8 May 2019

வளர்ப்பு தாய்க்கு ஓர் அன்பின் மடல் - திரைப்படம் ரோமா Roma 2018


கதைத்தளம் 1970-ல் மெக்ஸிகோவில் நடக்கிறது
ஒரு நடுத்தர வசதியான குடும்பம். பெரிய வீடு, ஹால்புத்தக அலமாரைகள்.  மேல் மாடியில் பல அறைகள்; நாலு குழந்தைகள் ஒரு வயதான பாட்டி, நாய்.


மிஸ்ட்டக்கோ இனத்தை சேர்ந்த கிளியோ (Cleo)  அங்கு தான் வீட்டு பணியாளராக வேலை செய்து வருக்கிறார்.  காலை, நாய் கழிவை  சுத்தம் செய்வதில் இருந்து குழந்தைகளை பாங்காக எழுப்புவது, ஒவ்வொருவருக்கும் தேவையான உணவுகளை எடுத்து கொடுப்பது, வீட்டு சமையல், சந்தைக்கு போவது  என வீட்டு விளக்குகளை அணைத்து விட்டு தன் அறைக்கு செல்வது வரை  சிரித்த முகத்துடன்,  மகிழ்ச்சியுடன் பணியாற்றி வருகிறார்.

வாரத்திற்கு ஒரு முறை கிளியோ(Cleo)வும் அவருடைய தோழியும் வெளியே சென்று திரைப்படம் காண்பது  கேளிக்கை நிகழ்ச்சிகளில் பங்கு பெறுவது என காலத்தை கழித்து வருகின்றனர்.  அப்படியான ஒரு பொழுதில் தான் போராட்ட இயக்கத்தில் இருப்பவனுடன்  பழகும் வாய்ப்பு ஏற்படுகிறது. அந்த  நெருக்கத்தில் கர்ப்பவும் ஆகி விடுகிறார்.  அந்த நபரிடம் தான்  கருவுற்று இருப்பதை கூறுகிறார்.  அவனோ  மனசாட்சியே இல்லாது  மறைந்து விடுகிறான், தேடி செல்பவளை பின்பு விரட்டியும்  விடுகிறான்.

மனம் ஒடிந்த நிலையில் கிளியோவின் முகத்தில் சிரிப்பிற்கு பதில் கவலையும், சுறுசுறுப்பான நடைக்கு பதில் பதட்டவும், குற்ற உணர்ச்சியும் ஒட்டி கொள்கிறது. மாதவும் மூன்றாகி விடுகிறது.  எப்படி தன் யஜமானியிடம் சொல்வது என தயங்கி கொண்டு இருக்கிறார்.


அந்த வீட்டு குடும்ப தலைவன் வேறு பெண்ணுடன் போனதால்;   குடும்ப தலைவியையும்(சோபியா) நாலு குழந்தைகள், வயதான தாய் (Veronica Garcia), வேலை என மிகவும் மன அழுத்ததில் உள்ளார்.

இரு பெண்கள், வெவ்வேறு நிலையிலுள்ள பெண்கள்; ஒருவர் யஜமானத்தி, இன்னொருவர் அந்த வீட்டு பணியாளர்!; தாங்கள் நம்பினவர்களால் ஏமாற்றப்பட்டு  மனமொடிந்த நிலையில்  உள்ளனர்.

காதலியுடன் ஓடிப்போனவன் போய்விட்டான். தாயின் தலையில் பாரிய சுமை விடிகிறது. தான் பெற்ற நாலு குழந்தைகளைளையும் மகிழ்ச்சியாக வைத்திருக்க வேண்டும், அவர்களை விட்டு, அவர்கள் அப்பா போனதை பற்றி புரியவைக்க வேண்டும்.  அதற்கான முயற்சியில் தாய் இறங்குகிறார்.  குழந்தைகளுடன் அதிக நேரம் செலவிட அவர்களை வெளியிடங்களுக்கு அழைத்து செல்கிறார். இப்படியாக  தன் வாழ்க்கையை குழந்தைகளுடன்  நகர்த்துகிறார்.

அதே வேளையில், பணிப்பெண் கிளியோவும்;  காதலித்தவன் பிள்ளையை கொடுத்துவிட்டு தன் பாதை நாட்டின்  போராட்டம் என போய் விட்டான். கிளியோவிற்கு குழந்தையை பெற்று எடுக்க யஜமானத்தியின் உதவியும் தேவையாக இருக்கிறது.  

வேறு வழியே இல்லை. ....தன் யஜமானியிடம் கருவுற்று இருப்பதை சொல்ல வேண்டும். யஜமானி, பணிப்பெண் தன் நிலையை கூறிய போது அது வேறு ஒரு பெண் பிரச்சினையாக பார்க்கவில்லை. தன் பிரச்சினையாகவே உணர்ந்து  சக மனிதையாக மதித்து ஆறுதலாக  தன் ஆதரவை பணிப்பெண்ணுக்கு தருகிறார்.

அங்கு விசாரணயில்லை, குற்றப்படுத்துதல் இல்லை, பிரச்சினைக்கு உள்ளான பணியாள் பெண்ணை ஒதுக்கி விடவும் விரும்பவில்லை. அங்கு மனிதத்தின் உச்சம் என்கிற கரிசனை, அன்பு மட்டுமே உருவாகிறது.  தானே மருத்துவமனைக்கு அழைத்து செல்கிறார், குழந்தையை பெற்றெடுக்கும் நல்ல சூழலை உருவாக்குகிறார்.  மனிதன் இன்னொரு மனிதனுக்கு உதவிட  சமூக நிலையோ,  சூழலோ தடை நிற்கவில்லை. ஒருவர் மற்றொருவரை புரிந்து கொள்ளும் மனிதமே அங்கு மேல் ஓங்கி நிற்கிறது.

அந்த வீட்டிலிருக்கும் பத்து வயது பாலன், அம்மா ”ஏன் கிளியோ இப்போது பேசுவதில்லை, அவர் ஏன் அழுகிறார் என கேட்பான். தாயும் அவளுக்கு  வயிற்று வலி என்றதும் அந்த பாலகன் தன் கையால் வயிற்றை தடவி கொடுப்பான். அந்த பத்து வயது பாலன் தான்; தனது 56 ஆவது வயதில் தன் வீட்டில் வேலை செய்த பணிப்பெண்ணை நினைவு கூர்ந்து ரோமா என்ற படத்தை இயக்கியுள்ள   அல்போஃன்ஸோ குவரோன்(Alfonso Cuarón)

என் வாழ்க்கையில் ஆளுமை செய்த இரு பெண்களை பற்றிய படம். ஒன்று என் தாய்(Fernando Grediaga), இன்னொருவர் வளர்ப்பு தாய். வளர்ப்பு தாய்க்கு நான் எழுதின அன்பின் மடலாகவே இப்படத்தை காண்கிறேன் எனக்குறிப்பிட்டுள்ளார்.  

10 வருடமாக மெருகேற்றி கறுப்பு வெள்ளையில் எடுக்கப்பட்ட ஸ்பானிஷ் மொழியிலான இப்படம் ஆங்கில மொழி அல்லாத வெளிநாட்டு பட வரிசையில்; 2018 ற்கான  மூன்று ஆஸ்கார் விருதுகளை பெற்றுள்ளது.  

இப்படத்தில் பணியாளர் பெண்ணாக நடித்திருப்பவர் புதுமுக நடிகை Yalitza Aparicio ஒரு பள்ளியின் ஆசிரியராக இருக்கையில் இப்படத்தில் நடிக்க தேர்வானவர். இவர் முதல் படத்திலே  ஆஸ்கார் பெற்றிருக்கிறார் என்பது அவரின் நடிப்பின் சிறப்பாகும்.  தாயாரின் கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கும் Marina de Tavira சிறந்த துணை நடிகைக்கான விருதையும் பெற்றுள்ளார். ஒளிபதிவு, இயக்கம் என மூன்று விருதுகளை பெற்றுள்ளது.

ஒவ்வொரு காட்சியிலும் காட்டியிருக்கும்  ஒழுங்கு, அதன் உள் கட்டமைப்பு, உண்மை தன்மை ஆச்சரியப்படுகிறது. வீட்டில் விரைந்து கிடக்கும்  பொருட்கள், வீட்டு அலமாரைகள், அலங்காரம், தன் தாயார் பயண்படுத்திய கார் மாடல், அதன்  நிறம், இயக்குனர்  வாழ்ந்து வந்த   தெருவு துவங்கி; வீட்டில் மற்றொரு ப்குதியில் பணிப்பெண்கள் தங்கியிருக்கும் அறைகள் அவர்கள் துணிகாயப்போடும் இடம் என தன் 10 வயதில் நிறைந்திருந்த  நினைவுகளை மறுகட்டமைப்பு செய்து எடுக்கப்பட்ட படம். தாங்கள் வாழ்ந்த கிராமத்தில்  செட்டுகள் போட்டு படம் ஷுட் செய்துள்ளார்

இந்த படத்தின் ஒளிபதிவு இயக்கம் திரைக்கதை எல்லாம் பார்த்து பார்த்து செதுக்கிய ஒரு சிலை போல் வடிவமைத்துள்ளார். இப்படத்தின் காட்சிகள் அவ்வளவு எளிதாக மனதை விட்டு மறைவதில்லை. இப்படத்தின் ஒவ்வொரு காட்சிகளையும் பற்றி சொல்லப்போனால்எளிமையில் உருவான பிரமாண்டம்எனலாம்.  படம் முழுவதும் கறுப்பு வெள்ளையில். அதுவே ஒரு மயக்கும் mesmerising effect-உணர்வை  கொடுக்கிறது. ஒவ்வொரு frame-லும் அனைத்தும் (மனிதர்களும் பொருட்களும்துல்லியமாக உள்ளது . படம் மெதுவாக நகர்ந்தாலும் அழுத்தம் குறையாமல் இறுதிவரை செல்கிறது.

சொந்த தாயை போல்; நான்கு குழந்தைகளை கவனித்து வரும் கிளியோ தனக்கு ஒரு குழந்தை பிறக்க போகிறது என்றதும் பிரத்தியேக மகிழ்ச்சியில், கற்பனையில் குவிந்திருப்பது அழகு.   ஆனால் சோதனை யாரை விட்டது குழந்தை இறந்து பிறந்திருப்பது அவரை மட்டுமல்ல நம்மையும்  அழவைத்து விடும்.

பின்புள்ள கிளியோவின் வாழ்க்கை பழைய வாழ்க்கையின் மகிழ்ச்சி இல்லாது, சுருதி அற்று செல்லும்.  ஒரு நாள்  யஜமானியின்  குழந்தைகள் அலைகளில் மாட்டி கொள்வார்கள். தன் உயிரையும் மதிக்காது காப்பாற்றி வருவார்.  அந்த காட்சியில் ஒரு பணிப்பெண் தாயாகும் நிலையை காட்சி மொழியில் காட்டியிருக்கும் விதம் அருமை.

மனித வாழ்க்கை அன்பால் கட்டமைக்க வேண்டியது. பிற மனிதனை தான் பேணும் நெறிகளின் பொருட்டு துன்பப்பட வைப்பது அல்ல என்பதை விளக்கியிருப்பார். பணக்காரர்கள் விருந்தில் சுவாரசியம் அற்று கிடக்கும் பணிப் பெண்கள், பணியாளர்கள் கலந்து கொள்ளும் விருந்திற்கு சென்று விட்டு தாமதமாக திரும்புவார். அப்போது  தனது யஜமானியின் தனிமையை களவான ஒருவன் முயன்று கொண்டு இருப்பான்.  யஜமானி நெறி தவறாதவள். அவனை தட்டி விட்டு விட்டு கடந்து செல்வார்.  யஜமானி தனதான நெறியில் கட்டுகோப்பானவளாக இருந்தாலும் தன் பணிப்பெண்ணின் தவறை, நீதியிடும் இடத்தில் இருந்து நோக்காது மனித நேயத்துடன் அணுகும் ஈரநெஞ்சக்காரியாக இருப்பார்.  பெண்கள் ஒருவருக்கொருவர்`            `தங்கள் பேரன்பால் தழுவி கொண்ட  பேரன்பை சொல்லிய திரைப்படம் இது.  

பொதுவாக வாழ்க்கை கதை சொல்லும்படங்கள்; படம் எடுப்பவரை பற்றியதாக அல்லது வரலாற்றில் இடம் பெற்ற மாபெரும் ஆளுமைகளை பற்றிய படங்களாகவே இருந்துள்ளது. ஆனால் இப்படம் தன் வீட்டில் ஒன்பது மாதத்தில் இருந்து தன்னை வளர்த்திய வளர்ப்பு தாயை பற்றி எடுத்த படம் என்பது இன்னொரு சிறப்பாகும்.  , தற்போது 72 வயதாகும் லிபோரியா ரோட்ரிகெஸ் (Liboria Rodriguez) இந்த படத்தை பார்த்த போது அழுதார் எனக்குறிப்பிட்டுள்ளார்.
 
நல்ல படம் என்பது நல்ல மனிதர்களை, ஈரமான மனங்களை உருவாக்குவது அவ்வகையில் ரோமா சிறந்த படம்

 1970 களில் தாங்கள் குடியிருந்த காலனியின் பெயரான ரோமா என்பதை படத்தின் தலைப்பாகவும் தேர்வு செய்துள்ளார் இயக்குனர்.

நெட்ஃப்லிக்ஸின் முதல் படமே 10க்கு மேற்பட்ட ஆஸ்கார் விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டிருந்தது. இது ஒரு. 17 வயதிற்கு மேலுள்ள நபர்கள் பார்க்க அனுமதியுள்ள  R-சாற்றிதழ் பெற்ற படம் ஆகும்.

இந்த படத்தில் தயாரிப்பு டிசைனராக தன்னுடைய தந்தை பணியாற்றியதையும் நினைவு கூறுகிறார்.  தன் குழந்தைப்பருவத்தில் தன் சகோதரி விளையாண்ட விளையாட்டு பொம்மைகளை  கூட இயக்குனர் நினைவு வைத்திருப்பதை நினைத்து  தந்தை ஆச்சரிப்படுகிறார்.

உலகம் முழுக்க இருந்து நெட்ஃப்லிக்ஷ் ஊடாக 137.1 மிலியன் மக்கள் பார்த்துள்ளனர் .  பல  தியேட்டருகளிலும் திரையிடப்பட்டுள்ளது.


28 Apr 2019

சலூன்

க. வீரபாண்டியன் எழுதிய, யாவரும் பப்ளிஷர்ஸ் பதிப்பகத்தின் ஊடாக டிசம்பர் 2018 ல் வெளிவந்த புத்தகமாகும் " சலூன்".
ஆனந்த் என்ற அரசு அதிகாரி வேலை விடையமாக விமானத்தில் காதரின் என்ற தோழியுடன் பயணிப்பதில் இருந்து துவங்குகிறது கதையாடல்.
கதையாளர் தான் சந்தித்த, சொந்த ஊர் சலூன்க்கடைக்காரர்கள் மட்டுமல்ல பயணத்தில் சந்தித்து பழகிய வட இந்திய முடிதிருத்துதவர்களைப் பற்றியும் சொல்லியுள்ளார்.
சலூன்காரர்களின் வரலாற்று கதைகள், ஜாதி அடிப்படையில் அவர்கள் எதிர் கொண்ட கீழ்மையான பார்வை, சலூன்காரர்களின் வரலாற்று பூர்வமான திறமைகள், அவர்களுக்குள் நடந்த தொழில் போட்டிகள், முத்தைய்யா தாத்தாவின் மரணம், நவீனகாலத்தில் மனிதர்கள் தங்கள் அலங்கார தேவைக்கேற்ப, சலூன் கடைகளை தவிர்த்து கார்ப்பரேட்டுகளின் பியூட்டி பார்லர்கள் நாடும் கால மாற்றம் என சுவாரசியமாக எழுதியுள்ளார்.
மரியாதக்குறிய மருத்துவ தொழில் சார்ந்து இயங்கிய ஒரு இனம், முடி திருத்தும் நிலைக்கு தள்ளிவிடப்பட்ட சமூக அரசியல், பற்றி எழுதப்பட்டதே இக்கதை.
புத்தகம் பற்றிய விமர்சனம்:
ஒரு இனத்தின் தோல்வியை அல்லது விளிம்பு நிலை வாழ்க்கையை பற்றி குறிப்பிடும் போது அந்த பிரச்சினைக்கான தீர்வையும் தேடித்தருவது எழுத்தாளரின் கடமையாக மாறுகிறது. தன்னை சூழலுக்கு ஏற்ப மாற்றி எப்படி வலுப்படுத்தி கொள்வது என்ற வழியையும் விளக்கியிருக்க வேண்டும்.
சமூக வளர்ச்சிக்கு; எதிர்மறையான கருத்து புரட்சி கோஷங்களை விட ஆக்கபூர்வமான நம்பிக்கை ஊட்டும் நேர்மறையான கருத்துக்களே சமூக வளர்ச்சிக்கும் சுமூகமான மனித உறவிற்கும் உதவும் .
உயிரும் சதையுமான விளிம்புநிலை மனிதர்களின் வாழ்வு போராட்டத்திலூடாக வாசகர்களையும் அழைத்து சென்றுள்ளார் என்பது எழுத்தாளரின் சிறப்பாகும்
சக இனக்குழுக்களின், பல சடங்குகளில் பார்பர்களுடைய இடம் இன்றிமையாததது. அதையும் விளக்கியிருக்கலாம்.
அச்சமூகத்தில் இருந்து படித்து வெளியேறி, இன்று உலகநாடுகளின் திட்டங்களில் வேலை செய்யும் அளவிற்கு வளர்ந்துள்ள கதை சொல்லும் கதாப்பாத்திரம், புரக்கணிக்க மக்களுக்காக என்ன செய்தார்? என்ன செய்து கொண்டு இருக்கிறார் ?
அண்ணா என்று அழைத்தேன், சாப்பாடு வாங்கி கொடுத்தேன், உடனிருந்து உண்டேன் என தன் தாராள மனதை வெளிப்படுத்தும் ஆனந்த என்ற கதாப்பாத்திரம் இந்த இனத்தின் வரும்தலைமுறைக்காக அவர்கள் முன்னேற்றத்திற்காக. என்னன்ன திட்டங்கள் உள்ளது செயல்வடிவத்தில்? என்ற கேள்வி வாசகர் மனதில் எழுவதையும் மறுக்கல் ஆகாது.

இரக்கம் கொள்வது மட்டுமே சிறந்த மானிடமா? என சிந்திக்க வைத்தது இப்புத்தகம்.
முடி திருத்துகிறவர்கள் ஒரே சாதியை சேர்ந்தவர்கள் அல்ல, பணவசதியற்ற வேறு இனமக்களும் பார்பர் பணியில் உள்ளனர் என அறிகின்றோம் . அவ்வகையில் இது இன/ஜாதிப்பிரச்சினை மட்டுமல்ல வருமானம் சார்ந்த வாழ்க்கை பிரச்சினையும் கூட.
புத்தகம் அனுப்பி வாசிக்க பாசத்துடன் கட்டளையிட்ட பாசமிகு அப்பா N. Rathna vel https://www.facebook.com/n.rathna.vel நன்றி மகிழ்ச்சிகள்.

17 Mar 2019

தாய்மையும் சமூககுற்றங்களும்!

நாசமா போகிற பெண் பிள்ளைகளை காப்பாற்ற இயலாத கையேறு நிலையில் தான் உள்ளது காலம்.
பாளை பேருந்து நிலையத்தில் நிற்கும் வேளையில் 9,10 படிக்கும் பெண் பிள்ளைகள் அவென் ஏ ஆளுடி .... 
நல்லா. ஏமாத்த போறான் பாருடின்னு


வெட்கமே இல்லாமை கனைத்து பேசி கொண்டு நிற்கும் போது; நமது சகல நாடி நரம்புகளையும் மூடி வெட்கமே இல்லாது சுரணையற்று கேட்டு கொண்டு நிற்பது மரபாகி விட்டது.
ஒரு பிள்ளையிடம் யாரையும் நம்பாதே கூடப்பிறந்தவன் தவிற எவனும் அண்ணன் ஆகிட மாட்டான் என்றதும் பெத்தவங்களுக்கு தெரியாதே ஏதோ ஒரு வக்கீல் மாமாவை அழைத்து வந்து இந்திய சட்ட புத்தகத்திலுள்ள அனைத்து சட்டவும் பேசியது.
பெண் பிள்ளையை வழி நடத்துங்கன்னு ரகசியமா சொன்னா ஏ.... புள்ளை பச்சை மண்ணு அதுக்கு ஒன்றுமே தெரியாது நீங்கள் துன்புறுத்தாதிங்கன்னு பதில் வரும். 
ஒரு தாயிடம் உங்கள் பிள்ளைக்கு சுகமில்லை அழைத்து செல்லுங்கள் என்றால்.... அவுங்க அப்பாட்ட கேட்டு சொல்லுதேன் , சும்மா ஒரு பஸ்ஸுல ஏத்தி விடுங்கள் என்பார்கள் !
பெண்ணியவாதிகள் போன்றோர் பெண்களை யாரும் கட்டுப்படுத்த கூடாது. அவர்கள் மனநிலை பாதிக்கும் காதலிக்கட்டுமே சுத்தி வரட்டுமே, இதனால் என்ன ஆகப்போகுது உங்க மனநிலை சரி இல்லை என்பார்கள்.

டிவியை திறந்தால், என் மகன்கள்..... அவனுக பிகருகளை எங்கட்டயும் காட்டுவானுக...அவனுக ஜாலியா இருக்கட்டும்,கல்யாணம் பண்ணும் போது நாங்க சொல்லுத பிள்ளயைஐ தான் கட்டுவான் என்று பீற்றுகின்றனர். 
அப்ப உங்க மகளுகளுக்கும் இதே சுதந்திரம் கொடுப்பீர்களா என்றால் சீ ... பயலுக சகதில்லா மிதிச்சாலும் காலை கழுகிட்டு வீட்டுக்குள் வருவானுக என்கின்றனர்.
பெண்கள் பெண்ணுறுப்பை. சிதைத்து இன்பம் காண்பதை அவதானிக்கும் போது 9 மாதம் பெண் கருவறையில் வசித்து வந்து, அடுத்த 9 மாதம் உணவூட்டிய கொங்களை வெறும் பாலியல் பொருளாக பார்க்கின்றார்கள் என்றால் அவர்கள் பிறப்பிலும் 7 வயது வரையுள்ள வளர்ப்பிலும் குறை உள்ளது.

இன்றைய பெற்றோர் மிகவும் சுலநலவாதிகள். அன்போ கரிசனையோ இல்லாது கடமையே என குழந்தைகளுடன் வாழ்கின்றனர். 
பல மாணவிகள் ஒரு கருதலான வார்த்தைக்கு சிரிப்பிற்கு ஏங்கி வாழும் சூழல் தான் உள்ளது.

தாய்மார்கள் மாணவிகளுக்கு உடல் சுகவீனம் என்று தெரிவித்தால் எந்த அக்கறையும் இல்லாது அணுகுவதை கண்டுள்ளேன். ஏதோ பெத்தேன், கல்லூரிக்கு அனுப்பினேன், கட்டி கொடுத்தேன் கடமை முடிந்தது என பல உள்ளனர். இது போன்ற சூழலில் வளரும் மாணவிகள் சிந்தனை வாழ்க்கை தேர்வு எல்லாம் ஆபத்தாகத்தான் இருக்கும்.

நல்ல பாச சூழலில் வளரும் சில பெண்கள் கூட இது தான் சிறந்த வாழ்க்கை இவர்களை போல் சுதந்திரமாக யாருக்கும் கட்டுப்படாது வாழ வேண்டும் என ஆவல் கொள்கின்றனர். 
ஆண் பிள்ளைகள் தன் குடும்ப சொத்தை பராமரிக்க வேண்டியவர்கள், தனது கடைசிக்காலம் தன்னை கவனிக்க வேண்டியவர்கள் என்ற நோக்கில் வளர்ப்பதும் பெண் பிள்ளைகளை ஆசைக்கு அடுத்தவன் வீட்டில் போகிறவர்கள் என்ற உதாசீனத்துடன் வளர்க்கின்றனர்.

சிலர் கருதலாக வளர்க்கின்றனர் என்ற பெயரில் வாழ்க்கையின் பிரச்சினைகளை அறியவே விடாது மகாராணி போன்று வளர்க்கின்றேன் என்ற பெயரில் ஆடம்பரத்திலும் வெளி உலகு தெரியாது வள்ர்க்கின்றனர்..
பெற்றோர்களின் ஆளுமை மிகவும் அவசியம். இன்று பெற்றோர் தங்களை சுயபரிசோதனை செய்து கொண்டாலே தங்கள் பிள்ளைகள் நிலையில் காரணம் உணர இயலும்.
ஒரு காலை பேருந்துக்காக காத்து நின்று கொண்டிருந்தேன். ஒரு பெண் தன் மகளுக்கு நிச்சயம் செய்து இருக்கும் மணமகனுடன் பேசிக்கொண்டிருந்தது என் நிறுத்ததில் நிறுத்துவது வரை தொடர்ந்தது. அதில் மஞ்சள், பச்சை சிவப்பு எல்லாம் கலந்து கட்டி பேசிக்கொண்டிருந்தார். அலைபேசியால் சிறு பிள்ளைகள் அழிகின்றனர் என்றால் அதற்கு பிள்ளையார் சுழி போட்டு கொடுப்பதும் பெற்றோர் தான்.
பிள்ளைகளை வைத்து பிழைப்பது என்ற பண்பற்ற பண்பாடு வளர்ந்து வருவதையும் கவனிக்க வேண்டி உள்ளது.

ஆண்பிள்ளைகளை வளர்க்கும் பெற்றோர்கள் மனநிலையும் பரிசோதிப்பது அவசியமாகும். பொள்ளாச்சி முதல் குற்றவாளி அம்மாவின் பேச்சை அவதானித்தால் புலன்படும். பையனுக்கு 26 வயதிற்கு முன்பே இரண்டு காதல் . இரண்டும் தாய் அறிவோடு தான் நடக்கின்றது. அதிலும் ஒரு ரகசிய திருமணவும் செய்து வைத்துள்ளார்.

அந்த இரண்டு பெண்கள் தன் மகனை விட்டு விலகியதற்கு மகனையே குற்றம் சுமத்துகின்றார். எம் பி ஏ படித்த மகனுக்கு வட்டி தொழில் துவங்கி கொடுக்கின்றனர். வட்டி தொழில் ஒரு காலத்தில் படிப்ப்பறிவில்லாதவனிடம் நாலு காசு இருந்து படிப்பில்லாதவனிடம் தான் இருக்கும். மகன் கொண்டு வரும் பணத்தை தன் கைப்பட வாங்கி சாமி படம் முன் வைப்பேன் என சப்பை கட்டுகின்றார். வட்டி தொழில் ஒரு சாபம் பிடித்த தறுதலைகளின் தொழிலாக இருந்தும் காசு சம்பாதிக்க இயல்வதால் மகனுக்கு துவங்க பின் புலனாக உள்ளார். 

மகனுக்கு பெண்கள் விடையத்திலுள்ள ஈடு பாடு அறிந்து யார் விட்டு பிள்ளையோ தன் மகன் விருப்பத்திற்காக பைக்கில் அனுப்புகின்றார், ரகசிய திருமணம் செய்து வைக்கின்றார். உருப்படியா நாலு ஆள் தெரிந்த மாதிரி திருமணத்தை முடித்து வைத்திருக்கலாம் என்ற நேர்மை தாயிடவும் இல்லை. 

தன் மகனிடம் மாட்டப்பட்ட பெண்ணை பற்றியும் அவதூறாக ஏதேதோ கொச்சை வார்த்தையில் திட்டுகின்றார். ஒரு சமூகத்தில் அழிவும் ஆக்கவும் தாய்மையில் இருந்தே துவங்குகின்றது. மேற்போக்காக ஒரு பிரச்சினையை அணுகாது அதன் ஆணிவேரை சரிப்படுத்தாது எதுவும் சரியாகப்போவதில்லை. 

6 Mar 2019

கல்லூரி பெண்களே.... நட்பை கொண்டாடுங்கள்!


x

எந்த சினிமாப்படத்தை பார்த்து ஊக்கம் அடைகின்றனர் எனத்தெரியவில்லை எந்த வருடவும் இல்லாத ஒரு மாற்றம் இந்த வருடம் காணக் கிடைக்கும் ஓர் காட்சி கல்லூரி மாணவிகள்-மாணவர்கள் கையை கொருத்து கொண்டு, ஏதோ மாய உலகத்தில் ரோட்டில்  நடக்கும் காட்சி தான்..

மாணவர்கள்/விகள் 18 வயது ஆகி விட்டால் அவர்கள் எடுக்கும் முடிவிற்கு அவர்களே பொறுப்பாகும் பட்சத்தில் இப்போதெல்லாம் பெற்று வளர்த்தும் பெற்றோர்களே பலவற்றை கண்டு கொள்வதில்லை. ஒரு அளவிற்கு மேல் ஒன்றும் சொல்லவும் இயலாது. பல வீடுகளில் பிள்ளைகள் பெற்றோர்களை தங்கள் சொல்படிக்கு வைத்து ஆட்டிபடைப்பதையும் காணலாம்.  


சமகாலத்தில் பெண் பிள்ளைகள் பார்த்த ஒரு பெரும் உதாரணமாகும் கைசல்யா என்ற போராளி.  வெறும்  17ஆம் வயதில்  காதல், 18ல் திருமணம் 19ல் விதவைக்கோலம் 21 ல் மறுமணம் என்று எல்லாம் பார்க்கும் போது போராட்டமாக தோன்றியது. அப்பெண் தனக்கான பெரும் பாதுகாப்பான இடமான வீட்டை பகைத்து கொண்டபோது இந்த சமூகம்,ஒரு பெண் இருந்தால் இப்படி தான்  இருக்க வேண்டும் என்றது. ’இதுபோல என்னால், என் வயதில் முடிவு எடுக்க இயலவில்லையே’ என பல மத்திய வயது பெண்கள் ஸ்லாகித்தினர். வீட்டை எதிர்த்த அதே பாணியில் நாட்டை எதிர்த்து பேசினதும்; நாட்டின் இறையாண்மைக்கு எதிராக பேசி விட்டார் என அப்பெண்ணை ஒடுக்கி விட்டது இச்சமூகம். 

போராட்டவும் வாழ்க்கையும்  தான் பெற்ற அறிவு செறுக்கில் இருந்து வரவேண்டும். இளமையின்  உந்துததால் வருவது நல்லதை விட பல ஆபத்துகளை சிக்கல்களை எதிர் கொள்ள வைக்கும் என இச்சமூகம் படிப்பித்தது.

பெண்கள் வாழ்கை யாருக்காகவோ வாழ்வது அல்ல,  இந்த சமூகத்திற்காக அல்லது இச்சமூகத்துடன் மல்லிட்டு கொண்டு வாழ்வதும் அல்ல.
ஒவ்வொரு பெண்ணும் தனக்காக வாழ வேண்டும்.  தன் விருப்பத்தின் பொருட்டு  வாழ வேண்டும். ஆனால் அதற்கு ஒரு  காலம் உண்டு.  அதற்க்க்கான தகுதியும் பெண்கள் வளர்த்து கொள்ள வேண்டும்.   பூவாகி, காயாகி, கனிந்து பழமாகும்  இயற்கை நியதி போல, பெண்ணும் தன்னக்காக செம்மையாக வாழ தயார் செய்தல் வேண்டும்.    தன்னுடைய செயல்பாட்டை தெரிவு செய்யும் வயது வரும் வரை கொஞ்சம் காத்திருக்க வேண்டும்..

காதல், ஆறிலும் வரும் அறுபதிலும் வரும். பல இளம் பெண்கள் தங்களுக்கு மட்டுமே காதல் தோன்றும் இப்போது மட்டுமே தோன்றும், தோன்றியதை தோன்றிய உடன்  வாழ  வேண்டும் என நினைத்து விடுகின்றனர்.
ஒரு பெண் தனக்கான ஒருவனை தேர்வு செய்யவும், தொடவும், தொட்டு பழகவும் சில காலம் காத்திருத்தல் மிகவும் அவசியம். ஒருவனை கண்டதும் ஆசை வரலாம்.  ஆனால் அவன் உடனே கிடைக்க வேண்டும் என்பது அபத்தம். அவனுக்கு என்ன தகுதி, அவனால் என்னை மகிழ்ச்சியாக நான் தற்போது இருப்பதை விட செம்மையாக வைத்து காப்பாற்ற இயலுமா என சிந்திக்க வேண்டியது மிகவும் அவசியம். ஒருவன் தன்னை காதலிக்கான் என்றால் தன்னை, தன் ஆளுமையை தன் புகழை, தன் சிறப்பை தன் குடும்ப கவுரவத்தை மதிக்கின்றானா என்று சிந்தித்தல் அவசியம். சினிமாவில் காண்பது போல இரண்டு மணி நேரத்திற்குள்ளாக முடிந்து போவது அல்ல வாழ்க்கை. தன் புத்தி ஈனமான  தெரிவால், தன் அவசர முடிவால் வாழ்க்கை முழுதும் சுமையாக மாறல் ஆகக்கூடாது.


திருமண வாழ்க்கை தனக்கு ஒத்தவனுடன் சுகமாக வாழ்வது தான். திருமணத்தை சமூக புரச்சி, சமூக போராளி அல்லது தன் சுதந்திரம் என்ற பார்வையில் கையிலெடுத்தால் அது மிகவும் இக்கட்டான நிலையில் பெண்களை கொண்டு விடும்.

பெண்களுக்கு கல்லூரி படிப்பு  வாய்க்கின்றது என்பது தற்போதையை சமூக சூழலை வைத்து நோக்கும் போது பெரும் சவால். பெண் பிள்ளைகள் தன்னுடைய  கல்லூரி படிப்பிற்கு ஒதுக்கும் நேரம் மூன்று அல்லது ஐந்து வருடம் என்பது மிகவும் குறுகிய, மிக முக்கியமான வருடங்கள் ஆகும். ஒரு போதும் மறுமுறை கிடைக்காத வரப்பிரதமான நேரம். இந்த நேரம் படிப்பது தன் சொந்த காலில் நிற்க  கற்பது , முன் வரும் வாழ்க்கைக்கு தன்னை தயார் செய்து கொள்வது என வாழ்க்கையை நோக்க வேண்டிய தருணம். இந்த நேரத்தில் ’ஏதோ ஒரு பையனை காதலித்தேன்’ என நேரம் விரயம் செய்வது மிகவும் முட்டாள்த்தனமாகும்.

ஒரு காதலுடன் நின்று போவதல்ல இப்போதைய கல்லூரி காதல்கள். ஒவ்வொரு பருவத்திலும் இவனை விட இவன் சிறப்போ.... என சிந்தனை கொள்ள வைக்கும் காலம். புத்தியுள்ள பெண் நிதானமாக அவதானித்து சிறப்பான பையனை தன் வாழ்க்கை துணையாக தேர்வு செய்வதை விட்டு விட்டு குறுகிய சந்தோஷத்திற்காக நேரம் போக்கிற்கு என்றும் காலத்தை விரையம் செய்கின்றனர்.

 கல்லூரி படிப்பு வேளையில் காதலை விட நட்புக்கு இடம் கொடுக்கும் போது பல மாணவர்களுடன் நட்பு பாராட்டஇடம் கிடைக்கும்.  இதனால் பெண்கள் ஒரு மதிப்பை தன் சக தோழர்கள் மத்தியில் பெறுகின்றனர். கண்டதும் காதல் கொண்டதும் மயக்கம் என அலையும் ஜோடிகள் தங்கள் மாயா உலகத்தில் இருந்து வெளி வரும் முன் 6 பருவங்கள் முடிந்து பல அரியருடன் பிடிப்பில்லாது வாழ்க்கைக்குள் பிரப்வேசிப்பீர்கள். வேலை விடையாமாகவோ தன் வாழ்க்கை விடையமாகவோ தன் சிந்தனையால் முடிவு எடுக்க விடாது இது போன்ற உறவுகள் தடுக்கும். வாய்ப்புகளை கைவிட வைக்கும்.

காதல் நல்லது தான். ஆனால் அந்த காதல் சரியான வயதில் கொள்ளும் போது தான் பல நல்ல விடையங்களை காண தோன்றும், பகுந்தாய தோன்றும். பல பெண்கள் காதல் மயக்கத்தில் எந்த வசதியும் வேலையும் அற்ற பையன்களை கல்யாணம் செய்வதும் காலம் முழுக்க கஷ்டப்படுவதையும் காணும் போது வருத்தம் கொள்ள வைக்கின்றது. 

தமிழக கலாச்சாரத்தில் ஒரு பையன் திருமணம் முடிக்கும் முன் அவனுக்கு வீடு கட்ட வேண்டும், உடன் பிறந்தவளை கரை சேர்க்க வேண்டும், பெற்றவர்களுக்கு உதவ வேண்டும் என்ற பொறுப்பில் அவர்கல் திருமணம் 25 வயதை தாண்டி விடும். பெண்கள் வாழ்க்கை சூழல் அதுவல்ல. பல பெற்றோர் 21, 23 வயதிற்குள் பெண்கள் வாழ்க்கையை ஸ்தரப்படுத்தி விடுகின்றனர். அச்சூழலில் உடன் படிக்கும் பையன்களை கல்யாணம் செய்வது என்பது நடக்காது என தெரிந்தே ஏன் காதல் ஆசை காட்ட வேண்டும்.  

இளம் பருவம் என்பது உயர்ந்த சிந்தனையில், சுதந்திர சிந்தனையில் தங்களை பண்படுத்தி தன் நோக்கை அடைய வேண்டிய தருணம். ஆனால் காதல் என்ற பெயரின் ஒருவன் விருப்பத்திற்கு தன்னை உடம்படுத்தி அவனுக்கு பிடிக்காது என்பதால் யாருடனும் நட்பு பாராட்ட இயலாது உனக்கு நான் எனக்கு நீ என்று குறுகிய வட்டத்தில்  செல்ல வேண்டியதா கல்லூரி வாழ்க்கை? .

கையை பிடித்து கொண்டு போனால் என்ன என்று சிலர் கருதலாம். ஒரு சமூகத்தில் வாழும் போது அதன் நெறிகளை மீறும் போது அது சார்ந்த பல ஆபத்துகள் பெண்களை சூழ்ந்து இருப்பதை பெண் பிள்ளைகள் உணருவதில்லை. இவள் அனுப்பும் எழுத்தை அவன் நண்பர்களுடன் இருந்து பார்த்து தான் ரசிக்கின்றான். நண்பர்கள் உந்துதலில், பெண் பிள்ளைகளை தனித்து அழைத்து போய், கூட்டு வல்லுறவிற்கு உள்ளாக்கி சின்னா பின்னமாக்கும்  பல  சம்பவங்கள் தமிழ் நாட்டில் நடக்கின்றது.  பல பெண்கள் கொல்லப்படுவது காதல் என்ற பெயரில் தான். 

பல பெண்கள்  காதல் என்ற பெயரில்  பல பல சிக்கல்களில் மாட்டி கொள்கின்றனர். குடும்ப மானம் கோத்திரம், ஜாதி எல்லாம் தூர போட்டு விட்டு பெண்கள் பாதுகாப்புக்கிற்கு பங்கம் வக்க இது போன்ற விளையாட்டு உறவுகள் காரணமாகுவதை பெண்கள் புரியும் காலம் இது..

சில வீடுகளில் பெண் பிள்ளைகள் யாரேனிடம் இருந்து பொருட்கள் இலவசமாக வாங்கி வந்தால் விசாரிப்பதில்லை. யார் என்ன கொடுத்தாலும் அதற்கு ஒரு விலை வைத்து தான் கொடுப்பார்கள் என்ற புரிந்துணர்வு பெண்களுக்கு வேண்டும். பல பெண்கள், காதலை விளையாட்டாக கல்லூரி வந்தால் காதலிக்க வேண்டும்  என்று எடுத்து கொள்கின்றனர். 

காதல்  செய்தவனை கல்யாணம் முடிக்காது ஆகும் போதுள்ள குற்ற உணர்வு, இயலாமை இவர்கள் பின்னீடுள்ள வாழ்க்கையிலும் பாதிக்கும். ஆண்கள் எப்போதுமே எளிதில் வசியப்பட்டு  எல்கை மீற எத்தனிதித்து கொண்டே தான் இருப்பார்கள். பெண் தான் அந்த எல்கையை நிர்ணயிக்கும் வண்ணம் ஆளுமையால், சிந்தனையால் உயர்ந்து இருக்க வேண்டும்.

காதல் எந்த வயதிலும் வரும் எத்தனை முறை ஏனும் வரும். வருவதை எல்லாம் வெளிப்படுத்த வேண்டிய அவசியமில்லை. படிக்கும் வயதில் நட்பே மேன்மையானது. காதலுக்கும் நட்பிற்கு பல வேறுபட்ட குணங்கள் உண்டு. அதன் எல்கையை சில போது நிர்ணயிப்பது சிறிய ரேகை தான். பெண்கள் நிம்மதியான வாழ வேண்டியவர்கள், கவுரவமாக, மதிப்பிடுடன் வாழ வேண்டியவர்கள். எளிதில் வீழ்ந்து எளிதில் துன்பத்தில் உழலாதீர்கள். 

வாழ்க்கையை அதன் உச்சத்தை கொண்டாடுங்கள். ஏதோ ஒருவனுக்க்காக படிக்கும் காலத்தில் உங்களை ஒடுக்கி, ஒதுக்கி மாய வளையத்தில் வாழாதீர்கள். 
வாழ்க்கை என்பது பல கட்டங்களில் கடந்து போக வேண்டியதே. ஒடுக்கப்படுவதும் அடக்கப்படுவதும் உண்டு வாழ்க்கையில். ஆனால் இந்த கல்லூரி காலங்களின் நினைவுகள், மகிழ்ச்சியான நிகழ்வுகள் உங்கள் வாழ்க்கையை வழி நடத்தட்டும்.