சமீபத்தில் வாசித்த புத்தகம் பதின்பருவ குடும்ப பக்கங்கள்! Adolescent Psychology நெல்லையிலுள்ள மாக்தலின் பள்ளி மாணவர்களின் கருத்துக்களை பாளை தூய சவேரியார் கல்லூரி காட்சி தொடர்பியல் துறை தலைவர் அருட் தந்தை சேவியர் ஆண்டணி மற்றும் பள்ளி தாயாளர் முனைவர் க செல்வராஜ் அவர்களால் தொகுத்து வழங்கப்பட்ட புத்தகம் இது. மாணவர்களை பெற்றோர்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்ற பார்வையில் உருவாக்கப்பட்ட புத்தகம். இப்புத்தகம் மாணவர்கள் மனநிலையை அவர்கள் சந்திக்கும் சவால்களை பிரதிபலிக்கின்றது. தாங்கள் ஆசைப்படுவது எல்லாம் கிடைக்க வேண்டும் என குழந்தைகள் ஆசைப்படுகின்றனர். தங்களை படிக்க சொல்லி வற்புறுத்தக்கூடாது என விரும்பும் சிறுவர்கள் தங்களை விளையாட அனுமதிக்க வேண்டும் என விரும்புகின்றனர். சில இடங்களில் குழந்தைகள் அதீத சுயநல உலகில் பயணிக்கின்றனரா என எண்ணும் போது நம் குழந்தைப்பருவத்தை நினைத்து பார்க்கும் போது அதுவே இயல்பு எனும் விளங்குகின்றது. பெற்றோரின் மனநிலை தான் சில இடங்களில் நம்மை நிலைகுலைய செய்கின்றது. குழந்தைகளில் ஆளுமையை புரிந்து கொள்ளவில்லை. அவர்களும் தங்களை போன்று ஒரு தனித்துவமான மனிதர்களாக பார்க்க தவறுகின்றனர். தங்கள் பிள்ளைகள் என்ற ஒரே காரணம் கொண்டு அவர்களை அடிமை என எண்ணுகின்றனர். தங்கள் விருப்பம் நிறைவேற்ற கிடைத்த ஆயுதமாக நினைக்கின்றனர். தவறும் செய்யும் குழந்தைகளை மிகவும் வன்மையாக தண்டிக்கின்றனர். தன் தோளுக்கு மேல் வளர்ந்த குழந்தைகளை அடிக்கின்றனர் பல மணி நேரம் திட்டுகின்றனர் ஏன் பல நாட்கள் கூட பேசாது இருந்து அவர்களை அடி பணிய வைக்கின்றனர். குழந்தைகளை படிக்க வைப்பது மட்டுமே தங்கள் தலையான பணி என நம்புகின்றனர். குழந்தைகளும் தூங்கும் நேரம் தவிர்த்து படித்து கொண்டு இருக்க வேண்டும் என விரும்புகின்றனர். இன்னும் சில வீடுகளில் பெண் குழந்தைகளிடம் பாகுபாட்டுடன் நடந்து கொள்கின்றனர். இந்த புத்தகம் வாசித்து முடித்த போது குழந்தைகளிடம் காணும் வன்முறை குணத்தின் அடிவேர் பெற்றோரின் செயல்பாடு தான் என கண்டு கொள்ள இயல்கின்றது. இதே நிலையில் பெற்றோர்கள் தொடர்ந்தார்கள் என்றால் குழந்தைகள் பெற்றோர் இடவெளி மேலும் விரிவடையும் என்று மட்டுமல்ல தமிழகத்தில் மேலும் பல முதியோர் இல்லம் வரவே அதிகம் வாய்ப்பு உள்ளது. பல இடங்களில் குழந்தைகளை அவர்கள் செய்த தவறை உணரவைக்காது பணிய வைக்கின்றனர். ஒரு சிறுவன் கூறுகின்றார் "நான் ரூபாய் கேட்காமல் இருந்திருக்க வேண்டும் கொடுத்தால் மட்டும் வாங்கியிருக்க வேண்டும்". இந்த வார்த்தைகள் என்னை மிகவும் துயர் வர செய்தது. மற்றொரு சிறுவனின் வாக்குமூலம் "மன்னிச்சுட்டாங்க அப்படி இல்லன்னா கால்ல விழுந்திருவேன்' . தனது பெற்றோரை பற்றி,,, அக்காவிடம் அம்மா இன்னும் பேசவில்லை ஏனெனில் அவள் மன்னிப்பு கேட்கவில்லை .....தேர்வில் முதல் மதிப்பெண் வாங்கிய குழந்தையும் கண்டிக்கின்றனர் கிடைக்காத மதிப்பெண்ணை எடுத்து கூறி. இந்த மாதிரியான குடும்ப சூழலுகள் அன்புக்கு இடம் இல்லாது பிடிவாதம் அதிகாரம் சார்ந்து இயங்குவதாகவே பட்டது. இந்த நவீன யுகத்தில் மாணவர்கள் இணையத்தை பயண்படுத்துவதை ஏதோ குற்ற செயல் போன்றே பார்க்கப்படுகின்றது. இவையும் தேவையற்ற மனகுழப்பத்தில் சிறுவர்களை தள்ளுகின்றது. பள்ளிக்கு பென்டிரவ் கொண்டு வந்தனர் என்ற காரணத்தால் பள்ளியில் தண்டிப்பது பெற்றோரை வரவழைப்பது என அவர்கள் இயல்பான வாழ்க்கையை இழந்து கண்காணிப்பில் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்குகின்றனர். புத்தகத்தின் கடைசி பகுதியில் சிறுவர்களின் ஆசை விருப்பம் நோக்கம் பற்றியும் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்கள் இந்த உலகை பரிவுடன் அக்கறையுடன் நேசமுடன் நோக்குகின்றனர். இங்கு காணும் லஞ்சத்தை ஒழிக்க வேண்டும் வறுமை மாற வேண்டும் மனித இனத்திற்கு சேவையாற்ற வேண்டும் என நல்ல கனவுகளில் வாழ்கின்றனர்.
புத்தகம் வாசித்து முடியும் போது நாம் அவர்களை சுதந்திரமாக சிந்திக்க அவர்கள் வழியில் வாழ அனுமதிக்க மட்டுமே செய்ய வேண்டியது. ஒரு வழி நடத்துதல் அனுசரணை அரவணைப்பு மட்டுமே கொடுக்க கடமைபட்டுள்ளோம். நம் வழியாக இந்த உலகிற்கு வந்தனர் என்ற ஒரே காரணம் கொண்டு குழந்தைகளை செயல் வார்த்தைகளால் தண்டிக்க நமக்கு உரிமை இல்லை என்று உணர வேண்டும் என்றே இப்புத்தகம் மேலும் மேலும் எடுத்த்து கூறுகின்றது.
0 Comments:
Post a Comment