2 Feb 2013

கிழவனும் கடலும்!


அமெரிக்கன் எழுத்தாளர் மற்றும் பத்திரிக்கையாளர் ஏர்னெஸ்ட் ஹேமிங்வேவின் குறும் நாவல் ஆகும் “கிழவனும் கடலும்”.  இந்த நாவல் வாசித்து முடிக்கும் போது நீங்களும் ஒரு கடல் பயணம் மேற்கொண்ட களைப்பை  உணர்வீர்கள். வாழ்கையின் போராட்டம், வருத்தங்கள் அதை தொடர்ந்து எழும் ஒரு நம்பிக்கையின் ஒளிவட்டத்தில் இறங்கி செல்வீர்கள்.  நம் கதையின் நாயகன் சந்தியாகு என்ற முதிர் வயது மீனவராகும்.  “நான் ஒரு வித்தியாசமான மனிதன்” என தன்னை தானே  உற்சாகப்படுத்தி கொண்டு தனிமையில் இல்லாமையில் வாழ்பவர். பெரியவர் தன் இளம் பிராய  மீனவ நாட்களை அசைபோட்டு கொண்டு வாழ்ந்து வருபவர். ஆப்பிரிக்கா கடல் எல்கை வரை சென்று மீன் பிடித்ததையும் அப்போது கடற்கரையில் துள்ளி விளையாடி கொண்டிருக்கும் சிங்க குட்டிகளையும் கண்டு மடங்கியதையும் எண்ணி இனியும் அது போல் ஒரு நாள் வரும் என நினைத்து கொண்டு வாழ்கையை தள்ளுபவர். அவன் கனவில் கூட  துள்ளி விளையாடும் சிங்க குட்டிகள் தான் வந்து செல்கின்றன.
கடந்த 80 நாட்களாக மீன் பிடிக்க சென்றும் ஒரு மீனும் கிடைத்தபாடில்லை. முதல் 40 நாட்கள் தன் உதவியாளனும் மகனை போன்று அன்பு செலுத்தும் மனோலினும் உடன் செல்கின்றான்.  “இவருக்கு ராசி இல்லை வேறு படகில் மீன் பிடிக்க செல்” என தன்  பெற்றோர் வற்புறுத்தியதால் அடுத்த 40 நாட்கள் மனதில்லா மனதோடு வேறு படகில் பயணிக்கின்றான்.  இருப்பினும் தனது ஓய்வு நேரத்தில் முதியவருக்கும் உதவுகின்றான். என்னதான் 80 நாட்கள் மீன் கிடைக்கவில்லை என்றாலும் அதன் பின் மூன்று வாரம் தொடர்ந்து தினம் ஒரு மீன் கிடைத்ததை எண்ணி பெரியவர் மனதை தேற்றி மகிழ்ந்து பேசிக் கொண்டிருக்கின்றனர்.  பெரியவருக்கு தன் பழைய மீனவ நாட்களை பற்றி, கடற்கரையில் கண்ட சிங்கம் பற்றி கதைக்க ஆசை. ஆனால். சிறுவனின் மனம் பழைய கால கதைகளை விட விளையாட்டு வீரர்களை  பற்றிய கதைகள் அறிய தான் தான் ஆற்வம் கொள்கின்றது. பெரியவரும் சிறுவனின் விருப்பத்திற்க்கு இணங்க விளையாட்டு வீரர்கள் அவர்கள் வாழ்கை பற்றி பேசிகொண்டிருக்கின்றனர். இரவு வந்ததும் பெரியவரிடம் தூங்க செல்லுங்கள் நான் வந்து எழுப்பி விடுகின்றேன் என்று கூறி செல்கின்றான் சிறுவன். ஆனால் அடுத்த நாள் பெரியவர் சிறுவனை எழுப்பி இருவருமாக கடல் நோக்கி செல்கின்றதை காண்கின்றோம்.  பெரியவருக்கு வாழ்த்துக்கள் கூறி இந்த முறை நீங்கள் கண்டிப்பாக மீனுடன் வருவீர்கள் என நல்வார்த்தை கூறி அனுப்பி விட்டு விடை பெறுகின்றான். பெரியவரும் எனக்கு நம்பிக்கையுள்ளது என கூறி செல்கின்றார்.
முதியவருக்கோ வயதால் ஆன களைப்பு!  இருப்பினும் யாருக்கும் தலை வணங்காத சுயமரியாதை தன் திறைமையின் மேலுள்ள நம்பிக்கையால் கொண்ட கற்வமும் கலந்த மனிதராக காணப்படுகின்றார். மதியம் நேரம் கடந்த வேளையில் நம்பிக்கை மறைய துவங்கும் நேரத்தில், சோர்வுடன் இருக்கும் முதியவர் தூண்டிலில் ஒரு பெரிய மீன் மாட்டுகின்றது.  ஆகா…என்று பெருமூச்சு விட்ட பெரியவருக்கு நம்பிக்கையின் துளிர்கள் முளைக்க ஆரம்பித்து விட்டன.  தன் உழைப்பு, நம்பிக்கையாக மாறும் மீனை எண்ணி பெருமைப்படுகின்றார்.  தான் ராசி இல்லை என தூற்றிய சுற்றும் மறைந்து ஆசுவாசம் கொள்கின்றார்.  மீன் மரண வலியால் துடிக்க பெரியவரோ எப்படியேனும் மீனை இழுத்து கரை சேர்க்க தன் முழு பலனையும் பிரயோக்கின்றார். மீனின் வலி பெரியவரையும் வாட்டுகின்றது. ஆனால் பரிவுடன் ‘என் சகோதரா உன்னை நேசிக்கின்றேன் ஆனால் மன்னித்து விடு என் பிழைப்பு உன் மரணத்தில் தான் உள்ளது’ என்று தன் இயலாமையும் தெரிவிக்கின்றார் பெரியவர். மீனா அல்லது தன் உயிரா என்ற கொடும் போராட்டத்தில் மீனை கரை சேர்க்க எல்ல வழிகளையும் கையாளுகின்றார் பெரியவர். மீன் அவர் எதிர்பார்த்ததிலும் மிகமிகப் பெரியது! 18 பவுண்டு எடை கொண்டதாக தெரிகின்றது. மீனவருக்கு தன்னால் மீனை கரை சேர்த்து விட இயலுமோ என்று அச்சம் எழுந்தாலும் தன்னால் முடியும், “நான் வித்தியாசமான மனிதன்”  என்று தன்னை தானே உற்சாகப்படுத்தி கொண்டு மரணப்போராட்டத்தில் பயணித்து கொண்டிருக்கின்றார்.
மீன் இரத்தம் கடல் தண்ணீரில் கலக்க, இரத்த மணத்தால் ஈர்க்கப்பட்ட பெரும் சுரா மீன் ஒன்று முதியவர் படகை  தாக்குகின்றது. முதியவருக்கு பலம் இழந்து விட்டது. மீனை நினைத்து வருந்துகின்றார், சகோதரனை போல் உருகி வருந்தும் கிழவருக்கு சுராவோ ஒரு பெரும் எதிராளியாக கொடியதாக தெரிகிறது. தன் வாழ்வாதரமாக போகும் தன் சகோதரனை போல் நேசிக்கும் மீனின் தற்போதைய துன்ப நிலையை காண முதியவருக்கு பலனில்லை. மீனின் பெரும் பகுதி சுராவிற்கு  உணவாகி கொண்டிருக்கின்றது.  இரவு பத்து மணியுடன் முதியவர் பலத்த காயங்களுடன் மீனின் சில சொச்ச முள்ளுடன் கரை சேர்கின்றார்.
எல்லா மனிதனும் தன் தோல்வியில் தன் விதியே இயலாமையை எண்ணி வருந்துவது போன் மீனவ பெரியவரும் தனக்கு மீன் கிடைக்காதது மீனை கொல்ல நினைத்த பாவமோ என வருந்துவதை காண்கின்றோம். இல்லை மிகவும் தூரம் சென்றுவிட்டோம் என்றும் தன்னை தேற்ற நினைக்கின்றார். இளைஞர்கள் 60 முழம் ஆழத்தில் தூண்டில் இட்ட போது தான் 100 முழம் ஆழத்தில் அல்லவா முயன்றேன் என்றும் தன் அயராத உழைப்பை எண்ணி ஆறுதல் அடைய முயல்கின்றார். எத்தனை தோல்விகளை கண்டாலும் மறுபடியும் எழ துடிக்கும் ஒரு மனதை எண்ண அலைகளை இக்கதையில் கதாசிரியர் வெளிப்படுத்துவதே தனி அழகு.
இப்படியாக மனிதனின் வாழ்கை போராட்டத்தை அருமையாக சித்திரிகரித்துள்ளார் ஏர்னெஸ்ட். அந்த மீனவன் இடத்தில் நாம் ஒவ்வொருவருடைய வாழ்கை சூழலும் எண்ணங்களும் அவ்வளவு கச்சிதமாக  பொருந்தி போகின்றது. குறும் கதைக்கான சிறிப்புகளில் ஒன்றான  தத்துவ மழையிலும் வாசகனை நனையச்செய்துள்ளார் ஆசிரியர். “வாழ்கை என்பது தோற்க அல்ல ஆனால் போராடுவதுமே” என்ற அற்புத தத்துவம் நம்மையும் வழி நடத்துகின்றது.  “இந்த விசாலமாக கடலில் நம் நண்பர்கள் போலவே எதிரிகளும் உள்ளனர்”. ஒரு நாள் எனக்கான பெரிய மீனை பிடிப்பேன் என்னை சுற்றி தான் உள்ளது” என்பது நம் லட்சிய பயணத்தில் வெற்றியை நினைவுப்படுத்துகின்றது.  சுரா மீனை பார்த்து “நான் ஒன்றும் உனக்கு செய்யவில்லை உன்னாலும் என்னை ஒன்றும் செய்ய இயலாது” என்பது நாம் அறியாத நம் எதிரிகளை நினைவூட்டி செல்கின்றது.
வயதானவர்கள் வெகு காலை எழும்போது இளைஞர்கள் வெகு இரவில் தூங்கி அதி காலை எழ இயலாது தவிக்கும் நிலையும் இயல்பாக மனித வாழ்கையின் புதிரான இயல்புகளில் ஒன்றாக புரிகிறது.  ‘முதிய வயதில் தனிமை என்பது தவிற்க இயலாது ஆனால் தவிற்க முடியாததுமாக உள்ளது” என்று முதுமையின் சூழலை ஒரே வாக்கியத்தில் சொல்லி செல்கின்றார் ஏர்னெஸ்ட்.
மீன் அனுவவிக்கும் வேதனை கண்டு துடிக்கும் மீனவன் தன் சகோதரானாக பாவித்து “என் வேதனையை நான் தாங்கி கொள்வேன் ஆனால் உன் வேதனை தான் எனக்கு கொடியதாக உள்ளது” என்று உருகும் போது ஈர மனதுள்ள மீனவ கதாபாத்திரம் நம் மனதை ஆட்கொண்டு விடுகின்றது. மீனைவிட புத்திசாலியாக மீனவன் இருப்பதால் தான் மீனை பிடிக்க முடியும் என்று கடவுளுக்கு நன்றி செலுத்தும் நாயகன் தனக்கு பிடிபட்ட மீனும் தன்னை விட பலம் வாய்ந்ததும் மேன்மையானதுமாக கருதுகின்றார்.  இது வாழ்கை படிக்கட்டில் மேலை நிற்பவர்கள் தனக்கு கீழை உள்ளவர்களை நோக்க வேண்டிய மனித நேயமான பார்வையாக உள்ளது.    “நாம் அச்சமில்லாது தன்னப்பிக்கையுடன் இருப்பது அவசியம்; எனக்குக்கு வேதனைகள் பெரிய பொருட்டல்ல”; அமைதியாக ஆனால் உறுதியாக இருக்கின்றேன், நான் சோர்வுற்ற மனிதன், ஆனால் செயலற்றவன் அல்ல! போன்ற தன்னம்பிக்கையான வாசகங்கள்  வேதமாக தான் காதில் ஒலிக்கின்றது. நமது வெற்றி என்பது இன்னொருவரின் தோல்வி ஆனால் அடிமைகள் போன்று ஒரு நியதியாக வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் தள்ளப்பட்டுள்ளதை மீனிடம் அவர் பேசும் அன்பான வார்த்தைகளில் வழியாக புரிந்து கொள்கின்றோம். கடலில் துள்ளி குதிக்கும் டால்பின் மீனவனின் சிறந்த நண்பன் என்று கூறும் மீனவர், அங்கும் இங்கும் பறந்து கொண்டிருக்கும்  குருவி ஒன்றும் சேகரிக்காது இருப்பதையும் சொல்லி செல்லும் பாங்கு பல மனிதர்கள் குணநலன்களை எடுத்து சொல்லும் பாங்காகவே உள்ளது.
நான் மதவாதியல்ல ஆனால் கடவுளை நம்புகிறவன் என்று கூறி தன் வெற்றிக்கு கடவுள் பக்கம் ஜெபத்தை ஏறெடுப்பதையும் காண்கின்றோம். இத்தருணத்தில் கதாசிரியர் ஏர்னெஸ்டு அமெரிக்காவின் ஆதிக்க நிலையை எதிர்த்து வாழ்நாள் முழுதும் போராடியவர் க்யூபா போன்ற கம்யூனிஸ்டு நாடுகளில் தஞ்சம் புகுந்தவர் என்பதையும் நினைவு படுத்த வேண்டும்.
மீனவன் தன் உடையான கால்சட்டையை சுருட்டி மடித்து தலைக்கு கொடுத்து உறங்கும் வரிகளில் மீனவனின் மொத்த வறுமையும் வாசகனுக்கு எடுத்துரைப்பதை காணலாம்.
புதிய தலைமுறை கடலை ஆண் என்பது போல உருவகப்படுத்தும் போது பழைய தலைமுறை ஒரு பெண்ணாக பாவிப்பதில் தான் மகிழ்ச்சி கொள்கின்றது என்று சொல்கின்றார் கதாசிரியர்.  தலைமுறைகளின் புரிந்துணர்விலுள்ள மாற்றம், காலத்தால் ஏற்பட்ட இடைவெளியையும் உணர்த்தி செல்கின்றார். இப்படியாக ஒவ்வொரு வரியும் ஒவ்வொரு வார்த்தையும் ஆயிரம் கதை சொல்லும் ஹேமிங்வே கதைக்கு விருது கிடைத்ததில் ஆச்சிரியப்படுவதற்கு மில்லை. இயல்பான எளிய மனிதனின் கதை மனதை நெகிழ செய்யும் கதையும் கூட தான்!
மீனவர் அனுபவித்த அதே துயர் அச்சம், போராட்டம், ஏமாற்றம், நம்பிக்கை, என எல்லா கட்டங்களையும் கடந்து நாமும் பயணிப்பது திரில்லான அனுபவமாகத்தான் உள்ளது. முதியவரின் நிலை கண்டு சிறுவன் பெரிதும் வருந்துகின்றான்.  காப்பி, உணவு வாங்கி கொடுத்து முதியவரை தேற்றுகின்றான்.  குணம் பெற்றதும் தானும் முதியவருடன் மீன் பிடிக்க செல்வதாகவும் வாக்கு கொடுக்கின்றான். முதியவர் தான் காணப்போகும் சிங்கத்தை கனவு கொண்டு நிம்மதியாக துயில் கொள்கின்றார்.

2 comments:

  1. அருமை. என்னையும் மிக கவர்ந்த இலக்கியம் இது..முன்பு இதனைக் குறித்த என் பகிர்வை நீங்களும் பாருங்களேன்.
    http://www.asiyaomar.blogspot.com/2011/02/blog-post_08.html

    ReplyDelete
  2. இந்நூலை தமிழில் காலச்சுவடு வெளியிட்டிருக்கிறது. அருமையான நூல். உங்கள் மதிப்புரையும் நன்று!

    ReplyDelete