9 Jan 2015

நான் குற்றம் சாட்டுகின்றேன்... I ACCUSE.

1984 ல் நடந்த சீக்கிய படுகொலையை பற்றி ஜார்னெல் சிங் என்ற பத்திரிக்கையாளர் எழுதிய புத்தகம் இது. இந்திய பிரதமர் சீக்கிய காவர்களால் கொல்லப்பட்டார் என்று ஊடகம் வழியாக கிடைத்த தொடர் தகவல் எவ்வாறாக 3000 சீக்கிய மக்களை பலியீடாக்கியது என பாதிக்கப்பட்டவர்கள் வாக்கு மூலமாக பதிந்துள்ளார். 

அன்று நாட்டின் அதிபராக ஒரு சீக்கியர் இருந்தும், பல சீக்கியர்கள் இரு அவைகளையும் அலங்கரித்தும் ஒரு விவாதம் என ஒன்றும் நடைபெறாது தலைவியில் உடல் மயானத்தில் ஏற்றும் முன் அந்த மூன்று நாட்களில் 3000 க்கு மேல் வெறும் சாதாரண மக்களை கூட்டு கூட்டாக உயிருடன் எரித்து கொன்ற துயர் சம்பவத்தை பற்றி விவரிக்கும் புத்தகமாகும் இது. 

குடியிருப்புகளில் வீட்டினுள்ளில் இருந்த ஆண்களை குறிப்பாக தகப்பன்களை ஆண்மகன்களை மட்டும் குறி வைத்து படுகொலை நிகழ்த்தப்படுகின்றது. தடுக்க விழைந்த சில மனைவிகளும் கொல்லப்படுகின்றனர். ஒரு ராணுவ வீரரின் வீட்டில் சென்று குடும்பத்தலைவரை அழைத்து மனைவி மக்கள் முன் வைத்து அடித்து துண்புறுத்துகின்றனர். மேற்கூரையில் இருந்து பார்த்து கொண்டிருந்த மகன் தன் தகப்பனை காப்பாற்றும் நோக்குடன் குதிக்க அவனையும் அக்கூட்டம் அடித்து துவைத்ததில் மூன்று துண்டுகளாக அவன் இறந்து கிடந்ததை நினைத்து பார்க்க இயலவில்லை என ஒரு தாய் கதறுகின்றார்.

ஒரு நடுத்தர தொழி ல் அதிபர் வீட்டில் சென்றவர்கள் பெற்றோர்கள், மகன்களை கொன்றதால் அந்த வீட்டிலிருந்த 13, 10, 2 வயது பெண் குழந்தைகள் அனாதர்களாக மாற்றப்படுகின்றனர்.  ராணி போன்று வளர்க்கப்பட்ட நாங்கள் பிச்சைக்காரர்களாக மாறினோம் என தங்களுக்கு நிகழ்ந்த கொடும் துயரை விவரிக்கின்றனர். சில குடும்பங்களை அழிக்க பக்கத்து வீட்டு க்காரர்களே உதவியதாகவும் ஆசிரியர் குறிப்பிடுகின்றார். சில இடங்களிலோ காப்பாற்ற இயலாதவர்களாகவும் சூழலால் கட்டுப்படுத்தப்படுகின்றனர்.

குருத்துராவில் ஒளிந்தவர்களை கல்லால் அடித்தும் வெள்ளைப் பொடி தூவியும் கொல்கின்றனர்.  சட்டத்தை காப்பாற்ற வேண்டிய காவலர்களும் சில இடங்களில் கொலைகாரர்களாக மாறுகின்றனர்.  காவல் நிலையங்களில் தஞ்சம் அடைந்த பலர் காவலர்கள் முன் வைத்தே கொல்லப்படுகின்றனர். டைம்ஸ் ஓஃஃப் இந்தியா போன்ற பத்திரிக்கையில் மட்டுமே சிறு செய்தியாக வந்துள்ளது. நாட்டுமக்கள் எல்லோரும் துக்கத்தில் மூழ்கி இருக்கும் போது 1000-2000 டவுடிகளை ரயிலிலும், பேருந்திலும் கொண்டு வந்து சீக்கிய குடியிருப்புகள் கடைகள் நிறுவனங்கள் தாக்கப்படுகின்றது.

அதன் பின் வந்தஇளம் பிரதம மந்திரி ; "பெரிய ஆலமரம் முறிந்து வீழும் போது அதன் வேர் அதிரத்தான் செய்யும்" என  படுகொலையை ஆதரிக்கின்றார்.  மிகவும் கொடூரமாக அதிக மக்கள் கொல்லப்பட்டது தலை நகர் டெல்லியின் தான் என்பது நம் ராணுவத்தின் அவல நிலையையே எடுத்துக்காட்டுகின்றது!

பலர் தங்கள் வசதியான குடியிருப்புகளை விட்டு அகதி முகாம் பின்பு அகதி குடியிருப்புகளுக்கு மாற்றப்பட்டனர். பல குடுமபங்கள் ஆண்கள் அற்ற குடும்பமாக மாற்றப்பட்டது. இப்பாதிப்பால் பல குழந்தைகள் பிற்காலத்தில் மயக்கு மருந்து உலகில் தஞ்சம் அடைந்தனர். இப்படியாக மதசார்பற்ற தேசிய கட்சி, காந்திய கட்சி  என எல்லோராலும் இன்றும் பாராட்டப்படும் கட்சி நடத்திய மனித வேட்டை மனித மனசாட்சியை உலுக்கும் வண்ணமாக இன்றும் உள்ளது.

30 வருடமாகி விட்ட நிலையிலும் குற்றவாளிகள் தண்டிக்கப்படாது குற்றத்தில் முக்கியவர்களாக இருந்தவர்கள் மத்திய மந்திரியாக மாறினதும், போலிஸ் அதிகாரிகள் உயர் பதவியை அடைந்ததும், சில அதிகாரிகள் குடியரசு தினம் தங்கப்பதக்கம் பெற்றதும் சீக்கியர்களுக்கு கிடைக்காது போன நீதியுடன் அவமதிப்புமாக தான் இருந்தது. இந்த புத்தக ஆசிரியர் தான் சிதம்பரம் பத்திரிக்கை கூட்டத்தில் தன் ஷூவை எறிந்து தன் இன மக்களின் மறுக்கப்படும் நீதியின் மேலுள்ள கோவத்தை வெளிப்படுத்தினார். 

குஷ்வந் சிங் போன்ற எழுத்தாளர்கள் இருந்தும் வெளிவராது போன இனப்படு கொலையாகும். ஜனாதிபதி கியானி செயில் சிங் தெரிந்தும் தெரியாது போல் இருந்து கொண்டார் அல்லது தடுக்க வலுவற்ற அதிகாரத்துடன் இருந்தார் எனலாம். ஒட்டு மொத்த ஊடகவும் போதிய பிரதானம் கொடுத்து செய்தி வெளியிடவில்லை. சமீபகாலம் தெகல்கா பத்திரிக்கை சீக்கிய விதவைகளின் கொடும் துயரை வெளி கொண்டு வந்தது. இப்படுகொலை நடைபெறும் போது பாதுகாப்பு அமைச்சராக இருந்தவர் தான் பின்பு பிரதமந்திரியாக  இருந்த நரசிம்க ராவ்.

இப்படியாக இப்புத்தகம் ஒரு கொடிய வரலாற்று பதிவாக இந்தியா அரசியலின் பொய் முகத்தை தோல் உரித்து காட்டுகின்றது

2 comments:

  1. Pathmanathan NalliahJanuary 09, 2015 10:40 pm

    உலகில் வெளிவராத உண்மைகள் கனக்க , ஆள்பவர்களின் பொய்கள் தான் கம்பீரமாக வீதி வலம் வருகின்றன.

    ReplyDelete
  2. நல்ல தகவல் கட்டுரை. பெரிய ஆலமரம் முறிந்து வீழும் போது அதன் வேர் அதிரத்தான் செய்யும் என்று தனது தாய்க்காக ஒரு பிரதம மந்திரியே சொன்னதை சமீபத்தில் தான் நானும் அறிந்தேன் மிகவும் ஏமாற்றமா இருந்திச்சு.

    ReplyDelete