header-photo

'கவர்னரின் ஹெலிகாப்டர்'- எஸ் கேபி கருணா

கவர்னரின் ஹெலிகாப்டர்'
'கவர்னரின் ஹெலிகாப்டர்' வம்சி பதிப்பகத்தில் வெளியாகியுள்ள புத்தகம் இது. சமீபத்தில் வாசித்த  சுவாரசியமான எழுத்து  நடை கொண்ட புத்தகம். இதன் புத்தக வெளியீட்டுகிற்கு பங்கு பெற்றபோது ஓர் புத்தகவும் வாங்கி திரும்பினேன்.  

வாசகர்களை வாசிப்பில் மயங்க செய்யும் எழுத்து நடை கொண்ட இப்புத்தகத்தை  ஒரே நாளில் வாசித்து முடிக்கலாம். 18 கட்டுரை-கதைகள் அடங்கிய 224 பக்கங்கள் அடங்கிய புத்தகம் இது. எழுத்தாளர் தன் வலைப்பதிவு ஊடாக வெளியிட்ட முதல் கதையை புத்தகத்திலும் முதல் கதையாக சேர்த்திருப்பது சிறப்பாக உள்ளது.

எழுத்தாளர் மறைந்த எழுத்தாளர் சுஜாதவின் தீவிர ரசிகராக இருந்துள்ளார் என்பதை இரண்டாவது கதை தெரிவிக்கின்றது. இவருடைய ஆதர்ச எழுத்தாளர் தற்போது கனடா நாடு ரொறொன்ரோவில் வசித்து வரும் பிரபல ஈழ எழுத்தாளர் அ. முத்து லிங்கம் முன்னுரை அளித்திருப்பது மிகவும் சிறப்பு. தனது முன்னுரையில் எழுத்தாளருக்கு எழுத்து இயற்கையாகவே கைகூடுகின்றது என குறிப்பிட்டுள்ளார். இவருடைய கதையில் எழுத்தில் சகல நுட்பவும் நிறைந்து உள்ளதாக அ முத்துலிங்கம் பறைசாற்றுகின்றார்.புத்தக ஆசிரியர் தன்னுடைய 40வது வயதில் எழுத்தை ஒரு விளையாட்டாக துவங்கி உள்ளதாக  குறிப்பிட்டுளார். இருப்பினும் எழுத்தாளனுக்கு உரிய பொறுப்புடன் தான் எழுத விரும்புவதாகவே குறிப்பிட்டார் தனது ஏற்புரையில். 


கதையா கட்டுரையா என்ற விவாதம் கடந்து தன் நினைவில் நின்ற உண்மைக் கதைகளை  சில புனவுகள் கலந்து கட்டுரையாக;  இயல்பான மொழியில் எழுதியிருக்கும் சிறப்பு என்னை கவருகின்றது. பொதுவாக சில புத்தகங்களில் கதைகள் ஊடாக செல்லும் போது  அதன் நிகழ்வுகளில் மனம் லயிக்க பல தடைகள் எழுத்தில் வருவது உண்டு.  ஆனால் இப்புத்தகம்; வாசிப்பு என்பதை மறந்து நாம் அந்த சம்பவத்தில் நம்மை அறியாது உருகும், மயங்கும் அல்லது லயித்து  போகும் சூழலை  உருவாக்குகின்றது. கதைகள் வெறும் கற்பனை கதைகள் அல்லாது அதில் வாழ்க்கையும் அடங்கி இருப்பதால் ஓர் உயிரோட்டமான உணர்வை தருகின்றது. மேலும் கதைகளில் நாம் காணும் சின்ன சம்பவங்களிலும் நம் கலாச்சாரத்தின் அறம் பொதிந்து உள்ளது நம் சிந்தனையை மேம்படுத்துகின்றது. 

சாமந்தி போன்ற கதைகள்  கதையல்ல உண்மையான அரசியல் நிலைவரத்தை;  மண்ணின் மைந்தர்க இளிச்சவாயர்களாக மாற்றப்படுவதை அழகாக படம் பிடித்து காட்டியுள்ளார். 


சைக்கிள் டாக்டர் கதை காட்சிகள் சத்திய ஜித் ராயின் திரைப்படத்தில் சில காட்சிகள் மறுபடியும் நம் நினைவலகளில் புகுந்து  துன்பப்படுத்துவது போல் டாக்டர் நினைவுகள் நம்மை அறியாது வந்து செல்கின்றது. 

மதுரை வீரன் போன்ற கதைகள் மிகவும் மனித நேயமிக்க கதைகள். நாம் வாழும் சமூகம் இன்னும் ரொம்ப மோசமடையவில்லை என நம்பிக்கை கொள்ள வைத்த பல சம்ப்வங்கள் இடம் பெற்றிருந்தது.  ஆனாலும் இறந்தவர் நிலவரம் என்னவானது என மனம் கேட்டு கொண்டிருந்தது

பிரியாணி கதை, ரசித்து சிரித்து வாசித்த கதை. கதை ஆசிரியரின் ஆர்வக் கோளாறு பாராட்டப்பட வேண்டியதே. விளையும் பயிர் முளையிலே தெரியும் என சிறு குழந்தையாக இருக்கும் போதே எழுத்தாளரின் பார்வை, அறியும் ஆர்வம் தன்னை சுற்றி நிழலும் சமூகத்தை பற்றி  அறிய வேண்டிய ஆர்வம் கண்டு கொள்ளலாம். 

மரங்கள் போன்ற கதைகள் ஒரு படைப்பாளி முதலில் இயற்கை நேசிப்பவனாகவே இருப்பவனாகவே இருக்க இயலும். இயல்பாகவே இயற்கையுடன் ஓர் புரிந்துணர்வுள்ள ஆசிரியருக்கு மனிதர்களை அணுகுவதும் புரிந்து கொள்வதும்  பார்க்கப்பதும் எளிதாக அமைகின்றது.


எல்லா வாசகர்களையும் கவர்ந்த 'கவர்னரின் ஹெலிகாப்டர்' சுவாரசியமான  கதை என நான் எடுத்து சொல்வதற்கு இல்லை. ஓர் உண்மை சம்பவத்தை ஓர் கதை போன்று எழுதிய விதம் சிலாக்கிக்க தகுந்தது.  சம்பவங்களை தொகுத்த விதம் அருமை. கதை முடிவில் கவர்னரை பற்றி ஓர் இரு வார்த்தைகள் பதிந்து செல்வது எழுத்தாளரின் புத்தி சாதுரியத்தையும் காட்டுகின்றது.

அட்சயப் பாத்திரம் என்ற கதை இலங்கை தமிழர்கள் மற்றும்  தமிழக தமிழர்கள் உறவை பதிவு செய்து வைத்துள்ள அருமையான நிகழ்வு. மேலும் அவர்கள் போராட்ட குழு அரசியலை சொல்லாது சொல்லி சென்றுள்ளது.  .

எஸ் கே.பி பொறியியல்  கல்லூரியின் தாளாளராக இருந்து கொண்டு கடுமையான வேலைப்பளு மத்தியில் ஒரு புத்தகம் வெளியிட்டிருப்பது என்பது அவரின் வளமான பால்ய கால நினைவுகளின் வெளிப்பாடு என்று இருந்தாலும்  ஒரு சிறந்த படைப்பாளி ஒரு போதும் றைந்திருக்க இயலாது என்றும் வெளிப்படுகின்றது. மலைப்பிரதேசங்களில் உயரமான் வறண்ட கரும் பாறைகளில் இருந்து ஊற்றாக கொப்பளிக்கும் நீர், பூமியை வந்தடைந்து அருவியாக பாய்வது போல் அவரின் படைபாற்றலில் வாசகர்களை சிறப்பான சிந்தனைக்குள் சம்பவங்களுக்குள் அழைத்து செல்கின்றது இப்புத்தகம். ஒவ்வொரு கதையும் சிறந்த  உத்தியுடன்  சமூக அக்கறையுடன்; எந்த ஓர் அதிமேதாவித்தனவும் இல்லாது  இயல்பாக எளிமையாக அழகாக கவித்துவமாக அழைத்து செல்கின்றது  என்பதாக்கும் இதன் சிறப்பு. 

புத்தக வெளியீட்டில்  வாழ்த்துரைத்த வண்ணதாசன் தன் எழுத்தை பல இடங்களில் நினைவூட்டுவதாக குறிப்பிட்டார். அதே போன்று கவிஞர் கலாப்பிரியாவும் எடுத்து கூறவேண்டிய புத்தகம்  என குறிப்பிட்டார். வெறும் விளையாட்டாக வலைப்பதிவில் பதிந்து வந்த  பதிவுகள் புத்தகமாக மாற பதிப்பாசிரியர் பவா செல்லத்துரை மற்றும் அவருடைய மனைவி ஷைலஜாவின்  ஊக்கம்,    உறுதுணையாகியுள்ளது என புரிந்தது. 


 அ முத்துலிங்கம் கூறியிருப்பது போல் மாணவர்களுக்கு பரிந்துரைக்க வேண்டும். நிச்சயமாக என் மாணவர்களுக்கு இக்கதை அமைப்பை பற்றி கூற வேண்டும் என புத்தகத்தை மிகவும் கவனமாக என் நூலகத்தில் வைத்துள்ளேன். புத்தக ஆசிரியரின் வலைப்பதிவு  

புத்தகம் கிடைக்குமிடம்,புத்தகம்


1 comments:

R Narumpu Nathan · Gvn college kovilpatti said...


நூல் விமர்சனம் அருமை..சரியாகவே எழுதி இருக்கிறீர்கள்

Post Comment

Post a Comment