18 Jan 2015

ஐ’’ திரைப்படம் ஒரு ஆபாச வன்முறை காட்சியியல்!


திரைப்படம் இரண்டாவது நாள் காட்சியை பார்க்க  கூடிய வாய்ப்பு சன் தொலைக்காட்சி ஊடக நண்பர் பாலா அவர்களால் வாய்த்தது. சங்கர் படக் கோட்பாடு படம் முழுக்க காண்லாம்.  கதையிலோ திரைக்கதையிலோ எந்த அறிவாற்றலும் அழகியலும் பயன்படுத்தாது வெறும் காட்சி அழகியல் சார்ந்து  மட்டும் எடுக்கப்பட்டப்படம். பக்தி, வரலாறு, வீரர்கள், சாதாரண மக்களின் வாழ்க்கையை பற்றி  கதை சொல்லிய திரைப்படத்தின் போக்கு இன்றைய தினம் வெறும் ஆபாசத்தை மட்டும் முன் நிறுத்தி நிற்பது கவலைக்குறிய விடயமே. 


ஒரு வெகுளியான கதாநாயகன்  அழகி கதாநாயகி ,  சீற்றம் கொண்ட கதாநாயகன் வில்லன்களை பல வகையாக கொல்வதும் அதை கண்டு ரசிகர்கள் மகிழ்வது என்ற எம்.ஜி. ஆர் காலக்கதையை தற்கால சூழலை பின்புலனாக வைத்து; அல்லது பழைய கள்ளை புது பிராண்டு போத்தலில் அடைத்து கொடுக்கப்பட்ட படம் தான் ”ஐ”. பல நூறு விளம்பரங்களை ஒரே விளம்பரம்  போன்று கண்ட உணர்வு. கண் மூடித்தனமாக ஆங்கிலப்பட காப்பியும் அலுப்பூட்டுகின்றது.                                                                                                                 
‘ஐ’ படத்தை குறிப்பிட்டு பகுந்தாய்ந்தால் பெண்கள் மேல், பெண் உடல் மேல் குறிபாக தாங்களும் பெண்களே என போராடி வரும் மூன்றாம் பாலின பெண்கள் மேல் தொடுக்கப்பட்ட ஒரு வன்முறையாகும். சராசரி ஆண்கள் என்றாலே ஆதிக்கவாதிகள் பெண்களை மதிக்க தெரியாதோர் பெண்கள் மனதை காணாது உடலை காண்பவர்கள் என்ற விமர்சனத்தை எதிர் கொள்ளும் சூழலில் இது போன்ற படங்கள் இது போன்ற பல ஆண்களை உருவாக்க உரியது.


பெண் உடலை பொருளாக, ஆபாசமாக, வக்கிரமாக, வெறும் வியாபார பொருளாக படத்தை விற்கும் யுக்தியாக பார்க்கப்பட்டு எடுக்கப்பட்ட படம்.  வாழைப்பழத்தின் தோலை குரங்கு  உரிப்பது போன்று பெண் உடலை மிகவும் அச்சுறுத்தும் வகையாக நிர்வாணமாக காட்சிப்படுத்தியுள்ளனர். ஆண்களை பித்த நிலையிலிருந்து சித்த நிலைக்கு கொண்டு வரும் நோக்கமா அல்லது பெண்களை வெறும் மாம்ச பிண்டமாக உருவகப்படுத்தும் உச்சமா என சிந்திக்க வேண்டியுள்ளது.

விளம்பரப்படத்தில் கதாநாயகியின் ஜோடியாக நடிப்பவன் ‘படுக்க வா” என்று நேரடியாக அழைக்க தப்பிக்க வழி தேடி லீயிடம் தஞ்சம் அடைகின்றார் காதாநாயகி. லீ தன் பாட்டிற்கு நடித்து விட்டு காசும் புகழும் வாங்க முயலாது கதாநாயகியை காதலிக்க கூறி வற்புறுத்துகின்றார். சரி இவர்கள் தான் இப்படி என்றால் அம்மா அழைப்புக்கு எல்லாம் விளி கேட்கும் டாக்டர் மாமாவோ   கதாநாயகியை பத்து  வயதிலிருந்தே ஒரு தலையாக காதலிக்கும் கேடி!  ஒரு வகையில் பெண்கள் வாழும் தன்னை சுற்றிய உலகமே ஆண் காமுகர்களை கொண்டது தான்; வேலையில் நிலைக்க வேண்டும் என்றால் ஆண்கள் படுக்கையை பங்கிட வேண்டும் என்ற சமூக சூழல் தற்போது நிலவுவதாக பொருட்படுத்துகின்றாரா இயக்குனர்?

மூன்றாம் பாலின மக்கள் பல போராட்டங்கள் பின்பு இப்போது தான் பல துறைகளில் உயர்ந்து வருகின்றனர். அவர்களை பற்றிய மக்கள் புரிதல் மாறும் சூழலில் மூன்றாம் பாலின கதாப்பாத்திரத்தை  மிகவும் கொச்சைப்படுத்தியுள்ளனர்.  அவர்கள் உடல் அசைவுகளை காலின் அணியும் செருப்பு  துவங்கி அலங்காரம் என   அவர்கள் அணியும் உள்ளாடைகள் வரை கேலிக்கு உள்ளாக்கியுள்ளனர். மேலும் முதன்மை கதாபாத்திரம் வழியாக செக்ஸுக்கு அலைபவர்களாகவும் ஆண்களை வலுகட்டாயமாக அழைப்பவர்களாகவும் சித்தரிகரிக்கப்பட்டுள்ளது.  “ஐயோ பாவமுன்னு விட்டா ரொம்ப தான் போகிறார்கள்” என்ற உரையாடல் வழியாக அவர்கள் பெற்ற உரிமைகள் கூட ஏதோ ஆண்களின் தயவு என்பது போல் காட்டப்பட்டுள்ளது சங்கரின் ஆதிக்க மனபான்மையை காட்டுகின்றது.


ஒட்டு மொத்ததில் விக்கரம், எமி ஜாக்ஸன் வில்லன் நடிகர்கள் என எல்லோர் நடிப்பையும் பாராட்டலாம்.  ஆனால் சினிமா என்ற கலையை;  வெகு ஜனத்தை வெகுவாக பாதிக்கும் ஊடகத்தின்; கதாப்பாத்திரப்படைப்பு உரையாடல்கள் காட்சிப்படுத்துதலில் அதற்குரிய சமூக அக்கறை பொறுப்புடன் கையாண்டுள்ளனரா என்பது கேள்விக்குறியே.                                                                                  
உடல் பில்டர்ஸ், மருத்துவர், விளம்பர நடிகர்கள், தொழிலதிபர்கள், மூன்றாம் பாலினத்தோர் என இந்த சமூகமே ஆபத்தான மனநிலையில் உள்ளது.
ஒரு திரைப்படம் என்பது ஒரு காலாசார பிரதிபலிப்பு அல்லது ஒரு பண்பின் அடையாளம் ஒரு சமூகத்தின் பிரதினித்துவம் என்பது இந்த படத்தில் இல்லை. பெண் என்பவள் எந்த நிலையில் இருந்தாலும் எந்த நிலவரத்தில் உள்ள ஆணையும் விட சமூக நிலையில் கடைசி படியில்  அதுவும் மிருகத்தில் இருந்து ஒரு நிலை மேல் மட்டும் தான் என அடிக்கோடிட்டு காட்டியுள்ளனர். மிருக உருவிலுள்ள ஆண்  காதலை  கூட மதிக்க வேண்டியவள் என உருவகப்படுத்தியுள்ளனர்.

வெறும் ஆயிரங்களின் ஒரே அறையில் எடுக்கப்படும் நீலப்படத்தை 250 கோடியில்  பல நாடுகளின் அழகிய இயற்கை சூழலில் எடுக்கப்பட்ட தரம் மட்டுமே இந்த படத்திற்கு உள்ளது. வாயிரிசம் Voyeurism என ஆங்கிலத்தில் அழைக்கப்படும் வேறு இரு நபர்கள் உடல் உறவு கொள்வதை அவர்களுக்கு தெரியாது பார்த்து ரசித்து தன் இச்சையை அடக்கி கொள்ளும்  ரசனையை மட்டுமே வளர்க்க உள்ளது. இப்படம்.   பெண்கள் உடலை மட்டும் உரித்துள்ளனர் என்ற குற்றச்சாட்டை தவிற்க முதல் பாட்டில் எண்ணை தடவி வெறும் உள்ளாடையுடன்  பல கோணங்களில்  ஆண் உடலின் பலனை ஆண்மையை காட்டும்படி  10 -15 நிமிடம் காட்சியை வைத்துள்ளனர்.

ஆங்கிலேயர்களின் காலம் முன் நம் நாட்டு பெண்கள் மார் சட்டைகள் அணிவது கிடையாது. விக்டோரியன் கலாச்சாரத்தோடு கிடைத்தை பல வழக்கங்களில் ஒன்று மட்டுமே உடையணிவது அதும் மார்சட்டை அணிவது. ஆடையணியாத மார்பை கண்டு வளர்ந்த நம் தமிழ் இனம் இன்று பெண்கள் மார்பை காணத்தேடி காமத்தீயுடன் நடப்பது நகைப்புக்கு உரியது.  ஆண் பெண் உறவின் அறியாமை,  பாலியல் அறிவின் வறட்சியை மட்டுமே காட்டுகின்றது. பெண்கள் மார்பின் சிறப்பை, தாய்மையின் அடையாளம், மனித உயிரை காக்கும் அதன் பங்கை, சேவையை ஒரேடியாக மறக்க செய்து விதவிதமான குறைவான ஆடைகள்  அணிவித்து  இச்சை கொண்டு பார்க்கும் கலாச்சாரத்தை வளர்க்க மட்டுமே இப்படம் உதவும்.

பெண்கள் அணியும் உடை மட்டுமல்ல அவர்கள் அணியும் உள் ஆடைகள் கூட ஆண்களின் பகடியையும் அருவருப்பான பார்வையும் இப்படம் மூலமாக வழி வகுக்குகின்றது. இந்த சினிமா கலாச்சாரம் வரும் கால தலைமுறையின் குறுகிய பார்வைக்கு வழிவகுக்கும் என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும். இதில் ஒரு ஆதிக்க உணர்ச்சியை விட தனக்கு இல்லாத மார்பை பெற்ற பெண்ணை கேலிக்குள்ளாக்குவது அல்லது தனக்கு இல்லாத பெண்ணின் மார்பு கூட தன் இச்சைப் பார்வைக்கு சொந்தமானதே என்ற ஆதிக்க மனோபாவமே இது போன்ற திரைப் படங்கள் உணர்த்துகின்றன. இது ஒரு படம் தானே சும்மா பார்த்து விட்டு போக வேண்டியது தானே என்று கேட்க தோன்றும். ஆனால் சினிமா என்ற கலையின் அடித்தளமே படம், ஒளி அதன் உருவகம் ஆகும். உருவகப்படுத்துவது என்பது நெடு நாளையை பாதிப்பை இந்த சமூகத்திற்கு ஏற்படுத்த வல்லது.     

English movie Fly
இந்த படத்தில் நாம் காணும் ஒரே ஒரு முற்போக்கான பெண்களை பற்றிய சிந்தனை என்பது; ஒரு ஆண் தன் உருவத்தை இழந்தாலும் அவனை நேசிக்கின்றாள் அவன் துயரிலும் பங்கு பெறுகின்றாள் என்பது மட்டுமாகும். ஆனால் இந்த கொடிய உருவத்தை பார்த்து தியேட்டரின் சிறு குழந்தைகள் வீறிட்டு அழுததை கண்டபோது பரிதாபமாக இருந்தது. கொடிய உருவம் திரையில் வரும் போது வெளியில் ஓட  என சில பெற்றோர்கள் இருக்கையில் இருக்காது வாசலிலே குழந்தையும் தோளில் இட்டு தேற்றி கொண்டு நின்றனர்.                                                                                                                                                                                                                                                                                                         சமீபத்தில் வரும் பல படங்களில் முத்தம் காதலுக்கான ஒரு மறுபதிப்பாக காட்டுவதை தவிர்க்க வேண்டும் என்றால் வெண்மைப்புரட்சி என்பது போல முத்தப் புரட்சி நிகழ வேண்டும்.  அம்மாக்கள், பெற்றொர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு ஆசை தீர  முத்தம் தந்து தான்  இந்த இயக்குனர்கள் பார்வையை உடைக்க இயலும்.


சிகரட் ஷேவிங் கத்தி என ஆண்கள் பயண்படுத்தும் பொருட்களை விளம்பரப்படுத்தக்  பெண்களை பயண்படுத்தும் விளம்பர உலகை தளமாக அமைந்த இத்திரைப்படம் பெண் உடலின் வளைவும் நெளிவையும் அசைவையும் மட்டுமே நம்பி எடுக்கப்பட்ட படமாகும். பெண்கள் என்பவர்கள் ஆண்களின் ஆசைக்கு கிடைத்த பொருள், தங்கள் பாலிய வேட்கைக்கான  தீனி, தங்கள் வன்மம் கொண்ட பார்வைக்கான இரை என்ற நோக்கம் விடுத்து ஆண்களை போன்றே பெண்களும் தனது புத்தி சாதுரியத்தில், தைரியத்தில், உழைப்பில் உயர்ந்தவர்களே என்று எடுக்கப்படும் படத்திற்காக காத்திருப்போம். இப்படியே படம் எடுத்து கொண்டிருந்தால் உலகிலே மிகவும் அச்சுறுத்தல் கொண்ட ஆண்கள் இந்திய ஆண்களே என்ற அடையாளம் களைய வழியும் இல்லை.


11 Jan 2015

சாதனையாளர் பறவைகளின் நண்பர் பால் பாண்டியன்


அகில உலக அளவில், தேசிய அளவில், பல நிறுவனங்கள், கல்லூரி சார்பில் பல விருதுகள் பெற்றுள்ளவர் பால் பாண்டியன். கூந்தம் குளம் என்ற சிறு கிராமத்தில் பிறந்து வளர்ந்தவர். குஜராத்தில் வேலை கிடைத்தும் சில வருடங்கள் வேலை பார்த்தாலும் பறவைகள் நினைவுகள் அவரை நிலையாது அழைத்ததால் தன் வேலையும் உதறி தள்ளி பறவைகளின் பாதுகாவலராக கூந்தம் குளத்தில் வசித்து வருபவர் பால் பாண்டியன்.

சிறுவயதில் இருந்த தன்னை பின் தொடரும் பறவைகளின் நேசத்தை பற்றி இப்படியாக ஆரம்பிக்கின்றார்.  மரத்தில் ,மேலிருந்த கூண்டில் இருந்து மூன்று குஞ்சு குருவிகள் கீழை விழுந்து விட்டது. ஒன்றின் கால் ஒடிந்து விட்டது. மற்றொன்று சிறகொடிந்து பறக்க இயலாது தத்தளித்து கொண்டிருந்தது. முதன் முதலாக இந்த சின்னஞ்சிறு குஞ்சு குருவிகளை காப்பாற்ற வேண்டும் என்று குளத்தில் இருந்து மீன் பிடித்து கொடுத்துள்ளார்.  அதன் பாசத்தை கண்டு கொண்டு தன் வாழ்க்கையை பறவைகளுக்காக என மாற்றி  விட்டார். பின்பு இவரின் நேரப்போக்கே பறவைகளுக்கு மீன் பிடித்து கொடுப்பது அதனுடன் நட்புறவு பேணுவது என அமைந்து விட்டது. தன் பள்ளி வயதில் தன் தகப்பனார் சைக்கிளில் பள்ளிக்கு போய் வா என்று கூறினதை கூட புறம் தள்ளி விட்டு ஐந்து கிலோ மீட்டர் பள்ளிக்கு நடந்து சென்றே படித்து வந்த  இவர் பள்ளி திரும்பி வரும் வழியில் தினம் சிறிது மீன்களையும் குளத்தில் இருந்து பிடித்து வருவதையே வழக்கமாக மாற்றி விட்டார்.                                          
பின்பு தனக்கு கிடைத்த ஆசை மனைவியும் அவருடன் இணைந்து பணியாற்ற பறவைகளே சரணம் என தன் வாழ்க்கை போக்கை மாற்றி கொண்டவர். மாதம் 8 ரூபாய் பின்பு 500 ரூபாய் என ஊதியத்தில் பறவை ஆராய்ச்சி மற்றும் பறவைகள் படம் பிடிப்பாளர்களுக்கு வழிகாட்டியாக தன் வாழ்க்கையை தொடர்ந்துள்ளார். இதனிடையில் இவரை பல நூறு இயக்கங்கள் அரசு நிறுவனங்கள் இயற்கையின் தோழன் பறவைகளின் பாதுகாவலன், பூவுலகின் நண்பன் என போற்றி பல விருதுகள் நல்கி கவுரவித்துள்ளது. தற்போதும் கூந்தம்குளத்தில் புகைப்படம் பிடிப்பவர்கள் இவரின் உதவியை நாடுவதில் பரபரப்பாக உள்ளனர்.                                                                 
இரு ஆண்  இரு பெண் என நான்கு குழந்தைகள் மனைவியுடன் இல்லறம் நடத்தி வந்த  சூழலில் தன் மனைவி நோய் வாய்பட்டு இறந்து விட தற்போது பறவைகளுக்கு எனவே தன் வாழ்க்கையை தள்ளி நீக்குகின்றார். இவரை போன்ற எளிய மனிதர்களின் துணை கொண்டு பறவைகளை ஆராய்ச்சி செய்யும் ஆவலர்கள் படம் பிடித்தும், பல ஆவணப்படங்கள் இயக்கியும் உலக அளவில் புகழ் பெறும் பல உயர் மனிதர்களின் சிறுமையான  செயல்களால் மனம் வருந்தியதையும் வருத்ததுடன் பகிர்ந்து கொள்கின்றார்.  தங்கள் புகழுக்காக பணத்திற்காக பயண்படுத்தும் இவர்கள் போன்ற எளிய மனிதர்களை வெறும் ரூ. 100 மற்றும் 500  நோட்டுகளின் ஊதியத்தில் சுரண்டப்படும் கதை கேட்கும் போது நம் உள்ளம் நொறுக்குகின்றது. தன் மனைவிக்கு நோய் வந்ததும் சரியான சிகிச்சை தந்து காப்பாற்ற இயலாதை தன் இயலமையை எண்ணி கண்ணீர் வடிக்கின்றார் பால் பாண்டியன். தற்போதும் தன் உடல் உபாதகைளின் மத்தியிலும் தான் சுரண்டப்படுகின்றோம் என அறிந்தே பறவைகளுடனும் இயற்கையுடனும் கை கோர்த்து வாழ்வதே தன் மனைவிக்கும் விருப்பம் என கூறி தனது மனதை தேற்றி கொள்கின்றார். தான்  சாதனை செய்ய பிறந்தவன் நான் யாரிடமும் எந்த தேவைக்காகவும் கை ஏந்தக்கூடாது என தன் சுயகவுரவத்தையும் விட்டு கொடுக்க மனமில்லாது அடிப்படை தேவைகளுக்கு கூட தன்னிடம் பணம் இல்லை என்ற வருத்ததையும் தன்னை நையாண்டி செய்பவர்களையும் வருத்ததுடம் நினைவு கூறுகின்றார்.  

ஒரு பறவை சுகவீனத்தால் கரையில் ஒதுங்கியுள்ளது என கேள்வி பட்டதும் நம்மிடம் இருந்து அவசரமாக விடைபெற்று அந்த பறவைக்கு தரும் முதல் உதவியில் மும்முரமாகி விட்டார் இயற்கையின் பாதுகாவலன். பறவைக்கும் நமக்கும் மரம் தேவை என கூறும் தானும் தன் மனைவியும் நட்டு வளர்த்த மரங்கள் என குளத்தின் கரையிலிருக்கும் மரங்களை சுட்டிக் காட்டி மகிழ்கின்றார்.                                                            
துயரம் நிறைந்த தன் வாழ்க்கையின் மத்தியிலும் சுயநலமற்று இயற்கையும் பறவைகளையும் பாதுகாக்க வேண்டும் அரிய குணம் கொண்ட பால் பாண்டியன் போன்றோர் சிறப்பானவர்கள் போற்றப்பட வேண்டியவர்கள். வெறும் பொன்னாடை, வெற்று சாற்றிதழ் பொய் புகழ்ச்சி கொண்டு மட்டுமே இவர்களை போன்ற மனிதர்களை ஏமாற்றி பிழைக்கும் படித்த மனிதர்கள் வெட்கி தலை குனிய வேண்டியுள்ளது.  தன் மனைவி இறந்த துக்கத்தில் தான் எழுதிய சினிமா பாடல் வரிகளையும் தன் இளைய மகன் தன் நோயுற்ற மனைவியை தள்ளி விட்ட சூழலை எண்ணி "பணம் கொடுத்தால் அம்மா கிடைக்குமா" என்ற பாடலையும் நம்மை பாடி காட்டி விட்டு விடை பெற்று சென்றார்.

பால் பாண்டியனின் துயர் மிகு வாழ்க்கை கதையை கேட்ட போது கண்ணீர் நம்மை அறியாது கரை புரண்டு ஓடுகின்றது. ஆனாலும் இவரை தன் கண்ணிரையும் பொருட்படுத்தாது உயிர் உள்ள மட்டும் பறவைகளை காப்பாற்ற வேண்டும் இவை வெளிநாட்டில் இருந்து நம் இந்தியாவுக்கு வருபவை நம்மை விட்டால் யார் இவர்களுக்கு உண்டு என கூறி கொண்டு நான் சாதனைசெய்ய பிறந்தவன். இந்த உலகை விட்டு செல்லும் மட்டும் சாதனை செய்ய வேண்டும் என கூறி கொண்டு ஒரு கையில் தன் பறவைகளின் படங்களையும்,  இன்னொரு பையில் தான் பெற்ற விருது, சான்றிதழ் மற்றும் தன் மனைவியுடன் உள்ள  புகைப்படமுமாக தன் நோயுடன் மல்லிட்டு கொண்டு பறவைகளை தேடி பாசமுடன் ஓடி கொண்டு இருக்கின்றார்.

9 Jan 2015

நான் குற்றம் சாட்டுகின்றேன்... I ACCUSE.

1984 ல் நடந்த சீக்கிய படுகொலையை பற்றி ஜார்னெல் சிங் என்ற பத்திரிக்கையாளர் எழுதிய புத்தகம் இது. இந்திய பிரதமர் சீக்கிய காவர்களால் கொல்லப்பட்டார் என்று ஊடகம் வழியாக கிடைத்த தொடர் தகவல் எவ்வாறாக 3000 சீக்கிய மக்களை பலியீடாக்கியது என பாதிக்கப்பட்டவர்கள் வாக்கு மூலமாக பதிந்துள்ளார். 

அன்று நாட்டின் அதிபராக ஒரு சீக்கியர் இருந்தும், பல சீக்கியர்கள் இரு அவைகளையும் அலங்கரித்தும் ஒரு விவாதம் என ஒன்றும் நடைபெறாது தலைவியில் உடல் மயானத்தில் ஏற்றும் முன் அந்த மூன்று நாட்களில் 3000 க்கு மேல் வெறும் சாதாரண மக்களை கூட்டு கூட்டாக உயிருடன் எரித்து கொன்ற துயர் சம்பவத்தை பற்றி விவரிக்கும் புத்தகமாகும் இது. 

குடியிருப்புகளில் வீட்டினுள்ளில் இருந்த ஆண்களை குறிப்பாக தகப்பன்களை ஆண்மகன்களை மட்டும் குறி வைத்து படுகொலை நிகழ்த்தப்படுகின்றது. தடுக்க விழைந்த சில மனைவிகளும் கொல்லப்படுகின்றனர். ஒரு ராணுவ வீரரின் வீட்டில் சென்று குடும்பத்தலைவரை அழைத்து மனைவி மக்கள் முன் வைத்து அடித்து துண்புறுத்துகின்றனர். மேற்கூரையில் இருந்து பார்த்து கொண்டிருந்த மகன் தன் தகப்பனை காப்பாற்றும் நோக்குடன் குதிக்க அவனையும் அக்கூட்டம் அடித்து துவைத்ததில் மூன்று துண்டுகளாக அவன் இறந்து கிடந்ததை நினைத்து பார்க்க இயலவில்லை என ஒரு தாய் கதறுகின்றார்.

ஒரு நடுத்தர தொழி ல் அதிபர் வீட்டில் சென்றவர்கள் பெற்றோர்கள், மகன்களை கொன்றதால் அந்த வீட்டிலிருந்த 13, 10, 2 வயது பெண் குழந்தைகள் அனாதர்களாக மாற்றப்படுகின்றனர்.  ராணி போன்று வளர்க்கப்பட்ட நாங்கள் பிச்சைக்காரர்களாக மாறினோம் என தங்களுக்கு நிகழ்ந்த கொடும் துயரை விவரிக்கின்றனர். சில குடும்பங்களை அழிக்க பக்கத்து வீட்டு க்காரர்களே உதவியதாகவும் ஆசிரியர் குறிப்பிடுகின்றார். சில இடங்களிலோ காப்பாற்ற இயலாதவர்களாகவும் சூழலால் கட்டுப்படுத்தப்படுகின்றனர்.

குருத்துராவில் ஒளிந்தவர்களை கல்லால் அடித்தும் வெள்ளைப் பொடி தூவியும் கொல்கின்றனர்.  சட்டத்தை காப்பாற்ற வேண்டிய காவலர்களும் சில இடங்களில் கொலைகாரர்களாக மாறுகின்றனர்.  காவல் நிலையங்களில் தஞ்சம் அடைந்த பலர் காவலர்கள் முன் வைத்தே கொல்லப்படுகின்றனர். டைம்ஸ் ஓஃஃப் இந்தியா போன்ற பத்திரிக்கையில் மட்டுமே சிறு செய்தியாக வந்துள்ளது. நாட்டுமக்கள் எல்லோரும் துக்கத்தில் மூழ்கி இருக்கும் போது 1000-2000 டவுடிகளை ரயிலிலும், பேருந்திலும் கொண்டு வந்து சீக்கிய குடியிருப்புகள் கடைகள் நிறுவனங்கள் தாக்கப்படுகின்றது.

அதன் பின் வந்தஇளம் பிரதம மந்திரி ; "பெரிய ஆலமரம் முறிந்து வீழும் போது அதன் வேர் அதிரத்தான் செய்யும்" என  படுகொலையை ஆதரிக்கின்றார்.  மிகவும் கொடூரமாக அதிக மக்கள் கொல்லப்பட்டது தலை நகர் டெல்லியின் தான் என்பது நம் ராணுவத்தின் அவல நிலையையே எடுத்துக்காட்டுகின்றது!

பலர் தங்கள் வசதியான குடியிருப்புகளை விட்டு அகதி முகாம் பின்பு அகதி குடியிருப்புகளுக்கு மாற்றப்பட்டனர். பல குடுமபங்கள் ஆண்கள் அற்ற குடும்பமாக மாற்றப்பட்டது. இப்பாதிப்பால் பல குழந்தைகள் பிற்காலத்தில் மயக்கு மருந்து உலகில் தஞ்சம் அடைந்தனர். இப்படியாக மதசார்பற்ற தேசிய கட்சி, காந்திய கட்சி  என எல்லோராலும் இன்றும் பாராட்டப்படும் கட்சி நடத்திய மனித வேட்டை மனித மனசாட்சியை உலுக்கும் வண்ணமாக இன்றும் உள்ளது.

30 வருடமாகி விட்ட நிலையிலும் குற்றவாளிகள் தண்டிக்கப்படாது குற்றத்தில் முக்கியவர்களாக இருந்தவர்கள் மத்திய மந்திரியாக மாறினதும், போலிஸ் அதிகாரிகள் உயர் பதவியை அடைந்ததும், சில அதிகாரிகள் குடியரசு தினம் தங்கப்பதக்கம் பெற்றதும் சீக்கியர்களுக்கு கிடைக்காது போன நீதியுடன் அவமதிப்புமாக தான் இருந்தது. இந்த புத்தக ஆசிரியர் தான் சிதம்பரம் பத்திரிக்கை கூட்டத்தில் தன் ஷூவை எறிந்து தன் இன மக்களின் மறுக்கப்படும் நீதியின் மேலுள்ள கோவத்தை வெளிப்படுத்தினார். 

குஷ்வந் சிங் போன்ற எழுத்தாளர்கள் இருந்தும் வெளிவராது போன இனப்படு கொலையாகும். ஜனாதிபதி கியானி செயில் சிங் தெரிந்தும் தெரியாது போல் இருந்து கொண்டார் அல்லது தடுக்க வலுவற்ற அதிகாரத்துடன் இருந்தார் எனலாம். ஒட்டு மொத்த ஊடகவும் போதிய பிரதானம் கொடுத்து செய்தி வெளியிடவில்லை. சமீபகாலம் தெகல்கா பத்திரிக்கை சீக்கிய விதவைகளின் கொடும் துயரை வெளி கொண்டு வந்தது. இப்படுகொலை நடைபெறும் போது பாதுகாப்பு அமைச்சராக இருந்தவர் தான் பின்பு பிரதமந்திரியாக  இருந்த நரசிம்க ராவ்.

இப்படியாக இப்புத்தகம் ஒரு கொடிய வரலாற்று பதிவாக இந்தியா அரசியலின் பொய் முகத்தை தோல் உரித்து காட்டுகின்றது

உடை ஆளுமை!

பெண்கள் உடை அணிவது பற்றி பல கருத்துக்கள் நிலவும் வேளையில் பெண்களின் பெரும்வாரியான உடைகளின் வடிவமைப்பாளர்கள் ஆண்கள் தான் என்பதும் அறிய வேண்டியுள்ளது.  பெண்கள் அழகாக உடையணிய வேண்டியதின் முக்கியம் அவர்கள் ஆளுமையிலும் உள்ளடங்கியிருப்பதால் சில கருத்துக்களை பகிரலாம் என்று தோன்றியது.
 

உடை என்றதும் தற்காலம் பல பெண்கள் முன் மாதிரியாக எடுத்துக் கொள்வது சீரியல் மற்றும் திரைப்பட நடிகைகள் அணியும்  உடைகள் தான். யாரையும் கண்மூடித்தனமாக பின் பற்றாது தனக்கு சரியான உடை தேர்ந்து எடுக்க வேண்டியது தன் உடலுக்கு பொருத்தம் தானா என்று முடிவெடுக்க வேண்டியதும் ஒவ்வொரு பெண்ணின் கடமையாக மாறுகின்றது.

உடை தேர்வு செய்வதில் பெண்ணின் புத்தி சாதுரியம், அழகியல் உணர்வு தன் ஆளுமையை பற்றிய சரியான புரிதல் மிக முக்கியமாக உள்ளது.. அறைகுறையாக உடை அணியும் பெண்களை அவதானித்தால் அவர்களுக்கு தன் உருவத் தோற்றம் மேல் தாழ்வு மனபான்மை உள்ளதாகவே காணலாம்..

உடை விடையத்தில் எது சிறப்பான உடை என்று எடுத்து கொண்டால் அதன் விலை மற்றும் ,  குறிப்பிட்ட மாடல் உடையை விட அதை அணியும் முறையை பொறுத்து தான் உள்ளது. இந்திய பெண்களின் கலாச்சார உடையான சேலையை கண்ணியமாகவும் உடுத்தலாம் போர்வை போன்றும் போத்தலாம். மிகவும் அச்சுறுத்தும் விதமாகவும்  அணியலாம் என்பதை கண்ணுள்ளோம்.

சேலை தேர்வு செய்யும் போது பருமனான பெண்கள் மிகவும் மெல்லிதான துணிவகைகளை தேர்வு செய்யாது இருப்பதே நல்லது.  குள்ளமான பெண்கள் வீதியான கரை வைத்த சேலை விட சிறிய கரை கொண்ட சேலை தேர்வு செய்யலாம். இளம் நிறம் கொண்ட சேலைகள் எப்போதும் இதமான  உணர்வை கொடுக்க கூடியது. சேலையை எந்த கலாச்சார சூழலில் வாழ்கிறோமோ அந்த சூழலிக்கு ஏற்ப , தங்கள் ஏற்பட்டிருக்கும் தொழிலுக்கு ஏற்ப உடுத்த வேண்டியதும் அவசியமாகும்.  ஒரு வாடிக்கையாளர் அதிகாரியான பெண் தேர்வு செய்யும் அதே வகை சேலைகளை ஒரு ஆசிரியை தேர்வு செய்வது அவ்வளவு சிறப்பாக இருக்காது.

சில பெண்கள் மஞ்சள் கலர் சேலைக்கு கறுப்பு நிற பாவாடை அணிந்து செல்வதும் மிகவும் அபத்தமாகவும் அசிங்கமாகவும் தெரியும். சேலைக்கு ஏற்ற பிளவுஸ் உள்ளாடைகள் அணிவது அவசியமாகும். சேலையை தேவைக்கு அதிகமாக இறக்கி கட்டுவதும், கணங்காலுக்கு மேலாக கட்டுவதும் ஏற்க தகுந்தது, உகுந்தது அல்ல.

பெண்களை கவரும் விதம் விதவிதமான பிளவுஸுகள் (சட்டைகள்) மார்கட்டில் வந்துள்ளது. பெண்களின் பெண்மைக்கு மென்மைக்கு என்ன விலை? என்பது போன்று விற்கின்றனர்; சில வகையார் பிளவுஸ் சட்டைகளை. இது போன்ற உடைகள் அணியாது இருப்பது தான் நம் கண்ணியத்திற்கு அழகு. பிளவுஸ் என்பது மறைக்க வேளணியது மறைப்பதை விடுத்து கட்டம் போட்டு காட்டும் படியாக விற்கப்படுவதை பெண்களே உற்சாகப்படுத்துவது நல்லது அல்ல.  சில மணித்துளி நிகழ்ச்சிகளுக்கு தோன்றும்  தன்  ஆண் பாதுகாவர்களுடன் தீபிகா படுகோன் போன்ற மாடல் அழகிகளை பின்பற்றுவது சாதாரண குடும்ப சூழலில் வாழும் பெண்களுக்கு பாதுகாப்பு ஆனது அல்ல. 

சேலைக் கதையை விடுத்து அப்படியே வடக்கத்திய சுடிதார் பக்கம் வருவோம்.  தற்போது சேலையை விட பெண்கள் விரும்புவது சுடிதார்-பைஜாமா போன்ற உடைகள் தான். பல சூழலில் மிகவும் பாதுகாப்பானதும் சவுகரியமானதுமான உடைகள் இவையே. இந்த உடையை தேர்வு செய்யும் போது நமது வயதையும் மனதில் வைத்து தேர்வு செய்வது மிகவும் முக்கியமாகும். 35-40 வயதிற்கு மேலுள்ள பெண்களுக்கு தகுந்த சுடிதார் கிடைப்பதே அரிதாகி விட்ட நிலையில் சரியான அளவு பொருத்தமான மாடல் கிடைக்கவில்லை என்றால் ஏற்றபடி தைத்து கொள்வதே சிறந்தது.

லெக்கின்ஸ் போன்ற மாடல் எல்லா வயதினரையும் ஆக்கிரமித்த ஒரு மாடல் ஆகும். லெக்கின்ஸ் அணியும் போது இரு பக்கவும் வெட்டப்பட்ட மாடல் சுடிதாரை விட விரிவான வெட்டப்படாத ஆனார்க்கி மாடல் போன்ற சுடிதார் அணிபவதே உகுந்தது ஆகும். வெண்மை நிற லெக்கின்ஸ் தேர்வு செய்யும் போது தங்கள் வீட்டு கண்ணாடியில் ஒரு முறை பார்த்து விட்டு வெளியில் நடமாடுவதே நல்லது. பல போது அம்மாக்கள் கூட தங்கள் பதின்ம வயது பெண்களுக்கு மிகவும் கவர்ச்சியான உடை அணிவித்து நடப்பதை மிகவும் வருத்தத்துடன் கண்டு சகிக்க வேண்டியுள்ளது. பொதுவாக நம் தமிழக பெண்கள் உடல் அமைப்பு பருமனாகவே உள்ளதால் இவ்வித உடைகள் அணியும் போது மிகவும் கவனமாக இருக்க வேண்டியுள்ளது. 

சுடிதார் ஜீன்ஸ் போன்ற நவநாகரீக உடைகள் அணியும் போது உள்ளாடைகள் அணிய மறக்கலாகாது. உடலை கச்சிதமாக காட்ட பொருத்தமன  உள்ளாடைகள் மிகவும் அவசியம். பல பெண்கள் பெட்டிகோட் போன்ற உள்ளாடகள் அணியாது சுடிதார் போன்ற உடைகள் அணிவது அவர்கள் அழகை குறைத்து  காட்டும்  என்று மட்டுமல்ல அசிங்கமாகவும் தெரியும் என்பதில் சந்தேகம் இல்லை. 

ஜீன்ஸ் அணியும் போது இடுப்பு அளவு குர்த்தா போன்ற உடைகள் தான் பொருந்தி போகும். பல வயதான பெண்கள் தங்களுக்கு அணிய இயலவில்லை என்ற ஆதங்கத்தில் தங்கள் பதின்ம வயது குழந்தைகளின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தும் விதம் உடையணிவித்து பொது இடங்களில் நடமாட அனுமதிக்கின்றனர்.


கடைசியாக சொல்ல வருவது அனைவரும் செல்லமாக  அழைக்கும் இரவு உடையான  நைற்றியை பற்றி தான்.  நைற்றி என்பது இரவு உடை என்பது போய் சர்வ நேர உடையாக மாறி விட்டது.  காய் கறி சந்தையில் இருந்து நடை பாதை, பள்ளி வளாகம், ஆலையம், சுற்றுலாத் தலம் என நைற்றி புகிராத இடைமே இல்லை என்றாகி விட்டது. நைற்றி அணிவது தங்கள் வீட்டிற்குள் என ஒதுக்கி கொள்வதே சிறந்தது.