23 Sept 2018

மேற்குத் தொடர்ச்சி மலை!


ஒரு திரைப்படம் எப்படி எடுக்கப்பட வேண்டும் காட்சி மொழி என்ன?திரைப்படம் என்ற ஊடகம்  எவ்வாறு  மக்களிடம் உரையாட வேண்டும் என்ற தெரிந்து கொள்ள வேண்டும் என்றால் ’மேற்குத்தொடர்ச்சி’ மலை. என்ற திரைப்படத்தை பார்த்தே தீர வேண்டும். இரானியன் படத்தை உலகப்படம் என கொண்டாடும் நம் இயக்கங்கள் தமிழில் ஒரு சிறந்த மக்கள் படம் வரும் போது பார்க்கவேண்டியதும் ரசிக்க வேண்டியதும் இது போன்ற படங்கள் மேலும் வர ஊக்கமாக  அமையும்.

தனது 11 வயது வரை கோம்பையில் பிறந்து வளர்ந்த இயக்குனர் லெனின் பாரதி, பிற்பாடு சென்னைக்கு குடிபெயிற்கின்றார். அவர் கண்டுணர்ந்த  மாந்தர்களை பற்றிய படம் தான் இது. அப்படத்தின் திரைக்கதையை இரண்டரை மணிநேரத்தில்  எழுதி முடித்தாக நேர்முகத்தில் கூறியுள்ளார்.

தமிழக கரைகாட்டில் வாழவழியற்ற சூழலில் கேரளா மலைக்காடுகளை தேடிப்புறப்பட்ட மனிதர்களின் கதை இது. கேரளா தமிழ் மலையாள மொழி அரசியல், பண்பாடு, வேலைவாய்ப்பு, மனிதர்களில் வாழ்வியல் என இப்படம் ஒரு காலத்தின் ஒரு நிலைப்பகுதியின் வரலாற்று படமாக மாறுகின்றது.  இந்த மனிதர்கள் மலைமுகடில் இருந்து ஏலக்காயை மட்டும் சுமந்து வரவில்லை தகவல்கள் பணம், கொடுக்கல் வாங்கல்கள் என மலைக்கு  கரைக்குமான பாலமாக தொடர்கின்றனர். அப்படியான சில மனிதர்களில் முக்கியமாக ரங்கசாமியின் வாழ்க்கையை சொல்வதே இக்கதை. 

ரங்கசாமி நல்லவர் மட்டுமல்ல உழைப்பாளி.  அவரின் ஆகப்பெரிய கனவு சொந்தமாக ஒரு இடம் வாங்க வேண்டும்  என்பதாகும்.  தனது திருமணத்தையும் விட ஒரு இடம் வாங்க வேண்டும், அதும் தன் தாயின் பெயரில் வேண்டும் என்பதை லட்சியமாக கொண்டு வேலை பார்த்து வருகின்றார்.

ரங்கராஜின் ஒரு நாள் என்பது அதிகாலை நாலுமணியுடன் ஒரு  கட்டன் காப்பியுடன் ஆரம்பமாகின்றது. வழியில் கடந்து செல்லும் பாம்பு, யானை ஒன்றும் அவர்களுக்கு தடையல்ல. சகஜீவிகளாகவே அவர்களுடன் அதுகளும் வாழ்ந்து வருகின்றது அல்லது அந்த ஜீவிகளுடன் மனிதர்கள் வாழ்ந்து வருகின்றனர்.

எளிய மனிதர்கள் வாழ்க்கை, கடம் சொல்லி குடிக்கும் காப்பியில் இருந்து, கழுதையுடன் மல்லுக்கட்டிய நடைபயணம், சின்ன சின்ன உரசல்கள் சண்டைகள் இட்டு, வெகு விரைவில்  சமரசமாகி, இரத்தம் கக்கி சாகும் வரை வேலை செய்யும் மனத்துணிவுடன் உழைத்தே வாழவேண்டும் என்ற வைராக்கியத்துடன்  வாழும் மக்களவர்கள். அவர்கள் உழைப்பு வெறும் பிழைப்பு சாந்தது அல்ல அவர்கள்  முதலாளியின் நலனும்  அன்பும் கலந்தது.
  
அவர்கள் மனிதர்களிடம் மட்டும் நேசமாக நடந்து கொள்ளவில்லை; அவர்களுடன் பயனிக்கும் கழுதையுடனும் பரிவுடன் நடந்து கொள்கின்றனர். கொலைக்கார யானையை கூட பரிவு கலந்த மரியாதையுடன் நோக்குகின்றனர்.  மனம் பிளர்வுபட்ட பாட்டியையும்  கேலியாக எகத்தாளமாக அல்ல; பரிவாக நோக்குகின்றனர்.  

 சீனியை வாயில் போட்டு தன் அன்பை வெளிப்படுத்தும் பெண்ணாகட்டும்,  ஏலக்காட்டு முதலாளி, கோபக்கார கங்காணி, சகாவு சாக்கோ  என எல்லா மனிதர்களும் அன்பால் பிணையப்பட்டு ஒருவருக்கு ஒருவர் உதவும் மனநிலையில் உள்ளனர்.  மலை உச்சியில் வசிக்கும் சாக்கோவின் தந்தைக்கு மகன் கொடுத்து விட்ட மருந்தை பெற்ற சாக்கோவின் அம்மா ரங்கராஜை வெறும் கையாக அனுப்பவில்லை. உங்க அம்மா எப்படி இருக்காங்க? மரச்சீனியை கொண்டு கொடு என்று  வெட்டி வைத்திருந்த கப்பை கிழங்கை  கொடுத்து விடுகின்றார்.

பஞ்சம் பிழைக்க வந்த லோகு முதலாளியாவதும், முதலாளியானதும் தனது இனமான தமிழனை, மலையாளி முதலாளிக்கு விற்கவும் தயங்கவில்லை. தொழிலாளி தலைவர் சாக்கோ மக்கள் போராட்டத்தில் உண்மையாக நிலைகொள்வதை உடைக்க மொழி அரசியலை ( மலையாளி தமிழன்(பாண்டி) எடுத்த முதலாளியை; தொழிலாளி நலனுக்காக கொலை செய்யவும் தயங்கவில்லை.

உழைப்பவர்கள் கட்சி என்ற அடையாளத்தில் நிலைகொள்ளும் கம்னீஸ்ட் கட்சியில் உள்ள ஒரு பிரிவினரின் துரோகத்தையும் வெளிகொணர்ந்தது; இயக்குனரின் எஸ்டேட் அரசியல் ஆழத்தையும், தார்மீக கோபத்தையும் நேர்மையால் விளைந்த தைரியத்தையும் தான் காட்டுகின்றது.

மீரா அத்தாவிடம் கூட  கடன் கேட்க கூச்சப்பட்டு, தன்மானத்துடன் மனம் நிறைய நன்மைகளுடன் வாழ்ந்த ரங்கு, கடைசியில் தான் ஆசையாக வாங்கி சேர்ந்த கொஞ்ச இடத்தையும் இழந்து, வேட்டிகட்டி வாழ்ந்த  தன்மான வாழ்க்கை கால்சாட்டை யூனிபோம் மாட்டி சுயம் இழந்து   அடிமையாக மாறுவதுடன்  கதை முடிகிறது.

இந்த படம், விவசாய நிலத்தை இழந்த விவசாயியை மட்டுமல்ல சில்லறை  முதலாளிகளை பண்ணாட்டு நிறுவனங்களிடம்  இழந்து தவிக்கும் உள்ளூர் முதலாளிகள் ; கல்விகற்று அடிமைகளாக வேலை பார்க்க வேண்டிவந்த  புதிய  தலைமுறை பற்றிய திரைப்படவுமே இது.

காட்சிப்படுத்தியிருக்கும் அழகு அலாதி. மேற்குத்தொடர்சி மலை என்பதே ஆச்சரியத்தின், அற்புதங்கள் நிரம்பிய செழுமையான காடுகள் நிரம்பியது தான். ஏரியல் ஷாட்டை மிகவும் அழகாக, தேவையான இடத்தில் பயண்படுத்தியிருக்கும் நுட்ப- அம்சம் கொண்ட படம் இது. வெறும் நடிப்புடன் நிறுத்தாது காட்சிகளும் கதையும் சூழலும் மாறும் போது மனிதனின் உடல் மொழியில் வரும் சிறு மாற்றங்களை கூட நுட்பமாக காட்சிபடுத்தியுள்ளனர். தோராது பெய்து கொண்டிருக்கும் மழை, மலைவேலையாட்கள் உடுத்தும் உடை, அணியும் கொங்காணி, அவர்கள் ஊர் டீக்கடைகள் எல்லாம் ஆராய்ச்சி மேற்கொண்டு அதே காலகட்டத்திற்கு அழைத்து சென்று விட்டனர்.

சினிமாத்தனம் இல்லா இயல்பான வாழ்க்கையை மிகவும் யதார்த்தமாக சொல்லிய படம் இது. சினிமா என்றால் குத்தாட்டம் புளித்த ஜோக், தனிநபர் வணக்கம் இல்லாது நிஜ-சினிமா அல்லது வாழ்வியல் சினிமா என்ற வகையில்  மனிதர்களை கதையில் வாழவைத்து படமாக்கியுள்ள இயக்குனரை பாராட்டியே ஆகவேண்டும்.

திரைக்கதையில்  கதாப்பாத்திர படைப்பை; காட்சி அமைப்பையும்  கடந்து அவர்கள் பேசும் உள்ளூர்  உரையாடல்கள் ஊடாக நகத்தியிருப்பது சிறப்பு. நல்லதையே நினைத்து,  சுயநலன் தேடாது நன்றாகவே வாழ்ந்த மனிதர்கள்;   தங்களுக்கு வெளியிலான உலகத்தை தெரிந்திருக்காத மக்கள் உலக அரசியலில், உலகமய வியாபாரத்தில் சிக்கி சின்னாபின்னமாக அழிந்த அவலம் ஒரு திரைப்படமாக  உருவாக்கிய படக்குழுவினர்களுக்கு வாழ்த்துக்கள்.





பணம் ஈட்டுவது, ஆடம்பரம், பாலியல் இன்பம், புகழ் மோகம்  என படம் எடுத்துவரும் இளைஞர்கள் மத்தியில் படத்தொழிழ் நுட்பத்தை அழகியல் சார்ந்து மட்டுமல்ல சமூககருத்தாக்கத்தின் மீட்சியாக பயண்படுத்திய இயக்குனரை பாராட்டியே தீர வேண்டும்.

தயாரிப்பாளர் விஜய் சேதுபதியையும் பாராட்டவேண்டும். தான் நடிக்க வாய்ப்பில்லாத படமாக இருந்தாலும் ஒரு நல்ல திரைப்படம் சமூகத்திற்கு தரவேண்டும் என்ற நோக்கில் லாப நஷ்டத்தை முன்நிறுத்தாது சமூக விழிப்புணர்வை மட்டுமே முன்நோக்கி படத்தை இயக்கிய அவருடைய சமூக பார்வையை நல்லெண்னத்தை சீர்தூக்கி பார்க்க வேண்டியுள்ளது.

படம் வெளியாகும் முன்னே மரணப்பட்டு போன கணக்கப்பிள்ளை, மலையில் முகட்டில் ஹோட்டல் நடத்தும் அப்பத்தா, ரங்கசாமியின் மனைவியாக நடித்தவர்,   மீரா அத்தா என நடித்த அத்துணை பேரும்; எல்லோரும் நல்ல மனிதர்கள்.   உயிரோட்டமான, மனித நேயம் கொண்ட  மனிதர்களை பற்றி சொல்லிய நிஜ(ரியலிஸ்டிக்) திரைப்படம்.

இளையராஜாவில் இசை அருமை. 
எடிட்டர் விஷுவநாத் அவர்களின்கைவண்ணம் திரைப்படத்தை மென்மையாக பார்க்கும் சூழலை உருவாக்குகின்றது. தேனி ஈஷ்வரின் ஒளிபதிவு அருமையிலும் அருமை. க்லோசப் இல்லாது  நடிகரின் நடிப்பில்  அதீத நம்ப்பிக்கை வைக்காது கதையின் சாரத்தை நம்பி முன்நகத்திய அருமையான திரைப்படம் இது.


இன்று நெல்லையில் நடந்த பாராட்டுவிழாவிலும் என் மாணவர்களுடன்  பங்குபெறும் வாய்ப்பு கிட்டியது. இந்த படத்தின் வெற்றியை கொண்டாட இடது சாரிகளோ , நாம் நம்பும் சமூகப்போராளி தலைமைகளோ விரும்பவில்லை என அறிந்தேன்.. 


இது இடுக்கி சார்ந்த தோட்டதொழிலாளி அரசியல் நிலவரம் தெரியாது கோபப்படுவது ஆகும். தொழிலாளியின் உரிமையை மீட்டு எடுக்க இடதுசாரிகள் போராடினார்கள் என்பதில் எதிர்கருத்து இல்லை, ஆனால் முதலாளிகள் போடும் கேவலம் பிச்சைக்கு என தொழிலாளிகளை  ஏமாற்றினதும், கொலை செய்ததும், கொலைச் செயப்பட்டதிலும் இடதுசாரிகளின் கை உண்டு என்றால் பொய்யாகாது. 


தமிழர்கள் உரிமையை, குடியிருக்கும் இடத்தை அபகரித்து விட்டு எந்த ஆதாரவும் அற்ற நிலையில் தமிழர்கள் கொண்டு விட்டுள்ளனர். 

இது போன்ற நல்ல படங்களால் மட்டுமே மதி- மயக்கத்தில் கிடக்கும் மனிதர்களை விழிப்புணர்வு செய்ய இயலும். 

ஒரு பிரசார தொனி இல்லாது, தொண்டை கிழியும்  ஒன்றை உரையாடல் இல்லாது இயல்பாக  மனிதர்கள்  வாழ்க்கையாக உள்ள இத்திரைப்படம் வெற்றி பெற்று வேண்டும்







1 comment:

  1. மலையாள மொழி சமூக படங்களில் விழிப்புணர்வு மற்றும் வர்க்க பேதங்கள் தழுவிய விடயங்கள் முன் நிறுத்தப்படும்.தமிழக திரைப்படங்கள் மேலெழுந்து வாரியாக இவற்றை தழுவினாலும் காதல்,உட் வில்லத்தனம் இவை அடங்கிய கலவையாக இருக்கும்.மேற்கு தொடர்ச்சியில் தமிழ்- மலையாள கதை அமைப்புக்கள் இயற்கை மாறாது மக்கள் மனம்-மண் பண்பு நலன்கள் பிணைய பட்டு உள்ளது சிறப்பு.கடைசியாக முன்னேற்றம் என்ற மாற்றம் இந்த மக்களின் தொடர்ச்சி வாழ்வில் விழுந்த வெட்டா? என்று சிந்திக்க வைக்கிறது;காணாமல் போன மலை வழித்தடம்,குவிந்திருந்த நம்பிக்கை கற்கள்,உலகமயளின் கண்ணி ஆக்க பட்ட நிழல் கூட இல்ல காற்றாலை வாழ்க்கை என்று.சேற்றில் முளைத்த செந்தாமரை இந்த மேற்கு தொடர்ச்சி மலை.

    ReplyDelete