18 Jan 2015

ஐ’’ திரைப்படம் ஒரு ஆபாச வன்முறை காட்சியியல்!


திரைப்படம் இரண்டாவது நாள் காட்சியை பார்க்க  கூடிய வாய்ப்பு சன் தொலைக்காட்சி ஊடக நண்பர் பாலா அவர்களால் வாய்த்தது. சங்கர் படக் கோட்பாடு படம் முழுக்க காண்லாம்.  கதையிலோ திரைக்கதையிலோ எந்த அறிவாற்றலும் அழகியலும் பயன்படுத்தாது வெறும் காட்சி அழகியல் சார்ந்து  மட்டும் எடுக்கப்பட்டப்படம். பக்தி, வரலாறு, வீரர்கள், சாதாரண மக்களின் வாழ்க்கையை பற்றி  கதை சொல்லிய திரைப்படத்தின் போக்கு இன்றைய தினம் வெறும் ஆபாசத்தை மட்டும் முன் நிறுத்தி நிற்பது கவலைக்குறிய விடயமே. 


ஒரு வெகுளியான கதாநாயகன்  அழகி கதாநாயகி ,  சீற்றம் கொண்ட கதாநாயகன் வில்லன்களை பல வகையாக கொல்வதும் அதை கண்டு ரசிகர்கள் மகிழ்வது என்ற எம்.ஜி. ஆர் காலக்கதையை தற்கால சூழலை பின்புலனாக வைத்து; அல்லது பழைய கள்ளை புது பிராண்டு போத்தலில் அடைத்து கொடுக்கப்பட்ட படம் தான் ”ஐ”. பல நூறு விளம்பரங்களை ஒரே விளம்பரம்  போன்று கண்ட உணர்வு. கண் மூடித்தனமாக ஆங்கிலப்பட காப்பியும் அலுப்பூட்டுகின்றது.                                                                                                                 
‘ஐ’ படத்தை குறிப்பிட்டு பகுந்தாய்ந்தால் பெண்கள் மேல், பெண் உடல் மேல் குறிபாக தாங்களும் பெண்களே என போராடி வரும் மூன்றாம் பாலின பெண்கள் மேல் தொடுக்கப்பட்ட ஒரு வன்முறையாகும். சராசரி ஆண்கள் என்றாலே ஆதிக்கவாதிகள் பெண்களை மதிக்க தெரியாதோர் பெண்கள் மனதை காணாது உடலை காண்பவர்கள் என்ற விமர்சனத்தை எதிர் கொள்ளும் சூழலில் இது போன்ற படங்கள் இது போன்ற பல ஆண்களை உருவாக்க உரியது.


பெண் உடலை பொருளாக, ஆபாசமாக, வக்கிரமாக, வெறும் வியாபார பொருளாக படத்தை விற்கும் யுக்தியாக பார்க்கப்பட்டு எடுக்கப்பட்ட படம்.  வாழைப்பழத்தின் தோலை குரங்கு  உரிப்பது போன்று பெண் உடலை மிகவும் அச்சுறுத்தும் வகையாக நிர்வாணமாக காட்சிப்படுத்தியுள்ளனர். ஆண்களை பித்த நிலையிலிருந்து சித்த நிலைக்கு கொண்டு வரும் நோக்கமா அல்லது பெண்களை வெறும் மாம்ச பிண்டமாக உருவகப்படுத்தும் உச்சமா என சிந்திக்க வேண்டியுள்ளது.

விளம்பரப்படத்தில் கதாநாயகியின் ஜோடியாக நடிப்பவன் ‘படுக்க வா” என்று நேரடியாக அழைக்க தப்பிக்க வழி தேடி லீயிடம் தஞ்சம் அடைகின்றார் காதாநாயகி. லீ தன் பாட்டிற்கு நடித்து விட்டு காசும் புகழும் வாங்க முயலாது கதாநாயகியை காதலிக்க கூறி வற்புறுத்துகின்றார். சரி இவர்கள் தான் இப்படி என்றால் அம்மா அழைப்புக்கு எல்லாம் விளி கேட்கும் டாக்டர் மாமாவோ   கதாநாயகியை பத்து  வயதிலிருந்தே ஒரு தலையாக காதலிக்கும் கேடி!  ஒரு வகையில் பெண்கள் வாழும் தன்னை சுற்றிய உலகமே ஆண் காமுகர்களை கொண்டது தான்; வேலையில் நிலைக்க வேண்டும் என்றால் ஆண்கள் படுக்கையை பங்கிட வேண்டும் என்ற சமூக சூழல் தற்போது நிலவுவதாக பொருட்படுத்துகின்றாரா இயக்குனர்?

மூன்றாம் பாலின மக்கள் பல போராட்டங்கள் பின்பு இப்போது தான் பல துறைகளில் உயர்ந்து வருகின்றனர். அவர்களை பற்றிய மக்கள் புரிதல் மாறும் சூழலில் மூன்றாம் பாலின கதாப்பாத்திரத்தை  மிகவும் கொச்சைப்படுத்தியுள்ளனர்.  அவர்கள் உடல் அசைவுகளை காலின் அணியும் செருப்பு  துவங்கி அலங்காரம் என   அவர்கள் அணியும் உள்ளாடைகள் வரை கேலிக்கு உள்ளாக்கியுள்ளனர். மேலும் முதன்மை கதாபாத்திரம் வழியாக செக்ஸுக்கு அலைபவர்களாகவும் ஆண்களை வலுகட்டாயமாக அழைப்பவர்களாகவும் சித்தரிகரிக்கப்பட்டுள்ளது.  “ஐயோ பாவமுன்னு விட்டா ரொம்ப தான் போகிறார்கள்” என்ற உரையாடல் வழியாக அவர்கள் பெற்ற உரிமைகள் கூட ஏதோ ஆண்களின் தயவு என்பது போல் காட்டப்பட்டுள்ளது சங்கரின் ஆதிக்க மனபான்மையை காட்டுகின்றது.


ஒட்டு மொத்ததில் விக்கரம், எமி ஜாக்ஸன் வில்லன் நடிகர்கள் என எல்லோர் நடிப்பையும் பாராட்டலாம்.  ஆனால் சினிமா என்ற கலையை;  வெகு ஜனத்தை வெகுவாக பாதிக்கும் ஊடகத்தின்; கதாப்பாத்திரப்படைப்பு உரையாடல்கள் காட்சிப்படுத்துதலில் அதற்குரிய சமூக அக்கறை பொறுப்புடன் கையாண்டுள்ளனரா என்பது கேள்விக்குறியே.                                                                                  
உடல் பில்டர்ஸ், மருத்துவர், விளம்பர நடிகர்கள், தொழிலதிபர்கள், மூன்றாம் பாலினத்தோர் என இந்த சமூகமே ஆபத்தான மனநிலையில் உள்ளது.
ஒரு திரைப்படம் என்பது ஒரு காலாசார பிரதிபலிப்பு அல்லது ஒரு பண்பின் அடையாளம் ஒரு சமூகத்தின் பிரதினித்துவம் என்பது இந்த படத்தில் இல்லை. பெண் என்பவள் எந்த நிலையில் இருந்தாலும் எந்த நிலவரத்தில் உள்ள ஆணையும் விட சமூக நிலையில் கடைசி படியில்  அதுவும் மிருகத்தில் இருந்து ஒரு நிலை மேல் மட்டும் தான் என அடிக்கோடிட்டு காட்டியுள்ளனர். மிருக உருவிலுள்ள ஆண்  காதலை  கூட மதிக்க வேண்டியவள் என உருவகப்படுத்தியுள்ளனர்.

வெறும் ஆயிரங்களின் ஒரே அறையில் எடுக்கப்படும் நீலப்படத்தை 250 கோடியில்  பல நாடுகளின் அழகிய இயற்கை சூழலில் எடுக்கப்பட்ட தரம் மட்டுமே இந்த படத்திற்கு உள்ளது. வாயிரிசம் Voyeurism என ஆங்கிலத்தில் அழைக்கப்படும் வேறு இரு நபர்கள் உடல் உறவு கொள்வதை அவர்களுக்கு தெரியாது பார்த்து ரசித்து தன் இச்சையை அடக்கி கொள்ளும்  ரசனையை மட்டுமே வளர்க்க உள்ளது. இப்படம்.   பெண்கள் உடலை மட்டும் உரித்துள்ளனர் என்ற குற்றச்சாட்டை தவிற்க முதல் பாட்டில் எண்ணை தடவி வெறும் உள்ளாடையுடன்  பல கோணங்களில்  ஆண் உடலின் பலனை ஆண்மையை காட்டும்படி  10 -15 நிமிடம் காட்சியை வைத்துள்ளனர்.

ஆங்கிலேயர்களின் காலம் முன் நம் நாட்டு பெண்கள் மார் சட்டைகள் அணிவது கிடையாது. விக்டோரியன் கலாச்சாரத்தோடு கிடைத்தை பல வழக்கங்களில் ஒன்று மட்டுமே உடையணிவது அதும் மார்சட்டை அணிவது. ஆடையணியாத மார்பை கண்டு வளர்ந்த நம் தமிழ் இனம் இன்று பெண்கள் மார்பை காணத்தேடி காமத்தீயுடன் நடப்பது நகைப்புக்கு உரியது.  ஆண் பெண் உறவின் அறியாமை,  பாலியல் அறிவின் வறட்சியை மட்டுமே காட்டுகின்றது. பெண்கள் மார்பின் சிறப்பை, தாய்மையின் அடையாளம், மனித உயிரை காக்கும் அதன் பங்கை, சேவையை ஒரேடியாக மறக்க செய்து விதவிதமான குறைவான ஆடைகள்  அணிவித்து  இச்சை கொண்டு பார்க்கும் கலாச்சாரத்தை வளர்க்க மட்டுமே இப்படம் உதவும்.

பெண்கள் அணியும் உடை மட்டுமல்ல அவர்கள் அணியும் உள் ஆடைகள் கூட ஆண்களின் பகடியையும் அருவருப்பான பார்வையும் இப்படம் மூலமாக வழி வகுக்குகின்றது. இந்த சினிமா கலாச்சாரம் வரும் கால தலைமுறையின் குறுகிய பார்வைக்கு வழிவகுக்கும் என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும். இதில் ஒரு ஆதிக்க உணர்ச்சியை விட தனக்கு இல்லாத மார்பை பெற்ற பெண்ணை கேலிக்குள்ளாக்குவது அல்லது தனக்கு இல்லாத பெண்ணின் மார்பு கூட தன் இச்சைப் பார்வைக்கு சொந்தமானதே என்ற ஆதிக்க மனோபாவமே இது போன்ற திரைப் படங்கள் உணர்த்துகின்றன. இது ஒரு படம் தானே சும்மா பார்த்து விட்டு போக வேண்டியது தானே என்று கேட்க தோன்றும். ஆனால் சினிமா என்ற கலையின் அடித்தளமே படம், ஒளி அதன் உருவகம் ஆகும். உருவகப்படுத்துவது என்பது நெடு நாளையை பாதிப்பை இந்த சமூகத்திற்கு ஏற்படுத்த வல்லது.     

English movie Fly
இந்த படத்தில் நாம் காணும் ஒரே ஒரு முற்போக்கான பெண்களை பற்றிய சிந்தனை என்பது; ஒரு ஆண் தன் உருவத்தை இழந்தாலும் அவனை நேசிக்கின்றாள் அவன் துயரிலும் பங்கு பெறுகின்றாள் என்பது மட்டுமாகும். ஆனால் இந்த கொடிய உருவத்தை பார்த்து தியேட்டரின் சிறு குழந்தைகள் வீறிட்டு அழுததை கண்டபோது பரிதாபமாக இருந்தது. கொடிய உருவம் திரையில் வரும் போது வெளியில் ஓட  என சில பெற்றோர்கள் இருக்கையில் இருக்காது வாசலிலே குழந்தையும் தோளில் இட்டு தேற்றி கொண்டு நின்றனர்.                                                                                                                                                                                                                                                                                                         சமீபத்தில் வரும் பல படங்களில் முத்தம் காதலுக்கான ஒரு மறுபதிப்பாக காட்டுவதை தவிர்க்க வேண்டும் என்றால் வெண்மைப்புரட்சி என்பது போல முத்தப் புரட்சி நிகழ வேண்டும்.  அம்மாக்கள், பெற்றொர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு ஆசை தீர  முத்தம் தந்து தான்  இந்த இயக்குனர்கள் பார்வையை உடைக்க இயலும்.


சிகரட் ஷேவிங் கத்தி என ஆண்கள் பயண்படுத்தும் பொருட்களை விளம்பரப்படுத்தக்  பெண்களை பயண்படுத்தும் விளம்பர உலகை தளமாக அமைந்த இத்திரைப்படம் பெண் உடலின் வளைவும் நெளிவையும் அசைவையும் மட்டுமே நம்பி எடுக்கப்பட்ட படமாகும். பெண்கள் என்பவர்கள் ஆண்களின் ஆசைக்கு கிடைத்த பொருள், தங்கள் பாலிய வேட்கைக்கான  தீனி, தங்கள் வன்மம் கொண்ட பார்வைக்கான இரை என்ற நோக்கம் விடுத்து ஆண்களை போன்றே பெண்களும் தனது புத்தி சாதுரியத்தில், தைரியத்தில், உழைப்பில் உயர்ந்தவர்களே என்று எடுக்கப்படும் படத்திற்காக காத்திருப்போம். இப்படியே படம் எடுத்து கொண்டிருந்தால் உலகிலே மிகவும் அச்சுறுத்தல் கொண்ட ஆண்கள் இந்திய ஆண்களே என்ற அடையாளம் களைய வழியும் இல்லை.


6 comments:

  1. Subi Narendran · Top Commenter · Works at Marks and SpencerJanuary 18, 2015 9:08 pm

    துணிவான ஒரு விமர்சனம். நினைத்ததை நினைத்தபடி பூசி மெழுகாமல் அப்பட்டமாக சொல்லி விடீர்கள். சங்கர் போன்ற திறமையான அனுபவசாலியான இயக்குனர் கவர்ச்சியை நம்பிப் படம் எடுத்திருக்கிறார் என்று நம்பமுடியவில்லை. சார்பற்ற துணிவான விமர்சனத்துக்கு உங்களைப் பாராட்டியே ஆக வேண்டும். நன்றி ஜோ.

    ReplyDelete
  2. Pathmanathan Nalliah · Following · Top Commenter · Rektor/Principal at Realfagakademiet Oslo ·January 18, 2015 9:09 pm

    எனக்கு இருந்த சொல் பற்றாக்குறையையும் நேரப் பிரச்சனையையும் தீர்த்து ஒரு சிறப்பான விமர்சனம் "ஐ" அதை ஒரு பெண் எழுதினால் இன்னும் பல்மாக இருக்குமல்லவா ? வாசியுங்கள் ....

    ReplyDelete
  3. Ragunath Ragu · Loyola College, MadrasJanuary 18, 2015 9:11 pm

    i all so see the film mam your thought is going on correct way

    ReplyDelete
  4. இந்த படத்தில் இன்னும் எக்கச்சக்க காட்சிகளை சாடலாம் . என்னுடைய விமர்சனம் வெறும் திரை ரசிகனாய் முடிந்துவிட்டது . தங்களின் விமர்சனம் சமூகப்பார்வையுடன் இருப்பது பாராட்டுக்குரியது . விளம்பர நிறுவனங்களின் கைப்பாவையாக ஷங்கர் மாறிவிட்டார் . திருநங்கைகளை இழிவுபடுத்தும் காட்சிகளெல்லாம் வன்மத்தின் உட்சம். காதல் என்றாலே அழகைப்பார்த்துதான் வரும் என்பதுபோன்ற சித்தரிப்பு எல்லாம் ஓவர் . கிராபிக்ஸ் காட்சிகளெல்லாம் மூளை வறட்சியைத்தான் காட்டுகிறது . ஆங்காங்கே சமூகத்தை சாடுகிறேன் என்ற போர்வையில் ஷங்கர் செய்ததெல்லாம் கடுப்பைத்தான் ஏற்படுத்தியது . இந்த படத்தின் மூலம் அவருக்கு நன்றாக புரிந்திருக்கும் . சிஜியை நம்பி இனி படம் எடுப்பதை அவர் நிறுத்திவிட்டு , உருப்படியான படங்களை கொடுப்பார் என நம்பலாம்

    ReplyDelete
  5. Manthiramoorthi Alagu · Executive at BSNL IndiaNovember 20, 2016 11:38 pm


    நல்ல தீர்க்கமான விமர்சனம்

    ReplyDelete