24 Apr 2016

சமூக நியதி!

பாபா அத்தான் எனக்கு இன்னும் புரியாது இருப்பது இந்த சமூக நியதி தான்! என் விருப்பங்களை, என்னை புரக்கணிக்கும் பாங்கு நீங்கள் அன்று போன நாள் முதல் துவங்கி விட்டது. எனக்கு உங்களை பார்க்க 15 நிமிடம் அதுவும் அருட் தந்தையர் பிரார்த்திக்கும் நேரம் தான் கிடைத்தது. உங்களுடைய கடைசி பயணத்தில் என்னால் உங்களுடன் வர இயலவில்லை. பெண்கள் வரக்கூடாது என தடுத்து விட்டனர். உங்கள் உடை, நடை எல்லாம் உடனிருந்து கவனித்து வந்த எனக்கு உங்களுடன் வர மற்றவர்கள் அனுமதி பெற வேண்டி வருகின்றது.  நான் எப்படி துக்கம் அனுசரிக்க வேண்டும் எப்படி இருக்க வேண்டும் என யாரும் அன்பாக சொன்னாலும் பிடிக்க வில்லை சமூகக்கருத்தாக கூறினாலும் பிடிக்கவில்லை. என்னை எனக்கு பார்த்து கொள்ள தெரியாதா? 

அடுத்த கட்டளை நானா பக்கவும் இருந்து வருகிறது. இனி பேசக்கூடாது இனி அமைதி காக்க வேண்டும். ஆம் இனி என்ன தான் பேசவுள்ளது எனக்கு. உங்க அதிகாரம், சத்தம், எல்லாம் அவர் இருந்த போது தான், இனி பெற்ற பிள்ளையை கூட நீங்கள் தான் அனுசரித்து போகவேண்டும் என்ற உபதேசம் வேறு.

அடுத்த சில நாட்களில் பணிக்கு திரும்பி விட்டேன். ஒருவர் எங்கள் துறையை சார்ந்த அனைவரையும் அழைத்து விருந்து கொடுத்துள்ளார். என்னை அழைத்தாலும் சென்றிருக்க மாட்டேன். நம் வழக்கமே நாம் சேர்ந்து செல்வது தானே. இருந்தும் என்னுடன் வேலை பார்ப்பவர்கள் மேம் உங்களுக்கு அழைப்பு வரவில்லையா என்றனர். நானும் கைபேசியில் பிரச்சினை இருக்கலாம். அழைப்பு பெறவில்லை என்று கூறி முடித்து விட்டேன். பல நாட்கள் கடந்து குறிப்பிட்ட நபர் என்னிடம் வந்து மேடம் உங்களை அழைக்கவில்லை நான்.  வருந்த வேண்டாம். ஒரு வருடம் கடக்கவில்லை பார்த்தீட்களா என்றார். இதுவெல்லாம் இந்த சமூகத்தின் இயல்பு தானா? ஒரு மனிதனை குத்தி விட்டு நோவு பார்ப்பது.  நம் தெருவில் நான் நடந்து போகும் போது யார் முகத்தையும் பார்ப்பதில்லை. காலம் மாறிவிட்டது சகுனம் பார்ப்பது இல்லை என்பதெல்லாம் பொய் அத்தான். உங்களுடன் கவுரவமாக நான் போன காலம் மாறி யாருக்கும் அச்சம் வராதவண்ணம் என் முகத்தை வேறு திசையில்  திருப்பி கொண்டு நானே நடந்து போகின்றேன். இன்னும் ஒரு தோழி முனைவர் பட்டம் பெற்றுள்ளார். அந்த நிகழ்விற்கு சாப்பாடிற்கு அழைக்கும் போது என்னை அழைக்க தயங்கின்றார். இவரோ புரஸ்டன்ற் கிறிஸ்தவராம். நானே நீங்கள் என்னுடன் இல்லாத  எல்லா பொது நிகழ்வுகள், சமூக நிகழ்வுகள், பயணங்கள் என ஒன்றுமே  விரும்பவில்லை. நம் மகன் கூறியுள்ளான் அவன் படித்து வேலைக்கு வந்த பின் நாம் முன்பு பயணித்தது போல் பயணிக்கலாம் என்றான். ஆம் நீங்கள் கூறி கொண்டிருந்த ராஜஸ்தான் கோட்டைக்கு செல்ல வேண்டும். நாம் விரும்பி செல்ல நினைத்த இலங்கை செல்ல வேண்டும். என் மகன் அழைத்து செல்ல நான் காத்திருப்பேன். 

நம் பிரிவு நமக்கானது நம் தனிப்பட்ட இழப்பு, தனிப்பட்ட கவலை கண்ணீர்.  இதில் ஏன் சுற்றி இருப்பவர்கள் கருணை, சமூக நடப்பு என்ற பெயரில் என்னில் சில விடையங்களை நிலை நிறுத்த பார்க்க வேண்டும்  என தெரியவில்லை. அத்தான் உங்கள் பெட்டியில் உங்களுக்கு பிடித்த வெள்ளை சட்டையை வைத்து அனுப்பினேன். நம் திருமணச்சேலையை வைத்து அனுப்ப அந்த நேரம் தவறி விட்டேன், ஆப்பிரிக்கா போன்ற தேசங்களில் அந்த ஆண்களுக்கு சொந்தமான உடைமைகளுடன் மனைவியும் வைத்து அனுப்புவார்களாம்.  நம் சமூகத்திலும் இதை தான் எதிர் நோக்குகின்றனர். ஆனால் இந்த சமூகத்தை எதிர் கொள்வதிலும் சில வசதிகள், சில பெண்மைக்கான வசதிகள் இந்த நிகழ்வில் உண்டு என்று தான் தோன்றுகின்றது. நான் எப்போது மற்றவர்களிடம் கதைக்கும் குணம் உடையவள். தற்போது நானாகவே என் வாய்க்கு பூட்டு போட்டு வருகின்றேன். விலகி போகவே விரும்புகின்றேன். நீங்கள் இல்லாது கதைக்க ஆர்வமாக இருக்கின்றேன் என யாரும் நினைக்க வேண்டாமே? நீங்கள் அப்படி நினைக்க மாட்டீர்கள். உங்கள் நாசரேத்தை சேர்ந்த பால்ய கால நண்பர் பாலமுருகன் அண்ணா  நெல்லை ரெயில் சந்திப்பில் வைத்து சந்திக்கலாம் என்றதும் என்னையும் அழைத்து சென்றீர்கள் உங்களுடன். அதே போல் கிரீன் அண்ணா வந்த போதும் அவர்கள் வீட்டிற்கு சென்றோம். அப்போது மற்றொரு உங்கள் எஸ்டேட் குடும்பத்தையும் அங்கு வைத்து கண்டு வெகு நேரம் பேசி இருந்தோம். 

நம் எதிர்  வீட்டு நபர் உங்களை கொண்டு போன நேரம் சன்னல் கதவை அடைத்து விட்டு வெகுநேரம் கடந்த பின் ஜன்னல் வழியாக கொண்டு போய் விட்டார்களா என கேட்டு விட்டு ஜன்னலை திறந்தார்களாம். பின்பு 31 நாட்களுக்கு பின்பு தான் அடைத்த கதகை திறந்துள்ளனர். நம் மகன் நண்பன் அந்த வீட்டிலுள்ள சிறுவன் கூட 42 நாட்களுக்கு பின்பு தான் சாம் ஜோயலிடம் பேச கைபேசியில் அழைப்பு விடுத்துள்ளான்.  எதிர் வீட்டு சாமியாரை உங்களுக்கு நினைவு இருக்கும் என நினைக்கின்றேன். அந்த ஆளும் மனைவியும் வந்து நீங்கள் போன அன்று ஒன்றும் தெரியாது என பொய்யாக கதைத்து விட்டு ஞாயிறு அன்று வந்து விசாரித்து சென்றனர்.  பொதுவாக மரண வீட்டிற்கு வியாழன் ஞாயிறு அன்று மட்டும் தான் செல்வார்களாம்.  அன்று நான் அரசு மருத்துவ மனைக்கு போய் வரும் முன்னே நம் பக்கத்து வீட்டுகாரர்களூக்கு தெரிந்து விட்டது. என் வாயில் இருந்து கேட்க வேண்டும் என  அவர்கள் காம்பவுண்டுக்குள் இருந்தே கேட்டு கொண்டிருந்தனர். நீங்க தான் பேருந்து காத்து நிற்கும் போது இவர்களை பேருந்து நிலையத்தில் கொண்டு விடுவீர்கள். ஒரு நாள் நாம் இரவில் வீடு வந்து சேர நம் பக்கத்து வீட்டை சேர்ந்த ஒரு நபர் குடித்து விட்டு மரத்தின் அடியில் படுத்து கிடக்க ஒரு கணம் கண்டு கொள்ளாமல் வீட்டிற்குள் செல்லலாமா என்று யோசித்து விட்டு, என்ன நினைத்தீர்களோ ஓடி சென்று அந்த நபரை தூக்கி அவர் வீட்டிற்குள் விட்டு விட்டு வந்தீர்கள்.

மோசஸ் நம் வீட்டில் இருந்து மூன்று வீடு தள்ளி இருக்கும் நபர், உங்களை போகும் போதும் வரும் போதும் வழி மறித்து பேசுவாரே; அவரகள்  மகள் திருமணம் , பேரன் பிறந்த போது  நாம் மெனக்கெட்டு சந்தித்து பரிசு வழங்கி வந்தோமே. அந்த ஆட்கள் எல்லாம் நம்மை தெரியாத போல் நடித்து கொள்கின்றனர். இதனால் நான் பொதுவாக யாரை கண்டாலும் பேசாது விலகி சென்று விடுவேன். யார் அபசகுனம் என்று நினைக்கின்றார்கள் என எனக்கு விளங்கவில்லை. 

சில விடையங்களை அவர்கள் பல முறை அழுத்தி கூறி ரொம்ப நல்லவர்களாக மாறக்கூடாது தானே.  பலர் உங்க குடும்பத்தை பற்றி பண ஆசை பிடித்தவர்கள், அந்த தாய் ஈவிரக்கம் அற்றவர் என்ற போது ”அவ சமாளித்து கொள்வாள்” என்றனர். ஐந்து பட்டு சேலை வாங்கி கொடுத்து விட்டாச்சு எனக்கூறி   எத்தனை சேலை வாங்கி கொடுத்தனர். பட்டு சேலை கணக்கு பேசி வாங்கின என் மாமியார் எனக்கு பின்பு ஒரு பெயருக்கு கூட ஒரு சேலை எடுத்து தரவில்லை. எல்லாம் என் மனதில் ஆறிக்கிடந்த காயங்கள். தற்போது யாராவது என்னை ஆசுவாசப்படுத்த அல்லது அவர்கள் நல்ல மனதை எனக்கு புரிய வைக்க ஆரம்பிக்கும் போது என்னால் அமைதி காக்க இயலவில்லை. கொந்தளித்து போகின்றேன்.

எல்லா வசதி வாய்ப்பு இருந்தும் கல்விக்கு என செலவழிக்க பெட்டியை வித்தேன் சட்டியை வித்தேன் என சிலர் கணக்கு கூறும் போது வெறும் தனியார் நிறுவனத்தில் இருந்து கொண்டு எனக்கு கல்வி வாய்ப்பை உருவாக்கி தந்தீர்கள். ஒரு போதும் சொல்லி காட்டவில்லை .  நான் கேட்கும் முன்னே எனக்கு தேவையான புத்தகம் என்னிடம் வந்து விடும் உங்களால். உங்க தியாகம் அன்பு தான் எனக்கு பெரிதாக படுகின்றது. இன்று நீங்கள் முதலில் போய் விட்டீர்கள் என்பதற்காக நான் உங்கள் பக்கம் இருந்து நகல இயலாது. நீங்க தான் எனக்காக மிகவும் உழைத்தீர்கள். பலன் எதுவோ எனக்கு தெரியாது ஆனால் உண்மையான அன்பால் பொதிந்தது நீங்க மட்டும் தான். ஒரு பொருளை வாங்கி வந்தால் உடன் தருவது என்னிடம் தான். என் மகிழ்ச்சியான முகத்தை பார்க்க அவ்வளவு ஆசைப்படுவீர்கள். 10 ரூபாய்க்கு பெயருக்கு பூ வாங்கி தரக்கேட்டால் உங்கள் மனம் போல் வாங்கி தந்து என்னிடம் பணம் அருமை தெரிகிறதா என திட்டு வாங்குவீர்கள். நம் திருமணம் முடிந்த முதல் வருடம் எனக்கு ஒரு மோதிரமும் சுடியும் வாங்கி வந்து தந்தீர்கள். அன்றைய மனநிலையில் என்னை தேர்வு செய்ய அழைத்து செல்லவில்லை எனக்கூறி உங்கள் மகிழ்ச்சியைக்கூட நான் கெடுத்தது நினைவில் வந்து கொல்கின்றது.


உங்களை இழந்தது என் ஜென்மபாபம்.  என் கர்ம பாபம் அல்ல. நான் உங்களுக்கு உண்மையாகத் தான் இருந்தேன். நீங்க தான் என்னை மிகவும் நன்றாக வசதியாக வைக்க போகின்றேன் எனக்கூறி நாலு மாதமாக சில உங்கள் போக்குகளை மறைத்து வந்துள்ளீர்கள்.  உங்களை கட்டுப்படுத்தி உங்களை நேசிப்பது உங்களை காயப்படுத்தி விடக்கூடும் என உங்கள் போக்குக்கு அனுமதித்திருந்தேன். ஆனால் இந்த விபத்து நம் எல்லா நோக்கங்களையும் லட்சியங்களையும் வேரோடு அறுத்து விட்டது. இந்த சூழலில் யாரும் தன்னை தங்கள் தியாங்களை முன் நிறுத்தி என்னை புரியவைக்க நினைப்பது அபத்தவும் தன் அகங்காரவுமாகத் தான் இருக்கும். அதற்கும் நான் பதில் கொடுக்கக்கூடாது அமைதி காக்க வேண்டும் என்று நினைத்தால் நானும் உங்களைப்போல் கடவுளாகத்தான் மாற வேண்டும்.

என் வாழ்வில் எனக்கு கிடைக்காத மிகவும் உண்மையான, பண்பான தன்னிகரற்ற அன்பு, சுதந்திரம், அரவணைப்பு, மரியாதை எல்லாம் கிடைத்தது  உங்களிடம் இருந்து தான். மற்றவர்களுக்கு  எல்லாம் சில சுயநலங்கள் இருந்தது. உங்களுக்கு இருந்த ஒரே சுயநலம் நான் எப்போதும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். ஆனால் உங்க ஆசை நிறைவேறாது போய் விட்டது அத்தான். அந்த ஆசை நிறைவேற நானும் உங்களுடன் வந்து சேர வேண்டும். அந்த நாட்களுக்காக நாம் காத்திருக்க வேண்டும்.

1 comment:

  1. படித்து முடித்ததும் விழிகளில் நீர்பரப்பு..... தொடர்கிறேன்...
    தேவகோட்டை கில்லர்ஜி அபுதாபி
    தமிழ் மணம் 1

    ReplyDelete