17 Feb 2016

நெருங்கிய மரணம் தரும் நெருக்கடி!



கடந்த நாலு மாதங்களில் என் மூன்று மாணவர்களின் பெற்றோர்கள் நோய் வாய்ப்பட்டும், எதிர்பாராத விதமாகவும் இறந்து விட்டனர்.  குழந்தைகள் எல்லாவகையிலும் தன் பெற்றோரை சார்ந்து இருக்கும் வேளையில் அவர்கள் பெற்றோரை இழப்பது மாபெரும் துயரே



ஒரு மாணவியின் தகப்பனாரே கவனித்துள்ளேன். தினம் தனது இருசக்கர வாகனத்தில் வந்து தன் மகளை கல்லூரியில்  விட்டு சென்று அழைத்து செல்பவர்.   மதிப்பெண் சாற்றிதழ் பெற்று செல்வதுடன்  மகள் விடையத்தில் மிகவும் அக்கறையுள்ள பொறுப்புள்ள தகப்பனார். மாரடைப்பால் இறந்தார் என்ற செய்தி நம்பவே இயலவில்லை. அவளை சந்திக்க சென்ற போது  நண்பர்கள் உறவினர்கள் சூழ பாதுகாப்பான சூழலில் இருந்தால் கூட அவள் கண்ணில் இருந்து மாலை மாலையாக வீழ்ந்த கண்ணீர் என்னை வதைத்தது. அதன் பாதிப்பில் இருந்து அவர் குடும்பம் மீண்டு வர ஒரு மாதம் பிடித்தது.  

ஒரு மாணவர் மிகவும் அமைதியானவர், கொடுக்கும் வீட்டு பாடங்களை மறக்காது செய்து வருபவர் சரியாக கல்லூரி நேரம் வந்து பாடங்களை காத்திரமாக கவனித்து குறிப்புகள் எழுதி வைத்து படித்து சரியாக தேர்விலும் கலந்து கொள்பவர்.  புகைப்படகலையில் வேறு கல்லூரி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பரிசு பெற்றாலும் அதை இயல்பாக எடுத்து கொள்ளும் அமைதியான சுபாவம். இப்படியான இயல்பாகவே பொறுப்பான மாணவர்கள் ஆசிரியர்களுக்கு என்றும் மறக்காத,  விருப்பத்திற்குரிய மாணவர்களாகவே இருபார்.  பகுதி நேரமாக பணி செய்து வரும் மாணவன் என்று அறிந்த போது அவர் பொறுப்புணர்ச்சியில் மேலும்  மதிப்பு சேர்ந்து உருவானது

அவர் தகப்பனார் கான்சரினால் நோய் வாய்பட்டு இறந்த செய்தி அறிந்து அவர் வீடு தேடி சென்றேன்.  வீட்டின் மூலையில் நெற்றியில் ஒன்றைய் ரூபாய் நாணயத்துடன்  ஓர் கதிரையில் உட்காரும் நிலையில் வைத்திருந்தனர்.  அவர் அம்மா என் கையை பிடித்து கொண்டு கடைசி நேரம் மகனை பார்க்க தான் விரும்பினார். பார்க்காது போய் விட்டார் என்று அழுது புலம்பி கொண்டிருந்தார். என் தம்பி ரொம்ப வருத்தப்படுவான் அவனுக்கு ஆறுதல் சொல்லுங்கள் அவன் அக்கா அழுகின்றார்.  மாணவரை நோக்கினேன் அவனுக்கு ஆறுதல் கொள்ள கூட நேரமில்லை அரசு அலுவலகம் அனுப்புகின்றனர், கடைசி கிரியைக்கான துணிகளை வாங்கி வர கூறுகின்றனர். அவன் அப்போதும் தன் நிலை தவறாது எல்லா கவலைகளையும் மனதில் வைத்து கொண்டு சலனமற்று செல்வதை கேட்டு செய்து முடிக்க தயாராக நிற்கின்றார்.  

வேலை, சூழல் காரணமாக நகரங்களை நோக்கி நகரும் போது இது போன்ற துன்ப சூழலில் தனித்து விடப்படும் சூழலே நகர சமூகத்தில் நிலவுகின்றது. யாரையும் கருதலுடன் நோக்கும் மனநிலை இன்று அரிதாகி வருகின்றது என்ற நினைப்பில் நானும் என் பணிக்கு செல்லும் நேரமானதால் உடன் விடை பெற்று வந்தேன்!


இரண்டு வாரம் கூட கடக்கவில்லை எங்கள் மாணவியின் தாயார் நீரழிவு நோயால் இறந்து போனார். ஏற்கனவே தகப்பானார் மூன்று வருடம் முன்பே மரித்து விட்ட நிலையில் ஒரு சகோதரி வேலைக்கு போக, இளையவர் எங்கள் துறையில் படித்து வந்துள்ளார். செய்தி கேள்விப்பட்டதும் காலை 7 மணிக்கு கிளம்பி அவர் ஊர் 8.30 மணிக்கு சென்று சேர்ந்தோம். நான் பயணித்தது எங்கள் வீட்டு காரில் அதுவே ஓர் நெடிய பயணமாக பட்டது. நம் மாணவர்கள் கல்வி கற்க என இவ்வளவு தொலைவில் இருந்து நெடிய பயணம் மேற்கொண்டு வருகின்றனரே என்பதை நினைக்கவே மலைப்பாக இருந்தது. அவர்கள் வகுப்பறையில் சிரிப்பதும் சேட்டைகள் செய்வதையும் கடந்து ஓர் கடினமான சூழலில் இருந்தே வருகின்றனர் என்பது வருந்த செய்தது

பொதுவாக நான் மாணவர்களிடம் ஓர் குறிப்பிட்ட இடைவெளி வேண்டும் என்றே ஏற்படுத்தி கொண்டே என் பணியை செய்து வருகின்றேன். என்னை கண்டதும் என் மாணவி என் மடியில் கிடந்து அழுதது மறக்க இயலவில்லை. இளம் மகள்களுக்கு இருந்த ஒரே உறவு அம்மாவையும் இழந்ததை அவர்களால் தாங்க கொள்ள இயலாது அந்த காலை வேளையில் அவர்கள் கதறி கதறி அழுதது என் நெஞ்சயை அடைப்பது போன்று உணர்ந்தேன். “அம்மா உன்னை விட மாட்டோம் … நீ உயிரோடு வா நீ சாகவில்லை” என அழுத போது அவர் அம்மா முகம் உறங்குவது போலவே தோன்றினது. ஆஸ்பத்திரியில் நோயாளி இறந்தார் என்று அறிந்ததும் முழு பணவும் கட்டிய பின்பே உடலை கொடுத்துள்ளனர். இது போன்ற அவசரத்தேவைகளுக்கு கடன் பெற நம் சமூக சூழலில் கந்து கட்டிகாரர்கள் தவிற யாரும் முன் வருவதில்லை என்பதும் காலக்கொடுமை. 


என் அம்மாவிடம் வந்து பேசின பின்பு தான் என் மனத்துயரம் ஓரளவு ஓய்ந்தது. இந்த வயதிலும் ஒவ்வொரு நொடியிலும் ஒவ்வொரு பொழுதும் அம்மாவின் நினைவுகள் வராது இருப்பதில்லை. இந்த குழந்தைகளை எண்ணி துயர் பீறிட்டு எழுந்தது. ஒரு புறம் தாயை பல ஆஸ்பத்திரிகளில் வைத்து வைத்தியம் செய்த கடன், படிப்பு செலவு, எல்லாம் தானாக நோக்க வேண்டிய சூழல். எல்லாம் நினைக்க நினைக்க மலைக்க வைத்தது. இருப்பினும்  என் மாணவி விரைவில் கல்லூரி வந்து சேரவேண்டும் என  மன முகந்து இறைவனை வேண்டி கொண்டிருந்தேன்.

தேவையான மன உறுதியை, நம்பிக்கையை வார்த்தையால் கொடுக்க முயல்கின்றோம் ஆனால் செயல்வடிவத்தில் உதவ கையாலாகாத நிலையில் தான் என்னை போன்ற ஆசிரியர்கள் உள்ளனர் என்பது மனதை நெருடுகின்றது. வெறும் வார்த்தைகளால் ஆறுதல் கூறி ஓர் வகையில் நாம் ஏமாற்ற தான் செய்கின்றோம் என்ற எண்ணம் வதைக்கின்றது. ஆசிரியை பணி என்பது வெறும்  புத்தகங்களோடு மட்டுமான அறிவாற்றல் சார்ந்த பணி மட்டுமல்ல  உயிருள்ள மனிதர்களிடம் நம் மனித நேயத்தை செயல்வடிவத்தில் காட்ட வேண்டிய பணி. பல பொழுதும் ஏமாற்றமே  மிஞ்சுகின்றது

இளைஞசர்கள்  இந்த சமூகத்தை மிகவும் நேர்மறையுடன் மிகவும் நேசத்துடன் நோக்குகின்றனர். இந்த சமூகத்தை பற்றிய  உண்மையான பிரஞ்சை உண்டு.  சகமனிதன் மேல் அதீத அன்பு உண்டு என்று அவர்கள் முதல் பருவத்தில் வருப்புகள் எடுக்கும் போதே கண்டு நெகிழ்ந்துள்ளேன்.  ஆனால் சூழலின் நெருக்கடி இளம் மனிதர்களை மாற்றம் செய்து விடும் என்ற ஆதங்கமும் என்னை துன்புற செய்கின்றது. அவ்வகையில் தான் உதவி என்று நாடிய போது என் முதல் வருட மாணவர்கள் நாங்கள் உள்ளோம் என என்னுடன் சேர்ந்து   செயலாற்ற நினைத்தனர்.  அதுவெல்லாம் ஓர் கனவு என்றதும் நான் நொறுங்கி போய் விட்டேன். ஆனால் பெரியவர்கள் எவ்வளவும் வேதனைப்படலாம் நொறுங்கலாம் தளரலாம் ஆனால் இளம் தளிர்கள் வாடக்கூடாது என்று மட்டுமே என்னால் இப்போது நினைக்க முடிகிறது


12 Feb 2016

சுபி அக்காவும் நானும்

இணையத்தில் வாசிப்பினூடை எழுத்தினூடை அக்காவும் நானும் நண்பர்களாக இணைந்தோம். பின்பு எங்கள் நட்பு உடன் பிறவா சகோதரிகளாக பரிணமித்தது.  அக்கா இந்தியா வந்து செல்லும் போது எங்கள் சந்திப்பை பயணங்களாக மாற்றினோம். எங்கள் பாச நட்பு எங்கள் குடும்ப உறவுகளாக மாறின. 


முதல் முதலாக அக்காவை தூத்துக்குடி விமானநிலையத்தில் வைத்து சந்தித்த போது.  நெடுநாளாக  அயல்நாட்டில் இருந்து விட்டு  சொந்த வீட்டிற்கு வந்து சேரும் உடன் பிறந்த  சகோதரியாகவே தெரிந்தார். முதல் நாள் காணும் எந்த அன்னியவும் எங்களை அணுகவில்லை.  நரேன் அண்ணாவும் என்னவரும்  சில மணித்துளிகளுக்குள்ளில் எங்களை விட பாசமிகு சகோதரகளாக மாறிவிட்டனர். எங்கள் பிள்ளைகள் வருடம் ஒரு முறை அண்ணா-அக்கா  வருவதை எதிர் நோக்கி காத்திருக்க தொடங்கினர். 

உலகில் இரத்த  உறவுகளையும் கடந்து நல்ல பாசத்தின் அன்பின் நேசத்தின் உறவை பேண இயலும் என உணர்த்தியது.  இந்த முறை சூழல் சிக்கலால் நாங்கள் சிக்குண்டு இருந்த போது சுபி அக்கா இந்தியா வருகை   இருந்தது. நாங்கள் ஒரு மாற்றம் என கருதி சென்னையில் அக்காவுடன் நாட்களை கழித்தோம். 


அக்கா ஓர் சிறந்த வாசிப்பாளர் ஓர் பண்பான விமர்சகர். அவர் வாசிப்பதை மட்டுமெ விமர்சிப்பார். அதிலும் இசையில் மிகவும் ஈடுப்பாடு கொண்டவர். அக்கவிற்கு பழைய இளைய ராஜா பாடல்கள் என்றால் அதீத விருப்பம். எஙகள் பயணங்களில் அக்கா வருகையில் நேரம் அந்த பாடல்கள் தான் ஒலிக்க செய்வோம்.  அக்கா சிறந்த படகரும் கூட. திறமைகளை தன்னகை கொண்டு அதை வெளிக்காட்டாது வாழும் ஆழ்ந்த ஞானம் உடைய ஆளுமை. என் புத்தகமான " நன் தேடும் வெளிச்சங்கள்" அக்காவின் ஊன்றுதலில் தான் வெளி வந்தது. என் எழுத்தை என்னை நானாக நேசிக்கும் அக்காவாக சுபி அக்கா உள்ளார். 

எங்கள் பேச்சுக்கள் சமூகம், எழுத்து, பயணம் சார்ந்தே பல பொழுதும் அமையும். அக்காவின் அமைதி, நீடிய சாந்தத்தை அருகிலிருந்து கண்டு உணர்ந்து கற்று கொள்ள முயன்றுள்ளேன். வாழ்க்கையை அன்பு மயமாக, அழகியலாக நோக்கும் அக்காவை நான் எப்போதும் பின் தொடர முயல்வது உண்டு.   அக்காவிற்கு ஆலயம் தரிசனம் என்றால் விருப்பமானது. எங்கள் ஊருக்கு வந்த போது நெல்லையப்பர் கோவில், ஆழ்வாத்திருநகரி கோயில் , நாகர்கோவில் சுசீந்தரம் தாணுமாலயம் கோயில் சென்று வந்தது நல்ல நினைவுகள். 

இலங்கை போர் சூழலால் அக்கா இலண்டம் மாநகரில் குடியேறினாலும் அவர் உயிர் மூச்சு இலங்கை ஈழத்தில் நிலைபெற்றிருப்பதை காணலாம். அக்காவிற்கு பிடித்த பூஞ்செடி தோட்டம் காண நாகர்கோயில் செல்லும் போது நேரம் ஒதுக்குவது உண்டு. அக்கா வாங்கி தந்த செடியின் பூவில் அக்காவின் சிரிப்பை கண்டு நான் மகிழ்வது உண்டு.  


எவ்வித மனிதர்களையும் நேசிப்பதில் மதிப்பதில் நிகர் அக்காவிற்கு அக்கா மட்டுமே. சகமனிதனை மனித மாண்புடன் காணும் அவர் பார்வை அகலமானது.  நட்புகளை பேணுவதில் அக்கா எடுத்து கொள்ளும் சிரத்தை மனித அன்பால் நிறைந்தது. 


 செடி,  புத்தகம், பயணம் என எங்கள் பாச நட்பு அன்பு நிலைபெறுகின்றது. எங்கள் அன்பிற்கு உரு துணையாக எங்கள் குடும்பவுவும் உள்ளது.  எங்கள் வீட்டிலுலுள்ள ஒவ்வொரு பண்டிகையும் பிறந்த நாட்களும் அக்கா- அண்ணா வாழ்த்துதல் பெற்றே துவங்குகின்றது.  


அக்காவை ஒவ்வொரு நொடியும் தாங்கி அரவணைத்து நடத்தும் பாசமிகு அண்ணா நரேன் அண்ணாவையும் நினைத்துபார்க்கின்றேன் ஓர் கணவர் ஓர் மனைவிக்கு கொடுக்கும் அன்பு, மரியாதை, அளவிடக் கூடாதது இயலாதது.  ஓர் பெண் உண்மையாக மதிக்கப்படுவது நேசிக்கப்படுவது தன் குடும்பத்தில் அது துவங்குவது தன் கணவரில் இருந்து மட்டுமே. அவ்வகையில் நரேன் அண்ணா ஓர் எடுத்து காட்டு!  குழந்தைகள் பெற்றோரை மதிக்க வேண்டும் என்ற நியதியே. ஆனால்  பெற்றோர் எவ்விதம் நம் குழந்தைகளை மதிக்க வேண்டும் கரிசனையாக நடத்த வேண்டும்  என  பிள்ளைகளாக வரம் பெற்ற அஷாந்த, ஆரணி  நடத்தும் விதத்தில் இருந்து அக்காவிடம் கற்று கொள்ளலாம். 
அக்காவை பற்றி எழுத நினைக்க நிறைய நிறைய உண்டு. அக்காவை இந்த பிறந்த நாள் அன்று என் ஓர் பதிவனூடாக வணங்குவதில் மகிழ்கின்றேன். இறைவன் எல்லா வளவும் நிறைவும் அக்கா- நரேன் அண்ணா குடும்பத்திற்கு வழங்க வேண்டும். வாழ்க வளமுடன். 

அன்பே சுபி அக்கா! 
அன்பு நீடிய பொறுமையும் கருணையும் உள்ளது. (கொரிந்தியர் 13:4-8),.அன்பு ஒருபோதும் ஒழியாது.  

11 Feb 2016

தாரை தப்பட்டை -எதிர்மறையின் உச்சம்!

Image result for தாரை தப்பட்டைதாரை தப்பட்டை என்ற திரைப்படம் இச்சமூகத்திற்கு என்ன சொல்ல வ்ருகிறது என்ற கேள்வியே எழுகின்றது.  ஒரு திரைப்படம் சமூகத்தை பிரதிபலிக்கும் வண்ணம் இருக்கலாம். அல்லது அதன் அழகியலை கலாச்சாரத்தை பண்பாட்டை விளங்க பண்ணலாம். ஆனால் தாரை தப்பட்டை இயக்குனரின் கதைக்காக  அல்லது காலுக்கு செருப்பு என்று அல்லாது செருப்புக்கு என காலை ஒட்டி வெட்டி அணிவது போல் இப்படம் பல இடங்களில் பல நம்ப இயலத்தகாத கதை பின்னல் கொண்டு செல்கின்றது.  முதல் பகுதியில் கொடுத்த ஓர் ஆட்ட உணர்வு அடுத்த பகுதியில்  விபத்து போன்று முடிந்தது. படம் ஒரு வகை அருவருப்பு பகை உணர்வு அச்சம் அசிங்கத்தையை விட்டு வைத்துள்ளது.  மனதை பண்படுத்த வேண்டிய கலை மனதை புண்ணாக்கி சென்றது. 

ஓர் மகளை திருமணம் முடித்து கொடுத்த பின்பு தாய்  மகளை சந்திக்காமலை இருப்பாரா? மகளுக்கு என்னவானது என்று கூடவா பார்க்க்காது இருப்பார். அவன் பெயரை தவிர்த்து கூறினது எல்லாம் பொய் என்று தெரிந்த பின்பு மகளை மீட்டு வர முயலமாட்டாரா? ஒவ்வொரு கதாப்பாத்திர படைப்பிலும் முரண்கள் நம்பகமின்மை மலிந்து வலிந்து கிடக்கின்றது. . 

கரகாட்டக்காரர்கள் முதல் தலைமுறை சன்னாசியின் தந்தையும் முழுக்குடிகாரராக இருக்கிறார் கதாநாயகியும் போகிற வருகிற மக்களிடம் எல்லாம் கேட்டு வாங்கி குடிக்கும் முழுக்குடிகாரியாக இருக்கிறார். கதாநாயகி குடிப்பது என்பதை பாலாவாலால் சீரணிக்க இயலவில்லையா அல்லது பெண்கள் தான் முழுக்குடிகாரிகள் என சொல்லவருகிறாரா என்றும் விளங்கவில்லை. குடி என்பது சில குறிப்பிட்ட தொழில்கள் சமூக பிண்ணணியில் உள்ள பெண்களிடம் எப்போதும் உள்ளது தான் என்ற உலக உண்மை தெரியாதா?

சன்னாசி  தன் மேல் காதல் வைத்திருக்கும் சூறாவளியை பாசமாக காதலாக நோக்குகிறாரா என்றால் கொச்சையான வார்த்தையில் திட்டும் எதர்க்கெடுத்தாலும் அடிக்கும் மாஸ்டர் போன்றே நடந்து கொள்கின்றார்.  சன்னாசி ஏன் எப்போதும் பறி கொடுத்த பண்டாரம் போல் முகத்தை வைத்து கொள்ள வேண்டும் என இயக்குனர் நினைத்தார் என தெரியவில்லை. 
தான் விரும்பும் பெண்ணை  வேறு ஒருவனுக்கு மணம் முடித்து கொடுக்க ஒத்து கொள்ளும் சன்னாசி,  கட்ட போகும் நபரை பற்றி விசாரிக்காது  ஒதுங்கி கொள்ளும் சுயநலவாதிக்கு கடைசி காட்சியில் வரும் கடைமை உணர்ச்சி தான் புரிந்து கொள்ள இயலவில்லை. 

கரகாட்ட காரர்களுக்கான உடை என்ற பெயரில் மிகவும் ஆபாசம் உணர்த்தும் உடைகளை அணிவித்து அனைத்து பாடல்களுக்கும் ஆட வைத்துள்ளார். 
கலையுடன் இயங்குபவர்கள் குழு மனநிலையில் இயங்குபவர்கள்; இவர்கள் வாழ்க்கை சூழல் மிகவும் தனி சார்பு கொண்டு விளங்குவதும், சராசரிக்கு மேலான மனமகிழ்ச்சி கொண்ட மக்களாகவே கண்டுள்ளோம்.  ஆனால் அனைவரையும்  எட்டி உதைக்கும் சூறாவளி கணவன் என்ற கயவனின் கையில் ஒரேடியாக ஒடுங்கி போவது நம்ப இயலவில்லை.


ஓர் கலையை முன்னெடுக்க அவர்கள் வாழ்க்கையை மேம்படுத்த சில நல்ல தகவல்கள் இருந்திருந்தால் கூட இந்த படத்தை பற்றி ஏதேனும் குறிப்பிட்டிருக்கலாம்.  பெண்கள் ஏற்கனவே ஒடுங்க காரணிகளான பாலியல் வியாபாரம், குழந்தை பிறப்பு  என மிகவும் அச்சுறுத்தும் வகையில் புணைந்து கதையாக அமைத்து பெண் இனத்தையே பெரும் அச்சத்திற்கு உள்ளாக்கியுள்ளனர். 

சூறாவளியை சந்திக்கும் சன்னாசி ரவுடி கும்பலிடம் இருந்து காப்பாற விளையாமல் எல்லா கதையும் கேட்டு கொண்டு  மறுபடியும் அடியும் வாங்கி  கடைசியில்  எல்லா கயவர்களையும் கொன்று விடுவாராம்!!!!

என்ன அபத்தமாக கதையாடல். இதற்கு பதிலாக பொல்லாதோரை சட்டத்தின் முன் கொண்டு வந்து விட்டு சூறாவளி கயவனால் கற்ப முற்றிருந்தாலும் பாதிக்கப்பட்டிருந்தாலும் காப்பாற்றி அவளுக்கு ஓர் நல்ல வாழ்க்கையை கொடுத்து நல்ல படியாக வாழ்ந்ததாக காட்டியிருந்தால் பெண்களுக்கு வாழ்க்கையில் சந்திக்கும் சிக்கலுகளுக்கு தீர்வு உண்டு என மனநிலை உருவாகியிருக்கும். 

தமிழக பெண்கள் அவ்வளவு கோழைகளா/ ஒரே ஓலம் அழுகை கொடூரத்தின் உச்சம் சில காட்சிப்படுத்தலுகள். ஒரு கயவனான கணவனை பழி வாங்க ஒரு பொட்டலம் விஷம் போதும் ஆனால் துள்ளி குதித்து நடந்த சூறாவளி கட்டிலின் விளிம்பில் அடித்து துவைக்கபட்டு  காயப்போட்டிருப்பது போன்று கட்டியிருப்பது பெண்களை மேலும் சிறுமைப்படுத்தும், அவல மனநிலையை வெளிகாட்டுவதாக  உள்ளது. சூறாவளியின் முடிவு கதையின் முடிவு எல்லாமே ரசிகனையும் மனப்பிளவு கொண்டு தியேட்டரை விட்டு வெளியேறவே உதவும். 



"தாரை தப்பட்டை"  கரகாட்ட கலைஞர்களில் உண்மை உலகத்தை விகாரப்படுத்தி விட்டது.  திரைக்கதையில் ஒரு சுவாரசியவும் இல்லை. எல்லா படங்களிலும் காணும் அதே காட்சி அமைப்பு அதே சண்டை.  விரசம் ஏற்படுத்தும் உரையாடல்கள் என பாலா "நல்ல ஓர் படத்தை கீழை போட்டு உடைத்து விட்டார்" என்ற வருத்தம் தாம் மேல் ஓங்குகின்றது. எதிர் மறையின் உச்சமாக தாரை தப்பட்டை உள்ளது. 

இளைய ராஜா பாடல்கள் மட்டும் தான் ஆறுதலாக அமைந்தது.     சூறாவளியாக நடித்த வரலட்சுமியின் நடிப்பு அபாரம்.  பாலாவின் பிரச்சினையே அதீத உணர்ச்சிக்கு உள்ளாகுதல் தான். இதே பிரச்சினை தான் பரதேசியிலும் கண்டோம். 
பாலா தயவாய்  ரொம்ப உணர்ச்சிவசப்படாம ஒரு படமாவது அடுத்து எடுங்க 


22 Jan 2016

தற்கொலையை கொண்டாட வேண்டாம்!

சமீபத்தில்   ஐதராபாத் பல்கலைகழக மாணவர் ரோஹித் வெமுலா தற்கொலை மிகவும் வருந்த தக்க செயலாக அமைந்தது..  

உலக அளவில் தற்கொலை செய்து கொள்ளுபவர்கள் அதிகம் வசிக்கும் தேசம் நம் இந்தியாவாகவே உள்ளது. உலக சுகாதார தரவுகள்படி  வருடம் ஒரு லட்சம் பெயர் இந்தியாவில் தற்கொலை செய்து கொள்வது தெரிய வருகிறது. இதில் பெரும்வாரியானோர் 19-30 வயதிற்கு உட்பட்ட இளைங்ஞர்கள் ஆவர் என்பது இன்னும் துயர் தரும் உண்மை செய்தி!

 40 நிமிடத்திற்கு ஒரு நபர் தற்கொலை செய்து கொள்வதாக குறிப்பிடுகின்றனர். India-has-highest-number-of-suicides-in-the-world-WHO/articleshow/41708567.cms மாநிலங்கள் அளவில் எடுத்து கொண்டால் பாண்டிச்சேரி, சிக்கிம், தமிழகம், கேரளம் என்ற வரிசையில் உள்ளனர்.  மிகவும் குறைவாக தற்கொலை செய்து கொள்பவர்களின்  மாநிலமாக பீகாரை காட்டுகின்றது தரவுகள். Indian_states_ranked_by_suicide 


பல கேள்விகள் எழுப்பும்  ஓர் ஆராய்ச்சி மாணவரின் மரண காரணம்  ஒரு தலிது மாணவரின் ஜாதிய ஒதுக்குதலால் உருவான  மரணம் என்று சுருக்குவது பல உண்மைகள் வெளி  வர தடையாக அமையும். கடந்த நாலு வருடங்களில் 18க்கு மேற்பட்ட தலிது மாணவர்கள் இந்தியாவின் புகழ் பெற்ற  எய்ம்ஸ், கான்பூர் ஐஐடி போன்ற கல்வி நிறுவனங்களில் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகின்றது செய்திகள்.  

 மரண காரணம் பின் தங்கிய ஜாதிய  அடக்குமுறை என்ற ஒன்றை நோக்கில் இல்லாது,  இந்தியாவின் உயர் கல்வி பெறும் பல்கலைகழகங்களில் நிலவும் கல்வி நிலையை பற்றி ஆராய வேண்டியுள்ளது.   இத்தற்கொலையை அரசியல் கட்சிகள் தாங்கள் ஆதாயங்களுக்காவும் ஜாதிய அமைப்புகள்: தங்களை வாதங்களுக்கு வலு சேர்க்கவும் என்று பாராமுகமாக பயன்படுத்தாது பொதுவாக   கல்லூரி மற்றும் பல்கலைகழகங்களில் ஆராய்ச்சி மாணவர்கள் எதிர் கொள்ளும் பல பிரச்சினைகளை ஆராய வேண்டியுள்ளது. 


ஒரு ஆராய்ச்சி  மாணவருக்கு ஏழு மாதம் ஊக்கத்தொகையை  கொடுக்காது இருந்ததும் பொதுவான பல்கலைகழக வாய்ப்புகளை பயண்படுத்த தடை விதித்ததும்  ஆசிரியர் அல்லது குரு நிலையில் இருக்கும் பல்கலைகழகம் மாணவ சமூகத்திடம்  இளம் இந்திய பிரஜையிடம் காட்டிய மாபெரும் அநியாயமாகும்.  இது போன்ற தண்டனையை வகுப்பது பல்கலைகழக எவ்வித சட்டப்பிரிவு என்றும் நோக்க வேண்டியுள்ளது. இந்தியா போன்ற ஓர் ஏழை நாட்டில்  தினம் 27 ரூபாய் கூட சம்பாதித்து தன் உணவை மேற்கொள்ள இயலாத சூழலில் தினம் 8-12 மணி நேரம் கூட உழைத்தால் கூட 25 ஆயிரம் மாத ஊதியம் பெறும் நிலை இல்லாத நாட்டில் ஊக்கத்தொகையாக மாதம் 25 ஆயிரம் பெற்று படிக்க வாய்ப்பு பெற்ற மாணவர் "என் மரணத்திற்கு யாரும் காரணம் அல்ல நானே, என் உடல் வளர்ச்சிக்கும்  ஆன்ம வளர்ச்சிக்கும் இடையே நிறைய ஏற்ற தாழ்வு இருப்பதாக உணருகிறேன். அது என்னை விகாரப்படுத்தி விட்டது"  என்ற எழுதி வைத்ததையும் ஆராயவேண்டியுள்ளது.  கல்வி என்பது உயர் கல்வி என்பது மனிதனை விகாரப்படுத்தும் சூழலையா உருவாக்குகின்றது என்ற கேள்வியும் எழாதில்லை?  பாரபட்சமான இத்தகைய  சூழலை எதிர் கொண்டு வெறுத்து போய் தற்கொலை செய்து கொள்ள நினைத்த மாணவர் எதனால் தன் மரணத்திற்கு யாரும் காரணமல்ல என்று குறித்து வைக்க வேண்டும். தன் வாழ்வின் கடைசி நிமிடம் எல்லா நண்பர்களிடமும் எதிராளிகளிடமும் சமரசப்பட்டு கொண்டு மரணிக்க நினைத்தது எவ்வகை சமூக நீதியாகும். ஏதோ தன் மரணத்தின் மூலமாவது  பல்கலைகழங்களில் நிகழும் சூழலை வெளிக்கொண்டு வராது மறைத்து வைத்து கொண்டு மரணத்திற்கு தத்துவாத்வமாக சில கட்டமைப்புகளை உதிர்த்து விட்டு தன் உயிரை எடுத்து கொண்ட காரணம் என்ன? 


தற்கொலை செய்து கொண்ட மாணவருக்காக வாதாடுபவர்கள் கூட தலிது என்ற ஒரே நேர்கோட்டில் பல்கலைகழக அபத்தங்கங்களை மறைக்க பார்க்கின்றனர்.  கல்வி நிலையங்களில் மாணவர்களை கட்டுப்படுத்தும் அதிகாரம் நேரடியாக மத்திய அரசுக்கு உண்டா? எதனால் ஊக்கத்தொகை நிறுத்தப்பட்டது,  இதுவே  மாணவர்களுக்கான தண்டனையா என்றும் ஆராய வேண்டியுள்ளது. ஆராய்ச்சி படிப்பிற்கு அடி எடுத்து வைத்த மாணவர் இந்திய கல்விய சூழலில் உயரிய படிப்பை எட்டிய மாணவர் தான் நினைத்தது போல் சூழல் நிகழவில்லை என்றதும் தற்கொலை செய்து கொண்டது எவ்விதத்திலும்  சரி ஆகாது. அப்பல்கலைகழகத்தில் படிக்கும் மற்று தலிது மாணவர்கள் நிலையும்  இத்தருணத்தில் நோக்க  வேண்டியுள்ளது. 


தற்கொலை என்பது எக்காரணம் கொண்டு எச்சூழலிலும் ஓர் சமூக குற்றமே. இந்நிலையில் உயர் கல்வி கொண்ட மாணவர் எடுத்த முடிவு கல்வி கற்பவர்களின் மனநிலையை   சுய பலத்தை  உரசி பார்க்கின்றது.  இது போன்ற தற்கொலை மரணங்களுக்கு தற்கொலை செய்து கொள்ளுபவர்களின் புகைப்படத்துடன் செய்தி வருவதும் அவர்களை கோழை என்று அல்லாது கதாநாயகன் போன்று செய்திகள் தருவதும் இது போன்ற நிலையில் உழலும் பல இளைஞர்களை தற்கொலைக்கு தூண்டும்.  இது போன்ற தற்கொலைகள் விளம்பரமாக அல்லது ஆயுதமாக இளம் மாணவர்கள் எடுத்து கொள்ளும் சூழல் உருவாகும்.

ஆராய்ச்சி மாணவர்களுக்காக பிரச்சினைகள்

பல பொழுதும் ஆராய்ச்சி மாணவர்கள் எதிர்கொள்ளும் தலையான பிரச்சினை அவர்களுக்கு அரசில் இருந்து கிடைக்கப்பெறும் ஊக்கத்தொகை சரியாக கிடைக்காது இருப்பது தடுத்து வைப்பது தேவையான தொகை கிடைக்க பெறாது இருப்பதும் காலதாமதமாக கிடைப்பதும் ஆகும். 

ஆராய்ச்சிக்கு  தேவையான வழிகாட்டி பேராசிரியர்கள் கிடைப்பது மாபெரும் பிரச்சினையாக உள்ள போது; சில மாணவர்களுக்கு ஆராய்ச்சி துவங்கிய பின்பு தங்கள் வழி காட்டி பேராசிரியர்களை சரிக்கட்டுவதே பெரிய பிரச்சினையாக உள்ளது. பல ஆராய்ச்சி மாணவர்கள்; தங்கள் வழி காட்டி ஆசிரியர்களின் வீட்டு கழிவு தொட்டியை கழுவது துவங்கி சந்தைக்கு  சென்று காய்கறி வாங்கி வரும் வேலை செய்து வருகின்றனர். இவர்கள் முனைவர் படிப்பு  காலம் என்பது தங்கள் ஆராய்ச்சி படிப்பை விட ஆராய்ச்சி ஆசிரியர்களுக்கு சேவகம் செய்வதிலே கடந்து  விடும். தங்கள் இயல்பான ஆர்வம் கொண்ட ஆராய்ச்சிக்கு தடை இட்டு ஆராய்ச்சி வழிகாட்டிகளின் பார்வையில் தடைகள் உருவாகும் சூழலும் உண்டு.  பல பொழுதும் முனைவர் பட்டம் பெற    ஏழு வருடங்களுக்கும் மேல் ஆகுவதால் எடுத்த தலைப்பே காலகரணப்பட்டு போய் படிப்பை இடையில் நிறுத்தும் சூழலும்  ஆராய்ச்சி படிப்பில் ஆர்வம் அற்று போகும் சூழலும் உண்டு. பல ஆராய்ச்சி மாணவர்கள் பல லட்சங்களை புரட்டினாலே ஆராய்ச்சி படிப்பை முடிக்க இயலும்.   வழி காட்டிகளுக்கான பல சிலவுகள் ஆராய்ச்சி மாணவர்கள் தலையில் தான் பல பொழுதும் விடியும்.

ஆராய்ச்சி மாணவர்கள் பல்கலைகழக பொது கல்வி சூழலில் இருந்து தனிமைப்பட்டு  ஆராய்ச்சி தொடரும் சூழலும் நிலவுகின்றது.  மேலும் தாங்கள் கல்வி கற்கும் பல்கலைகழக்ங்களுடனும், தங்கள் வழி காட்டி ஆசிரியர்களிடம்  சுமுகமல்லாத பூசல் உருவாகும் சூழலும் உருவாகின்றதும் சகஜமாக நிகழ்கின்றது.
,
ஆராய்ச்சி படிப்பு என்பது ஒரு குறிப்பிட்ட புலனில் சிறப்பு பெற்றவர்கள் தொடரும் படிப்பாகும். தற்போது ஆராய்ச்சி படிப்பிற்கு குறிப்பிட்ட  தேர்வுகளில் தேர்வாகுபவர்களுக்கும், ஆராய்ச்சி வழிகாட்டிகளுக்கு பிடித்தமானவர்களுக்கும் வாய்ப்பு கொடுக்கின்றனர். ஆராய்ச்சி என்பது குறிப்பிட்ட பாடத்தில் புலமை பெற்றவருக்கு அனுபவ அறிவுள்ளோருக்கு வாய்ப்பு கிடைக்கும் சூழல் உருவானால் தரம் உயரும். தற்போது ஆராய்ச்சி படிப்பு என்பது பட்டப்படிப்பு மூன்று வருடம்  மேல்பட்டபடிப்பு  இரண்டு வருடம்,  முனைவர் பட்டம் மூன்று வருடம் என்ற வரிசை ஏற்பாட்டில் ஆகி விட்டது.  பல்கலைகழக்ங்களில் பெரும் ஊதியத்தில் வேலை கிடைக்கும் என்ற ஆவலில் பலர் ஆராய்ச்சி படிப்பை மேற்கொள்ளுகின்றனர். புதிய கண்டு பிடிப்பு, ஆராய்ச்சி என்ற சூழலை கடந்து சமூக அந்தஸ்து பணம் அதிகாரம் என்ற  ஆசைகளும் மனதில் இருப்பதால் ஆராய்ச்சி படிப்பையும் வியாபாரமாக கையாள ஆரம்பித்து விட்டனர். 

படிக்க வேண்டும் என்பது அறிவு தேடல் என்பதை கடந்து பல காரணங்கள் நிரம்பி விட்டதால் இத்துறையில் பல அநியாங்களையும் சங்கடங்களையும் சேர்த்து கொண்டு வருக்கின்றது.  இது இந்தியா போன்ற நாடுகளில் மக்களை கல்வி என்ற பெயரில் பிரிக்கவும் துண்புறுத்தவும் வழி செய்கின்றது. வீட்டிற்கு வீடு பொறியாளர்களை உருவாக்கி வேலை இல்லா திண்டாட்டத்தில் உழைக்க மனமில்லாத  75% இளைஞர்களை உருவாக்குவது போல் முனைவர் பட்டம்  என்ற பெயரில் கோழைகளை உருவாக்குவது நாட்டின் நலனுக்கு நல்லது அல்ல.  ஒரு மனிதன் தான் பெற்ற பட்டத்தால் மதிக்காது தன் திறமையால், உழைப்பால், சுய நம்பிக்கையால், மதிக்கப்பட வேண்டும்.  தற்கொலை செய்து கொள்ளும் தலைமுறையை உருவாக்குவது அபத்தமான கல்வி சூழலாகும்.

2 Jan 2016

சென்னை பேரிடரில் பெண்கள் துயர்!


சென்னை பேரிடரில்  மிகவும் துயருற்றது பெண்கள் என்றால் பொய்யாகாது.  தமிழகத்தில் நல்ல கைநிறைய சம்பளம் கிடைக்கும்  வேலை  வேண்டுமா சென்னைக்கு செல்லுங்கள், நல்ல தொழில் துவங்கி முன்னேற வேண்டுமா சென்னைக்கு செல்லுங்கள், நவீனமான மேன்பட்ட மனிதர்களாக மாற வேண்டுமா சென்னைக்கு செல்லுங்கள் என்ற மாயத்தோற்றத்தை உருவாக்கி வைத்துள்ளனர். ஏன் பல வருடங்களாக திரைப்படங்களில் கூட காட்டினதும்; காணாமல் போகும், வறுமையில் வாடும் குழந்தைகள் எல்லாம் திருட்டு ரெயிலில் சென்னைக்கு படை எடுக்கின்றனர் திரும்பி பணக்காரர்களாக சொந்த ஊருக்கு வருகின்றனர்.
சென்னை பூர்வகுடிகள் எல்லாம் கூவம் கரையிலும், சில குடிசை மாற்று வாரிய கட்டிடங்களிலும் சென்னை ஒதுக்கு புறங்களிலும் முடக்கி வெளிமாநிலத்தில் இருந்து புகுந்த மக்களுக்காகவே சென்னை மாற்றப்பட்டு குடியிருப்புகளால் நிரம்பி வழிந்து நெல்லை, தூத்துக்குடி, கோயில்பெட்டி மற்றும் வெளிமாநில குடியேறிய மக்களால் நிலை பிதுங்கி இருப்பதே இன்றைய சென்னை என்று காணலாம். சென்னைக்கும் நெல்லைக்கும் போய் வரும் பேருந்துக்கள் நிதம் நிதம் நிரம்பி வழிந்தே பயணிக்கின்றது. 2000 ஆண்டில் பிபிஓ போன்றா பன்னாட்டு நிறுவனகளில் படையெடுப்புடன் தமிழகத்திலுள்ள பட்டதாரி  இளைஞர்களில் வாழ்கை இடமும் சென்னையாக மாறியது.

சென்னையில் இருப்பவர்கள் வாழ்விடமாக சென்னையை கொண்டிருந்தாலும் அவர்கள் ஊர் பாசம் நேசம் எல்லாம் சொந்த ஊரிலே இட்டு  வந்திருப்பார்கள். சென்னை பொறுப்பின்மை வாழ்க்கைக்கு இந்த மனநிலையே பெரிதும் காரணமாகின்றது.

சென்னையில் வெள்ளப்பெருக்கு என்பது புதிதல்ல. ஒரு இரு தினம் மழை பெய்தாலே கோயமேடு போகும் பாதை எல்லாம் தண்ணீரால் சூழ்ந்து விடும்.நடைபாதை கூவம் வாசிகள் குடியிருப்புகள் வெள்ளத்தில் மூழ்குவதும் அவர்கள் மழை முடிந்ததும் சகஜநிலைக்கு திரும்புவதையும் யாரும் பெரிதாக எடுத்து கொள்வதில்லை. ஆற்றைக்கரையில் வீடு இருந்தால் தண்ணீரில் மூழ்கத்தான் செய்யும் என்ற பொதுஜன நீதி இருந்தது. ஆனால் யாரும் எதிர்பார்க்காத விதம் மாடிவீடுகள் மூழ்கின போது அது சென்னையில் பேரிடராக மாறியது.

 முதல் கட்டமாக  வெள்ளம் புகுந்து சகஜநிலைக்கும் திரும்பும் வேளையில் தான், வீடு மூழ்கும் வண்ணம் வெள்ளம் புகுந்து  அடுத்த சில நாட்களில் மக்களை கலக்கமமுறச்செய்தது.

நெல்லைபோன்ற ஊர்களில் இருந்தும் குடியேறி  ஒரு தலைமுறையாக சம்பாதித்து சேகரித்த கட்டில்,மேஜை, பிரிட்ஜ், சலவை இயந்திரம் , தொலைக்காட்சிப்பெட்டி என எதை எடுத்து எங்கு வைத்து பாதுக்காப்பது என்ற நிலையிலும் உயிரை காப்பாற்ற இயலுமா என்ற சூழலிலும் கூட உறவினர்களை சென்றடைய, பிறந்த வீட்டிற்கு செல்ல தயங்கி இருந்துள்ளனர் பல பெண்கள்!. கடைசி நேரத்தில் ஒன்றையும் பாதுக்காக்க இயலாத சூழலில் தான் பிறந்த வீடு மற்றும் புகுந்த வீட்டிற்கு திரும்பியுள்ளனர்.

 மீட்பு பணியில் இருந்த நபர் கூறுகின்றார்  தண்ணீர் இடுப்பளவு வந்த பிறகும் "நான் வீட்டை விட்டு வர மாட்டேன், சொந்த ஊரில் மாமியாரிடம் போகவில்லை" என்ற அடம் பிடித்திருந்த பெண்கள்  இருந்துள்ளனர். . அதிலும் வாடகவீடுகளில் தன் கணவரின் உழைப்பை மட்டுமே நம்பி இருந்த பெண்கள் சொந்த ஊருக்கு  வர முற்றிலும் விரும்பவில்லை.. அவர்களை மீட்பு குழு வந்து மனம் மாற்றி போட்டுகளில் அனுப்பும் நேரம் உள்ளாக வீடு கூரையும் வெள்ளம் சூழ்ந்துள்ளது.


பிள்ளைகள் வெளிநாட்டிலும் பெற்றோர்கள் மட்டுமே வசித்து வந்த பல வீடுகளில் வெள்ளம் சூழ்ந்து வயதானவர்கள் கணக்கில்லாது மரணமடைந்துள்ளனர். சிலர் உணவு வாங்கி வர இயலாது 3-4 நாட்கள் பட்டிணியில் கழித்துள்ளனர். சிலரோ தன்னார்வலர்களால் கொடுக்கப்பட்ட உணவுகளை கூட வாங்க தன்மான உணர்வால் மனமிழந்து இருந்துள்ளனர். உறவினர்கள் தங்களை தொலைபேசியில் கூட அழைத்து விசாரிக்கவில்லை என்ற மனக்கசப்பிலும்  இருக்கின்றனர்.

 வெள்ளத்தில் போனாலும்  பறவாயில்லை எல்லாம் இழந்து சொந்த வீடுகளுக்கு திரும்ப மனம் கொள்ளாதிருந்தது நம்மை சிந்திக்க வைக்க வேண்டியுள்ளது.   பல குடும்பங்கள்; தங்கள்  வீட்டில் வெள்ளம் புகுந்ததும் மேல் மாடி வீடுகளிலும் மொட்டை மாடிகளிலும் பொழுது கழித்தனர். இருப்பினும் துணிந்து உறவினர்கள் வீட்டிற்கு வர விரும்பவில்லை, அதை தன்மான இழுக்காகவே எண்ணினர். சிறு குழந்தககளை வைத்துள்ள  தாய்மார்களும்  எந்த வழியுமற்று வீடு வந்தார்களே ஒழிய யாரும் நிச்சயமாக நிம்மதியாக வீடு வரவில்லை. உயிர் போனாலும் சொந்த பந்தங்கள், பிறந்த வீடு, புகுந்த வீடு செல்ல தயங்கினர் என்பதே போகிற போக்கில் நாம் எடுத்து கொள்ள வேண்டிய சம்பவமல்ல. ஒரு பக்கம் வெள்ளம்  மறு பக்கம் பேய் என்ற நிலையிலும் தாங்கள் சார்ந்த குடும்பங்கள் மேல் நம்பிக்கை அற்ற நிலை வருந்த தக்க சமூக சூழல் என்றும் அறிய வேண்டியுள்ளது.  



தென் தமிழகம் ஒரு வகை மனப்பிளர்வுடன் வாழ்கிறது என்றால் அது மிகையாகாது.   நெல்லை போன்ற ஊரிலுள்ள ஓரளவு  வசதியான பெற்றோர்களின் ஒரே விருப்பம் பிள்ளைகளை சென்னையில் படிக்க வைப்பது, சென்னையில் வேலை வாங்குவது அல்லது வெளிநாட்டிற்கு அனுப்புவது அல்லது அரசு வேலை பெறுவது என்பதாகும் . உள்ளூரில் இருப்பது என்பது அவமானமாக கருதுகின்றனர்.  பண்டிகை நாட்களில் குழந்தைகளுடன் பொழுதைக்கழிக்க மட்டுமே விரும்புகின்றனர். எந்த பெற்றோரும்  குழந்தைகளுடன் இருக்க வேண்டும் அல்லது  பிள்ளைகள் தங்களுடன் இருக்க வேண்டும் என்று விரும்புவதில்லை. இவர்கள் போன்ற பெற்றொருக்கு சென்னை வரபிரசாதமாக அமைகின்றது. தமிழகத்திலே பிள்ளைகள் வெளிநாட்டில் இருக்கிறார்கள் என்று சொல்லும் பூரிப்புடன் "பிள்ளைகள் சென்னையில் உள்ளனர்" என்கின்றனர்.  இதனாலே எந்த நிறுவங்களும் உள்ளூரை சுற்றி வளர்வதில்லை. சென்னையை நோக்கிய தமிழக மக்கள் நகரும் மனப்பாங்கில் உள்ளனர்.

. பல பெற்றோர்களுக்கு கோடிகள் வரதட்சனைகள்  பெறவும் சென்னை வேலை  உதவுகின்ர்றது. உள்ளூரில் பல கட்டுப்பாடுகள் குடும்ப கவுரவத்தில்  வளக்கும் பெண் குழந்தைகளை; எந்த நிபந்தனை இன்றி  சென்னையில் வேலை என்றது  அனுப்பி விடுகின்றனர். அங்கு அவர்கள் வாங்கும் சம்பளம் பற்றியோ, தங்கும் விடுதி பற்றியோ, அவர்களுடைய ஆரோக்கியமான வாழ்க்கை சூழலை பற்றியோ சிறிதும் வருந்துவதில்லை சிந்திப்பதும் இல்லை. வேலை பார்க்கும் பிள்ளைகள் சென்னை சரவணாசில் இருந்து வாங்கி வரும் பொருட்களை எண்ணியும் அவர்கள் வரும் கார்களை எண்ணி மட்டுமே மகிழ்சி கொள்கின்றனர்.


இச்சூழலில் தான் தங்கள் உறவினர்கள் பெற்றோர் மனநிலையை எண்ணி பேரிடர் வேளையிலும் சென்னை தண்ணீர் கழுத்தளவு வரும் மட்டும் சென்னைக்குள்ளே இருக்க துணிந்துள்ளனர் .

சமீபத்தில் சந்தித்த பல நெல்லை பெற்றோருக்கும் தங்கள் பிள்ளைகள் முகம் கொடுத்த, எதிர் கொள்ள வேண்டிய துயர் தெரியவில்லை, தெரிந்ததாக காட்டி கொள்ள தயங்குகின்றனர். ஏழைகள் தான் வெள்ளத்தில் துயருற்றது போல் அடுத்தவர்களை காட்டி கதை விட்டு கொண்டிருக்கின்றனர். ஏழைகள் ஏற்கனவே பட்டு அளுந்திய நிலையில், இந்த மழையில் இருந்து மீள நடுத்தர மக்களுக்கு இன்னும் பல வருடங்கள் பிடிக்கும். இவர்களுக்கு  அரசின் எந்த உதவியும் வந்து சேரப்போவதில்லை. கடன்  வாங்கி கட்டின  வீட்டின் கடன் கட்ட வேன்டும்; இணய மின்சார தண்ணீர் பில் கட்ட வேண்டும். தங்கள் பிள்ளைகள் படிக்கும் தனியார் பள்ளி கட்டணத்திற்கு எந்த சலுகையும் கிடைக்க போவதில்லை. ஒரு சாதாரண நிலையில் வாழக்கூட தங்கள் மாத சம்பளத்தை மறுபடியும் சேகரித்து தூங்க கட்டில், இருக்க கதிரைகள், சாப்பிட சாப்பாட்டு மேசை, விருந்தினரை உட்கார வைக்க சோபா, இழந்த கார், இருசக்கிர வாகனம்  என எல்லாம் ஒன்றே என்று துவக்கம் முதல் சேர்க்க வேண்டியுள்ளது. அரசின் மிக்ஸி, தொலைக்காட்சி பெட்டி, காத்தாடி இயந்தரம் ஒன்றும் இவர்களுக்கு கிடைக்க போவதில்லை, இவர்களால் பயண்படுத்தவும் இயலாது. இதன் மத்தியில் பெற்றோரின் பெருமை தம்பட்டமான பேச்சுக்கும் ஈடு கொடுக்க வேண்டும்.

தென் தமிழகத்தில் எவ்வளவு படித்திருந்தாலும் எத்தனை லட்சம் கொண்டு வந்தாலும் மருமகள் என்பவள் பல பொழுதும் வீட்டு வேலைக்காரிக்கு நிகரே. இச்சூழலில் மருமக்களின் நிலை இன்னும்  பல படி  குறைத்து தான் தெரியும். இது போன்ற சூழலிலும் மாமியார் நையாண்டிக்கு பயந்து உயிரையும் மதிக்காது பேரிடரில் மிதந்த பல பெண்கள் நிலைக்கு எந்த அரசாலும் இழப்பீடு வழங்க இயலாது. 

31 Dec 2015

விஜயகாந்து கூறினதில் எந்த தப்பும் இல்லை!...............


 

ஊடகங்கள் செயலை  கண்டு சிலர் காறி துப்புகின்றனர் திட்டுகின்றனர். சமீபத்தில் சென்னையில் மக்கள் வெள்ளப்பேரிடரால் துயருற்று இருந்த போது காட்சி ஊடகங்களில் செயல்கள் பல மக்களை அச்சத்தில் உள்ளாக்கியது வெறுப்புறச் செய்தது. நாங்கள் பொதிகைச்சானலை பார்த்து கொள்கின்றோம், உங்கள் சேவை எங்களுக்கு தேவை இல்லை என சொல்லும் அளவுக்கு தொலைக்காட்சிகள்  மக்களை துன்புறுத்தினர். 


வெள்ளப்பெருக்கு சமயங்களில் புதிய பல செய்தி சானலுகள் களத்தில் நின்று பணியாற்றிய போது நாம் காணும் பல பெயர் போன ஊடகவியாளர்களை களத்தில் காண இயலவில்லை. மழையில் காமிரா பழுதாகி விடுமோ, தாங்கள் வெள்ளத்தில் அடித்து செல்லப்படுவோமோ என்று பயந்து எங்கோ ஒளிந்து கொண்டனர். வெள்ளத்துயரில் களத்தில் பணியாற்றிய சித்தார்த்,  ஆர் ஜெ பாலாஜி போன்றோரின் நிலத்தகவலை மறைத்து, களத்தில் பணியாற்றிய இளைய ராஜா போன்ற நல்லவர்களை பழித்து செய்தி பரப்புவதிலே உன்னிப்பாக இருக்கின்றனர். பல கோடிகள் சம்பாதித்த பல முன்னனி நடிகர்கள் தங்கள் வீட்டு சன்னலில் இருந்து வேடிக்கை பார்த்து கொண்டிருந்த போதும் பல கோடி கொள்ளயடித்த சில நடிகர்கள் பத்து லட்சம் எறிந்து விட்டு ஒதுங்கி  போது  தன்னுடய  இயலாமையும் தாண்டி மக்களை நேரில் சந்தித்ததும் இல்லாது, ஒரு லட்சம் போர்வைகள் கொடுத்து உதவினவர் இசைஞானி இளைய ராஜா. வெள்ளத்தில் உதவின தன்னார்வர்களை பாராட்ட போனவரை தேவையற்ற கேள்வியால் கோபத்திற்கு உள்ளாக்கியது மட்டுமல்லாது,,  செய்தியாளர்,  அவர் வயதையும் மதிக்காது எரிச்சல் ஊட்டும் கேள்வியுமாக மறுபடியும் மறுபடியும் அவரை எரிச்சல் கொள்ள வைப்பதை நாம் கண்டோம். செய்தியாளர்களின் கண்டிக்க தக்க இச்செயலை எந்த ஊடக கல்வியல் புலத்தில் இருந்து கற்று வந்தனர்.  அடிப்படையாக ஒரு ஊடகவியாளர் சிறந்த மனித நேயனாக இருக்க வேண்டும். குறைந்த பட்சம்  மனித பண்பு கொண்டவராக இருக்க வேண்டும்.

எந்த செய்தியை மக்களுக்கு கொடுப்பது என்ற வகை தெரிவு இல்லாது செய்தி கொடுத்து கொண்டிருக்கின்றனர். பரபரப்பு செய்தி என்பது மட்டுமே தாரகமந்திரமாக இருந்தது. பேரிடரில் இருந்து தப்பிப்பது தற்காத்து கொள்வது போன்ற தகவல்கள் இல்லாது வெறும் வெற்று தகவல்கள் மக்களை பீதிக்கு உள்ளாக்கும்  தகவல்கள்  கொடுப்பதில் போட்டி போட்டு கொண்டிருந்தனர்!  அங்கு வேடிக்கை பார்க்க வந்த அமைச்சர்களை காமிராவை வைத்து பூச்சாண்டி காட்டுவது என ஊடகத்தின் எல்லா அசிங்கமாக அராஜகமான கேவலமான பக்கங்களை காட்டிய ஊடகத்தை விஜயகாந்த் போன்றவர்கள், மக்கள் பக்கம் இருந்து துப்பியதாக எடுத்து கொள்ள வேண்டும்.
 
செய்தித்தாள்களை திறந்தாலும் வெள்ளப்பெருக்கு வேளையில் ஆபத்தில் இருந்த மக்களுக்கு உருதுணையாக இருந்த தன்னார்வு தொண்டர்களின் செயல்களை வெளிக்கொணராது பத்திரிக்கை நிறுவனங்கள் வழியாக செய்த உதவிகளை விளம்பரப்படுத்துவதிலே உன்னிப்பாக இருந்தனர். பொதுமக்கள் தன்னாவர்கள் வழி மக்களுக்கு சேர்த்த பொருட்களை கூட மக்களிடம் கொண்டு சேர்க்காது தடைகள் உருவாக்கின அரசியல் கட்சிகள் முகத்திரையை கிளிக்காது வெள்ளப்பெருக்கு வேளையில் திறம்பட செயலாற்றி மக்களுக்கு சேவை புரிந்த சிம்பு போன்ற நடிகர்களை தேவையற்ற ஊடகச்செய்திகள் ஊடாக அச்சமுறச் செய்யும் பணியையே ஊடகம் செய்து வந்துள்ளது.

 
ஊடகம் யாரை பிரதிபலிக்க வேண்டியது? சாதாரண மக்களை சமூகத்தின் அச்சுறுத்தலுக்கு உள்ளாகும் மக்களை. ஆனால் இன்றைய ஊடக முதலாளிகள், அரசியல்வாதிகள் தொழிலதிபர்கள் என்று ஆகி விட்ட நிலையில் ஊடகத்தின் செயல் பாடுகள் மேல் மக்கள் சந்தேகம் கொள்ள ஆரம்பித்து விட்டனர். 

சென்னை வெள்ளபேரிடரில் மரணமடைந்த மக்கள் செய்தி முழுதும் வெளிவரவில்லை. பல பொய்களை பரவ விட்டு  உண்மையை மறைக்கும் பணியைத்தான் ஊடகம் செய்து வருகின்றது. ஊடகம் தான் நினைத்தால், சிலரை நல்லவராகவும் அதிகாரத்தில் கொண்டுவரலாம் என்ற மெத்தனப்போக்கில் உள்ளது. இதுவரை அரசு பேரிடரில் இருந்து மக்கள் மீட்புக்கு என்ன செய்தது, என்ன செய்ய வேண்டும், என்ன செய்து வருகிறது என்ற செய்திகளை தர இயலவில்லை. அரசுக்கு ஓர் நெருக்கடி கூட ஊடகங்களால் கொடுக்க இயலவில்லை. அரசு என்றதும் ஆளும் கட்சி சார்ந்தவர்கள் மட்டுமல்ல இதுவரையிலும் ஆட்சி செய்தவர்கள் எல்லாரும் இந்த பேரிடருக்கு காரணமாகினர். இது மனிதனால் உருவாக்கப்பட்ட பேரிடர், அரசியல் கட்சிகள் பார்வைக்கு தான் தெரியவில்லை என்றாலும் ஊடகம் என்ன செய்து கொண்டிருந்தது. தண்ணீரில் மூழ்கி கிடந்த இடங்களிலுள்ள குடியிருப்புகளுக்கு விற்பனை விளம்பர கர்த்தாக்களாக செயல்பட்டு கொண்டிருந்தனர்!
 
பொதுமக்கள் ஊடகத்தை பார்த்து கேட்க வேண்டிய கேள்வியை விஜயகாந்து கேட்டு உள்ளார். துப்புவதாக செய்கை காட்டினாரா காறிதுப்பினாரா என்று காணொளியை பார்ப்பவர்கள்  விளக்கி கொள்ளட்டும். ஊடகம் இருக்கும் நிலையை உணர்ந்து இருக்க வேண்டிய இடத்தில் இருந்திருந்தால் காறி துப்பும் சூழல் எழுந்திருக்காது. 

இந்த அரசு நிவாரண பணியை எவ்வாறு செய்து கொண்டிருக்கின்றது, தற்போது மக்கள் நிலை என்ன? அவர்கள் மறுவாழ்வுக்கு  ஊடகம் எவ்வாறு உதவலாம், கையகப்படுத்தியுள்ள நீர் நிலைகளை மீட்டு  வரும் காலங்களில் எதிர்கொள்ள வேண்டிய பேரிடர்களை எவ்வாறு தடுக்கலாம் என்று இல்லாது; சிம்பு கெட்ட பாட்டு பாடினார், விஜயகாந்து துப்பினார், இளைய ராஜா திட்டினார் என்று கூப்பாடு போடும் ஊடகத்தை பார்த்தாலே கேவலமாக உள்ளது. ஒரு ஜனநாயக நாட்டின் நான்காம் தூணாக விளங்க வேண்டிய ஊடகம் ஆளும் வர்கத்தின் அதிகார வர்க்கத்தின் கைப்பாவையாக மாறி வெகு நாளாகி விட்டது என மக்களும் புரிந்து விட்டனர். ஆதலால் ஊடகம், வரும் காலங்களில் துப்புவதை மட்டுமல்ல பல எதிர்வினைகளை சந்திக்க வேண்டியுள்ளது.
இந்த பேரிடரில் வாட்ஸ் ஆப் முகநூல் போல் சமூகத்தளங்கள் ஆற்றிய பங்கில் ஒரு சதவீதம் கூட ஊடகம் செயலாற்றவில்லை என்று அறிந்தால் நல்லம்!

17 Dec 2015

திருமணங்களை அலங்கோலப்படுத்தும் அம்மாக்கள்!


இன்றைய பல திருமணங்கள் சொர்கத்திலா அல்லது பணத்திலா நிர்ணயிக்கப்படுகின்றது என்ற விவாதங்களுக்குள் செல்லவில்லை.  ஆனால் பல லட்சம் செலவில் நடத்தப்படுகின்றது. "பல்லுள்ளவன் பட்டாணி சாப்பிடலாம்" என்ற நியதிக்கு இணங்க  பணம் இருப்பவர் செலவழிக்கின்றனர் என்று  சாப்பிட்டோமா பரிசை கொடுத்தோமா மணமக்களை வாழ்த்தினோமா  நாலு சொந்தக்காரங்களை பார்த்து பேசினோமா  என்று வந்து விட வேண்டும் 

பல திருமண வீடுகளில் ஆளுயர போஸ்டர், புகைப்பட-வீடியோ கவரேஜ், வெடி இடுதல், அருச்சுவை உணவு, திண் பண்டம் பரிமாறுதல் என தேவைக்கும் தேவைக்கு அதிகமாகவும் பல லட்சம் செலவிடுகின்றனர்.

சினிமா தொலைக்காட்சி தாக்கம் நிறையவே உள்ள இளம் தலைமுறையினர் தங்கள் திருமணத்தை சிலுமா காட்சி போன்றே நடத்த ஆர்வம் கொள்ளுகின்ரனர். இது போன்ர தலைமுறைக்கு என்றே ஆயிரங்கள் துவங்கி பல லட்சம் கட்டணம் செலுத்தி  திட்டமிட்டு திருமணத்தை நடத்தி தரவும் ஏஜன்சிகள் உள்ளனர்.  மணப்பெண் மட்டுமல்ல மணமகனுக்கும் மேக்கபிற்கு பல ஆயிரங்கள் தயங்காது செலவிடுகின்றனர். ஒரு  தாய் பெருமையாக கூறினார் அவர் மகளுக்கு  விளம்பரத்தில் வரும் பட்டு உடை உடுத்த வேண்டும் என்று  ஆசைப்பட்டதால் 50 ஆயிரம் விலை உள்ள சேலையை தயங்காது வாங்கி கொடுத்துள்ளனர். பெண்ணுக்கு அத்துடன் ஆங்ல மணப்பெண் அணியும் கவுண் அணிய வேண்டும் என்ற ஆசையும் இருந்துள்ளது. அதையும் பல ஆயிரங்கள் கொடுத்து  வாங்கி அணிவித்துள்ளனர்.  எதற்கு இந்த ஆடம்பரம் என்று கேட்கும் நிலையில் பெற்றோரும் இல்லை, அநாவசிய செலவுகள் வேண்டாம் என்ற மனநிலையில் இளம் தலைமுறையும் இல்லை.  இன்றைய நிலையில் அனுபவிக்க வேண்டும் என்ற மனநிலையே ஓங்கி நிற்கின்றது.

விளம்பரத்தில் நடிகர்- நடிகைகள் போன்று அவர்கள்  தோற்றத்திற்கும்  ஆடம்பரங்களுக்கு முக்கியத்தும் கொடுத்தே திருமணம் என்ற வைபவத்தை காண்கின்றனர். 

ஆனால் இவ்வளவு செலவழித்து செய்யும் திருமணங்கள் மணமக்களின் தாயார்களால் நாசமாவதை காணும் போது வருத்தம் அளிக்கின்றது. 

ஆத்தாவுக்கு, தான் பெற்ற மகள், மகன் சந்தோஷமாக இருப்பது பிடிக்கவில்லையா அல்லது மகள்/மகன் தன் ஆளுகை எல்கையை விட்டு கடக்க போகிறார் என்ற சிந்தனையா என தெரியவில்லை. தாய்மார்கள்  மூக்கை சீந்தி சீந்தி அழுது கொண்டிருப்பார்.  தான் பெற்று வளர்த்தின அத்தனை கடமை பாச உணர்வையும் வியாபாரம் பார்க்க துணிந்து கொண்டிருப்பர்.  மன மேடையிலே மகல் தன் விருப்பம் சார்ந்து இயங்க வேன்டும் என்ற பிடிவாதத்தில் எடுக்கும் நடவடிக்கையை கண்டு உணரலாம்.  அவ்வப்போது முத்தம் கொடுப்பது போல் அருகில் சென்று மகளுக்கு தன் உபதேசத்தை அள்ளி வழங்கி கொண்டு இருப்பார்.   

ஒரு வேளை உணர்வு பெருக்கால் அழகை வருகிறது என்றால் தாய் தள்ளி மகள் பார்க்காது அழ வேண்டும்.  ஆனால் இன்றைய பல பெண்களை பெற்ற தாய்கள் ஆதிக்க மனநிலையுடன் அல்லாடுகின்றனர். கணவர், பிள்ளைகள் பின்பு மருமகன் என அனைவரும் தன்  அதிகார எல்கைக்குள் அடிமைகளாக இருக்க வேண்டும் என எண்ணுகின்றர். இதர்கு இவர்கள் எடுக்கும் ஆயுதவும் அன்பு , பாசம் என்ற ஆயுதம் தான்.

பெற்றவர்கள் தங்களுக்காக முறைகளை செய்து விட்டு ப்ர்த்துபிள்ளைகல் மகிழ்ச்சியை அருகில் இருந்து கவனிப்பதும் மகிழ்வதும் தான் சிறந்தது.  . மண மேடைக்கு பெண்னை அழைத்து வருவது ஆலையத்திற்கு அழைத்து செல்வது என பெண்ணின் தாயை பெண்ணுக்கு அடுத்த படியாக நின்று வீடியோவுக்கு போஸ் கொடுக்க ஆரம்பித்து விடுகின்றனர்.  மாமா, சித்தி, பெரியாப்பா பிள்ளைகள் அத்தை சித்திகள் என எந்த உறவுகளும் திருமண மேடையில் காண்பதில்லை. பெண் பெற்றோரோ ஆண் பெற்றோரோ வருபவர்களை வரவேற்க மெனக்கெடுவதில்லை. வீடியோ பல லட்சம் செலவில் எடுப்பதால் எல்லா படங்களிலும் தாங்களும் இருக்க வேண்டும் என்ற நோக்குடன் மேடையில்  பிடிவாதமாக நிலை கொண்டு விடுகின்றனர்.  


இந்த சூழலில் தான் அழகாக நடக்க வேண்டிய திருமண வைபவத்தை பெண் அம்மாக்கள் அழுகை கச்சேரியாகவும் மாற்றுகின்றனர்.  புதிய குடும்பத்திற்கு தனியாக செல்லும் மகளை தேற்றி அனுப்புவதை விடுத்து,  அழுது கொண்டிருக்கும் தாயாரை தேற்றும் அவருடைய சொந்த பந்தங்களை காண்கின்றோம்.

இது அம்மாக்களின் பாசத்தில் பிரதிபலிப்பு என்று நாம் தப்பாக எடை போட்டு விட இயலாது. தன் ஆளுகையை தன் கணவர் தன் பிள்ளைகள் என்ற நிலையில் இருந்து பெண் எடுக்கும் சம்பந்தக்காரர்கள் வீட்டையும் ஆளுகைக்கு உள்ளாக்கும் தந்திர செயலாகும்.  மகள் அம்மாவின் பாச அழுகையை கண்டு புகுந்த வீட்டில் இருக்க நிலை கொள்ளாது பிறந்த வீட்டிற்கு ஓட எத்தனித்து கொண்டிருப்பார்.  இந்த சூழலில் மாமியார் ஏதாவது கருத்து தெரிவிக்கவோ தன் உணர்வை வெளிப்படுத்தவோ நினைத்தால் பெண்ணை பெற்றோர் இது தான் தக்க நேரம் என்று மகளுடன் மருமகனையும் தன் வீட்டு முதலாக்கி விடுவார்கள். சில போது ஒத்து கொள்ளாத மருமகனிடம் இருந்து மகளை பிரிக்கவுக்ம் தயங்குவது இல்லை. 

இன்று பல திருமணங்கள் நடந்து ஒரு வருடத்திற்கு உள்ளாகவே பிரிந்து விடுகிறதின் ஒரு முக்கிய காரணம் பெண்ணின் தாயாரின் தலையீடும் காரணமாகின்றது.  அம்மாக்கள் மகளிடன் இருந்து தொலைபேசி வழியாகவே தினச்செய்திகளை பெற்று விடுகின்றனர். பல மைலுக்கு அப்பாலிருந்தே மகளை கட்டுப்படுத்த,  மகளும் புகுந்த வீட்டு ஜனங்களை ஒரு வித எதிரி மனநிலையில் பார்க்க  கற்று கொடுக்க ஆரம்பித்து விடுகின்றனர்.  

இன்றைய அம்மாக்கள் மகள்களை சூழலை எதிர்கொள்ளும் விதமாகவோ ஆக்கபூர்வமாக சுயமாக சிந்தித்து செயல்படவோ அனுமதிப்பதில்லை. தங்கள் கணவருடனுள்ள பிணைப்புகளை மனதில் வைத்து தன்னால் தன் மாமியாருடன் சண்டையிட்டு ஜெயிக்க இயலவில்லை, மகள் துவக்கத்தில் இருந்தே யாருடன் ஒட்டாது  சுயநலத்துடன் வாழும் மனநிலையை வளர்த்து விடுகின்றனர். பல வீட்டில் மகள்களை சண்டைக்கோழிகளாக வளர்த்தே புகுந்த வீட்டிற்கு அனுப்பி விடுகின்றனர். 


பெண் குழந்தைகள் புகுந்த வீட்டில் மகிழ்ச்சியாக  தன் கணவருடன் கணவர் ஆட்களுடன் வாழ்வதை பார்த்து சந்தோஷப்படுவது மட்டுமே தாயின் கடமையாக இருக்க வேண்டும். 

தென் தமிழகத்தில் பல பெண்கள் வீட்டோடு மணம் முடித்து இருப்பதும், மணம் முடித்த பின்பு ஒரு குழந்தையுடன் தாய் வீட்டில் திரும்பி வந்தவர்கள் பலர்.  இதன் மூல காரணம் பெண்ணை பெற்ற தாயாகத்தான் இருக்கும்

பல வீடுகளில்\ காலை பத்து மணிக்கு சென்றால் கூட அவர்கள் பெண் குழந்தைகள் படுக்கையை விட்டு எழுந்திருக்க மாட்டார்கள்.   தாய் அப்படியே பாசப்பெருக்கில் பொங்கி கொண்டு கூறுவார்கள் "போவுத வீட்டில் எப்படியோ நான் அப்படியே என் பொண்ணே தூங்க விட்டிருவேன். அவ நிம்மதியா இங்க தானே இருக்க இயலும்" . அதே போன்று கடைகளுக்கு அழைத்து வந்து பெண் குழைந்தைகளுக்கு தேவையானதும் தேவை இல்லாத பொருட்களாக வாங்கி கொடுத்து தான் பாசமான தாயாக பாவிப்பார்கள். இது போன்ற பெண் குழந்தைகள் தங்கள் வாழ்க்கை சூழலில் செலவழிக்க தெரியாது   திருப்தி அற்ற வாழ்க்கைக்கு தள்ளப்படுவார்கள். 


மேலும் போகும் இடத்தில் பேசவும் பழகவும் கற்று கொடுப்பதில்லை. " நான்  வந்த இடத்தில் 20 வருடமா என் மாமியாருக்கு அடிமையா கிடந்திட்டேன் என் மககிட்டே போகும் போதே நல்லா திட்டி மாமியாரை அடக்கணும் என்று சொல்லியுள்ளேன் என பெண்ணை பெற்ற அம்மாக்கள் சூளுரைப்பதையும் அவதானத்துடன் கவனிக்க வேண்டியுள்ளது. 

இப்போது ஒரு பெண்ணை பெற்ற பெற்றோர் பத்து ஆண் மகனை பெற்றதிற்கு சமம் என்று கூறுவது கூட இதனால் தானோ?