நமக்கு இரண்டாவது குழந்தை வேண்டுமா என மனக் குழப்பத்தில் இருந்தோம். ஒரு நாள் நம் மகன் பக்கத்து வீட்டில் விளையாட சென்ற போது அங்குள்ள தாய் பிடித்து வெளியை தள்ளி கதவை அடைத்து விட்டார். பின்பு என்னிடம் அதன் காரணத்தை மிகவும் நிதானமாக கூறினார். உங்கள் மகனிடம் நாங்கள் கொஞ்சுவது எங்கள் ஒரே மகனுக்கு பெரும் மன உளச்சலை கொடுக்கின்றது. மன்னித்து விடுங்கள் என்றார். நம் மகன் அன்று துவங்கி எனக்கு விளையாட தம்பி வேண்டும் என பிடிவாதம் பிடிக்க ஆரம்பித்து விட்டான். அப்போது நாம் எஸ்டேட்டில் இருந்து தூத்துக்குடிக்கு வந்த முதல் வருடம். நம்மை சந்திக்க வந்த உங்க அம்மா ஊர் உலக நடப்பிற்கு ஒரு பிள்ளை போதும் என்றதும் விரைவாக அடுத்த பிள்ளைக்கு நான் தயார் ஆகி இருந்தேன்.

அப்போது நாம் மூன்றாம் மைலிலுள்ள மருத்துவ கல்லூரிக்கு அருகிலுள்ள வீட்டிற்கு மாற்றலாக நினைத்தோம். நாம் இருந்த தூரத்து உறவினர்கள் வீட்டில் இரவு ஒன்பது மணிக்கு பின்பு வெளியே போகக்கூடாது தினம் ஜெபக்கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும் என பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தது. அதிலும் முக்கியமாக அங்கிருந்த இரண்டு நாய்களை எனக்கு பெரிதும் பயமாக இருந்தது. ஒரு முறை சுரேஷ் அண்ணன் ஆகி அக்கா வந்து நமது மகனுக்கு அவர்கள் வீட்டு, பழைய சைக்கிளை நம் மகனுக்கு கொடுத்த போது அந்த வீட்டிலிருந்த வயதான பாட்டி மிகவும் இளக்காரமாக திட்டினார். நாங்க மானமுள்ளவங்க இப்படி இனாமல்லாம் வாங்குவது பிடிக்காது எனக்கூறி நம்மை வருத்தம் அடைய செய்ததும் உடன் வீட்டை மாற்றினோம். அப்போது உங்களுக்கு ஓர் அலுவலகத்தில் வேலை கிடைத்தது. ஆனால் ஊதியம் ஒழுங்காக கொடுக்கவில்லை என்றதும் நீங்கள் அடுத்த சில நிறுவனங்களில் வேலை தேடி கொண்டிருந்தீர்கள். அப்போது நம் மகன் 5 மாதம் கடந்திருந்தான். கடுமையான தூத்துக்குடி வெயில், ஸ்தரதன்மையற்ற வேலை வாய்ப்பு நம்மை மிகவும் வருந்த செய்தது. நம் வீட்டு உணவு பல நாட்களில் தைர் சாதமாகத்தான் இருந்தது. நீங்கள் பைனி, நொங்கு, பழங்கள் வாங்கி வருவதை வழக்கமாக கொண்டிருந்தீர்கள். உங்கள் அரைவனைப்பில் எந்த குறைவும் இல்லாது இருந்தது. அப்போது நம் வீட்டிற்கு வந்த என் தம்பி என் வீட்டிற்கு சென்று எதையோ கூறியதை நம்பி என் அம்மா ஒரு கடிதம் எனக்கு அனுப்பியிருந்தார். அதை என் அலமாரியில் ஒட்டி வைத்திருந்து பல நாட்கள் வாசித்து அழுது கொண்டிருந்தேன்.

நம் மகன் இப்போது ஒன்பது மாதத்தை நெருங்கி விட்டான். அம்மா எழுதின ஒரு கடிதத்திற்காக அவரை என் பிரசவத்திற்கு அழைக்க நான் விளையவில்லை. உங்க அம்மாவை அழைக்க நீங்கள் தான் முயன்று கொண்டிருந்தீர்கள். இரண்டாவது பிரசவம் மாப்பிள்ளை வீட்டில் தான் என்ற முறையும் இருக்க நீங்க நம்பி அழைத்து கொண்டிருந்தீர்கள். பிரசவ நாளும் நெருங்கியது. ஒரு நாள் அலுவலகம் போய் நீங்க திரும்பி வந்த போது இரண்டு நண்பர்களுடன் வந்திருந்தீர்கள். அவர்களுக்கு சாயா போட்டு உங்களிடம் தந்து விட்டேன். வீட்டிலிருந்த அவலை பழத்துடன் தேங்காய் போட்டு கொடுத்து விட்டேன். அப்போதே எனக்கு வலி ஆரம்பம் ஆகியது. எப்போது உங்க நண்பர்களை அனுப்பி விட்டு நீங்கள் என்னருகில் வருவீர்கள் என காத்திருந்தேன்.
இரவு பதினொன்று மணி ஆகினதும் எனக்கு வலி அதிகமாகி கொண்டே வந்தது. நம் மூத்த மகனை நாம் குடியிருந்த ஆக்னஸ் அக்கா -சுரேஷ் அண்ணா வீட்டில் விட்டு விட்டு நான் ஏற்கனவே தயார் செய்து வைத்திருந்த பையுடன் மருத்துவ மனையை நோக்கி நடக்க ஆரம்பித்தோம். அந்த பையில் எனக்கு பயண்படுத்த வேண்டிய உடை, குழந்தைக்கான உடை, டவல், பிளாஸ்க் என தேவையான பொருட்களை தயார் நிலையில் வைத்திருந்தேன். மருத்துவமனை வீட்டின் மிக அருகில் இருந்தது. ஆட்டோவை அந்த இரவில் அழைத்து காத்திருக்கும் சூழலும் இல்லை. நீங்கள் ஒரு கையில் பையும் அடுத்த கையில் என்னையும் பிடித்து கொண்டு மருத்துவமனையை நடந்தே வந்து அடைந்தோம். நாம் தொடர்ந்து பரிசோதனை செய்து வந்த மருத்துவமனை என்பதால் வாசல் வந்ததுமே உடன் மருத்துவ மனைக்குள் அனுமதித்தனர். டாக்டர் உடனே பரிசோதித்தார். தண்ணீர் குடம் உடைத்து விட்டது இனி தாமதிக்க இயலாது குழந்தையை சிசேரியன் வழியாக எடுக்கலாம் என்றனர். நீங்கள் சிசேரியன் என்றதும் பயந்து உங்கள் கண்கள் நிறைந்து விட்டது, . உடன் என் அம்மாவிற்கு தொலைபேசியில் நீங்கள் தெரிவிக்க அம்மா நடு நிசி 12 மணிக்கு கேரளாவில் இருந்து கிளம்பி விட்டார்கள். நாசரேத்திலுள்ள உங்கள் அம்மாவிற்கும் தகவலை தெரிவித்து விட்டு அவரை எதிர்பார்த்து கொண்டே இருந்தீர்கள். நீங்கள் பயத்தால் பதட்டத்தால் நம் வீட்டு ஏணிப்படியில் விழுந்து எழுந்து வந்ததை பின்பு அறிந்தேன். என்னை சிசேரியன் தியேட்டருக்கு அழைத்து செல்லும் போது நீங்கள் என் கையை பற்றி அணைத்து கண்ணால் ஆறுதல் கூறி அனுப்பினீர்கள். உங்களையும் உள்ளே அனுமதித்திருக்கலாமே என எனக்கு தோன்றியது. நம் ஊரில் அந்த வழக்கம் அப்போது இல்லை என்பதால் தனியாகத்தான் சென்றேன். அனிஸ்தேஷ்யா கொடுத்த மனிதர் கையை வலியால் பிடித்திருந்தேன். காலை 4 மணிக்கு நம் குழந்தை பிறந்தான். சிசேரியன் இல்லாது அதிசயமாக உபகரணங்கள் பயண்படுத்தி பிறந்தான். அவனை வாங்க உங்கள் அருகில் ஆட்கள் இல்லை என்பதால் நாம் குடியிருந்த வீட்டிலுள்ள ஆக்னஸ் அக்காவை அழைத்து குழந்தையை வாங்க வைத்துள்ளீர்கள். என் அம்மா காலை ஏழு மணி வந்தடைந்தார்கள். பின்பு குழந்தையை அவர்கள் வாங்கி கொண்டார்கள். நம் மூத்த மகனை ஆக்னஸ் அக்கா அவர் பிள்ளைகள் பிளசி, பெனிற்றாவுடன் அழைத்து வந்தார். அவன் தன் விரலை குழந்தையிடம் நீட்ட இறுக்க பற்றி கொண்டான். இளையவன் நாடி, கண் , தலை என உருவத்தில் உங்களை போன்றே இருந்தான். மூத்தவனை போல் இல்லாது மிகவும் அமைதியானவனும் லேசாக சிரித்து கொண்டு சில பொழுது அழுது கொண்டும் தூங்கினான். தண்ணீர் குடம் உடைந்ததால் அவனுக்கு சில மருத்துவ சிகித்சையும் மேற்கொண்டிருந்தனர்.
உங்க பெற்றோர் காலை 11 மணிக்கு வந்து சேர்ந்தனர். வந்ததும் உங்க அப்பா ”உன் மாமியார் எப்போது வந்தார்? எப்போது தெரிவித்தாய்?” என வினவி கொண்டார். நான் சிசேரியன் சிகித்சை உடையில் சில பைகள் பொருத்தப்பட்டு கிடந்ததும் உங்க அம்மா முகத்தில் தெரிந்த நஞ்சு சிரிப்பை காண வேண்டுமே! நம் மூத்த பிள்ளைக்கு போன்றே 300 ரூபாயை அருகில், வைத்து விட்டு “ உன் மாமியார் போனதும் தெரிவி நான் வந்து பார்த்து கொள்கிறேன்” எனக்கூறி கிளம்பி விட்டார். மூன்று நாட்களுக்கு பின் வீட்டை அடைந்தோம். ஏழு நாட்கள் ஆனதும் அம்மா, வீட்டிற்கும் கிளம்ப வேண்டிய தேவை எங்கள் வீட்டில் இருந்தது. நீங்களும் உங்க அம்மாவை அழைத்து வந்து விடலாம் என்ற நம்பிக்கையில் அம்மாவை விரைவாக அனுப்பி விட்டீர்கள். உங்க அம்மாவிற்கு வரக்கூறி போன் செய்ததும் 16 வது நாள் வந்து குழந்தைக்கு ஒரு அரைஞானம் வாங்க உங்களையும் அழைத்து சென்றார். வந்து தோசை சுட்டு கொடுக்க கூறினீர்கள். அவர் இருக்கும் மட்டும் செய்து கொடுத்தேன். அப்பாவிற்கு சுகமில்லை எஸ்டேட் சென்று விட்டு வருகிறேன் எனக்கூறி சென்று விட்டார். அந்த தாயின் செயல்பாட்டை கண்டு அவர் போன பின்பு வெகு நேரம் அழுதேன். எப்போதும் போல் நீங்க அமைதியாக சமையல் செய்தீர்கள், குழந்தையின் துணியை துவைத்தீர்கள் பெரிய மகனை அழைத்து கம்யூட்டர் விளையாட்டு விளையாடி கொண்டிருந்தீர்கள்.
முதல் பிரசவம் நேரம் நீங்கள் என்னை பார்க்கவில்லை என்ற என்னுடைய நெடுநாள் குற்றசாட்டை போக்கும் விதம் நம் இளைய மகன் பிறந்த போது நீங்கள் தான் கவனித்து கொண்டீர்கள். என்னிடம், ”இனி முதல் முதல் பிள்ளையை பார்க்கவில்லை என குற்றம் கூறக்கூடாது, இரண்டாவது பிள்ளையை நானே பார்த்து உள்ளேன்” என்று எப்போதும் பெருமை பட்டு கொண்டீர்கள். நாம் குடியிருந்த ஆக்னஸ் அக்கா வீட்டினர் தான் நம் மூத்த மகனை பள்ளிக்கு அனுப்புவது, தூங்க வைத்து கொள்வது, அண்ணனுடன் குளிப்பது என செல்லமாக பார்த்து கொண்டனர். அவன் தினம் பள்ளிக்கு போய் வந்தான்.
முதல் பிரசவம் நேரம் நீங்கள் என்னை பார்க்கவில்லை என்ற என்னுடைய நெடுநாள் குற்றசாட்டை போக்கும் விதம் நம் இளைய மகன் பிறந்த போது நீங்கள் தான் கவனித்து கொண்டீர்கள். என்னிடம், ”இனி முதல் முதல் பிள்ளையை பார்க்கவில்லை என குற்றம் கூறக்கூடாது, இரண்டாவது பிள்ளையை நானே பார்த்து உள்ளேன்” என்று எப்போதும் பெருமை பட்டு கொண்டீர்கள். நாம் குடியிருந்த ஆக்னஸ் அக்கா வீட்டினர் தான் நம் மூத்த மகனை பள்ளிக்கு அனுப்புவது, தூங்க வைத்து கொள்வது, அண்ணனுடன் குளிப்பது என செல்லமாக பார்த்து கொண்டனர். அவன் தினம் பள்ளிக்கு போய் வந்தான்.
உங்கள் தீராத அன்பு, ஒவ்வொரு நாளும் என்னை நீங்கள் கவனித்த விதமும் உங்களை நினைக்க வைக்கின்றது. அன்பு மயமான அத்தானையா இறைவன் என்னிடம் இருந்து இவ்வளவு விரைவில் அழைத்து கொண்டார் என எண்ணி ஏங்கி ஏங்கி அழுகின்றேன். அத்தான் நீங்கள்; நான் இறந்த பின்பு தான் என்னை விட்டு போயிருக்க வேண்டும். இது என்ன கொடுமை? இந்த கருதலும் உங்க அன்பும் நினையாது ஒரு அடி கூட என்னால் முன் வைக்க இயலாது. ஏன் ஆண்வர் அன்பை கொடுத்து விட்டு விரைவாக பிடுங்கி விட்டார். அத்தான்...... அத்தான் நான் என்ன பாபம் செய்தேன். என்னை விட்டு ஏன் பிரிய நினைத்தீர்கள். அதை கடவுள் நிறைவேற்றி விட்டாரே. இனி எத்தனை காலம் நான் அழுது கொண்டே வாழ வேண்டும். இந்த வெறுமையான வாழ்விற்காகவா அந்த நிறைவான நாட்களை தந்தீர்கள். அத்தான் என்னால் பொறுக்க இயலவில்லை. நாம் பிரிந்தது என்ன காலக்கொடுமை. எங்கிருந்தாலும் பேசி கொண்டே இருப்போமே. நான் உங்களிடம் எதிர் பார்த்தது உங்கள் அன்பை மட்டும் தான். கத்தார் போறேன், போறேன் எனக்கூறி போய் விட்டீர்களே அத்தான். உங்கள் சிரிப்பை உங்கள் பேச்சை, உங்கள் பொய் கோபத்தை பார்க்க வேண்டும். நம் காரில், நாம் நெடுதூரம் பயணிக்க வேண்டும். என் கையை நீங்கள் இறுக பற்றி கொள்ள வேண்டும். உங்க தோளில் நான் சாய வேண்டும் அத்தான்.
உருகவைக்கும் அன்பின் கதை.
ReplyDelete