26 Feb 2013

செல்லுலோயிட்- மலையாள திரைப்பட தந்தை- ஜெ.சி டானியேல் என்ற தமிழர்!

2012 கேரளா அரசின் ஒன்றல்ல இரண்டல்ல ஏழு  திரைப்பட விருதுகளை தட்டி சென்ற படம் செல்லுலோயிட்.  சினிமா  ஆசையால்  பணம், நிம்மதி இழந்து தன் கடைசி நாட்களில் மருத்தவம் பார்க்க கூட வழியற்று  உற்றோர், உறவினரால் மற்றும் சமூகத்தால் புறம்தள்ளப்பட்டு 1975 ல் மிகவும் நிராதரவாக   மறைந்த  மருத்துவரான ஒரு தமிழனின் உண்மை கதையே இது.  அவர் தான்   மலையாள திரையுலகின் தந்தையான;ஜெ. சி டானியேல் என்ற கேரளா தமிழர்! 

புலைய ஜாதியில் பிறந்து  ஒரு மலையாளப் பெண் கலையின் மேல் கொண்ட விருப்பத்தால் சினிமாவில்  மேல் ஜாதி பெண்ணாக நடித்தார் என்று விரட்டியடிக்கப்பட்டு; பின்பு தமிழகத்தில் தலைமறைவாக வாழ்ந்து மரித்த ரோசி என்ற  மலையாள பெண்ணின் கதையும் சொல்லும் படவும் கூட!  

ஜீவநாயகம் சிரில் டானியேல் கிருஸ்தவ பணக்காரக் குடும்பத்தில் பிறந்தவர். இவருடைய தந்தை லண்டனில் சென்று கல்வி கற்று வந்தவர். டானியேலுக்கு களரிபயிற்று என்ற கலை மேல் தீராத பிரியம்!  இக்கலையை பற்றி தனது 15வது வயதில் ஒரு புத்தகம் எழுதி வெளியிட்டுள்ளார்.  இக் கலையை மக்கள் மத்தியில் கொண்டு செல்ல தகுந்த ஊடகம்,  காட்சி ஊடகமே என புரிதலில்  இக்கலை பற்றி ஆவணப்படம் எடுத்து வெளியிட விரும்பி திரைத்துறை பற்றி கற்க சென்னை செல்கின்றார்.  ஆனால் அங்கோ அவர் ஏற்றுகொள்ளப்படவில்லை..  கிருஸ்தவர்கள் திரைப்படம் காண்பதே பாவம் என்ற கருதிய கால சூழலில் சினிமா மேல் கொண்ட ஆர்வத்தால் படம் எடுத்தே தீர வேண்டும் என்ற உறுதியில்  மும்பை சென்று திரைப்பட நுணுக்கங்கள் கற்று அறிந்து  திருவனந்தபுரம் வந்து சேர்கின்றார். தன் லட்சிய கனவுக்கு என சொத்துக்கள் விற்று   4 லட்சம்(இன்றைய நிலவரப்படி   4 கோடி)ரூபாயில் முதல் ஸ்டியோ Travancore National Pictures)ஒன்றை திருவனந்தபுரத்தில் நிறுவுகின்றார்.  டானியேலின், தயாரிப்பு, இயக்கம், திரைக்கதை, நடிப்பில்  முதல் ஊமைப்படமான விகதகுமாரன்(தொலைந்த குமாரன்)1928ல்   வெற்றிகரமாக வெளிவருகின்றது.

முதலில் இப்படத்தில் நடிக்க ஆங்கிலோ இந்திய நடிகையை தேர்வு செய்கின்றார். ஆனால் ஆங்கில நடிகையின் அகம்பாவ நடவடிக்கைகளை கண்டு மனம் கசந்த டானியேல் கேரளாவில் வயலில் வேலை செய்யும் ரோசம்மா என்ற இளம் பெண்னை  கதாநாயகியாக நடிக்க வைக்கின்றார்.

அக்காலயளவில் பெண்கள் திரைப்படங்களில் நடிப்பதை பாலியல் தொழிலோடு ஒப்பிட்டு தடுத்திருந்தனர். ஆனால் வயல் வேலை செய்யும் புலைய இனத்தை சேர்ந்த  ரோசி என்ற கிருஸ்தவ பெண் கலையில் மேல் கொண்ட ஈடுபாட்டால்  5ரூபாய் தினக்கூலியில் 10 நாள்  50 ரூபாய் கூலி பெற்று  நடித்து கொடுக்கின்றார்.  படத்தில் ஒரு காட்சியில் கதாநாயகன் பெண்ணின் தலையில் இருந்து ஒரு பூ எடுக்கும் காட்சியை கண்டு கோபம் கொண்ட பார்வையாளர்கள்  கீழ் ஜாதிக்காரப் பெண்ணை மேல்ஜாதிக்கார கதாபாத்திரம் தொடுவது போல் எப்படி நடிக்க வைக்கலாம் என கோபம் கொண்டு திரையை மட்டுமல்ல நடித்த பெண்ணின் குடிசையும் தீயிட்டு கொளுத்துகின்றன்றனர். உயிருக்கு பயந்து ஓடி வந்த  பெண் எதிரே வந்த  தமிழக லாறியில் ஏறி தப்பித்து நாகர்கோயில் வந்து சேருகின்றார். பிற்பாடு கேசவபிள்ளை என்ற அந்த லாறி ஓட்டுனரையே திருமணம் செய்து இரண்டு குழந்தைகளுடன் தமிழச்சியாகவே தலைமறைவு வாழ்கை வாழ்ந்து மறைகின்றார். 


படம் நடித்தவருக்கே இந்த கதி என்றால் படம் தயாரித்து, இயக்கி, நடித்த டானியேல் நிலை என்னவாகும்.  அனைத்து பணம், நிம்மதி இழந்து தமிழகம் அகஸ்தியபுரத்தில் குடிபுகிற்கின்றார் அங்கு மருத்துவம் கற்று பல் மருத்துவராக தமிழத்தில் பல இடங்களில் பணிபுரிகின்றார்.

திருச்சியில் பணியாற்றும் வேளையில் தமிழக நடிகர் பி.யூ சின்னப்பாவின் அறிமுகம் கிடைக்க மறுபடியும் சினிமா ஆசையுடம் திரையுலகம் நோக்கி செல்கின்றார். இந்த முறை சின்னப்பா கோஷ்டிகளால் ஏமாற்றப்பட்டு இருந்த சொச்ச கொஞ்சம் பணவும் இழந்து தனிமையிலும் மன உளச்சலிலும் வீழ்ந்து விடுகிறார். 

 பக்கவாதம், பார்வைக்குறைபாடு என பல இன்னலுக்கு உள்ளாகி கொடும் வறுமையில் தன் மருத்துவ செலவுக்கு கூட வழியற்று கேரள அரசிடம் ஓய்வூதியம்  கேட்டு நிற்கும் நிலைக்கு தள்ளப்படுகின்றார். 

அக்காலயளவில் அரசு பணியில் மாவட்ட ஆட்சி தலைவராக இருந்தவர் பிரபல மலையாள எழுத்தாளருமான மலையாற்றூர் ராமகிருஷ்ணன்.  இவரோ டானியேல் மலையாளி அல்ல,  இவர் தமிழர் என்பதாலும்  தமிழகத்தில் வசிப்பதாலும் தமிழக அரசை அணுக பரிந்துரைக்கின்றார். மேலும் படம் எடுத்தார் என்ற சாற்றுக்குறிய படச்சுருளை(செல்லுலோய்ட்) சமர்ப்பிக்க கட்டளையிடுகின்றார். ஆனால் இப்படச்சுருள் தன்  இளம் வயது மகன் ஹாரி நாடாரால் அழிக்கப்பட்டது இவருக்கு கிடைக்க வேண்டிய அங்கீரத்திற்க்கு பெரிதும் தடையாகின்றது.  அது மட்டுமல்ல்  ஜெ.சி டானியேல் தான் முதல் மலையாளப்படம் எடுத்தார் என்ற அங்கீகாரம் மறுக்கப்பட்டு  மாடேன் தியேட்டர் உரிமையாளர் டி ஆர்.சுந்தரம் தயாரிப்பில் வந்த 'பாலன்' என்ற பேசும் படமே முதல் மலையாளப் படம் என்ற அங்கீகாரம் பெற்றிருந்தது.  


நாடார் என்ற இனத்தை சேர்ந்த தமிழர்  பிராமண அரசு அதிகாரியான மலையாற்றூர் ராமகிருஷ்ணன், கேரளா முதல்வராக இருந்த கெ.கருணாகரன்  போன்றோரில் காழ்ப்புணர்ச்சியால் உதவிகளும் பெறாது தீராத மனத் துயருடன் 1975ல் உலக வாழ்கைக்கு விடைகொடுக்கின்றார்.  



இவருடைய காதல் மனைவி ஜானட் தன் கணவரின் எல்லா செயலுக்கும் ஆசைகளுக்கும் பக்கபலமாக இருந்ததுடன் இவருடைய கடைசி நாட்களில் மிகவும் கருதலாக நோக்கினார் என்று இவருடைய பேத்திகள் சான்றுபகிர்கின்றனர்.விவாதம்!

இப்படியாக ஒரு பெரும் கலைஞர் ஜாதி, மொழி, மாநில அரசியல் காழ்புணர்ச்சியால் அவமதிக்கப்பட்டு நிராகரிக்கப்பட்டு வாழ்ந்து மறைந்ததை சொல்லும் படமே இது.  திரைப்பட பத்திரிக்கையாளரான சேலங்காட் கோபாலகிருஷ்ணனின் 'டானியல் வாழ்கை சரிதம்' மற்றும் வினு அபிராஹாமின் ‘நஷ்ட நாயகி’ என்ற புத்தகவும் ஆதாரமாக கொண்டு இப்படம் உருவாக்கியுள்ளனர். 
கேரளா அரசின் ஏழு  விருதுகள் கிடைத்திருந்தாலும் கேரளா காங்கிரஸ் அரசியல்வாதிகளையும், மலையாற்றூர் ராமகிருஷ்ணன் ரசிகர்களையும் கோபம் கொள்ள வைத்த படம் இது.  பல விவாதங்கள் எழுந்தாலும் உயிருள்ள போது ஒடுக்கப்பட்ட ஒரு கலைஞனின் வாழ்கை ஒரு சரிதமாக பதியப்படுவதும் அவரை கொண்டாட நினைத்த மலையாள இயக்குனர் கமலுக்கும் டானியேலாக நடித்திருக்கும் பிருத்விக்கும் வாழ்த்துக்கள். இசை எம்.ஜெயசந்திரன் இயக்கத்தில் வந்துள்ளது.

கலாச்சாரம், மதம், பண்பாடு என பல பெயர்களில் கலைஞர்களை; அவர்கள்: படைப்புகளை ஒடுக்கும் சூழலில் உண்மையாக உழைத்து நட்டத்தில் வாழ்ந்து மரிக்கும் கலைஞர்களின்  வாழ்கையை திரையில் கண்ட பார்வையாளர்கள் ஒரு சொட்டு கண்ணீர் பொழிக்காது திரும்பவில்லை என மலையாள ரசிகர்கள் சொல்லியுள்ளனர். கலைப் படம் என்பதை விட ஒடுக்கப்பட்ட ஒரு சிறந்த தமிழனின் வாழ்கையை சொல்லும் படம் இது என்று படக்குழுவினர் கூறுகின்றனர்.

மேலும் பியு சின்னப்பா போன்றவர்கள் அரங்கில் நாயகர்களாகவும் வாழ்கையில் வில்லனாகவும் இருமுகம் கொண்டு வாழ்ந்து வந்ததை  கேள்விக்கு உள்ளாக்கியுள்ளது இப்படம். அதே போல் மலையாற்றூர் ராமகிருஷ்ணன் இடதுசாரி கொள்கையில் ஊறி அதை கதையாகவும் திரைக்கதையாகவும் விற்று காசு சம்பாதித்த போது அவர்கள் எழுத்திற்கும் செயல்களுக்குக்கும் இடையில் பெரும் முரண்பாடு இருந்துள்ளதை  இப்படம் கோடிட்டு காட்டியுள்ளது.  அதே போன்று  மலையாளப்பட முதல் சூப்பர் ஸ்டாரானாக சத்தியன் மாஸ்டரும் ஒரு நாடார் இனத்தவரே. அவரும் ஜெ.சி டானியேலுக்கு உதவவில்லை என்பதே வரலாறு.                                                                                                                
இப்படியாக சமூகத்தில் பெரும் பிம்பங்களாக இருந்து மறைந்தவர்களின் மறுபக்கத்தையும் விரல் நீட்டியுள்ளது.     இதே போன்ற படங்கள் தமிழிலும் உருவாகவேண்டும் அவயை ரசிகர்கள் அரசியலால் எதிர்க்காது அதே போல் ரசிக்கவும் ஏற்கவும் முன்வர வேண்டும்.  1992 துவங்கி கேரளா கலை- மற்றும் கலாச்சாரத்துறை ஜெ.சி டானியேல் பெயரில் வாழ்நாள் சாதனையாளருக்கான விருதை கொடுத்து வருகின்றது என்பது குறிப்பிட தக்கது. 

இந்த படத்தில் இடம் பெற்ற அத்துணை பாடல்களுமே சிறப்பு. மிக முக்கியமாக காற்றே காற்று என்ற பாட்டு. https://www.youtube.com/watch?v=FeF2yx4r3bI
 டானியேல் வாழ்கை- ஆவணப்படம் பி.கே ரோசி-முதல் மலையாள திரைப்பட நாயகி!

12 Feb 2013

அமிலத்தால் பாதிக்கப்பட்ட பெண்கள்!


ஸ்நேகா 
அமில வீச்சால் காரைக்கால் சேர்ந்த வினோதினி என்ற இளம் பெண் இன்று பலியாகியுள்ளது மிகவும் வருத்தம் தருவது மட்டுமல்ல வெட்கத்திற்குரியது.  உலக அளவில், வருடம்  1500 க்கும்மேல் அமில-தாக்குதல் நடக்கின்றது என்கிறது கிடைக்கும் தகவல்கள். இந்த பாதகச்செயலுக்கு  பெண்கள் 47%, ஆண்கள் 26% குழந்தைகள் 27% என்ற விகிதத்தில்  இலக்காகுகின்றனர்.  அமிலத்தை ஒரு ஆயுதமாக பாவிக்கும் நாடுகளாக  கம்போடியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ் போன்ற நாடுகளுடன் இந்தியாவும் உள்ளது.

இந்தியாவை எடுத்து கொண்டால் வருடம் 150க்கு மேல் நபர்கள் அமில வீச்சால் பாதிக்கப்படுகின்றனர் என்று தகவகல்கள் தருகின்றன. பாதிக்கப்படும் நபர்களில் 80% பெண்கள் என்பது மிகவும் கவலைக்குறிய தகவல். பல பொழுதும் தங்கள் பாலிய ஆசைக்கு இணைக்காது இருப்பது, திருமணத்திற்கு சம்மதம் தெரிவிக்காது இருத்தல் காரணமாகினாலும், குடும்பப்பகையும் ஒரு காரணமாகத் தான் அமைகின்றது. இந்தியாவில் முதன் முதலாக அமில வீச்சால் ஒரு இளம் பெண்  பாதிப்பிற்கு உள்ளாகியது 1967 ல் பதிவாகியுள்ளது. தான் விரும்பிய பெண்ணை அப்பெண்ணின் தாய் திருமணம் செய்து தர சம்மதிக்க வில்லை என்ற காரணத்தால் ஒருவனால் அமிலம் வீசப்பட்டது.

இளம் மங்கைகள் மட்டுமல்ல திருமணம் ஆகிய பெண்களும் தங்கள் கணவர்களால் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளர். அதில் ஒருவரே மும்பையை சேர்ந்த ஷீரின் என்ற பெண். இவர்  இன்று இவ்வகையில் பாதிக்கப்படும் பெண்களை உதவ வேண்டும் என்ற நோக்கில் சமூக நல அமைப்பு (Palash) நடத்தி வருகின்றார்.  காயங்களில் இருந்து மீண்டு வந்தாலும் ஏற்பட்ட தழும்புகளால் தற்போதும் மக்கள் தங்கள் அருகில் இருந்து பயணம் செய்யப் பயப்படுகின்றனர், சிலர் கேலி செய்கின்றனர் என்று தன் கவலையை பகிர்கின்றார்.

ஸ்நேகா ஜகவெய்லி என்ற இளம் குடும்பத் தலைவியின் அனுபவமோ இன்னும் கொடியது. இவருடைய கணவர் சீதனம் வாங்கி வர நிற்பந்திக்க இவர்களுக்குளான சண்டை வலுக்கின்றது. தன் பெற்றோர் வீட்டில் அழைத்து வரப்பட்ட நிலையில் தன் கணவரால் அமில வீச்சுக்கு உள்ளாகின்றார். காவல்த்துறை- சட்டத்திடம் தன்னை காட்டி கொடுக்ககூடாது என்று கணவர் காலில் விழ இவர் மறுபடியும் கணவர் வீட்டில் வாழ முன் வருகின்றார். அங்கு மறுபடியும் பெரும் துன்பத்தில் கடந்து செல்லும் சூழலுக்கு தள்ளப்படுகின்றார்.கணவர் விட்டில் தனிமைப்படுத்தபடுகின்றார். வீட்டு அடுக்களை,படுக்கையறைக்குள் செல்ல தடை விதிக்கின்றனர்.  மூன்றரை வயதான தன் சொந்த மகனையும் அவரில் இருந்து பிரிக்கின்றனர். ஒரு கட்டத்தில் வீட்டை விட்டே துரத்துகின்றனர். பெற்றோர் மறுபடி ஏற்க மறுத்த நிலையில் இன்று மராத்தி திரைப்படம் மற்றும் தொலைகாட்சி நிகழ்ச்சிகளுக்கு திரைக்கதை எழுதுபவராக தன் வாழ்கையை கொண்டு செல்கின்றார்.

 மருத்துவர் எஸ். ஆர் விஜயலக்ஷ்மி  அமிலம் வீச்சால் பாதிப்படைந்தது அவர்  மருத்துமனை நடத்தி வந்த கட்டிட உரிமையாளராலே. முன் பணமாக வாங்கிய பணம் திரும்பித் தர மறுக்க காவத்துறை உதவியை நாடுகின்றார் மருத்துவர். கோபம் கொண்ட கட்டிட உரிமையாளர் அமிலத்தை தன் ஆயுதமாக பாவிக்கின்றார். இவர் சென்னை கீழ்பாக்கம் மருத்துவ மனையில் பணிசெய்து அமிலத்தால் பாதிக்கப்பட்ட பல நபர்களுக்கு நம்பிக்கையும் வழிகாட்டியுமாக திகழ்ந்தவர்.

இப்படியாக மண்ணெண்ணைக்கு பதிலாக அமிலத்தை ஒரு ஆயுதமாக பாவிக்க ஆரம்பித்தது வேதனைக்கு உரியது. இதனால் பாதிக்கப்பட்டவர்கள் காவல்நிலையத்தை அணுகினாலும் சட்ட பிரிவை கூறி உடன் வழக்கு பதிவது இல்லை. இன்று மரித்து போன காரைக்கால் வினோதினி சம்பவத்திலும் குற்றசெயலில் ஏற்பட்டிருந்த ஒருவரை மட்டுமே ஜெயிலில் அடைத்துள்ளனர். குற்ற செயலுக்கு துணையும் பக்க பலமாக இருந்த மற்று பலரை கண்டு கொள்ளவில்லை. இந்த சம்பவம் நடந்ததும் வினோதனி பக்கம் ஏதேனும் தவறு உண்டா என தேடவே ஒரு வகை சமூகம்  துணிந்துள்ளது.

அமிலவீச்சால் பாதிப்படைந்த  சோனாலி வாழும் உரிமை மறுக்கப்பட்ட தனக்கு இறக்வாவது உரிமை தரக்கோரி நீதிமன்றம் அணுகியிருந்தார். அவர் தேவையான மருத்துவ வசதி கிடைக்காது அரசு உதவியும் கிடைக்காது 7 வருடமாக தவிக்கும் போது 9 வருடம் கடும் தண்டனை பெற்ற குற்றவாளிகள் மூன்றே வருடத்தில் ஜாமியனில் வெளிவந்து விட்டனர். இதுவே நம் சட்டத்தின் நீதியின் போக்கு! பாதிக்கபப்ட்ட நபருக்கு அரசு உதவ வேண்டும் அல்லது யாரால் பாதிப்படைந்தாரோ அவரிடம் இருந்து நஷ்ட ஈடு பெற்றுத்தர  வேண்டும். ஆனால் இது ஒன்றும் நடைபெறாது ஒரு இளம் பெண் தன்மானத்துடன் வாழும் உரிமையை பறித்ததும் இல்லாது பாதுகாப்பான வாழ்க்கைக்கும் தடையாக செயல்படுகின்றனர். இந்தியாவில் விலையில்லா பொருட்களாக மனிதர்கள்-பெண்கள் மாற்றப்பட்டு வருகின்றனர் என்பதையே இது குறிக்கின்றது. வாழவும் வழியற்று தங்கள் அடையாளவும் இழந்து மிகவும் மனசிக்கலாக சூழலில் பெண்கள் உயிர் வாழ தள்ளப்படுவது மிகவும் வருத்தம் தரக்கூடியதே.

தன் உருவத்தை மட்டுமல்ல சுயமரியாதையாக வாழும் உரிமையும் இழக்கின்றனர். சமூகத்தில் இருந்து ஒதுக்கப்படுகின்றனர், அல்லது பாதிக்கப்படவர்கள் ஒதுங்கி வாழும் சூழலுக்கு தள்ளபப்டுகின்றனர். குற்றம் நிரூபிக்கப்பட்டால் 1099ஒன்பது வருடம் ஜெயிலும் 10 லட்சம் நஷ்ட ஈடு என்பது சட்டத்தால் கொடுக்கப்பட்ட தண்டனை என்றாலும் குற்றம் நிகழ்த்தும் அனைத்து நபர்களும் சரியாக விசாரிக்கப்படுவதோ தண்டனை பெறப்படுவதோ இல்லை. குற்றவாளியின் அரசியல் செல்வாக்கும் பணபலவுமே இவை எல்லாம் தீற்மானிக்கின்றது. இப்படியே இந்தியா செல்லுமாகின் பெண்கள் தங்கள் வாழும் உரிமையையே  இழந்து விடும் அபாயம் மிகவும் சமீபம்  வந்துள்ளதை காண்பார்கள்.                                                                                                                      
அமிலம் எளிதாக வாங்கும் சூழல் மக்களுக்கு வாய்ப்பதை தடைசெய்யவேண்டும். வீடுகளில் கழிவறை மற்றும் சுத்தப்படுத்த அமிலம் உபயோகிப்பதால், இன்று எல்லா மளிகை கடைகளிலும் 50 ரூபாய் கொடுத்தால் உடன் கிடைக்கும் மலிவு ஆயுதமாக அமிலம் மாறி உள்ளது.

என்னதான் ஆயுதம் கிடைத்தாலும் அதை கொண்டு இன்னொரு மனிதன் மேல் கொடிய தாக்குதல் நடத்த  இரக்கமற்றவர்கள்,மனநிலையில் கோளாறு அல்லது உளைவியல் நோய் தாக்கியுள்ளவர்களாலே இயலும். ஈரமான, இரக்கமான மனநிலையில் வாழும் மக்களை உருவாக்க அரசும் ஊடகங்களும் முன் வர வேண்டும்.  மரணம் கண்டு உணர்ச்சிவசப்படும் சமூகம் நிதானமாக சிந்தித்து இதன் ஆணி வேரை களைய முன் வரவேண்டும். பரபரப்புக்கு என்று எடுத்ததும் ‘மரண தண்டனை’ என்று கூக்குரல் இடாது வளரும் சமூகம் இது போன்ற குற்ற செயலில் ஏற்படாத வண்ணம் விழிப்புணர்வு கொடுக்க வேண்டும், இதனால் அனுபவிக்கும் பாதிப்பை புரியவைக்க வேண்டும். இதில் ஆசிரியர்கள் பெற்றொர் பங்கு நிறையவே அடங்கியுள்ளது. கிடத்தே தீரவேண்டும் எனக்கில்லாதது யாருக்கும் வேண்டாம் என்ற மனநிலை யாவும் வளர்ப்பால் தொட்டில் தொட்டு பின் தொடர்வது. சரியான அணுகு முறையில் இவர்களை திருத்த அல்லது இவர்களை தனிமைப்படுத்துவதே சக மனிதர்களின் பாதுகாப்பிற்கு உகுந்தது. 

அரசும் முக்கிலும் மூலையிலுமுள்ள சாராய கடைகளை மூடி பண்பான மக்கள் வாழ்கைக்கு துணை செய்யவேண்டும்.  குடித்து வெறி கொண்டு அவன் அழிவதும் மட்டுமல்லாது சக மனிதர்களை அழிக்கும் அசுரர்களாக உருவாகுவதையும் நான் கணக்கில் கொள்ள வேண்டும். 
ஊடகம் பரபரப்பு செய்தி தயார் செய்யாது உண்மையான, ஆக்கபூர்வமான,ஆழமான செய்தியை கொடுக்க முன் வரவேண்டும். இந்த குற்றத்தில் ஏற்பட்டிருக்கும் நபர் கட்டிட தொழிலாளி என்கின்றனர், கடை வைத்திருப்பதாக செய்தி வருகின்றது , பாதிக்கப்பட்ட நபர் படித்த கல்லூரியில் படித்த முன்னாள் மாணவன் என்றும் கூறுகின்றனர். வினோதினிக்கு இவ்விடையத்தில் துளியும் பங்கு இல்லாவிடிலும் இளம் அறிவான, அழகான பெண்ணின் தகப்பனான தந்தைக்கு இதில் பங்கு இல்லையா என்பதை ஒவ்வொரு தகப்பனும் கேட்க வேண்டியுள்ளது. இவனை போன்ற இளைஞ்சனிடம் ஏன் தொடர்பு வைத்திருந்தார், பணக்கணக்கு பேணினர், வீடுவரை நட்பை எதற்காக பேணினார் என்பதையும் கேள்விக்கு உள்ளாக்க வேண்டியுள்ளது. 

பழிக்கு பழி என்ற சிந்தனை பாமர மக்களுக்கு கொண்டு செல்லும் பத்திரிக்கையாளர்களை கண்டிக்க வேண்டியுள்ளது இத்தருணத்தில். என்ன தண்டனை கொடுக்க வேண்டும் என பாதிக்கப்பட்ட நபரின் தந்தையிடம், சீமானிடம், மக்களிடம் கேட்பது வழியாக ஒரு பாசிச போக்கை தான் தெரிந்தோ தெரியாமலோ மறைமுகமாகவோ உருவாக்குகின்றனர். விசாரணை, நீதிமன்றம், நீதியரசர்கள் எல்லாம் சட்டத்தால் நியமிக்கபட்டிருக்கும் போது தன் ஒரே மகளை இழந்து தவிக்கும் தந்தையின் மன உணர்வை தூண்டி விட்டு திரைப்பட வன்முறையை விட பெறும் கலவரத்தை மக்கள் மனதில் ஏற்படுத்துவது ஊடக தற்மம் அல்ல, அழகல்ல. ஊடகம் என்பது மனிதனை சிந்திக்கவைப்பதற்கே அன்றி முரடர்களாகவும், மூடர்களாகவும் வெறியர்களாகவும் மாற்றுவதற்கு அல்ல என்பதை புரிந்து கொள்வார்களா?  இதுவே தமிழகத்தில் நடந்த கடைசி கொடிய துன்ப நிகழ்வாக இருக்கட்டும். வேறு எந்த பெண்ணுக்கும் இந்த நிலை வரக்கூடாது என்ற  எண்ணங்களுடன் முடிக்கின்றேன்.

8 Feb 2013

திரைப்படம் 'கடலும்'-தமிழக கிருஸ்தவர்களும்!

இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் திறமைவாய்ந்த ஒலிப்பதிவாளர் ராஜீவ் மீனோ மேனன் ஒளிப்பதிவு ,  அர்ஜுன், அரவிந்த் சாமி போன்ற அழகான நடிகர்கள் நடித்தும்,  நல்ல இசை , புதுமுகமாக  அறிமுகப்படுத்தின ராதா மகள், கார்த்திக் மகன் ,  தமிழகத்தின்  அழகான கடற்கரையில் படம் பிடிப்பு என் எல்லாம் நல்லா இருக்க  ஜெயமோகனின்  தட்டையான திரைக்கதை  வக்கிரமான திரைஉரையாடல்கள்  மூலமாக, மோசமான கற்பனை பொய் புரட்டால்  முத்தெடுக்க முயன்று மூழ்கிப்போனது தான்  கடல் திரைப்படம் .  

திரைப்படங்கள்  என்பது கற்பனை,  கதை, சார்ந்தது  என்றாலும் நெருடல் இல்லாத சம்பவங்களளுடன், சில யதார்த்தங்களுடன் மக்களின் அடிப்படை சிந்தனையை லாஜிக்கை உதைக்காது இருந்தால்  மட்டுமே  மக்கள் மனதை சென்றடையும். அவ்வகையில் இப்படம் பெரும் தோல்வியை தான் சந்தித்துள்ளது

கிருஸ்துவின் நேரடி சீடர் தாமஸ் கேரளா வழியாக வந்தது முதல்  இந்திய தமிழக கிருஸ்தவ பாரம்பரியம் 2000 ஆண்டுகளை  கடந்தது.  போர்த்துகீஸ் நாட்டினர் இந்திய கடற்கரையில் கால் வைத்தது  கிருஸ்தவம் தமிழக மக்கள் மத்தியில் சிறப்பாக கடற்கரை மக்கள்  ஆக்கபூர்வமாக ஊடுருவி வளருவதற்கு காரணமானது .  

இந்திய பாதிரியார்கள் வெளிநாட்டு பாதிரிகளின் நீட்சியாக வந்தவர்கள் தான். கிருஸ்தவர்கள் மட்டுமல்ல எல்லா சமூகத்தினரும் ஒரே போல் மதிக்கும் சமூகத்தினரே பாதிரியார்கள். படத்தில்எலே, எலே” என்று விளிப்பது வழியாக பாதிரியாரை அவமதிப்பது, அதீத கற்பனையும் உண்மையும் கடந்த காழ்ப்புணர்ச்சியின் தொடராகவே  தெரிகிறது.

16ஆம் நூற்றாண்டு பழக்கமான  பிரமாண்ட ஆலயங்கள் கொண்ட  கிறிஸ்தவ கடற்கரை ஊரின், அம்மக்களின்  வாழ்வியல் படம் பிடித்துள்ளதில் திரைக்கதையிலும் திரை உரையாடல்களிலும் மிகவும் கவனமாக இருந்திருக்க  வேண்டும், ஆனால் இனங்களை முரண்பட வைக்கக்கூடிய கேலிக்குரிய காட்சி தகவலாகவே  உள்ளது. தொழில் சார்ந்து பார்க்க கரடு முரடாக இருந்தாலும், கடற்கரை  பழக இனிமையானவர்கள் உண்மையானவர்கள் என்றே மீனவ சமூகத்தை கண்டுள்ளோம். வழி கேட்கும் நபரிடம் ஒரு போதும் படத்தில் காட்டியது போன்று  கீழ்த்தரமான பதிலை சொல்லியிருக்க மாட்டார்கள்
மேலும் இந்திய பாதிரியார்களின் சமூகப்பணிகளமதப்பணிகளை  வளைத்து ஒடித்து தவறாக சொல்லப்பட்டுள்ளது.  ஒரு படம் ஏதோ வகையில் சமூகத்திற்கு பயண்பட வேண்டும் என்றிருந்தால் மீனவர்களின் சமூக வாழ்கை, அவர்கள் எதிர்கொள்ளும் சவால்கள், துணிந்து போராடும் குணம், அவர்கள் குடியிருப்பை சுற்றியுள்ள சுகாதார கேடான வாழ்கை சூழல் போன்றவை திரைப் படத்தின் கருத்தாக இருந்தால் ஏற்புடையதாக இருந்திருக்கும். கிருஸ்த மக்களின் வாழ்க்கையின் நல்லது-கெட்டதில் தாக்கம் ஏற்படுத்தும் சபையின் பிரதிநிதிகளான பாதிரியார்களின் பங்கை பற்றியாவது வலியுறுத்தியிருக்கலாம்

கிருஸ்தவ கத்தோலிக்க பாதிரியார்களின் உதவியாளரை   'மெலுஞ்சி' அல்லது உபதேசியார் என்று தான் அழைப்பார்கள். கோவில்குட்டி என்று அழைப்பது சீர் திருத்த கிருஸ்தவர்கள் தான். இப்படியாக மீனவ வாழ்கையை பற்றியே படிக்காதே, புரிந்து கொள்ளாது  ஒரு மீனவ படம் உருவாகியுள்ளது.

இந்த படத்தை கண்டு கிருஸ்தவர்களை விட மீனவர்கள் உணர்வு தான் சீண்டப்பட்டிருக்க  வேண்டும்கடலும், தலை சீவாத சில மனிதர்களையும், ஒரு அங்கி போட்ட பாதிரியாரையும் காட்டினால் அது கிருஸ்தவ மக்கள் வாழ்கை சித்திரிகரிக்கும் படமல்ல, கிருஸ்தவ வாழ்கையில் கடவுளுக்கு அடுத்த படியாக மதிக்கும் பாதிரியார்களை இன்னும் நுட்பமாக கவனித்து படம் இயக்கியிருக்கலாம்

கூடங்குளம் பிரச்சனையில் மீனவர்கள்;பாதிரியார்கள் மற்றும் சமூக ஆவலர்கள் துணை கொண்டு போராடி வருவதை கண்ட அரசின் சதியோ தெரியவில்லை, அல்லது இந்துத்துவா அஜெண்டாவா? என்று  தோன்ற வைக்கின்றது கதையும் காட்சி அமைப்புகளும் வசனக்களும்.
 விஷ்வரூபம் என்ற திரைப்படம் பற்றி குறிப்பிட்ட போது கொஞ்சம் உலக அறிவு இருந்தால் மட்டுமே படம் கண்டால் புரியும் என்றனர்; ஆனால்  கடல் திரைப் படம் காண அறிவு, புத்தியே இருக்கக்கூடாது.

விவாதமாக மாறி விடாதா? கொஞ்சம் நாள் தொலைகாட்சி நிகழ்ச்சிகளுக்கு பஞ்சம் இருக்காது என்று விரும்பிய ஊடக-மத அரசியல் தந்திரங்களுக்கு பதில் கொடுக்காது கிருஸ்தவ தலைமைகள் அமைதி காத்து கொண்டது நல்லதே. தேவையில்லாத விளம்பரம் திரைப்படத்திற்கு கிடைக்காதிருக்க கிருஸ்தவர்கள் கொண்ட யுக்தி நல்லது தான். 

படைப்பை எதிர்த்து கலைஞர்களை பகப்பதும், படைபாளியின் படைப்பை காண துடிக்கும் ரசிகர்களை கோபம் செய்யாது இருந்து கடற்கரை சமூகம் தன்  அறிவு நிலையை வெளிப்படுத்தியுள்ளது. விவாதிக்க தினதந்தி தொலைகாட்சிக்கு வந்த கிருஸ்தவ பிரதிநிதியும் தகுந்த  காரணங்களுடன் தரவுகளை முன் தெரியவில்லை. அவர் ஊழியக்காரர்களை புகழ் பாடுவதிலே இருந்தார். செல்வமணி போன்ற திரையுலகு கலைஞசர்களும் திரைப்படம் நோக்காதே விவாதம் செய்ய வந்தது  நகைப்புக்குறியதாகவே இருந்தது. வாசந்தி என்ற பெண்மணி ஒரு ஊடகத்தில் பேசுகின்றோம் என்ற புரிதலுடன் சரியான விவாத கருத்துக்கள் முன் வைக்கவில்லை. நிகழ்ச்சி தொகுப்பாளரரை பற்றி சொல்லவே வேண்டாம். சும்மா கூலிக்கு மாரடிப்பதாக விவாதம் நமத்து போனது தான் மிச்சம்.

இருந்தாலும் கிருஸ்தவர்கள் இப்போதாவது விழித்து கொண்டால் நல்லது. தங்களை பற்றியுள்ள பொய் பிம்பங்களை உடைக்கவும் தங்களுக்குள்,  தங்கள் சமூகத்தினுள்ளில் நிலவும், வளரும் ஊழலை களையவும் முன் வர வேண்டும். 

முழுக்க முழுக்க இப்படத்தின் தோல்வியை இக்கதையின் மேலும் திரை உரையாடல்கள் என்ற பெயரில் உருவாக்கிய ஜெயமோகனையே சேரும். ஸ்தொத்திரம் எனக்கூறுவது துவங்கி, கத்தோலிக்கர்கள் வழக்கமல்லாத சாத்தான் யேசுவின் பிள்ளை , சோத்து மதம் என்ற வார்ததைகள் எல்லாம் வன்மத்தின் உச்சம். 
படைப்பாளர்களால் மனித நன்மையை மனித குலத்தின் அன்பையும் ஒற்றுமையையும் மனதில் வைக்காது எப்படி இவ்வளவு வன்மமாக எழுத முடிந்தது எனத்தெரியவில்லை. அதும் ஜெயமோகன்! தூத்துக்குடி கடற்க்கரை பேச்சையும் நாகர்கோயில் கடற்கரை மொழியையும் கூட்டி கலத்தி புதுசான  பொதுவாக ஜெயமோகன் கதைக்கும் மொழிக்குள் கொண்டு வந்துள்ளார். என் ஆச்சரியம் ஒரு எழுத்தாளனால் இவ்வளவு கேவலமாக இவ்வளவு அருவருப்பாக இன்னொரு இனத்தை, மதம் சார்ந்த மக்களை அவர்கள் வாழ்வியலை பார்க்க எப்படி முடிந்தது என்று தான். இந்த கதைப்படி இந்த ஊர் மக்கள் அமசோன் காட்டில் வாழும் இல்லது இந்தோனேஷியா போன்ற பழங்குடியல்ல. தமிழகத்தின் மூத்தகுடி. ஜெயமோ ன் ஒரு வாரம் மணப்பாடில்  தங்கி இருந்து இக்கதையை எழுதியிருந்தால் இந்த அளவு பிழை வந்திருக்காது. மனிதனனின் கற்பனையில் இவ்வளவு அசிங்கங்களா? இது போன்ற கலைப்படைப்புகள் காலத்தின் அவலம். 

2 Feb 2013

கிழவனும் கடலும்!


அமெரிக்கன் எழுத்தாளர் மற்றும் பத்திரிக்கையாளர் ஏர்னெஸ்ட் ஹேமிங்வேவின் குறும் நாவல் ஆகும் “கிழவனும் கடலும்”.  இந்த நாவல் வாசித்து முடிக்கும் போது நீங்களும் ஒரு கடல் பயணம் மேற்கொண்ட களைப்பை  உணர்வீர்கள். வாழ்கையின் போராட்டம், வருத்தங்கள் அதை தொடர்ந்து எழும் ஒரு நம்பிக்கையின் ஒளிவட்டத்தில் இறங்கி செல்வீர்கள்.  நம் கதையின் நாயகன் சந்தியாகு என்ற முதிர் வயது மீனவராகும்.  “நான் ஒரு வித்தியாசமான மனிதன்” என தன்னை தானே  உற்சாகப்படுத்தி கொண்டு தனிமையில் இல்லாமையில் வாழ்பவர். பெரியவர் தன் இளம் பிராய  மீனவ நாட்களை அசைபோட்டு கொண்டு வாழ்ந்து வருபவர். ஆப்பிரிக்கா கடல் எல்கை வரை சென்று மீன் பிடித்ததையும் அப்போது கடற்கரையில் துள்ளி விளையாடி கொண்டிருக்கும் சிங்க குட்டிகளையும் கண்டு மடங்கியதையும் எண்ணி இனியும் அது போல் ஒரு நாள் வரும் என நினைத்து கொண்டு வாழ்கையை தள்ளுபவர். அவன் கனவில் கூட  துள்ளி விளையாடும் சிங்க குட்டிகள் தான் வந்து செல்கின்றன.
கடந்த 80 நாட்களாக மீன் பிடிக்க சென்றும் ஒரு மீனும் கிடைத்தபாடில்லை. முதல் 40 நாட்கள் தன் உதவியாளனும் மகனை போன்று அன்பு செலுத்தும் மனோலினும் உடன் செல்கின்றான்.  “இவருக்கு ராசி இல்லை வேறு படகில் மீன் பிடிக்க செல்” என தன்  பெற்றோர் வற்புறுத்தியதால் அடுத்த 40 நாட்கள் மனதில்லா மனதோடு வேறு படகில் பயணிக்கின்றான்.  இருப்பினும் தனது ஓய்வு நேரத்தில் முதியவருக்கும் உதவுகின்றான். என்னதான் 80 நாட்கள் மீன் கிடைக்கவில்லை என்றாலும் அதன் பின் மூன்று வாரம் தொடர்ந்து தினம் ஒரு மீன் கிடைத்ததை எண்ணி பெரியவர் மனதை தேற்றி மகிழ்ந்து பேசிக் கொண்டிருக்கின்றனர்.  பெரியவருக்கு தன் பழைய மீனவ நாட்களை பற்றி, கடற்கரையில் கண்ட சிங்கம் பற்றி கதைக்க ஆசை. ஆனால். சிறுவனின் மனம் பழைய கால கதைகளை விட விளையாட்டு வீரர்களை  பற்றிய கதைகள் அறிய தான் தான் ஆற்வம் கொள்கின்றது. பெரியவரும் சிறுவனின் விருப்பத்திற்க்கு இணங்க விளையாட்டு வீரர்கள் அவர்கள் வாழ்கை பற்றி பேசிகொண்டிருக்கின்றனர். இரவு வந்ததும் பெரியவரிடம் தூங்க செல்லுங்கள் நான் வந்து எழுப்பி விடுகின்றேன் என்று கூறி செல்கின்றான் சிறுவன். ஆனால் அடுத்த நாள் பெரியவர் சிறுவனை எழுப்பி இருவருமாக கடல் நோக்கி செல்கின்றதை காண்கின்றோம்.  பெரியவருக்கு வாழ்த்துக்கள் கூறி இந்த முறை நீங்கள் கண்டிப்பாக மீனுடன் வருவீர்கள் என நல்வார்த்தை கூறி அனுப்பி விட்டு விடை பெறுகின்றான். பெரியவரும் எனக்கு நம்பிக்கையுள்ளது என கூறி செல்கின்றார்.
முதியவருக்கோ வயதால் ஆன களைப்பு!  இருப்பினும் யாருக்கும் தலை வணங்காத சுயமரியாதை தன் திறைமையின் மேலுள்ள நம்பிக்கையால் கொண்ட கற்வமும் கலந்த மனிதராக காணப்படுகின்றார். மதியம் நேரம் கடந்த வேளையில் நம்பிக்கை மறைய துவங்கும் நேரத்தில், சோர்வுடன் இருக்கும் முதியவர் தூண்டிலில் ஒரு பெரிய மீன் மாட்டுகின்றது.  ஆகா…என்று பெருமூச்சு விட்ட பெரியவருக்கு நம்பிக்கையின் துளிர்கள் முளைக்க ஆரம்பித்து விட்டன.  தன் உழைப்பு, நம்பிக்கையாக மாறும் மீனை எண்ணி பெருமைப்படுகின்றார்.  தான் ராசி இல்லை என தூற்றிய சுற்றும் மறைந்து ஆசுவாசம் கொள்கின்றார்.  மீன் மரண வலியால் துடிக்க பெரியவரோ எப்படியேனும் மீனை இழுத்து கரை சேர்க்க தன் முழு பலனையும் பிரயோக்கின்றார். மீனின் வலி பெரியவரையும் வாட்டுகின்றது. ஆனால் பரிவுடன் ‘என் சகோதரா உன்னை நேசிக்கின்றேன் ஆனால் மன்னித்து விடு என் பிழைப்பு உன் மரணத்தில் தான் உள்ளது’ என்று தன் இயலாமையும் தெரிவிக்கின்றார் பெரியவர். மீனா அல்லது தன் உயிரா என்ற கொடும் போராட்டத்தில் மீனை கரை சேர்க்க எல்ல வழிகளையும் கையாளுகின்றார் பெரியவர். மீன் அவர் எதிர்பார்த்ததிலும் மிகமிகப் பெரியது! 18 பவுண்டு எடை கொண்டதாக தெரிகின்றது. மீனவருக்கு தன்னால் மீனை கரை சேர்த்து விட இயலுமோ என்று அச்சம் எழுந்தாலும் தன்னால் முடியும், “நான் வித்தியாசமான மனிதன்”  என்று தன்னை தானே உற்சாகப்படுத்தி கொண்டு மரணப்போராட்டத்தில் பயணித்து கொண்டிருக்கின்றார்.
மீன் இரத்தம் கடல் தண்ணீரில் கலக்க, இரத்த மணத்தால் ஈர்க்கப்பட்ட பெரும் சுரா மீன் ஒன்று முதியவர் படகை  தாக்குகின்றது. முதியவருக்கு பலம் இழந்து விட்டது. மீனை நினைத்து வருந்துகின்றார், சகோதரனை போல் உருகி வருந்தும் கிழவருக்கு சுராவோ ஒரு பெரும் எதிராளியாக கொடியதாக தெரிகிறது. தன் வாழ்வாதரமாக போகும் தன் சகோதரனை போல் நேசிக்கும் மீனின் தற்போதைய துன்ப நிலையை காண முதியவருக்கு பலனில்லை. மீனின் பெரும் பகுதி சுராவிற்கு  உணவாகி கொண்டிருக்கின்றது.  இரவு பத்து மணியுடன் முதியவர் பலத்த காயங்களுடன் மீனின் சில சொச்ச முள்ளுடன் கரை சேர்கின்றார்.
எல்லா மனிதனும் தன் தோல்வியில் தன் விதியே இயலாமையை எண்ணி வருந்துவது போன் மீனவ பெரியவரும் தனக்கு மீன் கிடைக்காதது மீனை கொல்ல நினைத்த பாவமோ என வருந்துவதை காண்கின்றோம். இல்லை மிகவும் தூரம் சென்றுவிட்டோம் என்றும் தன்னை தேற்ற நினைக்கின்றார். இளைஞர்கள் 60 முழம் ஆழத்தில் தூண்டில் இட்ட போது தான் 100 முழம் ஆழத்தில் அல்லவா முயன்றேன் என்றும் தன் அயராத உழைப்பை எண்ணி ஆறுதல் அடைய முயல்கின்றார். எத்தனை தோல்விகளை கண்டாலும் மறுபடியும் எழ துடிக்கும் ஒரு மனதை எண்ண அலைகளை இக்கதையில் கதாசிரியர் வெளிப்படுத்துவதே தனி அழகு.
இப்படியாக மனிதனின் வாழ்கை போராட்டத்தை அருமையாக சித்திரிகரித்துள்ளார் ஏர்னெஸ்ட். அந்த மீனவன் இடத்தில் நாம் ஒவ்வொருவருடைய வாழ்கை சூழலும் எண்ணங்களும் அவ்வளவு கச்சிதமாக  பொருந்தி போகின்றது. குறும் கதைக்கான சிறிப்புகளில் ஒன்றான  தத்துவ மழையிலும் வாசகனை நனையச்செய்துள்ளார் ஆசிரியர். “வாழ்கை என்பது தோற்க அல்ல ஆனால் போராடுவதுமே” என்ற அற்புத தத்துவம் நம்மையும் வழி நடத்துகின்றது.  “இந்த விசாலமாக கடலில் நம் நண்பர்கள் போலவே எதிரிகளும் உள்ளனர்”. ஒரு நாள் எனக்கான பெரிய மீனை பிடிப்பேன் என்னை சுற்றி தான் உள்ளது” என்பது நம் லட்சிய பயணத்தில் வெற்றியை நினைவுப்படுத்துகின்றது.  சுரா மீனை பார்த்து “நான் ஒன்றும் உனக்கு செய்யவில்லை உன்னாலும் என்னை ஒன்றும் செய்ய இயலாது” என்பது நாம் அறியாத நம் எதிரிகளை நினைவூட்டி செல்கின்றது.
வயதானவர்கள் வெகு காலை எழும்போது இளைஞர்கள் வெகு இரவில் தூங்கி அதி காலை எழ இயலாது தவிக்கும் நிலையும் இயல்பாக மனித வாழ்கையின் புதிரான இயல்புகளில் ஒன்றாக புரிகிறது.  ‘முதிய வயதில் தனிமை என்பது தவிற்க இயலாது ஆனால் தவிற்க முடியாததுமாக உள்ளது” என்று முதுமையின் சூழலை ஒரே வாக்கியத்தில் சொல்லி செல்கின்றார் ஏர்னெஸ்ட்.
மீன் அனுவவிக்கும் வேதனை கண்டு துடிக்கும் மீனவன் தன் சகோதரானாக பாவித்து “என் வேதனையை நான் தாங்கி கொள்வேன் ஆனால் உன் வேதனை தான் எனக்கு கொடியதாக உள்ளது” என்று உருகும் போது ஈர மனதுள்ள மீனவ கதாபாத்திரம் நம் மனதை ஆட்கொண்டு விடுகின்றது. மீனைவிட புத்திசாலியாக மீனவன் இருப்பதால் தான் மீனை பிடிக்க முடியும் என்று கடவுளுக்கு நன்றி செலுத்தும் நாயகன் தனக்கு பிடிபட்ட மீனும் தன்னை விட பலம் வாய்ந்ததும் மேன்மையானதுமாக கருதுகின்றார்.  இது வாழ்கை படிக்கட்டில் மேலை நிற்பவர்கள் தனக்கு கீழை உள்ளவர்களை நோக்க வேண்டிய மனித நேயமான பார்வையாக உள்ளது.    “நாம் அச்சமில்லாது தன்னப்பிக்கையுடன் இருப்பது அவசியம்; எனக்குக்கு வேதனைகள் பெரிய பொருட்டல்ல”; அமைதியாக ஆனால் உறுதியாக இருக்கின்றேன், நான் சோர்வுற்ற மனிதன், ஆனால் செயலற்றவன் அல்ல! போன்ற தன்னம்பிக்கையான வாசகங்கள்  வேதமாக தான் காதில் ஒலிக்கின்றது. நமது வெற்றி என்பது இன்னொருவரின் தோல்வி ஆனால் அடிமைகள் போன்று ஒரு நியதியாக வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் தள்ளப்பட்டுள்ளதை மீனிடம் அவர் பேசும் அன்பான வார்த்தைகளில் வழியாக புரிந்து கொள்கின்றோம். கடலில் துள்ளி குதிக்கும் டால்பின் மீனவனின் சிறந்த நண்பன் என்று கூறும் மீனவர், அங்கும் இங்கும் பறந்து கொண்டிருக்கும்  குருவி ஒன்றும் சேகரிக்காது இருப்பதையும் சொல்லி செல்லும் பாங்கு பல மனிதர்கள் குணநலன்களை எடுத்து சொல்லும் பாங்காகவே உள்ளது.
நான் மதவாதியல்ல ஆனால் கடவுளை நம்புகிறவன் என்று கூறி தன் வெற்றிக்கு கடவுள் பக்கம் ஜெபத்தை ஏறெடுப்பதையும் காண்கின்றோம். இத்தருணத்தில் கதாசிரியர் ஏர்னெஸ்டு அமெரிக்காவின் ஆதிக்க நிலையை எதிர்த்து வாழ்நாள் முழுதும் போராடியவர் க்யூபா போன்ற கம்யூனிஸ்டு நாடுகளில் தஞ்சம் புகுந்தவர் என்பதையும் நினைவு படுத்த வேண்டும்.
மீனவன் தன் உடையான கால்சட்டையை சுருட்டி மடித்து தலைக்கு கொடுத்து உறங்கும் வரிகளில் மீனவனின் மொத்த வறுமையும் வாசகனுக்கு எடுத்துரைப்பதை காணலாம்.
புதிய தலைமுறை கடலை ஆண் என்பது போல உருவகப்படுத்தும் போது பழைய தலைமுறை ஒரு பெண்ணாக பாவிப்பதில் தான் மகிழ்ச்சி கொள்கின்றது என்று சொல்கின்றார் கதாசிரியர்.  தலைமுறைகளின் புரிந்துணர்விலுள்ள மாற்றம், காலத்தால் ஏற்பட்ட இடைவெளியையும் உணர்த்தி செல்கின்றார். இப்படியாக ஒவ்வொரு வரியும் ஒவ்வொரு வார்த்தையும் ஆயிரம் கதை சொல்லும் ஹேமிங்வே கதைக்கு விருது கிடைத்ததில் ஆச்சிரியப்படுவதற்கு மில்லை. இயல்பான எளிய மனிதனின் கதை மனதை நெகிழ செய்யும் கதையும் கூட தான்!
மீனவர் அனுபவித்த அதே துயர் அச்சம், போராட்டம், ஏமாற்றம், நம்பிக்கை, என எல்லா கட்டங்களையும் கடந்து நாமும் பயணிப்பது திரில்லான அனுபவமாகத்தான் உள்ளது. முதியவரின் நிலை கண்டு சிறுவன் பெரிதும் வருந்துகின்றான்.  காப்பி, உணவு வாங்கி கொடுத்து முதியவரை தேற்றுகின்றான்.  குணம் பெற்றதும் தானும் முதியவருடன் மீன் பிடிக்க செல்வதாகவும் வாக்கு கொடுக்கின்றான். முதியவர் தான் காணப்போகும் சிங்கத்தை கனவு கொண்டு நிம்மதியாக துயில் கொள்கின்றார்.