்டியா” என ராமிடம் கேட்க; அடுத்து ”நீ எங்க இருக்க” என ஜானுவிடம். இப்படி இயக்குனர்; பார்வையாளர்களை அவர்கள் படுக்கை அறைக்கு அழைத்து செல்லும் தமிழ் முட்டாள் தனத்துடன் நகர்த்தி, மலேஷியா போனாளா இல்லையா என உளவியல் சென்றிமென்றுடன் முடித்துள்ளார். ஜானுவோ உன்னுடன் பேச வேண்டும், உன்னுடன் இருக்க வேண்டும் என்ற உரையாடலுடன் அழகான மனித மாண்பை வெளிப்படுத்துகின்றார். மலேஷியாவில் இருந்து வந்த தோழியை விருந்து முடிந்ததும் ஒவ்வொருவரும் தனியாக விட்டு சென்றிருப்பார்களா? அப்ப்டியே சென்றிருந்தாலும் 40 வயதை கடந்த தோழமைகள் தங்கள் நண்பர்கள் பற்றி சிறுபிள்ளைத்தனத்துடனா யோசித்திருப்பார்கள்?
நடு இரவில் ஜானுவின் அறையில் பேசிக்கொண்டு இருக்கின்றனர், இரெயிலில் பயணிக்கின்றனர், ராம் வீட்டில் தங்குகின்றனர். எல்லா நொடியிலும் இயக்குனரின் பார்வை கதையிலோ கருத்திலோ அல்ல அவர்கள் வேலியை தாண்டி நடந்து கொண்டார்களா என்ற சந்தேகப்பார்வை தான்!!! அதில் ஜானு தூங்கும் இடத்தில் தாலி சென்றிமென்றையும் புகுத்தி விட்டனர். பள்ளி குழந்தைக்காதலில் வீழ்ந்த இரு நபர்கள் வெகுநாட்கள் கடந்து பொறுப்புடன் சந்தித்து கொண்ட போது என்ன நடந்தது என்ன நடக்க்க போவுது என்ற இயக்குனரின் கொச்சை பார்வை இருக்கே?
பத்தாம் வகுப்பு மாணவன் தந்தையின் கடனால் இரவோடு இரவாக சென்னை ஓடிப்போய் வாழ்ந்தார் என்று முடித்திருந்தால் ராமசந்திரன் கதாப்பாத்திரம் தப்பித்திருக்கும். யாரோ உதவியுடன் ஜானு படிப்பதை அவதானிக்கின்றார், உடுத்தி வந்த சேலைக்கலர் கூட நினைவு இருக்கிறது. ஜானுவை பிந்தொடர்ந்த விடலை பையனைக்கூட அடித்துள்ளான் ஆனால் ஜானுவை மட்டும் நேரில் பார்க்க துணியவில்லையாம். அதற்கு வாசந்தி உதவி வேற...!!????
எல்லா தருணங்களிலும் மிகவும் சரியாக நடந்த ஆளுமை கொண்ட ஜானு தனது 40 வது வயதில் கழிவறையில் இருந்து கொண்டு கதறி கதறி அழுகின்றாராம். தன்னால் காதலன் கிரோணிக் பாச்சிலாராக இருக்கிறான் எனத்தெரிந்ததும் ”நீ கன்னி கழியாதவனா? என்ற கேள்வி வேற. அடுத்து காதலன்; நீ சந்தோஷமா இருக்கியா என்றது, நான் அமைதியா இருக்கிறேன், பிரச்சினை இல்லை என்ற மழுப்பல் பதில் வேற....பல சீனுகள் நெருடல், லாஜிக் களைந்து கொண்டது, ஒரே நாளில் சந்தித்து மகிழ்ச்சியா பிரியா வேண்டிய 40 வயது மத்திய வயது நண்பர்கள் பதின்ம வயது பிள்ளைகளை போல் அழுது வழிஞ்சி, ஜானுக்காக ஒரு மலேஷியா டிக்கட் எடுக்க வைத்து நாடகத்தனமாக மாற்றி; ஜானு என்ற கதாப்பாத்திரத்தையும் உடைத்து படத்தை முடித்துள்ளனர்.
28 வருடங்களுக்கு பின்பு சந்தித்தபோது; நாங்கள் படிக்கும் வேளையில் மிகவும் பிரபலமாக இருந்த காதல் கதையின் கதாநாயகனான நண்பனிடம் ... “இப்போது என்ன தோன்றுகின்றது உன் பள்ளி காதலை பற்றி? எனக்கேட்ட போது. அவன் மறுமொழி சிரிப்புடன் சொன்னது இப்படியாக இருந்தது, அதை நினைத்தால் ஒரு வெட்கம், சே .......அது ஒரு குழந்தைத்தனமான விளையாட்டு. காதல் என விழுந்தனால் ஒரு பெண்ணிடம் மட்டுமே பேச்சு, சிந்தனை என என் பள்ளி பருவம் சுருங்கி விட்டது. அப்படி அல்லாது நட்பின் வழி நடந்திருப்பேன் என்றால் நிறைய தோழிகள் கிடைத்திருப்பார்கள்; அன்றே உங்கள் அனைவரிடவும் நிறைய பேசியிருப்பேன் என வருத்தப்பட்டார். பள்ளி நண்பர்களுடன் மறுபடி கதைக்கும் போது ” என்னடா எப்படி இருக்கேன்னு கேட்கும் தொனியும் , உரிமையும், சுதந்திரவும் காதல் வயப்பட்டு தோல்வியை கண்டவர்களால் அனுபவிக்க இயலாது என்றே நினைக்கின்றேன். வாழ் நாள் முழுக்க ஒரு அவமானத்தின் , அவநம்பிக்கையின் சோகத்தின் ஒரு நிழல் தொடரத்தான் செய்யும்.
படிக்கும் பருவத்தில் காதலை விட நட்பு பேணுவதே கர்வம். பள்ளி நண்பர்களிடம் இப்போது கதைக்கும் போது நம்மையறியாது குழந்தைகளாக மாறி விடுகின்றோம். வாழ்க்கையில் சந்தித்த கசப்புகளை, துயர்களை மறந்து எழுகின்றோம். ஆனால் இப்படத்தில் சந்தேகப்பார்வையில் நண்பர்கள் பிரிவதே அபத்தமாக இருந்தது.
விஜயசேதுபதி கதாப்பாத்திரப் படைப்பு சொதப்பி விட்டது. ராமசந்திரன் கதாப்பாத்திரம் விமர்சனத்தை எதிர்கொண்ட காரணவும்; முழுவளர்ச்சி பெறாத வெறும் ’சென்றிமென்று இடியட்”டாக முடித்ததால் தான். மாணவிகளுடன் பேசும் முறையும் ஒரு மாணவி கண்ணால் அநியாயத்திற்கு வழிவதும் ஐயோ கொடுமை.......
96 ல் அண்ணாத்தே அண்ணாத்தே ந்னு ஒரு புள்ளை உடன் சைக்கிளில் பயணிக்கின்றது. எந்த ஊரில் இப்படியான சுதந்திரத்துடன் தமிழ் குழந்தைகள் வளர்ந்தார்கள் என அறிய ஆவலுடன் உள்ளேன். சூட்கேசில் ஜானுவின் ஒரு ஜோடி உடையையும் சேர்த்து வைத்ததுடன் படத்தை முடித்தது; ராமசந்திரனின் புகைப்பட மாணவியை பற்றி ஜானு பிரத்தியேகமாக ராமசந்திரனிடம் எடுத்துரைப்பது என அடுத்த பகுதி படத்தை எடுக்கவும் பாதை அமைத்துள்ளனர்.
இப்படி இருவர் சந்திப்பு படுக்கையுடன் முடிந்ததா?அல்லாது தொடாது தமிழ் பண்பாடு தாலி சென்றிமென்றிடன் பிரிந்து சென்றனரா என்ற இயக்குனரின் தேடுதலை முடித்துள்ளார்.
தமிழ் சமூகம்; உணர்வு சென்றிமென்று முட்டாள்த்தனத்தில் மீண்டு வந்தால் கூட இந்த இயக்குனர்கள் விடமாட்டார்கள் போல. அப்படி இரு மனிதர்களின் ஆளுமை, குணம் நலன் விருப்பம் எல்லாம் ஒரு குறுகிய பார்வையில் மையம் கொள்ள வைத்து அழகான மென்மையான, கருத்தாக்கம் கொண்ட மனித உணர்வுகளை அதை அதன் நல்ல பாதையில் வெளிப்படுத்தி கொண்டாடவேண்டியதை கதறி கதறி அழ வைத்து படத்தை முடித்தது படத்தில் மேல் இருந்த எதிர் பார்ப்பை முடித்தது ஏமாற்றமே.
ஒரு பப்பி காதலை பிரமாண்டப்படுத்தி ஒரு கேலி காதலாக மாற்றியுள்ளனர்.
இருபாடல்கள் அருமை. முதல் பாடலில் பாடல் மட்டுமல்ல காட்சி அமைப்பு கூட அழகு.
mam super review....
ReplyDeletemam really super review.... keep posting like this
ReplyDelete