header-photo

தேயிலை தோட்டக் கதை தேநீர்- டி. செல்வராஜ்

டானியேல் செல்வராஜ் அவர்களுடைய தேநீர் என்ற புத்தகம் ஒரு வாரமாக  ஊணும் உறக்கவும் அற்று என்னை வாசிப்பில் ஆழ்த்தியது. 1978 வெளி வந்த இப்புத்தகத்தின் மறுபதிப்பாகும் 2006ல்  வெளியாகியுள்ளது.

தேயிலை தோட்டங்கள் என்னுடன் நேரடி தொடர்பு இல்லாவிடிலும்  தேயிலை தோட்டத்தில் ஒரு தொழிலாளியாக, கங்காணியாக, வாச்சராக கண்டக்டராக பணிபுரிந்து மறைந்த பல உறவினர்களை நினைவு படுத்திய புத்தகம் இது.  இந்த புத்தகம் வாசித்து முடித்த  போது 80 வயதுகளில் இருக்கும் என் பாட்டியை  சந்தித்து பேசவேண்டும் பாட்டியிடம் காது கொடுக்காமல் விட்ட கதையை கேட்க வேண்டும் என ஆவல் கொள்ள செய்தது. பல மனிதர்களுடைய  புரக்கணிக்கப்பட்ட கதையை சொல்லும் புத்தகமாகவே எனக்கு பட்டது இது.

கதாசிரியர் நம்மை நீலமலைக்கு அழைத்து செல்கின்றார். முக்கிய கதாபாத்திரம் ஆறுமுக கங்காணியை அறிமுகப்படுத்துகின்றார்.  கதாசிரியரின் பாட்டனார் பெயரும் ஆறுமுகம், அவரும்  கங்காணியாக இருந்துள்ளார் என்று அறிந்த வேளையில் இருந்து இந்த புத்தகம் நாவலா அல்லது வாழ்கை சரிதமா என கேட்க தோன்றுகின்றது. அந்த அளவுக்கு இதிலுள்ள கதாபாத்திரங்கள் நம்முடன் உயிர்ப்புடன் பயணிக்கின்றனர்.
 மகன் செல்லய்யா,  மாரியம்மா  என்ற மனைவியுடன்  'கங்காணி' வாழ்க்கை போராட்டம் நிறைந்தது என்றாலும் சிறப்பாக செல்கின்றது.  மலங்காடுகளுக்கு வர மனிதர்கள் பயப்பட்ட வேளையில் கங்காணிகள் தங்கள் தந்திரம், நுணுக்கங்களால் தமிழகம் சென்று மனிதர்களை கூலிகளாக அழைத்து/பிடித்து வருகின்றனர். இவர்கள் ஓடி விடக்கூடாத வண்ணம் எஸ்டேட் நிர்வாகம் இவர்களை அடிமைகளாக நடத்துகின்றது.  வெள்ளையர்களின் குதிரைகளை பூட்டும் லேயம் என்ற பொருட்படும் லயங்களில் ஆடுமாடுகளை போன்று அடைக்கப்பட்டு வேலை வாங்கப்படுகின்றனர்.  மலேறிய போன்ற நோய்களால் பல மனிதர்கள் மாண்டு போவதும் சகஜமாக உள்ளது தேயிலை தோட்டங்களில்.  பூச்சி என்ற கதாபாத்திரம் தன் மனைவி மகன்களை மலேறியாவுக்கு பலி கொடுத்த நிலையில் எஸ்டேட்டில் கூலியாகவே வாழ்வதையும் இக்கதையில் காண்கின்றோம். இந்நிலையில் தான் ஆறுமுகவும் பல வித தந்திர உபாதிகளுடன் தன் கங்காணி வேலையை சிறப்பாக செய்கின்றார்.   யாரையும் நேராக எதிர்க்கவொ விரோதிக்கவோ  விளையாது அவர் வேலையில் மட்டும் மும்முரமாக இருந்து ஒரு குழு தொழிலாளிகளை வழிநடத்தி செல்கின்றார்.  கூலி தொழிலாளர்களின் திருமணம் கூட கங்காணியாலே நிர்ணயிக்கப்படுகின்றது. ஆறுமுகம் கங்காணி குழுவிலுள்ள பதாளை மகள் மாடத்தி ஒருவனை காதலித்து கற்பமாக இருக்கின்றாள் என தெரிந்தும் அவள் பெற்றொரை வசப்படுத்தி தன் கணக்கிலுள்ள ஐயாக்குட்டிக்கு திருணம் செய்து வைக்கின்றார்.

ஆறுமுகம்  முதல் மனைவி கோமதி  வெள்ளை அதிகாரியால் கற்பழிக்கப்பட்டு இறந்தவர். தங்களை கோமதி பேய் பிடித்து விடுமோ என பயந்த பெண்கள்   பூசை செய்கின்றனர்.  தன்னை கற்பழித்த வெள்ளைக்காரத் துரையை ஏன் பேய் பிடிக்கவில்லை என்பதற்க்கு "சத்தியத்திற்க்கு  கட்டுப்பட்டது பேய்கள், கடல் கடந்து வந்தவனை ஒன்றும் செய்யாது என்று விளக்குவது வழியாக  வாசிப்பவர்களை சிந்திக்கவும் வைக்கின்றார்.

ஆறுமுக கங்காணி மனைவி மாரியம்மாள் நல்லதொரு பெண் கதாபாத்திரமாக மிளிர்வதும் பெண்ணுக்குரிய எல்லா பொறுமை, தலைமை பண்பு, ஈர நெஞ்சம் இருந்தும் கணவர் உயர்வை கண்டது போல் அவர் தாழ்வையும் முடிவையும் கண்டு வாழ்வின் அதாளபாதாளத்தில் வீழ்கின்றார். .பெண்மையில் இயலாமை, நிரந்தரமற்ற தன்மை விளக்குகின்றார் இக்கதாபாத்திரம் வழியாக.  தன் மகனின் குழந்தையை மடியில் போட்டு கொஞ்ச வேண்டுமென்ற ஆசையும் செல்லையாவின் காதலியால் பறி போகின்றது.


கங்காணியின் ஒரே மகன் செல்லய்யா.  கங்காணி மகன் என்ற அந்தஸ்தில் வாழ்ந்து அனுபவித்து, விடலைப்பருவத்தின் சேட்டைகளும் புரிந்து வேலை என வரும் போது எஸ்டேட் தேயிலை தொழில்சாலையில் அதிகாரியாகுவதும், பின்பு வெள்ளை அதிகாரியால் காரணம் இல்லாது விரட்டப்பட்டு; விதி வசத்தால் கட்சி தலைவர் ஆகுகின்றார்.  தந்தையின் துயர் நிலையை கண்டு மனம் நொந்த வேளையில்   வேலை தேடி தமிழகம் வந்து அரசு வேலை பெற்று  ஒரு வழியாக  காதலியை கைபிடித்தால்;  தாலி கட்ட  அனுமதித்த காதலி தேயிலை தோட்டம்  விட்டு செல்லாய்யாவுடன் வர விரும்பாததும்  துக்க கதாபாத்திரமாகவே நம்மை விட்டு மறையுகின்றார் !

 அடுத்த பிரதான கதாபாத்திரம்  நாடார் இனத்தை சேர்ந்த வேத சிரோன்மணி கண்டக்டர் ஆகும். இந்த ஆள் செய்யும் மூக்கத்தனத்திற்க்கும் அழிச்சாட்டியங்களுக்கும்  குறைவே இல்லை. தான் எடுத்த வாளாலே வீழ்கின்றான் என்பது போல்  இவருடைய செயலே இவருக்கு ஆபத்தாக  முடிகின்றது.  பூனைபோல் சுற்றி வந்த அம்முக்குட்டி என்ற வைப்பாட்டி கூட   எஸ்டேட் மானேஜருக்கு வைப்பாட்டியாகியவுடன் கண்டக்டரை நாய் போல்  விரட்டி விடுகின்றாள்.  எவ்வளவுக்கு எவ்வளவு ஆதிக்கம் செலுத்தினாரோ அந்த அளவுக்கு மலையாள அதிகாரிகளால் மதிக்காது, வேலையில் இருந்து விடுதலையாகும் தருவாயில் தன் மனைவிக்கும் உண்மையாக இருக்கவில்லை, தன்னால் உருப்படியாக ஒன்றும் சம்பாதிக்கவும் இயலவில்லை தன் உடல் ஆரோக்கியத்தை மட்டுமே  இழந்ததை எண்ணி வருந்திய நிலையில்,  10ஆம் வகுப்பில் 3 தரம் தோற்ற  மகனுக்கும் எஸ்டேட்டில் வேலை கிடைக்காமல் போக    தன் வயோதிகத்தில் சொந்த ஊர் நாகர்கோயில் வந்தடைகின்றார்.

ஜான் என்ற மலையாளி பந்தகோஸ்த் கணக்கர். அந்த மனிதன் கடவுளை மட்டும் நினைத்து கொண்டு சுத்த ஆத்துமாவாக, ஏன் கேணையாக தெரிகின்றார்  கதையின் முற் பகுதியில்! ஆனால் வேதசிரோன் மணியை பயந்து அவருக்கு கேடயம் தயார் செய்தே கொடும் வில்லனாக மாறுகின்றான் பின்பகுதியில். தன் வேலையை காப்பாற்றி கொள்ள குறுக்கு வழியை கண்டு கொண்ட ஜாண் என்ற யேசுவின் பரம பக்தன், ஒரு கட்டத்தில் தொழிலாளர்களை துன்புறுத்துவதையே தன் லட்சியம் என மாறுகின்றான். மதபக்தி எந்த அளவு ஆட்கொண்டதோ அந்த அளவு இனமொழி வெறியும் ஆட்கொள்ள தொழிலாளர்களை  கருணையற்று துன்படுத்துகின்றான் .  அதிகாரம் கிடைக்கும்  தோறும்  நல்லதில் இருந்து தீமைக்கு செல்வதும்,  மாநிலங்கள் மொழிவாரியாக பிரிக்கப்பட்டு எஸ்டேடுகள் கேரளாவுக்கு தாரைவார்த்த போது மலையாள நரித்தனமும் சேர்ந்து கொள்ள  கடவுளை அழைத்து கொண்டே மனித நேயமற்று நடந்து கொள்வதையும் இயல்பாக சித்திரிகரித்துள்ளார் கதாசிரியர்.

 வேலம்மை என்ற மறத்தி பெண் கேடு கெட்ட கணவன் தாலி கட்டினதால் இன்னொருவனுடன்(ராபட்சன் என்ற ஆங்கில அதிகாரி) வாழ வேண்டி வந்தவள்.  குடிகார கணவனால் வேசி-குடிகாரியாகி   வெள்ளைக்கார  அதிகாரி, தனக்கு பிறந்த மகளையும் தனக்கே அனுபவிக்க தரும் படியாக சொன்ன போது வெகுண்டெழுந்து தன் மகளை காப்பாற்ற எல்லா சுகங்களையும் விட்டெறிந்து  முதலில் தமிழத்தில் இருந்து பஞ்சம் பிழைக்க வந்த  நிலைக்கே தள்ளப்படுகின்றாள். அவளுடைய மகளான ருக்மிணி  கூலிதொழிலாளியாக பண்புள்ள பெண்ணாக, வீரமுள்ள விவேகமுள்ள பெண்ணாக பல இடங்களில் ஒளிர்கின்றாள். பள்ளியே காணாதவர்கள் மத்தியில் எட்டாம் வகுப்பு படித்த ருக்குமணி நவீன பெண் பார்வையாகவும் கதாசிரியர் கொண்டு செல்கின்றார்.தன் தாயை போல் அல்லாது  சுயநலம் கொண்டு தொழிலாளர்களை விட்டு வர மனம் இல்லாது,   தனக்கு தாலி கட்டிய ஆறுமுகம் கங்காணி மகன் செல்லையாவையே நினைத்து வாழ முடிவெடுக்கின்றார்.

வேலைக்காக பெண்டாட்டியை விட்டு பிழைக்கும் மேஸ்திரி செல்லைப்பா மூப்பன், எசக்கி என்ற மோசமான பெண்,  பெண் லம்பாடியான மரியப்பன் என்ற கங்காணி, பொறுப்பற்று குழந்தகளை மட்டும் பெற்று போடும்  பாதளை நிராதரவான அவன் மனைவி, பூச்சி என்ற முற்போக்குவாதி, வயதான செல்லையா வாச்சாரும் பாலியல் நோயால் பேய் பிடித்துள்ள பேச்சி என்ற இளம் மனைவி, ஒரே அறைக்குள் 3 குடும்பம் அதை வெறும் சாக்கால் மறைகட்டி வாழும் சூழலில் மனைவியை அருகில் தூங்க வைத்து கொண்டே கள்ள தொடர்புக்கு முயலும்-பேய் வைத்தியம் பார்ப்பது போல் பேச்சியை கடத்தி கொண்டு போக நினைக்கும் மரம்வெட்டி வேலாண்டி, விபத்துக்க்கு பலியாகி அநாதையான பிணமாக விடப்பட்ட  பெண் என எல்லா கதாபாத்திரங்களும்  உயிருடன் உலவுகின்றனர்.

அடிமைகள் வாழ்விலும் சுதந்திரத்தில் காற்றை வீச வந்த  துணிச்சலான அனந்தன் நம்பியார், வேலாயுதம் போன்ற கதாபாத்திரங்கள், கூலிகளாக இருந்தும் வீரமாக செயல்படும் இளைஞர்கள் என தேத்தண்ணீர் குடிக்கும் உற்சாகத்துடன் தேயிலைக்காடுகள் வழியாக நாம் ஒரு பயணம் மேற்கொண்டு வரலாம்.

கேரளா தமிழகம் என இரண்டாக பிரிக்கப்பட்ட போது அங்கு வேலை செய்த தமிழ் மனிதர்கள் வாழ்க்கை எவ்வாறு சீரளிக்கப்பட்டது என்றும் இதுவே தருணம் என்று தமிழகர்களை மலையாள நிர்வாகிகளின் உதவி கொண்டு கூட்டாக விரட்ட முயன்ற போது அங்குள்ள இன்னும் சில மனிதநேயம் கொண்ட மலையாளிகளின் மனநிலையை ஒரு மலையாளியின்  உரையாடல் ஊடாக விளக்குகின்றார் கதாசிரியர் இப்படியாக; "மலையாளிகளிடமும் எனக்கும் விருப்பவும் இல்லை தமிழர்களிடம் விரோதவுமில்லை " என்று ஒரு மலையாளி சொல்வது வழியாக.

நீலமலை எஸ்டேட்டில் ஒரு பெண் தேயிலை உற்பத்தி செய்யும் இயந்திரத்தில் அறுபட்டு மாண்டு விடுகின்றாள். இத்துடன் கதை சூடுபிடிக்கின்றது.  அவளை புதைக்க எஸ்டேட் நிர்வாகம் அனுமதி மறுப்பதுடன் வேலை முடிந்து மாலை வந்த பின்பு அடக்கம் செய்ய சொல்லி வற்புறுத்துகின்றது. இங்கு தான் நிர்வாகம் எதிர்பாராத விதத்தில் கூலி தொழிலாளர்கள் ஒன்று சேர்ந்து பிணத்தை அடக்க தூக்கி செல்கின்றனர். ஆனால் வெள்ளக்கார அதிகாரி குதிரையில் வந்து தடுக்க செல்லைய்யா குரல் கொடுக்கின்றான்.  பின்பு நடந்த களேபாரத்தில் வெள்ளைக்காரன் குதிரையுடன் விழுந்து விடுகின்றான். அவமானப்பட்ட வெள்ளக்காரன் செல்லைய்யாவை கொல்ல சதி செய்கின்றான். செல்லையா தன் உயிர் காப்பாற்றி கொள்ள கட்சியில் சேர வேண்டி வருகின்றது. வஞ்சம் தீர்க்க என கூலிகள் பல விதத்தில் துன்பபடுத்தப்படுகின்றனர் துர்குணம் கொண்ட அதிகாரிகளால். ஆறுமுக கங்காணி வாழ்கையில் இச்சம்பவம் பெரும் எதிர்மறையான விளைவை உண்டாக்குகின்றது.


இதற்க்குள் இந்தியா சுதந்திரம் அடைந்து விட வெள்ளையர்கள் இருந்த இடத்தில் மலையாள அதிகாரிகள் வருகின்றனர். அவர்கள் மலையாள கணக்கப்பிள்ளை போன்ற கீழ்நிலை ஊழியர்களுடன் சேர்ந்து கொண்டு தமிழகர்களுக்கு மேலும் துன்பம் விளைவிக்கின்றனர். இத்தருணத்தில் கங்காணி ஆட்சி சட்டத்தால் முடிவுக்கு கொண்டு வரப்பட்டு  சூப்பர்வைசறுகளை நியமிக்கின்றனர்.  ஒரே நாளில் வேலை, பதவி இழந்த கங்காணி ஆறுமுகம் மனம் பேதலித்து போகின்றது. ஒரே நாளில் தாங்கள் குடி இருந்த  வீட்டிலிருந்தும் விரட்டப்பட உடல்-மனச் சோர்வுடன் தமிழகம் வந்து சேருகின்றார்!   தமிழக காலநிலையும் சேராது, வாழ பொதுமான வாழ்வாதரவும் இல்லாத நிலையில் ஒரு நாள் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொள்கின்றார்.

 தொழிலாளர்களோ, வெள்ளையர்கள் படை இருந்த இடத்தில்  இந்திய அரசு சிப்பாய்களால் பெரிதும் விரட்டப்படுகின்றனர். செங்கொடி உயர்ந்ததுடன் அவர்களில் வாழ்வில் ஒளி வர ஆரம்பித்துள்ளதாக கதாசிரியர்  சுதந்திர காலகட்டத்துடன்  முடித்துள்ளார்.

 
செல்லையா காதலி தாலி கட்டிய கணவருடன் வராது இன்னும் முன்னேற வேண்டியுள்ளது என்று சொல்வதும் அதிகாரி வசிக்கும் பங்களா முகப்பை காட்டி மாற்றம் இல்லாது இருப்பதாக சொல்லுவதுடன் கதை முடிகின்றது.செல்லையாவும் கனத்த இதயத்துடன் விடைபெறுகின்றார்.
  • இந்த முடிவு எனக்கு நெருடல் தருகின்றது. புது வசதிகளுடன் மாற்றப்பட்ட லயன்சை காட்டி கதையை முடித்திருக்கலாம். பங்களாக்கள் முகப்பு மாறவேண்டும் என்பது அழியவேண்டும் என்ற பொருளா? தன் இரு கண் போனாலும் மாற்றான் ஒரு கண் போகட்டும் என்ற சிந்தனை இதில் உண்டோ என்று அச்சம் கொள்ள செய்கின்றது.
  • கதாசிரியர் மலையாள மொழியில் நிறைய கதைத்துள்ளார். மலையாளம் தெரியாதவர்களுக்கு வாசித்து புரிந்து கொள்ள சிக்கல் இருந்திருக்குமோ என சந்தேகிக்கின்றேன்.
  • ருக்குமணியை செல்லையாவுடன் சேர்க்காது கதாசிரியர் விடுவதால்  தேவையற்ற மனபாரத்தை வாசகர்களுக்கு தருகின்றார்.
  • தேயிலை காட்டை ஏன் தேயிலை வயல் என குறிப்பிடுகின்றார் என்ற கேள்வியும் துளிர் விடுகின்றது.
  • செங்கொடி ஏறியதுடன் தொழிலாளர்கள் சுமை நீங்கிவிட்டதா? என்ற கேள்வியும் எழாது இல்லை1

இந்த புத்தகம் ஊடாக ஒரு கதையை வாசித்ததை விட ஒரு வரலாற்றை சில மனிதர்கள் வாழ்கையூடாக  கடந்து சென்றது போல் இருந்தது. மனிதர்கள் வெறும் செம்மரியாடுகள் போன்று செல்லப்பட, கூலிகள் என்றழைக்கப்பட்ட தொழிலாளர்கள் கடந்து சென்ற   பாதைகள் இந்தளவு கொடியதாக இருந்ததா?  இன்று அவர்கள் நிலை பல மடங்கு முன்னேறி இருந்தாலும் கூலிகள் தொழிலாளர்களாக மாறினாலும்,   கங்காணித்தனம் அழிக்கப்பட்டாலும் இன்றும் அரசியல் கட்சிகள்  இன்னும் வேறு பலர் அவ்விடங்களை தக்க வைத்து கொண்டும், கொடிய விலங்கு போன்று பிடித்திருப்பதை பற்றி புதிய வரலாறே எழுதி விடலாம்.

கதைகள் கற்பனைகளையும் கடந்து வரலாற்றை சொல்லி வைத்து சென்ற இந்நாவல் அனைவரும் வாசிக்க வேண்டிய ஒன்று. இது போல் நம் சுற்றும் நாம் காணும் தொழிலாளர்கள் வாழ்கையும் பதிய வேண்டும் என்றே ஆவல்.


தேயிலை வயல்
கெட்ட வார்த்தைகள்

9 comments:

ந. பத்மநாதன் · Subscribed · Top Commenter · Leader at Pathman hypnoterapi · 3,408 subscribers said...


தேயிலைத் தோட்டக கதைகள், இலங்கைக்கும் பொருந்தும். இலங்கைத் தொழிலாளர்களும் இந்தியாவில் இருந்து கொண்டுவரப் பட்டவர்களே.

Rathnavel Natarajan said...

அருமையான விமர்சனம்.
தேநீர் - படிக்க வேண்டும். இந்த புத்தகத்தை படிக்க தைரியமான மனது வேண்டும்.
தேநீர் கசக்கிறது.
எனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறேன்.
நன்றி அருமை மகளே - Josephine Baba.

Seeni said...

sako!

kathaiyai muzhuvathumaaka padikka vaithtathupol-
unarkiren!

mikka nantri!

nalla pakirvu!

அருண்பிரசாத் வரிக்குதிரை said...

தோழி... தேயிலை தோட்டத்துடன் நேரடி உறவு இல்லை என்றீர்கள்.. இலங்கைக்கு கொண்டு வரப் பட்ட இந்தியத் தேயிலைத் தொழிலாளிகளைப் பற்றிக் கேள்விப் பட்டிருக்கிறீர்களா? நான் அது பற்றிய தொடர் ஒன்றை எழுதுகிறேன். கட்டாயம் வந்து பாருங்கள்..
அருமையான நூல் அறிமுகம். நன்றி. எனது சுட்டிகள்.
http://varikudhirai.blogspot.com/2012/08/up-country-tamils-in-srilanka.html
http://varikudhirai.blogspot.com/2012/08/tamils-wer-separated-by-caste.html
http://varikudhirai.blogspot.com/2012/08/up-country-tamils-3.html

Cmathews Chinnappa · Subscribe · Bangalore, India said...


காலத்தின் வடுக்களை மிக அழகாக சித்தரித்திருக்கிறீர்கள். மனிதன் மாறவில்லை.
Reply · 1 · Like · Follow Post · 13 hours ago

J.P Josephine Baba said...

பின்னூட்டத்துடன் என் வலைப்பதிவுக்கு வந்து சென்ற நன்பர்களுக்கு என் நன்றி மகிழ்ச்சிகள்!

J.P Josephine Baba said...

அருண்பிரசாத் வரிக்குதிரை நண்பா தங்கள் பதிவை baba.josephine@gmail.com என்ற முகவரிக்கு அனுப்ப இயலுமா?
நன்றி வணக்கங்கள்!

அருண்பிரசாத் வரிக்குதிரை said...

நிச்சயமாக தோழி....

Kumaraguruparan Ramakrishnan · Works at Bank of Maharashtra said...


டி.செல்வராஜின் "தேநீர்" நாவல் முற்போக்கு இலக்கியத்தில் தடம்பதித்த நாவல்களில் இடம் பிடித்தது. தேயிலைத் தோட்டத் தொழிலார்களின் அவல வாழ்க்கையைப் பதிவு செய்த சிறந்த நாவல். திரைப்படமாகவும் எடுக்கப்பட்டு நெடுநாளுக்குப் பின் வெளியானது. ஜோசபின் அழகாகக்கதை சொல்லி, விமரிசித்துள்ளார். அவரது ""மலரும் சருகும்", "தோல்" உள்ளிட்ட இதர நாவல்களையும் படித்துவிட்டு எழுத வேண்டும்."மலரும் சருகும் " (கிறித்தவ இலக்கிய சங்கம் வெளியீடு )தமிழில் முதலில் எழுதப்பட்ட தலித் நாவல் என்பார்கள்."தோல்" நாவலுக்கு சமீபத்தில் தமிழக அரசு விருது கிடைத்துள்ளது.

Post Comment

Post a Comment