27 Jan 2018

திசை மாறி பாய்ந்த 'அருவி'

 சமீபத்தில் வெளி வந்த திரைப் படங்களில் அனைவராலும் கவரப்பட்ட படமாகும் ‘அருவி’.   பாலுமகேந்திரா பட்டறையில் மாணவராகவும் கமர்ஷியல் இயக்குநர் கே.எஸ்.ரவிகுமாரின் உதவி இயக்குனராக  பணிபுரிந்த    அருண் பிரபு புருஷோத்தமன் இயக்கிய திரைப்படம் இது.   எடுத்து சொல்லும்படியாக அதிதி பாலன் எனும் புதுமுக நடிகை அறிமுகமாகி உள்ளார். 

தன்னுடைய மகிழ்ச்சி, விருப்பம், சுதந்திரமான மனநிலையுடன்  வாழ்க்கையை சுவாரசியமாக நகர்த்தும் ஒரு இளம் பெண்ணின் வாழ்க்கையில் நடக்கும் சம்பவத்தால் என்னவானார் என்பதே கதை.

 தோழியுடன் இருசக்கிர வாகனத்தில் செல்லும் போது எதிர்பாரா விதமாக வழியில் விழுந்து விட தன்னை ஆசுவாசப்படுத்தி கொள்ள  தெருவோரக்கடையில் இளநீர்  குடிக்க, ஸ்ட்றா வழியாக எய்ட்ஸ் எனும் உயிர்கொல்லி நோயின் பிடியில் தாக்கப்பட்ட நிலையில்  கதை துவங்குகின்றது. 

தன்முன் இருந்த குடும்பம்,  கல்லூரி படிப்பு, சமூகம் என ஒவ்வொன்றாக  ஒதுக்அவளை புரக்கணித்துத ஒதுக்கி தள்ள; திசைமாறிய  பறவையாக வழிமாறி, தனிமைப்படியில் கோபத்திலும் பின்பு சோகத்திலும்  முடியும் பெண் வாழ்க்கை சமூகத்தின் முன் வைக்கும் சில கேள்விகள் தான் 'அருவி' என்ற திரைப்படம்.

விழிப்புணர்வு படம் என ஒரு சாரார் கூறுகின்றனர். 
எதற்கான விழிப்புணர்வு?
எய்ட்ஸ் என்ற நோய்க்கானதா அல்லது சுயநலவாதிகளான பெற்றோருக்கானதா அல்லது
கேடு கெட்ட இந்த சமூகத்திற்கானதா என்ற கேள்வி எழுகின்றது. ‘மிருகம்’ போன்ற எய்ட்ஸ் விழிப்புணர்வு திரைப்படங்களில் எய்ட்ஸ் வரவுது யாருக்கு என துல்லியமாக சொல்லியிருந்தது. 

ஆனால் இந்த படத்திலோ எய்ட்ஸ் வந்தது ஒரு வழியோர இள னிக்கடைகாரனிடம் இருந்து என்பது நெருடலாகத்தான் உள்ளது. கல்லூரி இளைஞசர்கள் என்றாலே ஹைபை, பஃப், மாலுகள்,  கோக் பார்ட்டி என விரும்பும் சூழலில் அவசரத்திற்கு வழியோரம் குடித்த இளனிக்கடைக்காரனிடம் இருந்து  ‘எய்ட்ஸ்’ தாக்கினது என்பது கொஞ்சம் அதீத கற்பனை தான். உயிர்கொல்லியாக 86 களில் எய்ட்ஸ்  தமிழகத்தை தாக்கி கொண்டிருந்த வேளையில் பல கட்டுக்கதைகள்  நாம் கேட்டிருப்போம்.

எய்ட்ஸ் பிடியில் மனிதன் சிக்க பல வலுவான காரணங்கள் பல இருக்க, ஏழை இளனிக்கடைக்காரன் தலையில் எய்ட்ஸின் காரணத்தை வைத்தது எவ்வகையான விழிப்புணர்வு கொடுக்கும் என சிந்திக்க வேண்டியுள்ளது.

‘முழுமையான அறிவே இந்நோயை ஒழிக்க துணை செய்யும். பாதுகாப்பு இல்லாத உடலுறவு மூலம் எ.ய்.ட்ஸ் பரவுவது; சுத்தம் செய்யாத ஊசி போன்ற பொருட்கள், பாதிக்கப்பட்டவரின் இரத்தம், பரிசோதிக்காமல் செலுத்துவது, தாயிடம் இருந்து குழந்தைக்கு ஆகிய நான்கு வகையில் மட்டுமே பரவும்.  வேறு இது காரணங்களால் பரவாது’ என மருத்துவர்கள் பரிந்துரைக்க இளனிக்கடைக்காரனை பலிகாடனாக மாற்றாது இருந்திருக்கலாம்.

இவ்வகையில்  முழு நேரப் திரைப்படம்
 லாஜிக்கை விட்டு நகர்ந்து சென்றதை  தடுத்திருக்கலாம்.  பணம் படைத்தவனுக்கான உலகம்’ என்பதை நீண்ட வசனத்தால் தோலுரிக்கும் காட்சி "பேஷ், பேஷ்" என உச்சு கொட்டலாம். ஆனால் இப்படத்தின் கதையோட்ட சட்டத்தில் இந்த கதைவசனம் எவ்விதம் வலு சேர்த்தது, கதைக்கு எவ்விதம் தேவையானது என சிந்திக்க வேண்டியுள்ளது.

ஒரு
துப்பாகியை கையாளத்தெரிந்த கூர்மையான பெண் தன் நியாயத்தை பெற எதனால் டுபாக்கூர் நிகழ்ச்சியையும் நிகழ்ச்சி தொகுப்பாளரையும் நம்பி வந்தார்?  பிற்பாடு தனது முழு விமர்சனத்தையும்  தொலைக்காட்சி நிகழ்ச்சியை பகுந்தாய்வது ஊடாகவே நகருகின்றது. 

எய்ட்ஸ்
நோயாளிக்கு தேவையான சிகித்சை தரத்தை பற்றியோ கொடுக்க வேண்டிய சுகாதார சூழலை பற்றியோ சொல்லாது ‘பணம், பணம்’ என டயலோக்கை முடித்திருப்பது லாஜிக்கை கெடுக்கிறது.

நமது சமூக நியதிப்படி ஒரு பெண் தான் பாதுகாப்பாக இருப்பது,  நம்புவது தன்னுடைய குடும்பத்தை தான். அந்த குடும்பத்தின் புரக்கணிப்பை நேரடியாக சாடாது, ஏதோ சொல்ல வந்து எது எதையோ சொல்லி விட்டு சென்றது போல் உள்ளது. 

குடும்பம் என்ற அமைப்பில் குடி கொள்ளும் தாய், தந்தை என்ற தெய்வங்கள், மகளின் ஒவ்வொரு வளர்ச்சியிலும் உருதுணையாக இருந்த அன்பே வடிவான அப்பா!  ஒரு மனசாட்சியும் இல்லாது எந்த காரணத்தையும் அறிய விளையாது "வீட்டை விட்டு போ" என விரட்டி வெளியேற்றுகின்றனர். அந்த தாயின் ஒவ்வொரு உடல் மொழியும் தாய்மையில் விஷம் கலந்த சமூகத்தையே பிரதிபலிக்கிறது. தன் பெத்த பெண்ணை பற்றி தன் மகனிடன் அவதூறு பரப்பும் தாய்! ஒரு பெண்ணுக்கு வாழ் நாள் முழுக்க  உறுதுணையாக இருக்க வேண்டிய சகோதரன் என்ற உருவகம்.  நல்ல வேளை தம்பியாக பிறந்தான். சொல்லால் சாகடிக்கின்றான், அண்ணனாக பிறந்திருந்தால் ‘எங்க குடும்ப கவுரம்’ எனக்கூறி அருவாளால் ஒரே போடு போட்டு படத்ததையே பாதியில் முடித்திருப்பான்.  ஒரு பிரச்சினை என்றதும், பல்லும் நகவும் கொண்டு அவளை துரத்துகின்றனர்.  

சொந்த குடும்பத்தில் இவ்வளவு சொள்ளைகளை வைத்து கொண்டு, ஒரு சமூகத்தில் இருந்து நியாயத்தை எதிர்பார்க்க இயலுமா?  . குடும்பம் என்ற அமைப்பை கேள்விக்கு உள்ளாக்காது; அடுத்த கட்டத்தில் சமூக நிலையில் இருந்து தன்னை துன்புறுத்திய கதாப்பாத்திரங்களை சாடுவதால் என்ன பலன்?


அந்த சோபாவில் முதல் நபராக அப்பா -அம்மாவை இருத்தியிருக்க வேண்டும். பெற்ற பிள்ளையை தன் குடும்பமே கரிசனையாக நடத்தாத போது சமூகவெளி பொறுப்பாக்க  இயலுமா? 

மேம்போக்காக தொலைக்காட்சி நிகழ்ச்சியாளர், தொகுப்பாளர் , பணம் என பல சமூக குற்றத்தை விளாசிய பெண்மை, தன் குடும்பம் என்றதும், அப்பாவை காணவேண்டும், எனக்கும் பிள்ளை பெத்து வளக்கனும் என்ற 80கள் பெண்ணாக மாறி உருகுவது நெருடலாக உள்ளது.. அந்த இடங்களில் பிரமிப்பான அருவியை, ஊர் மத்தியிலிருக்கும் சாதாரண குளமாக மாற்றி விட்டனர். 

பிறப்பு என்று ஒருவனுக்கு இருக்குமானால்  இறப்பு நிச்சயம். எய்ட்ஸ் இல்லாவிடில்  கான்சர் இப்படி ஏதோ ஒன்று மரணத்தை தரத்தான் போகிறது.  இந்நிலையில்  வாழ்க்கையை ரசித்து வாழ்ந்த பெண்ணின் மரணத்தை  கொடூரமாக; நேசம், பாசம் என்ற பெயரில் ஆறுதலும் தேறுதலும் தேடும் பரிதாபத்துகுறிய கதாப்பாத்திரமாக மாற்றி, அழு வைத்து  உருக வைத்து படத்தை முடித்திருப்பது முற்போக்கான சிந்தனையல்ல. மரணத்தை விழாவாக கொண்டாடும் மனநிலையை உருவாக்க வேண்டிய படங்கள்  நம்பிக்கையற்ற, இரக்கத்தை கெஞ்சும், பயமுறுத்தும் வகையில்   மரணத்தை சித்தரித்திருப்பதை தவிர்த்திருக்கலாம். 
தஞ்சமென தோழியின் வீட்டில் குடிபுகிர்கின்றாள். அங்கு ஒரு கேடு  கெட்டவன்   தோழியின் அப்பா உருவத்தில். இதில் கவனிக்கதக்க விடயம் என்னவென்றால் அப்பாவும் மகளும் சியர்ஸ் அடித்து வைன் குடிக்கின்றனர். சிகரட் அடிக்கின்றனர்.  அந்த அப்பனின் பெயர்  ஜோசப்! தமிழ்படங்களில் காலா காலமாக கிருச்தவ குடும்பங்களை  மேற்கத்திய கலாச்சாரத்தை தழுவிய அமைப்பாகவே காட்டப்பட்டு வருகிறது. இப்படத்திலும் ‘ஜோசப்’ என்ற பெயருள்ள மனிதன் தன் மகள் வயதொத்த பெண்ணை கற்பழிக்கின்றார். 

‘ஏழையான வழியோரக்கடை இளனிக்கடைக்காரனுக்கு எய்ட்ஸ் இருக்கும்’ என்ற  ஒரு வகையான மைனாரிட்டி தாக்குதல் போன்றது தான் இதுவும் என்பதை கவனிக்காது இருக்கலாகாது.


தொகுப்பாளரும், நடிகையும் திரைப்பட இயக்குனருமான லஷ்மி ராமகிருஷணனை தாக்குவது போல் பல காட்சிகள் அமைத்திருப்பது பெண்ணை பெண்மையை போற்றிய படத்தில்; அது சமகாலத்தில் உயிருடன் இருக்கும் பெண்ணை இந்த அளவு இகழ்ந்துருக்க வேண்டியதா என்பதையும் சிந்தித்திருக்க  வேண்டும்.

\
எச்.அய்.வி. யால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசாங்கம் மருத்துவ வசதி அளிக்க வேண்டும். தொண்டு நிறுவனத்திடம் பொறுப்பை கொடுத்து விட்டு ஒதுங்கி இருக்கல் ஆகாது. கருணையும் இரக்கவும் உன் கண்ணீரும் அல்ல; சமநீதி கொண்ட உரிமையும் மனிதவுமே தேவை என்பதை  தெளிவு படுத்தியிருக்கலாம். எய்ட்ஸ் நோயாளிகளுக்கு சுத்தம் சுகாதாரமான மனித நேயமுள்ள அணுகதல் தேவை என வலியுறுத்திரயிருக்கலாம்.

திரைக்கதையில் முதல் பாதியில் இருந்த விருவிருப்பு அடுத்த பகுதியில் குறைந்து சில இடங்களில்  கிழிந்து தொங்குகின்றது. 

மிகச்சிறந்த ஒளிப்பதிவு. படத்தின் வெற்றிக்கு பெரும் பங்கு வகித்திருப்பது ஒளிப்பதிவு என்றால் மிகையாகாது. ஒளிப்பதிவாளராக புதுமுகம் ஷெல்லி காலிஸ்ட் அறிமுகமாயுள்ளார்.  படத்தொகுப்பும், புது முகம் அதீதியின் நடிப்பும் சிறப்பு. பின்ன்னி இசையும் குட்டி ரேவதியின் பாடல் வரிகளும் படத்தின் வெற்றிக்கு வலு சேர்த்தவை.

‘அன்பால் இணைக்கப்பட்டு மனிதர்களாகும்’ கடைசி சீன்  மலையாளப்படம் ‘சார்லி’யின் கடைசி சீனை நினைவுப்படுத்துகின்றது. 



அருவி சிறப்பான காட்சி விருந்தாகவும் சிந்தனை சக்தியாகவும் இருப்பதுடன் முற்போக்கான சிந்தனையுடன் இன்னும் அழகாக பரிணமித்திருக்கலாம்.






1 comment: